சிசுபால வதம் (மஹாபாரதம்)




பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து
யதிஷ்டிரர் ராஜசூயயாகம் நடத்த இருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரின் யாகத்தில் கலந்து கொள்வதற்கு தீர்மானிக்கிறார். அதற்காக எல்லோரும் இந்திரபிரஸ்தம் செல்ல தயாராகுகிறார்கள். இவ்வாறாக இந்திரபிரஸ்த பிரயாணம் ஆரம்பமாகி விட்டது. ஸ்ரீகிருஷ்ணருடன் அனைத்து யாதவ சேவகர்களும் அந்தப்புரத்தில் உள்ள பெண்களும் ஆகிய அனைவரும் இந்திரபிரஸ்தம் செல்ல பிரயாணத்திற்கு தயாராகுகிறார்கள். துவரகாவிலிருந்து பயணம் ஆரம்பிக்கிறது.
துவாரகாநகரம் மிகவும் மனோகரமாக இருக்கிறது. நகரம் முழுவதும் குவியல் குவியலாக விலை உயர்ந்த ரத்தினங்கள் பொன்னும் மணியுமாகக் காணப்படுகிறது. அகண்ட பாரதத்தின் மேற்கே உள்ள சமுத்திரக் கரையில் துவாரகா நகரம் அமைந்துள்ளது. சமுத்திரக் கரை வழியாக ஸ்ரீகிருஷ்ணரின் பயணம் ஆரம்பித்தது. அனைவரும் ரைவதமலை சமீபமாக வந்து சேர்ந்தார்கள். ரைவதபர்வதம் மிகவும் ரமணீயமாக இருந்தது. பர்வதத்தின் இயற்கை அழகைக் கண்டு அனைவரும் பரவசமடைந்தனர். சௌந்தர்யமிக்க அந்த மலையில் நீர்நிலைகளும் நிறைந்து இருந்தன. எனவே ஸ்ரீகிருஷ்ணருடன் வந்தவர்கள் அனைவரும் நீரில் மூழ்கி , குள்ளக் குளிர குடைந்து நீராடி ஜலக்கிரீடை செய்து மகிழ்ந்தனர். அதன் பிறகு ரைவத மலையைக் கடந்து யமுனை நதிக்கரை சமீபம் வந்தடைந்தனர். அதன்பின்னர் யமுனை நதி பிரதேசங்களையும் கடந்து இந்திரபிரஸ்த நகரின் எல்லையை மகிழ்வுடன் வந்தடைந்தனர்.
ஸ்ரீகிருஷ்ணர் தன் ஜனங்களுடன் இந்திரபிரஸ்த எல்லையை வந்தடைந்தார் என்ற விருத்தாந்தங்களை ராஜதானிகள் மூலம் அறிந்த யுதிஷ்டிரர் மகா ஆனந்தம் அடைந்தார். தாமதம் செய்யாமல் தன் பரிவாரங்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணரை வரவேற்க மிகுந்த ஆனந்தத்துடன் யுதிஷ்டிரர் இந்திரபிரஸ்த எல்லைக்கு விரைந்து கிளம்பிச சென்றார்.
இந்திரபிரஸ்தத்தின் எல்லையில் யுதிஷ்டிரர் சார்ந்த ஜனங்களும் ஸ்ரீகிருஷ்ணரும் அவர் சார்ந்த ஜனங்களும் ஒரு சேர சந்தித்தனர். பெரியவராகிய யுதிஷ்டிரரை ஸ்ரீகிருஷ்ணர் தன் ரதத்தில் இருந்து இறங்கி வணங்கினார். பதிலுக்கு யுதிஷ்டிரரும் மிகுந்த அன்புடன் ஸ்ரீகிருஷ்ணரை ஆரத் தழுவி வரவேற்றார். குசல விசாரிப்புக்குப் பிறகு அனைவரும் ராஜசூய யாகம் நடக்கவிருக்கும் சபா மண்டபத்தை நோக்கிச் சென்றனர்.
இத்துடன் நான்காம் பாகம் நிறைவடைந்தது.
சிசுபாலவதம் பாகம் ஐந்து தொடரும்.