‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற வாசகம் சிறுகதை இலக்கியத்திற்கு முற்றிலும் பொருந்தும். சிறுகதை உருவத்தில் சிறியது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஓர் உணர்ச்சிதான் சிறுகதையின் ஆட்சி எல்லை. நான் படித்து அனுபவித்த சில சிறுகதைகளைக் கொண்டு சிறுகதைக்கு அவசியமான குணாம்சங்களை சிறிய வடிவத்தில் இங்கு தர விரும்புகின்றேன்.
சமூக மக்களின் வாழ்க்கை யிலிருந்து இலக்கியம் பிறக்குமாயின் சமூக வலுவைப் பிரதிபலிக்கும் கதைகளே சிறந்த சிறுகதைகளாக அமையும். மாறும் சமுதாயத்திற்கேற்ப சிறுகதை தன்னையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மனித உருவத்திற்கு எலும்புக் கூடு இன்றியமையாதது போல சிறு கதைக்கு உள்ளீடு இன்றியமையாதது. உள்ளீடாகத் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சி அல்லது கருத்து கதையை வளர்த்துச் செல்லும் ஆற்றலுடையதாக அமைதல் வேண்டும்.
கதையின் கருத்து உள்ளீடாக அமையும் போது கதைக் கருத்தின் சுவை குன்றாத குறுக்கமே தலைப்பாக அமைதல் வேண்டும். அப்பொழுதே சிறு அளவிலான எண்ணம் படிப்போர் மனதில் எழுந்து கதையை வாசிப்பதற்கு தூண்டுதலாக அமையும்.
யாதாயினும் ஒரு கருத்து, ஓர் உணர்ச்சி இவற்றினூடாக சிறுகதை நிகழும் போது அக்கருத்துக்கோ, உணர்ச்சிக்கோ மாறுபட்ட எதுவும் கதையில் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும். கதையின் ஒருமைப்பாடுதான் ஊக்குவிக்கப்பட வேண்டும். கதை எழுதும் ஆசிரியன் தன்னை வாசகனாகவும் மாற்றிக் கொண்டுதான் கதையை எழுத வேண்டும். கதையின் அமைப்பு முறையில் தொடக்கநிலை, வளர்ச்சிநிலை, முடிவு நிலை இவற்றுக்கிடையே ஒரு சமநிலை இருப்பது விரும்பத்தக்கது.
சிறு கதையில் ஒரு சில பாத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும் பாத்திரப்படைப்பு அதன் குணப்பண்புகளை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும். ஆற்றல் வாய்ந்த சில சொற்களால் அது நிறைவு பெற வேண்டும். பாத்திரங்களின் பண்பிற்கும் கதைக்கருத்திற்கும் பிரிக்க முடியாத தொடர்பு இருத்தல் வேண்டும்.
கதையில் கையாளப்படும் மொழி நடை கதையின் உணர்வு நிலையை பிரதிபலிக்க வேண்டும். சிறுவாக்கியங்கள் கதைக்கு தனி வேகத்தைக் கொடுக்கும், பாத்திரங்களின் உரையாடல் மட்டுமே பேச்சு மொழியுடையதாக அமைதல் வேண்டும்.
– ஜீவநதி – காலை இலக்கிய இருதிங்கள் ஏடு – ஆடி -ஆவணி 2007