சில நூற்றாண்டுகள்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 712 
 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. ஸ்டிரைக் முடியுற வரைக்கும், இந்த ஊர்ப்பக்கமே தலைவைத்துப் படுக்கக்கூடாது. 

தொலைச்சுப் போடுவாங்க. நம்மளை நம்மை மாதிரி வாழவிட மாட்டாங்க. அவங்களை மாதிரி இருக்கச் சொல்லுவாங்க. நெருக்குவாங்க. சுத்த விவரங்கெட்டவங்க. கூறுகெட்ட முரட்டு ஜனங்க. 

ஊரெல்லாம் ஒரே ஜாதிக்காரங்க. ஊர்க்கட்டு இருக்கு. ஏகக் கெடுபிடி. எந்த ஒரு காரியம்னாலும் சரி… நாட்டாமை சொல்றதுதான் வேதம். அவர் சொல்லிட்டா… சொன்னதுதான். அதுக்கு மறுபேச்சே இருக்காது. 

மறுத்துப் பேசுறவனை மனுசனாகக்கூட மதிக்கமாட்டாங்க. ஆள் ஆளுக்கு எகிறிக்கிட்டு வருவாங்க. 

‘அடிடா…’, ‘புடிடா…’, ‘மரத்துலே கட்டி வைடா’ என்று ஆளுக்கு ஆள் ஆரவாரம் பண்ணுவாக. ‘குத்து வெட்டு ஆகிப்போயிடுமோ’ன்னு பொம்பளைப் புள்ளைக பதறிப் போறமாதிரி… ஊரையே திரட்டி வைச்சு கத்துவாங்க. 

போனஸ் வேணும்… பூட்ஸ் வேணும்… வருஷத்துக்கு ரெண்டு ஜோடி யூனிபார்ம் வேணும்… மழைக்கு கோட்டு வேணும்… தூசி அலவன்ஸ் வேணும்… சீனியாரிட்டி அடிப்படையில் க்ரேடு வேணும்… 

இன்னும் எத்தனையோ ‘வேணும்களுக்காக’ ஸ்ட்ரைக் வரப் போகுது. நிர்வாகத்துக்கு ரொம்பத் திமிரு. ரொம்ப அலட்சியம். பேச்சுவார்த்தைகள்லே பிரச்னையை முடிக்கமாட்டேங்குது. 

நாலு மைல் தள்ளியிருக்கிற சிமிண்டாலையிலேயும், கல்குவாரியிலேயும் ஸ்டிரைக் வர்ரதைத் தவிர… வேறு வழியில்லைன்னு ஆகிப்போச்சு. 

நா அந்த ஸ்டிரைக்லே கலந்துக்கக்கூடாதாம். கருங்காலியாகணுமாம! பாதாளத்துக்குள்ளே – கல்லை ஓடைச்சு… லோடு பண்ணுகிற நான் கலந்துக்காம… அந்தப் போராட்டத்தை யாரு நடத்துறதாம்! 

இந்த ‘வேணும்’கள் ஞாயமான ‘வேணும்’கள்தானே. இதுகளுக்காக நான் போராடப் போகக்கூடாதுன்னா… அந்த ‘வேணும்’களை இந்த ஊர்க்காரவுக குடுப்பாங்களா…? 

இவங்களுக்கு ஒரே குருட்டுப் புத்தி. வெளிச்சத்தைப் பார்க்க நினைக்காத அப்பாவி ஜனங்க. நாட்டாமை சொன்னதையே செய்துக்கிட்டு- சொல்லிக்கிட்டு- கிளிப்பிள்ளைக மாதிரி. 

குளத்துத் தவளைக. ஒரே தண்ணி. ஊறாத பழைய தண்ணி. ஒரே சகதி. ஒரே மாதிரியான வாழ்க்கை. பாவம், அதுகளுக்குத் தெரிஞ்சது அம்புட்டுதான்! 

பிறந்த ஊரு, சொந்த ஜனங்கன்னு நெனைச்சு, இங்க வீடு கட்டுனது தப்பாப் போச்சு. யோசனையில்லாம கட்டியாச்சு. இப்ப, திடுதிப்புன்னு வீட்டை மடிச்சு, கக்கத்துல இடுக்கிக்கிட்டு ஓடிடவா முடியும்? 

இப்ப…ஆத்துத் தவளையைப் பாத்து, ஒரே பொந்துக்குள்ளே கட்டுப்பட்டுக்கிடன்னு, கிணத்துத் தவளைக கத்துது. 

இதுகளுக்கு விவரம் சொன்னாலும் புரியமாட்டேங்குது. மண்டையிலே ஏறமாட்டேங்குது.ஏறுகிறமாதிரி, நமக்கும் சொல்லத் தெரியமாட்டேங்குது. 

மனசுக்குத் தெரியும் ஞாயத்தை, ‘போராடாம ஒன்னும் நடக்காது’ங்கிற நெசத்தை, இதுகளுக்குச் சொல்றாப்புலே நம்ம நாக்கிலேயும் வக்கு இல்லே, நல்லவார்த்தை சொல்ல… 

வாயைத் தெறந்தா… திண்டுக்கு முண்டா வார்த்தை வருது. ஒன்னு இருக்க ஒன்னு சொல்லிட்டா… அதுதான் சாக்குன்னு ஊரே திரண்டு மொறைக்குது. கூச்சல் போடுது. 

எந்த ஞாயத்தைச் சொன்னாலும் காதுலே போட்டுக்காம, ஒத்தை வரியிலே கேக்குறாரு நாட்டாமை. 

‘ஜி.எம்’மா இருக்குற நம்ம சாதிக்காரரை துரத்துறதுக்கு, போராட்டம் நடத்துற மத்த சாதிக்காரப் பயலுகளோட நீயும் சேர்ந்துக்கிட்டு, இனத் துரோகம் பண்ணலாமா?” 

”ஐயய்யோ…நாங்க ‘ஜி.எம்.மெ’ விரட்டுறதுக்காகப் போராடலியே. எங்க கோரிக்கைகளுக்காகத்தானே. 

“போனஸும், பூட்ஸும் இல்லாம வேலை செய்ய மாட்டீகளோ? துரைக! முந்தியெல்லாம் அஞ்சு ரூவா கூலிக்கு வேலி முள்ளு வெட்டுனப்போ… க்ரேடும், அலவன்ஸும் யார்கிட்டே வாங்குனே?” 

“அதுக்காக, கிடைக்க வேண்டிய ஞாயமான சலுகைகளை எப்படி வுட்டுத்தர முடியும்?” 

“ஏலேய்…திமிர்பிடிச்சுப் பேசாதேடா… அவனவன், வானம் பார்த்த பூமியிலே எட்டு ரூவா கூலிக்குக்கூட வேலையத்துப்போய் அலையுறான். எந்தச் சாமி புண்ணியமோ… ஒனக்கு கல்குவாரியிலே வேலை கெடைச்சிருக்கு.. கைநெறைய சம்பளம் வாங்குற. அத்தோட வாயை மூடிக்கிட்டு கிட… பெரீ…ய துரை கணக்கா… சட்டம் பேசாதேடா…தாங்கமாட்டே.” 

“ஏண்டா…ஊர் நாட்டாமை, நா சொல்றேண்டா… நீ ஸ்ட்ரைக்குலே சேரக்கூடாது. நம்ம சாதிக்காரப் பய எவனும் சேரக் கூடாதுடா. ஜி. எம். நம்ம சாதிக்காரரு. இனத்துக்காரரு. அவரை குறைச்சுப் பேசுனா… அவன் எந்தச் சங்கத்துக்காரனாயிருந்தாலும் அவன் தலையை வகுராம வுடக்கூடாதுடா… என்னடா, பெரீய சங்கம்? மயிர்ச் சங்கம்! ஏலேய்… சங்கம்ங்கிறது நேத்து முளைச்சதுடா. சாதிங்கிறது நம்ம பாட்டனுக்கு பாட்டன் காலத்து விஷயம்டா. பாத்து நடந்துக்க.” 

மிரட்டல்…கொடூரமான வெறித்தனமான மிரட்டல்… நியாயம், உண்மை பற்றிய அறிவேயில்லாத மிரட்டல்; தலைக்கேறிப் போய்விட்ட சாதி வெறியின் அதிகாரத்துவ மிரட்டல். 

இதற்கெல்லாம் பணிவதே இழிவு; அசிங்கம்; மானக்கேடு.

என்ன செய்றது? 

“சோத்தை பாத்துக்கிட்டே எம்புட்டு நேரம்தான் யோசிக்கிறது? சாப்பிடுங்க.ஆறிப்போகுது…” 

வட்டிலும் சோறும் கண்ணுக்குத் தெரிந்தது. ஆறி அலர்ந்து போன சோறு. உள்ளுக்குள் ஓடிய உஷ்ணமான நினைவுகள். பட்டென்று நிமிர்ந்தான். 

மாடத்தி! 

இப்போதுதான் மஞ்சள் தேய்த்து குளித்திருக்கிறாள். பளிச்சிடுகிற முகத்தில், திட்டு திட்டாகப் பச்சைகள். ஈரக்குளிர்வோடு முதுகில் தளர்ந்து, தவழ்ந்த கரிய கூந்தல். கூந்தலின் கருப்புக்கு வேற்றுக் கருப்பாக முகம். 

மேல்வரிசைப் பற்கள் மின்னச் சிரிக்கிறாள். காதுகளின் நுனியில் பளிச்சிடுகிற ரோசாப்பூ தோடுகள், முகக்கருமையில் டாலடிக்கின்றன. 

ஏதோ கேள்வி கேட்டாள் என்ற நினைப்பில், உயிரில்லாமல் ‘ஒன்னுமில்லே’ என்றான். 

இவள்தான் எம்புட்டு நேர்த்தியானவள். அருமையான குணம், வைரம் பாய்ந்த குணம். சதா எந்நேரமும் என்னைக் குறையடிச்சே நேரில் பேசினாலும்… உள்ளுக்குள் என்மீது எம்புட்டு நம்பிக்கை! 

பூமி மீது சம்சாரி வைச்சிருக்கிற மாதிரி, எந்தப் புயலுக்கும் அசைஞ்சு குடுக்காத நம்பிக்கை! 

கட்டிக் கொடுத்திருந்த அக்கா ஊருக்குப் போயிருந்தவன், மாடத்தியைப் பார்த்தான். பார்வைகளில் மனசு பிடிபட்டுப் போய்விட்டது. மனசைக் கவ்விக்கொண்ட பார்வை; பரஸ்பரம் வாழ்வையே கவ்விக்கொண்ட பார்வை. 

அப்புறம், அக்கா மீது பாசம் பொங்கி வழிய ஆரம்பித்து, அடிக்கடி அக்காவைப் பார்க்கவரத் துவங்கினான். 

பழக்கவழக்கமாயிற்று, மாடத்தி. 

எந்தச் சொத்துமில்லாமல்… கூலி வேலையில் வயிறு வளர்த்து வந்த இவனுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். 

‘வக்கத்த பயலுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா?’ அடியோடு மறுத்துவிட்டனர். வக்கு, வசதி பார்த்து கவ்விய பார்வைகளா? 

பழக்கவழக்கம் நிற்கவில்லை. நிறுத்தியே ஆக வேண்டிய கெடுபிடி வந்து சேர்ந்தது. என்ன செய்றது என்று கவலையோடு அவன் கேட்டபோது, என்ன துணிச்சலாய்ச் சொன்னாள்… எம்புட்டு நம்பிக்கையோடு சொன்னாள்… வேறு எந்தப் பெண்ணால் அப்படிச் சொல்ல முடியும், மாடத்தியைத் தவிர! 

“எனக்கு எவரும் பெரிசில்ல. எந்தச் சிறுக்கியும் தேவையில்லே.நீங்கதான் எனக்கு ராசா. நீங்க என்ன செய்ஞ்சாலும், எனக்குச் சரிதான்.” 

அந்த- வைர நம்பிக்கைதானே, அவளது அந்தத் துணிச்சல்தானே… இவனுக்குத் தெம்பைத் தந்தது. 

தைர்யத்தை வழங்கியது; சூழலின் இருட்டுப் பின்னலை அறுத்தது… 

கூட்டி வந்துவிட்டான். 

அவளுடைய சொந்தக்காரர்கள், அரிவாள், கம்புகளோடு ஊருக்குள் படையெடுத்தபோது – இவன் பயந்தான். திருடிவிட்டு மாட்டிக் கொண்டவனைப்போல மருகித் தவித்தான். தப்பிக்க முடியாத வலைக்குள் சிக்கிக்கொண்டு, வியர்த்தான். நடுங்கினான். அடி வயிற்றில் பகீர் என்றது. 

அப்போது- 

குறுக்கே மறித்து வந்து நின்றாள் மாடத்தி. புலியாய்ப் பாய்ந்து, இவனுக்குக் கவசமாக நின்றாள். கண்களில் தகதகத்த வைராக்யம். சம்மட்டி அடிவிழுந்தவுடன் தெறிக்கிற நெருப்புப் பொறிகளைப் போல…வார்த்தைகள் சீறிச் சினந்தன. 

“நீங்க நகையும் போடவேண்டாம். நா செத்தா… இழவுக்கும் வரவேண்டாம். நல்லா வாழ்றேனோ… நாசமாய்ப் போறேனோ… எல்லாம் இவரோடதான். இதைத் தடுக்க, நீங்க என்ன… நம்ம குலதெய்வமே வந்தாலும் முடியாது, போங்க.’ 

துண்டை உதறி, மீசையைத் திருகிவிட்டு “பொட்டைக் கழுதைக்கு தலையை முழுகியாச்சு” என்று அன்றைக்குப் போனவர்கள்தான்… 

கல்குவாரியில் வேலைக்குச் சேர்ந்து, பெர்மனெண்ட் ஆகி, 800க்கும் மேலே சம்பளம் என்று ஆன பிறகு… பிறந்த பேத்தியைப் பார்க்கிற சாக்கில் வந்து உறவு கொண்டாடினர். 

அப்பேற்பட்ட வைராக்கியக்காரி இவள்! வாழ்க்கைப் போராட்டங்களை வரிந்து கட்டிக்கொண்டு ஏற்றுக்கொண்டவள். சவடால்தனம் எதுவுமில்லாமல், இயல்பாகக் கிளர்ந்து, விசுவரூபம் எடுத்தவள். 

ஒற்றைப் புள்ளையாகப் பிறந்த பொட்டைப் புள்ளைக்கு, ஆவணி வந்தா ஒன்பது வயசாகுது. இத்தனை வருஷமா வெறும் வயிறாகவே இருந்தவள்… நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதோ… அடிவயிறு கனக்க, காயும் பூவுமாய் பசேரென்று, தளதளவென்று… 

இந்த வவுத்துப் புள்ளைக்காரியை, இந்தக் குருட்டு ஜனங்கள் மத்தியில் விட்டுவிட்டு, நாம் மட்டும் ஊருக்கே வராமலிருந்தால்… ஸ்ட்ரைக்கில் இருந்தால்… அது நல்லா இருக்குமா? மாடத்தி, அனாதையாகிப் போயிட்டோமேன்னு திகைக்கமாட்டாளா? 

நாட்டாமை பேச்சைக் கேட்டு, இந்த ஊர் ஜனங்களும் அவளுக்கு ஏதேனும் அக்ரமம் செய்துவிட்டால்?… 

ஐயோ…நெனைச்சாலே நெஞ்சு பதறுதே…! ஈரக்குலை வேகுதே… 

அதுக்காக… நாட்டாமை மிரட்டலுக்குப் பயப்படவா? ஞாயத்துக்காக நின்னு போராடுற சங்கத்து மூஞ்சியிலே கரியைப் பூசவா? காலத்துக்கும் கரையாத களங்கமா-கருங்காலிங்கிற பேர் வாங்கி-அசிங்கப்பட்டு நிக்கவா? ச்சே! 

அதைவிடச் செத்துத் தொலைஞ்சிடலாமே! 

“என்னங்க இது!” மாடத்தியின் பரிகாசம், அவனை, அவனுக்குக் காட்டியது. 

“இன்னிக்கு உங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்புடி, என் மூஞ்சியையே பாக்குறீக?” 

அட… ஆமாம், ரொம்ப நேரம்தான் பார்த்துவிட்டான். லஜ்ஜையுடன் பார்வையை விலக்கினான். சுவரில் மோதிய குருட்டு ஈயைப்போல, அங்கும் இங்கும் அலைந்தது பார்வை. 

மனசு கிடந்து அடித்துக்கொண்டது. 

நான் ஊருக்கே வராமல் தப்பித்துக் கொண்டு, ஸ்டிரைக்கில் இருந்துவிட்டால்… என்னைக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்ற ஆத்திரத்தில்…நாட்டாமை என்ன செய்வார்? 

மாடத்திக்கு தொல்லைகள் கொடுப்பார்களோ… 

ஊர்க்கிணற்றில் குடிதண்ணீர் எடுக்கவிடாமல் தடுத்து விடுவார்களோ… கடைகளில் சரக்கு தரவேண்டாம் என்பார்களோ… ஏகாலியை துணி துவைக்கவேண்டாம் என்பார்களோ… 

ஒத்தையில் இருக்கிற அவளிடம், ‘குடிவெறியில் வந்து வைது, கலாட்டா செய்வார்களோ…’ அவளைக் கலங்க அடித்து, அதன் மூலம் என்னை ஜாதிக்கட்டுக்குள் பணிய வைக்க முயற்சிப்பார்களோ… 

இதையெல்லாம் மாடத்தி சமாளிப்பாளா? ஒன்பது வயசு மகளை வைத்துக்கொண்டு, வயிற்றிலும் ஒரு ஜீவனைச் சுமந்து கொண்டு… இதை எதிர்த்து நின்றுவிடுவாளா? 

என்னால் இவளுக்கு எம்புட்டுத் தொல்லைகள். ஆதிநாளிலிருந்தே எல்லா வகையிலும் மாடத்திக்குத்தான் தொல்லைகள். 

அவளுக்காகக் கசிந்து, போராட்டத்திலிருந்து பின்வாங்கினால், சங்கம் என்ன சொல்லும்? சங்கம் கிடக்கட்டும், நம்ம மனசே நம்மளைக் குத்திக் கொல்லுமே…காறித் துப்புமே… மனசுக்கும் ஞாயத்துக்கும் விரோதமா வாழ்ற வாழ்க்கையும் ஒரு பொழைப்பா? நாய்கூட சகிக்காதே, அந்தப் பொழப்பை! 

குடையைக் கண்டு வெருண்டு, அங்குமிங்குமாய்ப் பாய்ந்து சீறுகிற காளையை இறுக்கிப் பிடிப்பதைப்போல… மனசுக்கு மூக்கணாங்கயிறைப் போட்டு இழுத்து நிறுத்தினான். 

”மாடத்தி.” 

“என்னங்க.” 

அவள் குரலில் கனிவு; அவன் முகத்திலேயே மனசை வாசித்து விட்டு, காட்டுகிற மனக் கனிவு; மனப்புண்ணின்.மீது, மென்காற்றாக வந்து தழுவுகிற பரிவு. 

உதட்டை நாவால் ஈரப்படுத்திக்கொண்டான். வார்த்தைகள் கிடைக்கவில்லை. சொற்கள், ஓடி ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி காட்டின. தாய்மொழியே மறந்துவிட்டதைப்போல ஓர் தவிப்பு. 

“சொல்லுங்க. எதுவானாலும் சரி, மனசுக்குள்ளேயே அடைச்சிக்கிட்டு எதுக்காக மருகணும்? சொல்லுங்க.” 

சொல்லிவிட்டான். 

சுமையை இறக்கி வைத்துவிட்ட ஆசுவாசம் மனசுக்கு. என்ன சொல்வாளோ என்ற எதிர்பார்ப்பு; பதைப்பு. திக்… திக்… திக்… 

அவள் மனசுக்குள் கனக்கிற பாரம், முகத்தில் படிந்த கரிய நிழலில் தெரிந்தது. இமைகள் மெல்லிசாகப் படபடத்து அடங்குகிறது. ஈரத்தில் மின்னுகிறது; கீழ் உதட்டில், ஒரு மெல்லிய சிறகின் துடிப்பு. 

இவன் மூகத்தை இதமாய்த் தழுவி, விலகுகிற அவளது கனிவான பார்வை. 

“எந்த ஆகாயத்துலே சுத்தி அலைஞ்சாலும், அடையுறதுக்கு பறவை, கூடு வந்துதானே சேரணும்?” 

“ஆ…மா”. 

“இப்ப நம்ம கூடு இந்த ஊரு இல்லே. பாடுபடுற இடம்தானே, நம்ம கூடு? கூடச் சேர்ந்து ஒழைக்கிற ஜனங்கதானே… இப்ப நம்ம இனம்?” 

“ஆமா” என்ற அவன் குரலில், உற்சாகத் துள்ளல்; கண்களில் பரவச ஒளி. 

“இனம் இனத்தோட இருந்தாத்தான் யாருக்குமே மதிப்பு. மானமதிப்போட வாழணும்னா… அதுக்காக நாம எதையும் தாங்கித்தானே ஆகணும்? நீங்க கவலைப்படாம போங்க, நா பாத்துக்கிடுதேன்.”

“நீ சமாளிச்சிருவியா… மாடத்தி? அதான்… எனக்குக் கவலை.” 

“ஒரு பொம்பளை மனசு வைச்சு நின்னுட்டா… அவளை எந்த கொம்பாதி கொம்பனும் அசைச்சிட முடியாது. தெரியுமா உங்களுக்கு?” 

“தெரியாதா, என்ன! நம்ம கை கோர்த்து சேர்ந்த அந்த நாளிலேயே, நீ காட்டிய வைராக்யம் தெரிந்ததுதானே!” 

ஆகாயத்தை முத்தமிட்டு நின்ற அந்த சிமிண்டாலையின் ராட்சஸக் குழாய்,இப்போது அலங்கோலமாய் நின்றது. தாலியறுத்த மூளியாய்- அமங்கலமாயிருந்தது. மேகங்களின் அணிவகுப்பாய் வருமே, அந்தப் புகையைக் காணோம். 

ஸ்டிரைக் துவங்கிவிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதக் கைகளின் உழைப்பின் வலிமை, அந்த வெறுமையில் துலாம்பரமாய்த் தெரிந்தது. உழைப்பு என்பது வலிமை மட்டுமா? அழகும் அல்லவா! அந்த அழகின் சிரிப்பில்லாமல், ஆலை இழவு வீடாகிக் கிடந்தது. 

ஆலையின் முன்னால்… முக்கு ரோட்டில்… வெள்ளை வெள்ளைப் பிசாசுகளாய் ஏகப்பட்ட போலீஸ் வேன்கள். அந்தச் சந்திப்புச் சாலை முழுவதும், இரும்புத் தொப்பிகள் அணிந்த ஆயுதபாணி காக்கிச் சட்டைகள்… 

இவன்… ஓட்டலில் சாப்பிட்டான். சங்க அலுவலகத்தில் தங்கினான். தட்டிப்போர்டுகள் கட்டினான். ஊர்வலங்களில் கோஷம் போட்டான். பொதுக்கூட்டத்தில் முன் வரிசையில் உட்கார்ந்தான். 

போராட்டப் பரபரப்பில் நாளும் பொழுதும் சென்றாலும்… மனசெல்லாம் மாடத்தி… மாடத்தி… மாடத்திகள்… 

ஊரிலிருந்து தினந்தோறும் ஆள் வந்து கொண்டேயிருந்தது 

“நாட்டாமை ஒன்னை வரச்சொன்னாரு.”

“ஊர்க்கூட்டம் இன்னிக்கு. நீ கட்டாயம் வரணுமாம். வரலேன்னா… அபராதம் போடுவாகளாம்.” 

“நாட்டாமை ஒன்னைக் கைப்பிடியா கூட்டிட்டு வரச் சொன்னாரு…”

இப்படித் தினமொரு விதமாக வருகிற அழைப்புகள், அச்சுறுத்தல்கள், நச்சரிப்புகள், மிரட்டல்கள். 

இவன் அசைந்துகொடுப்பதாக இல்லை. 

நாலைந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆளும்கட்சி சங்கத்தில் கொஞ்சப் பேர் வேலையில் இறங்கத் திட்டமிட்டனர். எல்லோரும் இவனது சாதிக்காரர்கள்தான். 

ஜி.எம்.முக்காகவும், ஜாதியின் மானத்தைக் காப்பதற்காகவும் என்ற மாயை உணர்ச்சியில் மயங்கிப்போய், பலியான கருங்காலிகள். அப்பாவித் தொழிலாளிகள். 

ஜாதி வெறி என்னும் போதையேற்றி, சுற்றுக் கிராமங்களில் கருங்காலித்தனத்திற்கு ஆள் திரட்டுகிற முயற்சிக்கு, ஆயிரக்கணக்கில் பணம் தண்ணீராய் இறைக்கப்பட்டது. ஊர் நாட்டாண்மைகள் வல்லவெட்டு போட்டு, மீசையை நீவிவிட்டுக்கொண்டு, பந்தா பண்ணிக்கொண்டிருந்தார்கள். 

‘கருங்காலித்தனத்தை எதிர்த்து மறியல் போராட்டம்’ என்று கூட்டுக் கமிட்டி அறைகூவல் விட்டது. தினசரி உணர்ச்சிமயமான தொழிலாளர்களின் கண்டன ஊர்வலங்கள். ஒவ்வொரு நாளும் 20 பேர், 30 பேர் என்று மறியல் செய்து, கைதாகி, மத்திய சிறைக்குச் சென்ற வண்ணம்… 

அப்போதுதான், ஊரிலிருந்து ஒருவன் வந்து, இடியை இறக்கினான். 

“மாடத்தியை பாம்பு கடிச்சிடுச்சு. நீ அவசரமா வரணுமாம்.”

இவனது சர்வாங்கமும் நடுங்கி வியர்த்தது.மனசு, மூச்சுவிட மறந்துவிட்டது. உள்ளுக்குள் ஒரு ஹீனக் குரல். மாடத்தி…மாடத்தி, என்ற முனங்கல். 

அவனுள் எண்ணற்ற யூகங்கள். தேனீக் கூட்டமாய் மொய்த்த விபரீத கற்பனைகள். மாடத்தியை மயானக் கரைக்குத் தூக்கிச் செல்கிற காட்சி,மனசில்! 

வேரறுந்தவனைப்போலத் தடுமாறுகிறான். கலங்குகிறான். அழுதுவிடுவதைப்போல குமுறி நிற்கிறான். 

பதைப்புடன் சைக்கிளைத் தூக்கினான். அப்போது- 

சங்கத் தலைவரின் குரல்- 

“தோழர்,எங்க கிளம்பிட்டீக?” 

”ஊருக்கு.” 

“என்ன ஊர்லே? ஏதாச்சும் அர்ஜெண்டா?” 

முகம் கறுத்துக் கிடந்தது. கண்கள் நீர்கோர்த்து நின்றன. உதடுகளை அழுத்தமாகக் கடித்தான். பொங்கிக் குமுறிய துயர உணர்ச்சிகளை அடக்கிக்கொள்ள சிரமப்பட்டான். 

வார்த்தை கிடைக்காமல் தவித்தான். சொற்களை எங்கே? காணோமே! தாய்மொழி மறந்துவிட்டதா? 

“சொல்லுங்க தோழர், என்ன விஷயம்?” 

“மாடத்தியை பாம்பு கடிச்சிடுச்சாம்.” 

அதிர்ச்சியில், தலைவரின் முகம் நிறம் மாறியது. அவரது கனத்த மீசைக்கடியில் உதடுகள் துடித்தன. எதையோ யோசிக்க முயற்சித்து, ஏனோ நிறுத்திக்கொண்டார். 

“சரி போய்ட்டு வாங்க. ஆனா, ஏதாச்சும் சூது சூழ்ச்சி இருந்தா…சிக்கிக்கிடாதீக.” 

அவனுள் சின்னச் சலனம். திகைப்பு. அவன் நிறைய யோசித்தான். 

“என்ன திகைச்சுட்டீக தோழர்?’ 

“இல்லே… நீங்க சொல்ற மாதிரி..ஒருவேளை பொய்யா இருந்தா… ” 

“அப்ப ஒன்னு செய்வோம். நீங்க இருங்க, நம்ம தோழர்கள் ரெண்டு பேரை உங்க ஊருக்குப் போகச் சொல்லுவோம். ஆக வேண்டியதைச் செய்யச் சொல்லுவோம். நீங்க பயப்படாதீக…’ 

“ஊம்.” 

ஊருக்குப் போன இரண்டு தொழிலாளிகள், சாயங்காலம்தான் திரும்பி வந்தனர். அதற்குள் இவன் தவித்த தவிப்பு… பதைத்த பதைப்பு… மனசெல்லாம் மருகித் தவித்தது. அந்தத் தொழிலாளிகள் வந்து- 

“அங்க அப்படியொன்னுமில்லே. எல்லாம்… ரெண்டு கால் பாம்பு கிளப்பிவிட்ட கப்ஸா” என்று சொன்ன பிறகுதான்- 

இவனுக்கு மூச்சே ஒழுங்காக வெளியே வந்தது.மனசு ஆசுவாசப்பட்டது. ஆனால்- 

இந்நேரம்வரை கலவரப்படுத்தியதற்குக் காரணமாக இருந்தவர்கள் மீது மனசார அருவருத்து காறித்துப்பினான். 

ச்சே… ஜாதி வெறி எம்புட்டு அயோக்கியத்தனமானதா இருக்கு! 

மனுசத்தன்மையில்லாம… மனசுகளைக் குத்திக் கிழிச்சு, துடிக்கவச்சு… த்தூ! ஒருவனை வளைச்சுப் பிடிச்சு… பணிய வைப்பதற்காக எம்புட்டு அசிங்கமான சூழ்ச்சி… ஜாதியே மனுசத்தனத்துக்கு எதிரியோ… 

அதற்குப் பிறகும் சூழ்ச்சிகள்… அச்சுறுத்தல்கள்… மிரட்டல்கள்… அலைஅலையாக வந்துகொண்டிருந்தன. சங்கம் பலமாக இருந்ததால்… வன்முறை முயற்சியில் இறங்க முடியவில்லை. தொடர்ந்து தொல்லைகள் வந்ததால்- 

தலைவர், இவனை மறியலில் கலந்து கொள்ளச் சொன்னார். மையச் சிறைக்குப் போய்விட்டான். 

சாமான்ய மனிதர்களான தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுபட்டு… உடையாமல், தளராமல், தொடர்ந்து நடத்திய போராட்டத்தில்… சர்க்காரே ஆட்டம் கண்டது. அலட்சியம் காட்டிய நிர்வாகம், அவசரமாகப் பேச்சுவார்த்தைக்கு சங்கங்களை அழைத்து… 

போராட்டம் வெற்றி பெற்று, சிறைச்சாலைகளிலிருந்து தொழிலாளர்கள் வந்து இறங்கிய அன்றைக்கு… வெற்றிவிழாகூட்டம். 

தைைலவர் பேசுகிறார். ஒற்றுமையின் அவசியத்தை… போராட்டத்தின் சாதனைகளை… பெற்ற சலுகைகளை… அரசின் தவறான அடக்குமுறைக் கொள்கையை- அரசுக்கே பாடம் போதித்த தொழிலாளர்களின் வீர உறுதிகளை எல்லாம் பேசுகிறார். 

“தோழர்களே… வர்க்கப் போராட்டங்கள்தான் அனைத்து மக்களுக்கும் புதிய பாடங்களைக் கற்றுத்தருகிறது என்ற நமது மேதைகளின் வார்த்தை, மீண்டும் இங்கே மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது. ஜாதியில் ஊறிக் கிடக்கிற நமது கிராமப்புறத்திற்கு இப்போராட்டம், ஜாதி என்பது மக்கள் விரோத – மனித விரோதத் தன்மையமானது என்ற படிப்பினையைக் கற்றுத் தந்திருக்கிறது. 

போராட்டத்தில் உறுதியாக நின்ற சகல தொழிலாளர்களையும் பாராட்டுகிறேன். எல்லா அடக்குமுறைக்கும், இடைஞ்சல்களுக்கும் மேலாக… சுய ஜாதியின் எதிர்ப்புகளுக்கும், கெடுபிடிகளுக்கும், அடாவடித்தனங்களுக்கும் பலியாகாமல்… மனத் துணிவோடு நின்ற அந்த ஒருசில தொழிலாளர்களின் வர்க்க உணர்வை. விசேஷமாகப் பாராட்டுகிறேன்…” 

பலத்த கைத்தட்டல்… விடாத கைத்தட்டல்… தொழிலாளர்களின் உற்சாகக் குரல்… 

இவனுக்குச் சந்தோஷமாக இருந்தது. இந்தப் பாராட்டுகள் எனக்குத்தான், இந்தக் கைத் தட்டல்கள் எனக்குத்தான் என்று அவன் மனசு துள்ளியது. ஆயிரமாயிரம் பூமாலைகள் கழுத்தில் விழுந்ததைப் போல… அவன் பாதங்களுக்கு முன்பு உலகமே பூக்களைத் தூவி ஆராதிப்பதைப் போல… அவனுக்குள் பெருமிதம்! 

பொங்கி வழிகிற இன்ப உணர்வலைகள். இதயக் கரையை மோதித் தழுவி,நனைத்துச் செல்கிற அலைகள். 

கூட்டமெல்லாம் முடிந்தது. தலைவர் இவனை மட்டும் தனியாக அழைத்துச் சென்றார். கையைப் பிடித்து இறுக்கினார். அந்த இறுக்கத்தில் இருந்த நெருக்கம், வாழ்த்துகள், பரிவுணர்ச்சிகள்… 

இவன் மனசெல்லாம் தழும்பி நின்றான். 

“தோழரே… நீங்க ஜெயிலுக்குப்போன பிறகு, உங்க ஊர்லே ரொம்பக் கெடுபிடி பண்ணினாங்க. கடைகள்லே சரக்கு தரவிட மாட்டேன்னாங்க. இன்னும் என்னென்னமோ அக்ரமங்களெல்லாம் செய்தாங்க. அதையெல்லாம் நம்ம சங்கத்து மூலமா..அப்பப்ப உதவிகள் செய்து… சமாளிச்சிட்டோம். ஆனா… ஒரு வித்தைத்தான் எங்களாலே தடுக்க முடியாமப் போச்சு…” 

இப்போதுதான், தலைவர் முகத்தின் வாட்டத்தை உற்றுப் பார்த்தான். இவனுக்குள் ஏதோ நொறுங்கிச் சரிவதைப் போலிருந்தது. சுத்தமாக வடிந்து போய்விட்டான். 

இவனுக்குள் நிறைய தேள்கள் ஊர்ந்தன. 

ஊர்ந்தன. பாம்பு முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டதைப்போல, மனசுக்குள் திக்.. திக்.. திக்.. 

அவன் முகம் சட்டென நிறம் மாறியது. இப்போது மனசுக்குள் நெருப்பலைகள். அவனைத் தொட்டு முழுசாகக் கருக்கிவிட ஆசைப்படுகிற தீயலைகள்… 

மாடத்தி…மாடத்தி… மாடத்தி.. 

சகல ரத்த பந்தங்களையும் உதறிவிட்டு, என்னை நம்பி வந்த மாடத்தி…

என்னை மனுசனாக்கி… ஆன்மாவையும் சகலத்தையும் என்னோடு பகிர்ந்துகொண்ட மாடத்தி… 

மயானக்கரையில் பூமியின் படைப்புபோல் ஒரு சமாதி… அதற்குள் என் உயிர் மடத்திதானா… 

அவனுக்குள் ஏகமாய் தேள்கள்… கொடுக்கு நிமிர்ந்த கருந்தேள்கள்… அரிவாளை ஓங்கிக் கொண்டு ஓடிவருகிற கறுத்த உருவம்… 

தலைவர் மூகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான், விழிகள் அசையாமல். 

“உங்க சம்சாரத்தை ஊர்க்கெணத்துலே தண்ணியெடுக்க விடமாட்டேனுட்டாங்க. உங்க புதுப் புஞ்சைக்கிணத்துலே தண்ணியிறைச்சு சமாளிச்சிட்டு வந்தாக. நாலு நாளைக்கு முந்தி… தண்ணி இறைக்கப்போய்… வாளிக் கயிறு காலுக்குள்ளே சிக்கி… உள்ளே விழுந்து…” 

-ஐயோ மாடத்தி…மாடத்தி…

“இறந்து போச்சு… உங்க பொம்பளைப்புள்ளை, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் அந்தப் பெண் குழந்தையைக் காப்பாத்த முடியலே.”

இறந்தது மாடத்தி இல்லை, மகள்தான் என்பதை அறிந்தாலும், இழந்தது பாச மகளை அல்லவா? தலைவர் சொன்ன தகவலின் அதிர்ச்சி, வேறு கனபரிமாணத்தில் அவனைத் தாக்கியது. ‘ஐயோ… மகளே…!’ என மனம் ஓலமிட்டது. 

ஒன்பது வருடங்கள் உயிராக வளர்த்து, மகிழ்ந்து, பறிகொடுத்த தகப்பனின் இதயரத்தம், கண்களில் வழிந்தது. 

“தோழரே… இதுவரைக்கும் நீங்க காட்டின துணிச்சலைவிட, இந்தப் பெரிய இழப்பை தாங்கிக்கிடுற துணிச்சலிலேதான்… உங்க வர்க்க உணர்வின் பலமே இருக்கு.” 

அவன் கையை மீண்டும் பற்றி இறுக்கிய தலைவர்… அதன் மூலம் ஆன்மாவுக்குள் ஆறுதலை வழங்கிய மனிதநேயம்… நெஞ்சின் ஈரம்… 

அவன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். இப்போது வார்த்தைகள் ஓடி ஒளியவில்லை. சொற்கள் கிடைக்காமல் கண்ணாமூச்சி காட்டவில்லை. சுவாசத்தைப்போல சுலபமாகக் கிடைத்தன. 

“தோழரே… நம்ம நிர்வாகத்தோட அதிகார மமதையும், கிராமத்து சாதி வெறியும் சேர்ந்து என் மகளை- என்னோட ஒத்தைப் புள்ளையை – தின்னு முழுங்கியிருக்கு. முழுங்குனா… முழுங்கிட்டுப் போகட்டும். தோழரே, மாடத்தி உசுரோட இருந்தா… இன்னும் புள்ளைகளைப் பெத்துக்க முடியும். ஆனா… என் மகளை முழுங்கியிருக்கே, அதுக விக்கி விக்கிச் சாகணும் தோழரே… அதுக செத்தா… எனக்கு நிம்மதிதான்.” 

“சபாஷ் தோழரே… சபாஷ்! சாகும். அதுக செத்தே தீரும். அதுக்காகத்தானே நாம போராடிக்கிட்டிருக்கோம்…” 

ஜாதியை-சில நூற்றாண்டுகளை- ஜெயித்துவிட்ட வீரனாக, மாடத்தியைப் பார்க்கப் புறப்பட்டான், பாசத்தோடு – பதைப்போடு. 

வாழ்க்கை – பூமியில் தடம் பதித்து சுழன்றுகொண்டிருந்தது, அவனது சைக்கிள் சக்கரங்களைப் போல… 

– செம்மலர், அக்டோபர் 1986.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *