சிறிய வீடும் சிம்பு முயலும்!
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 10,241
சிம்பு முயலைப் பார்த்திருக்கிறீர்களா?
அழகான குட்டி முயல்!
பட்டு போன்ற வெண்ணிற ரோமம்.
பாலில் மிதக்கும் காபூல் திராட்சை போன்ற அழகான கண்கள்.
கோவைப் பழம் போல சிவந்த வாய்.
இரண்டு காதுகளையும் உயர்த்தி சிம்பு குதித்துக் குதித்து வரும்போது பார்க்கிற எல்லோரும் மெய்மறந்து விடுவார்கள்.
அது நடந்துபோவது, ஒரு குட்டி தேவதை நடனம் ஆடியபடி வருவது போல் இருக்கும்.
எப்போதும் ‘துருதுரு’வென ஒரு சுறுசுறுப்பு.
சிம்பு முயலுக்கு நீண்டநாட்களாக ஓர் ஆசை!
எல்லோருக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும். தனக்கும் ஒரு சொந்த வீடு இருந்தால் எப்படி இருக்கும்..?
எங்கேயோ பதுங்கியிருந்து பயந்து பயந்து பொழுதைக் கழித்து வாழ்வது சிம்புவுக்குப் பிடிக்கவே இல்லை.
அழகான ஓர் இடத்தில் விரைவிலேயே குட்டியாக வசதியாக ஒரு வீடு கட்டிக் குடியேற வேண்டும்..!
ஆகா! எந்நேரமும் சிம்புவுக்கு இதே கற்பனைதான். தான் செல்கிற வழியெங்கிலும் இருக்கும் பலவிதமான வீடுகளை ஆசை ஆசையாகப் பார்க்கும். அந்த வீடுகளின் வண்ணங்களைப் பார்க்கும்போது என் வீட்டுக்கும் இந்த வண்ணம்தான் என்று நினைத்துக் கொள்ளும்.
‘நானும் ஒரு வீட்டைக் கட்டுவேன்…’ நம்பிக்கையுடன் செயலில் இறங்கியது.
‘சரி, முதலில் ஒரு நல்ல இடத்தைக் கண்டுபிடிப்போம்…’ புறப்பட்டது.
தாவித்தாவி… தான் வசித்து வந்த குன்றுச் சரிவிலிருந்து கீழே இறங்கி வயல்வெளிப் பகுதிக்கு வந்தது.
அழகான ஓர் இடம்.
‘பச்சை பசேல்’ என்ற புல்வெளி. வரப்புகள், நெல்வயல்… சற்றுத் தள்ளி தென்னைமரத் தோப்பு, நெட்டை நெட்டையாக மரங்கள்…
எங்கே பார்த்தாலும் பச்சை நிறம்தான். பச்சை நிறத்தில் இத்தனை வகைகளா? அம்மாடி… வகைவகையான பச்சை நிறங்கள்! புல்வெளியிலேயே பலவகைப் பச்சை. மஞ்சள் கலந்த பச்சை, வெளிறிய இளம்பச்சை, சற்றே அடர்த்தியான கிளிப்பச்சை, இலைப் பச்சை, கரும்பச்சை…
நெல் நாற்று ஓர் இடத்தில். பக்கத்தில் நட்டநெற்பயிர்கள் வளர்ந்துகொண்டு இருக் கின்றன.
அந்த நெல்வயலின் வெல் வெட்டுப் பச்சை.
தென்றல் வந்தவுடன் தலைவணங்கி, அலை அலையாக அடுத்தவர் களுக்கு ‘வணக்கம்’ சொல்லும் அழகே தனி!
‘‘இந்த இடம் நல்ல இடம்.’’
பாதுகாப்பான ஓர் இடத்தில் வீடு கட்டத் தொடங்கியது சிம்பு.
யாரும் தொந்தரவு செய்ய முடியாத இடத்தில் ஒரு மரத்தின் அருகில் குழி பறித்தது. புல், உலர்ந்த வைக்கோல் எல்லாம் சேகரித்தது.
சிம்புவின் விடாமுயற்சியுடன் கூடிய தொடர்ந்த உழைப்பில் அழகான சிறிய வீடு ஒன்று உருவானது.
வீட்டின் முன்னால் குச்சி எல்லாம் வைத்து ஒரு தடுப்பு போட்டது.
தன் ஒருவனின் உழைப்பில் உருவான வீடு..! சிம்புவின் மனம் நிறைந்தது!
அப்போதுதான் கருங்கண்ணன் எலி அங்கு வந்தது.
‘இதென்ன இந்த இடத்தில் புதிய ஒரு வீடு?’ கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்தது. ஊர் வம்பை வளர்ப்பதுதான் கருங்கண்ணன் எலியின் முழுநேர வேலை!
‘‘யாரு.. சிம்புவா.. இதுதான் உன் வீடா..?’’ ஏளனமாகக் கேட்டது கருங்கண்ணன்.
‘‘ஆமாண்ணா, இப்போதுதான் கட்டி முடித்தேன். நல்லா இருக்கா..?’’
சிம்புவுக்கு எப்போதும் பணிவுதான். எல்லோரிடமும் நட்புதான்.
‘‘ஹ¨ம்.. இதென்ன வீடு… இங்கே என்ன குச்சி தடுப்பு.. இதெல்லாம் ஒரு வீடா? ஒரு காற்று வீசினால் எல்லாம் பறந்துவிடும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் நிறைந்து நீ செத்துவிடுவாய்…’’ மீண்டும் ஏளனச் சிரிப்பு.
உண்மையில் கருங்கண்ணனுக்குப் பொறாமை! எல்லா நேரமும் ஊர்சுற்றிக்கொண்டு இருப்பதும் அடுத்தவர் பொருளைத் திருடித் தின்பதும்தான் அதன் வேலை.
தின்று தின்று உடம்பு உருண்டு கொழுத்துப்போய் இருந்தது. உருப்படியாக ஒரு வேலையும் செய்யாது. செய்பவர்களையும் ஏதாவது ஏளனமாகச் சொல்லிக்கொண்டு இருக்கும்.
சிம்புவுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. தன் புது வீட்டுக்கு விஜயம் செய்த முதல் விருந்தாளியே கேலியாகப் பேசும் என்று அது நினைக் கவில்லை.
சில விநாடிகளிலேயே பழையபடி ஆகிவிட்டது சிம்பு. தான் செய்து முடித்த வேலையில் மன நிறைவு கண்டது. அமைதியாகத் தன் பணியைத் தொடர்ந்தது.
பக்கத்தில் உள்ள புல்வெளியில் மேய்வது, அருகில் உள்ள சொந்தக்காரர்களைப் பார்ப்பது, நண்பர்களுக்குத் தன்னாலான உதவிகள் செய்வது… இவைதான் சிம்புவின் பணிகள்.
புது வீட்டில் குடியேறிய பிறகு அந்தப் பகுதியில் இருந்த காகம், குருவி, கோழி, சேவல் எல்லாமே சிம்புவின் நண்பர்கள் ஆகிவிட்டன.
சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கருங்கண்ணன் எலி, வரப்பு ஓரமாக, சாப்பிட ஏதாவது கிடைக் கிறதா என்று தேடிக்கொண்டு இருந்தது.
திடீரென ‘சடசட’வென்று மழை பெய்யத் தொடங்கியது.
பெரிய பெரிய மழைத் துளிகள் கூழாங்கற்களைப் போல் நிலத்தில் விழுந்தன.
எங்கே ஒதுங்குவது?
பக்கத்தில் இருந்த பெரிய கல்லின் அடியில் பச்சித் தவளை உட்கார்ந்துகொண்டு இருந்தது.
‘‘பச்சி… மழை கனமாகப் பெய்கிறது. உன் பக்கத்தில் நானும் ஒதுங்கிக்கொள்கிறேன்..’’ உதவி கேட்கும்போதுகூட கருங்கண்ணனுக்குப் பணிவு வரவில்லை.
‘‘ஐயோ கருங்கண்ணா, இங்கே வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே தண்ணீர் ஏறிவிடும்.’’ பச்சித் தவளை சாக்கு சொல்லி அனுப்பிவிட்டது.
ஒரே பாய்ச்சலில் தாவி, ஒரு வேரின் அடியில் நின்றுகொண்டு இருந்த நரம்பன் ஓணானிடம் சென்றது.
‘‘நரம்பா, நகரு… நானும் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்கிறேன்.’’
‘‘அடடே, இங்கே வராதே கருங்கண்ணா. ஒரு ஆளுக்கே இங்கே இடம் போதவில்லை…’
வேறு வழி இல்லாமல் நனைந்துகொண்டே போகும் வழியில் சிம்பு முயலின் வீடு வந்தது.
‘‘சிம்பு… மழை பெய்யுது. நானும் உன் வீட்டில் கொஞ்ச நேரம் தங்கிக்கட்டுமா..?’’ தயக்கத்தோடு கேட்டது கருங்கண்ணன். தான் ஏற்கெனவே சிம்புவைப் பலமுறை கேலி செய்திருப்பது அதன் மனதில் உறுத்திக்கொண்டுதான் இருந்தது.
‘‘அதுக்கென்ன அண்ணா… வாங்க, மழை பெரிசாப் பெய்யுது!’’
கள்ளம் கபடம் அற்ற சிம்பு முயலின் நேசக்கரம் நீண்டது.
கருங்கண்ணனின் பொறாமை குணம் கூடிய சீக்கிரம் அதைவிட்டுப் போய்விடும் என்பதற்கான அறிகுறி அதன் முகத்தில் தெரிந்தது.
– வெளியான தேதி: 01 ஜூன் 2006