கதைகள் உயிர்களை வளர்த்தன. எண்ணிலடங்கா விசயங்களை அறிய வைத்தன. நம் மூதாதையர் சொல்லச் சொல்ல, அவர்கள் அனுபவத்தை வாய்மொழியாகக் கேட்டு, இது விடம், இது மருந்து என்று உணர்ந்து வந்திருக்கிறது மானுடம். நோய்களுக்கான மருந்தோ, இயற்கைச் சீற்றங்கள் குறித்தான முன் பாதுகாப்போ, சமூகச் சிக்கல்களுக்கான தீர்வோ, வாழ்க்கையைப் பரந்துபட்டுப் பார்ப்பதற்கான பார்வையோ.. எதை அடைவதாக இருந்தாலும் அவை நம் முன்னோர் நமக்குக் கைநிறைய அள்ளிக் கொடுத்த, அவர்கள் சொல்லிச் சென்ற கதைகள் மூலமாகத்தான் அறியக் கிடைத்தன.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது கதை. துக்கம், சந்தோசம் என்று வாழ்வில் அனுபவித்த ஒவ்வொரு பக்கத்தையும் கதைகளாகச் சொன்னான் மனிதன். அவைதாம் காப்பியங்களாகவும், கவிதைகளாகவும், நாவல்களாகவும் வடிவம் கொண்டன.
தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக ஐம்பெரும் காப்பியங்களில்கூடச் சிறுகதைகளுக்கான கூறுகளைப் பார்க்கலாம். ஆனால், இன்றைய தினத்தைப் போல அதற்கான வடிவம் எதுவும் சிறுகதைகளுக்கு இருக்கவில்லை. செய்யுள்களாக இருந்தன. சிலப்பதிகாரத்தில் கவுந்தி அடிகள் மாதரிக்குக் கூறும் அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிக மாதின் கதை, பொற்கைப் பாண்டியன் கதை, மணிமேகலையில் இடம்பெற்றிருக்கும் சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றிலும்கூடச் சிறுகதைகளுக்கான கூறுகள் அமையப் பெற்ற செய்யுள்களைக் காண முடிகிறது.
உண்மையில் தமிழ்ச் சிறுகதைகளுக்கான வடிவம் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மேற்கொள்ளப் பட்டது. அச்சு ஊடகங்களின் வருகை, அதன் காரணமாக மேலை நாட்டு இலக்கியங்களைப் படிக்கக் கிடைத்த வாய்ப்பு இவை இரண்டும்தாம் தமிழில் சிறுகதை வருகைக்கான முக்கியக் காரணங்கள். தமிழுக்கேயான புதிய, தனி வடிவமாகச் சிறுகதை ஆரம்பத்தில் இருந்து, இன்று வரை இருக்கவில்லை. மேலைநாட்டு மரபை ஒட்டிய நவீனச் சிறுகதை முயற்சிகளாகத்தான் அவற்றைக் கொள்ளவேண்டியிருக்கிறது.
அன்றைய சூழலில், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில்தான், சிறுகதைக்கான வரவேற்பு அதிகம் இருந்தது. “சிறுகதை வடிவம், அமெரிக்க இலக்கிய வடிவத்துக்கு ஏற்புடையதாக இருப்பதற்குக் காரணம், அமெரிக்க மக்களுக்கு இருந்த வேகமும் பொறுமை இன்மையும்தான்” என்று வில்லியம் டீன் ஹவெல்ஸ் (William Dean Howells) என்கிற அமெரிக்க விமர்சகர் கூறியிருக்கிறார்.
எட்கர் ஆலன்போ , வாஷிங்டன் இர்வின், ஓ ஹென்றி போன்றவர்கள் சிறுகதைகளுக்கென ஓர் வடிவத்தை உருவாக்கினார்கள். தங்கள் படைப்புகளில் புதுப் புது உத்திகளைக் கையாண்டார்கள். அதே போல, பிரான்சுக்கும் சிறுகதை வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. மாபசான், பால்ஸாக், மெரீமி போன்றவர்கள் படைத்த சாதனைகள், உலகம் முழுக்கச் சிறுகதை இலக்கியத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தன. இன்னொரு பக்கம் உருசியாவில் மக்களின் வாழ்வியல் சார்ந்த படைப்புகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள், லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், துர்கனேவ் போன்றவர்கள். இங்கிலாந்தில், ஆர்.எல். ஸ்டீவன்சன், தாமஸ் ஹார்டி, ஹென்றி ஜேம்ஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ் போன்றவர்களின் எழுத்துகள் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தந்துகொண்டிருந்தன.
இந்தத் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டது. எழுத்தாளர் அ. மாதவையா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் வல்லமை படைத்தவர். 1910ஆம் ஆண்டில், இந்து நாளிதழில் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தேழு சிறுகதைகளை எழுதினார். அந்தக் கதைகளை 1912ஆம் ஆண்டு, தொகுத்து. “குசிகர் குட்டிக் கதைகள்” என்ற தலைப்பில் வெளியிட்டார். ஆனால், அவை ஆங்கிலத்தில் இருந்தன. 1924ஆம் ஆண்டு, அந்தக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
1912ஆம் ஆண்டு வ.வே.சு. ஐயர், தாம் எழுதிய ஐந்து சிறுகதைகளை ஒரு தொகுப்பாக, “மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்” என்ற பெயரில் வெளியிட்டார். கம்ப நிலையம் என்கிற பதிப்பகம் அந்நூலை வெளியிட்டிருந்தது. அதில் இடம்பெற்ற “குளத்தங்கரை அரசமரம்’ என்கிற கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்று பல தமிழ் அறிஞர்களால் கருதப்படுகிறது.
அதே காலக்கட்டத்தில், பாரதியார், நாரண துரைக்கண்ணன், தி.ஜ. ரங்கநாதன், இராமானுஜலுநாயுடு ஆகியோரும் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தனர். இவர்களுக்கு முன்பாகவே, 1859க்கும் 1906-க்கும் இடைப்பட்ட காலத்தில், பண்டித நடேச சாஸ்திரியார் எழுதிய “ஈசாப் கதைகள்”, “தக்காணத்துப் பூர்வ கதைகள்”, “தக்காணத்து மத்திய காலக் கதைகள்” ஆகிய மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அதே போல, பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய “அபிநவ கதைகள்” காலத்தால் முற்பட்டவை என்று குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் புதுமைப்பித்தன்.
தமிழ்ச் சிறுகதை இலக்கியம் படிப்படியாக வளர ஆரம்பித்தது. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, மௌனி ஆகியோர் தமிழ்ச் சிறுகதைக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்து அதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தினார்கள்.
புதுமைப்பித்தன் மக்கள் எழுத்தாளராக, வாழ்வின் அவலத்தையும் அப்படியே திரைப்படக் காட்சி போல விரித்துக்காட்டினார். “சாபவிமோசனம்”, “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்”, “பால்வண்ணம் பிள்ளை ”, “கயிற்றரவு” … என்று அவர் எழுதிய ஒவ்வொரு கதையும் தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்க்கும் கதைகளாகவே அமைந்தன. தனக்கென ஓர் தனி இடத்தையும், சிறுகதை இலக்கியத்துக்கான புதிய வரைமுறையையும் உருவாக்கிக் கொடுத்தார் புதுமைப்பித்தன்.
கல்கி, இராஜாஜி, சிட்டி, கே.எஸ். வேங்கடரமணி, லா.ச.ராமாமிர்தம் போன்ற எழுத்தாளர்கள் தங்களுக்கெனத் தனிப் பாணியில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தனர். கல்கி, தன் சுவாரசியமான வெகுஜன படைப்பால் தனக்கான வாசக வட்டத்தை விரிவுபடுத்தினார். அந்தக் காலத்தில் குறிப்பிடத் தகுந்த ஆரோக்கியமான விமர்சனங்களை வழங்குபவராக இருந்தார் க.நா.சுப்ரமணியன். இவருடைய “தெய்வ ஜனனம்” என்கிற சிறுகதை குறிப்பிடத் தகுந்த ஒன்று.
சி.சு. செல்லப்பா, தி. ஜானகிராமன், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், ஆர். சூடாமணி, வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், கந்தர்வன், வாஸந்தி, பாவண்ணன், இமையம்…. என்று தமிழ்ச் சிறுகதைகளுக்குப் பலம் சேர்த்த எழுத்தாளர்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்றாக இருக்கிறது. தமிழ்ச் சிறுகதைக்கு இன்னும் நூறு வயதுகூட முடியவில்லை . அதற்குள், மிகச் சிறந்த படைப்புகளைத் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
சிறுகதையைப் பொறுத்தவரை “தமிழ் எழுத்தாளர் நெறிமுறைகள்” இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பிரத்யேகமாக யாரும் வகுத்து வைத்திருக்கவில்லை. பேராசிரியர் கா. சிவத்தம்பி, எழுத்தாளர் கோவை ஞானி போன்றவர்கள், ஆங்காங்கே சில மேடைகளில் பேசும்போது, எழுத்தாளர் களுக்கான நெறிமுறைகள் குறித்துப் பேசியுள்ளார்கள். அவ்வளவுதான். மற்றபடி தமிழ் எழுத்தாளர்கள் தங்களுக்கான எழுத்து முறையைத் தாங்களே வகுத்துக் கொண்டார்கள். அல்லது மாதிரிக்கு மேலை நாட்டுப் படைப்புகளை எடுத்துக் கொண்டார்கள்.
ஆங்கிலத்தில்கூடச் சிறுகதைகளுக்குச் சில நெறி முறைகளை வகுத்திருக்கிறார்கள். சிறுகதையின் ஆரம்பம், நடுப் பகுதி, முடிவு இப்படி இருக்கவேண்டும் என்பது உள்பட, எத்தனையோ கருத்துகளைப் பல எழுத்தாளர்கள் வரையறுத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தமிழில் அப்படியான நெறிமுறைகள் எதுவும் இல்லை. சில எழுத்தாளர் பயிற்சி முகாம்களில் உருவம், உள்ளடக்கம், உத்தி குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும், அவையும் வெளியே வராமல் ஒரு வட்டத்துக்குள் சுருங்கிப் போய்விட்டன என்றுதான் சொல்லவேண்டும்.
புதிய உத்திகளுடன் கூடிய நவீனச் சிந்தனைதான் வாசகனை ஈர்க்கும். அந்த வளர்ச்சியைத் தமிழ்ச் சிறுகதைகளில் கண்கூடாகப் பார்க்கலாம். வ.வே.சு. ஐயரின், “குளத்தங்கரை அரசமரம்’” தொடங்கி இன்றைக்கு வெளியாகும் இளம் படைப் பாளிகளுடைய சிறுகதை வரை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
தமிழ்ச் சிறுகதைக்குப் பக்க வரையறை என்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். ஆனால், பிரபல வார, மாத இதழ்களில் சிறுகதைகள் வெளியானபோது, சிறுகதைக்கான பக்கங்கள் பத்திரிகைகளால் தீர்மானிக்கப்பட்டன. “நான்கு பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும், இத்தனை வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும்” என்று கோரிக்கையே வைத்தன சில பத்திரிகைகள்.
சிறுகதைகளைச் சுருக்குவது ஒரு பக்கம் எழுத்தாளர்களுக்கு அயர்ச்சியையேகூட ஏற்படுத்தியது. சொல்ல வந்த கருவை அதன் முழு வீச்சோடும் சொல்ல முடியாத நிலை. அப்படியே அதிகமாக எழுதினால், பத்திரிகை அலுவலகத்தில் இருக்கும் ஆசிரியர்களால் அதிகமான பக்கங்கள் வெட்டப்பட்டு, சுருக்கப்பட்டன. கொஞ்சம்கூடச் சுருக்காமல், எவ்வளவு நீளமாக இருந்தாலும் அப்படியே பிரசுரித்து ஆதரவு தருபவை சிறு பத்திரிகைகள் தான்,
பத்திரிகைகளில் வெளியிடப்படாமல், தொகுப்புகளாக வெளிவந்த சிறுகதைகள், அதன் எழுத்தாளர்களுக்கான முழுச் சுதந்திரத்துடன் அப்படியே வெளியாயின. பல நவீன எழுத்தாளர்கள் வார, மாத இதழ்களில் தங்கள் கதைகளைப் பிரசுரிக்காமல், தொகுப்புகளாக மட்டும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதற்குக் காரணமும் இதுதான்.
எழுத்துச் சுதந்தரம் வேண்டியதுதான். அதற்காகப் பக்க அளவுகளே இல்லாமல் சிறுகதை எழுதிச் செல்வதும் வாசகனை அலுப்புக்குள்ளாக்கிவிடும். பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜேம்ஸ் ஜாய்ஸ், எழுதிய நாவல் “யுலிஸிஸ்.’ கிட்டத்தட்ட 900 பக்கங்கள் கொண்டது. இதைச் சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். காரணம், இது ஒரே நாளில் நடக்கும் கதை. அதற்காக எவ்வளவு நீண்டதாக வேண்டுமானாலும் சிறுகதை இருக்கலாம் என்கிற நெறிமுறையை வைத்துக்கொள்வதும் ஏற்புடையது அல்ல.
“சிறுகதையின் முதல் வரியே வாசகனை ஈர்க்கும்படியாக இருக்கவேண்டும்” என்பது உண்மையாகவே இருந்தாலும்கூட அப்படியான முயற்சிகள் மிக மிக அரிதாகத்தான் தமிழில் நடைபெற்றிருக்கின்றன. எழுத்தாளர் தம் வசதிக்கேற்பக் கதையைத் தொடங்குகிறார். “தவமணி இடிந்துபோய்க் குந்திவிட்டாள்” என்று “தவமணி” என்கிற சிறுகதையை ஆரம்பிக்கிறார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். “கடுதாசி எழுதறதே கஷ்டமா இருக்கு” என்று தொடங்குகிறார் விட்டல்ராவ். “ஒரு விபத்து போலத்தான் அது நடந்தது” என்று தம் சிறுகதையை ஆரம்பிக்கிறார் அ. முத்துலிங்கம். இவைகூடக் கொஞ்சம் சுவாரசிய மனோபாவத்துடன், வாசகன் சிறுகதையை அணுகத் தூண்டினாலும், அதைப் பற்றியெல்லாம் அக்கறைப் படாமல், கதைக் கருவை அதன் போக்கில் எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள்.
“அலைகள் நீந்திக்கொண்டிருக்கின்றன” என்று வெகு சாதாரணமாக ஆரம்பிக்கும் தமயந்தியின் “அனல் மின் மனங்கள்” சிறுகதை அற்புதமான ஒரு படைப்பு. எனவே, சிறுகதையின் தொடக்கம் என்பதற்கான நெறிமுறையும் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எந்த வரையறைக்கும் உட்படாததாகத்தான் இருக்கிறது.
“ஒரு சிறுகதை எங்கே முடிகிறதோ, அங்கே ஆரம்பிக்கப் படவேண்டும். முடிந்தவரை ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருத்தல் நலம். தேவையில்லாத ஒரு வர்ணனையோ, பொருளோ சிறுகதையில் இடம் பெறக்கூடாது. சுவரில் ஒரு துப்பாக்கி மாட்டப் பட்டிருக்கிறது என்றால், கதை முடிவதற்குள் அதைப் பயன்படுத்தியாகவேண்டும். முடிவு ஏதாவது ஒரு விதத்தில் வாசகனைப் பாதிக்கவேண்டும்” என்றெல்லாம் பல எழுத்தாளர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த நெறி முறைகளை ஆரம்பக் கால எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.
சிறுகதைக்கு நடுவே வரும் உரையாடல் சொல்லாடல் வழக்கில் இருக்கவேண்டுமா? செந்தமிழில் அமைந்திருக்க வேண்டுமா? என்பதற்கும் எந்த நெறிமுறையும் இல்லை. உரையாடல் பேச்சு வழக்கில் இருக்கும்போது வாசகரால் ஈர்க்கப் படுகிறது என்பதை உணர்ந்த பெரும்பான்மையான எழுத்தாளர்கள், அதையே கடைப்பிடித்தார்கள். உண்மையில் வட்டார வழக்கில் எழுதப்பட்ட பல சிறுகதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றுக்கு உதாரணமாக, கி.ராஜநாராயணன், பூமணி, சோ. தர்மன், மேலாண்மை பொன்னுச்சாமி ஆகியோர் எழுதிய சிறுகதைகளைச் சொல்லலாம்.
பக்க அளவு, தொடக்கம், முடிவு ஆகிய நெறிமுறைகள் வகுக்கப்படாமை போலவே, தமிழ்ச் சிறுகதைகளுக்கான கருப்பொருளுக்கும் எந்த நெறிமுறையும் இல்லை. மனித உறவுகளுக்கிடையேயான நெகிழ்ச்சி, சிக்கல், சமூகப் பிரச்சினை, தலித்தியம், பெண்ணியம், உலகமயமாக்கல், பொதுவுடைமைச் சிந்தனை, நகர வாழ்க்கை அவலம்… என்று விரிகிற தமிழ்ச் சிறுகதைகளுக்கான கரு இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற நெறிமுறை எதுவும் இல்லை.
இது அவரவருடைய கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தது. என்றாலும், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற சிறுகதைகளாக இருப்பவை பெரும்பாலும் மக்களுக்கான சிறுகதைகள் தான். வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற படைப்புகள் தான் காலத்தால் அழியாமல் நிற்கும் என்பதற்குத் தமிழ்ச் சிறுகதைகளே உதாரணமாக இருக்கின்றன.
ஒரு பக்கம், சிறுகதையில் உன்னதமான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் கண் முன்னாலேயே அது வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்கிற அச்சமும் எழாமல் இல்லை. இன்றைக்கு, வெகுஜன இதழ்களில் சிறுகதைகளுக்கு அதிகம் இடம் இல்லை . ஒரு பக்கக் கதை, அரைப் பக்கக் கதை, கால் பக்கக் கதை, அஞ்சல் அட்டைக் கதை, எஸ்.எம்.எஸ். கதை என்று ஒவ்வொரு நாளும் சுருங்கி வருகிறது. மக்களைப் போய்ச் சேராத எந்த இலக்கிய வடிவமும் நெடுநாள் நீடிக்காது.
தமிழ்ச் சிறுகதையைப் போலத்தான் நாவலும். அதற்கான நெறிமுறைகள் எனப் பிரத்யேக அடையாளங்களாக எவற்றையும் சொல்ல முடியாது. 1857-இல் எழுதப்பட்டு, 1879-இல் வெளியான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவல்தான் தமிழின் முதல் நாவல்.
அவருக்குப் பிறகு, பி.ஆர். ராஜமைய்யர், ஆர். ஷண்முக சுந்தரம், சி.சு. செல்லப்பா , லா.ச.ராமாமிர்தம், ரகுநாதன், தி, ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன், ஜெயகாந்தன், கு.சின்னப்ப பாரதி, ப. சிங்காரம், நகுலன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, ஜி.நாகராஜன், அசோகமித்திரன், பொன்னீலன், வண்ணநிலவன், பிரபஞ்சன், பாமா, வாஸந்தி, ஜெயமோகன், ஜோ டி குரூஸ்… என்று தமிழ் நாவலுக்குச் சிறப்பான பங்கைத் தந்தவர்களின் மிக நீண்ட பட்டியல் ஒன்று இருக்கிறது.
“பிரதாப முதலியார் சரித்திரம்” நாவல் தொடங்கி, இன்று வரை நாவலுக்கான நெறிமுறை எதுவும் இல்லை. “இத்தனை அத்தியாயங்கள் இருக்கவேண்டும், ஒரு அத்தியாயம் இவ்வளவு பக்கங்களுக்குள் அடங்கவேண்டும்’ என்று யாரும் வரையறுக்கவில்லை. இதிலும்கூடப் பத்திரிகைகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது. நாவல்கள் தொடர்கதையாக இதழ்களில் வெளியானபோது, பக்கங்கள் வரையறுக்கப்பட்டன. ஓர் இதழில் வெளியான தொடர்தான் அத்தியாயமாகக் கருதப்பட்டது. கல்கி, சாண்டில்யன் ஆகியோருடைய வரலாற்றுப் புதினங்கள், சுஜாதா, பாலகுமாரன் ஆகியோருடைய தொடர்கதைகள் இப்படித்தான் அறியப்பட்டன.
சி.சு. செல்லப்பாவின் “சுதந்திர தாகம்” நாவலைப் போலப் பாகம் பாகமாக வெளி வந்த நாவல்கள் உண்டு. நாவல் என்பது ஒரு வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கிற படைப்பாகக் கருதப்படுவதால், பக்க வரையறை என்று அதற்கு எதுவும் இல்லை . அதே சமயம், நெடுங்கதையாகக் கருதப்படவேண்டிய சி.சு. செல்லப்பாவின் “வாடி வாசல்” போன்ற அற்புதப் படைப்புகள் நாவலுக்கான அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கின்றன.
ஜி. நாகராஜன் எழுதிய “நாளை மற்றுமொரு நாளே” ஒரு மனிதனுக்கு ஒரே நாளில் நடைபெறுகிற சம்பவங்களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்நாவல். ஆனால், ஜி. நாகராஜன், ஒரு நாவலுக்கான தனி நெறிமுறைகளாக எதையும் இதில் கைக்கொள்ளவில்லை. அத்தியாயங்கள் உரிய முறையில் பிரிக்கப் படவில்லை. பக்க அளவைப் பற்றி அவர் கடைப்பிடிக்கவில்லை. ஆனால், வாழ்வியலைப் பேசுகிற படைப்பாக இருந்ததால் இன்றைக்கும் அழியாத காவியமாக இருக்கிறது.
தமிழ் நாவல்களை வகைப்படுத்த முடியும். சரித்திர நாவல்கள், துப்பறியும் நாவல்கள், சமூக நாவல்கள்… இப்படி, லக்ஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி போன்ற பெண் எழுத்தாளர்கள் பத்திரிகைகளில் எழுதிய தொடர்கதைகள், பிற்பாடு புத்தக வடிவம் பெற்றபோது நாவல் என்றுதான் அழைக்கப்பட்டன. அவையெல்லாம் கச்சிதமான அத்தியாய அளவுகளோடு, பக்க நிறைகளோடு இருந்தன.
இன்றளவும் பக்க அளவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஒரு பெரிய கருத்தியலையோ, வாழ்வியலையோ முன்வைக்கும் நாவல்கள்தான் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. ஜெயகாந்தன் எழுதிய “சில நேரங்களில் சில மனிதர்கள்”, சுந்தரராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை’, “ஜே.ஜே. சில குறிப்புகள்”, சா.கந்தசாமியின் “சாயாவனம்”, வண்ண நிலவனின் “கடல்புரத்தில்”, பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”, பாமாவின் “சங்கதி”, ச. பாலமுருகனின் “சோளகர் தொட்டி’, ஜோ டி குரூஸின் “ஆழி சூழ் உலகு”, ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்”, எஸ்.ராமகிருஷ்ணனின் “பாண்டவபுரம்”, சு.வெங்கடேசனின் “காவல்கோட்டம்”…. என்று பல உதாரணங்களை இதற்குச் சொல்லலாம்.
உத்தியைப் பொறுத்தவரை தமிழ் நாவல் இலக்கியத்தில் பல புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சுந்தரராமசாமியின் “ஜே.ஜே. சில குறிப்புகள்” அப்படியான ஒரு புதிய முயற்சி. ஜி.நாகராஜன் எழுதிய “குறத்தி முடுக்கு’, நாஞ்சில் நாடன் எழுதிய “எட்டுத் திக்கும் மதயானை’, சம்பத் எழுதிய “இடைவெளி’ ஆகியவற்றைப் புது உத்திகளைக் கொண்ட நாவல்களாக எடுத்துக்கொள்ளலாம்.
வட்டார வழக்கு மொழியில் எழுதப்பட்ட நாவல்களில் ஆர். ஷண்முக சுந்தரத்தின் “நாகம்மாள்”, கி. ராஜநாராயணனின் “கோபல்ல கிராமம்”, பூமணியின் “பிறகு” நாவல்களை மிக முக்கியமானதாகச் சொல்லலாம்.
தமிழ் நாவல் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஒன்றுமட்டும் புரிகிறது. வடிவம், பக்க அளவு, உத்தி, சொல்லாடல், பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் பாங்கு என்று எந்த நெறிமுறையை எடுத்துக்கொண்டாலும் நாவலுக்கான களம் உயிர்ப்போடு இருக்கிறபோது, எதைப் பற்றியும் கவலைப்பட வாசகன் தயாராக இல்லை. அந்த நாவலை உச்சிமோந்து வரவேற்கிறான். உயரத்தில் தூக்கிப் பிடிக்கிறான். அதற்கான அங்கீகாரத்தை அளவுக்கு அதிகமாகவே தந்து மகிழ்கிறான்.
நாவலோ, சிறுகதையோ பிரத்யேகமான நெறி முறைகளைத் தமிழ் எழுத்தாளர்கள் வகுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா? இப்படி கேட்டால் அதற்குப் பதில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கான பாணியில் எழுதிச் செல்கிறார்கள். தங்களுக்கு எது வசதி என்று படுகிறதோ, அதைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், அவை பாராட்டப்படும்போது, அவர்கள் வகுத்த நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று புதிய படைப்பாளிகளுக்குத் தோன்றுகிறது. அசோக மித்திரனையோ, சுந்தர ராமசாமியையோ, ஜெயகாந்தனையோ தம்முடைய ஆதர்ச எழுத்தாளர் என்று பல இளம் எழுத்தாளர்கள் சொல்லிக் கொள்வது இந்தக் காரணத்தினால்தான்.
இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டியிருக்கிறது. எந்த நெறிமுறையும் இல்லாமல் எழுதிச் செல்வது சரிதானா? மனத்துக்குச் சரி என்று படுகிற நெறிமுறைகளை எழுத்தாளர்கள் வகுத்துக்கொள்வது தவறில்லை. உதாரணமாக ‘நான் பெண் உரிமைக்குப் புறம்பாக எழுத மாட்டேன்’ என்று ஓர் எழுத்தாளர் தனக்குத் தானே ஒரு வரையறையைப் போட்டுக் கொள்வதுகூட நல்லது என்றுதான் தோன்றுகிறது.
கருவோ, உத்தியோ மற்றவர்களைக் காயப்படுத்தாத, கொச்சை வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தாத, சமூகச் சீர்கேடுகளையும் ஆபாசத்தையும் முன் நிறுத்தாத, மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற படைப்புகளாக நாவலும் சிறுகதைகளும் இருக்கவேண்டும் என்கிற குறைந்த பட்ச நெறிமுறையை ஒவ்வொரு எழுத்தாளரும் பின்பற்றவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
– படைப்பு நெறிமுறைகள், முதற் பதிப்பு: 2010, பதிப்பாசிரியர்:முனைவர் கரு.அழ.குணசேகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113