சின்னஞ் சிறுசுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 217 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு இளைஞனாக இருக்கும் போதே விவாகம் செய்து விடவேண்டும் என்ற என்னைச் சார்ந்த உறவினர்களின் நியாயப்படுத்தலுக்கு உடன்பட்டு நான் விடுமுறையில் வீடு வந்து விட்டேன்………

மாரி காலத்தில் நடாத்தப்பட வேண்டிய நிகழ்வொன்று அட்டமி அமாவாசை கனத்தநாள் என்றெல்லாம் கருத்துக்கெடுக்கப்பட்டு தடங்கலாவது போல எனது கலியாண வைபவத்துக்கான திகதியை குறிப்பதிலும் தடையொன்று வந்து எனது உறவினர் அனைவர் முகத்திலும் அசடு வழியுமாறு செய்துவிட்டது!

எங்கள் வீட்டு வரவேற்பு அறையில் போடப்பட்டிருந்த சுமாரான ‘செற்றி ஒன்றில் சாய்ந்திருந்தேன். அங்கிருந்து பார்க்கும் போது எங்கள் வீட்டின் நீண்ட அகன்ற முற்றமும் எதிரே குறுக்கறுத்தோடும் சிறிய ஒழுங்கையும் மறுபுறம் எனது பெரியதாயின் இல்லமும் பூமரங்களினாலான தடை நீங்கலாக துலாம்பரமாக தெரியும்.

எனது அன்னையானவள் தன்னிலை மறந்து ஓட்டமும் நடையுமாக அடிக்கடி அங்கு ஓடுவதும் சோர்ந்து துவண்டு வருவதுமாக கவலையுடன் அலைந்து கொண்டிருந்தாள்.

அவளது மூத்த சகோதரி எனது பெரிய தாயார் ‘கோமா’ நிலையில் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

‘அக்காவுக்கு இப்போதைக்கு ஒண்டும் நடக்காது தம்பி…

சந்தர்ப்ப சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக தீர்மானம் செய்தபடி யதார்த்தம் பற்றி கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாத மக்கள் கூட்டத்தினரிடையே எனது தாயார் முதன்மை ஸ்தானத்தில் நிற்பவள்.

நான் அமைதி காத்தேன்.

எனது மூத்த உடன் பிறப்புகள் நால்வர், பெரியதாயாரின் பிள்ளைகள் இருவர் அனைவரும் தங்கள் தங்கள் குடும்பத்துடன் தலைநகரில் சுகவாசம் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

எனது விவாகம் முந்துமா….பெரியதாயாரின் பரலோக பிரவேசம் முந்துமா என்பதை தீர்மானிக்க இயலாத திரிசங்கு சுவர்க்க நிலை அவர்களுக்கு.

வரவேற்பு அறையின் சுவர் ஒன்றில் தொங்கியபடி இருந்த கடிகாரத்தின் ‘டிக்..டிக்…’ ஒலி எனது இதயத்தின் தாளத்துக்கு சுருதி சேர்க்கிறது.

எனக்கு…உடனேயே விவாகம் செய்துவிட வேண்டும் என்கின்ற அவசரம் கிஞ்சித்தும் கிடையாது. நான் விவாகம் செய்ய முன்வந்தது ஒரு பெண்ணை முகர வேண்டும் என்கின்ற மனோவியல் பலவீனம் காரணமாக அன்று.

எனக்கு ஒரு குழந்தை வேண்டும்…! இது ஒரு அவாவாகவோ அல்லது என்னை அறியாமல் ஒரு பிடிவாதமாகவோ எனது இதயத்தின் அடித்தளத்தில் வேரூன்றி நிலைத்து விட்டது. எனக்கு ஒரு இளைய சகோதரம் இருந்திருந்தால் நானும் ஒரு குழந்தையாக மாறி அதனுடன் இணைந்து விளையாடி எனது தாகத்தை தணித்திருக்க முடிந்திருக்கும். ஆனால் சிறுவயதிலிருந்தே மூத்தவர்களின் அடக்கு முறைகளை மட்டுமே அனுபவித்தவன் நான்.

தன்னாதிக்கம்… மேலாண்மை ஆகியவற்றின் ஒடுக்கு முறைகளை சரித்திரம் படித்து தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. ஒரு குடும்பத்தில் இளைய பிள்ளையாக இருந்தாலே தெரிந்து கொண்டு விடலாம்!

என் மீதான நெருக்குதல்கள் நிர்ப்பந்தங்கள் அதிகரித்தபோது நான் அம்மாவின் மடியில் விழுந்து அழுது சண்டையிட்டதும் மூத்தவர்கள் தானே’ என்று அம்மா சமாதானத்தை முன்வைத்ததும் அந்நேர அரவணைப்பில் என்னால் மறக்கப்பட்டவையாக போயினும் எனது இதயம் சின்னஞ் சிறார்களை தேடுவதில் அதிக ஆர்வம் காட்டியது.

பத்திரிகைகளிலும் வானொலியிலும் பிரச்சாரம் செய்வது போல எனது தாய் தந்தையரும் நான் பிறந்த தனைத்தொடர்ந்து குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றியிருக்கக் கூடும். நான் பிறந்தது கூட அவர்கள் எதிர்பாராத…… அவர்களுக்கு ஆச்சர்யம் தரக்கூடிய …………. அவர்களை கவலைக் குள்ளாக்கியிருக்கக் கூடிய ஒரு நிகழ்வாக இருந்திருக்குமோ என்று எண்ணி நான் கவலை கொண்டதுண்டு.

எக்காரணம் கொண்டோ நான் இந்த உலகில் எனக்கு இளைய உறவுகள் இன்றி தனியே விடப்பட்டமையால் உருவான வெப்பிசாரம், என்றும் எனது நெஞ்சறையில் தகித்துக் கொண்டே இருக்கிறது..

அம்மா சிற்றுண்டியுடன் தேநீர் பரிமாறினாள். பின் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டவள்..

‘தம்பி ………. பெரியம்மாவின்ர நிலைமையைப் பார்த்தால் இண்டைக்கு நாளைக்கு ஒண்டும் நடக்கிற மாதிரி இல்லை…வாற நல்ல நாளுக்கு கலியாணத்தை வைப்பமே?

அம்மாவின் வினாவுக்கு என்ன பதிலை கூறுவதென்று எனக்கு புரியவில்லை.

‘நீங்கள் யோசிச்சு சொய்யுங்கோ…

அம்மாவுக்கு பதிலிறுத் தபடியே எழுந்து பெரியதாயாரைப் பார்க்க சென்றேன். அவளுடைய முகம் துயில்வது போல பிரகாசமாக இருந்தது. கடந்த காலத்தில் அவள் என்மேல் காட்டிய பரிவும் பாசமும் எனது நினைவுத் திரையில் காட்சிகளை விரித்தன..

எனக்கு தொழில் வாய்ப்பு கிடைத்து முதன் முதலாக நான் தலைநகருக்கு சென்ற சமயம் அவளது சிபார்சின் பேரில் அவளுடைய கணவனின் சகோதரர் (எனது பெரியதந்தையின் தம்பியார்) இல்லத்தில் தங்கினேன். அவர்களுக்கு மூன்று பெண்குழந்தைகள். மூவருமே எனக்கு இளையவர்கள். தாகத்தில் அலைந்தவனுக்கு தாகசாந்தி நிலையம் எதிர்ப்பட்டது போல எனது உற்சாகம் பிய்த்துக் கொண்டு கிளர்ந்தது. எனது கிராமத்து பண்பாட்டினை அனுசரித்து ஒரு மரியாதைக்காக பொதுவில் மூவரையும் அக்கா என்று விளித்து மதிப்புக் கொடுத்து நடந்தேன்.

ராஜேஸ் அக்கா மூத்தவள், குஞ்சு அக்கா நடுவிலாள், தனேஷ் அக்கா இளையவள். அன்று வரையிலான எனது வாழ்நாளில் இல்லாதபடி எனதுள் மனதில் மண்டிக்கிடந்த இயற்கைச் சுபாவங்களை வெளிப்படுத்தி நான் மகிழ்ந்திருக்க எனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாக அந்த வாய்ப்பு அமைந்தது.

இளமையின் மிடுக்கில் வெள்ளரிப்பழம் போல மூவருமே அழகில் திரண்டிருந்தார்கள். எங்கு போனாலும் என்னை அழைத்துச் சென்றார்கள். விதம்விதமாக எனக்கு சுவையூட்டும் தின் பண்டங்கள் பெற்றுத் தந்தார்கள். ஒளிவு மறைவின்றி தங்கள் மனதை எனக்கு திறந்து காட்டினார்கள்.

குஞ்சு அக்கா என்னுடன் அதிக நேரம் பேசினாள். எனது மனக்குறைகளை நானும் அவளுக்கு எடுத்துரைத்தேன். கண்கலங்கி அழுதாள். முன்னரைக் காட்டிலும் என்மேல் அதிக பரிவு காட்டினாள். அந்த பரிவுணர்ச்சி விருட்சமாகி வளர்ந்தது…

ஒரு நாள் நீண்டநேரம் என்னுடன் தயங்கி தயங்கி எதையோ மனதில் மறைத்து இருத்தி பேசிக்கொண்டிருந்தாள். ஏதோ ஒரு கவலையில் அவள் திளைத்திருப்பது எனக்குப் புரிந்தது. நான் அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன்… அவளுடைய தலை தாழ்ந்திருந்தது…ஆழ் மனத்திலிருந்து வெளிக்கிளம்பிய விம்மலையும் குமுறலையும் அடக்கியபடி கேட்டாள்..
“ரஞ்சன் உங்களுக்காக நான் ஒரு குழந்தையைப் பெற்றுத்தர சம்மதிப்பீர்களா?”

பெரிய தாயாரின் வீட்டு முற்றத்தில் அவளுக்காக நான் முன்னர் அமைத்துக் கொடுத்த மல்லிகைப்பந்தலின் கீழ் உலாவியபடி இருந்த என்னை அம்மாவின் அழைப்புக்குரல் திசை திருப்பியது.

பெண் வீட்டார் வந்திருந்தார்கள்!

அம்மாவுடன் பேசிக்கொண்டார்கள். விவாக எழுத்தை உடனே முடித்து விட்டால் பின்னர் நிலைமையை அனுசரித்து விவாகத்தை முந்தியோ பிந்தியோ செய்யலாம் என முடிவு செய்தார்கள்.

‘ஊழ்’ என்பதனைக் காட்டி எத்தனை எத்தனை காப்பியங்கள் படைக்கப்பட்டு விட்டன! எனது வாழ்வும் ஒரு காப்பியமாகக் கூடும்!

குஞ்சு அக்கா கேட்ட கேள்வியால் நான் அதிர்ச்சியடைந்தேன். எத்தனை நாட்கள் நான் அவளுடன் கட்டிலில் படுத்தவண்ணம் கதைகள் பேசி மகிழ்ந்திருக்கின் றேன். அவளைப் பொறுத்தவரையில் அது சகோதரத்துவத் தின் பாற்றப்பட்டதில்லையா? சகோதரன் என எண்ணி என்னை நெருங்கி அன்னியோன்யமாக பழகும் மற்றிரு சகோதரிகளும் தூர விலகிச் சென்று விடுவார்களே..

எனக்கு இளையவர்கள் என நெருங்கி அன்பு பாராட்ட கிடைத்த சந்தர்ப்பம் பறிபோகின்றதே என்று எண்ணி எண்ணி கலங்கினேன்..

குஞ்சு அக்காவை சமாதானம் செய்து திசை திருப்ப என்னாலான முயற்சிகளையும் வாக்குச் சாதுர்யங்களையும் பிரயோகித்தேன்.

‘குஞ்சு அக்கா..நாங்கள் சகோதரர்கள்..மற்றவை எங்களைப் பகிடி பண்ணுவினை எல்லே?’ எனது சமாதானங்களை அவள் ஏற்கவில்லை இல்லை ரஞ்சன்…உங்களுடைய பெரியம்மாவின் பிள்ளைகள் உங்களுக்கு ஒன்று விட்ட சகோதரர்கள்தான். அதுக்கு காரணம் பெரியம்மாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற இரத்த உறவு. ஆனால் என்னுடைய அப்பாவும் அம்மாவும் உங்களுக்கு இரத்த உறவு இல்லாதவர்கள். எனவே பெயரளவில்தான் எனக்கும் உங்களுக்கும் சகோதர உறவு வருகின்றதே தவிர நாங்கள் இரத்த உறவு அற்றவர்கள்.’

குஞ்சு அக்கா தலை நகரிலேயே பிறந்து வளர்ந்தவள். எனவே தனது கருத்துக்களை உறுதியாக தீர்மானித்து பேசினாள்.

எனக்கோ சிகரத்திலிருந்து பாதாளத்துக்கு வீழ்ந்து விட்டவனின் நிலை. மீண்டும் மெல்ல மெல்ல நடைப் பிணமானேன்!

என்னில் மாற்றத்தை அவதானித்து ராஜேஸ் அக்காவும் தனேஷ் அக்காவும் என்னை கேள்விகளால் குடைந்தார்கள். என்னுடன் அதிக நேரம் கதை பேசும் நடுவிலாள் மேல் அவர்கள் கோபம் திரும்பியது.

ஆனால் குஞ்சு அக்கா என்னை நன்கு படித்து தெரிந்து வைத்திருக்கின்றவள். அடுத்த வீட்டில் இருந்து அழகான கைக் குழந்தை ஒன்றை தூக்கி வந்து எனது ஆசைகளுக்கு தூபம் போட்டு வளர்த்தாள்…

எனக்கென்று குழந்தைகள் வேண்டும் என்கின்ற ஆசை மிக மிக உயரத்தில் தனது ‘சிறகுகளை ‘ விரித்து பறக்க முற்பட்டது!

வறவேற்பறையில் சுவர்க் கடிகாரத்தின் குருவி எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

அதனை தொடர்ந்து மணி பத்து அடித்தது. அம்மா சமையல் வேலையில் தீவிரமாக இருந்தவள் தனது கவனத்தை எனது பக்கம் திருப்பி..

‘நீ மகன் யோசிச்சு யோசிச்சு கவலைப்பட்டுக் கொண்டிருந்து ஒண்டும் செய்ய ஏலாது. அண்ணையவைக்கும் அக்காவுக்கும் உடனை புறப்பட்டு வரச் சொல்லி என்ரை பேரைப் போட்டு தந்தி அடி. மற்றதை யெல்லாம் நான் பார்க்கிறன்.’

அம்மாவின் பேச்சுக்கு மறு பேச்சு இன்றி மேற்சட்டையை மாற்றிக் கொண்டு துவிச் சக்கர வண்டியில் எனது மாணவ பருவ கால நண்பன் ரமேஸ் வீட்டுக்கு சென்றேன்…

‘எப்படி மச்சான் உன்னுடைய பெரியம்மா பாடு? * -ரமேஷ் வினாவினான். எனக்கு அந்த கேள்வி கோபத்தை உண்டுபண்ணியது.

‘உனக்கும் என்னுடைய அம்மாவுக்கும் வித்தியாசமில்லையடாப்பா….. நீங்கள் எல்லோரும் என்னை ஒரு போடுதடி எண்டு நினைக்கிறியளேயல்லாமல் நானும் உணர்ச்சிகள் உள்ள ஒரு மனுசன் எண்டு நினைக்கிறேல்லை’

ரமேஷ் அமைதிகாத்தான், பின் வினாவினான்..

‘ஏன் மச்சான்….. குஞ்சு அக்காவைப் பற்றி இப்பவும் நீ நினைச்சுக்கொண்டு இருக்கிறியா?’

வாழ்க்கைப் பாதையின் ஒரு சந்தியில் நான் நின்று கொண்டிருப்பதை எனது மனம் நன்கு புரிந்து வைத்துக் கொண்டு என்னை வதைத்தது யாருடனாவது மனம் விட்டு பேசினாலாவது சில சமயம் நல்ல முடிவு எய்தப்படக்கூடும் என எண்ணினேன்.

‘மச்சான்…. குஞ்சு என்னை விரும்பின சம்பவம் நடந்து ஆறு வருடங்கள் ஓடிவிட்டது. வீட்டிலை நடந்த பிரச்சனையும் உனக்கு தெரியும், நான் ஊரிலை இல்லாததாலை அதன் பின்னர் என்ன நடந்ததெண்டு உனக்கு தெரியாது.’

‘எனக்கு ரஞ்சன் உன்னிலை நம்பிக்கை இருக்கு , ஆனபடியால் நீ உன்னுடைய குடும்பத்தோடை அனுசரித்து போவாய் என்ற நினைப்பில் அச் சம்பவம் பற்றி அறிய வேண்டும் என்கின்ற மனத் தூண்டுதல் எனக்கு இருக்கவேயில்லை .’

ரமேஷின் சுபாவமே அதுதான்! நான் மனம் விட்டு அவனுடன் பேசுவதற்கும் அவனுடைய அந்த இயல்பால் நான் கவரப்பட்டிருந்ததே’ காரணமாகும்.

‘இப்ப சொல்லுறன் கேட்டுக்கொள்….. குஞ்சு என்னை விரும்புவதோடு நின்றுவிட்டிருந்தால் நிச்சயம் எனக்கும் அவளுக்கும் விவாகம் நடந்திருக்கும். எனது கஷ்டகாலம் விடவில்லை. ஊர் உலகத்திலை நடக்காத புதினமாக எனது காதலியின் சகோதரிகள் இருவரும் உள்ளுர தாங்களும் என்னைக் காதலித்துக் கொண்டிருந்ததை அப்போ நான் அறியவில்லை, குஞ்சு தனது காதலை வெளிப்படுத்திய உடனே சகோதரிகள் மூவருக்கு மிடையில் சண்டை மூண்டது.

எவரும் என்னை விட்டுக் கொடுத்து தங்களுக்குள் ஒரு மாப்பிள்ளையாக என்னை எடுக்கும் முடிவுக்கு வர முடியாமல் போனார்கள்.’

ரமேஷ் உரத்து சிரித்தான். நான் ஏன் என்கின்ற வினாக்குறியுடன் அவனைப் பார்த்தேன்.

‘எனக்கு பழைய கொலை வழக்கொன்று ஞாபகம் வருகுது மச்சான். இரட்டைக் கொலை. மூன்றுபேர் குற்றவாளிகளாக நீதிபதியால் காணப்படும் நிலை. உண்மையாகவும் மூவரும்தான் கொலைக்கு காரணம். வக்கில் கேட்கிறார்….. ‘ஒராள் கொலையை ஒத்துக் கொள்ளுங்கோ… நான் மற்ற இருவரையும் விடுவிக்கிறேன்.’ எண்டு. எல்லாருக்கும் தான் தான் தப்ப வேணும் எண்டு. ஆசை. ஆர் கொலையை ஏற்றுக் கொள்ளுறது? மூண்டு பேருமே தூக்கிலை தொங்கினதுதான்! –

அந்த கவலையான நிலையிலும் நானும் சிரித்தேன். தொடர்ந்து கூறினேன்…

‘சகோதரிகளுக்கிடையே ஏற்பட்ட சண்டை எங்கள் வீட்டுக்காரருக்கு இவர்கள் மேல் இருந்த அன்பு பாசம் அபிமானம் எல்லாவற்றையுமே அடியோடு நீக்கிவிட்டது…. தலைநகரில் அவர்கள் வீட்டிலிருந்து என்னை வேறு தனி அறைக்கு மாற்றினார்கள். நானும் மனம் சோர்ந்துவிட்டேன். எனது வீட்டுக்காரர் அவர்கள் பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு என்னால் எதுவும் அறியமுடியவில்லை . தடைகளும் பலமாகவே இருந்தது. எனது வீட்டில் எனது பழைய நினைவுகளை தூண்டாதபடி கதைகளை மட்டுப்படுத்திக் கொண்டார்கள். எப்படியோ எனது விலாசத்தை தேடி பெற்று ராஜேஸ், தனேஸ் இருவரும் தமது காதல், கலியாண விபரங்கள் பற்றி எழுதி எனக்கு சூடேற்ற பார்த்தார்கள். நான் மசியவில்லை. குஞ்சு மட்டும் எதுவுமே எழுதவில்லை. அவளே என்னை உயிருக்குயிராய் நேசிப்பவள் என்பதை அது ஒன்றே நிரூபித்தது!’

எனது கண்களால் நீர் பெருகியது. ரமேஸ் எனது தோளைத் தட்டினான். அவனது கையைத் தட்டிவிட்டு நான் வினாவினேன்…

‘மச்சான்…. நான் இப்ப வெண்டாலும் குஞ்சுவை விவாகம் செய்தால் என்ன? ‘ ரமேஸ் மீண்டும் உரத்து சிரித்தான். பின்னர் கூறினான் ….. ‘மச்சான் தூக்கு தண்டனையிலை மூண்டுபேரும்தான் செத்தவங்கள், அதிலை எப்படி மாற்றம் செய்யிறது?

எனக்கு பாதி புரிந்தது, மீதி புரியவில்லை . ரமேசும் தொற்றிக்கொள்ள எனது துவிச்சக்கர வண்டி தபால் அலுவலகத்தை நோக்கி விரைந்தது.

விவாகப் பதிவுக்கு உடனே புறப்பட்டு வரும்படி உறவினர்க்கு தந்தி அனுப்பப்பட்டது. சகோதரர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். அதன் பின்னர் எனது அபிப்பிராயங்களுக்கு இடம் எது?

பெரிய தாயார் வீடும் எங்கள் வீடும் களைகட்டியது. யாரோ பெரிய தாயாரின் சுகவீனம் குறித்து அவாவினுடைய பிள்ளைகளுக்கு ஏற்கனவே தந்தி கொடுத்து விட்டிருந்தார்கள். அவர்கள் முதலிலேயே வந்து சேர்ந்து விட்டார்கள்.

*விவாகப் பதிவை செய்து போட வேணும்…’

‘அதோட சோறையும் குடுப்பிச்சு விடுவம்…’

“இல்லை … இல்லை … தாலியையே கட்டிவிச்சு விடுவம்…’

அவசர அவசரமாக தீர்மானங்கள் ஆராயப்படு கின்றன. எங்கள் வீட்டால் பெண் வீட்டுக்கு போகின்றார்கள்; வருகின்றார்கள். பெண் வீட்டால் எங்கள் வீட்டுக்கு வருகின்றார்கள்; போகின்றார்கள்..

நான் தூக்கு தண்டனை தீர்க்கப்பட்ட கைதியாக…நியதியை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாக…நீங்கள் முடிவெடுத்தால் சரி..’

எனது தாயாரின் பிரார்த்தனைகள் பெரியம்மாவின் முடிவை தள்ளிப் போட்டது போலும். விவாகத்தையே முடித்து விடுவது என தீர்மானமாயிற்று.

மலர் மஞ்சத்தில் நான்…

எனது மனைவி என் முன்னால் நிற்கின்றாள். எனக்காக ஒரு குழந்தையை கமக்கப்போகிறவள்…. எனது தீராத தாபத்திற்கு வடிகால், அவள் மேல் உள்ளத்தில் மரியாதை கிளர்ந்தெழுகின்றது. திடீரென நடந்து முடிந்த விவாகத்தால் ஏற்பட்ட படபடப்பு அவளுக்கு இன்னமும் தணியவில்லை . அவளை அமர வைத்து பேசி சகஜ நிலைக்கு கொண்டு வருகின்றேன். அவளது கிராமத்து பழக்க வழக்கம்… என் முன் கைகட்டி பணிந்து நிற்கின்றாள். அது என்னை மற்றொரு வழியில் வருத்துகின்றது. குழந்தை பற்றிய அங்கலாய்ப்பு எழுகின்றது. அவளது கரங்களைப் பற்றியபடி வினாவுகின்றேன்…

‘எங்களுக்கு ஒரு குழந்தைச் செல்வம் வேண்டும் தானே? ‘

தலையை தாழ்த்திக் கொள்கின்றாள். மிகுந்த பிரயத்தனம் செய்து பேசுகின்றாள்…

‘அம்மா சொன்னவா… இரண்டு வருஷத்துக ‘கெண்டாலும் பிள்ளை பெறக்கூடாது எண்டு…’

நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘ஏன்?’ ஒரே சொல்லில் வினாவுகின்றேன். அதற்கு அவள்..’நாங்கள் சின்னஞ் சிறுசுகளாம். உடனேயே பிள்ளை பிறந்தால் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதாம்’

எனக்கு பேரதிர்ச்சி…

‘கடவுள் தந்தால் நாங்கள் வேண்டாமென்று சொல்லுறதே?’

அவள் ‘அலுமாரியை’ திறந்து எதையோ தூக்கி காண்பிக்கின்றாள். ‘இதைப் பாவிச்சால் சரி எண்டு அம்மா சொன்னவா.’

என் தலை மீது இடி விழுகின்றது…

குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டு எனக்கு இளைய சகோதர பாக்கியத்தை இல்லாமல் செய்த எனது பெற்றோர்..

இளைய உடன் பிறப்புக்களாக எண்ணி மகிழ்வுற்றிருந்த என்னை தூக்கி எறிந்த பெண்கள் மூவர்…

குழந்தை ஒன்றிற்காகவே விவாகம் செய்து கொண்ட எனக்கு வந்தமைந்த குழந்தை பெற மறுக்கும் மனைவி…

என்னைப் புரிந்து கொண்டவள் குஞ்சு ஒருத்தியே..! அயல் வீட்டுக்குழந்தையை அணைத்தெடுத்து வருவதும்….. என்னை தனது கணவனாக பாவனை செய்வதும்…. குழந்தையை கொஞ்சுவதும்….. எனது முத்தத்தை பெற்றுக் கொடுப்பதற்காக குழந்தையை என் முன்பாக நீட்டுவதும்…. நான் முத்தம் கொடுத்ததும் தானே என்னிடம் முத்தத்தை பெற்றுக் கொண்டது போல முகம் சிவந்து நாணித் தலை குனிவதும்..

எல்லாமே பாவனையாக போய்விட்டது..!

இதோ…எனது வீட்டிற்கு புது மணத் தம்பதிகளாக கால் மாறி வருகின்றோம். முற்றத்தில் அமைக்கப்பட்ட அலங்கார பந்தலின் கீழ் நாம் அமர்ந்திருக்க…பட்டுச் சேலை..சரிகை பாவாடை..பட்டுவேட்டி சால்வை ஆகிய புத்தாடைகளில் அதி விலையுயர்ந்த தங்க நகைகள் பொலிவுற … எமது உறவினர்கள் சூழ்ந்திருக்கின்றார்கள்.

எனது சகோதரர்கள் ஓடி ஓடி விருந்தினர்களை உபசரிக்கின்றார்கள். அம்மா மிகவும் மகிழ்வடைந்து காணப் படுகின்றாள். அம்மாவை சைகை காட்டி அழைக்கின்றேன்.

‘பெரியம்மாவின்ரை சுகம் எப்படி? ‘ கவலையுடன் வினாவுகின்றேன். ‘கொஞ்சம் கடுமை….மற்ற மற்ற சொந்தக்காரரும் வந்து விட்டினம்…

குழந்தைகள் பந்தலின் நடுவே தாறுமாறாகவும் அவசரம் காட்டியும்ஓடி விளையாடுகின்றனர். குதூகலம் தாங்கவொண்ணாமல் பெரியவர்கள் என்பதையும் பொருட்படுத்தாமல் அவர்களுடனும் மோதிக்கொண்டு விழுந்து விழுந்து எழுகின்றார்கள்…

அவர்களுக்கு மத்தியில் ஐந்தே வயது நிரம்பியிருக்கக் கூடிய அழகான பெண் குழந்தை ஒன்று அகப்பட்டுக் கொள்கிறது. பெரிய குழந்தைகளுடன் மோதி இதோ……இதோ… விழுந்து விடப்போகிறது என எண்ணிய நான் ஒரே பாய்ச்சலாக சென்று குழந்தையை தூக்கி எனது மனைவியின் மடியில் அமர்த்துகிறேன்.

அம்மா சிரித்தபடி கூறுகின்றா…’குஞ்சு அக்காவின் மகள்!’

பெரிய தாயாரின் வீடு அமைந்திருந்த திசையிலிருந்து எழுந்த ‘ஓ.’ என்ற ஓலத்தின் சோகம் எனது இதயத்தை பிழிவதுபோல சூழ்ந்து கவிந்து கொள்கிறது!

– ஞானம் ஒக்டோபர் 2002, ஸ்திரீ இலட்சணம், முதற் பதிப்பு: அக்டோபர் 2002, ஈழத்து இலக்கியச் சோலை, திருக்கோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *