சிற்றுயிர்கள்பால் அன்பு




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மக்களாகிய நமக்கு வேண்டுமென்றே யாதோர் ஊறுபாடு தராதனவாகிய சிற்றுயிர்கள் பற்பல உண்டு. ஈ, எறும்பு, நண்டு, நத்தை, வண்டு, தும்பி முதலியவை அவைகளிற் சில. இவைகளைச் சிலர்- பெரும்பாலாய்ச் சிறுவர்கள், கண்டபோதெல்லாம் துன்புறுத்திக் கொன்று விடுகின்றனர். ஈக்களைத் தட்டித்தடவிப் பிடித்து நசுக்கி விடுகின்றனர். எறும்புகளைக் கும்பல் கும்பலாகக் காலால் தேய்த்து அழித்துவிடுகின்றனர். சிறுவர்கள் சிலர், பொன் வண்டைப் பிடித்துக் கழுத்தில் நூல்கட்டிச் சுழற்றுகின்றார்கள்; தும்பியை வாலைப்பற்றிப் பிடித்துக்கொண்டு அது பறந்து தப்பித்துக்கொண்டு போவதற்குச் சிறகாட்டும் ஒலி கேட்டு மகிழ்கின்றனர். இச்செயல்களை அச் சிறுவர்கள் விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் மதிக்கின்றனர். இவ்வாறு செய்வது மிகத் தவறு; எவ்வுயிரையும் தக்க காரணமின்றித் துன்புறுத்தக் கூடாது. சிற்றுயிர்களை இவ்வாறு வருந்தச்செய்யும் பழக்கமானது, நாளடைவில் அச்சிறுவர்கள் பெரியவர்களாகும்போது, உடனாகிய மக்க ளுக்கே அவ்வாறு செய்யும் துணிசெயலுக்குக் கொண்டு போய்விடும். இதுவே, பிற்காலத்தில் அவர்களை மக்கட் குப் பெருங்கேடு இழைப்பதற்குப் பின்வாங்கா திருக்கவும் செய்யும். ஆகையால், நாம் சிற்றுயிர்களை வருத்தத் துணி யும்போது பெருவிலங்குகள் நம்மை எதிர்த்துத் துன்புறுத் தினால் நம் மனம் எவ்வாறு அஞ்சித் துடிதுடிக்கும் என் பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

நம் வேலைக்காக நாம் மாடு குதிரைகளை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவைகளை நாம் நன்றாகப் பாதுகாக்க வேண்டுமல்லவா? அவைகட்கு நாம் வயிறு தள ராத உணவுகொடுத்து, அவைகள் தங்கியிருக்கத் தூய்மை யான கொட்டகைகளும் கட்டிவைக்கவேண்டுவது நம் கடமை. மேலும், அவைகளின் வலிமைக்கு ஏற்ற வேலை வாங்கவேண்டும். அவைகளைக் கண்டபடி அடித்துத் துரத்தக்கூடாது. முக்கியமாக அவைகள் களைத்துப்போ யிருக்கும்போதும்,உ கிழவய தடைந்திருக்கும்போதும் அவைகளிடம் வேலை வாங்குவது மக்களாகிய நமக்கு மானக்கேடான செயலாகும்.
1. சிறுவரும் தவளைகளும்
ஒரு பெருங்குளத்தில் கணக்கற்ற தவளைகள் வாழ்ந்திருந்தன. அக் குளக்கரையின்மேல் சில பிள்ளைகள் விளையாடிக்கொண்டி ருந்தனர். அப்போது அவர்கள் அத் தவளைகளைக் கண்டு தண்ணீரின்மேல் ஒவ்வொருவரும் கற்களை எடுத்தெடுத்துத் தாறு மாறாகக் கண்டபடி எறியத் தொடங்கினர்.
இவ் விடுக்கணைக் கண்ட தவளைகளெல்லாம் நோய்பொறுக்க மாட்டாமல் என்ன செய்வோமென்று பெருங் கலக்கமடைந்தன. அப்போது அவைகளில் மனவலி கொண்ட ஒரு பெரிய தவளை தண்ணீரின்மேல் தலையெடுத்து நீட்டிக்கொண்டு அச்சிறுவர்களை நோக்கி, “ஐயா! பிள்ளைகளே! இவ்வளவு சிறுவயதிலேயே நீங்கள் ஏன் இவ்வளவு கொடுங் குணமுள்ளவர்களாயிருக்கக் கற்றுக் கொண்டீர்கள்? உங்களுக்கு விளையாட்டாக இருக்கின்ற இஃது எங்களுக்குச் சாக்காடாக முடிகின்றதே என்பதை எண்ணிப். பாரீரோ!” என்றது.
2. இராமனும் கண்ணனும்
இராமன் கண்ணன் என்னும் பிள்ளைகள் உடன் பிறந்தவர் கள். இராமனுக்கு எழு வயது முடிந்தது; கண்ணனுக்கு ஐந்து வயது நடக்கிறது. இராமன் நல்ல அறிவுள்ளவன்; நேர்த்தியான குண்முடையவன்; கண்ணனும் தன் முன்னோனைப்போல் நல்லவனே ; ஆனால் அவன் இளமைத் தன்மையினால் அறியாமை உடையவனாக இருந்தான். ஆகையால், அவன் அடிக்கடி தவறு களும் செயவதுண்டு.
ஒருநாள் இச்சிறுவர்கள் இருவரும் வயற்பக்கம் உலாவப் போனார்கள். அவர்கள் உலாவிக்கொண்டே செல்லும்போது,. வழிப் பக்கமிருந்த ஒரு வேலிப்புதரில் ஒரு பறவைக்கூடு கண்ணன் கண்ணிற்பட்டது. பிள்ளைகள் வரும் சந்தடி கேட்டதும் தாய்ப் பறவை வெருண்டு பறந்துபோய்விட்டது. இருவரும் சென்று கூட்டின் உள்ளிடத்தைப் பார்த்தனர். உள்ளே மூன்று குஞ்சுகள் தாயூட்டின இரையைத் தின்று கொண்டிருந்தன. கண்ணன் அண்ணனைப் பார்த்து, “இக்குஞ்சுகளை வெளிப்படுத்தி வீட்டுக்குக் கொண்டு போய் விடலாமா?” என்றான். உடனே, இராமன் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்து அவனை நோக்கி, “தம்பி! பறவைக் கூட்டைத் திருடுவது மிக்க தவறென்று, நம்முடைய தந்தையார் எனக்கு முன்பே சொல்லியிருக்கின்றார் நம்முடைய பெற்றோர்கள் நம்மிடம் எவ்வளவு அன்பாய் இருக் கின்றார்களோ, அவ்வளவு அன்பாய்த் தாய்ப்பறவைகள் தங்கள் குஞ்சுகளிடம் இருக்கின்றன. ஒரு கொடியோன் நமது வீட்டுக்குள் நுழைந்து, நம்மையும் நம்முடன் பிறந்த குழந்தைகளையும் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய்விட்டால், நம் தாய் தந்தையர் எவ்வளவோ மனம்புழுங்கி வருந்துவார்கள் அல்லவா? தாய்ப் பறவையும் தன் குஞ்சுகளை அவ்வாறே இழந்து விட்டால் எவ் வளவு துன்பமுற்றுக் கலங்கி வருந்தும் ம என்பதைச் சிறிது எண்ணிப்பார்! மேலும் பறவைக்குஞ்சுகள் தாயின் பாதுகாப்பு இன்றேல் உயிர் பிழைத்திருக்கமாட்டா. விளையாட்டுச் சிறு பிள்ளைகள் அவைகளைத் திருடிக்கொண்டுபோய்விட்டால், அவை படாத பாடுபட்டுச் செத்தே போய்விடுகின்றன. ஆகையால், குஞ்சு கள் சிறகு வளரப்பெற்றுப் பறந்து தங்கள் இரையைத் தாங்களே தேடிக்கொள்ள வலிமை பெறுங்காலம்வரையில், அவைகளைக் கூட்டிலேயே விட்டுவிட்டிருப்பது மிகவும் நல்லது,” என்றான். ச் செய்தியைச் சிறுவனாகிய கண்ணன், முன்பே அறிந்திருந் தானில்லை. சிறு பறவைகளையும் துன்புறுத்துவது நேர்மை யற்றதும் கேடானதும் என்று கண்ணன் இப்போதுதான் தெரிந்துகொண்டான். மேலும், அவன் தன் அண்ணன் அறி வூட்டிய புத்திமதியைக் கடைப்பிடித்தொழுகவேண்டுமென்று தனக்குள்ளே உறுதிசெய்துகொண்டான்.
வேலியின் மற்றொரு பக்கத்தில் இவ்விரு பிள்ளைகளின் தந்தையார் தற்செயலாய் வந்துசேர்ந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் வேலியைத் தாண்டிவந்து அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் அருமை மைந்தர் களே! நீங்கள் மிக நல்ல பிள்ளைகள்; இதுவரை உங்கள்மேல் அன்பு செலுத்தியிருந்ததற்கு மேலாக இப்போது உங்களிடம் மிகச்சிறந்த அன்புகாட்டுபவனாக ஆய்விட்டேன் சிறு பறவை களின் துயரம் எண்ணிப்பார்க்கும்போது மிகச்சிறுமையுடையதே. ஆனாலும் குற்றமற்ற பறவைக் குஞ்சுகளை வேண்டுமென்றே திருடிக்கொண்டுபோவது பெருங்கேடான செய்கையே, சிறு குற்றம் அன்று. அவ்வாறு செய்யும் பிள்ளைகள் தாங்கள் கொடு மனதுடையவர்களென்று று காட்டிக்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பிற்காலத்தில் இன்னும் கொடியவர்களாகி விடுவார்கள். பறவைக் கூடுகளைத் திருடுவது அடாத செய்கையென்று உணர்ந்திருக்கும் இரண்டு பிள்ளைகள் எனக்கு இருக்கின்றார்கள் என்பதை நினைக்க நான் மிக மகிழ்கின்றேன்,” என்பதாம்.
3. சிறுவனும் உருப்பெருக்கிக் கண்ணாடியும்
ஒரு பையன் ஈக்களைப் பிடித்துச் சித்திரவதை செய்வதையே விளையாட்டுவேலையாக வைத்துக்கொண்டிருந்தான். அவன் ஓர் ஈயைப் பிடிப்பான்; அதன் சிறகுகளையும் கால்களையும் பிடுங்கிப் போட்டுவிடுவான்; அது பறந்துபோய்விட முடியாமற் பதை பதைப்பதை மகிழ்ச்சியாய்ப் பார்த்துக்கொண்டிருப்பான். சில வேளைகளில் அவன் ஈக்களைப் பிடித்துச்சேர்த்து, ஒரே கும்பலாக வைத்து நசுக்கிப்போட்டுத் தான் ஒரு செயற்கரிய செயல் செய்து விட்டதாகப் பெருமையடித்துக்கொள்வான். இக் கொடுஞ்செயல் கூடாதென்று அவனுடைய பள்ளி ஆசிரியர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவன் அப்பழக்கத்தை விட்டானில்லை. “நம்மைப்போல் ஈக்களும் நோயை உணர்ந்து வருந்துந்தன்மை யுடையன. உன்னைப்போலவே அவைகளுக்கும் உயிரோடிருக்க உரிமையுண்டு; அவைகட்குத் தன்னிசையாய் மகிழ்ச்சியோடு வாழவும் உரிமையுண்டு; அவைகளின் உறுப்புக்களை நீ புறுத்தும்போது அவைகள் துன்பப்பட்டுப் புரளுகின்றன பலதடவை சொல்லிப்பார்த்தார். எனினும், அதனை அவன் கண்டறியவேயில்லை. ஆசிரியர் சொன்னதைக் கவனித்துக் கேட்டறியவுமில்லை.
ஆசிரியர் உருப்பெருக்கிக் கண்ணாடி ஒன்று வைத்துக்கொண் டிருந்தார். அதனில் ஓர் ஈயை வைத்து மூடிவிட்டுப் பையனைக் கூப்பிட்டு அதற்குள் பார்க்கும்படி செய்து, சொல்லுகிறார்: “பையா, கவனி! அது தலைமுதல் வால்வரையில் கருப்பும் வெளுப்பும் கலந்து நிறைந்துள்ளது பார். அதன் உடம்பெல்லாம் விந்தையான மயிர் மூடிக்கொண்டிருப்பதைப் பார்! அதன் தலையில் கூர்மையான இரண்டு கண்கள் இருக்கின்றன பார். அக்கண்களைச் சுற்றியிருக்கும் வெள்ளிபோலும் பளபளப்புள்ள மயிர்களைப் பார்! ஒன்றிலொன்று புகுந்து கொண்டிருப்பதுபோற் காணப்படும் அதன் இருபங்கான முண்டத்தை (உடம்பை)ப் பார்! அதன் இறகுகள் பளபளப்புக் காட்டிக்கொண்டு அதன் உடம்பையெல்லாம் புனைவு செய்து கொண்டிருப்பதைப் பார்! அஃது ஓர் அரசமகளின் உறுப்பைத் தோற்கடித்துக்கொண்டி ருப்பதைப் பார்!'” என்றார். அப்பையன் இவ்வாறு அக் கண்ணாடிக்குள் கண்டதைப்பற்றி மிக வியந்து மகிழ்ச்சி யடைந்ததுமல்லாமல் அத்தகைய உயிர்ப்பொருளின் பெய ரையும், தன்மைகளையும் தெரிந்துகொள்ள மிகவிரும்பினான். ஆசி ரியர் அதனைக் கண்ணாடியினின்றும் எடுத்துப் பையன் கண்ணின் முன்காட்டினார். அது வேறொன்று மில்லை; பையன் துன்புறுததிக் கொண்டிருந்த ஈக்களைப் போன்ற ஓர்ஈயே. இனிமேலும் அவன் அத்தகைய கொடுமை செய்ய மனங்கொள்வானோ ?
4. கைதியும் எலிகளும்
பாரீஸ் நகரில் தோடன் என்னும் ஒருவன் சிறைச்சாலை ஒன் றில் ஒரு சிறு அறையில் தனியாகப் பல ஆண்டுகள் அடைத்துவைக் கப்பட்டிருந்தான். நாள்தோறும் அவனுக்கு உணவு கொண் டுவரும் வேலையாள் தவிர அவனுடன் எவரும் இல்லை. ஒரு சிறைச்சாலைச் சிற்றறையில் பேச்சுத் துணையின்றித் தனியாக உயிர்வாழ்ந் திருப் பதைவிட ஒருவனுக்குக்கொடுந்துயர்விளைவிப்பதுவேறொன்றில்லை யல்லவா? தோடன் அறையில் வெளிச்சம் – ன்பதே இல்லை. அவ் வறையின் அகலச்சுவரில் சிறிது நீண்ட வெடிப்புச் சந்து ஒன்று இருந்தது. அச்சந்த ஒன்றுதான் அவ்வறைக்கு வெளிச்சம் தருவது தோடன் அச்சந்தின் மூலமாக வெளியிடத்தைப் பார்த்துக்கொண் டிருக்கும்போது, அச்சந்தின் கோடியண்டை ஓர் எலிவரக் கண் டான். பொது வாக மக்கள் எலிகளைக்கண்டால் வெறுப்படைகின் றார்கள் அல்லவா? தனியனாகிய ஒருவனிடம் எந்த உயிர்ப்பொரு ளாவது வரக்கண்டால் மகிழ்கூர்வானல்லவா? அம்முறையில் அவ்வெலி வெருண்டுபோய்விடாதபடி, தோடன் சந்தடி செய்யாமல் ஒரு சி று அப்பத் துண்டை அதனிடம் போட்டான். அது முன் னுக்குவந்து அத்துண்டையெடுத்துத் தின்றுவிட்டு, தனக்கு இன்னும் வேண்டுமென்றுதெரிவிப்பதுபோல் அவ்விடம்விட்டுப் போய் விடாமல் அங்கேயே இருந்தது. தோடன் சிறிது குறைந்த தொலை வில் இன் னாரு துண்டைப்போட்டான். அவ்வெலிவந்து அதனை யும் தின்றுவிட்டது. பிறகு இன்னுங் குறைந்த தொலைவில் அவன் இன்னொரு துண்டைப் போட்டான். அஃது ஆசைப்பட்டு அவன் அருகிலேயே வந்து அதனையும் எடுத்துத் தின்றுவிட்டது. இவ் வாறு அக்கைதி அவ்வெலி தன்னிடம் நம்பிக்கை வைக்கும்படி செய்துவிட்டான். அவன் அப்பத் துண்டுகளைப் போடப்போட அஃது அவன் கிட்டவே வந்திருந்து அவைகளை எடுத்துத் தின்று கொண்டிருந்தது. அவ்வெலி அவ்வாறு வயிறு நிறையத் தின்று வெறுத்துப் போய்த் தன்னால் தின்ன முடியாத துண்டுகளை எடுத்துக்கொண்டு தன் வளைக்குத் திரும்பிப் போய்விட்டது.
மறுநாள் அவ்வெலி அவ்வறைக்கு வந்தது. தோடன் அத னிடம் ஒரு துண்டு அப்பத்தையும், ஒருசிறிய இறைச்சித் துண்டை யும் போட்டான். அவைகளை அது மிகச் சுவைபடத் தின்றது. மூன்றாம் நாள் அது வந்து தோடன் கையில் இருந்ததைத் தானே எடுத்துத் தின்றது. அஃது அதற்குள்ளாக அவனிடம் அவ்வளவு பழகிப்போயிற்று. ஐந்தாம் நாள் அவ்வெலி தன் இருப்பிடத்தை விட்டு, அச்சுவர்ச்சந்தின் பக்கத்திலேயே ஒருசிறு வளைதோண்டிக் குடிகொண்டுவிட்டது. இதனால் அது தன்உதவியாளன் கிட்டவே ருக்க எண்ணியது போலும். அது மறுநாள் விடிந்தவுடனே வந்து அவனிடம் காலையுணவு உண்டுவிட்டுப்போய் அன்றெல்லாம் அவ னிடம் வரவே இல்லை. மறுநாட் காலை அஃது ஒருபெண்ணெலித் துணையோடு அவ்வறைக்கு வந்தது. அப்பெண்ணெலி தோடனைக் கண்டு அஞ்சி அவ்வளைக்குள்ளிருந்து எட்டியெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
தோடன் அதனை ஆசைகாட்டித் தன்னிடம் வரச்செய்ய அப்பத்துண்டையும் இறைச்சித் துண்டையும் அதற்கெதிரே போட்டான். ஆனால், அஃது அவற்றினிடம்வர நிரம்ப நேரம். துணியவே இல்லை. கடைசியாக ஆணெலி ஆசையோடும் ஆவ லோடும் அத்துண்டுகளை எடுத்துத் தின்பதைக் கண்டு பொறாமல் அப்பெண்ணெலி திடீரென்று ஒரு பாய்ச்சல் பாய்ந்துவந்து ஒரு துண்டைப் பற்றியெடுத்துக்கொண்டு உடனே திரும்பி ஓடோடிப் போய்விட்டது. இவ்வாறிருக்கச் சில நாட்களிலேயே அப்பெண் ணெலி மனவுறுதியுற்று அவ் ஆணெலியோடு துண்டுகளுக்காக மாறுபட்டு வழக்காடத் தொடங்கிற்று. ஒவ்வொருவேளையில் அப் பெண்ணெலியே வெற்றிபெற்றுத் துண்டுகளைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டாலும் போய்விடும். அப்போது ஆணெலி முறையிட்டுத் தன்னைத்தேற்றுதல் வேண்டுவதுபோல் தோடனிடம் வரும். அப் போது தோடன் இழப்புக்கு ஈடுசெய்வதற்காக அப்பத் துண்டோ இறைச்சித் துண்டோ ஏதோவொன்று அதற்குக் கொடுப்பான். அப்போது அஃது அவன்பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பெரு மிதத்தோடு அத்துண்டைத் தின்னும். பிறகு அஃது அவன் தொடையின்மேல் குந்தி அத்துண்டைக் குரங்கைப்போல் காலில் காலில் தூக்கி வைத்துக்கொண்டு பெண்ணெலியைப் பார்த்து, “பெண்ணே! இதோ இத்துண்டை என்னைக்கிட்டிப் பிடுங்கிக் கொண்டுபோய்விடு பார்ப்போம்,” என்று சொல்லுவது போல் ஆரவாரம் செய்யும். தன்னைக் காப்பாற்றக்கூடிய தோடன் தொடைமேல் அஃது இருக்கின்றதல்லவா?
தோடன் கிட்டவே இருந்து ஆணெலி எப்போதும் தீனி ‘ யெடுத்துத் தின்றுகொண்டிருக்க, பெண்ணெலி சில நாட்கள் அவ்வாறு செய்யக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்தது. தன் உடனாளி யாதொரு குறைவுமின்றி நலமேநாள் தள்ளிக்கொண்டிருக்க, தான் பட்டினி கிடப்பது பெண்ணெலிக்குப் பொறுக்க முடியாத துயர மாயிற்று. ஒரு நாள், தோடன் முதல் துண்டை ஆணெலியிடம் போட்டதும், பெண்ணெலி ஒரேபாய்ச்சல் பாய்ந்து அத்துண்டை ஆணெலியின் வாயினின்றும் தன் பற்களால் பிடித்திழுத்தது. ஆணெலியோ பிடித்தபிடி விடவில்லை. பெண்ணெலி முரட்டுத் தனமாய்த் துண்டைப் பிடித்திழுத்தது; இவ்வாறு இரண்டுக்கும் ஒன்றினின்றும் ஒன்று அத்துண்டை இழுக்கப்பெரிய போராட்டம் நடந்தது. இப்படியே இரண்டும் ஒன்றோடொன்று புரண்டுபுரண்டு ஓடக் கடைசியில் பெண்ணெலி ஆணெலியை இழுத்துக்கொண்டு தங்கள் வளைக்குள் நுழைந்துவிட்டது. இவ்வியத்தகு நிகழ்ச்சியைக் கண்ட தோடன் தன்னையும் மறந்து தன் தீவினைப் பயனால் வந்த சிறை வாழ்க்கையையும் சிலவிநாடிகள் மறந்தே இருந்துவிட்டான்.
வரவரப் பெண்ணெலியும் பழக்கப்பட்டுப்போய்த் தோடன் கையிலிருந்தே நாள்தோறும் தீனி எடுத்துத் தின்றுகொண்டிருந் தது. சின்னாட்களில் அவைகளுடன் மூன்றாம் எலி ஒன்று வரத் தொடங்கிற்று. இஃது அவைகளைப்போன்று முதன்முதல் அவ்வ ளவு கூச்சப்படவில்லை மூன்றாவதெலி இரண்டொருநாட்களுக்கு ளாகவே மற்றிரண்டுடன் பழகிப்போய்விட இவைகள் மூன்றும் ஒரே குடும்பம் என்று எண்ணும்படி ஒன்று கூடி வாழ்ந்தன. இன் னும் சின்னாட்களில் அவைகளுடன் ஒவ்வொன்றாகப்பத்து எலிகள் வந்து சேர்ந்து தோடனைச் சுற்றிக்கொண்டன. தோடன் அவை கள் ஒவ்வொன்றுக்கும் பெயர் கொடுத்தான். பழக்கத்தின் மூலம் ஒவ்வொன்றும் தன்தன் பெயரைத் தெரிந்து கொண்டிருந்தன. தோடன் பெயரிட்டழைத்தால் அப்பெயருக்குரியதே அவனிடம் வரும் சில நாட்கள் அவ்வெலிகளைத் தன் தட்டிலேயே உண வெடுக்க விட்டிருந்தான்; ஆனால், அது வரவர அவனுக்கு அரு வருப்பாயிருந்தது. ஆகையால், பிறகு அவன் அவைகளுக்கென்று வேறொரு தட்டுவைத்து அவைகள் அதில் தனியாக உண்ணும்படி செய்துவிட்டான். சில வேளைகளில் அப்பத் துண்டுகளையும் இறைச்சித் துண்டுகளையும் அவன் இப்படியும் அப்படியும் எறிந்து போட்டு அவைகளைக் குதித்துக் குதித்து வந்து எடுக்கும்படி செய்வான். அவைகள் உணவு கொண்ட பின்பு அவைகளை நடனம் ஆடும்படி செய்வான். சுருங்கச் சொல்லின் அவ்வெலிகளெல்லாம் அவனுக்கு விளையாட்டுப் பிள்ளைகளாய் விட்டன. இவ்வாறு தோடன் அவைகளால் பேரின்பம் கொண்டிருந்தான்.
அப்போது அவன் விடுதலையைப்பற்றி எண்ணவே யில்லை! ஏனெனில், உலகில் கொடுமையும் தொல்லையுந்தானே கண்டான்! ஆனால், சிறைச்சாலையிலோ இப்போது அன்பும் அமைதியுமே நுகர்கின்றான். எலிகளுடன் அவன் அடைந்திருந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிற்கவில்லை. இரண்டாவதாண்டின் முடிவில் அச்சிறை விலேயே தொலைவில் மற்றோர் அறையில் கொண்டுபோய் வைக்கப் பட்டான். ஐயோ பாவம்! அவ்வெலிகள் அங்கே அவனிடம் போக முடியாமல் போயிற்று. தனக்குரிய எலி நண்பர்களிடமிருந்து அவன் பிரிக்கப்பட்டுவிட்டபோது அவன் கோவென்று அழுதுவிட்டான். சிலகாலம் அச்சிறைச்சாலைத் துன்பத்தை முன் னிருந்ததற்கு மேல் மிகுதியாக உணர்ந்து வருந்தினான் என்றும், தனித்திருத்தல் எவ்வளவு துன்பந்தருவதென்றும், இவ்வாறான தனிவாழ்க்கையைக் காட்டிலும் ஒரு மகன் எத்தகைய இழிவான உயிர்ப்பொருளோடும் கூடியிருக்க விழைவான் என்பதும்இதனால் தெரிகின்றதல்லவா ? சில போது நாம் அருவருக்கின்றனவும் இகழ்வனவுமான சிற்றுயிர்கள் நமக்குச் சிறந்த துணைபுரிகின்றன என்பதையும் இக்கதை தெரிவிக்கின்றதல்லவா?
ஒரு நன்னெறியாளன் விலங்கின் உயிரை மதிக்கின்றான். ஆனால் தீயோன் மென்மைகாட்டும். கருணைச் செயல்கள் கொடியவைகள்.
-சாலமோன் பழமொழிகள்
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |