சிக்கல்




ஓவியம்: சேகர்
வாழ்க்கையில் ரொம்ப அடிபட்டு முன்னுக்கு வந்தவர் சுகந்தன் மாமா. எந்த ஒரு பிரச்னைக்கும் அவரிடம் தீர்வு இருக்கும். குழப்பம் மிகும் நேரங்களில் நான் தேடி ஓடுவது சுகந்தன் மாமா வீட்டுக்குதான்.
அன்றைக்கும் போயிருந்தேன். ஒரு நூல்கண்டில் மும்முரமாகச் சிக்கல் பிரித்துக்கொண்டு இருந்தார் மாமா. என்னைக் கண்டதும், ‘‘வாம்மா சக்தி! விஷயம் இல்லாம வரமாட்டியே?’’ என்று சிரித்தார்.
‘‘எல்லாம் என் அப்பா விஷயமாதான் மாமா! எப்பவும் டென்ஷனாவே இருக்கார். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழறார். எல்லார் மேலேயும் அனாவசி யத்துக்குக் கோபம். எப்படி அவரைச் சமாதானம் பண்றதுன்னே தெரியலே. ஏதாவது வழி சொல்லுங்களேன்!’’
‘‘முன்னேயெல்லாம் ரொம்ப நிதானமா இருப்பாரேம்மா? ஆபீஸில் ஏதாவது பிரச்னையோ?’’ என்று என்னிடம் பேச்சுக் கொடுத்தபடியே நூல்கண்டின் சிக்கலை விடுவிக்க ஆரம்பித்தார் மாமா. பொறுமை யாக நூலின் முனையைத் தேடியெடுத்து, ஒவ்வொரு முடிச்சாகப் பிரித் தெடுக்கலானார்.
‘‘எதுக்கு மாமா இவ்ளோ சிரமப்பட றீங்க? இது சாதா நூல்தானே? சிக்கல் பகுதியைக் கட் பண்ணி எடுத்துட்டு மீதியை உபயோகிச்சுக்கலாமே?’’ என்றேன்.
‘‘அட அசடே, இந்த நூலை உபயோகிக் கவா இவ்வளவு மெனக்கெட்டு சிக்கலைப் பிரிச்சுட்டிருக்கேன்? இது என் தினசரி பிராக்டிஸ்மா! வேணும்னே நூல்கண்டுல சிக்கல் பண்ணிக் கொடுத்துட்டுப் போவா என் பொண்ணு. தினமும் இப்படி சிக்கலைப் பிரிச்செடுக்கிறதில் ஒரு அரைமணி நேரமாவது செலவழிப்பேன். அதுல என் மனசை ஒருமுகப்படுத்தி நான் காட்டுற ஈடுபாடும், பொறுமையும், தொடர் முயற்சியும்தான் எந்தப் பிரச்னையையும் அதே மாதிரி அணுக உதவுது. சரி, அது போகட்டும்… உன் பிரச்னைக்கு என் ஆலோசனை என்னன்னா…’’
‘‘எனக்குத் தெரிஞ்சுடுச்சு. தேங்க்ஸ் அங்கிள்! நான் வரேன்’’ என்றபடி விரைந்தேன் வீட்டுக்கு.
– வெளியான தேதி: 09 ஏப்ரல் 2006