சிறுவாணம்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சந்திரசேனா வெல்லுவனெண்டு தெரியும். ஆனால் இவ்வளவு தொகையாலை வெல்லுவனெண்டு ஒருதரும் நினைக்கயில்லை…” மரத்தடியில் குழுமி நின்றவர்களில் ஒருவர் கூறுகிறார். நேற்றைக்கு முதல் நாள் முடிவு பற்றி கடந்த இரவுச் செய்தியில் கூறப்பட்டுவிட்டது.
“நான் போன கிழமை கொழும்பிலை நிண்டனான்… சந்திரசேனாவின்ரை தேர்தல் பிரசாரக் கூட்டமொண்டுக்கு போனனான்… சகல விஷயங்களையும் துணிவோடை பேசினான்…” இன்னொருவர் கூறுகிறார்.
சந்திரசேனாவின் வெற்றி பற்றியும் இத்தேர்தலில் தோற்றுப் போன சிறிவர்த்தனா பற்றியும் அவர்களின் அரசியல் போக்குகள் பற்றியும் வெகுவாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.
அந்த மரத்தடியிலும் கடை விறாந்தையிலும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேலானவர்கள் நிற்கின்றனர். அத்தனை பேரும் இன்றைய பத்திரிகைக்காகக் காத்து நிற்கின்றனர்.
வீதியின் வலது பக்கமாக கடை அமைந்திருக்கின்றது. இடதுபக்கமாக ஒரு கிணறு அமைந்திருக்கின்றது. கிணற்றுக் கட்டிலில் கால்களைத் தொங்கப் போட்டபடி அமர்ந்திருக்கின்றார் நடராசர். விறாந்தையில் நிற்கின்ற கூட்டத்தோடோ மரத்தடியில் நிற்கின்ற கூட்டத்தோடோ அவர் சேராமல் கிணற்றுக் கட்டிலில் தனியாகவே இருக்கின்றார்.
நடராசர் பத்திரிகைக்காக வரவில்லை பாண் வாங்கு பேச்சுக்களை வதற்காகவே வந்திருந்தார். அங்குள்ளவர்களின் அவதானித்தபடி இருக்கின்றார்.
‘சம்பள மாற்றமொண்டு வருமெண்டு தான் நினைக்கிறன்…’
‘சந்திரசேனா தன்ரை பிரச்சாரத்திலை கூறினவன் தானே… ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் சம்பள மாற்றமொண்டு வாறதுதானே… பெரும்பாலும் வரத்தா செய்யும்…’
‘இவன்ரை ஆட்சியிலையாவது தமிழர்க்களுக்கு ஒரு முடிவு வந்திதெண்டால்… எத்தினை காலத்துக்கொண்டு தான் இப்பிடிச் சீரழியிறது…’ ஒருவர் தனது மனக்கொதிப்பைக் கூறிக் கொள்கிறார்.
‘ஏன் தம்பி… கொழுப்பிலை ஏதாலும் கலவரம் நடந்ததாமே…’ அப்போது தான் அங்கு வந்த ஒருவர் கேட்கிறார்.
‘பேப்பர் என்னும் வரயில்லைப் பாருங்கோ ஏதாவது நடந்திருந்தால் பேப்பரிலை வரும்”
“என்னும் பேப்பர் வரயில்லையே…” இப்படிக் கூறியவர் திரும்பிக் கடைவாசலைப் பார்க்கின்றார். அவரது கண்கள் மூர்த்தியைத் தேடுகின்றன.
கடை பூட்டப்பட்டிருக்கின்றது, அந்த சிறிய விறாந்தையின் தொங்கலில் பின்னுக்குக் கைகட்டியபடி மூர்த்தி நிற்கிறார். அவரது பார்வைக்கோடுகள் வீதியில் நீண்டிருக்கின்றது. அவர் தான் இந்தக் கடையின் ஒரே ஊழியன்.
ஆறுமணிக்கு முன்பின்னாகப் பத்திரிகைக்காரர்களும், பாண் காரனும் வருவார்கள்.
இருளும் ஒளியும் சமர் புரிந்து இருளைப் புறங்காட்டி ஒளிக்கதிர்கள் பூமியைத் தழுவத் துடிக்கின்ற நேரம்… அதிகாலை…
கடந்த இரவு கடும்பனி தூரத்தே இன்னமும் பனிப்புகார் தெரிகின்றது. பனியில் நனைந்த புல் பூண்டுகள் குருத்துச் சரிந்து நிற்கின்றன. வீதி கூட நனைந்து கிடக்கின்றது… வீதியின் மறுகரையில் கடைக்கு நேராக நிற்கின்ற அலரி மரத்தின் இலைகளிலிருந்து, முழுகியபின் துவட்டியும் துவட்டாத நிலையிலுமுள்ள பெண்ணின் தலைமயிரின் நுனியிலிருந்து நீர் சொட்டுக்கள் சிந்துவது போல், பனித்துளிகள் சிந்திக் கொண்டிருக்கின்றன…
“இந்த குளிரையும் பொருட்படுத்தாமல் தேர்தல் முடிவுகளை அறிகின்ற ஆவல் அவர்களுக்கு…”
“இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுதான் ஒரேவழி… நானே வடபகுதிக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன்… எண்டு சந்திரசேனா கூறியிருக்கிறான்… எனி என்ன செய்யப் போறான்… வரத்தானே வேணும்…”
சைக்கிளில் வந்து கால் பெருவிரலை நிலத்தில் ஊன்றியபடி நின்று சாமியார் கூறுகிறார்.
“…தமிழர்கள் நாய்கள் எண்டு சொன்னவை இப்ப… தமிழர்கள் புலிகள்… எண்டு சொல்ற அளவுக்கு வந்திட்டினம்… அப்ப எங்கடை ஆக்களெல்லாம் நாய்கள் மாதிரி அடியும் உதையும் வாங்கிச்சிதுகள்… இப்ப உள்ளதுகள் புலியள்… தேடி வரத்தானே வேணும்…”
“என்ன இருந்தாலும் சந்திரசேனா தகுதியானவன் அவன் எங்கடை பிரச்சினையைத் தீர்க்கத்தான் பாப்பான்…” சாமியார் திட்டவட்டமாகக் கூறுகிறார்.
கிணற்றுக் கட்டிலிருந்து நடராசர் தலையை நிமிர்த்திச் சாமியாரைப் பார்க்கின்றார்… உதடுகள் பிரியாத நிலையில் மொட்டானதொரு சிரிப்பொன்று உதிர்கிறது.
சாமியார்
கந்தசாமி இதுதான் இவரது பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் ஒட்டியிருக்கும் பெயர். பெயரைச் சுருக்கிச் சாமியார் என அழைக்கப் படுகின்றார். அரசாங்க சேவையிலிருந்த இவர், பென்சன், எடுத்துக் கொண்டவர் சாமியாருக்கிப்போது ஐம்பத்திரண்டு வயது ஆனால் பார்ப்பவர்கள் மிகவும் குறைத்துத்தான் மதிப்பிடுவார்கள். மெல்லியவராக இரந்தாலும் திடகாத்திரமானவர்.
கருங்காலி வைரம் போன்ற உரோமக்கட்டான உடற்கட்டு கம்பளி மயிர்க்கொட்டி போன்ற மீசை, சிங்கப்பூர் சங்கிலி… ஏப்போதுமே கலகலப்பாக இருப்பார்… ஊர்விஷயங்கள் எதுவானாலும் முன்னிற்பார்…
“அப்பு… இண்டைக்கு இருபத்தைஞ்சு பேப்பர் கூடத் தரச்சொல்லி முதலாளி சொன்னவர்… இருபத்தைஞ்சு பேப்பர் கூடவைச்சிருக்கு எண்ணி எடுங்கோ” அங்கு வந்த பத்திரிகைக்காரன் இப்படிக் கூறிவிட்டு ஒரு பத்திரிகைக் கட்டை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறான்.
மூர்த்தி, அவசர அவசரமாகப் பத்திரிகைக் கட்டை அறுத்தப் பத்திரிகையை எண்ணுகின்றார். இரவல் பத்திரிகை பார்ப்பதற்கும், தேர்தல், புதினங்கள் பொறுக்குவதற்கும் வந்தவர்கள் நிற்க, பத்திரிகை வாங்க வந்தவர்கள் மூர்த்தியைச் சூழ்ந்து கொள்கின்றனர்.
இரண்டாவது பத்திரிகைகாரனும் வந்து பத்திரிகைக் கட்டைப் போட்டுவிட்டுச் செல்கிறான். அந்தப் பத்திரிகைக் கட்டையும் அறுத்துப் பத்திரிகைகளை எண்ணுகின்றார், மூர்த்தி.
“அப்பு கெதியாய் எண்ணி முடியுங்கோ…”
“அப்பு நான் எண்ணட்டே…”
‘அவசரப்படுத்தாதையுங்கோ… வயது போன காலம்… ஆறுதலாய் எண்ணட்டு…” அக்கூட்டத்தில் முன்னணியில் நின்ற சாமியார் கூறுகிறார்.
முதலாளி கடைக்கு வந்து, கடையைத் திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்க ஏழரை மணிக்கு மேலாகிவிடும். அதற் கிடையில் பத்திரிகை வியாபாரத்தையும் பாண் வியாபாரத்தையும் மூர்த்தி முடித்து விடுவார். மூர்த்தி வயது போனவரெண்டாலும் மிகவும் சுறுசுறுப்பானவர், அது மட்டுமல்ல மிகவும் நேர்மையானவரெண்டு சத்தியம் பண்ணிக் கூறலாம்.
பத்திரிகைக்காக முண்டியடித்துக் கொண்டு நிற்பவர்களைக் கட்டில் இருந்தபடியே நடராசர் பார்க்கின்றார்.
முன்பு பார்த்த அதே பார்வை…
அதே மொட்டான சிரிப்பு… “அப்பு பேப்பரைத் தாருங்கோ…”
“அப்பு எனக்குமொண்டு…”
முதல் பத்திரிகையைச் சாமியார் வாங்கிக் கொள்கிறார். பத்திரிகையும் காசும் கைமாறிக் கொண்டிருக்கின்றன. பத்திரிகையை வாங்கியவர்கள் திரும்பவும் அந்த மரத்தடிக்கு வருகின்றனர்.
பிரதான வீதி, வீதியிலிருந்து வலது பக்கமாக ஒரு கல்லு றோட்டு இடப்பக்கமாக ஒரு மண் ஒழுங்கை, ‘நாற்சந்தி’ என்று கூறுமளவுக்கு பிரபலமான இடமிது இச்சந்தியில் வலது பக்கமாக இக்கடை அமைந்திருக்கின்றது. கடைக்கு முன்னால் ஒரு மருதமரம், இது சாதாரண மரமல்ல, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய மரம் இந்த மரத்தடியில் மிகவும் அழகானதொரு கோயில் அமைந்திருக்கின்றது.
இந்த மருத மரத்தின் கீழ்த்தான் சகலரும் நிற்கின்றனர்.
“கொழும்புத் தமிழர்… மலையக் தமிழர்… பொதுவாக சந்திரசேனாவைத் தான் ஆதரிச்சிருக்கிதுகள்…” தமிழ்ப் பிரதேச வாக்குகளை அவதானித்த சாமியார் கூறுகிறார்.
“அப்பு நான்தான் முதல் வந்தனான்… எனக்குப்பிறகு வந்தவையெல்லாம் பேப்பர் வாங்கிப் போட்டினம்…”
ஒருவர் குறைபட்டுக் கொள்கிறார்.
“இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து என்னதான் செய்யப் போறியளோ…மூர்த்தி கூறுகின்றார் அதுவும் உரக்கக் கூறுகின்றார். அவரது பேச்சு நடராசரின் காதுகளுக்கும் எட்டுகின்றது. பாண்காரனின் வருகையை எதிர்பார்த்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்த நடராசர்
நடராசர் அதிலிருந்து விடுபட்டு… மூர்த்தியைப் பார்க்கிறார்….
இப்போது முன்பு போலல்லாமல் உதடுகள் பிரியச் சிரிக்கின்றனர்…
நடராசர்
மரத்திலேயே பழுத்துக் காய்ந்து விழுந்த செத்தல், தேங்காய் போன்ற அனுபவசாலி… இப்போது இவருக்கு எழுபத்தைந்து வயது நடக்கின்றது. இருபத்தி மூன்று வயதில் உத்தியோகமாகி… அதுவும் ஆங்கிலேய நிர்வாகத்தில் உத்தியோகமானவர்… அன்று தொடக்கம் இன்றுவரை எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வார்…
இப்போதுகூட ஒரு மணிக்கு மத்தியானச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தாரென்றால், சகல பத்திரிகைகளையும் வாசித்து முடிப்பார்… ஆங்கிலப் பத்திரிகை களையும், சஞ்சிகைளையும் தான் அதிகம் வாசிப்பார்.
இலங்கையில் நடந்த அத்தனை தேர்தல்களையும் தரிசித்தவர்….!
அரசியல், வரலாற்றுப் பிரச்சினைகள் உள்ளவர்கள், இவரிடம் வந்து பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வார்கள்.
“அப்ப… சாமியார்… பொருளாதாரத் தடை நீக்கப்பட்டு, சாமானமெல்லாம் தாராளமாக வருந்தானே…” பொருளாதார வரட்சியில் வெந்து போன ஒருவர் கேட்கிறார்.
“இவ்வளவு தமிழர்களெல்லாம் நம்பிக்கையிலை சந்திரசேனாவை ஆதரிச்சிருக்குதுகள்… சந்திரசேனா ஏதாலும் ஒண்டு செய்யத்தானே வேணும்…”
“அப்ப போக்குவரத்துப் பிரச்சினை…”
“மின்சாரம் தாறதுக்கான ஒழுங்குகள் நடக்கிறது… போக்குவரத்துப் பிரச்சினை தானாய்ச் சரி வரும்…” சாமியார் கூறுகிறார்.
“எத்தனை கொடுமையளை அனுபவிச்சுப் போட்டம்… கொஞ்சக்காலமெண்டாலும்… எங்கடை மண்ணிலை வாழ்ந்திட்டுச் சாவம்…எத்தனை ஆயிரம் புள்ளையள் உயிரை விட்டிட்டிதுகள்… அதுக்கெண்டாலும் ஒரு கடவுள் தீர்ப்பு வேணுந்தானே…” ஒருவர் மிகவும் வேதனைப்பட்டுக் கொள்கிறார்.
கிணற்றுக் கட்டிலிருந்த நடராசர் தலையை நிமிர்த்தி அங்கு நின்றவர்களைப் பார்கின்றார்.
அதே பார்வை…
அதே மொட்டான சிரிப்பு…!
“தேவையில்லாமல் புடிபட்டு மறியலிலை இருக்கிற பொடியள்… எத்தினையாயிரம் பொடியள்…”
“அவங்களை இனி விட்டிடுவங்கள்…”
“அப்ப வெளிநாடுகளுக்கு அகதியாய் போனதுகளின்ரை முடிவென்ன…”
“அவையளெல்லாம் திரும்பி வர வேண்டித்தான் வரும் இஞ்சை பிரச்சினையில்லாட்டி வரலாந்தானே…”
நடராசர் தலையைக் குனிந்தபடி இருக்கின்றார், அவரது செவிப்பறை உணர்வு மட்டும் அங்கு நிற்பவர்களின் மத்தியில் நங்கூரமிட்டு நிற்கின்றது.
மருத மரத்தடியில் நிற்கின்ற அனைவரும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட ஒரு சுதந்திர பூமியில் நிற்கின்ற உணர்வில் நிற்கின்றனர்…”
நடராசாரின் மனதில் நடந்து மடிந்த தேர்தல் படச்சுருளாய் நீண்டு கொண்டிருக்கின்றது.
“எங்கடை ஓடர் பேப்பரைத் தாருங்கோ…” ஒரு சிறுவன் மூர்த்தியிடம் கேட்கின்றான். மூர்த்தி அந்தச் சிறுவனை உற்றுப் பார்த்து அவனை இனங்கண்டு அதன்பின் அவனது தகப்பனை நினைவுபடுத்தி… அதன் பின்பு தான் பத்திரிகையைக் கொடுக்கின்றார்.
பாண்காரன் வருகின்றான் மூர்த்தி பத்திரிகை வியாபாரத்தை நிறுத்தி விட்டு, பாண் பெட்டியை எடுத்துக் கொண்டு பாண்காரனை நோக்கி வருகின்றார். பாண்காரன் கடைமதிலோடு சைக்கிளைச் சாத்திவிட்டு பாணை எண்ண ஆரம்பிக்கின்றான்.
கிணற்றுக் கட்டிலிருந்த நடராசர் அங்கிருந்து வந்து றோட்டுக் கரையோடு நிற்கின்றார். பாண் வாங்குவதற்காக வந்த இன்னும் சிலர் நடராசரோடு சேர்ந்து கொள்கின்றனர்.
“தமிழர் பிரச்சினைக்கான முடிவைச் சந்திரசேனா ஏற்கனவே தீர்மானிச்சு வைச்சிருக்கிறான்…” பேச்சு தொடர்கிறது.
“ஏன் அப்பிடிச் சொல்லுறியள்…”
“அவன்ரை பேச்சிலிருந்து விளங்கியது…”
“என்ன மாதிரியான முடிவாயிருக்குமெண்டு நினைக்கிறியள்…”
“அதைத்தான் தீர்மானிக்கேலாமல் இருக்கு…”
சந்திரசேனா சொல்ற முடிவு… எங்களுக்கு பொருத்த மில்லாட்டி…” இக்கேள்வி அங்கு நின்ற அனைவரையும் குளப்புகின்றது சாமியார் என்ன பதில் கூறப்போகின்றாரென்று சகலரும் எதிர்பார்க்கின்றனர்…
ஆனால் சாமியார்? அவரால் எதுவும் கூறமுடியவில்லை…
நடராசர்… அதே பார்வை… அதே மொட்டான சிரிப்பு…
“என்ன நடராசண்ணை உங்கடை அப்பிராயத்தைச் சொல்லுங் கோவன்” சாமியார் நடராசரைக் கொழுக்கி போட்டிழுக்கிறார்… நின்றவர்களெல்லோரும் நடராசரைப் பார்க்கின்றன….
நடராசரின் பேச்சில் நிதானமிருக்கு என்பது சகலருக்குந் தெரியும்…
நடராசர் குனிந்து நிலத்தைப் பார்க்கின்றார். இந்த நிலத்தின் சோக வரலாறுகளும்… நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களும்… முரல் மீன்களாய் அவரது இதயத்தைக் குத்திக் கிழிகின்றன…!
“அண்ணை நான் கேக்கிறதென்னண்டால்… இவ்வளவு பெரிய தியாகங்களைச் செய்து போட்டு எங்களுக்குப் பொருத்தமில்லாத தொரு முடிவை சந்திரசேனா தந்தால்… அதை ஏற்றுக் கொள்ளலமா… இதைத்தான் நான் கேக்கிறன்…” முதல் சாமியாரிடம் கேள்வி கேட்டவர், இப்போது நடராசருக்குத் தனது கேள்வியை விளக்குகின்றார்….”
நடராசர் தலையை நிமிர்த்திக் கேள்வி கேட்டவரைப் பார்க்கின்றார். அனைவரும் நடராசரைப் பார்க்கின்றனர். மூர்த்தி அவர் கூடப் பத்திரிகை வியாபாரத்தை நிறுத்திவிட்டு நடராசரைக் பார்க்கின்றார்…. தூரத்தூர நின்றவர்கள் சிறுகச் சிறுக முன்னேறி நடராசரை அண்மிக்கின்றனர்.
…தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு.
வாலிபர்களை ஆயுதம் ஏந்த விடமாட்டேன்
…பொருளாதாரத் தடை நீக்கம்
…போக்குவரத்துப் பாதை திறப்பு…
…மின்சார வசதி…
சந்திரசேனாவின் தேர்தல் பிரசாரங்கள்…
“தம்பி…. இலங்கையிலை தேர்தல் பிரசாரங்கள் எல்லாம் பெரியதொரு சீறுவாணம் போன்றது…. அது சீறயுக்கை பாக்கிறதுக்கு அழகாகத்தான் இருக்கும்… சீறி முடிஞ்சுதென்றால்… மின்னுகின்ற ஒவ்வொன்றும் கரிக்கட்டியாய்த்தான் நிலத்திலை விழும்…
…அந்தக் கரிக்கட்டிகள் பல்லுத் தீட்டக்கூட உதாவது…” நடராசர் இப்படிக் கூறிவிட்டுப் பாண் வாங்குவதற்காகச் செல்கின்றனர்.
அனைவரும் மெளனமாக நிற்கின்றனர்.
– ஈழநாதம், 16.02.1994.
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.