சிறுகதை – ஓர் அறிமுகம் – முனைவர் இரா.பிரேமா

 

சிறுகதை – ஓர் அறிமுகம் – முனைவர் இரா.பிரேமா

இப்பாடப் பகுதி, சிறுகதை என்றால் என்ன? என்பதை விளக்கி, சிறுகதை பற்றிய மேலை நாட்டு, நம்நாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. நாவலுக்கும், சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைக்கிறது. சிறுகதையின் வரையறைகளையும், உத்திகளையும், நடைப் போக்கையும், சிறுகதை வகைகளையும் விளக்கியுரைக்கிறது. சிறுகதை பற்றிய ஒரு முழுமையான பார்வையை, புரிதலை ஏற்படுத்தித் தர முற்படுகிறது.

முன்னுரை

மக்களின் கதைகேட்கும் ஆர்வம் தொல்பழங் காலந்தொட்டே வேரூன்றியுள்ளது. அதன் பல்வேறு வெளிப்பாடுகள்தாம் தொடக்கம் முதல் இன்றுவரை இதிகாசங்கள், காப்பியங்கள், புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கூத்துகள், காலட்சேபங்கள் எனப் பல்வேறு வடிவங்களைப் பெற்றுத் திகழ்கின்றன. பழங்காலத்தில் கதைகள் வாய்மொழி மூலமாகவே பரப்பப்பட்டுள்ளன. ஒருவர் கூறுவதைப் பலர் கூடியிருந்து கேட்டு மகிழ்ந்துள்ளனர். பின்பு கதை இலக்கியங்கள் கூத்து வடிவிலும், நாடக வடிவிலும் நடித்துக் காட்டப்பட்டன. தொழிற் புரட்சியாலும், அச்சு இயந்திரங்களின் வருகையாலும் கதை இலக்கியம் நாவல், சிறுகதை என்ற புதிய இலக்கிய வகைகளாக உருப்பெற்றது. இருபதாம் நூற்றாண்டு, கதை இலக்கியம் வளர்ச்சி பெற்ற காலமாகும். இதழ்களின் வருகையால், கதை இலக்கியம் பேருருவம் எடுத்தது. சிறுகதைகளும் புதினங்களும் இதழ் வெளியீட்டில் முக்கிய இடத்தைப் பெற்றன.

இன்றைய நிலையில் இலக்கிய உலகில் சிறுகதைகளுக்கென்றே ஒரு தனித்த இடம் உள்ளது. கல்வி அறிவின் வளர்ச்சியும், இதழ்களின் வளர்ச்சியும் மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை வளர்த்துள்ளன. வேகமாக இயங்கும் நவீன உலகிற்கு ஏற்ற வடிவமாகச் சிறுகதைகள் அமைந்துள்ளன. இரயிலிலோ, பேருந்திலோ பயணம் செய்யும் போது, அல்லது வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது கிடைக்கும் சிறிய இடைவேளைகளில் கூடப் படித்து முடித்துவிடக் கூடிய வகையில் சிறுகதைகள் சிறியவையாகவும் விறுவிறுப்பு உடையவையாகவும் அமைந்துள்ளன.

1.1 சிறுகதை இலக்கணம்

சிறுகதை இப்படி அமைய வேண்டும் என்று திட்டவட்டமாக வரையறுக்க இயலாது. ஏனெனில், அந்த வரையறையை மீறி ஏதாவது ஒரு சிறுகதை பிறந்து விடலாம். ஆனாலும் கூட கீழ்க்காணும் விளக்கங்கள் சிறுகதை என்றால் என்ன என்பதை ஓரளவு புரிய வைக்க உதவும்.

1.1.1 இலக்கணம்

சிறுகதை அளவில் சிறிதாக இருக்க வேண்டும். அது, ஒருமுறை உட்கார்ந்து படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில், நாவலின் சுருக்கம் சிறுகதை ஆகிவிடாது; நாவலின் ஓர் அத்தியாயமாகவோ அல்லது நீண்ட கதையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிளைக் கதையாகவோ இருக்க முடியாது. சிறுகதை என்ற வடிவம் தன்னளவில் முழுமை பெற்ற ஒரு தனிப் பிண்டம். எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ, அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப் பின்னேயுள்ள கதாசிரியரின் கலையாற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் சொல்ல விரும்பும் செய்தி இவ்வளவும் இலக்கண வரம்புகளை விடவும் மிகமிக முக்கியமானவை. சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எந்த இலக்கணத்தையும் மனத்தில் நினைத்துக் கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் எழுத்துகள் தாமாகவே சிறுகதை வடிவம் பெற்றுவிடுகின்றன.

1.1.2 மேலைநாட்டு அறிஞர்களின் விளக்கம்

மேலை மற்றும் கீழை நாடுகளில் இலக்கியத் தரமுடைய சிறுகதைகள் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோற்றம் பெற்றன. அமெரிக்காவில் வாஷிங்டன் இர்விங், எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதார்ன் போன்றவர்களும், ருஷ்யாவில் துர்கனேவ், செகாவ் போன்றவர்களும், பிரான்சில் மாப்பசானும் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர். இவர்களும் இவர்களது படைப்புகளை ஆராய்ந்த திறனாய்வாளர்களும் கீழ்க்கண்ட வரையறைகளைச் சிறுகதைக்குத் தருகின்றனர்.

சிறுகதை என்பது சிறிய கதை என்ற பொருளில் இல்லாமல், ஒரு புதிய இலக்கிய வடிவத்தின் பெயரைக் குறிக்கும் தனிச்சொல் என்ற விளக்கத்தை பிராண்டர் மாத்யூ கொடுத்துள்ளார்.

சுருக்கமும் செறிவும் சிறுகதையின் முக்கியப் பண்புகள் என்று ஜேம்ஸ் கூப்பர் லாரன்ஸ் கருத்துரைத்துள்ளார்.

சிறுகதை அரைமணியிலிருந்து ஒருமணி அல்லது இரண்டு மணி அவகாசத்திற்குள், ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் ; தன்னளவில் முழுமை பெற்றிருக்க வேண்டும். அது தரும் விளைவு ஒரு தனி மெய்ப்பாடாக இருக்க வேண்டும். கதையைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுவதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று எட்கர் ஆலன்போ சிறுகதையைப் பற்றிய தமது மதிப்பீட்டைத் தந்துள்ளார்.

சிறுகதை என்பது எடுத்த எடுப்பிலேயே படிப்போரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும் வரை வாசகரின் முழுக்கவனத்தையும் ஒருமுகப்படுத்தி, இடையீடோ, சோர்வோ நேரும் முன்பாகவே சிறுகதை முற்றுப் பெறுதல் வேண்டும் என்று ஹெச்.ஜி. வெல்ஸ் கூறியுள்ளார்.

சிறுகதை குதிரைப் பந்தயம்போல, தொடக்கமும் முடிவும் சுவை மிக்கதாக இருக்க வேண்டுமென்று எல்லரி செட்ஜ்விக் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

சிறுகதைகள் எளிய கருப்பொருளைக் கருவாகக் கொள்ளுதலே சிறப்புடையது என்கிறார் சிறுகதை உலகின் தந்தை எனப் புகழப்படும் செகாவ்.

1901இல், பிராண்டர் மேத்யூ என்ற திறனாய்வாளர், சிறுகதை என்பது ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கைகளைப் பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப்பற்றியோ, அல்லது ஒரு தனி உணர்ச்சி பற்றியோ எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும் என்று விளக்கியுள்ளார்.

ஹெச்.இ.பேட்ஸ் என்பவர், எழுதும் ஆசிரியரின் எண்ணத் துணிவு சிறுகதையில் எவ்வாறு வேண்டுமானாலும் வெளிப்படலாம் என்கிறார்.

1.1.3 இந்திய அறிஞர்களின் விளக்கம்

1917ஆம் ஆண்டிலேயே சிறுகதை பற்றி விமர்சித்த ரா. வாசுதேவன் என்பவர், சிறுகதை என்பது சிறு கால அளவுக்குள் படித்து முடிக்கப்பட வேண்டியது என்றும், அதன் உருவம் சிறியதாக அமைந்திருக்கும் என்றும் கூறுகிறார்.

சிறுகதை என்பது வாழ்க்கையின் சாளரம். சிறுகதை ஒரு தொடக்கம், மையச் சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. சிறுகதை, வாழ்க்கையின் ஒரு பகுதியை, கவலையை மறந்து விட்டுக் கவனிப்பதாக உள்ளது. சிறுகதையின் வடிவம் கதை எழுதுபவரின் மனோதர்மத்தைப் பொறுத்தது என்று புதுமைப்பித்தன் சிறுகதையின் போக்கை விளக்கியுள்ளார்.

மனித உணர்ச்சிகளில் ஏதாவது ஒன்றைத் தொட்டு உலுக்குவதுதான் சிறுகதை என்று விந்தன் அதன் இலக்கணம் கூறுகிறார்.

பழங்காலத்தில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் பெற்றிருந்த இடத்தைத் தற்காலத்தில் சிறுகதை என்ற இலக்கிய வகை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார் மு.வ.

சிறுகதை என்பது ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம்; உள்ளப் போராட்டமாக இருக்கலாம். அது ஏதாவது ஒன்றாக இருக்கும் வகையில் சிறுகதை பிறக்கும். இரண்டாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தால் சிறுகதை பிறக்காது என்கிறார் க.நா.சுப்ரமணியன்.

சிறுகதைக்குள் அடங்கும் காலத்துக்கு எல்லை இல்லை. ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரையில் சிறுகதையின் காலமாய் இருக்க முடியும் அல்லது ஒருவர் வாழ்க்கையில், ஒரே நாளில், ஒரு மணியில், சில வினாடிகளில் கூடக் கதை முடிந்துவிடலாம் என்று மணிக்கொடி எழுத்தாளரான பி.எம். கண்ணன் சிறுகதையை விளக்கியுள்ளார்.

1.2 புதினமும் சிறுகதையும்

இன்று மக்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படும் இலக்கிய வகைகள் புதினமும் சிறுகதையும்தாம். இதழ்கள், இவ்விரண்டு வகைகளை மட்டும் நம்பி வெளிவந்த காலக் கட்டமும் உண்டு. இவ்விரண்டு வகைகளும் சில கருத்தோட்டங்களில் ஒத்தும், பல இடங்களில் வேறுபட்டும் காணப்படுகின்றன. எனவே இரண்டும் வேறு வேறு கலை வடிவங்கள் என்பது தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

1.2.1 ஒற்றுமைகள்

நாவல் சிறுகதை என்ற இரண்டு வடிவங்களுமே மேலை நாட்டிலிருந்து தமிழுக்குக் கிடைத்த இலக்கியக் கொடைகளாகும்.

நாவல் சிறுகதை இரண்டுமே உரைநடை வடிவத்தைக் கொண்டவை.

இரண்டு வகைகளும் கதையை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ளன. அதனால் இரண்டையும் ஒன்றாக இணைத்துப் புனைகதை இலக்கியங்கள் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாவல், சிறுகதை என்ற இரண்டும் ஏறத்தாழ ஒரே காலக் கட்டத்தில் தோன்றி ஒரு சேர வளர்ந்தவையாகும். தமிழ் மொழியைப் பொறுத்தவரை நாவல் 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும் சிறுகதை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பிறந்தவைகளாகும்.

1.2.2 வேற்றுமைகள்

சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாட்டைச் சில உவமைகளாலும் சில விளக்கங்களாலும் திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

தனிமரம் போன்றது சிறுகதை. பலவகை மரங்களும் செழித்தோங்கிய ஒரு தோப்புப் போன்றது நாவல். ஒன்றிரண்டு வண்ணங்களால் வரைந்த ஓவியம் போன்றது சிறுகதை. பல வகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த மாபெரும் ஓவியம் போன்றது நாவல். ஒரு பறவை மட்டும் தனித்துப் பறப்பது போன்றது சிறுகதை. பல பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து பறப்பது போன்றது நாவல். சிறுகதையை அழகிய நறுமணம் மிக்க ஒற்றைப் பூவாகக் கொள்ளலாம். நாவலை நாரால் கோக்கப்பட்ட பூமாலைக்கு ஒப்பிடலாம்.

சிறுகதை ஒரு பண்பையோ, ஒரு செயலையோ, வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியையோ மையமாகக் கொண்டு அமையும். நாவல் பல பண்புகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியது.

வாழ்க்கையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் காட்டுவது புதினம்; சிறுகதை வாழ்க்கையின் ஒரே ஒரு பரிமாணத்தை மட்டுமே காட்டி நிற்கும்.

நாவலில் கதை மாந்தர்களின் பண்புகள் படிப்படியாக வளர்ந்து செல்வதாகக் காட்டமுடியும். சிறுகதையில் அப்படிக் கூற இயலாது.

மொத்தத்தில் சிறுகதையின் அமைப்பும் போக்கும், நாவலின் அமைப்பும் போக்கும் வேறானவை ஆகும்.

1.3 சிறுகதை வரையறை

கதை ஆசிரியனின் சிந்தனையில் பிறந்து, வாசகர்களின் சிந்தனையில் நிறைவு பெறுவது சிறுகதையாகும். சிறுகதைக்கு, அது பேசக்கூடிய பொருளும் கால எல்லையும், ஒருமைப்பாடும் மிக முக்கியம். சிறுகதையின் பொருள் காலத்திற்குக் காலம், எழுத்தாளருக்கு எழுத்தாளர் மாறுபடலாம். ஆனாலும் அவை சமுதாயத்தை நுவல் பொருளாகக் கொண்டவை என்று பொதுமைப் படுத்திவிட முடியும்.

1.3.1 சிறுகதைப் பொருள்

சிறுகதை ஆசிரியர்கள் தாம் கண்டு கேட்டது மட்டுமன்றிக் காணாததையும் கற்பனையில் கண்டு, தங்கத்துக்குச் செம்பு சேர்ப்பது போல் சேர்த்து மெருகூட்டுகிறார்கள். பெரும்பாலும் இலக்கியங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே. சிறுகதைகளும் இதற்கு விதி விலக்கல்ல. ஆசிரியர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்து அவற்றைக் கதைப்படுத்துகிறார். சிறுகதைகளில் பேசப்படும் கருப்பொருளை,

தனிமனிதச் சிக்கல்
குடும்பச் சிக்கல்
சமூகச் சிக்கல்
பொருளாதாரச் சிக்கல்
நாட்டு விடுதலை

என்று வகைப்படுத்தலாம். இவற்றைச் சில தமிழ்ச் சிறுகதைகளின் துணைகொண்டு விளக்கமாகக் காணலாம்.

தனிமனிதச் சிக்கல்

தனிமனிதச் சிக்கலை அடிப்படையாகக் கொண்ட கதைகளில், தனிமனிதனின் அக மனப் போராட்டம் முதன்மைப் படுத்தப்படுகின்றது. அகிலனின் பூச்சாண்டி, கு.ப.ரா வின் விடியுமா?, கா.நா.சு வின் மனோதத்துவம், லட்சுமியின் பரீட்சைக் காட்சிகள், புதுமைப் பித்தனின் மனநிழல், நீல பத்மநாபனின் திரிபுவன புரம் போன்றவை இத்தன்மையன.

நாரண துரைக்கண்ணனின் சந்தேகம் என்ற கதையில், மனைவி அஞ்சுகத்தின் தூய அன்புள்ளத்தைப் புரிந்து கொள்ளாமல், கணவன் குருநாதப் பிள்ளை அர்த்தமற்ற சந்தேகம் கொண்டு மன உளைச்சலில் அவதிப்படுகிறார். இது தனிமனிதச் சிக்கலைக் காட்டும் அருமையான கதையாகும்.

குடும்பச் சிக்கல்

குடும்ப வாழ்க்கையில், கணவன் மனைவிக்கு இடையேயும், சகோதர சகோதரிக்கிடையேயும், மாமியார் மருமகளுக்கு இடையேயும், நாத்தனார் அண்ணிக்கு இடையேயும் ஏற்படும் பிரச்சினைகளைப் பேசுகின்றன பல கதைகள். இத்தகைய குடும்பக் கதைகளைத் திறம்பட எழுதுவதில் பெண் எழுத்தாளர்கள் முன்னணி வகிக்கின்றனர். கல்யாணியின் இளமை, ஷ்யாமளாவின் பரிவும் பிரிவும், ஆர். சூடாமணியின் தொடர்ச்சி, எஸ்.ரெங்கநாயகியின் சூரிய அடுப்பு, அகிலனின் நினைப்பு, ஜெயகாந்தனின் பிணக்கு, ந. பிச்சமூர்த்தியின் ஒருநாள், கு.ப.ரா.வின் புரியும் கதை ஆகியவை குடும்பச் சிக்கல்களைப் பேசும் கதைகளாகும்.

சமூகச் சிக்கல்

குழந்தை மணம், விதவைக் கொடுமை, பொருந்தா மணம், வரதட்சணைக் கொடுமை, ஜாதிக் கொடுமை, தீண்டாமை, மூட நம்பிக்கைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட பல சமூகக் கதைகள் தோற்றம் பெற்றன. புதுமைப்பித்தன் ஆண்மை என்ற கதையில் குழந்தை மணத்தின் கொடுமையைக் கேலியாகச் சித்திரித்துள்ளார்.
“ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணம் ஆனது நினைவில் இல்லை. ஏனென்றால் அது பெப்பர்மிண்ட் கலியாணம். ஸ்ரீனிவாசனின் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப்பொம்மையை விட, தங்கள் நாலுவயதுக் குழந்தை சீமாச்சு மேல் என்று பட்டது. பிறகு என்ன? பெண் கிடைக்காமலா போய்விடும்? ஆத்தூர்ப் பண்ணை ஐயர் மகள் ருக்மணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக தடபுடல். பெற்றோர் மடியிலிருந்தபடியே ஸ்ரீமான் ஸ்ரீனிவாசனுக்கும் ருக்மணி அம்மாளுக்கும் திருமணம் நடந்தது.”

என்று கதைக் காட்சி விரியும்.

இளம் விதவைகளுக்கு நிகழும் கொடுமைகளைப் பற்றிப் புதுமைப்பித்தனின் வாடாமல்லிகை, வழி, கு.ப.ரா.வின் உயிரின் அழைப்பு, தி.ஜ.ர.வின் ராஜத்தின் கூந்தல், அகிலனின் சாந்தி, பி.எஸ். ராமையாவின் மலரும் மணமும் ஆகிய கதைகள் பேசுகின்றன.

சாவு என்ற கதையில் விதவை ஜக்கம்மாவிற்குச் செய்யும் மூடச் சடங்குகளைக் கி.ராஜநாராயணன்கீழ்வருமாறு விவரிக்கின்றார்.
‘பதினோராவது நாள் சர்வ அலங்காரங்களும் பண்ணி ஜக்கம்மாவை வீட்டினுள்ளிருந்து முற்றத்துக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். தரையில் வட்டமான பெரிய சொளகு. அதன் மேல் குவிக்கப்பட்டுள்ள கம்மம்புல் அம்பாரம். அதன்மேல் எருமைத் தோலினால் முறுக்கப்பட்ட உழவு வடங்கள் இரண்டு வைத்திருக்கிறது. அதன் மேல் ஜக்கம்மாவை ஏற்றி நிற்க வைக்கிறார்கள். கைகள் நிறையப் புது வளையல்கள். மஞ்சள் பூசிக் கழுவிய முகத்தின் நெற்றியில் துலாம்பரமாகத் தெரியும் சிவப்புக் குங்குமம். கண்களிலிருந்து மாலை மாலையாய்க் கண்ணீர் வழிந்து கொண்டே இருக்கிறது. அவளை எவ்வளவு அழகுபடுத்த முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார்கள். இது அவளுடைய சுமங்கலியின் கடைசிக் கோலம். விடை பெற்றுப் போகச் சுமங்கலியின் அதிதேவதையே வந்து நிற்கிறாள்”

இத்தகைய வர்ணனைகள் மூலம், விதவைகளுக்கு மறுவாழ்வு தேவை என்பதை மறைமுகமாக வற்புறுத்துகின்றனர் கதை ஆசிரியர்கள்.

சி.சு.செல்லப்பாவின் மஞ்சள் காணி, தேவனின் சுந்தரம்மாவின் ஆவி போன்ற கதைகள் வரதட்சணைப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளாகும்.

வயது கடந்த முதியவர்கள் இளம்பெண்களை மணந்து கொள்ளும் வழக்கம் 20ஆம் நூற்றாண்டில் ஐம்பதுகள் வரை சர்வ சாதாரணமாக இருந்து வந்துள்ளது. இப்பிரச்சினையை அடிப்படையாக வைத்துக் கல்கி சர்மாவின் புனர்விவாகம், ஜெயகாந்தன் பேதைப் பருவம், கு.ப.ரா எவன் பிறக்கின்றானோ, புதுமைப்பித்தன் கல்யாணி, இராதா மணாளன் மண்ணாய்ப்போகவே என்ற கதைகளை எழுதியுள்ளனர்.
“மீசை நரைத்த கிழவன் ஒருவனுடைய கரத்தை மணக்கோலத்துடன் மனைவியாக நின்று கைப்பற்றி வழிநடந்து கொண்டிருந்தாள் அந்தப் பேதைச் சிறுமி. அவள் புதுப்புடவை கட்டியிருக்கிறாள்…….. இல்லை; அந்தச் சிறுமியைப் புடவையில் சுருட்டி வைத்திருக்கிறார்கள்”.

என்று, பொருந்தா மணத்தின் கொடுமையை ஜெயகாந்தன் பேதைப் பருவம் என்ற கதையில் உணர்ச்சியோடு எடுத்துரைத்துள்ளார்.

மூடநம்பிக்கைகள், அறியாமை இவற்றினால் ஏற்படும் சீர்கேடுகளை ரா.கி. ரங்கராஜனின் கன்னி, கு.அழகிரிசாமியின் அக்கினிக் கவசம், ந. பிச்சமூர்த்தியின் வேப்பமரம், கோ.வி. மணிசேகரனின் ரேகை, ஜெயகாந்தனின் அபாயம், அகிலனின் சரசியின் ஜாதகம், அண்ணாதுரையின் பலாபலன் ஆகிய கதைகள் பேசுகின்றன.

ஜாதிக் கொடுமையைப் பற்றிச் சிற்பியின் கோவில் பூனை, புதுமைப்பித்தனின் புதிய நந்தன், அகிலனின் மயானத்து நிலவில், ராஜாஜியின் அறியாக் குழந்தை ஆகிய கதைகள் பேசுகின்றன.

பொருளாதாரச் சிக்கல்

இன்றைய சமுதாய வாழ்வில் அன்றாடப் பிரச்சினைகளாக உள்ள பொருளாதாரப் போராட்டத்தையும், வறுமையையும், பற்றாக்குறையையும் அதனால் மக்கள் படும் அவதியையும் பல கதைகள் பேசுகின்றன. அகிலனின் பசி, கோயில்விளக்கு, ஏழைப் பிள்ளையார், வ.சுப்ரமணியத்தின் எச்சில், ஆர். சூடாமணியின் மறுபுறம், ஜெயகாந்தனின் ஒருபிடிசோறு, புதுமைப் பித்தனின் தனி ஒருவனுக்கு, எம்.ஏ. அப்பாஸின் கஞ்சி முதலிய கதைகள் வறுமையின் கொடுமையைப் படம் பிடித்துள்ளன. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கதைப்படுத்துவதில் விந்தன் திறமையானவர். அவருக்குப் பின் ஜெயகாந்தன் பொருளாதாரச் சிக்கலை அதிகம் கதைப்படுத்தியுள்ளார்.

இந்திய நாட்டு விடுதலை

நாற்பது, ஐம்பதுகளில் நாட்டு விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக வைத்துப் பலர் கதை எழுதியுள்ளனர். கள்ளுக் கடை மறியல், அந்நியத் துணி பகிஷ்காரம், உப்புச் சத்தியாகிரகம், ‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற போராட்டங்களை அடிப்படையாக வைத்து வை.மு. கோதை நாயகி அம்மாள், அகிலன், நா.பார்த்த சாரதி, ராஜம் கிருஷ்ணன் போன்றவர்கள் சிறு கதைகள் எழுதியுள்ளனர்.

நவீன காலத்தில் அறிவியல் கருத்துகளையும், பாலியல் வன்முறை, பெண்களைத் துன்புறுத்தல் (Eve Teasing), கருக்கொலை, பெண்சிசுக் கொலை, தண்ணீர்ப் பிரச்சினை என்ற தற்போதைய பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு சிறு கதைகள் எழுதப்படுகின்றன.

1.3.2 கால எல்லை

“சிறுகதைக்குக் கால எல்லை இல்லை. ஒருவனுடைய பிறப்பு முதல் இறப்பு வரையில் சிறுகதையின் காலமாக இருக்க முடியும்; அல்லது ஒருவன் வாழ்க்கையில் ஒருநாளில், ஒரு மணியில், ஒரு சில வினாடிகளில் நடக்கும் மன ஓட்டத்தில் கூடக் கதை எழுதப்படலாம்” என்கிறார் பி.எம். கண்ணன். கதை நடக்கும் காலத்தையும் இடத்தையும் தொடக்கத்திலே கூற வேண்டுமென்ற தேவையில்லை. கதையைக் கூறிச் செல்லும் போது, இடையிடையே காலத்தையும் இடத்தையும் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கலாம். சிறுகதையில் கால வர்ணனை ஓரிரு தொடர்களில் குறிப்பாக அமைய வேண்டுமே தவிர விரிவாக இருத்தல் கூடாது. புராணக் காலம், சரித்திரக் காலம் இவற்றைக் கூடச் சிறுகதைக்குள் கொண்டுவர முடியும்.

1.3.3 ஒருமைப்பாடு

சிறுகதைகள், முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப் பெறுதல் வேண்டும். கதையின் தொடக்கத்தில் எந்த உணர்வு காட்டப் படுகிறதோ அதே உணர்வு இடையிலும் முடிவிலும் வளர்ந்து முற்றுப் பெற வேண்டும். இதை உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு (Unity of Impression) என்று குறிப்பிடுவார்கள் திறனாய்வாளர்கள். அடுத்ததாக, சிறுகதையை ஆசிரியர் படைத்ததன் நோக்கம் ஒருமுகப்பட்டதாக இருத்தல் வேண்டும். வாசகர்களின் கவனத்தையும் ஆர்வத்தையும் சிறிதும் சிதறடிக்காமல், குறிப்பிட்ட இலக்கை நோக்கிக் கதை சென்று முடிதல் வேண்டும்.

1.4 சிறுகதை அமைப்பு

சிறுகதையின் அமைப்பு திட்டமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். “திறமை வாய்ந்த இலக்கிய மேதை ஒருவன் சிறுகதையை எழுதும்போது, கதையின் நிகழ்ச்சிகளுக்காக அவன் கருத்துகளைப் புனைவதில்லை. குறித்த ஒரு முடிவுக்காக ஆழ்ந்த கவனத்துடன் நிகழ்ச்சிகளைக் கற்பனையில் கண்டு பிடிக்கிறான்” என்கிறார் எட்கர் ஆலன்போ.

சிறுகதைகள் தொடக்கம், உச்சக் கட்டம், முடிவு என்று ஒரே அமைப்பைப் பெற்றிருந்தாலும், தங்களுக்குள் நுட்பமான வேறுபாடு கொண்டிருக்கும் என்கிறார் பி.எஸ். ராமையா. சிறுகதை அமைப்பில் தலைப்பு, தொடக்கம், முடிவு என்பன இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளன.

1.4.1 சிறுகதையின் தலைப்பு

சிறுகதைக்கு நல்லதொரு பெயர் இன்றியமையாதது. பொருத்தமான பெயரும் அதன் கவர்ச்சியுமே வாசகர்களை ஈர்த்துப் படிக்கத் தூண்டுகின்றன. பெயரைத் தேடி வைப்பதில்தான் சிறுகதை ஆசிரியரின் தனித்திறமை அடங்கியிருக்கிறது. சிறுகதையின் சிறு தலைப்புகள் கதையின் பெரிய உட்கருத்தை உள்ளடக்கிய ஆலம் வித்துப் போன்று இருக்க வேண்டும். அடுத்தது காட்டும் சிறிய கண்ணாடி போலத் தலைப்புகள் அமைந்திருக்கலாம்.

திறனாய்வாளர்கள் சிறுகதையின் தலைப்பை நான்கு வகையாகப் பிரிப்பர். அவை,

1. கதையின் தொடக்கத்தை வைத்து அமையும் தலைப்பு
2. கூறும் பொருளை வைத்து அமையும் தலைப்பு
3. மையப் பாத்திரத்தின் பெயரை வைத்து அமையும் தலைப்பு
4. முடிவை வைத்து அமையும் தலைப்பு

என்பனவாகும்.

ஜெயகாந்தனின் போன வருசம் பொங்கலப்போ, கி. ராஜநாராயணனின் கதவு, கி.வா. ஜகந்நாதனின் மங்க் – கீ, சூடாமணியின் இரண்டாவது தந்தி, அகிலனின் ஏழைப்பிள்ளையார் போன்ற கதைகளில் தொடக்கமே தலைப்பாக அமைந்துள்ளது.

ஏதாவது சிக்கலை அடிப்படையாக வைத்துப் புனையப் பட்டிருக்கும் கதைகளுக்கு அவற்றின் பொருளை வைத்துப் பெயரமைவது உண்டு. விந்தனின் பசிப்பிரச்சினை, அகிலனின் படியரிசி, சுந்தர ராமசாமியின் பொறுக்கி வர்க்கம், ஜெகசிற்பியனின் இருட்டறையில் உள்ளதடா உலகம், ஜெயகாந்தனின் சாத்தான் வேதம் ஓதட்டும், தி.ஜ.ர.வின் மரத்தடிக் கடவுள் என்ற கதைகள் இவ்வகையைச் சேர்ந்தன. இத்தலைப்புகளைப் பார்த்த உடனேயே கதையை ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

சில கதைகள் மையப் பாத்திரத்தின் பெயரையோ பண்பையோ பெயராகக் கொண்டிருக்கும். புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசப் பிள்ளை, காஞ்சனை, வ.ரா. வின் மாட்டுத் தரகு மாணிக்கம், கு.ப.ரா.வின் நூருன்னிசா, லா.ச.ரா.வின் சாவித்திரி போன்றவை பாத்திரத்தின் பெயரையே தலைப்பாகக் கொண்டுள்ளன.

கதையின் முடிவை வைத்துச் சில சிறுகதைகளுக்குத் தலைப்புகள் இடப்பட்டுள்ளன. புதுமைப் பித்தனின் திண்ணைப் பேர்வழி, கு.ப.ரா.வின் படுத்த படுக்கையில், சோமுவின் மங்கலம் போன்ற கதைகள் முடிவை வைத்துப் பெயரிடப்பட்டுள்ளன.

1.4.2 சிறுகதையின் தொடக்கம்

சிறுகதையின் தொடக்கமே விறுவிறுப்பாக அமைந்து வாசகர்களைப் படிக்கத் தூண்டவேண்டும். ‘ஒரே ஒரு ஊரிலே’ என்ற பழைய முறையிலோ அல்லது பிறப்புத் தொடங்கி, வாழ்க்கை வரலாறு போன்றோ சொல்வதைக் காட்டிலும் ஒரு நிகழ்ச்சியின் இடையில் தொடங்குவதே சிறப்புடையதாகும் என்கிறார் இரா. தண்டாயுதம்.

‘சிறுகதையின் தொடக்கம் திடுதிப்பென காலப் (Gallop) எடுத்த மாதிரி நம் மனதில் தென்பட வேண்டும்’ என்று சி.சு.செல்லப்பா கூறுகிறார். ‘சிறுகதையின் தொடக்கம் ஆவலைத் தூண்டுவதாக அமைய வேண்டும்; அவர்கள் சலிப்படையும் முன் அவர்களை ஒரு நிகழ்ச்சியின் மத்தியில் இழுத்துச் சென்றுவிட வேண்டும். அதற்குக் கதையின் தொடக்கத்திலேயே வாசகரின் கவனம் கவரப்பட வேண்டும். இல்லாவிட்டால் கதை சுவையாக இல்லை என்று ஒதுக்கி விடுவர்’ என்று பி.கோதண்டராமன் கூறுகிறார். பொதுவாகக் கதைப் பொருளுக்கும் கதைக் கருவிற்கும் ஏற்ற தொடக்கம் அமையும்போது சிறுகதைகள் சிறக்கின்றன.

கு.ப.ரா.வின் விடியுமா? என்ற கதை, ‘தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து போனோம்’ என்று தொடங்குகிறது. தந்தியை யார் அனுப்பியது, அதன் பின் என்ன நிகழ்ந்தது என்பதை அறிய இத்தொடக்கம் ஆவலைத் தூண்டுகிறது. பரபரப்புடன் கதை முழுவதையும் ஒரே மூச்சில் படித்துவிட முடிகின்றது. இதுவே சிறந்த தொடக்கத்தின் இயல்பாகும்.

சிறுகதைகள் சுவையான உரையாடலுடன் தொடங்குதலும் உண்டு. ந. பிச்சமூர்த்தியின் வித்தியாசம் என்ற கதை இதற்குச் சரியான எடுத்துக் காட்டாகும்.

“மனுஷாளெல்லாம் குரங்கின் வம்சம் என்று மேல்நாட்டுப் புஸ்தகங்களில் படிக்கிறோமே அது பொய் என்று சில சமயம் தோணுது. நிஜமாக இருந்தால் நல்லதென்று சில சமயம் தோன்றுகிறது?”

“‘குரங்கு’ என்று என்னை இப்பொழுது வைவதற்காகவா?”

“அடி அசடு, அதெல்லாம் இல்லை. அந்த மாதிரி இருந்தால் சிவனே என்று ஒரு புளியமரத்தையோ ஆலமரத்தையோ புடித்துக் கொண்டுவிடலாம். வாடகையும் கிடையாது. மரங்களுக்கும் பஞ்சமில்லை.”

“மனுஷனாகி விட்ட பிறகு அந்தப் பேச்சேது? இனிமேல் ஆகவும் முடியாது.”

இப்படித் தொடக்கமே சுவையான உரையாடலாக அமைந்து மேன்மேலும் படிக்கத் தூண்டுகிறது கதை.

வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் என்ற கதை இயற்கை வர்ணனையுடன் தொடங்குகிறது.

“எங்கே பார்த்தாலும் இருள்; காரிருள், கருத்த மேகங்கள் வானத்தில் இடைவிடாது சென்று கொண்டிருக்கின்றன; சந்திரன் சற்று நேரத்திற்குத் தோன்றுகிறான். உடனே முன்னிலும் கனமான மேகங்களுக்கிடையில் மறைந்து விடுகிறான். காற்று சீறிக்கொண்டு செல்கிறது. தூரத்தில் புலியும் கரடியும் உறுமிக் கொண்டிருக்கின்றன. பக்கத்துக் கொல்லைகளில் நரிகள் ஊளையிட்ட வண்ணமாக இருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தின் மீதிலிருந்து ஒரு கோட்டான் பயங்கரமாகக் கத்துகிறது”. இத்தொடக்கம், கதையில் ஏதோ பயங்கர நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்பதை உணர்த்தி மேலே படிக்கத் தூண்டுகிறது.

கி.சந்திரசேகரின் சாருபாலா என்ற கதை, பாத்திர வர்ணனையுடன் தொடங்குகிறது. “நிலைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டிருந்தாள் சாருபாலா. அவளுக்கு 40 வயது முடிந்திருந்தும் கண்ணாடியில் தெரிந்த உருவம் இன்னும் 10 வருடங்கள் குறைவாகவே மதிப்பிடும்படி இருந்தது. தன் இடது கையை மடக்கி இடுப்பில் குத்திட்டும், வலது கரத்தைத் தொங்க வி்ட்டும் அவள் நின்ற மாதிரி, நாட்டியக் கலையில் அவளுக்குள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்தியது. ஓர் இழை கூட வெளுக்காத அவள் கேசம், தைலமிட்டுப் படிய வாரப்பட்டு, கோடிட்ட வகிட்டின் இருபுறமும் கறுத்து மின்னியது……….’ இப்படித் தொடங்கி, சாருபாலாவைப் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டிப் படிக்க வைக்கின்றது அக்கதை.

மேற்கூறியவாறு, சிறுகதைத் தொடக்கம், வாசகர்களைக் காந்தம் போலக் கவர்ந்து, அவர்கள் சிந்தனையைச் சிதறவிடாது மேலே படிக்கத் தூண்ட வேண்டும்.

1.4.3 சிறுகதையின் முடிவு

சிறுகதையின் முடிவு இன்பகரமாக இருக்க வேண்டும் எனச் சிறுகதை வளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது. “பல ஆசிரியர்களுக்குக் கதை முடிவில் சுபம் என்று போட்டால் தான் திருப்தி. ஆனால் அது ஒரு பலவீனம்” என்பது கி.ரா. வின் கருத்தாகும். வாழ்வு என்பது எப்போதும் மகி்ழ்ச்சியானது அல்ல; அழுகையும் உண்டு, ஆகவே, துன்பியல் முடிவுகளையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

பெயின் என்ற திறனாய்வாளர், ‘ஒரு கதை இன்பியல் முடிவினாலோ அல்லது துன்பியல் முடிவினாலோ அழகு பெற்று விடாது. இவற்றில் எது சரியான, பொருத்தமான முடிவாக உணரப்படுமோ அத்தகைய முடிவால்தான் அக்கதை வெற்றிபெற முடியும்’ என்கிறார்.

கதையின் உச்ச நிலையும் முடிவும் ஒன்றாகச் சில கதைகளில் அமைந்திருக்கும். அதாவது, கதையின் உள்ளீடு உச்ச நிலையிலேயே முழுத் தெளிவைப் பெற்று அத்துடன் கதை முடிந்துவிடும். ஒரே பாத்திரத்தைச் சுற்றி வரும் கதையில் உச்ச நிலையும் முடிவும் ஒன்றாகவே இருக்கும். பெரும்பாலும், கதை உச்சக் கட்டத்தை அடைந்த பிறகு ஓரிரு வாக்கியங்களில் சுருக்கமாக முடிந்து விட வேண்டும்.

1.5 சிறுகதை உத்திகள்

சிறுகதை சிறப்பாக அமைய நடைத் தெளிவு, சிறந்த பாத்திரப் படைப்பு, வடிவச் செம்மை போன்றவை முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். ஒரு படைப்பாளியை, மற்றொரு படைப்பாளியிடமிருந்து தனித்து இனங்காட்டுபவை அவர்கள் கையாளும் படைப்பாக்க உத்திகளே ஆகும். படைப்பாக்கத்தில் மொழிநடை, பாத்திரப் பண்பு இரண்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

1.5.1 நடை

நடை என்பது கதை ஆசிரியருக்கே உரிய தனித்த வெளிப்பாடாகும். “நடை ஓர் ஆசிரியரின் மேற்சட்டை போன்றது அன்று; உடம்பின் தோல் போன்றது” என்று கூறுவார் கார்லைல்.

“நடை அழகு என்பது ஆசிரியரின் தனிச்சொத்து என்று கருதினாலும், ஆசிரியர் அவர் வாழ்ந்த காலத்தின் செல்வாக்குக்கு உட்பட்டிருப்பதை மறுக்க இயலாது. காலத்தின் சிந்தனைகள், எண்ணங்கள் அவற்றை வெளியிடும் பேச்சு மொழி, எழுத்து மொழி இவ்வளவையும் ஜீரணித்துக் கொண்டுதான் படைப்பாளரும் தம்முடைய சொந்த நடையில் படைப்பை வெளியிடுகின்றார். எனவே நடைக்கு ஆசிரியர் மட்டும் காரணமாவதில்லை. அவர் வாழும் காலமும் காரணமாகிறது” என்கிறார் அகிலன்.

“நல்ல நடையானது படிப்பவரைக் கடைசி வரை சலிப்பூட்டாமல் தன்னோடு இழுத்துச் செல்ல வேண்டும்,” என்கிறார் பிளாபர் என்ற மேனாட்டுப் படைப்பாளி.

தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களில் வ.வே.சு. ஐயர், வ.ரா, புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா போன்றோர் தங்களுக்கென்று தனித்துவ நடையைக் கையாண்டுள்ளனர்.

வ.வே.சு. ஐயரின் தமிழ்நடை கம்பீரமானது. புதுமைப்பித்தன் நடை கிண்டல், எள்ளல் நிரம்பியது. புதுமை, விறுவிறுப்பு, எளிமை என்ற மூன்றின் கூட்டுறவு வ.ரா.வின் நடை. கேலி, கிண்டல், நகைச்சுவை, கற்பனை அனைத்தும் கலந்த நடை கல்கியின் நடை. லா.ச.ரா.வின் நடை இலக்கியத் தமிழில் சொற்சிக்கலாகவும்,வார்த்தை அலங்காரங்களாகவும் அமைந்து புதுப்பாங்கில் அமைந்திருக்கும். அகிலனின் நடை ஆற்றொழுக்கான நடை. ஜெயகாந்தனின் நடை யதார்த்த நடை. பாத்திரங்களின் பேச்சுத் தமிழைப் பிரதிபலிக்கும் நடை அது. சென்னைத் தமிழில் பல கதைகளை எழுதியவர் ஜெயகாந்தன். சுஜாதாவின் நடை சுருக்கமும், திட்பமும் அதே சமயத்தில் சோதனை முயற்சியும் வாய்ந்தது. நாஞ்சில் நாட்டுப் பேச்சுத் தமிழைக் கையாண்டு சிறப்பாக எழுதியவர்கள் சுந்தர ராமசாமியும் நீல பத்மநாபனும் ஆவர். தஞ்சை மாவட்டப் பேச்சு மொழியைக் கையாண்டு எழுதியவர் தி. ஜானகிராமன். கி. ராஜநாராயணன், பூமணி, பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வண்ணதாசன் போன்றோர் திருநெல்வேலி வட்டார மொழியைக் கையாண்டவர்கள்.

புதுமைப்பித்தனின் நாசகாரக் கும்பல் என்ற கதையில் அமைந்த நடை இது.
“வே ! ஒமக்கு என்னத்துக்கு இந்தப் பெரிய எடத்துப் பொல்லாப்பு? அது பெரிய எடத்துக் காரியம். மூக்கம் பய படுதப் பாட்டெப் பாக்கலியா ! பண்ணையார்வாள் தான் கண்லே வெரலெ விட்டு ஆட்ராகளே ! ஒரு வேளை அது மேலெ அவுகளுக்குக் கண்ணாருக்கும். சவத்தெ விட்டுத் தள்ளும் !”

திருநெல்வேலி வட்டார வழக்குக் கலந்த நடையில் கிண்டல் தொனி வெளிப்பட எழுதியுள்ளார் அவர்.

கல்கியின் கைலாசமய்யர் காபரா என்ற கதையில் காணப்படும் நடை இது.
“பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளரும் பிரகஸ்பதிச் சுப்பன் என்ற புனைபெயரால் புகழ்பெற்றவருமான ஸ்ரீபிராணதர்த்தி ஹரன் இன்று காலை மரணமடைந்த செய்தியை மிகுந்த துக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மயிலாப்பூரில் அவருடைய சொந்த ஜாகையில் திடீரென்று உயிர்போன காரணத்தினால் அவருடைய வருந்தத் தக்க மரணம் நேரிட்டது. அவருக்கு அந்திம ஊர்வலத்துக்கும் கணக்கற்ற ஜனங்கள் – சுமார் ஒன்பது பேர் இருக்கலாம் – வந்து கௌரவித்ததிலிருந்து இந்த எழுத்தாளர் தமிழ் வாசகர் உள்ளத்தில் எவ்வளவு மகத்தான இடத்தைப் பெற்றிருந்தார் என்பதை ஊகிக்கலாம். அவருடைய அருமையான ஆத்மா சாந்தியடைவதாக”.

இது, நகைச்சுவையும் எள்ளலும் கலந்த கல்கியின் நடையாகும்.

உணர்ச்சியும், சொல்வேகமும் நிறைந்த லா.ச.ரா. வின் நடையைக் கீழ்க்காணும் பகுதியில் காணலாம்.
“திடீரென்று இடியோடு இடிமோதி ஒரு மின்னல் வானத்தின் வயிற்றைக் கிழித்தது. இன்னமும் என் கண் முன் நிற்கிறது, அம்மின்னல் மறைய மனமில்லாமல் தயங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட காட்சி ! குழுமிய கருமேகங்களும் காற்றில் திரை போல எழும்பி, குளவியாகக் கொட்டும் மின்னலும், கோபக்கனல் போல் சமுத்திரத்தின் சிவப்பும், அலைகளின் சுழிப்பும், அடிபட்ட நாய்போல் காற்றின் ஊளையும், பிணத்தண்டைப் பெண்கள் போல, ஆடி, ஆடி, அலைந்து அலைந்து, மரங்கள் அழும் கோரமும்.!”

இவ்வாறு, நடையின் போக்கு கதாசிரியர்க்குக் கதாசிரியர் மாறுபட்டு அவர்களுக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தித் தருவதுடன், கதையில் வரும் உணர்ச்சிகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் இயல்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பது இன்றியமையாததாகும்.

1.5.2 நோக்கு நிலை

ஒரு சிறுகதை அதைக் கூறும் கோணத்திலும் சிறந்திருக்க வேண்டும். கதை கூறும் கோணத்தை நோக்கு நிலை உத்தி என்று குறிப்பிடுவர். குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை ஆசிரியர் எந்தக் கோணத்திலிருந்து பார்க்கிறார் ; எந்த விதமான உள்ளீட்டுக்கு எந்தக் கோணத்தைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது முக்கியம்.

ஆசிரியர் நோக்கு, முக்கியப் பாத்திர நோக்கு, கடிதம் அல்லது நாட்குறிப்பு மூலம் கதை கூறல் என்று பலவாறான நோக்கு நிலைகளில் கதைகள் கூறப்படுவதுண்டு. ஆசிரியர் கதை கூறும்போது, தன்னை உணர்த்தாமல் (‘நான்’ என்று கதைசொல்லிச் செல்லாமல்), படர்க்கையில் கதை கூறுவது சிறந்த முறையாகும். பெரும்பாலான கதைகள் இவ்வகையைச் சார்ந்தன. ஆசிரியரும் ஒரு பாத்திரமாக நின்று கதை கூறுவதுண்டு. புதுமைப்பித்தனின் கோபாலபுரம், விபரீத ஆசை, கு.ப.ரா. வின் விடியுமா?, மாயாவியின் பனித்திரை, தி.ஜானகிராமனின் கோபுர விளக்கு, அகிலனின் கரும்பு தின்னக் கூலி, சூடாமணியின் படிகள் போன்ற கதைகளில் ஆசிரியரே ஒரு பாத்திரமாக நின்று கதையைக் கூறுகிறார்.

விலங்குகள், அஃறிணைப் பொருட்கள் போன்றவை கதை கூறுவதாகவும் சில கதைகள் அமைந்துள்ளன. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம், புதுமைப்பித்தனின் கட்டில் பேசுகிறது, வேதாளம் சொன்ன கதை போன்றவை இதற்குச் சான்றுகளாகும்.

சி.சு. செல்லப்பாவின் வலி, மௌனியின் பிரபஞ்சகானம், பிரக்ஞை வெளியில், புதுமைப்பித்தனின் நினைவுப்பாதை, க.நா.சு. வின் வரவேற்பு போன்ற கதைகளில் மனம் பேசுவதாக, மனம் பின்னோக்கி எண்ணுவதாகக் கதைகள் அமைந்துள்ளன.

இவ்வாறு, கதை கூறும் முறைகள் பலவாறாக அமைந்திருந்தாலும், ஆசிரியர் படர்க்கைக் கூற்றில் கதை கூறும் முறையே பெரும்பான்மையான கதைகளில் அமைந்துள்ளன.

1.5.3 பாத்திரப்படைப்பு

ஒரு படைப்பு என்ற நிலையில் முன்னிடம் வகிப்பவை பாத்திரங்கள்தாம். சிறுகதை சிறியகதை என்பதால் அதில் அவசியமற்ற பாத்திரங்கள் தவிர்க்கப்பட்டுத் தேர்ந்தெடுத்த பாத்திரங்களே இடம் பெறுகின்றன.

அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதர்கள்தாம் சிறுகதைப் பாத்திரங்கள். தொடக்கத்தில் கதாசிரியர்கள் இலட்சியங்களுடன் தேர்ந்தெடுத்துப் படைத்த பாத்திரங்களும் உண்டு. ஆனால் இன்று ‘வாழ்க்கையில் இலட்சியமில்லாதவனை, ஏமாற்றமடைந்தவனை, ஏமாற்றுபவனை’ என்று அனைவரையும் படைத்து வருகின்றனர்.

சிறுகதை ஆசிரியர்கள் ஒரு கதையைச் சொல்லாமல் பாத்திரங்களை மட்டும் உருவாக்கி உலவ விட முடியும். ஆனால் பாத்திரங்கள் இல்லாத கதை இருக்க முடியாது. எனவே பாத்திரங்கள்தாம் சிறுகதையின் அடிப்படை.

சிறுகதை ஆசிரியர்கள் தங்கள் பாத்திரங்களை அறிமுகப் படுத்தச் சில முறைகளைக் கையாளுவர். ஆசிரியர் நேரடியாகப் பாத்திரத்தை அறிமுகப்படுத்துவது ஒரு முறையாகும். காட்டாகப் புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசப் பிள்ளை என்ற கதையில், குமரேசப் பிள்ளையை நயமாக அறிமுகம் செய்வதைக் காணலாம்.

“நீங்கள் பட்டணம் போனால் கட்டாயம் பார்க்க வேண்டியது என்று சொல்கிறார்களே, உயிர்க்காலேஜ் செத்த காலேஜ் என்று. சென்னையில் அவை இரண்டிற்கும் அதிகமான வித்தியாசம் ஒன்றுமில்லை. அதில் இரண்டாவதாக ஒரு காலேஜ் சொன்னேனே அதில் அவசியமாக இருக்க வேண்டிய பொருள் எங்களின் அதிர்ஷ்டத்தாலும், சென்னையின் துரதிர்ஷ்டத்தாலும், எங்களூரிலேயே இருக்கிறது. அதுதான் எங்களூர் திருக்குறள் குமரேசப் பிள்ளை”.

ஆசிரியர்கள் பாத்திரங்களை எவ்வாறு, எங்கிருந்து பார்த்துப் படைக்கின்றனர் என்பதை அவர்கள் சொல்வதிலிருந்தே காணலாம்.

தி. ஜானகிராமனின் சிலிர்ப்பு என்ற கதையில் வரும் காமாக்ஷி என்ற சிறுமி அழியாத ஓவியமாகப் படைக்கப் பட்டுள்ளாள். அப்பாத்திரம் உருவான விதத்தைப் பற்றி, ஆசிரியரே சொல்கிறார்:

“ஒரு சமயம் மூன்றாம் வகுப்புப் பெட்டியொன்றில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். வறுமை நிரம்பிய ஒரு சிறுமி தன் வாழ்வுக்காக வசதியுள்ள ஒரு குடும்பத்தவரோடு சென்று கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அப்போது உலகம் சிறை போலிருந்தது எனக்கு. அந்த நடுக்கம், ஒரு அச்ச நிலை, என்னுடைய உள்ளத்தை ஆட்டி வைத்தது. இதை வைத்துத்தான் சிலிர்ப்பு என்ற கதையை எழுதினேன்.”

பாத்திரங்களைப் படைக்கும் போது ஆசிரியர்கள் அனுபவிக்கும் அவஸ்தை நிலையை ஆசிரியர் சி.சு. செல்லப்பா அழகாகக் கூறியுள்ளார்:
“ஒரு கழுகின் பார்வையும் பாம்பின் செவியும் சேர்ந்து அவன் இருதயத்தைக் கொட்டிக் கொட்டி உணர்ச்சி நெறி ஏற்றிக் கொண்டே இருக்கின்றன. சதா கிண்டிக் கிளறிக் கொண்டே இருக்கும் மன உளைச்சல், சேறும் சகதியுமான மனக்குழப்பம். பொதுவாக அவஸ்தை நிலை. இந்த அவஸ்தை நிலைதான் எந்தச் சிருஷ்டிக்கும் மூலவித்து. பிரமனிடம் அவன் சிருஷ்டிக்கு மூலக்கருத்து எங்கே கிடைத்தது என்று கேட்டால் அங்கும் அவஸ்தையின் எதிரொலிப்புதான் கிளம்பும். பாற்கடலிலிருந்து அமிர்த வசுக்கள் தோன்றினதும் இந்தக் கொந்தளிப்பின் நடுவேதான், ஏன், உபாதை தாங்க முடியாமல்தானே அவதாரங்களே பிறந்தன.”

தாம் வெவ்வேறு மனிதர்களிடத்தில் கண்டு மகிழ்ந்த பண்புகளை யெல்லாம் ஒரே மனிதனிடத்தில் புகுத்தித் தாமே ஒரு புதிய பாத்திரத்தை உருவாக்குவதும் ஆசிரியரின் திறமையாகும்.

மேற்கூறியவாறு சிறுகதைகளில் பாத்திரங்கள் உயிர்பெற்று, வாசகர்கள் மனத்தில் உலாவரும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளன. காலத்தால் அழியாத பாத்திரப் படைப்புகள் எழுத்தாளனின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகும்.

1.6 சிறுகதை வகைகள்

சிறுகதைகளை மூன்றாக வகைப்படுத்துவார் ஸ்டீவன்சன் என்ற அறிஞர்.

(1)
கருவால் வந்த கதை (The Story of Plot)
(2)
பாத்திரத்தால், அதன் குணநலன்களால் உருவான கதை (The Story of Character)
(3)
பாத்திரங்களின் உணர்வுகளை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் கதை (The Story of Impression)

இவை தவிர, நிகழ்ச்சியால் சிறக்கும் கதை என்ற வகையையும் இணைத்துக் கொள்ளலாம்.

1.6.1 கருக்கதை

சிறந்த சிறுகதை ஆசிரியர்களான மாப்பசான், ஆண்டன் செகாவ், ஓ ஹென்றி போன்றவர்கள் கதைக்கருவினால் சிறந்த கதைகளைப் படைத்துள்ளனர். சின்னஞ் சிறிய கதைக்குள் ருசிகரமான கதைக்கருவைப் பதித்து இவர்கள் கதை சொல்கின்றனர். புதுமைப்பித்தன் கருவினால் சிறக்கும் பல கதைகளைப் படைத்துள்ளார். சங்குத் தேவனின் தர்மம் என்னும் கதை இதற்கு நல்ல சான்றாகும். முறுக்குப் பாட்டி முத்தாச்சி என்ற கிழவி தன் ஒரே மகளுக்குக் கல்யாணம் செய்வதற்காகத் தங்கத்தில் காதணி செய்து மடியில் கட்டிக் கொண்டு, காட்டில் தனிவழி நடந்து செல்கிறாள். சங்குத் தேவன் என்ற பெயர் பெற்ற வழிப்பறித் திருடனின் பயம் அவளை ஆட்டி வைக்கிறது. வழியில் அந்தத் திருடனே அவளோடு நடந்து வருகிறான். கிழவிக்கு அவனை யாரென்று தெரியவில்லை. வழித்துணை என்று நம்பி அவனிடமே சங்குத்தேவனைத் திட்டுகிறாள். தன் மடிக்கனத்தையும், மகள் கல்யாணத்தையும் சொல்லுகிறாள். திருடன் பத்திரமாக அவளை ஊர் எல்லை வரையில் கொண்டு வந்து விட்டு, அவளிடம் ஒரு பணப்பையைக் கொடுக்கிறான். கிழவி அவன் பெயரைக் கேட்கிறாள். சங்குத் தேவன் என்று பதில் வருகிறது.

இக்கதையில் ஓஹென்றியின் கதையில் வருவது போலக் கதையின் கடைசிப் பகுதியில் வாசகர்கள் வியக்கக்கூடிய ஒரு முடிவு வருகிறது. கெட்டவன் எல்லா நேரங்களிலும் கெட்டவனாக இருக்க மாட்டான் என்ற கதைக் கருவைக் கொண்டு உருவாக்கப்பட்ட இச்சிறுகதை வாசகர்களுக்குச் சுவைதரும் விதத்தில் படைக்கப்பட்டுள்ளது.

1.6.2 பாத்திரக் கதை

புதுமைப்பித்தனுடைய பொன்னகரம் என்ற கதை அம்மாளு என்ற பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதையாகும். அம்மாளு சாதாரண ஏழைக் கூலித் தொழிலாளி, அவள் கணவன் குதிரை வண்டி ஓட்டுபவன். அவன் அடிபட்டு மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தபோது அவனுக்குப் பால் கஞ்சி ஊற்றுவதற்காக அவள் தன் கற்பை விலை பேசுகிறாள். கற்பு என்பது பாதுகாத்துப் போற்றக் கூடிய ஒன்று என்ற மேல்தட்டு வர்க்கத்தின் நம்பிக்கைகளை அறியாத அம்மாளு கணவனுக்காகச் செய்த காரியத்தைப் பற்றிப் பேசுவது பொன்னகரம் கதையாகும். மூன்று பக்கங்களில் அமைந்த இதில் அம்மாளு இல்லாவிட்டால் கதை இல்லை. அவளே, அவள் செய்கையே கதையை உருவாக்கியிருக்கிறது என்று பார்க்கும் போது இக்கதை பாத்திரத்தால் சிறந்த கதை என்றே கூற வேண்டும்.

கதைகளைப் படைக்கும் நெறிகளில் ஜெயகாந்தன் பாத்திர உருவாக்கத்திலேயே அதிகக் கவனம் செலுத்துகிறார். அவர் படைத்த பாத்திரங்கள் வாழ்க்கையில் நம் கண்முன்னால் காண்பவராவார்கள். ஜெயகாந்தனின் படைப்புகளில் அவர்கள் தாம் வாழும் சூழலிலிருந்து அப்படியே எழுந்து வந்து இயங்குகிறார்கள்; உறவாடுகிறார்கள்; பேசுகிறார்கள்; சிந்திக்கிறார்கள்; கோபப்படுகிறார்கள்;சிரிக்கிறார்கள்; அழுகிறார்கள். ஒரு தாயைப் போலத் தம் பாத்திரங்களோடு ஜெயகாந்தன் ஒன்றி நிற்கின்றார்.

ஜெயகாந்தனைப் போன்றுதான் தி.ஜானகிராமனும் பாத்திரங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகின்றார்.

1.6.3 நிகழ்ச்சிக் கதை

அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன்போ, ஹெமிங்வே, இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாக்கப்ஸ் போன்றவர்கள் கதையம்சம் இல்லாமல் சுவையான நிகழ்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கதைகள் படைத்துப் புகழ்பெற்றனர். புதுமைப்பித்தன் இவ்வகைக் கதையையும் படைத்துள்ளார். நினைவுப் பாதை என்ற கதையில் கதையம்சம் என்ற ஒன்று இல்லை. இழவு வீட்டில், இரண்டாவது நாள் விடிவெள்ளி கிளம்பும் நேரத்தில் தொடங்கி, சுமார் இரண்டே நாழிகைகளுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்லி, நான்கே பக்கங்களுக்குள் கதையை முடித்துவிடுகிறார் புதுமைப்பித்தன். மேலெழுந்தவாறு பார்த்தால் திடீரென்று தொடங்கித் திடீரென்று முடிவுபெற்ற கதைபோல் தோன்றும். ஆனால் ஆழ்ந்து நோக்கினால் படிப்பவரின் மனப்பக்குவத்திற்குத் தகுந்தாற்போல், நிகழ்ச்சிகளுக்குப் பின்னே உள்ள மறைமுகமான கதை, படிப்பவரின் உள்ளத்தில் வளர்ந்து கொண்டே போகும். இக்கதையின் முழு உருவம் சிந்திக்கச் சிந்திக்கப் புலனாகும் விதத்தில் அமைந்துள்ளது. அதாவது தலையும் காலும் இல்லாத முண்டம் போன்ற ஓர் ஓவியத்தை வரைந்து, அதற்கு முன்னும் பின்னும் உள்ள அழகுகளைக் கற்பனையால் கண்டு மகிழச் செய்வதே இந்த வகைக் கதையின் நோக்கம்.

1.6.4 உணர்ச்சிக் கதை

காதல், பசி, கோபம், துக்கம், நகைச்சுவை, விரகதாபம் என்று ஏதாவது ஓர் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சில கதைகள் படைக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் என்ற சிறுகதையில் நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருக்கின்றது. கல்கியின் பெரும்பான்மையான சிறுகதைகளில் நகைச்சுவையுணர்வே மேலோங்கி இருக்கும். புதுமைப்பித்தனின் வாடாமல்லி கதை, அதன் நாயகி சரசுவின் தன்னுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. விரகதாபமா அல்லது சுய இரக்கமா அவ்வுணர்ச்சி எது என்பதை வாசகர்களின் கருத்திற்கே விட்டுவிடுகிறார்.

கல்யாணி என்ற கதையில், கல்யாணியின் விரகதாபத்தை மையப்படுத்திப் பேசியுள்ளார் புதுமைப்பித்தன். ஜெயகாந்தன் வாய்ச்சொற்கள் என்ற கதையில் கண்ணில்லாத இருவரின் காதல் உணர்ச்சியைக் கதைப்படுத்தியுள்ளார்.

“அந்த இரவு சம்பவத்திற்குப் பின் பகலும் இரவும் கண்ணப்பனைப் பற்றிய நினைவுகளிலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் ருக்குமணி. மானசீகமாய் அவன் குரலையும் பாட்டையும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தாள். வாழ்க்கை முழுதும் அவன் பாடிக்கொண்டே இருக்க, பக்கத்தில் உட்கார்ந்து தான் கேட்டுக் கொண்டே இருப்பதைக் காட்டிலும் உலகத்தில் வேறு ஒரு இன்பம் இருப்பதாக அவளால் நம்ப முடியவில்லை”

கு.ப.ரா. வின் கதைகள் காம உணர்வின் உளவியல் பக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு, மனித உணர்வுகளை முக்கியத்துவப் படுத்தி எழுதித் தமக்கென்று முத்திரை பதித்த எழுத்தாளர்களும் உள்ளனர்.

1.7 தொகுப்புரை

இன்றைய இலக்கிய உலகில் சிறுகதைகளுக்கென்று ஒரு தனிஇடம் உண்டு. இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கதை வாசிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, வீடியோ போன்றவற்றின் வருகையால் கூட மக்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் சற்றும் குறையவில்லை. அதற்குக் காரணம் நம் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புத் திறன் ஆகும். அத்துடன் ஓய்வு நேரத்தில் மட்டுமன்றிப் பயண நேரத்திலும் படிக்க எளிதாக இருப்பதும் ஒரு காரணமாகும். இதே காரணத்தினால் தான் நாவலைக் காட்டிலும் சிறுகதை வாசிப்பு இன்று முன்பை விட அதிகரித்துள்ளது.

– நன்றி: http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p10111nd-23794

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *