சிறுகதை – ஓர் ஆய்வு – நா.முத்துநிலவன்

 

விழுது விட்ட அரசமரம்
அறிவியலின்படி வேண்டுமானால் ஆலமரம் தான் விழுதுவிடும் என்று கூறலாம். ஆனால்இ தமிழ் இலக்கிய உலகில் ‘அரசமரம்’ தான் ஏராளமான விழுதுகளோடும் விதைகளோடும் விரிவடைந்து நிற்கிறது!

1917–20களில் உலக அளவில் நடந்த மிகப் பெரிய நிகழ்ச்சி சோவியத்துப் புரட்சி. இந்திய அளவில் எல்லோரையும் கவனிக்கச் செய்தது. காந்திஜியின் இந்தியவரவு எனில்இ தமிழக அளவில் – இலக்கியவாதிகள் அனைவரையும் நிமிர்ந்து பார்க்கச் செய்தது – வ.வே.சு. ஐயரின் முதல் தமிழ்ச்சிறுகதைப் படைப்புத்தான். வ.வே.சு. இறந்த பிறகு (1927இல்) வெளிவந்த அவரது எட்டுச் சிறுகதைகள் அடங்கிய “மங்கையர்க்கரசியின் காதல்” தொகுதி தான் தமிழின் முதல் சிறுகதைத் தொகுதியாக அறியக் கிடைக்கிறது.

இந்தியாவில் முதல் முதலில் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய தாகூரிடமிருந்து பாரதியார் சிலவற்றை மொழிபெயர்த்தார். பாரதியாரும் சில ‘சிறிய’ கதைகளை எழுதியுள்ளார். எனினும் அவற்றைச் சிறுகதைகள் என்று கூறிவிட முடியாது என்கிறார் இலகைத் தமிழாய்வாளர் கா. சிவத்தம்பி.
பாரதிக்கும், வ.வே.சு.ஐயருக்கும் முன்னரே ‘பரமார்த்த குருகதைகள்’ எழுதிய வீரமாமுனிவரும், ‘குசிகர் குட்டிக் கதைகள்’எழுதிய மாதாவையும் தமிழ்ச்சிறுகதை வடிவத்தில் முன்னோடிகளாக விளங்கினாலும் சிறுகதைவடிவத்துக்கு சரியாக விழுதுவிட்டது வ.வே.சு.ஐயரின் அரசமரம்தான் “குளத்தங்கரை அரசமரம்”!

ஆரம்பகாலச் சிறுகதை முயற்சிகளில் மணிக்கொடி.

1935 வரையிலும் – தேசபக்தன் நவசக்தி தமிழ்நாடு காந்தி கலைமகள், ஊழியன், சுதந்திரச் சங்கு ஆனந்தவிகடன் மித்திரன் வாரப்பதிப்பு போன்ற பலதரப்பட்ட பத்திரிகைகளில் பலர் எழுதிய சிறுகதைகள் வந்து கொண்டிருந்தன.என்றாலும் புதுமைப்பித்தன் கு.ப.ராஜகோபாலன் ந.பிச்சமூர்த்தி சி.சு.செல்லப்பா போன்றோர் எழுதிய ‘மணிக்கொடி’ பத்திரிகைதான் சிறுகதை இலக்கியத்துக்கு சரியான மடைதிறப்பாக வந்து சேர்ந்தது.

இந்திய சுதந்திரப்போரில் ஈடுபட்டுச் சிறையிலிருந்த – கே.சீனிவாசன் டி.எஸ்.சொக்கலிங்கம்இ வ.ராமசாமி என்ற வ.ரா. ஆகிய மூன்று தேசபக்தரிடம் கருவாகி அவர்கள் வெளிவந்ததும் உருவாகி 1933 செப்டம்பர் 17 இல் ‘மணிக்கொடி’ முதல் இதழ் வெளிவந்தது. வார இதழாக வந்த ‘வ.ரா.மணிக்கொடி’யில் ‘குறுக்கெழுத்துப் போட்டிக்குக் கதை எழுதுகிறவர்’ என்று கிண்டல் செய்யப்பட்டவர் கலகி -ரா.கிருஷ்ணமூர்த்தி. அவர் நடத்திய விகடன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று சிறுகதை ஆசிரியராகத் தெரியவந்தவர் பி.எஸ்.ராமையா.

பின்னர் அதே பி.எஸ்.ராமையாவை ஆசிரியராகக் கொண்டு ‘மணிக்கொடி’ மாதமிருமுறையாக (1935 மார்ச்முதல்) வெளிவரத்தொடங்கியது. சமகாலத்திலேயே மணிக்கொடி கலைமகள் விகடன் பத்திரிக்கைளில் பலதரப்பட்ட ரசனையுடன் சிறுகதை என்கிற இலக்கிய வடிவம் வெகுவேகமாகப் பரவியது. கி.வா.ஜ. கூறியது போல 1957 ஆம் ஆண்டிலேயே ஒரு மாதத்திற்கு சுமார் இருநூறு சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின.

மணிக்கொடிக்குப் பிறகு…..

மணிக்கொடி ’38 ல் நின்று போய்இ பிறகு மீண்டும் வ.ரா.வை ஆசிரியராகக் கொண்டு குறுகிய காலமே வெளிவந்தது. அதற்கும் பிறகு பல ஆண்டுகள் கழித்து (1950 இல்) பி.ஸ்.ராமையாவையே ஆசிரியராகக் கொண்டு சில இதழ்கள் வந்து நின்றே போனது.

இப்படி மாறி மாறி மணிக்கொடி பற்றி இங்குக் குறிப்பிட வேண்டியது அவசியம். அதற்குப் பின்னால் இன்று வரை – மேலாண்மை பொன்னுச்சாமி வரை – பல்வேறு பார்வைகளில் எழுதி வருவதன் விதை ‘மணிக்கொடி’யிலேயே விதைக்கப்பட்டது.
ஒரு பக்கம் : ஜனரஞ்சக வாசகர்கூட்டத்தோடு ’30களில் வெளிவந்த ‘விகடன்’ அதிலிருந்த ரா.கிருஷ்ணமூர்த்திஇ தன் பெயரிலேயே பிறகு (1941) ஆரம்பித்த ‘கல்கி’ போன்ற வார இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளஇ; இவற்றைத் தொடர்ந்து சிறுகதைகளோடு மற்ற மசாலாக்களையும் சேர்த்து இலக்கிய வியாபாரம் செய்து வரும் இன்றைய குமுதம் குங்குமம் சாவி இதயம் போன்ற பத்திரிக்கைகளில் வெளிவரும் சிறுகதைகள் – இவை ஒரு பக்கம்.

அடுத்த பக்கம் : வ.ரா.நடத்திய அரசியல் சமூகம் சார்ந்த இலக்கிய மணிக்கொடியிலிருந்து வேறுபட்டு பி.எஸ்.ராமையா நடத்திய தூய இலக்கிய சிறுகதை மணிக்கொடியில் எழுதியவர்களும் மணிக்கொடியால் எழுத வந்தவர்களும் ஆகிய இவர்கள் எழுதி வந்த சிறுகதைகள் – இன்னொரு பக்கம்.
இந்த இரண்டாவது பக்கம் தான் சோதனை முயற்சிகளை செய்தது.
இந்த சோதனை முயற்சிகள்தான் சிறுகதைகளில் உருவத்துக்கு அழுத்தம் கொடுத்த குழுவாகவும் உள்ளடக்கத்துக்கு அழுத்தம் கொடுத்த குழுவாகவும் பரிணமித்துப் பிரிந்தது.

முதல் குழு ‘எழுத்து’ (1959-62) பத்திரிக்கையைத் தொடங்கியது. இதில் ஆசிரியர் சி.சு.செல்லப்பாஇ சு.நா.சு.பிச்சமூர்த்தி போன்றோர் அதிகமாக எழுதிவரஇ அதில் சிறுகதை குறைந்து புதுக்கவிதைஇ இலக்கிய விமர்சனம் மிகுந்து வரத் தொடங்கியது.

அடுத்த குழுவின்தொடர்ச்சி ‘சரஸ்வதி’(1954-62)பத்திரிகையைத் தொடங்கியது. இதில் ஆசிரியர் விஜயபாஸ்கரனுடன், ரகுநாதன் ஜெயகாந்தன் சுந்தரராமசாமி போன்றோர் அதிகமாக எழுதிவர இதில் பழைய வ.ரா.மணிக்கொடி போல – அரசியல் சமூகம் சார்ந்த புதிய சிறுகதைகள் அரசியல் கட்டுரைகள் பிற இலக்கிய வடிவங்கள் வீச்சுடன் வெளிவந்தன.

இதன் பின்னர் ‘எழுத்து’ இதழின் வீச்சு சு.நா.சு.நடத்திய ‘சூறாவளி’ ‘சந்திரோதயம் போல – சில இதழ்களாவும்’ இவரது இலக்கிய பார்வையை ஒட்டிய ‘ஞானரதம்’ அண்மையில் – அவர் மறைவதற்கு முன் சில இதழ்களே வெளிவந்த ‘மூன்றில்’ போன்ற இதழ்களாகவும் இந்த வட்டத்தைச் சார்ந்த ‘கணையாழி’ போன்ற பத்திரிகைகளாகவும் இன்றைய சுந்தரராமசாமியின் ‘காலச்சுவ’டாகவும் பரிணாமம் கொண்டுள்ளது.

அதேபோல ‘சரஸ்வதி’ பத்திரிகையின் வீச்சு ‘ரகுநாதனின் ‘சாந்தி’யாகவும் பின்னர் ஜீவா தொடங்கிய ‘தாமரை’யாகவும் அதில் எழுதியவர்கள் பின்னர் தொடங்கிய ‘செம்மல’ராகவும் பரிணமித்துள்ளது.

இவ்வாறாக மணிக்கொடிக்குள் இருந்த உருவமும் உள்ளடக்கமும், சற்றேறக்குறைய இரண்டு குழுவாக – சிறுசிறு வட்டங்கள் உள்ளடக்கிய இரண்டு வகைக் குழுவாகவே பரிணமித்தது. (இதில் ஒருசிலர் முதல் குழுவில் தொடங்கி இரண்டாம் குழுவில் நிலைத்ததும் உண்டு. இரண்டிலும் ஆரம்ப காலத்திற்கு மாறாகப் போனவர்களும் உண்டு. இவர்கள் தொடர்புடைய ஏராளமான – இங்கு சுட்டப்படாத – பத்திரி;கைகளும் உண்டு. ஒரு குறியீடாகவே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளன.

இப்படி–
உள்ளடக்கத்துக்கு அழுத்தம் கொடுத்த குழுவின் வளர்ச்சியாக அரசியல் சமூக விஷயங்களோடு இலக்கியம் செய்த பழைய வ.ரா.மணிக்கொடியின் பரிணாமத்தின் ஒரு பக்கமே இன்றைய செம்மலர். அதில் தொடர்ந்து எழுதிவரும் சிறுகதையாசிரியர் மேலாண்மை பொன்னுச்சாமி.

வ.ரா. தொடங்கி பின்னர் பி.எஸ்.ராமையா தொடர்ந்து மணிக்கொடிக்கு ஒரு புதுமைப்பித்தன் கிடைத்தது போல விஜயபாஸ்கரன் சரஸ்வதிக்கு ஒரு ஜெயகாந்தன் கிடைத்தது போல இன்றைய செம்மலருக்கு ஒரு மேலாண்மை பொன்னுச்சாமி கிடைத்திருக்கிறார். மணிக்கொடி முதல் இதழ் முதல் பக்கத்திலேயே பிரகடனப்படுத்திய எழுத்தாளர் கடமையுடன் இன்றளவும் எழுதிவரும் ஒருசிலரை மணிக்கொடியின் பரிணாமமாகக் காணமுடிகிறது.
‘கல்கியின் முதற்பரிசு பெற்று வெளிவந்த ‘சிபிகள்’ சிறுகதைக்குஇ பின்னர் வெளியிட்ட தனது அறிமுகவுரையில் மேலாண்மை தன்னை’ மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

எழுத்தும் வாழ்க்கையும்

புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் அளவுக்கு இவர் இன்றும் சிகரங்களைத் தொடவில்லை என்றாலும் அவர்களை விடவும் – டாக்டர் வீ.அரசு சொல்லுவது போல ‘பாவப்பட்ட மக்களோடு அவர்களில் ஒருவராக வாழ்ந்துவரும் படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி’ – நமது கவனத்துக்குரிய எழுத்தாளராக இருந்து வருகிறார்.

விந்தன் எழுதிய ‘முல்லைக்கொடியாள் கதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கி கல்கி கூறியது போல – ‘பாடுபட்டு அறியாதவன். பாட்டாளியின் துயரத்தைப் போற்றியும்இ சேற்றில் இறங்கியறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் தோய்த்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலட்சணங்களும் இருக்கலாம். உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியான இதயம் ஒந்றிய ஈடுபாடு இருப்பதில்லை.
அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் ஏழைஎளிய மக்களிடையே இருந்தும் உழைப்பாளர் மக்களிடையே இருந்தும் ஆசிரியர்கள் தோன்ற வேண்டும். அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் பொருந்தியிருக்க வேண்டும்.
அப்படி கல்கி ஆசைப்பட்ட மாதிரி ஒரு உழைப்பாளியாகவும் இலக்கியப் பண்பு பொருந்தியவராகவும் இருக்கும் எழுத்தாளர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி.

புனைபெயரில்லாத பொன்னுச்சாமி

விருத்தாசலப் புதுமைப்பித்தனிலிருந்து வைத்தியநாதப் பிரபஞ்சன் வரை புகதைத்துறை புனைப்பெயருக்குக் குறைவைத்ததில்லை. அவர்களாவது அர்த்த பூர்வமாக அப்படிப் பெயர் புனைந்து கொண்டார்கள். ஆனால் வெறும் வியாபாரக் கவர்ச்சிக்காகவே வேணுகோபாலப் புஷ்பா தங்கதுரைகளாக வருகின்ற காலத்திலும் கூட தனது கிராமத்துப் ‘பத்தாம்பசலி’ப் பெயரை மாற்றிக் கொள்ளாமல் எழுதும் இவர் ‘பேரளவு’க்கும் தனித்தே நிற்கிறார்.

இந்த வகையில் ‘என்கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புணைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்தது என்று கூறிய புதுமைப்பித்தனிடமிருந்தும் கூட இவர் வேறுபடுகிறார்.

காந்தியும் – பாரதிராஜாவும் – மேலாண்மை பொன்னுச்சாமியும்

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்றார் காந்திஜி. ஆனால் என்பது சதவீத இந்திய ஆன்மா இன்னமும் இருளடைந்தே கிடக்கிறது.
இந்தியச் சுதந்திரத்திற்கு இத்தனை வயதாகியும், ஒற்றையடிப்பாதை கூட இல்லாத கிராமத்திலிருந்து வயல் வரப்பிலேயே நடந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து போன பிறகுதான் இந்தியப் போக்குவரத்துச் சாலையை பார்க்க முடிவது கொடுமையல்லவா?

நமது கிராமங்களை – சினிமாக் கலை வடிவத்தின் மூலம் – நகரவாசிகளுக்கும் காட்டுவதேஇ தமிழில் பாரதிராஜாவுக்குப் பிறகுதான் அதிகரித்தது. ஆனால்இ அதில்கூட தவறாமல் ஒரு பள்ளிக்கூடம் இருக்கும் அல்லது அழகான காதலி வந்து பாட்டுப்பாடுவாள். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் பள்ளிக்கூடங்களே கிடையாது என்பது ஒருபக்கம். காதல் தவிரவும் கணக்கற்ற பிரச்சினைகள் கிராமங்களில் உண்டு என்பது மறுபக்கம்.

ஆக இன்றைய தமிழ்க் கலை இலக்கியங்களில் வருகிற கிராமங்களில் எதார்த்தத்தைத் தேட வேண்டியிருக்கிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி சுமார் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான கதைகளை எழுதியிருக்கிறார். அதில் மிகப் பெரும்பாலானவை கிராமியக் களக்கதைகளே. அந்தக் கதைகளிலும் தமிழ்ச் சினிமாக்களைப்போல அல்லாமல் எதார்த்தமான கிராமத்து நடப்புகளை – நம்மோடு வாழ்ந்துவரும் கதாபாத்திரங்களோடும் – புதிய கோணத்தில் நம் கண்முன்னே நிறுத்துவதுதான் இவரது வெற்றியின் அடிப்படை.

மேலாண்மையின் சிறுகதைகள்

நாடு சுதந்திரம் பெற்ற செய்தி கூடச் சென்று சேர்ந்திருக்குமோ எனும் சந்தேகத்துக்குரிய அரசியல் பொருளாதாரச் கூழலும; தொடர்புமற்ற ஆயிரக்கணக்கான கிராமங்களில் இருந்து கொண்டு எமது தேசத்தின் என்பதுகோடி வாய்களுக்கும் உணவு சுரந்து கொண்டு கிடக்கும் விவசாயக் கூலிகள் சிறுவிவசாயிகள் அவர்களின் குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்கள் – அதிலும் பெண்கள் குழந்தைகள் அவல உச்சங்கள் – அப்பப்பா!

இந்தியாவிலேயே யாருக்கு ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமோ அந்தக் கிராமத்துக் கூலி விவசாயப் பகுதி இன்னும் பல லட்சக்கணக்கில் ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கும் நிலை!

இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கூட அரசியலால் தொட முடியாதவர்களை பொருளாதாரத் திட்டங்களால் தொடமுடியாதவர்களை விஞ்ஞானத்தின் விரல்நுனியும் படமுடியாதவர்களை இலக்கியத்தைத் தொட்டு எழுப்பப் பார்க்கிறார் மேலாண்மை.

டாக்டர் வீ.அரசு சொல்வதுபோல ’கிராம மக்களின் வாழ்க்கை அவர்களது பண்பாட்டுத் தளத்திலேயே நொறுங்கிக் கொண்டிருக்கும் அவலம் இவரது எழுத்துக்களில் உயிரோட்டமாய் இருக்கிறது.

அந்தக் கிராமத்துக் கூலி விவசாயக் குடும்பங்களிலும் அதிக அவலப்பகுதியான பெண்களையும் குழந்தைகளையும் அவர்களது உள்மன உணர்வுகளையும் எழுதுகிறார்.

இதுதான்
உலகக் கொடுமைகளின் நுனிமுனைக் கொழுந்து
எழுதப்படும் இலக்கிய வகையின் உச்சம் இது.
இதற்கு மேல் இசை – கலை வடிவங்கள்தான் மேற்செல்லக்கூடும்.

“கொலை” மேலாண்மையின் முத்திரைக் கதை.

1977 ஆகஸ்டு செம்மலரில் வெளிவந்த மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘கொலை’ சிறுகதையை அந்த மாதத்துச் சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனை தேர்ந்தெடுத்துப் பாராட்டியது.

கிராமத்துக் கூலி விவசாயி மாடசாமி
……….அவனது ‘கறுப்புப் புறாவா துடிப்பும் துள்ளலும் மின்னலுமாகச் சுழன்று திரியும்’ அன்பு மனைவி ராசாத்தி.
………’காட்டுக் கள்ளியாக கவனிப்பாரற்றுக் கிடந்த கல்லுவாரிப் பயலான தன்னையும் ஒரு மனிதனாக மதித்து’மனைவியானவள்.
………ராசாத்திக்கு பிரசவநேரம்……
”சாய்ந்து நிமிரும் தேர் மாதிரி வயிறு’
………கிராமத்து ‘லேடி டாக்டர்’ராமாயம்மாளுக்கு மசியாத பிரசவ வலி.
ஏழுமைல் தூரம் – கிராமத்திலிருந்து இந்தியா இருக்கும் தூரம்.
………’ரெக்கைகட்டிப் பறக்கும் கிராமத்து அன்பு உள்ளங்கள் திரும்புகின்றன.
………’டாக்சியும் கிடைக்கலியாம்! இடையிலே செத்துத் தொலைஞ்சிட்டா பெரிய ரோதனையாகப் போகுமாம.;
………’காட்டுப் பாதையில் பைக் வராதாம் டாக்டரும் வரமாட்டாராம்.
………வண்டி கட்டிப் போனார்கள்.
………ஆஸ்பத்திரியை அடைந்த ஐந்தாவது நிமிடம் பெரியவர் கதறினார்.
“ராசாத்தியைக் கொன்னுட்டீங்களாடா! பாவிகளா”

இந்தக் கதையின் முடிவு பற்றிக் கருத்து வேறுபடுகிறார். அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்து ‘தீர்வு’ கண்ட ஆர்.சூடாமணி.

“ராசாத்தி சாகவில்லை கொலை செய்யப்பட்டாள்’ என்ற கருத்து ஒரு பாத்திரத்தின் வாயிலாக மேடைப் பிரசங்கம் போல் வெளிவருவது. கதையின் கலைத் தன்மையைப் பாதிக்கிறது. இப்படித் திடீரென்று கதைக்கு இடையே ஒலிக்கும் தனிக்குரல்கள் கதையின் எதிரியான மிகைகளில் ஒன்று”. – என்கிறார் அவர்
கதைகளில் பிரச்சினைக்கான தீர்வுகள் ‘தட்டில் வைத்துத் தரப்படவேண்டும்’ என்பது இல்லைதான். ஆனால் கதை எழுதுவது ஈட்டி எறிதல் போல இருக்க வேண்டும்.
ஈட்டி காற்றைக் கிழித்து வெகுதூரம் போகவும் வேண்டும்.

நுனியில் குத்தி நிமிர்ந்து நிற்கச் செய்யவும் வேண்டும்.

ஈட்டி தரையைத் தடவிப் போய்விடாமல் இருக்க அழுத்தம் கொடுத்து வீசும் போது ஈட்டி நுனி சென்று குத்துவதற்காக ஒரு திருப்பு விசையைக் கொடுத்துச் செலுத்துவது போன்ற நுணுக்கம் அமைவது ரொம்ப அருமையானது.
கூடுதலாக அழுத்திவிட்டால் தூரம் போகாது.

தூரம் மட்டுமே கருதிவிட்டால் குத்தி நிற்காது(ஃபவுல் ஆகிவிடும்) இரண்டுமே வேண்டும்.

சிறுகதையும் அப்படித்தான்

இல்லாவிட்டால் கலை கலைக்காகவே கதையும் கதைக்காகவே என்றாகிவிடும். கலையம்சத்தால் நிலைபெறுதலும் கூடும்.

வெறும் கருத்து மட்டும் இருந்து கலையம்சக் குறைவால் வெறும் பாட்டி சொன்ன கதையாகவும் சில கதைகள் நிற்பதுண்டு. வேறொரு இடத்தில் கி.ரா.சொல்வது போல அது ‘அல்வாவின் மேல் சீனி கொட்டியது போல’ இருக்குமேயன்றி வெற்றி பெற்ற சிறுகதையாகாது.

எனவேதான் ‘கொலை பற்றிய சூடாமணியின் கருத்தை நம்மால் ஏற்க முடியவில்லை.

படித்து முடித்தவுடன் நமக்குத் தோன்றுவதை கதையிலேயே வரும் ஒரு பாத்திரம் நமக்குச் சொல்கிறது. – அவ்வளவுதான்.

‘அதுதான் தோன்றிவிட்டதே ஏன் சொல்லி வைக்க வேண்டும்?

கதையில் வரும் பாத்திரத்தையே சொல்ல வைப்பதற்கும் அவசியம் இருக்கிறது.
‘பொன்னகரம்” கதையை முடிக்கும் போது புதுமைப்பித்தன் இப்படித்தான் இறுதி வரிகளை எரிச்சலோடு வீசுவார்.

“………கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே!இதைதான் ஐயா கற்பு!” இதுபற்றி இலக்கிய விமர்சகர் என்.ஆர்.தாசன் கூறுவது போல.

“இதை, ஆசிரியரின் தேவையற்ற தலையீடாக இரு மாதிரியான பிரச்சாரக் குரலாக எடுத்துக் கொள்ளக்கூடாது…….அறிவுபூர்வமாக மெல்ல மெல்ல வளர்ச்சியுற்ற ஒரு கருத்து ஆவேச நிலையடைந்து பூர்த்தி பெறுவதாகவே நாம் கருத வேண்டும்” – இதுதான் ‘கொலை’ பற்றிய நமது கருத்தும்.

அரச மரத்தின் காலத்திலேயே அந்த விவகாரம்

“பார்க்கப் போனால் நான் மரந்தான். ஆனால் என் மனதிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது……” என்று தொடங்கும் தமிழின் முதல் சிறுகதை குளத்தங்கரை அரசமரமும் கூட ‘இப்படி முடிந்தது என் ருக்மணியின் கதை’ என்று கதையைச் சொல்லிமுடித்தபின் ஒரு நீதியைப் போதிக்கிறது.

‘ஐயர் தானாகச் சொல்லாமல் மரத்தைச் சொல்ல வைத்துவிட்டதால் அதன் பேதமையை உத்தேசித்து மன்னித்து விடலாம்’ என்று சமாதானப்படுத்துகிறார் சி.சு.செல்லப்பா.

இதே சமாதானத்தை ‘கொலை’ கதையின் நாயகி ராசாத்தி செத்துப் போனதற்கும் நாம் கூறுவதில் தவறில்லை.

அவள் சாதாரண பிரசவ வலியால் செத்துவிடவில்லை.

முதலில்இ நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் ஒரு கிராமத்து ஏழைப் பெண் ஆஸ்பத்திரிக்கு – பிரசவ அவசரத்திலும் – வந்து சேர வழி செய்யாத இந்த சமூக அமைப்பு. மனிதாபிமானத்தோடு கிராமங்களைப் பார்க்காத அரசாங்கம். ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தில் இயங்கியும் அவசரத்துக்கு வர மறுக்கும் ஆஸ்பத்திரிகள். அந்தக் கிராமத்திலிருந்து கொண்டும் அவஸ்தைப் பட்டுக்கொண்டும் -‘அதன் காரணம் இதுவெறும் அறிவுமிலார். கடைசியாக அந்தக் கையாலாகாத கணவன்

இவ்வளவு பேரும்தான் இந்தக் கொலையைச் செய்தவர்கள்! இதைக் ‘கொலைதான்’ என்று சத்திய ஆவேசம் பெற்ற பாத்திரம் சொல்வதும் சாத்தியம்தானே!

கோ.கேசவன் வேறொரிடத்தில் கூறுவது போல சும்மா கதை சொல்லிவிட்டுப் போகாமல் ‘வாசகர் மட்டத்துக்குச் சென்று வாசகனை ஆசிரியர் மட்டத்துக்கு இழுக்கக்கூடிய நெகிழ்ச்சி வடிவம்’ தேவைப்படும்போதுஇ அதைக்கையாள்வதில் மேலாண்மை வெற்றியே பெற்றிருக்கிறார்.

இதுகூடக் கலையம்சம் குறைந்த பிரச்சாரம்தான் என்றால்
ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன’
(பொருள் அதிகாரம் அகத்திணை இயல்:28) என்று
-தொல்காப்பியம் நால்வருணப் பிரச்சாரமாக

‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’(புறம்:186)என்று
-சங்க இலக்கியம் அரசர்களுக்கு பிரச்சாரமாக

‘திருவுடை மன்னனைக் காணின் திருமாலைக் கண்டேன்” (திருவாய் 4:8) என்று
திவ்வியப்பிரபந்தங்கள் திருமாலுக்குப் பிரச்சாரமாக

மன்றனார் அடியின் அவர் வான்புகழ் (பெரியபுராணம் : 4286)
திருமுறைகள் சிவனுக்குப் பிரச்சாரமாக

பாரதியின் பாடல்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரமாக
தமிழ் உலகம் ஏற்றுக்கொண்டது போல
இதையும் ஏற்பதில் தடையென்ன?
எல்லா இலக்கியமும் ஏதாவது ஒரு கருத்துப் பிரச்சாரம் தானே?

பொதுவாக சில வார்த்தைகள்
ஒரு சிறுகதை அல்லது இலக்கியப் படைப்பில் பாத்திரப்படைப்பு சொல்நேர்த்தி உருவ உத்தி அமைப்பு கரு இவற்றைத் தனித்தனியே எடுத்தாய்வு செய்வது யானையைப் பார்த்த குருடர்களின் ஆய்வுச் செழுமையாகவே இருக்க முடியும். எனவே மேலாண்மையின் கதைகளில் நாம் தனித்தனி ஆய்வுமுறைக்குள் தலை கொடுத்துப் பிய்த்தெடுக்கவில்லை.

இந்த இடத்தில் —
“உருவாக்கம் என்பது ஒரு படைப்பின் கூட்டடைப்பு அதன் பகுதிகளிடையே உள்ள தொடர்பு ஒருங்கமைப்பு படைப்பின் முழுமைக்கு அதன் பல்வேறு கூறுகள் உட்பட்டு நிற்பது” எனும் மார்க்சிய அழகியல் கோட்பாடுதான் சரியெனப்படுகிறது.

இக்கருத்தையே சிறுகதை ஆசிரியர் பிரபஞ்சனும் விமர்சகர் கா.சிவத்தம்பியும் கொண்டுள்ளனர் என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

இலக்கியத்தின் முழுமை – அதன் உடனடி விளைவு – தாக்கம் என்று பார்த்தாலும் மேலாண்மை உயிரில் துடிப்பேற்றும் எழுத்தாளராகவே வெற்றியடைகிறார்.

தொடவேண்டிய விஷயங்களைத் தேர்ந்தெடுத்துத் தொடுவதிலும் எல்லோரும் சாதாரணமாகப் பார்ப்பதையே வேறொரு கோணத்திலிருந்து ஊடுருவிப் பார்க்கிறார் என்பதிலும் துருத்தாத உத்தி – உருவ – வார்த்தைகளில் சொல்லிப்போகிறார் என்பதிலுமே ஒரு கதாசிரியரின் வெற்றி அமைகிறது. எனில் மேலாண்மை ‘தனி மெஜாரிட்டி’ பெற்று விடுகிறார்.

அந்த வகையில்
வ.வே.சு.வின் – அரசியல் சமூக விமரிசனப்பார்வையில் ஒரு ‘அரசமரம்’போல
புதுமைப்பி;த்தனின் சமூக அங்கதப் பார்வையில் ஒரு ‘சிற்பியின் நரகம்’போல கு.ப.ரா.வின் பெண்களின் உள்மனப் பார்வையில் ஒரு ‘ஆற்றாமை’ போல ஜெயகாந்தனின் – சமூக முரண்பாட்டுப் பார்வையில் – ஒரு டிரெடில் போல கி.ராஜநாராயணனின் – சராசரி பாமரனின் பார்வையில் – ஒரு ‘வேட்டி’போல
அம்பையின் – பெண்களுக்கான பார்வையில் – அம்மா செய்த கொலை’போல
பிரபஞ்சனின் – உணர்ச்சி வசப்படாத பார்வையில் ஒரு ‘மனுஷி’போல
கந்தர்வனின் – சமூக விமர்சனப் பார்வையில் – ஒரு ‘சீவன்’போல
மேலாண்மையின் – பாவப்பட்ட மக்களுக்கான பார்வையில் ஒரு ‘கொலை’என்று சொல்வது சரியாகவே பொருந்தும்.

என்றாலும் 1977 இல் வெளிவந்த ‘கொலை’க்குப் பிறகு இவரே இவர் கதைகளை நகல் செய்திருக்கிறார் என்பதைப் பற்றி, அகல ஆசையில் ஆழத்துக்கான கவனமின்றி எழுதித் தள்ளுவதைக் குறைத்துச் செதுக்கினால் தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாதவராக மேலாண்மை திகழ்வார் என்பது உறுதி.
—————————————————————————————————-
1995இல் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கிற்காக எழுதியது. அந்த நூல் வெளிவந்ததாகத் தெரியவில்லை. பொங்கல் மலரில் (15-01-2012) இக்கட்டுரையை வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி)

நன்றி: http://valarumkavithai.blogspot.com/2012/01/blog-post_14.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *