சிறுகதைகளின் களம், காலம், கௌரவம் – மேலாண்மை பொன்னுச்சாமி

 

நாவல்கள், குறுநாவல்கள் படைத்துத் தொகுப்புகளாக வந்து, சில விருதுகளைப் பெற்றிருந்த போதிலும், நான் பிரதானமாகச் சிறுகதை எழுத்தாளனாகவே அறியப்படுகிறேன். அதில் எனக்குச் சம்மதமும் விருப்பமும்தான். சிறுகதை எழுத்தாளனாகப் படைப்புலகில் பிரவேசித்தேன். சிறுகதையிலேயே தொடர்ந்து இயங்கி வருகிறேன். விருப்பத்துடன், இயல்பான ஈடுபாட்டார்வத்துடன் சிறுகதைப் படைப்பு முயற்சிகளில் இயங்கி வருகிறேன்.

“சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்” என்றொரு நூல் எழுதியிருக்கிறேன். அது ஏகப்பட்ட இளம்படைப்பாளிகளின் பாராட்டுகளைப் பெற்றது. அது இப்போது இரண்டாம் பதிப்பாக வானதி பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது.

படைப்பு முயற்சிகளின் அனுபவரீதியான அறிவையும், சறுக்கல்களையும், படிப்பினைகளையும் அந்த நூலில் நேர்மையான உண்மையுடன் பகிர்ந்திருப்பதால் எல்லாக் காலத்திலும் அது இளம் படைப்பாளிகளுக்கான வெளிச்சம் தரும் பாதையைக் காட்டும்.

நான் எழுதிய முதல் படைப்பு பரிசு’ என்றொரு சிறுகதை, அதுமட்டுமல்ல … முதற்படைப்பாக, “சிறுகதை தான் எழுதுவது’ என்று திட்டமிட வில்லை. கனவு காணவில்லை. ஆனால் அது அப்படி அமைந்தது. இயல்பான வெளிப்பாடு. .

பருத்திச் செடியில் பருத்திப்பூ பூப்பதைப் போல இயற்கையானது. ஏனெனில் எனக்குள் எழுதவேண்டும் என்ற உந்துதலைத் தருகிற ஆதர்ஷமாக இருந்தவை ஜெயகாந்தனின் சிறுகதைகள்தாம். அந்த வடிவம் என்னையறியாமலேயே எனக்குள் ஆக்கிரமித்திருக்கிறது. அது என்னை வடிவமைத்திருக்கிறது.

ஒட்டுமொத்த இலக்கிய வகைகளில் கவிதையை ‘இளவரசி’ என்பார்கள். செறிவும், சொற் சிக்கனமும், அடத்தியும், வார்த்தையில் வாக்கியங்கள் சொல்கிற கச்சிதமும் கவிதைப் படைப்பாளிக்கு கைவந்தால்தான், கவிதை எழுத முடியும். இரண்டுவரிகளில் முழு உலகத்துக்குமான வாழ்வியல் ஒளியைத் தத்துவ நெறியைத் தருகிற குறளைப்போல, கவிதை வடிவம். அதே போல உரைநடை இலக்கிய வகைகளில் சிறுகதை இளவரசன். ஜெயகாந்தன் அவர்கள், ‘சிறு கதை உரைநடைக் கவிதை’ என்று கணித்து வார்த்தைப்படுத்தியிருப்பார்.செறிவும், சொற் சிக்கனமும், அடர்த்தியும், வார்த்தைகளில் வாக்கியங்களையும் வாழ்க்கையையும் சொல்கிற கச்சிதமும் கைவரப் பெற்றால்தான் சிறுகதை படைக்க முடியும்.

சிறிய சிந்தனை, சிறிய அனுபவம், சிறிய சம்பவம், சிறிய உணர்வு தாம் சிறுகதை என்ற புரிதல் மேம்போக்கானது உண்மையற்றது. ஆண்டன் செகாவ் என்ற உருசிய சிறுகதை மேதை ‘பச்சோந்தி’ என்ற சிறுகதையில் அதிகார வர்க்க மனப்பிரபஞ்சத்தின் நிறமாற்றம் என்கிற மிகப்பெரிய சிந்தனை வெளியைச் சித்திரித்திருப்பார்.

சிறிய சிறிய வார்த்தைகளின் கச்சிதமான சேர்க்கையின் நேர்த்தியில் எழுகிற வாழ்வியல் மனப்பேரழகுதான் சிறுகதை.

உரைநடை இலக்கிய வகைகளின் இளவரசன் எனப்படுகிற சிறுகதை வடிவத்தில் இயங்கி வருகிறேன் என்பது எனக்குப் பெருமிதம் தருகிற விசயம். எனது சிறுகதைகளின் விளை நிலமும், களமும் முழுக்க முழுக்கக் கிராமப்புற விவசாய வாழ்க்கை முறைமை. அதிலும் தஞ்சை, நெல்லை போன்ற நதிநீர்ப் பாசனக் கிராமங்கள் அல்ல. வானம் பார்த்த பூமி. வானம் பொழிகிற மழையை மட்டுமே நம்பி வேளாண்மை செய்கிற வட்டார மக்களைப் பற்றியவை எனது சிறுகதைகள்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு இலக்கிய விருது பெற்ற எனது தொகுப்பின் பெயர், “மானாவாரிப்பூ’. என் மொத்தச் சிறுகதை, நாவல், குறுநாவல் உள்ள ஒட்டு மொத்த படைப்புலகம் முழுவதையும் “மானாவாரிப்பூ” என்று கணித்தால் நூறு சதவிகிதம் துல்லியமான உண்மையாக இருக்கும், அது.

மானாவாரி என்ற சொல், ‘வானம்பார்த்து வாழ்பவர்கள் என்ற பொருளிலான சொல்லின் மருவல். .

எனது படைப்புக்களமான கிராமங்களையும், கிராம விவசாய உற்பத்தி முறைமைகளையும் பரிவுடன் நேசிக்கிறேன். கிராமத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்து, கிராமத்திலேயே வாழ்ந்து வந்திருப்பதால் இயல்பாகவே கிராமங்களை நேசிக்கிறேன். நான் ஏற்றுக்கொண்டிருக்கிற முற்போக்குத்

தத்துவமான மார்க்சியமும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிற உழவர்களை நேசித்துப் போற்றுமாறு கூறுகிறது.

சங்கத் தமிழிலக்கியங்களும், வள்ளுவப் பெருந்தகையும், மகாகவி பாரதியும் உழவைப் போற்றி வணங்குகின்றனர்,

எனது பிறப்பு, வளர்ப்பு, வாழ்தல் மட்டுமல்ல எனது முன்னோடித் தமிழிலக்கியமும் என்னை ஆகர்சித்த தத்துவமும் புறக்கணிக்கப்பட்ட உழவு மக்களுக்காக உழவு சார்ந்து வாழ்கிற நிலமற்ற உழைப்பாளி மக்களுக்காகப் போராடும்படி வழிகாட்டுகின்றன. ஆக எனது களநேசம் என்பது பூவின் வாசத்தைப்போலச் சத்தியமானது; சூரிய ஒளியைப் போல முழுமையான அசல் தன்மை கொண்டது.

வானம்பார்த்த கந்தகப் பூமியான விவசாய மக்களையும். அவர்தம் உற்பத்தி சார்ந்த வாழ்க்கையையும், வாழ்வின் உள் உலக நெருக்கடிகளையும், புற உலகச் சரிவுகளையும் என் சிறுகதைகள் பாடுபொருள் தேடுகிற களமாக இருந்து வருகின்றன.

எனது கதையின் களமே எனது கதையின் கருப்பொருளின் விளை நிலமாகத் திகழ்கிறது. எனது மண்ணின் வரிகளை ஒரு தாய்மைத் தவிப்புடன் உணர்ந்து, கொதித்து, குமுறுகிற கொந்தளிப்பான இதயத்தின் குரல்களாக எனது சிறுகதைகள்.

எனது சிறுகதைகளின் பாடுபொருளான கிராமத்து விவசாய உழைப்பு மனிதர்களின் புறவாழ்க்கையும், அக வாழ்க்கையும் தான் எனக்குள் இயங்குகின்றன.

பார்வையாளனாகவும், இரசனையாளனாகவும் இருந்து எழுதப்பட்டதல்ல எனது கதைகள். களத்தில் பங்கெடுப்பாளனாக, வலிகளை அனுபவித்தவனாக எழுதப்பட்டவையே கதைகள்.

– காலம் என்பது முக்கியம். இதுவரைக்கும் எனது சிறுகதைகள் எழுதப்பட்ட காலமே, கதையின் நிகழ்காலமாக இருக்கும். எனது கதைகள் எனது வட்டார வாழ்வியலின் வரலாற்றாவணமாகவும் இருப்பது அதனால்தான்.

வறட்சியும், அதிகமழையும் எங்கள் வட்டாரத்தின் இயல்பு. மழையைப் பற்றிய ஒரு சொலவடையே உண்டு.

“பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பார்கள். பெய்தாலும் ஒரே ஊத்தாக ஊற்றி, வெள்ளக்காடாகிவிடும். நிலமெல்லாம் நீரூற்றடிக்கும். ஏகப்பட்ட சேதாரங்கள், பாதிப்புகள், வாழ்வியல் முடக்கம் ஏற்படும். வெள்ளத்தில் இழுபட்டுப் போனவர்கள் சிலர்.

காய்ந்தும் கெடுக்கும். நாலைந்து வருடங்களுக்கு மழையே பெய்யாமல் ஒரு புல் கூட இல்லாமல் தீப்பிடித்த மாதிரி காடு கருகிக்கிடக்கும். வறட்சிப்பேயின் ஆட்டத்தில் குடிபெயர்ந்து போகிற சில குடும்பங்கள்.

இந்த இரண்டுமே எனது கதைகளில் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீண்டாதே போன்ற பல சிறுகதைகள் மழை மிகுதியைச் சொல்கின்றன. ‘ஜீவிதத்தின் உள்வட்டம்’ காட்டம், கூரை, போன்ற சிறுகதைகள் மழையின்மையைச் சொல்கின்றன.

சிவகாசி, திருத்தங்கல், ஏழாயிரம் பண்ணை , கோவில்பட்டி போன்ற சிறுநகரங்களில் மட்டுமே இருந்த தீப்பெட்டியாபீசுகள், ஜனதா ஆட்சிக் காலத்தின் போதுதான் தொலைதூரக் கிராமங்களுக்கும் யூனிட் யூனிட்களாக வந்தன. வேன்களும், பேருந்துகளும், தீப்பெட்டியாபீசுகளுக்குப் பிள்ளைகளை அள்ளிச்செல்கிற வாகனங்கள் ஊருக்குள் பிரவேசித்தன.

எனது கதைகளிலும் போரிடும் பிஞ்சுகள், அரும்பு போன்ற மைதானம், குழந்தை உழைப்பாளிகள் பற்றிய பாடுபொருள் கதைகள் வந்தன.

குழந்தை உழைப்பாளிகள் பற்றி அதிகமாகச் சிறுகதைகள் எழுதுகிறவன் என்ற கணிப்பு உருவாயிற்று. அந்த அளவுக்கு அதைப்பற்றி நிறைய எழுதினேன்.

கடன் தள்ளுபடிகள் வருவதற்கு முன்பு, எங்கள் வட்டாரத்தில் கூட்டுறவு சொசைட்டி கடனுக்காக விவசாயிகளின் வீடுகள், மாடுகள், பண்டபாத்திரங்கள் ஜப்தி செய்யப்பட்ட கொடுமைகள் நடந்தன.

சொசைட்டி ஜீப்புகளைக் கண்டாலே கலைந்தோடுகிற – ஓடி ஒழிகிற எளிய விவசாயிகளின் பதற்றமும், பயம், பீதி என்று கிராமமே அல்லோலப்படும். இவையும் எனது கதைகளின் பாடுபொருளாயிருக்கின்றன. ஜப்தி, பசு, இலங்கேஸ்வரன் என்று ஏகப்பட்ட சிறுகதைகள்.

‘ஸ்கைலாப்’ என்றொரு விண்கலம் பூமியில் விழுந்து பூமியே அழியப்போவதாக எல்லாக் கிராமங்களிலும் பயமும். கிலியும் பிடித்தாட்டிய நிகழ்வு, ‘ஸ்கைலாப்’ என்ற சிறுகதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

*சொஸைட்டி ஜீப் எப்ப வந்து ஜப்தி பண்ணி மானம் பறிக்கப்போவுதோ. . . அதைவிட ஸ்கைலாப் வுழுந்து செத்தாலும் பரவாயில்லே’ என்ற உணர்வு கொண்ட ஒரு சிறு விவசாயியின் மன உளைச்சலைச் சொன்னகதை.

மயிலும் கிளிகளும் பயிர் வெள்ளாமைகளை நாசம் செய்கிற சமகாலச் சீரழிவுகளும் எனது பல்வேறு கதைகளில் பதிவு செய்யப்படுகின்றன.

எங்கள் வட்டார விவசாயப் பகுதி மக்களின் வாழ் நிலைகளின் நிகழ்வுகள், அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள், சலனங்கள் இவையும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாட்டுக் கலப்பை உழவுக்காலமும் உண்டு, மக்கள் உழவுக்கோலமும் உண்டு, கமலை இறைவை செய்த காட்சிகளும் பம்ப்ஷெட் மோட்டார் இரைச்சலும் என் கதைகளில் உண்டு.

எங்கள் வட்டாரச் சமூக வாழ்விலுள்ள ஜாதீய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமையும் என் சிறுகதைகளில் ஏராளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாதீயக் கலவரமும். ஜாதீய மோதல்களும், வெட்டு-குத்துகளும் ஏகப்பட்ட கதைகளின் குரலாயிருக்கின்றன.

மணல் பெருவெளியும், வெள்ளப்பெருக்குகளுமாக நான் பார்த்த எங்கள் ஊர் ஆறு, இப்போது எறும்பரித்த கருவாட்டு எலும்புக் கூடாகக் கிடக்கிற பரிதாபம். மணலை இழந்த அதன் அவலட்சணம்.

இதன் பாதிப்பால்….. எனது சிறுகதைகளில் சுற்றுச் சூழல் குறித்தும் வேப்பமரங்கள் குறித்தும் ஏகப்பட்ட சிறுகதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நீர் வளம் காக்கிற அவசியத்தையும், நீர்வளம் கொள்ளையடிக்கிற பன்னாட்டு ஏகபோகக் கம்பெனிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியத்தையும் சொல்கிற ‘பூமனச்சுனை’ கதை குறிப்பிடத்தக்கது.

– எனது சிறுகதைகளின் களமும், காலமும் சேர்ந்து அதற்கான மொழியைத் தேர்வு செய்கின்றன. எனது சிறுகதைகளின் மொழிநடை எளிமையானது. பாமர விவசாயிகளின் குணாம்சம்போலவே சாமான்யமானது. சாமான்யமான குரலில் தொனியில் வார்த்தைகளில் பேசினாலும், அதன் ஆழத்தில் ஓர் அழுத்தமும், ஆழம்காண முடியாத ஒரு மர்மமும் புதைந்திருக்கும். அதே இயல்பு எனது மொழி நடைக்கும் இருக்கும். எளிமையாக இருக்கும். சாமான்யமாக இருக்கும். வியர்வையழுக்கு மனிதனைப் போலிருக்கும். ஆனால் அதன் உள்ளடக்கத்தில் ஒரு சமுதாயக் கோபம் இருக்கும். ஒரு ரௌத்ரம் இருக்கும். கூர்மையான விமர்சனமும், விளாசலும் இருக்கும்.

எனது மொழிநடைதான், எனக்குப் பரந்து விரிந்த சாமான்ய வாசகத்திரளைப் பெற்றுத் தந்தது. அறிவார்ந்த விமர்சகர்களின் அசூயைத் தொனியிலான அலட்சியத்தையும் பெற்றுத்தந்தது. ஏராளமான குடும்பப் பெண்களிடம் என் கதைகள் ஒரு செல்வாக்குமிக்க வலிமையோடு பரவியிருப்பது, எனது மொழி நடையின் எளிமை காரணமாகத்தான். நவீன விமர்சகர்களின் அறிவார்ந்த விமர்சன அங்கீகாரத்தைவிடவும், சாமான்ய வாசக மக்களின் அங்கீகரிப்பைப் பெரிய சொத்தாக, விருதாக மதிக்கிறேன்.

மலினத்துக்கும் எளிமைக்கும் ஒரு தோற்ற ஒற்றுமை உண்டு. ஆனால் உள்ளீடு ரீதியாகப் பெருத்த வித்தியாசம் உண்டு.

எளிமையான மொழிநடை யாருக்குள்ளும் சுலபமாக உள் நுழையும். வாசக நெஞ்சுடன் சட்டென்று ஒட்டிக் கொள்ளும். உறவு வளர்க்கும்.

அதன் உள்ளடக்கம் மோசமானதாகவும், மனிதப் பண்பைச் சிதைப்பதாகவும் இருந்தால் … அது மலினமாகிவிடும். நிகழும் சமகால வாழ்வை மறுதலித்து, எதிர்த்து, ஒருபுதிய மாற்று வாழ்வை முன் வைக்கிற குரல், உள்ளடக்கமாக இருந்தால், அந்த எளிமையான மொழிநடை… மிகப்பெரிய வலிமைமிக்க – பேராயுதமாகிவிடும்.

எனது எல்லாப் படைப்புகளிலும் கிராமப்புறப் பெண்கள் பற்றிய மன உலகம், வாழ்வுலகம் ஓர் ஆழமான தொனியில் பேசப்பட்டிருக்கும். பெண் சார்பு என்பது எனது கதைகளின் பொதுப் பண்பாக இருக்கும். ஆதியில் தாய்வழிச் சமூகமாக இருந்து, சமூகத்தின் தலைவியாகப் பெண்திகழ்ந்த வரலாற்றின் துவக்கக் காலத்தின் பின்புலத்திலிருந்து, இன்றைய பெண்ணினம் அடிமையுற்றிருப்பதை நோக்குவது, என் சிறுகதைகளின் தனித்துவப்பார்வை.

சமூகமும் விவசாயமும் உரசுகிறபோது, விவசாயத்தின் பக்கம் என்கதை சாய்ந்து நிற்கும். விவசாயமும், எளிய விவசாயியும் முரண்படுகிறபோது என்கதைகள், எளிய விவசாயின் வக்கீலாக இருக்கும். விவசாயியும், விவசாயத் தொழிலாளியான தலித்தும் உரசுகிறபோது என்கதை தலித் பக்கமும், ஆண் உழைப்பாளிகளும், பெண்களும் உரசுகிற போது பெண்களின் பக்கமும் என்கதை சாய்மானம் பெற்றிருக்கும்.

இந்தச் சாய்மானத்தைத் தீர்மானிப்பதோ களமோ, காலமோ அல்ல; எனது மார்க்சிய தத்துவஞானப் பிடிப்புதான் தீர்மானிக்கிறது. ஒடுக்கும் முறைகளுக்கு எதிரான மனநிலையும், சமத்துவத்தைக் கோருகிற குரல்தொனியும் என்படைப்புகளில் இருக்கும்.

கிராமத்தில் பிறந்து, விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று நகர்ப்புறம் சென்று, உத்யோகம் கல்யாணம் என்று நகர்சார்ந்த இருப்பிலேயே இருந்து கொண்டே, படைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறபோது…பத்தாம் வகுப்புவரை வாழ்ந்த கிராமத்து வாழ்வைச் சிறுகதைகளாக எழுதுவதும் உண்டு. அறிவார்ந்த உயர்கல்வி கற்றறிந்த அனுபவம் சார்ந்த மொழிநடைத் தேர்ச்சியுடன் அப்படிப்பட்ட கதைகளும் எழுதப்படுவது உண்டு. கிராமத்து வாழ்விலேயே வசதிக்காரராக, பெரிய நிலவுடைமையாளராக இருந்து கொண்டு, கிராமத்தின் எளியமக்களின் பார்வையாளராகவும், பரிவு கொண்டவராகவும் இருந்து கொண்டு, வியர்வையைப் போற்றுகிற தத்துவப் பலத்தில் கிராமவாழ்வைப் பற்றிய கதைகளும் எழுதப்படுவதும் உண்டு,

கிராமத்தில் பிறந்து, கிராமத்திலேயே இருந்து, ஏழை விவசாயியாக வாழ்ந்து, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மொழியறிவோடு, பாமரனாக இருந்து பாமர விவசாயிகளைப் பற்றிய வாழ்வை எழுதுவது, எனது தனித்துவத் தன்மையாகும்.

தலித் வாழ்க்கையைத் தலித்மொழியிலேயே தலித்தே எழுதுகிறபோது, அவற்றில் இருக்கிற மொழி எளிமையும் சத்தியவலிமையும் வாசகர் நெஞ்சுக்குள் சட்டென்று தாக்கிக் கம்பீரமான விளைவுகளை நிகழ்த்துவதைப் போலவே, எனது வாழ்வும், சூழலும், மொழியும் அமைந்திருக்கின்றன என்பது தற்செயலான பொருத்தம்.

அறிவார்ந்த நவீன விமர்சகர்களின் முகச்சுளிப்புகளையும், அலட்சிய மௌனத்தையும் தாண்டி என்கதைகளுக்குப் பரவலான வாசகமக்களின் வரவேற்பும், உயர்ந்த பல கௌரமான விருதுகளும் அடைந்திருப்பதன் இரகசிய சூட்சுமம் காரணம் இதுதான் என்று நம்பலாம்.

இந்தச் சூட்சுமம் எனக்குப் புரிந்திருப்பதால்தான், எனது மொழி நடையில் செயற்கையாக வலிந்து எந்த மாற்றமும் செய்ய வில்லை. நவீன விமர்சகர்களின் அலட்சியத்தையும், அசூயையும் புறமொதுக்க என்னால் இயலுகிறது.

உயர் கல்விப் பின்புலத்தோடு அறிவார்ந்த நவீன இலக்கிய விமர்சகர்களாக மாறியவர்களுக்கு. கல்வியறிவற்ற கிராமத்தானைச் சம இலக்கிய வாதியாக ஒப்புக் கொள்வதில் மனச்சிரமம் இருக்கிறது.

ஜாதீயத் தலைவர்களின் கூட்டம் நடக்கிற இடத்துக்கு அழுக்கு வேட்டியும் வியர்வைக்கோலமுமாய் ஒரு தலித் ஜாதித் தலைவர் வந்தால் என்னாகும்? அவரை எங்கே உட்காரச் சொல்வது? எல்லாரையும்போல நாற்காலியிலா? கீழே தரையிலா?

அங்கே அசூயை நிறைந்த மௌனம் கனக்கும்.

“அப்படி .. சேர்லே உக்காரப்பா” என்ற குரல் கேட்காதா என்ற மனத்தாகத்தோடு மேல் துண்டை தரையில் போட்டு உட்கார யத்தனிப்பார். எல்லாரும் தந்திர மௌனமாக அலட்சியத்தைக் கடைப்பிடிப்பர்.

கற்றோர் அவையான நவீன இலக்கிய உலகத்திற்குள், கல்வியில்லாத பின் தங்கிய ஜாதியிலிருந்து ஒதுக்குப் புறமான கிராமத்திலிருந்து நான் வந்தபோதும் அதுதான் நிகழ்கிறது. எனக்கான சிம்மாசனத்தைத் தருவதில் மனத்தடை

ஆனால் வாசகத் திரளின் ஏகோபித்த வரவேற்பும், ஜனநாயகச் சிந்தனையுள்ள கல்வியாளர்களின் மனசாட்சியும், கற்றோர் அவையிலும் சமத்துவச் சிந்தனை கொண்ட ஒரு சிலர் இருப்பதாலும்தான்…. நவீன இலக்கிய விமர்சகர்களின் விருப்பங்களை மீறி என் சிறுகதைகளுக்கு உயரிய சிம்மாசனம் கிடைத்திருக்கிறது.

உழவு சீரழிந்தாலும், உலகுக்கு உணவு தருகிற உழவன் வெற்றியே பெற்றுத் தீருவான். அப்படித்தான் என் சிறுகதைகளின் வெற்றியும்.

– படைப்பு நெறிமுறைகள், முதற் பதிப்பு: 2010, பதிப்பாசிரியர்:முனைவர் கரு.அழ.குணசேகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *