கதைசொல்லல் என்பது உலகின் எல்லா இனக்குழுக்களுக்குமான பொதுப் பண்புதான். ஆனால் படைப்பாளுமையால் கட்டமைக்கப்பட்ட சிறுகதை என்பது அமெரிக்க ஐரோப்பிய மேதைகளால் உலக மொழிகளுக்குப் பரவிய ஒரு கலைவடிவம். அது மொழிவழி வந்த பெருங்கலைகளின் அடியாகப் பிறந்த ஒரு நுண்கலை.
ஆயின் கலை என்பது யாது ?
மனம் என்னும் நுண்பொருளை ஓர் ஊடகத்தின் வழியே மலர்த்துகின்ற உத்தியா?
இயற்கை பூட்டி வைத்திருக்கும் அல்லது மனிதன் மறைத்து வைத்திருக்கும் ஜீவரகசியங்களை அவிழ்த்துக் காட்டும் அற்புதமா?
தன் உடலை திருப்தி செய்வதிலேயே வாழ்வு கழிக்கும் மனிதக் கூட்டத்திற்கு உடலுக்கு வெளியே உள்ள உலகத்தின் வலியையும் வலிமையையும் எடுத்துச் சொல்லும் ஏற்பாடா?
எப்போதும் வெளிப்பயணம் செய்துகொண்டிருக்கும் புலன்களை உள்முகப் பயணத்திற்கு ஆற்றுப்படுத்தும் மடைமாற்றமா?
பௌதிக ரீதியாய் எல்லாமுமாக இயங்க முடியாத மனிதனை உளவியல் ரீதியாக எல்லா உலகங்களிலும் இயங்க வைக்கும் ரகசிய ரசவாதமா?
கலை என்பதை இவற்றுள் ஏதேனும் ஒன்று என்று சொல்லலாம்; வை எல்லாமென்றும் கொள்ளலாம். இக்கூறுகளைத்தாண்டிய ஒரு மேலான காரணமும் கலையாகலாம்.
இந்தச் சிறுகதைக் கலையின் தோற்றம் குறித்துத் தெலுங்கு மொழியின் மகாகவி ஸ்ரீஸ்ரீ சொன்னது மனம் கொள்ளத்தக்கது.
”சிறுகதை என்பது நவீன இலக்கிய வடிவம். எட்கர் ஆலன்போ தொடங்கி ஆற்றல்மிக்க மேதைகளால் உருவம் தந்து செழுமைப் படுத்தப்பட்டது”
இன்று சிறுகதை என்பது எல்லாக் கோட்பாடுகளின் கோடுகளையும் திமிறிக் கிழித்து வெளியேறிவிட்டது என்ற போதிலும் எட்கர் ஆலன்போ வகுத்த சிறுகதை இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகள் முற்றிலும் அழிந்தொழியவில்லை.
• முப்பது நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கத் தக்கது.
• தன்னளவில் முழுமையுற்றது.
• அகத்தே புறத்தே எவ்வித இடையூறுமின்றி வாசகனின் புலன் முழுவதையும் கதாசிரியன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
இதுதான் உலகச் சிறுகதையின் பிதாமகன் எட்கர் ஆலன்போ கூட்டுவித்த சிறுகதை இலக்கணம்.
ஆலன்போவை அடியொற்றிய பிராண்டர் மாத்யூஸ் அதில் இன்னும் சில நுட்பம் நுழைக்கிறார்.
• ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கை
• அல்லது ஒரு தனிச்சம்பவம்
• ஒரு தனி உணர்ச்சியின் விளைவு
என்று சிறுகதையின் பக்கச் சிம்புகளையும் பார்க்கிறார் பிராண்டர் மாத்யூஸ்.
மேற்சொன்ன இலக்கண அடிப்படையில் ஒரு சிறுகதை கட்டியெழுப்பப் படுவது புனைவின் மீதா? உண்மையின் மீதா?
“பொருள்மர பில்லாப் பொய்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்”
என்ற தொல்காப்பியரின் பழங்கூற்றினைப்போல் உண்மையில்லாத புனைகதை உண்மையின்மீது இயங்கும் கற்பனை என்ற இரு நிலைகளிலும் சிறுகதை நிகழவே நிகழ்கிறது.
ஆனால் எனது எழுதுகோளின்படி சத்தியம் தேடுவதே கதையின் பெருவேட்கையாக இருக்க வேண்டும். புனைவுகூட சத்தியம் தன் பயணத்திற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒரு வாகனம்தான். மெய்யடியாகக் கட்டப்பட்ட புனைவுதான் மானுடக் கதை வரலாற்றின் ஆதிச்சுடரை அணையாமல் காக்கிறது.
மாறாத சத்தியத்தின் நித்தியத்தையும், மனிதவாழ்வின் சிறுமைகளைக் கடந்து பெருமைகளின் பெருமை காண்பதையும் என் படைப்பு தன் உள்ளோசையாகக் கொண்டிருக்கிறது.
கவிதைகளிலும் – பாடல்களிலும் – நாவல்களிலும் கரைந்துகிடந்த நான் என் அறுபத்தோராவது வயதில் இந்தச் சிறுகதை என்ற வடிவத்தைக் கையிலெடுத்தேன்.
‘புதுமைப்பித்தன் இறந்த ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன்’ என்ற ஜெயகாந்தன் வாக்குமூலத்தைப்போல ஜெயகாந்தன் வாழ்ந்த இறுதி ஆண்டில்தான் நான் சிறுகதை எழுத வந்தேன்.
சற்றொப்ப ஒரு நூற்றாண்டுத் தமிழ்ச் சிறுகதைகள் என் கண்முன்னே நுங்கும் நுரையுமாய்க் கொழித்துக் கிடந்தன.
உலகச் சிறுகதைகளின் உயரம் தொட முனைந்த அல்லது தொட்ட பல சிறுகதை மேதைகள் இன்னும் எழுதப்படாத மிச்சத்தையும் எனக்கு அடையாளம் காட்டினார்கள். அவர்களால் எழுதப்படாத மிச்சமும் அவர்களால் வாழப்படாத வாழ்க்கையும் என்னை எழுது எழுதென்று பணித்தன.
கிராமத்தின் மண்ணும் மண்சார்ந்ததுமான வாழ்வியல் என் எழுத்துக்கு உயிரோட்டமான உள்ளடக்கம் தந்தது.
“சிற்றூரில் வாழ்ந்துவரும் ஒரு படைப்பாளியின் அனுபவரீதியான உணர்வுகள் மிக ஆழமானவை. மனித உறவுகள், மாறிவரும் இயற்கை, அதன் வண்ணங்கள், தாக்கங்கள், கால்நடைகள் மிருகங்களைப் பற்றிய நுணுக்கமான செய்திகள் யாவும் அவனது படைப்பாற்றலுக்கு உகந்தவைகளாய் உள்ளன. அவனது ஆளுமை முழுவீச்சுடன் வெளிப்படுவதற்கான வாய்ப்பையும் அந்த அனுபவங்கள் தருகின்றன”
என்று இந்தி மொழியின் பேரெழுத்தாளர் பீஷ்ம சகானி எழுதுவது ஒரு சமூகவியல் உண்மை என்பதை நான் வாழ்ந்து தெளிந்திருக்கிறேன்.
நான் ஓர் உழவன் மகன். திறந்தவெளி வாழ்க்கையில் பிறந்தவன். எங்கோ ஒரு கள்ளிமரத்தில் விசிறி எறியப்பட்டிருக்கும் என் தொப்பூழ்க் கொடி. மறுகணமே கோழியறுக்கப் பயன்பட்டிருக்கும் என் தொப்பூழ்க்கொடியறுத்த அரிவாள்மணை. ஆடுமாடுகளின் ஓசைதான் நான் கேட்ட தாலாட்டு. மனிதர்களும் பறவைகளும் விலங்குகளும் தாவரங்களுமே என் முதல் ஆசான்கள். பிரசவ ரத்தத்தின் பிசுபிசுப்போடு வானத்தில் வந்து விழுந்த செந்நிலா என் முதல் அதிசயம். ஆகாயம் அள்ளியெறிந்த மழை இரண்டாம் அதிசயம். உழைக்கும் மக்களின் வட்டார வழக்கு நான் கேட்ட முதல் சங்கீதம். வறுமையின் பெருமிதம் பசித்தவர்களின் நம்பிக்கை – ஏதுமில்லாதவர்களின் ஆனந்தம் – விலங்குகளைக் கடவுள்களாக்கிவிடும் நம்பிக்கை மனிதர்களை
பட்டப்பகல் கொலை விலங்குகளாக்கிவிடும் எதார்த்தம் திறந்தவெளிப் புணர்ச்சி – நெல்லிக்காயின் புளிப்பின் அடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் இத்துனூண்டு இனிப்பைப்போல எரிந்து கொண்டிருக்கும் வாழ்வில் எரியாதிருக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை – படிக்காதவர்கள் சேர்த்துவைத்திருக்கும் பெருங்கல்வியான பழமொழிகள் – நண்பனாய் இருக்கும் கடவுளைவிட எதிரியாய் இருக்கும் மனிதன் மீது நம்பிக்கை கொள்ளும் எதார்த்த மக்கள் என்ற அனுபவங்களோடு 17 வயதுவரை என்னைச் செதுக்கியெடுத்த வாழ்வு என் படைப்புலகின் பலம்.
கிராமத்தில் நானுற்ற வறுமை என்னை அனுபவச் செல்வந்தனாக்கி அழகு பார்த்தது. நகரத்தில் நானடைந்த செல்வமோ மேல்தட்டு வர்க்கத்தின் அதிசயங்களைக் காட்டிற்று. வாழ்வின் இந்த இரண்டு எதிர்முனைகளும் என்னைப் பழுக்கக்காய்ச்சி அடித்திருக்கின்றன. என் புத்திக்கு எவ்வளவுகொள்ளுமோ அவ்வளவு பெற்றிருக்கிறேன். எனக்கு முன்னால் விரிந்துகிடந்த உலகும் அதில்நான் கண்டதும் கொண்டதுமான வாழ்வும் இந்தச் சிறுகதைகள் பலவற்றில் சூல்கொண்டுள்ளன.
புதுமைப்பித்தன் சொல்வதுபோல் வாழ்வு வேறு; வாழ்க்கை வேறு.
“வாழ்வு எனில் தோற்றம் – ஸ்திதி – மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத் தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட உயிர்ப்பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பைக் காட்டுவது மனிதச் சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது”
என்ற புதுமைப்பித்தன் கூற்றின் தொடர்ச்சியாய் அந்தத் தத்துவமே மொழியைக் கலாபூர்வமாகக் கையாண்டு இலக்கியமாகிறது என்றும் முடிக்கலாம்.
ஒரு சிறுகதைக்கு உருவம் உடல் போன்றது எனில் அதன் உள்ளடக்கம்தான் உயிராகிறது. உருவத்தைக் கொடுப்பது படைப்பாளியின் திறம். உள்ளடக்கம் என்பதெல்லாம் சமூகம் கொடுத்த வரம். வ.வே.சு.அய்யரும், கு.ப.ராவும், பி.எஸ்.ராமையாவும், புதுமைப்பித்தனும், மௌனியும், விந்தனும், ஆர்.சூடாமணியும், கு. அழகிரிசாமியும், கி.ராஜநாராயணனும், தி.ஜானகிராமனும், ஜெயகாந்தனும் படைத்ததற்குமேல் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று மலைத்து நின்ற எனக்குக் கையைப்பிடித்து அழைத்துக் கருப்பொருள் தந்தது என் காலம்.
• காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சமூகத்தில் நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி
• அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் புரட்டிப்போட்ட பெரியார் என்னும் பெருங்கலப்பையின் புரட்சி
• நவீனக் கல்வியால் பெற்ற போலிச் சுதந்திரத்தை ஆண்களும் பெண்களும் திருமண வாழ்விலும் தக்கவைத்துக்கொள்ளும் தவிப்பால் குலுங்கி நொறுங்கும் குடும்ப நிறுவனம்
• நகர்மயமான கிராமங்கள் தங்களை நவீனப் படுத்திக்கொள்ளும் மோகத்தில் பழைய மதிப்பீடுகளை மறக்கத் தலைப்பட்ட மனோநிலை
• தியாகம் தொண்டாகி, தொண்டு தொழிலாகி, தொழில் பெரும்பாலும் ஆதாயமாய் ஆகிப்போன அரசியலின் திரிபு
• சோவியத் யூனியனின் சோசலிசப் பின்னடைவு சமூகத்திலும் இலக்கியத்திலும் அடையச்செய்த சோர்வு
• தொழில்நுட்ப யுகத்தின் உலக வர்த்தகம் பொருள்களை மனிதர்களுக்கும் மனிதர்களைப் பொருள்களுக்கும் விற்ற சந்தைக் கலாசாரம்
• உலகமயமாதலின் ஊடகப் பெருக்கத்தால் சமூகம் பாலியல் உறவுக்கு வரைந்து வைத்திருந்த கோடுகள் திரிந்தும் அழிந்தும் போன அவலம்
• பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன் வேட்டைக் கலாசாரத்திலிருந்து மனிதனை மீட்டெடுத்த வேளாண்மைக் கலாசாரம் முடிவுக்கு வரப்போகிறது என்று அறிவித்த சகுனங்கள்
• கண்பார்க்கும் தூரத்தில் காதுகேட்கும் தொலைவில் சில லட்சம் தமிழர்களைக் கொன்றுமுடித்த இனப்படுகொலை
• வெறும் இருபத்து நான்காயிரம் கோடி வருமானத்திற்காக ஐம்பத்தைந்து விழுக்காடு மக்களுக்கு மதுவூட்டித் தள்ளாடும் தமிழ்நாடு
• ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்’ என்று பாரதி பாடிமுடித்த நூறாண்டுக்குள் நூறுகோடி கூடிப்போன இந்திய மக்கள்தொகை
• தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் கூட்டுக்கலாசாரம் குறைந்து தனித்தனித் தீவுகளாகிப்போன மனிதர்கள்
ஆயிரம் அவலங்களையும் சினிமா – தொலைக்காட்சி – மதம் – மது என்ற போதைகளால் சகித்துக்கொண்டிருக்கும் தடித்ததோல் சமூகம்
ஆகிய இவையும் இவைபோன்ற பிறவும் என் காலத்தில் நிகழ்ந்தவை; நிகழ்கின்றவை. என் எழுத்துக்குப் பொருள் தந்தவை; தருகின்றவை.
வாழ்வு தொலைந்த காட்டில் மனிதம் தேடுவதே என் தேடல். மரபுகளை மறுத்தல், புனிதங்களை உடைத்தல், அதிகார மையங்களைச் சிதைத்தல் என்று சுற்றியடிக்கும் பின்நவீனத்துவச் சூறாவளியில் அடிப்படை அறக்கோட்பாடுகளும் அழிந்துபோவதற்கு நான் உடன்பட மாட்டேன். மரபுகளின் பெருமிதம் எனக்குச் சேர்க்கும் வலிமையை இழந்துவிடமாட்டேன். மனிதப் பிரவாகத்தில் மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வென்னும் நதிக்கரையில் அறவிருட்சத்தை வீழாமற்காக்கும் திருப்பணியில் நம்பிக்கையோடு இயங்குவதே நல்லெழுத்து.
உள்ளடக்கம் குறித்து விரித்துச்சொன்ன நான் என் மொழிநடை குறித்து என் கருத்து என்ன என்பதையும் தமிழ் உலகுக்குச் சொல்லியாக வேண்டும்.
எவரையும் பின்பற்றாத எவரும் பின்பற்றத் துணியாத ஒரு பிரத்தியேக மொழியை என் சிறுகதைகளுக்கு நான் சிற்பித்துக்கொண்டேன்.
கவிதைக் கலையின் சிறுகூறுகளை இடம் பொருள் பார்த்து என் உரைநடைக்குள் ஊடாடவிட்டேன்.
நல்ல பாம்பின் உடல்போன்றது எனது உரைநடை. அதில் தொப்பையோ தொங்குசதையோ இல்லை.
கவிதையின் தொனியோடு என்சிறுகதை இயங்குவதைப் பெருமையென்று கூறுவாரும் உளர்; சிறுமையென்று சீறுவாரும் உளர்.
கவிதை என்பதென்ன… உரைநடையிலிருந்து தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட வஸ்துவா?
உரைநடையில் கவிதை காட்டுவது வாசகன்பால் நான் காட்டும் கருணையாகும்; மற்றும் மதிப்பாகும்.
“தாகூரின் ‘சுட்டி’ – ‘ஏக் ராத்திரி’ – ‘பலாயி’ போன்ற சிறுகதைகள் நமக்கு இசைக் கவிதைகளாகவே தோன்றுகின்றன”
என்ற வங்காளப் படைப்பாளி கவிதா சின்ஹாவின் கூற்று, உரைநடையில் கவிதை இழைவதை ஏற்கிறதா? மறுக்கிறதா?
தெலுங்கில் திரிபுராவின் கதைகளைப் பற்றி எழுதவந்த பத்மராஜூ- “இவை கதைகளா…? கவிதைகளா… ? கதை போன்ற கவிதைகளா…? கவிதைபோன்ற கதைகளா…?”
என்று வியப்புவினாத் தொடுப்பது உரைநடையில் கவிதையைக் கொண்டாடியா…? குறைசொல்லியா…?
“ஒரு சிறுகதையின் படைப்பும் அது மனதில் ஏற்படுத்தும் விளைவும், ஒரு கவிதையின் படைப்பு மற்றும் அது ஏற்படுத்தும் விளைவிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை அல்ல என்ற தெளிவோடு நவீன கதாசிரியர்கள் எழுதுகிறார்கள்'”
என்று கன்னடச் சிறுகதைகளைத் தொகுத்த ஜி.எச்.நாயக் ஆய்ந்து சொல்லியிருப்பது உரைநடையில் கவிதைக்குச் சார்பாகவா? எதிராகவா?
“சொந்தக் கற்பனை மேதைமையினாலும் யாப்புக் கவிதைப் பரிச்சயத்தினாலும் உலக இலக்கியச் சிறுகதை அறிவினாலும் புதுமைப்பித்தனுக்குச் சிறுகதை எழுதும் கலை மிகவும் நேர்த்தியாகக் கைவந்திருக்கிறது”
என்று புதுமைப்பித்தனின் மேன்மைகளைச் சொல்லிச் சொல்லும் க.நா.சு, கவிதைப் பயிற்சி உரைநடைக்குப் பலம் என்கிறாரா? பலவீனம் என்கிறாரா?
“சிறுகதைகளின் திருமூலர்” என்று மௌனியைப் புதுமைப்பித்தன் குறித்தது மௌனியின் கவிதை வீச்சை இகழ்ந்தா? புகழ்ந்தா?
தன்னை மறந்த லயம்தன்னில் ஒரு படைப்பு உருவாகி ஒழுகும்பொழுது படைப்பாளியின் மொழியாண்மைக்கேற்பத் தன் சொற்களை அது தானே கண்டடைந்துவிடுகிறது.
உழுத புழுதியில் பொன் கிடந்தால் கலப்பை என்ன செய்யும் கலப்பை?
நான் கலப்பை.
தமிழர்களுக்குப் பெரும்பாலும் கொண்டாடும் குணம் குறைவு. தாம் ஏற்கெனவே வியக்கும் ஒருவனோடு எல்லாமே முடிந்துவிட்டது என்ற மூட நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. மலையாள இலக்கியத்தின் விரிந்த மனநிலை தமிழ்ச் சமூகத்திற்குப் பெரிதும் கைவரவில்லை.
“தகழி சிவசங்கரன்பிள்ளை – கேசவதேவ் போன்ற முன்னோடிகள் வாழ்வின் துடிப்பைத்தான் பிரதானப் படுத்தினார்களே தவிர சொல்லழகு பார்க்கவில்லை. அதில் ஒரு கவிதா கானம் பாயவைத்து மெருகூட்டியவர் எம்.டி.வாசுதேவன்நாயர். வாசுதேவன் நாயரையும் தாண்டியவர் அடுத்த தலைமுறையின் மோகனன்’”
என்று மலையாளப் படைப்பாளி முகுந்தன் புதிய தலைமுறை பழைய தலைமுறையைத் தாண்டுகிறது என்று ஒப்புக்கொள்வது மாதிரி தமிழ்நாட்டு விமர்சனப் பூசாரிகள் ஒப்புக்கொள்வதில்லை.
திராவிட இயக்கத்தின் இலக்கியவெளியில் அறிஞர் அண்ணாவும், கலைஞரும் படைத்துக் காட்டியவற்றுள் சிறந்த சிறுகதைகளையும் திட்டமிட்டுப் புறந்தள்ளுவதை ‘விமர்சனமோசடி’ என்றே கண்டிக்கிறேன்.
முதலில் நம் மனவெளிகள் விரிவானால் தமிழ் என்ற குறுவட்டம்தாண்டி எல்லா மொழிகளின் மீதும் தமிழ் இலக்கியம் பாயும். அதற்கான மதிநுட்பமும் தொழில்நுட்பமும் கனிந்திருக்கும் காலமாகவே இதை நான் கருதுகிறேன்.
என்னை உறுத்தாத எதையும் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதவில்லை.
ஒரு மரத்தில் நுழைந்து அதைக் குடைந்து குடைந்து மரத்திசுக்களை வெளித்தள்ளும் ஒரு வண்டுமாதிரி, எனக்குள் விழுந்து என்னை ஊடறுத்து உறங்கவிடாமல் செய்யும் உள்ளடக்கங்களுக்கே உருவம் கொடுத்திருக்கிறேன்.
இந்த மொத்தக் கதைகளும் குமுதம் வார இதழில் 10 மாதங்கள் தொடர்ச்சியாகப் படைக்கப்பட்டவைதாம். ஆனால் இந்தக் கதைகளுக்காகக் காலம் என்னை 61 ஆண்டுகள் தயாரித்திருக்கிறது. இக்கதைகள் குறித்துக் காலம் என்ன கணிக்கும் என்பதை நானறியேன்.
நல்ல படைப்பாளிகள் அவர்களின் ஒரு சிறந்த கலைக்கூறு கருதியே கொண்டாடப்படுகிறார்கள்.
கதைகளின் இயல்பான வெளிப்பாட்டுக்காக ‘புஷ்கின்’
ஒரு கதையின் தொடக்கம் முடிவு இரண்டுக்குமான செய்திறனுக்காக ‘செக்காவ்‘
வாழ்க்கையின் எதார்த்தம் போலவே வார்த்தையின் எதார்த்தத்திற்காக ‘மாக்சிம் கார்க்கி’
கதையின் கடைசி வாக்கியத்தில் ஒட்டுமொத்தக் கதையையும் ஊற்றிவைக்கும் உத்திக்காக ‘ஓ ஹென்றி’
கதைகளில் ஏற்படுத்திய கலாசார அதிர்ச்சிக்காக ‘மாப்பசான்’
என் கதைகளில் இப்படி ஏதேனும் உண்டா என்பதை அடுத்த நூற்றாண்டு அறிவிக்கக்கூடும்.
ஒரு படைப்பில் விதைத்ததெல்லாம் நாளைக்கே முளைக்கும் என்ற பேராசை நமக்கில்லை. ஆனால் காலவெளிகளில் இந்த விதைகள் என்றேனும் முளைக்காமற் போகா. அறமென்னும் பெரும்பொருளை அழியாமற் காக்கும் பெருங்கொண்ட வேலையை ஓரேர் உழவனைப்போல் பதறாமற் செய்துகொண்டேயிருக்கும் படைப்புக்கலை; அது விளைவுகள் பற்றிக் கவலையுறாது.
“இருள் இருந்தால்தானே ஒளி. ஒளி வராமல் போய்விடுமா…? அதுவரை காத்திருக்கவேண்டியதுதான் எத்தனை காலமோ…? ஒளிவரும்போது நான் இருக்கவேண்டும் என்ற அவசியம் உண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்”
புதுமைப்பித்தன் முன் மொழிந்ததை வைரமுத்து என்னும் நான் வழிமொழிகிறேன்.
சென்னை
04.09.2015
இலக்கியப் பேராசையோடு…