சாம்பசிவத்தின் அதிசயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 25, 2025
பார்வையிட்டோர்: 2,047 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிராராசுதார் சாம்பசிவம் புத்தகமும் கையுமாக உட் கார்ந்திருக்கும் கமலத்தைப் பார்த்தார். உடனே காலையில் அவர் பெண் தங்கம் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்து வேதனையைக் கொடுத்தன. “அப்பா, பேசாமல் இருக்கிறீர்களே ! கமலத்திற்கு வரன் தேட வேண்டாமா? இந்த வருஷமும் கல்யாணம் பண்ணாவிட் டால் நன்றா யிருக்குமா?” என்றாள் கவலையுடன். 

கமலம் அவருடைய பேத்தி. நேற்றுத்தான் பிறந் தாள் போலிருக்கிறது. அதற்குள் பதினைந்து வருஷ காலம் ஓடிவிட்டது. அவள் நன்கு உயர்ந்து வளர்ந்திருந் தாள். அவளுக்குக் கணவன் தேடும் பொறுப்பு, சாம்ப சிவத்தின் பேரில் விழுந்தது. கமலத்தின் தந்தை இறந்து இப்பொழுது பத்து வருஷத்திற்குமேல் ஆகிவிட்டது. ஒரே பெண்குழந்தையுடன் கைம்பெண்ணாகி வீடு வந்து விட் டாள், சாம்பசிவத்தின் பெண் தங்கம். அப்பொழு திருந்து சாம்பசிவமும் வேறு மனிதர் ஆகிவிட்டார். பெண் கள் கல்வியும் பெண்கள் சுதந்தரமுமே அவர் முக்கிய லட்சியங்களாகிவிட்டன. 

தங்கத்துக்குச் சிறு வயசில் கல்யாணம் செய்ததில் அவருக்கோ அவர் பெண்ணுக்கோ துளிக்கூடச் சுகமில்லை. “அப்பா, சாம்பசிவம்! கன்னிகாதானம் செய்து கொடு. பிள்ளை பிறக்கட்டும்’ என்று அவரைச் சதா தொந்த ரவு செய்து, பத்து வயசுச் சிறுமி தங்கத்துக்கு மணம் முடிக்கும்படி செய்துவிட்டாள் அவருடைய தாய். 

அன்று ஆரம்பமான சம்பந்திச்சண்டை, தங்கம் கைம் பெண்ணாகி வீடு வந்த பிறகுதான் ஓய்ந்தது. சாம்பசிவம் ஒரு மிராசுதாரின் பிள்ளைக்குத்தான் பெண்ணைக் கொடுத்திருந்தார். அப்பொழுது பிள்ளைக்கு வயது பதினெட்டு. ஏதோ படித்துக் கொண்டிருந்தான் பார்ப்பதற்கு லக்ஷணமாக இருந்தான். இன்னும் என்ன வேண்டும்? கல்யாணமும் நிச்சயமாகிச் சுபமாக நடந்தே றிற்று. ஆனால் கல்யாணத்தின்பொழுதே சீர், செனத்தி, அவமரியாதை, மரியாதை என்பதாக மனஸ்தாபம் ஆரம்பமாயிற்று. 

‘கிடக்கிறார்கள்; பெண்ணைக் கொடுத்துவிட்டால் அடிமை என்பதாக எண்ணம் போலும்’ என்று எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்தார் சாம்பசிவம். அவர் கொஞ்சம் சுயமரியாதையில் நம்பிக்கை உள்ளவர். ‘நம்மைத் தாழ்த்திக்கொண்டு பிறரை எதற்காகப் பிரமாதமாக உபசரிப்பது?’ என்று நினைப்பவர். இவர் அலட்சியம் காரணமாகப் பிள்ளையின் தந்தைக்கும் கோபம் விருத்தியாயிற்று. 

இரண்டு மூன்று வருஷம் கழித்துப் பெண்ணின் சாந்திக் கல்யாணத்தின் பொழுது அவர்கள் சச்சரவு உச்ச நிலையை அடைந்தது. நேருக்கு நேராகவே சம்பந்திகளுக் குள் வார்த்தைகள் தடித்துவிட்டன. “பெண்ணைப் பெற்ற வனுக்கு இவ்வளவு அகம்பாவமா?” என்றார் பிள்ளை யின் தந்தை. “பிள்ளையைப் பெற்றுவிட்டதனால் இவன் உயர்ந்துவிட்டானா?” என்றார் சாம்பசிவம். சாம்பசிவத் தின் கர்வத்தை அடக்க ஒரு வழி கண்டுபிடித்தார் அவ ருடைய சம்பந்தி. சாந்திக் கல்யாணமாகி வீடு வந்த நாட்டுப் பெண்ணைத் திரும்பித் தந்தை வீட்டுக்கு அனுப் பவில்லை. “அப்பா! அவர்கள் குழந்தையை அனுப்பா மலே இருக்கிறார்களே ?” என்று அவர் தாய் அங்க லாய்த்தாள்.”அம்மா, நீதானே பிள்ளைக்காகப் பெண் ணைத் தானம் செய்யச் சொன்னாய்? பிள்ளை பிறக்கா விட்டாலும் பெண்ணைத் தானம் செய்தாயிற்று. பிறகு என்ன!” என்பார். 

“ஐயோ; நான் அதற்காகவா சொன்னேன் ? ரொம்ப அழகாயிருக்கு ! ஏதாவது சமாதானம் சொல்லிக் குழந்தையை அழைத்து வாடாப்பா. என் கண்மணியைப் பாராமல் என்னால் இருக்க முடியவில்லை” என்று அவள் கண்ணீர்விட ஆரம்பித்தாள். ”அம்மா, நல்ல வேலை செய்தாய். பதினாயிரக் கணக்கில் செலவு செய்து பெண் ணைக் கொடுத்துவிட்டு மறுபடியும் நம் வீட்டில் அழைத் துச் சோறு போடுவதா? நீ சொல்வது சரியாக இல் லையே” என்று பேச்சை வேடிக்கையாகத் திருப்பிவிடு வார் சாம்பசிவம். இப்படி அவர் சொன்னாரே தவிர, பெண்ணைக் காணாத துக்கம் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக்கொண் டிருந்தது. 

பிறகு பிள்ளைப் பேற்றுக்குப் பெண் வந்ததுகூடப் பல பேர் மத்தியஸ்தத்திலும் சமாதானத்திலுந்தான் நடந்தது. இவர்கள் உறவுமுறை இந்நிலையில் இருக்கும் பொழுது பெண் புக்ககத்தில் சந்தோஷமாய் வாழ முடி. யுமா ? அவளும் எவ்வளவோ சொற்களைக் கேட்டு மனம் புண்பட்டிருந்தாள். கணவனுடைய பலம் கொண்டு எதையும் லட்சியம் செய்யாமல் இருக்கும் காலம் வரு வதற்குள் வாழ்வே முடிந்துவிட்டது. 

இனிச் சம்பந்திகள் மனமொத்து இருக்கவேண்டிய அவசியம் இல்லாமலே போயிற்று. தம்முடைய துக்கத்தை விடச் சாம்பசிவத்தின் துக்கம் அதிகமென்று உணர்ந்த சம்பந்தி, சாம்பசிவம் விரும்பியபடியே தங்கத்துடன் குழந்தை கமலத்தையும் இவரிடம் ஒப்பித்தார். 

ஆகையால் கமலத்திற்கு வரன் தேடும் விஷயத்தில் தம் மனம்போல் நடத்த முழுச் சுதந்தரமும் சாம்பசிவத் திற்கு இருந்தது. தங்கத்தைக் கொடுத்ததுபோல் சொற் பப் படிப்புப் படித்துக்கொண்டு பெற்றோருக்கு அடங் கியிருக்கும் சிறுபையனுக்கு அவர் கமலத்தைக் கொடுக்க விரும்பவில்லை. நன்றாகப் படித்து உத்தியோகமேற்றுச் சுயமே புத்தி தெரிந்து நடக்கும் பிள்ளைக்குத்தான் கொடுக்கவேண்டும். மேலும் அவன் ஸ்திரீகளைச் சமமாகப் பாவித்து நடத்துபவனாகவும் இருக்கவேண்டும். இது நிச்ச யம். இவ்விதம் தமக்குள்ளே சங்கல்பம் செய்து கொண்டார் சாம்பசிவம். 

முதலிலிருந்தே இந்த எண்ணத்தோடு கிராமத்தை விட்டுத் திருச்சிக்கு வந்து குடித்தனம் நடத்தினார். பேத் தியைப் பள்ளிக்கூடத்தில் படிக்கவைத்தார். பெண்ணும். தனியே மனம் புழுங்காமல் இருக்கவேண்டி ஓர் உபாத்தி யாயினியை நியமித்துக் கல்வி கற்பிக்கச் செய்தார். அவர் மனைவியின் காலமும் முடிந்துவிட்டது. பெண்ணின் வைதவ் யமே அவளுக்குத் தீராத வியாதியாக முடிந்தது. வயசு சென்ற அவருடைய தாய் மட்டும், அவள் போகணுமா நான் இருக்கணுமா ?” என்று சொல்லிக்கொண்டு கூட தில் விசுபலகையோடு பலகையாகக் கிடந்தாள். ஆனால் கிழவிக்குப் புத்தி மாறாட்டம் என்பது மட்டும் சிறிதும் இல்லை. “கமலத்துக்குக் கல்யாணம் பண்ணடா அப்பா’ என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே வந்தாள். “ஆரம்பித்துவிட்டாயா, அம்மா? உன் விருப்பத்தின் படி அன்று தங்கத்துக்குக் கல்யாணம் நடத்திச் சுகமடைந்தாய் விட்டது. போதும்” என்பார் சாம்பசிவம். “ஏதோ நாம் கொடுத்துவைத்தது அவ்வளவு தான். அதற்கும் இதற்கும் என்ன?” என்று கிழவி சொல்வாள். 

இந்த வருஷம் கமலம் ஸ்கூல்பைனல் பரீட்சைக்குப் போகிறாள். வயசு பதினைந்து நிரம்பிவிட்டது. பார் வைக்குச் செழித்து வளர்ந்திருக்கும் கொடி போல் தள தளப்பாய் வளர்ந்திருக்கிறாள். இனி வரன் தேடவேண்டி யதுதான் என்று சாம்பசிவம் நினைத்தார். அடிக்கடி அவர் பெண் தங்கம் அவருக்கு அதை நினைப்பு மூட்டத் தொ டங்கினாள். கல்யாணமே இல்லாவிட்டால் என்ன என்று ‘நினைக்கும் அளவுக்கு அவருக்கு அதில் வெறுப்பு ஏற்பட வில்லை. ‘நல்ல குடும்பங்களில் நன்கு படித்துப் புது நாக ரிக எண்ணங்களுள்ள பிள்ளைகள் எவ்வளவோ பேர் இருப்பார்கள். ”சிறிது பொறுத்திருந்தாவது அப்படிப் பட்ட பிள்ளையாண்டான் ஒருவனைத் தேடிப் பிடிக்க வேண்டும். அதுவரையில், இன்னும் சில வருஷம், கமலம் எப்.ஏ., பி. ஏ., என்று படிக்கட்டுமே? அப்பு றம் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?” என்று ஒவ்வொரு சமயம் உள்ளூற அவர் எண்ணுவதுண்டு. ஆனால், பெண் தங்கத்தைத் திருப்தி செய்ய அவர் கடமைப் பட்டிருக்கிறார். அவள் சிறிது காலமாகப் பெண் கல்யா ணத்தைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியிருந்தாள். கணவன் இருந்தால் தந்தை தயவைத் தேடவேண்டி இருந்திருக்குமா?” என்று அவள் வருந்த இடம் கொடுக் கக்கூடாது, என்ற தீர்மானத்துடன் வரன் தேடத் தெடாங்கினார் சாம்பசிவம். அவர் அதிகம் தேடி அலைய வேண்டியிருக்கவில்லை. பட்டணத்தில் சேஷாத்திரி என்ற ஒரு வக்கீலுடைய மகன் மேல்நாடு சென்று கல்வி கற்று நாகபுரி காலேஜில் ஆங்கில ஆசிரியனாக இருந் தான். அவன் பெயர் வைத்தியநாதன். அதை அவன் எஸ். வி. நாதன் என்பதாகக் குறுக்கி வைத்துக்கொண் டிருந்தான். எல்லா விதத்திலும் அவன் தேவலை என்பதாகச் சாம்பசிவம் நினைத்தார். கல்யாணம் நிச்சயமாவ தற்கு வேண்டிய பிரயத்தனங்களைச் செய்தார். எஸ். வி. நாதன் பெண் பார்க்க வந்தபோது அவன் நடை உடை யாவும் பெரும்பாலும் மேல்நாட்டைப் பின் பற்றினவையாக இருந்தன. தங்கம் மட்டும், “இவ்வளவு மேல்நாட்டு நாகரிகம் உள்ளவன் நம்மிடம் பெண் கொள்வானா? அப்படிச் செய்துகொண்டாலும் பிறகு சரிப்பட்டு வருமா?” என்று சந்தேகித்தாள். “இவன் நாகரிகமாகத்தான் இருக்கட்டுமே; கர்நாடகப் பேர் வழிக்குக் கல்யாணம் செய்துகொடுத்து என்ன சுகப் பட்டோம்?” என்றார் சாம்பசிவம். 

“என்னை மணப்பதில் உனக்கு விருப்பந்தானே?” என்று நாதன் கேட்டபொழுது கமலம் தன் பெரிய கருவிழிகளால் அவனை ஒரு பார்வை பார்த்துக் கண் களைத் தாழ்த்தித் தலையைக் குனிந்து கொண்டாள். அவ் வளவு தான். அதையே அவள் சம்மதத்தைத் தெரிவிக்கும் பதிலாகக் கொண்டு தனக்கும் விருப்பம் என்பதைத் தெரிவித்துவிட்டான் நாதன். பிறகு, சாம்பசிவம் பெண் ணுடன் சேர்ந்து கமலத்தின் விருப்பத்தைத் தனியே விசாரித்த பொழுது, “உனக்கும் அம்மாவுக்கும் இஷ்ட மானால் எனக்கும் இஷ்டந்தான்” என்று ஒரே வார்த்தை யில் சொல்லிவிட்டாள் அவள். அந்தப் பதிலிலுள்ள அடக்கமும் சமர்த்தும் சாம்பசிவத்தை உணர்ச்சி வெள் ளத்தில் முழுகச் செய்தன. கமலத்துக்குத் தகுந்த கணவனாக அவன் இருக்க வேண்டுமே என்று அவர் பகவானைப் பிரார்த்தித்தார். 

வக்கீல் சேஷாத்திரி பதினாயிரம் ரூபாய் வரதக்ஷிணை கேட்டது சாம்பசிவத்திற்கு ஆச்சரியத்தைக் கொடுக்க வில்லை; ஆனால் நாதன் அதை ஆட்சேபிக்காததுதான் ஏமாற்றத்தைக் கொடுத்தது. தந்தை ஏதோ சீமைப் படிப்புக்குச் செலவு செய்த பணத்தை இந்தச் சாக்கில் வாங்கிவிட வேண்டுமென்று நினைக்கிறார்; ஆனால் இவ் வளவு படித்த மகனுமா அதை மறுத்துக் கூறாமல் இருக் கிறான்? இவன் படித்த லட்சணம் இதுதானா?’ என்று வியந்தார். 

ஆனால் அதற்காக இவ்வளவு தூரம் ஏற்பாடான கல்யாணம் நிற்குமா ? யாவும் மேலே நடந்தன. வைதிகக் காரியம் ஒன்றிலும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று நாதன் சொல்லிவிட்டான். தாலி கட்டினானே தவிர மற்ற வைதிகக் காரியங்கள் ஒன்றும் செய்யவில்லை. இது சாம்பசிவத்துக்குத் தம்மையே அவமதிப்பது போல் இருந்தது. அவர் அழைப்புக்காக வந்திருந்த அவ்வளவு பெரிய மனிதர்கள் முன்னிலையில் மாப்பிள்ளை விசித்திரமாக நடந்துகொண்டது அவருக்கு மிகுந்த வருத்தத் தையும் அவமானத்தையும் கொடுத்தது. 

“தனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் வயசில் மூத்த நம்மையாவது கௌரவித்தானா?” என்று வருத்தப்பட்டார். என்ன ஆனால் என்ன? கல்யாணம் நடந்து விட்டது. 

காலேஜ் விடுமுறை கழிந்து நாதன் ஊருக்குப் புறப் படும்பொழுது கமலத்தையும் உடன் அழைத்துப் போக வேண்டுமென்று சொன்னான். சாம்பசிவத்திற்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. “இன்னும் ஆறு மாதம் போகட்டுமே” என்றார். தங்கமோ, “அவள் குழந்தை ; திடீரென்று அவ்வளவு தொலைவில் தனியே போய் எப்படி இருப்பாள் ?” என்று கவலைப்படத் தொடங்கினாள். இதெல்லாம் மாப்பிள்ளையின் காதில் ஏறுவதாயில்லை. அவன் இருக்கும்பொழுது தனி என்ன? கமலம் அவ னோடு போவதையே விரும்புவதாகச் சொன்னாள். அவள் விருப்பத்தை அவர்களைவிட அவன் நன்கு அறிந்திருந்தது போலிருந்தது அவன் பேச்சு. படித்தவனாயிற்றே. சில வருஷம் கமலம் காலேஜில் சேர்ந்து படிப்பதை ஆட்சேபிக்க மாட்டான் என்று அவர் நினைத்திருந்தார். அதொன்றும் அவசியம் இல்லை என்று மாப்பிள்ளை சொல்லிவிட்டதன் பொருள் அவருக்கு விளங்கவே இல்லை. 

புருஷனுடன் ஊருக்குப் புறப்படுமுன் கமலம் கண் கலக்கத்துடன் தாத்தாவை நமஸ்கரித்தாள். அவளுக்குச் சகல நன்மைகளையும் கொடுக்கும்படி பகவானைப் பிரார்த் திப்பது தவிர வேறொன்றும் சாம்பசிவம் செய்யக் கூட வில்லை. அவர் சொல்லுக்கு மதிப்பு இருந்தால் அல்லவோ அவர் ஏதாவது நடத்த முடியும்? முன்பு பழைய நாகரிகத் தில் பெண்ணை இழந்தார். இப்பொழுது புது நாகரிகத் திலும் பேத்தியை இழக்க நேர்ந்துவிட்டது. 

அந்தச் சம்பவத்தில் மாப்பிள்ளையின் தந்தையைக் குறை கூறினார். இப்பொழுது மாப்பிள்ளையேதான் அவரை அவமதிக்கிறான். பெரியவரான அவர் சொல்லுக்கு அற்ப வெளி மரியாதை காண்பிக்கக்கூட அவன் சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை. இதை நினைத்துப் பார்த்ததும் இன்னோர் எண்ணமும் திடீரென்று தோன்றி அவரைத் துடிக்கவைத்தது. ‘ஐயோ ! இவன் கமலத்தை எவ்விதம் நடத்துவானோ? அவனது மேல்நாட்டுத் தோரணையில் கமலம் மனுஷியாகத் தோன்றப் போகி றாளா? நமக்குப் பிறகு தங்கத்தின் கதி என்ன? கம லத்தை விட்டால் தங்கத்துக்கு வேறு திக்கில்லையே? தந்தையாகிய நானே அவளுக்கு இரு முறையும் கெடுதல் செய்துவிட்டேனே?’ என்று நினைக்க நினைக்க அவ ருக்கு ராத்தூக்கம் இல்லாமல் போயிற்று. ஸ்திரீ சுதந்தரம் வேண்டுமென்றால் கல்யாணமே கூடாது போலும் என்று கருதினார். 

மாப்பிள்ளைக்கு இரண்டொரு கடிதங்கள் போட்டுப் பார்த்தார். அவன் அவைகளுக்கு உடனுக்குடன் பதில் போடாதது அவரிடத்தில் அவனுக்கு இருந்த மரியாதைக் குறைவையே பின்னும் எடுத்துக் காண்பித்தது. கமலத் திடமிருந்து அவ்வப்போது வந்த கடிதங்களிலிருந்து க்ஷேம சமாசாரம் கேட்டு ஒருவாறு ஆறுதல் அடைந்து வந்தார்கள். 

முதலில் மாப்பிள்ளை, பிறகு மனைவி இவர்கள் இறந்தபொழுது இருந்ததை எல்லாம்விட இப்பொழுது சாம்பசிவம் மனம் குன்றியிருந்தார். 

“அப்பா, என்னால் உங்களுக்கு என்றும் கஷ்ட மாய்ப் போய்விட்டது” என்று தங்கம் வருத்தத்துடன் ஒரு நாள் சொன்னாள். “அப்படி அல்ல அம்மா! நான் தான் உனக்குச் சத்துருவாகக் காரியம் செய்திருக்கிறேன்” என்று சாம்பசிவம் பதிலளித்தார். 

இதன் மத்தியில் தீபாவளிப் பண்டிகை வேறு நெருங்கிவிட்டது. “மாப்பிள்ளையும் கமலமும் வருகிறார்களா?” என்று கிழவி கேட்கத் தொடங்கிவிட்டாள். சாம்பசிவத்திற்கும் மாப்பிள்ளையை அழைக்க ஆசை தான். ஆனால் கடிதம் எழுதி அவமானப்படுவதற்கு அவர் மனம் கூசிற்று. கடைசியாக அவர் போட்ட கடிதத்திற்கு அவன் பதிலே போடவில்லை. தீபாவளிப் பண்டிகையில் அவனுக்கு நம்பிக்கை எங்கே இருக்கப்போகிறது? அவன்தான் மதப்பற்று இல்லாதவன் ஆயிற்றே! 

தந்தையின் மனநிலையைத் தங்கம் அறியா தவள் அல்ல. அவர் வாய் விட்டுச் சொல்லாவிட்டாலும் அவள் ஊகித்துக்கொண்டாள். அவரை அநாவசியமாகப் புண் படுத்த அவள் விரும்பவில்லை. ஒரு புடைவையும் வேஷ்டி யும் வாங்கிப் பெண்ணுக்கு அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்து விடுவோம் என்பதாகத் தீர்மானித்துக்கொண் டாள். அதன்படியே செய்து, பின்வரும் கடிதத்தைப் பெண்ணுக்கு எழுதி அனுப்பி வைத்தாள்: 

“குழந்தை! உன்னையும், உன் கணவரையும் இந்தத் தீபாவளியைச் சாக்கிட்டாவது பார்க்க வேண்டுமென்று எனக்கும் உன் தாத்தாவுக்கும் எவ்வளவோ ஆசையாக இருக்கிறது.பாட்டிக்குக்கூடச் சதா உன் ஸ்மரணைதான். ஆனால் எதற்கும் கொடுத்து வைத்ததுதானே கிடைக் கும்? மாப்பிள்ளைக்குத் தீபாவளிப் பண்டிகையில் நம் பிக்கை இல்லை என்பது தாத்தாவுக்குத் தெரியும். மாப்பிள்ளை தொந்தரவாக நினைப்பார் என்பதை உத் தேசித்து மரியாதைக்குக் கடிதம் போடக்கூட அவர் துணியவில்லை. அவர் ஆசீர்வாதத்தோடு இந்தப் புடைவை யையும் வேஷ்டியையும் பெற்றுக் கொள்!” 

தலை தீபாவளி ஒரு தடபுடலும் இல்லாமல் இருப் பதைப் பாட்டியும் அறியாமல் இல்லை. “ஏண்டி, தங்கம்! மாப்பிள்ளையும் கமலமும் வரப் போகிறதில்லையா? உங்க அப்பா போய் அழைத்து வரப்படாதோ?” என்று கேட்டுக்கொண் டிருந்தாள். ‘கிழவியால் சும்மாக் கிடக்க முடியாது. ஏதாவது நச்சரிப்பு ‘ என்பதாக யாரும் அவளுக்குப் பதில் சொல்லுவாரில்லை. 

தீபாவளிக்கு முதல் நாள் கமலமும் அவள் கணவ னும் காரில் வந்து வீட்டு வாசலில் இறங்கினார்கள் என் றால், அப்பொழுது அந்த வீடு என்னவாக இருந்திருக்கும்? அம்மா!” என்று கூவிக் கமலம் தாயைக் கட்டி அணைத் தாள். சாம்பசிவத்துக்கும் தங்கத்துக்கும் தங்கள் கண் களையே நம்ப முடியவில்லை. சிறிது நேரம் சென்றது, சமாளித்துக்கொண்டு வந்தவர்களை வரவேற்பதற்கு. “ஸ்டேஷனுக்கு வரும்படி தந்தி கொடுத்தேனே, வர வில்லையா? முன்னாடிக் கடிதம் போட முடியவில்லை. வடக்கே தீபாவளி வெகு முக்கியமான பண்டிகை. காலேஜ் ஒரு வாரத்திற்குச் சாத்திவிட்டார்கள் ” என் றான் வைத்தியநாதன். 

“ஏதோ வந்தீர்களே, சந்தோஷம்” என்றார் சாம்பசிவம்.  

கமலம் கணவன் முன்னிலையில் தாத்தாவிடமும் அம்மாவிடமும் மாறி மாறி வெகு கலகலப்பாகப் பேசி வீட்டிற்கே தனிச் சோபையையும் அழகையும் அளித் தாள். அதுவரையிலும் சாவு வீடுபோல் ஓய்ந்து கிடந்த வீட்டில், ஆள்படைகள் உள்பட உத்ஸாகம் மேலிட்டுக் கல்யாண வீட்டைப்போல் கலகலப்பு உண்டாகி விட்டது. 

மறுநாள் காலையில் ஸ்நானம் முடிந்து கையோடு கொண்டுவந்த சேலையையும் வேஷ்டியையும் உடுத்துக் கொண்டு கமலமும் அவள் கணவனும் சாம்பசிவத்தை நமஸ்கரித்தார்கள். மாப்பிள்ளையிடத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் அவரைப் பிரமிக்கச் செய்தது. “ அப்பா! நீகூடக் கங்கா ஸ்நானம் செய்தாயா?” என்று அவர் ஆச்சரியத்தோடு கேட்டார். ” இல்லாவிட்டால் உங்கள் பேத்தி சும்மா விடுகிறாளா? என் சொல்படியெல்லாம் நடப்பதாகப் பாசாங்கு செய்து தன் இஷ்டப்படியே என்னை ஆட்டிவைக்கிறாள்!” என்றான் வைத்தியநாதன் மனைவியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே. வாஸ்தவத் தில் அவனிடம் உண்டான மாறுதல் சாம்பசிவத்துக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ‘பெண்களுக்கு இவ்வளவு சக் தியா’ என்று அதிசயித்து அவர் தம் பேத்தியை உவகை யுடன் பார்த்தார். “தாத்தா, அவர் வார்த்தையை நம் பாதே! அந்த ஊர்களில் இந்தப் பண்டிகை அவ்வளவு முக்கியம். தீபாவளி கொண்டாடாதவர்களை அவர்கள் இந்துக்களென்றே நினைப்பதில்லை. அவர்கள் உத் வேகம் இவரையும் கொஞ்சம் பிடித்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்!” என்றாள் கமலம். 

சாம்பசிவம் தனியாகப் பேத்தியைக் கூப்பிட்டு, ‘எப் பொழுது இப்படி இவன் மாறினான், அம்மா ! ஏதாவது மந்திரம் தந்திரம் கற்றுக்கொண்டு அவனை மயக்கி விட் டாயா? அவன் ‘ஸூட்’ டைத் தவிர்த்து வேஷ்டி கட்டு வானென்று நான் நினைக்கவில்லையே ! கல்யாணத்தில் அவன் ஒரு மந்திரம் சொன்னானா? அம்மி மிதிப்பது, ஸப்தபதி ஒன்றுமே செய்யவில்லையே! அப்பொழுது இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம்?” என்று கேட்டார். “என்ன தாத்தா, இதைப் போய்ப் பிரமாதப்படுத்துகிறாய்?” என்றாள் கமலம் சாதாரணமாய். 

“கல்யாணத்தின்போது நாங்கள் சொன்னதை அவன் துளிக்கூட லக்ஷ்யம் செய்யவில்லையே! மணையை விட்டு எழுந்துவிட்டானே ! ஓர் அநாசாரப் பயலுக்குக் கொண்டுபோய்ப் பெண்ணைக் கொடுத்துவிட்டோமே என்று நான் வருந்தினது ஈசனுக்குத்தான் தெரியும் என்றார். 

“விநாயக சதுர்த்தியின்போது பூஜைகூட அவரே செய்தாரே? எல்லாம் சொன்னால் தானே செய்வார்!” என்றாள் கமலம். மனைவி சொன்னால் கேளாத கணவன் இருக்கிறானா என்பதுபோலத் தொனித்தது அவள் பதில். 

இவ்வளவு வயசு சென்ற தங்கள் வார்த்தைக்கு மதிப்பு வைக்காதவன் ஒரு சிறு பெண்ணின் சொற்படி நடப்பதென்பதை நினைக்க நினைக்கச் சாம்பசிவத்துக்கு அதிசயமாகவே இருந்தது. 

கமலம் தாயிடம் தனிமையில், “அம்மா, உன் கடிதம் பார்க்கவும் நீயும் தாத்தாவும் என் பிரிவா ற்றாமையால் எவ்வளவு வருந்துகிறீர்களென்று தெரியவந்தது. உடனே அவரிடம் பலவாறு எடுத்துச் சொல்லிப் புறப்பட்டு வந் தேன். உன் மாப்பிள்ளை புது நாகரிகத்தில் இருந்தாலும் வெகு நல்லவர் அம்மா, கவலைப்படாதே!” என்று சொல்லிக்கொண் டிருந்ததைக் கேட்டபோது சாம்பசிவத்தின் அதிசயம் பன்மடங்கு ஆயிற்று. அதுவரையில் துக்கமயமாக இருந்தவர் இப்போது அதிசயமயமாகி விட்டார். 

பாட்டியின் முகபாவத்திலும் இப்பொழுது சந்தோஷத்தின் அறிகுறிகள் தென்படுகின்றன. இனிமேல், தான் நிம்மதியாகக் கண்மூடத் தயார் என்பது அதன் பொருள் போலும். 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *