சீதக்காதி…
“அப்பா! ரங்..ரங்கதுரை அங்கிள் எட்டு மணிக்கு ’ஹார்ட் அட்டாக்’ல போ..போய்.. போய்ட்டாராம். ஒண்ணுமே இல்லையாம்…எல்லோரோடயும் பேசிண்டே இருந்தவர் திடீர்னு மார்வலின்னு அப்படியே சாஞ்சாராம், உயிர் போயிடுத்தாம்..அவர் பையன் மாதவன் பத்து நிமிஷம் முன்னாடி எனக்கு போன் பண்ணி இதைச் சொன்னான். நாளைக் காலையில் ஒன்பது மணிக்கே தகனம் பண்ணிடப்போறாளாம். இதை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்கினேன் இவ்ளோ நேரமா…” என்று சதீஷ் முடிப்பதற்குள்…

…ஈசிசேரிலிருந்து கீழேவிழுந்து விடுபவர்போல தடுமாற்றத்துடன் எழுந்த சிதம்பரம், “ரங்கா ஆ ஆ.., என் ஆருயிர் நண்பன் போய்ட்டானா..ஐயோ…நேத்து கூட போன்ல நன்னா பேசினானே?.. பையன் பொண்ணு எல்லாம் லீவுக்கு அமெரிக்காலேருந்து குழந்தைகளோடு வந்திருப்பதா சந்தோஷமா சொன்னானே” என்று கதறினார்.
“…ரங்கன் போய்ட்டானா நம்பவே முடியலையேடா சிதம்பரம்? ஆனா அது தர்மாத்மாடா…உதவின்னா ஓடிவருகிற கருணை உள்ளம்…இந்தக்குடும்பத்துக்கு அவன் செய்யாத உபகாரமில்லை…நல்லவர்களை தெய்வம் பூ மாதிரி அள்ளிக்கும்…என்னடா சிலையாட்டம் நிக்கறே உடனே நாம் சென்னைக்குப்புறப்படணும்…என் பேரன் சதீஷ் இருக்கான் காரை ஓட்றதுக்கு” என்று சிதம்பரத்தின் அம்மா பங்கஜம் தன் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள்.
“ஆமாம் பாட்டி…இப்ப மணி எட்டரை ஆறது. உடனே கிளம்பினா கூட நடுராத்திரி ஒரு மணிக்குள்ள சென்னைக்குப் போயிட்லாம். பெங்களூர்-சென்னை ரோடும் நன்னா இருக்கும்..அதுலயும் சித்தூர் வழி போயிட்டா சீக்கிரமா போயிட்லாம்…” என்று பரபரத்தான் சதீஷ்.
“ரங்கதுரை எனக்குப் பிறக்காத பிள்ளை…உங்கக்கா மாலதி கல்யாண சமயம் சிதம்பரத்துக்கு அந்தப் பாழாப் போன சிட்ஃப்ண்ட் கம்பெனியை இழுத்து மூடினதுல வேலை போகவும் கைல காசு இல்லாம் தவிக்க அவன் தான் தன் வீட்டை வித்துப் பணம் கொடுத்தான். அமெரிக்கால உனக்கு வேலை போயி நீ இந்தியா வந்ததும் உனக்கு தெரிஞ்சவாகிட்ட சொல்லி வேலை வாங்கிக் கொடுத்தான்..பல நேரங்களில் அவன் இந்தக் குடும்பத்துக்குக் கை கொடுத்திருக்கான்..உனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சதால சென்னையையையும் ரங்கதுரையையும் விட்டு வந்த ஒரு வருஷத்துல அவன் போய்ச் சேர்ந்துட்டான். என்னவோ போ எழுபத்தி அஞ்சு வயசுக்கு நான் குத்துக்கல்லாட்டம் இருக்க அம்பத்தி அஞ்சு வயசுல அவன் போகணுமா?” பங்கஜம் ஹோ வென பெரிதாகவே அழ ஆரம்பித்தாள்.
“ஒரு வருஷமாய்…என்னைப்பிரிஞ்ச துக்கத்துல அவன் உசுர் போயுடுத்தோ என்னவோ…நான் அவனை விட்டு வந்திருக்கக்கூடாது…சதீஷ் சாப்பாட்டுக்கு திண்டாடுவானேன்னு எல்லாருமா இங்க வந்துட்டோம்…நான் அங்கிருந்தா ரங்கன் போயிருந்திருக்க மாட்டான்…” சிதம்பரம் சின்னக் குழந்தை போல புலம்பினார்.
“பாட்டி! அப்பா! ரெண்டுபேரும் உடனே கார்ல ஏறி உக்காருங்கோ…நேரமாறது…”சதீஷ் கூவினான்.
“நானும் வரேன்” என்றபடி யமுனா வரவும் சதீஷ், “அம்மா நீ அக்கா மாலதிக்குத் துணையா ஆத்தில் இரு…அவளுக்கு இப்போ பிரசவ நேரம். எப்போ என்ன ஆகுமோ…?” என்றான் தயங்கிய குரலில்..
யமுனா மௌனமாய் தலை அசைத்தாள்.
மாலதி தன் பெரிய வயிற்றை சாய்த்தபடி வாசலுக்கு வந்தவள். “அப்பா…ரங்கதுரை அங்கிளுக்கு கடைசி காரியங்கள் எல்லாம் ஆப்த நண்பர் என்கிற முறையில உங்க செலவில் ஜோரா செய்துட்டு வாங்க…சதீஷ்…உனக்கும்தாண்டா சொல்றேன்…” என்றாள்.
“சரி அக்கா…நல்ல நிலமைல இப்போ நாம் இருக்கக் காரணமே ரங்கதுரை அங்கிள்தானே…மாதவனுக்குத் தம்பியா நான் கூட இருந்து எல்லாம் செய்துட்டுவரேன்…”
மூவரும் காரில் அவசர அவசரமாய் ஏறினர்.
பெங்களூரின் புகழ்பெற்ற ட்ராஃபிக் காரை ஜான்வாச ஊர்வலமாக்கியது. அந்த இரவு நேரத்திலும் நகரைக் கடந்து புறநகர்ப் பாதைக்குப் போக ஒருமணி நேரத்திற்கு மேலானது,
“மணி ஒன்பதரை ஆறது…சித்தூர் ரூட்ல போயிட்லாம்…” என்றான் காரை செலுத்திக் கொண்டிருந்த சதீஷ்.
சிதம்பரத்திற்கு நண்பனை இழந்த அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
கார் ஹொஸ்கோட் தாண்டும் வரை பஞ்சகல்யாணியாய் பறந்தது.மழை லேசாய் தூறல் போடுவது தெரிந்தது.
கோலார், பலமனேர் என்று கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளைக் கடந்து கொண்டிருந்த கார். பலமனேர் செல்லும் நெடுஞ்சாலையில் நட்டநடுவில் திடீரென நின்றது. மழைத்தூறல் லேசாக இருந்துகொண்டே இருந்ததே தவிர முற்றிலும் நிற்கவில்லை,
“ரங்..ரங்கா…” சிதம்பரம் விசும்பிக்கொண்டே இருக்க சட்டென சதீஷ், “அப்பா…பர்ஸ் போன் எல்லாம் வச்சிருந்த கைப்பையை எடுத்துக்க மறந்துட்டேன்…ஓ மை காட்” என்று அலறினான்.
“அடடா நானும் பர்சோ பணமோ போனோ ஒண்ணூம் எடுத்துக்கலயேப்பா…எனக்கு ஒண்ணூமே தோணலை மாத்து வேஷ்டி கூட எடுத்துக்கலையேப்பா…”
“கிரெடிட் கார்டும் இல்ல…அவசரத்தில் ஏன் இப்படி மறந்தேன்? சரி…சமாளிக்கலாம்.”
“சதீஷு திரும்ப ஊர் போய் கொண்டு வரலமாப்பா?”
“முடியாது பாட்டி ரொம்ப தூரம் வந்துட்டோம்…”
“என்னாச்சு கார் ஏன் நின்னுடுத்து, பெட்ரோல் தீர்ந்தாச்சா?” திகிலுடன் சிதம்பரம் கேட்டார்.
“இல்லப்பா பெட்ரோல் இருக்கு ஆனா இஞ்சின்ல ஏதோ ப்ராப்ளம்” என்று சதீஷ் மீண்டும் இக்னீஷியனை உசுப்பினான்.
ஊஹூம்…கார் கிளம்புவேனா என்றது. கும்மென்ற இருட்டு சுற்றிலும், சாலை விளக்குகளும் இல்லை.
“பகவானே…என்ன இது சோதனை” பங்கஜம் புலம்பினாள்.
“மெகானிக் ஷாப் இருக்கா? கீழே இறங்கி பாக்கறியா?” என்றார் சிதம்பரம்.
சதீஷ் கீழே இறங்கி காரின் பானெட்டைத் திறந்து பார்த்து எல்லா ப்ரயத்தனமும் செய்து ஒன்றும் பலிக்கவில்லை..மூவரும் சாலையில் பரிதவிப்புடன் நின்றனர்.
அப்போது சாலையில் ‘சென்னை’ என்று போர்டை மாட்டிக்கொண்டுவந்த பஸ்ஸை கைகாட்டி நிறுத்தினான் சதீஷ்.
கண்டக்டர், “இடமே இல்லை” என்று சொல்லி கைவிரிக்க அடுத்த பஸ்ஸை நிறுத்தினான். பஸ் நின்றது…கண்டக்டர் “எத்தினி டிக்கட்?” என்றதும் சதீஷ் பர்ஸ் கொண்டு வராததை சொன்னான்.
“பையா இந்த காது தோட்டை வச்சிக்கோப்பா…டிக்கட் கொடுப்பா” பங்கஜம் காதில் கைவைக்கு முன்பு எரிச்சலுடன் உள்பக்கம் திரும்பி கண்டக்டர் “ரேய்ட்ட்” என்றார்.
“ரொம்ப அவசரம் யாராவது ஹெல்ப் பண்ணுங்கோ ஊர் போனதும் தந்துட்றேன் ப்ளீஸ்…” என்றெல்லாம் பயணிகளிடம் பஸ் படிக்கட்டில் நின்றபடி கெஞ்சிப் பார்த்தான் சதீஷ்.
அனைவரும் தூக்கம் கெட்ட எரிச்சலில் உச் கொட்டினர்.
கண்டக்டர் முறைக்க பஸ் புறப்பட்டுவிட்டது.
“வைரக்கல்லு இருக்கு.. லட்ச ரூபா மேலே பெறும் அதை எடுத்துண்டு டிக்கட்ட தரமாட்டானோ கடங்காரன்?”
“பாட்டி ப்ளீஸ்…”
“அதோ ஒரு கார் வர்துடா நிறுத்து நிறுத்து” பரபரத்தார் சிதம்பரம்…சதீஷ் தன் இருகைகளை விரித்து சாலை நடுவிலேயே போய் நின்றுகொண்டான்.
கார் நின்றது.
கார்ஜன்னல் கண்ணாடி கீழே இறங்கவும் மூவரும் ஆவலாய் எட்டிப்பார்த்தார்கள்.
சுப்ரமண்யன்!
பெங்களூரில் பக்கத்து வீட்டுக்காரர்! அட நல்லதாப்போச்சு! காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சுப்ரமண்யன் அசிரத்தையாய் ஜன்னல் கதவைத் திறந்தார்.
சதீஷ் ஜன்னல் வழி தெரிந்த சுப்ரமண்யனிடன் குனிந்து நடந்ததை சொன்னான். பங்கஜமும் தன்பங்குக்கு சுவாதீனமாய், “சுப்பு நீயாப்பா! உன்னை அனுமன் தான் இங்க அனுப்பி வச்சிருக்கார்…சென்னைக்கு சாவுக்குப் போயிண்டு இருக்கோம் அர்ஜண்டு…நீயும் மெட்ராஸ்தானே? கார் நடுவழில நின்னுடுத்துப்பா….அவசரத்துல பர்ஸ் போன் கார்டு ஒண்ணும் கொண்டுவரல…கொஞ்சம் எங்களை மெட்ராஸ்ல கொண்டுவிட்டுடு புண்ணியமாப்போகும்” என்று கேட்டுக்கொண்டாள்.
சுப்ரமண்யன் அருகில் இருந்த மனைவியைப்பார்த்தார்.அவள் கிசுகிசுப்பான குரலில் ஏதோ சொல்ல, “ஸாரி சதீஷ்…கார்ல ட்ரைவர் தவிர மூணு பேருக்கு இடமில்லை… ஒருத்தர் வேணா வாங்கோ அதுவும் பின் சீட்ல உக்காந்துருக்கிறது என் ஒய்ஃப்பும் நானும்.. அவ பக்கத்துல நீயோ உங்கப்பாவோ உக்காரவும் முடியாது…” என்று இழுத்தார்.
“நானும் உங்க கார்ல வந்து உக்காரலப்பா நீ பேஷா போய்க்கோ” நக்கலாய் கை குவித்தாள் பங்கஜம். “ரங்கன் மாதிரி மனுஷன் வாழ்ந்த இடத்துல இந்த மாதிரி அல்பங்கலும் வாழறது பாரேன்…” என்று தோளில் முகத்தை இடித்துக்கொண்டாள்.
விர்ரென சீறிக்கொண்டு அந்தக் கார் போய் விட்டது. தூறலும் நின்றது.
அரைமணி நேர அவஸ்தைக்குப் பின்னர்…
இன்னொரு கார் விரைந்து வந்தது இவர்கள் சாலை ஓரமாய் நிற்பதைப் பார்த்து இவர்கள் அருகில் வந்து நின்றது. ஹெட் லைட் வெளிச்சத்தில் கண் கூசவும், விரல்களால் கண்ணை மூடியபடி சதீஷ் கார் அருகே நெருங்கினான்.
காரில் ட்ரைவர் தவிர மூன்று பேர் இருப்பது தெரிந்தது. சட்டென ட்ரைவர் இருக்கையினின்றும் இறங்கியவன், “என்னா கார் பொத்துக்கிச்சா? வனாந்திரப்பகுதி இது…இங்கிட்டு தைரியமா நிக்கறீங்க ம்ம்?” என்று மிரட்டுகிற குரலில் கேட்டான்.
சதீஷ் தயக்கமுடன், “சென்னைக்குப் போயிட்டு இருக்கோம் திடீர்னு கார் ஸ்டார்ட் ஆகல” என்றான்.
அரைகுறை இருட்டில் அவனுடைய கொடுவாள் மீசையும் சிவந்த கண்களும் கருத்த உயர்ந்த தாட்டியான உருவமும் மூவருக்குமே அச்சத்தை ஏற்படுத்தின.
“காரெல்லாம் சரியா இருக்கு நாங்க சும்மா இப்படி ரோட்ல நிக்கறோம்” என்றாள் பங்கஜம் பதட்டத்தை மறைத்தபடி,
“பாட்டியம்மா…பயத்துல பொய் சொல்லாதே..பையா! என்னா வண்டில ப்ரச்சினையா துட்டு வச்சிருக்கியா ரிப்பேருக்கு? ஆனா பக்கத்துல ஒரு கடை கிடையாது.. பலம்னேரு தாண்டினாலும் நடு ராத்ரி எவன் கடை தொறந்து இருக்கும் ஆங்? பொட்டக்காடு இது…” என்றவன் தன் வண்டிக்குள் இருந்தவர்களைப் பார்த்து, “டேய் பக்கிரி, சுடல, மாரி.!. துப்பாக்கி எல்லாம் எடுத்திட்டு கீள இறங்குங்கடா…இவங்கள கார்ல ஏத்திக்கிட்றேன்… காரு சென்னைதான் போவுது… வளில எங்கும் நிக்காது உங்க காரை லாக் பண்ணிட்டு என் கார்ல ஏறுங்க…பாட்டிம்மா…ஒண்ணுக்குப் போவணும்னா இங்கயே போயிக்கோ… இருட்டுதான் எல்லாபக்கமும்… கிக்கீ…” என்று அதட்டியபடி அசிங்கமாய் சிரித்தான்
பக்கிரி அண்ட் கோ கீழே இறங்கினர்..எல்லோருமே பார்க்க அடிதடிப்பட வில்லன்களைப் போலத் தெரிந்தார்கள்.
’துப்பாக்கி’ என்ற வார்த்தையிலேயே பயத்தில் உறைந்து போனதை காட்டிக் கொள்ளாமல்,
“நாங்க கார்ல வர்தா இல்ல… சும்மா இங்கயே நிக்கறோம்” வெடுக்கென பங்கஜம் சொல்லவும்,
“அப்டியா ? யானை வரும் கரடி வரும். இப்பல்லாம் ஓநாய்ங்க வேற உலா வருதாம் ஆந்திரால ஒரூ க்ராமத்துல வந்திச்சே அது மாதிரிக்கும். எனக்கென்ன…நல்லா தவிங்க…” என்று காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான் அந்த முரடன்.
சிதம்பரம் சதீஷின் விரல்களைப் பற்றி காதோரம் ஏதோ தெரிவித்தார்..
சதீஷ் சட்டென தனது காரை ‘லாக்’ செய்துவிட்டு முரடனின் காரின் பின் சீட் கதவைத் திறந்தான், தன் பாட்டியை கண்ணால் ஜாடை காட்டி உள்ளேஏ றச் சொன்னான். பிறகு சிதம்பரத்தையும் அமர வைத்து, தான் முன் பக்கக் கதவைத் திறந்து ட்ரைவர் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான்.
“செ…சென்னைதான் போ…போகணும்” என்றான்.
“அப்டியா பையா? சரி..எலே..பக்கிரி…சுடல.. மாரி…! நீங்கள்ளாம் குப்பனோட லாரி- இப்போ லோடு ஏத்திக்கிட்டு இந்த வளி வரும் அதுல ஏறி சென்னை வாங்கடா” என்று காரை ஸ்டார்ட் செய்தான்.துப்பாக்கிகளுடன் அவர்கள் இறங்கினர்.
உறுமிக்கொண்டு கார் கிளம்பியது.
முரடன் ஒரு கையில் ஸ்ட்ரியங்கைப் பிடித்தபடி மறுகையால் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டே வந்தான். கார் தலைதெறிக்கும் பேய் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது,
பங்கஜத்துக்கு படபடப்பில் கண்மூடிக்கொண்டது.. சதீஷும் சிதம்பரமும் ரங்கதுரையின் அகால மரணத்தை , தயாளகுணத்தை, கேட்காமலேயே உதவும் தர்ம சிந்தனையைப்பற்றி ஆற்றாமையுடன் பேசிக்கொண்டு வந்தார்கள். பங்கஜம் மனசுக்குள் அபீதிஹஸ்தம் ஸ்லோகம் சொல்லத் தொடங்கினாள்.
சரியாக நடு இரவுதாண்டி ஒன்றரை மணிக்கு கிண்டியில் சதீஷ் நிறுத்த சொன்ன வீட்டின் முன்பு கார் நின்றது.
முதலில் கீழே இறங்கியதும் சதீஷ், “ரொம்ப தாங்க்ஸ் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க…உள்ளே போய் உங்களுக்குத் தர வேண்டிய பணம் வாங்கிட்டு வரேன்” என்றான்.
முரடன் சிரித்தபடி தன் இருக்கையை விட்டு கீழே இறங்கி நின்றான். பிறகு, “பணமா? கார்ல நீங்க பேசினதெல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன்…செத்த வீட்ல போயி இப்ப கடன் கேட்பியா? அப்படி உங்க கிட்ட அந்தப் பணம் வாங்கிட்டுதான் நான் போவேனா? காட்டுப பகுதிக்குப் போயி மக்களுக்கு தொல்லை தர்ர விலங்குகளை சுடற கூட்டத்துக்காரன் தான். நீங்க காரை நிறுத்தி நின்னுக்கிட்டிருந்த ஏரியா பக்கம் காடு இருக்குது சமீபமா ஓநாய்ங்க அங்கேருந்து ஊருக்குள்ள வந்து ரெண்டு பேரைக் கடிச்சி சாகடிச்சிட்டது. அதுங்களைவ சுட்டு போடத்தான் நாங்க ஒரு கூட்டமா கிளம்பினோம்.. ஃபாரஸ்ட் ஆளுங்க இருக்காங்க ஆனா வேட்டையாடற எங்களுக்குத்தான் அந்த ஓநாய்ங்க எப்ப வெளில வன்னு தெரியும். அதான் நாங்க மக்கள காப்பாத்த தனியா கிளம்பினோம்… இன்னைக்கு எங்க கண்ணுல ஓநாய்கள் அகப்படலை. இன்னொரு நாள் பிடிச்சு சுட்டு விடனும்…துப்பாக்கி கையில வச்சிருக்கிறவங்க தான்…ஆனா எங்களுக்கும் மனிதாபிமானம் உண்டுப்பா… இந்தா, இதுல அஞ்சாயிரம் ரூபா இருக்குது, செத்தவரு, அப்பாவுக்கு நண்பன்கிறீங்க… அந்த மனுஷனோட தகன செலவுக்கு நீங்க பணம் தர வேணாமா? அதானே மொற? இந்தா என் விசிட்டிங் கார்டு…மூணு நம்பருல எதுல நீ கூப்பிட்டாலும் நான் எடுப்பேன்…நீ மெதுவா பணம் ஜிபே பண்ணு… கடனாத்தான் கொடுத்துருக்கேன்…ஆனா வட்டியில்லாக் கடன்… ஹ்ஹா.” என்று சிரித்தபடி சதீஷின் கையில் கசங்கிபோன ஐநூறு ரூபாய் நோட்டுக் கற்றையுடன் அந்த விசிட்டிங் கார்டையும் திணித்தான்.
“ரொம்…ரொம்ப… தாங்கஸ்ங்க…சீக்கிரமா பணம் அனுப்பிட்றேன்…ஆமா. உங்கபேரு?” என்று சதீஷ் கேட்டான். பங்கஜமும் சிதம்பரமும் ஆர்வமாய் அவன் முகத்தையே பார்த்தபடி நின்றனர்.
“ரங்கதுரே!” என்று பதில் வந்தது.