சரசுவின் சௌந்தர்ய லஹரி
கதையாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 10,887
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
10. ஹம்சத்வனி

“ஏண்டியம்மா, இனி உனக்குக் கல்யாணம் செய்யா நாங்கள் அலட்சியம் காட்ட முடியாது. மலையில் நடந்ததெல்லாம் பாமா சொன்னாள், மகாலட்சுமி தனியாக இருக்கக் கூடாதென்று தேவி நினைக்கிறாள் போலிருக்கிறது. நீ என்ன சொன்னாலும் சரி. நான் திருமணம் பேசத்தான் போகிறேன்” என்றார்கள் தாயார்.
”சரி சரி, உங்களிஷ்டம்” என்று சொல்லிவிட்டுப் போனாள் சரசு.
இந்த வார்த்தையே தேன் கொடுத்த வரம்போலத் தான் தாயாருக்குத் தோன்றிற்று.
திடுதிப்பென்று மறுக்கக் கூடியவள், திருமணம் என்றால் சீறிவிழக் கூடியவள், இந்த அளவுக்கு வந்திருக்கிறாளே, போதாதா?
திருமணப் பேச்சு நடந்தது. தேவியின் அருளால் முடிந்தது.
பெண்ணை அவர்களுக்குப் பிடித்திருந்தது. பையனை இவர்களுக்குப் பிடித்திருந்தது.
பையன் நல்ல பக்தன் தான்.
இந்தக் காலத்து வாலிபனுக்கு திருநீறு, திருமணம் என்றால் கேலியாகத் தெரியுமே!
பையன் பெயர் தணிகைவேலன். கட்டுக் கட்டாக விபூதி பூசியிருந்தான். நடுவிலே சந்தனப் பொட்டின் மீது சாந்துப் பொட்டு வைத்திருந்தான். எடுத்ததற்கெல்லாம் ‘முருகா’ என்றான்.
மணவறையில் அவனை ஓரக்கண்னால் பார்த்தாள் சரசு, சாட்சாத் சாரதாம்பாளே தான் அவனை அனுப்பி இருப்பாள் போல் தோன்றிற்று.
ஊரிலே எல்லோரும் அதைப் பற்றியே பேசினார்கள்.
‘அவளும் ஒரு சந்நியாசினி. அவனும் ஒரு சாமியார்’ என்று சொல்லிக்கூட சிலர் சிரித்தார்கள்
பையனுக்கு சொத்துக்கள் அதிகம். கூடப் பிறந்தது, ஒரே ஒரு முத்த சகோதரி. விதவைத் தாயார். தஞ்சாவூரிலே நாற்பது வேலி நிலம்; கோடைக்கானலிலே ஒரு எஸ்டேட், செட்டியார்கள் பாணியில் சொன்னால் ‘இன்றையக் கணக்கில் ஐம்பது லட்சம் தேறும்’. ஆனால் தாய் கூடப் பிறந்தவர்கள், தந்தை கூடப் பிறந்தவர்கள் ஏராளம்.
பங்காளிகள், தாயாதிகள் வம்சாவளியிலேயே நூற்று அறுபத்தைந்து உறுப்பினர்கள் இருந்தார்கள்.
கோடைக்கானல் பங்களா தாமரையின் கணவன் பையனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன்தான்.
சரசுவின் மனம் முற்றிலும் மாறி இருந்தது. லௌகிக வாழ்க்கையில் இருந்து தான் விடுபட முடியாது என்றே அவள் நம்பத் தொடங்கினாள், என்றைக்குமில்லாத பருவத்து மனக் கிளர்ச்சியும் அவளுக்கு வந்திருந்தது.
சுற்றுச் சார்புகள்., சூழ்நிலைகள், தெய்வம் ஆகியவை கட்டளை இடும்போது அந்தக் கட்டளைக்குப் பணிவதே நியாயம். இல்லையென்றால் நாம் எதிர்பாராத தெல்லாம் நடக்கும்.
சரசு சுற்றுக்கொண்ட விஷயங்கள் குறைவென்றாலும், இந்த மார்க்கத்தில் நம்பிக்கையுள்ளவளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
மூவாயிரம் புத்தகங்கள் படித்தவள் பெற முடியாத புத்தியை சிலர் பிறவியிலேயே அடைந்து விடுவதில்லையா?
திருமணம் முடிந்து, சரசு சாந்தி முகூர்த்தத்திற்கான அலங்கரிக்கப்பட்டாள். சாதாரணமாக இந்துக்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு ஏராளமான நகை போட்டு மணவறை அலங்காரம் செய்வதில்லை, இரவு நேர வசதிக்காகக் கொஞ்சம் எளிமையாகவே அனுப்புவார்கள்.
சரசுவுக்குச் செய்யப்பட்ட அலங்காரமோ ஓர் எளிமையான குடும்பப் பெண்ணின் அழகையே பிரதிபலித்தது.
இப்போது அவள் முற்றிலும் வேறுபட்டவள். தத்துவ ஞானங்கள் மறைந்தோடிவிட்டன. சிற்றின்ப மின்சாரம் உடலெங்கும் விரவி நின்றது. குளிர்ந்த உதடுகள் கதகதப்பாக மாறின. கன்னங்களில் லேசான கொதிப்பிருந்தது.
பெரியவர்கள் உஷ்ணத்தைக் கழுத்திலே தானே தொட்டுப் பார்ப்பார்கள்.
சரசுவின் தாயாரும் தொட்டுப் பார்த்தார். மகள் நல்ல பக்குவத்தில் இருப்பது அவருக்கும் தெரிய வந்தது.
பாமாவின் முதலிரவன்று காய்ந்து போன விறகு போன்றிருந்த சரசு, இப்போது குலை போடாத வாழை மரம் போலிருந்தாள்.
அன்றொரு நாள் இரவு கோடைக்கானலில் அவள் உடம்பில் ஏற்பட்ட மாறுதல் இன்று அதிகமாக ஏற்படத் தொடங்கிற்று.
சினிமாக்களில் வருவது போல, பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பள்ளியறைக்கு மணமகள் செல்வது வழக்கமில்லை. வைக்க வேண்டியவற்றை ஏற்கனவே ஒரு மூலையில் வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் ஒரு மூதாட்டி ஓடி வந்து முதுகைத் தட்டி, ‘அங்கே போடி’ என்பார், அவ்வளவுதான். இந்தக் காலத்துப் பெண்ணாக இருந்தால் அவள் தானாகவே ஏற்பாடு செய்து கொள்வாள்.
சரசு சற்று பழைய பாணி. எல்லாம் பழைய முறையிலேயே நடந்தன.
நம்முடைய மூதாதையர்கள் சந்தித்தது போல் ஒரு சந்திப்பு, வழக்கமான நாணம். கூச்சம்! ‘ஐயோ விளக்கு எரிகிறதே!’ என்ற பயம் எல்லாம் நடந்தன.
அந்த அரவணைப்பு, அந்த சரசம்-சரசு அடிக்கடி துள்ளி விழுந்தாள். அவள் உடலுக்குள் கங்கை வெள்ளம் பிரவசித்தது.
தணிகைவேலன் நல்ல ஆண்மகன், முதல் நாள் சோதனையில் மனைவிக்கு எரிச்சல் ஏற்பட்டுவிடாமல் நடந்து கொண்டான். ஆனாலும் தாளமுடியாத உடல்வலி சரசுவுக்கு இருந்தது.
இல்லறத்தில் இந்த அனுபவமே மிகவும் புதுமை.
முதல் சில நாட்கள் போதை நிறைந்த சோதனைக் காலங்களாக இருக்கும், போகப் போகத்தான் தெரியும், அந்தப் பூவின் வாசமும் புரியும்.
சரசு அந்த இன்பவேதனையில் தள்ளாடினாள்.
பெண்களிலே மூன்று வகை உண்டு.. சிற்றின்ப நேரத்தில் தாங்கள் இன்பமடையும்போது அந்தக் கடைசி நேரத்தை பெருமூச்சோடு அனுபவிக்கும் பெண்கள்; ‘ஐயா’ என்றபடி கணவனைக் கட்டிப் பிடித்துக்கொள்ளும் பெண்கள்; அடுத்த வீட்டுக்குத் தெரியும்படி சப்தமிடும் பெண்கள், இவற்றில் முதல்வகை தெய்வதம்; இரண்டாவது மனிதத்துவம்; மூன்றாவது ராட்சசம்.
சரசுவின் சுகம், தெய்வதம்.
பொழுது போவதையே அவள் உணரவில்லை. சிட்டுக் குருவிகள் போல அவர்கள் உறவாடினார்கள். ஆனாலும் கூட அவள் வாயிலிருந்து ‘கிருஷ்ணா’ என்ற வார்த்தையும், அவன் வாயிலிருந்து ‘முருகா’ என்ற வார்த்தையும் வருவது நிற்கவில்லை.
பொழுது புலர்ந்தது. அதற்குள் எழுந்து சரசு குளித்து விட்டாள். ஆடவன் அலங்கோலமாகப் படுக்கையில் விழுந்து தூங்குவது போல், பெண்கள் தூங்குவதில்லை.
மீண்டும் கட்டுக்கட்டாக விபூதி, குங்குமம், பூஜை. இன்றையப் பூஜைதான் அவளுக்கு நியாயமான பூஜையாக இருந்தது.
கணவனும், மனைவியும் உடலுறவை நன்கு அனுபவித்து விட்டு மறுநாள் கடமைகளைக் கவனிக்கும் போது எல்லாக் கடமைகளுமே உற்சாகமாகக் காட்சி யளிக்கும். எந்த வேலையிலும் மனம் ஈடுபாடு கொள்ளும். ரத்தத்திலுள்ள உணர்வுகள் ஒருமுகப்பட்டு வெளியேறிய பிறகு, உடம்பில் ஒரு புதுத் தெம்பும் உற்சாகமும் இருக்கும், அப்போது அவர்கள் எதையும் செய்ய முடியும்.
சரசுவின் அன்றைய பூஜை சக்திக்கும் சிவனுக்கும் மட்டுமின்றி, ரதிக்கும் மன்மதனுக்குமே தெரிவிக்கும் பூஜையாக இருந்தது.
சரசுவின் திருமண வாழ்வில் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தது போல, கிராமமே மகிழ்ச்சி அடைந்தது.
“பிச்சைக்காரர்களோ, அன்னக் காவடிகளோ வந்தாள் சட்டிநிறையச் சாதமும், சாம்பாரும் போடுவாளே சரசு! போகட்டும், புண்ணியவதி நல்லா வாழட்டும்” என்றே ஊர் பேசிற்று.
இவ்வளவுக்கிடையிலும் விரோதிகள் இல்லாமலிருப் பார்களா?
திருமணத்துக்கு வந்தவர்கள் மறுநாள் விடை பெறுவதற்கு முன்னால், அந்த வீடு முழுவதுமே ரகசிசியக் கிடங்காக மாறிற்று.
யாரோ ஒருவன் கிளப்பிவிட்ட செய்தி, ஒவ்வொரு மூலையிலும் விஸ்வரூபம் எடுத்து நின்றது.
ஆங்காங்கு முன்று நான்கு பெண்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சரசுவிடமோ பாமாவிடமோ, பெற்றோரிடமோ யாரும் எதையும் பேசவில்லை. அவர்கள் என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்பது அவர்களுக்கும் விளங்க வில்லை.
சரசுவின் தாயார் ஒரு பெண்ணைப் பார்த்து. “என்னடி பேசுகிறீர்கள்? பேசுவதைச் சத்தம் போட்டுத் தான் வெளியிலே பேசுங்களேன்! எதையும் தாங்கிக் கொள்ள எங்களுக்குச் சக்தியுண்டு!” என்றார்கள்.
அந்தப் பெண் தயங்கித் தயங்கி, “சரசுவின் கணவருக்கு, ஏதோ நோய் என்கிறார்கள்” என்றாள்.
11. நாத நாமக்ரியை
‘நல்ல திருமணம்; நல்ல மாப்பிள்ளை: சரசுவுக்கு நல்ல வாழ்க்கை’ என்றெல்லாம் எண்ணிய அன்னையின் தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்றிருந்தது.
சரசுலின் காதில் விழாதா இந்தச் செய்தி?
“அதற்காக என்ன? கல்யாணம் ஆன பிறகு நோய் வந்திருந்தால் என்ன செய்யப் போகிறோம்? ஊரில் நாட்டிலே ஒவ்வொருவரும் எப்படி எப்படியோ வாழுகிறார்கள். போகட்டும். குஷ்டம் பிடித்த கணவனைக் கூடையிலே சுமந்து செல்லவில்லையோ நளாயினி?'” என்று சொல்லி விட்டாள், சரசு.
நம்முடைய பென்களுக்கு இந்தகைய வைராக்கியத்தையே புராணக் கதைகள் தானே கொடுத்தன.
சமுதாயக் கட்டுக் கோப்பை ஒழுங்காக வைத்துக் கொள்வதிலும் குடும்ப வாழ்க்கையைச் சீராக்குவதிலும் புராண-இதிகாசக் கதைகள் தானே ஒத்துழைக்கின்றன?
“அக்கா!”…என்று இழுத்தபடி கண்ணீர் விட்டாள் பாமா.
“போடி பைத்தியக்காரி! அவரவர் தலையில் எப்படிப் போட்டிருக்கிறதோ, அப்படித்தான் முடியும். ஒரு நாட்டிலே பொழுது விடியும் போது ஒரு நாட்டிலே இருண்டு போகிறநாம். கருங்கடலின் நிறம் ஒரு மாதிரி யாம், பசிபிக் கடலின் நிறம் ஒரு மாதிரியாம். பூமிக்கும் கடலுக்குமே தனித்தனி விதி இருக்கும்போது, நமக்கும் இருக்கத்தானே செய்யும்? என் கணவர் தங்கம், ரத்தினம், மாணிக்கம்! அதுபோதாது எனக்கு?” என்று கூறிவிட்டாள் சரசு.
‘”இல்லை அக்கா, சௌந்தர்ய லஹரி பாடுகின்ற உனக்கா இப்படி?” என்று இழுத்தாள் பாமா.
”அடி புத்தி கெட்டவளே! கம்பராமாயணம் படிப்பவனுக்கெல்லாம் சீதை வாய்த்து விடுகிறாளா? இல்லே, சிலப்பதிகாரம் படிப்பவனுக்கெல்லாம் கண்ணகி கிடைத்து விடுகிறாளா? ஏன் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறாய்? அன்னை சாரதாம்பாள் ஏதோ காரணம் கருதித் தான் அந்தச் சம்பந்தத்தை முடித்திருக்கிறாள்” என்று சொன்னபடியே வேறு வேலையைக் கவனிக்கத் தொடங்கி விட்டாள். சரசு.
கிராமத்தில் வீட்டுத் திண்ணைகளே அச்சுக் கூடங்கள். பெண்களின் வாய்களே தினசரிப் பத்திரிகைகள். செய்தி ஊரெங்கும் பேசப்பட்டது.
சரசுவோ தன் கணவனைக் கூட்டிக்கொண்டு கோவிலுக்கே போய் வந்தாள். நடந்தே போனார்கள். நடந்தே திரும்பினார்கள். அவர்களைக் கிராமம் வேடிக்கை பார்த்தது.
“சரசு! என்னைப்பற்றி யாராவது ஏதாவது சொன்னார்களா?” என்று கூட்டமில்லாத இடத்துக்கு வந்த போது கேட்டான், தணிகைவேலன்
சரசு பொய் சொல்வாளா?
”ஆம். சொன்னார்கள்! அதற்காக என்ன? ஊரிருக்கும் வெட்டிக் கழுதைகள் ஆயிரம் பேசும். அதைப் பற்றி நீங்கள் ஏன் கவவைப்படுகிறீர்கள். நான் தான் உங்களுக்கு, நீங்கள்தான் எனக்கு” என்று தீர்மானமாகப் பதில் சொன்னாள்,
”அவர்கள் சொல்வது உண்மைதான் சரசு. எனக்கு உடம்பெங்கும் ஏதோ தேமல் மாதிரி இருக்கிறது. என் அப்பாவும் யார் யாரோ வைத்தியரிடமெல்லாம் காட்டினார். அதிலெல்லாம் பலனில்லை. கோவில் குளங்களுக்குச் சென்று வந்ததிலே தான் கொஞ்சம் நன்மை உண்டாயிற்று. இப்போது ஒன்றும் அதிகமில்லை” என்று அவளுக்கு ஆறுதல் சொல்வது போலப் பேசினான் தணிகை வேலன்.
“இருந்தால்தான் என்ன, நான் வருத்தப்படப் போகிறனோ…? பாண்டு மகாராஜாவை, மணந்த குந்திதேவி பாரதத்தின் தலைநாயகி யாகவில்லையா? நோய், கல்யாணத்துக்கு முன்பும் வரலாம்; பின்பும் வரலாம். வீணாக மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள்” என்றாள் சரசு.
தனக்குக் கிடைத்த பத்தினியின் பெருமையை எண்ணிய போது தணிகைவேலன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அதற்கு மேல் சரசு அந்த ஊரில் வாழ விரும்பலில்லை.
பாமா தன் கணவனையும் தன்னோடு வைத்துக் கொண்டது போல அவளும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
‘மாப்பிள்ளையைக் கூட்டி மாமியார் வீட்டோடு வைத்துக் கொண்டுவிட்டாள்’ என்ற கெட்ட பெயரை தன் தாயாருக்கு உண்டாக்க விரும்பவில்லை.
வழக்கம்போல் பெண்ணழைக்கச் சொன்னாள்.
ஆரத்தி எடுத்து குங்குமமிட்டு அம்மா அப்பா வழியனுப்ப, பாமா கண் கலங்க, விநாயகர் கோவிலில் ஒருமுறை விழுந்து எழுந்து மேலைக் குடியிருப்புக்குப் புறப்பட்டாள் சரசு.
மூத்த மகள் என்றால் தாய்ப்பாசம் பிரிட்டுக் கொண்டு வருமே! “அம்மா! வாரம் ஒருமுறை வந்து விட்டுப்போ” என்று கண் கலங்கினாள் தாயார்.
“எப்படியம்மா? முக்கியமான அலுவல்களுக்கெல்லாம் வந்து விடுகிறேன்* என்று கூறி விடைபெற்றுக் கொண்டாள் சரசு.
மேலைக்குடியிருப்பு சிறிய கிராமம்தான். ஆனால் எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
பிரெஞ்சுக்காரர்கள் திட்டமிட்டு உருவாக்கிய புதுச்சேரியைப் போல தெருக்களெல்லாம் நூல் பிடித்த மாதிரி ஒழுங்காக அமைந்திருக்கும்.
கடைத் தெருளிலுள்ள அத்தனை கடைகளும் பணக்கார நிலப்பிரபுக்கள் கட்டி விட்ட கடைகளாதலால் பட்டணத்துக் கடைகள் போலிருக்கும்.
சுற்றிலும் புஞ்சைக் காடுகள்தான். கிணற்றுப் பாசனம் தான்! ஆனால் மோட்டார் பம்பு செட்டுகளால் அவை முப்போகம் தந்து கொண்டிருந்தன.
வேர்க்கடலைப் பயிர் அதிகமாதலால் பணப் புழக்கமும் அதிகம்.
அரசாங்கத்தின் தயவால் ஆறாவது னமலில் ஒரு சர்க்கரை ஆலை வந்ததிலிருந்து, ஓரளவு இருந்த நஞ்சை களிலெல்லாம் கரும்பு பயிரிடப்பட்டு நல்ல மகசூளைத் தந்து கொண்டிருந்தது.
சரசுயின் மாமனாருக்கு மாமனாருக்கு அங்கேயும் நிலபுலன்கள் இருந்தன.
தமிழ்நாட்டில் சில வழக்குச் சொற்கள் உண்டு.
யாரும் யாரையாவது கேட்கும்போது, “நிலம் பலம் உண்டா! நகை பகை போடுவார்களா?” என்று கேட்பார்கள்.
நிலம், பலமாம்; நகை, பகையாம்!
அப்படி ஒரு நிலம் ஊரை ஒட்டி.
அது சரசுவின் கணவன் தணிகைவேலன் பேரிலிருந்தது.
பாரதி கற்பனை செய்தானே காணி நிலம்; அதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல அது.
அங்கே பாட்டுக் கனிந்திட அந்தப் பத்தினிப் பெண் விரும்பினாள்.
தங்கள் கூட்டுக் களிப்பினிலே கவிதைகள் கொண்டு தர தணிகைவேலன் விரும்பினான்.
சரசுவின் மாமியார் உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டார்.
சின்னஞ்சிறிசுகள், தன்னத் தனிமையை விரும்புகின்றன; போகட்டுமே!
”ஒரு விஷயம் சரசு, அந்த வீட்டிலே நீண்ட காலமாக ஒரு அம்மையார் குடி இருக்கிறார். பாவம்! அவருக்கு வாய் பேசவராது. அதையொட்டியுள்ள சிறிய வீட்டுக்கு அவர்களை மாற்றியிடுகிறேன். உங்களுக்கு அவர் ரொம்ப ஒத்தாசையாக இருப்பார்” என்றார் மாமியார்.
”ஏன்? எங்களுடனேயே இருக்கட்டுமே” என்றாள் சரசு.
“இல்லை, அவர்கள் தனியாகலே இருக்கட்டும்” என்றான் தணிகைவேலன்.
கணவனின் காதல் வேகம், சரசுவின் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திற்று.
அந்த வீட்டிலிருந்த கேழ்வரகு முட்டைகளும் மணிலாக் கொட்டை மூட்டைகளும் இடம் மாற்றப் பட்டன. வீடு சுத்தப்படுத்தப்பட்டது. தேவையான சோபாக்கள் தட்டுமுட்டுச் சாமான்கள் கொண்டு வரப்பட்டன.
அந்த ஒரு வாரம் மட்டும் மாமியாரோடு தங்கியிருந்தார்கள் தணிகைவேலனும், சரசுவும்.
மூலங்குடி மக்களைவிட, மேலைக்குடி இருப்பு மக்கள் நல்லவர்கள் போலிருக்கிறது.
சரசு பிள்ளையார் கோவிலுக்குப் போரும் போதேல்லாம் ஒவ்வொருவரும் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.
அவளுக்கும் மேலைக்குடி இருப்பு மிகவும் பிடித்து விட்டது.
மொட்டை மாடியில் சிலுசிலுவென்று சிறந்த காற்று வீசும். சரசுவும் தணிகையேலனும் அங்கேதான் பள்ளி கொள்வார்கள்.
பக்கத்தில் அதிகம் வீடுகள் இல்லை.
தணிகைவேலன் தனது இரண்டாவது இரவில் சரசுவை மெல்ல அருகணைத்து, ஒரு டார்ச் லைட்டைப் போட்டு தன் வலது தொடையைக் காட்டினான். அதில் லேசான வெள்ளைக் கீறல்கள் இருந்தன.
“தூ? இவ்வளவுதானா? இது அழகுத் தேமல்!” என்று கூறிவிட்டாள் சரசு.
‘ஊரிலே எந்த டாக்டரும் அப்படிச்சொல்ல வில்லையே! மனைவி, மனைவிதான்’ என்று மயங்கினான் தணிகை வேலன்
மெதுவாக, நீண்ட நாளைய கிராமபோன் ஒன்றை அவன் போட்டான்.
‘மனைவி அமைலதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று ஒரு பாட்டு.
“அது மட்டும்தானா! கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்” என்றான் தணிகைவேலன்.
“எனக்குக் கடவுள் நல்ல வரம்தான் கொடுத்திருக்கிறார். ஆனால் குழந்தை அமைவதெல்லாம் குமரன் கொடுத்த வரம்” என்றாள் சரசு.
“நமக்குக் குழந்தை வேண்டுமா சரசு?” என்று கேட்டான் தணிகைவேலன்.
“ஏனப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டாள் சரசு.
“இந்த மாதிரி நோயுள்ளவர்களுக்கு குழந்தை பிறந்தால்…” என்று அவன் இழுத்தபோது, அவன் வாயை மூடி, “எந்த நோயுமே வாரிசு பரம்பரையாக வருவதில்லை’“ என்று முடித்தாள், சரசு.
பள்ளியில் கொஞ்சம்கூட அருவருப்பில்லாமல் அவள் தன்னோடு கலந்து கொண்டதை எண்ணி எண்ணி பக்திப் பரவசமே அவனுள் எழுந்து விட்டது.
புதிய வாழ்க்கையை ஆனந்தமாக மேற்கொண்ட சரசு, தனிக்குடித்தனம் போய் கணவனுக்குச் சமைத்துப் போடும் நாளையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த ஏழு நாட்களில் அவள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, தானே ஒரு சுற்றுப் பெருத்துவிட்ட தாகவும், மகனுக்குக் கொஞ்சம் அளந்து போடும்படியும் மாமியார் கூறினார்.
“காய்கறிச் சாப்பாட்டில் உடம்பில் சதை போட்டாலும், அது ஊளைச் சதையாக இருக்காது அத்தை! மாமிசம் சாப்பிடுகிறவர்கள் தான் மூச்சு வாங்க நடக்கிறார்கள். மாமிசம் சாப்பிடும் பிராணிகளுக்குத்தான் நாக்கு வெளியே தொங்குகிறது. நான் அவரைச் சுத்த சைவமாகவே வைத்திருக்கப் போகிறேன்!” என்று சொல்லிக் காரில் ஏறினாள் சரசு.
“காட்டேஜ் வரையிலே நானும் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்” என்று கூடவே சென்றார் மாமியார்.
காய்த்துக் குலுங்கும் தென்னை மரங்களுக்கு நடுவிலே கார் சென்றதிலேயே பரவசமானாள் சரசு.
காட்டேஜுக்குள்ளே நுழைந்ததும், “ராஜேஸ்வரி!” என்று மாமியார் குரல் கொடுத்தார்.
கையிலே பூக்கூடையோடு எதிரே வந்து நின்ற அம்மையாரைப் பார்த்ததும், சரசு மறுபடியும் மூர்ச்சையடைந்தாள்.
12. கரஹரப்ரியா
“ஐயோ! இது என்ன மயக்கம்” என்றபடி சரசுவைத் தூக்க முயன்றார் மாமியார்.
“அவளை அப்படியே விட்டுவிடுங்கள். தானாகத் தெளிந்துவிடும்” என்றான், தணிகைவேலன்.
அவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனுக்கே தெரியவில்லை.
சரசுவின் தலையைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டார் மாமியார்.
தணிகைவேலன் சொன்னது போலவே சரசு மயக்கம் தெளிந்து எழுந்தாள்.
அவள் கண்களுக்கெதிரே ஒரு நாகப்பாம்பு படம் எடுத்து ஆடுவது போலவும், சில சிங்கங்கள் உலாவுவது போன்றும் அவளுக்குத் தோன்றியது.
வாய் பேசாத அந்த அம்மையார், அசல் சாரதாம்பாளாகவே காட்சியளித்தார்.
தான் போகுமிடமெங்கும் இப்படி ஒரு பிரமை சுற்றிச் சுற்றிச் சுற்றி வருவது குறித்து சரசுவுக்கே பயம் வந்துவிட்டது.
இதுவரையில் ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும் என்றெண்ணிய சரசு, ஏதோ அனர்த்தம் விளைவதற்குத்தான் இப்படி நடைபெறுகிறது என்று எண்ணத்தலைப்பட்டாள.
அவனால் எதையும் நம்ப முடியவில்லை.
அது வரையில் பக்திக்குரியவளாக இருந்த சாரதாம்பாள், இப்போது பயத்துக்குரியவளாக அவள் கண்களுக்குத் தோன்றினாள்.
“வேண்டாம் அத்தை, நாம் அந்த வீட்டுக்கே போய் விடலாம்” என்றாள் சரசு.
மாமியாருக்கும் அப்படித்தான் தோன்றிற்று.
“சரி, போகலாம்!” என்று சொல்லி, வீடு வந்து சேர்ந்தார்கள்.
அன்றிரவு சரசு சற்று சித்தப்பிரமை பிடித்தவள் போலவே காணப்பட்டாள்.
எங்கேயோ ஒரு குழந்தை அழுவது போன்று ஒரு சப்தம் அவள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
காலையில் எழுந்த சரசு பைத்தியக்காரியைப் போல விழித்தாள். யாரைக் கண்டாலும் பயந்தாள், சிறிய சப்தம் கூட அவள் காதுக்குப் பெரிய சப்தமாகக் கேட்டது. பக்கத்தில் அத்து பேரினால் நடுங்கினாள்.
கணவன் அருகில் வரும்போது மட்டும் அமைதியாக இருந்தாள்.
‘முதல் நாள் அவள் மூர்ச்சை அடைந்ததற்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும்’ என்று மாமியார் நினைத்தார்.
ஆனால் இரண்டொரு நாட்கள் தொடர்ச்சியாக சரசு சித்தப்பிரமை பிடித்தவள் போல் இருக்கவே தணிகை வேலனுக்கும் அவன் தாயாருக்கும் சந்தேகம் வந்துவிட்டது.
“அவளை டாக்டரிடம் காட்டுவது தான் தேவலை” என்றான் தணிகைவேலன்.
கிராமங்களில் டாக்டர்கள் சாதாரணமாகத் தொழில் பண்ணுவதில்லையே! அவர்கள் நகரத்தைத்தானே நம்புகிறார்கள்? ஏதோ ஒரு சில டாக்டர்கள் பெரிய மனசு வைத்து கிராமங்களில் தொழில் நடத்துகிறார்கள். அவர்களிலும் சிலர் கைராசி இல்லாதவர்களாகவோ, திறமை யில்லாதவர்களாகவோ இருக்கிறார்கள்.
ஆனால் மேலைக்குடியிருப்பில் இருந்த டாக்டர் ஜகன்னாதன் கைராசிக்காரர், திறமைசாலி, மனோ தத்வத் தத்துவ நிபுணரும் கூட. நகரத்தில் தொழில் நடத்தினால் லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம். ஆனால், பெரியவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்காக வருமானத்தை தியாகம் செய்து கிராமத்திற்கு வந்திருந்தார்.
அவர் எவ்வாவோ முயன்றும் கூட, சரசுவின் நோய் என்ன என்பது தெரியவில்லை.
அது உண்மையில் நோயாக இருந்தால்தானே மருத்துவர்கள் கண்டுபிடிக்க?
“இது ஒருவகை அதிர்ச்சி” என்று மட்டும் சொன்னார் டாக்டர்.
“என்ன அதிர்ச்சியாக இருக்க முடியும்?”
டாக்டரிடம் மெதுவாகக் கோபித்துக் கொண்டார் சரசுவின் மாமியார்.
“நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு விட்டேன் டாக்டர். தணிகைவேலனுக்கும் அந்த நோயை உங்களால் குணப்படுத்த முடியவில்லை. அதுதான் அவளுக்கு அதிர்ச்சியாக இருக்கும்!” என்றார்.
”அம்மா! உங்கள் மகனுக்கு ரத்தமே கெட்டிருக்கிறது. அந்த நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். அது மட்டுமல்ல. இந்த ரத்தத்தில் குழந்தை பிறந்தால், அது அங்கவீனமாகவும் இருக்கும். நீங்கள்தான் அவசரப்பட்டு விட்டீர்கள்” என்று ரகசியமாகச் சொன்னார், டாக்டர்.
“ஏதோ அதது விதி எப்படி இருக்கிறதோ பார்ப்போம்!” என்று கூறிவிட்டார் மாமியார்.
நமது அலோபதி டாக்டர்களில் பெரும்பாலோர் நோய் நாடி நோயிள் முதல் நாடி சிகிச்சை செய்வதில்லை. அவர்களே ஒரு விதி வைத்திருக்கிறார்கள். ‘வாந்தி வந்தால் இந்த மாத்திரை; பேதி ஆனால் இந்த மாத்திரை’ என்று எத்தகைய வாந்தி, எத்தகைய பேதி என்றுகூடச் சிலர் சிந்திப்பதில்லை. தங்களால் ஒரு நோயைத் தீர்க்க முடியவில்லை என்றால், யாராலும் முடியாது என்றே முடிவு கட்டி விடுவார்கள்.
”வேடத்தூருக்குக் கொண்டு போய் வேப்பிலை ரெங்கம்மாவிடம் காட்டுங்களேன்!” என்றாள் பக்கத்து வீட்டுக் கோமளவல்லி.
”அதுவும் சரிதான். அவள் மத்து பிடித்துக் குறி சொன்னால், என்ன நோய் என்பதாவது தெரிந்துவிடும்” என்று ஒப்புக் கொண்டார் மாமியார்.
வேடத்தூர் ரெங்கம்மா ஒரு ‘கைநாட்டுத்’ தான். ஆனாலும், ஏதோ வரம் பெற்றவளாம்.
தயிர் கடையும் மத்தை இடது உள்ளங்கையில் நிற்க வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவாளாம். மத்து சுற்றிக் கொண்டே இருக்குமாம்!
அந்தப் பாட்டிலேதான் எதிரே இருப்பவரின் விஷயம் முழுக்க வந்துவிடுயாம்!
சரசு பிரக்ஞை இல்லாமலேயே மாமியார் இழுத்த இழுப்புக்குச் சென்றாள்.
வேடத்தூர் ரெங்கம்மா வேப்பிலை அடித்துப் பாட்டுப் பாடினாள். அவள் சொன்ன விஷயங்களெல்லாம் தணிகை வேலனுக்கும். அவன் தாயாருக்கும் அதிசயங்களாகவே இருந்தன.
சரசுவுக்கு இது ஏழாவது பிறவியாம். முதல் ஆறு பிறப்பிலும் அவள் எங்கெங்கே பிறந்தாள் என்பதை இன்னும் கொஞ்ச நாளில் அவளே சொல்வாளாம்!
அந்தத் தோற்றம் அவள் மனத்துக்கு வந்ததும் அவள் கணிரெறுன் பேசத் தொடங்குவாளாம்!
அவள் தன்னை அழைத்துப் போகச் சொல்லும் ஊருக்கெவ்வாம் அழைத்துப் போக வேண்டுமாம்!
‘ஏதோ அவள் கதையளக்கிறாள்’ என்று எண்ணிய படி, சரசுளை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள் தணிகைவேலனும் தாயாரும்.
வேப்பிலை ரெங்கம்மாள் நாக்கு அம்மன் நாக்கா யிற்றே! சொன்னது தப்புமா?
நான்கு நாட்கள் பிரக்ஞையற்ற நிலையில் இருந்த சரசு, ஐந்தாவது நாள் திடீரென்று அதிகாலையில் எழுந்தாள்; குளித்தாள்: புதுப் பட்டுச் சேலை கட்டிக் கொண்டாள். பொட்டு வைத்துக்கொண்டாள். ‘அத்தை! அத்தை!’ என்று மாமியாரைத் தேடி அடுப்பங்கரைக்கு வந்துவிட்டாள்.
“என்னம்மா? என்று பரிவோடு கேட்டார் மாமியார்.
“‘நாம் எல்லோரும் சமயபுரம் போக வேண்டும் அத்தை” என்றாள் சரசு.
உடனே மாமியாருக்கு லேப்பிலை ரெங்கம்மா ஞாபகம்தான் வந்தது.
அன்றைக்கே அவள் சொன்னானே, ‘பல ஊர்களுக்குப் போக சரசு விரும்புவாள்’ என்று.
வாடகைக்கு ஒரு கார் எடுத்துக்கொண்டு, சமயபுரம் நோக்கிப் புறப்பட்டார்கள்.
வழியில் சரசு மிகவும் கலகலப்பாக இருந்தாள். இப்படி அவளிருந்து ஐந்தாறு நாட்களுக்கு மேல் ஆகி விட்டதே!
”அத்தை! உங்களுக்குத் தெரியாதே! முன்பு சமயபுரத்துக்கு காவிரித் தண்ணீர் செங்கற்கட்டுக் கால்வாய் மூலமாக கோவில் மூலஸ்தானம் வரை வரும். அதை எடுத்தெடுத்துத்தான் தேவிக்குப் பூஜை செய்வார்கள். கோவில் வாசலில் ‘மகமாயி அடிமை’ என்று ஒருத்தி இருந்தாள். பரட்டைத் தலை, பெரிய பற்கள், ஒரு வராகனெடை குங்குமத்தை நெற்றி முழுவதிலும் பூசிக் கொள்வாள். கையில் ஒரு மூங்கில் குழாய் வைத்திருப்பாள். பெண்களின் இடது கையைப் பிடித்துக் குறி சொன்னால் தப்பவே தப்பாது” என்றாள் சரசு.
“இதெல்லாம் எப்போது….?” என்று பயத்தோடு கேட்டார், மாமியார்.
“முந்தி, ரொம்ப முந்தி!” என்றாள் சரசு.
கோவிலுக்கு அருகே போனதும், “பாருங்களேன். எவ்வளவு பக்தி சிரத்தையோடு இதைக் கட்டினார்கள்? இந்தப் பைத்தியக்காரர்கள் சரியாகப் பாதுகாக்காமல் செங்கலெல்லாம் வெளியே தெரிகிறதே….?” என்றாள்.
தாயாரும், தணிகை வேலனும் ஏதோ ஒரு புராதனக் கலைக்கூட வழிகாட்டியிடம் விளக்கம் கேட்பதுபோல் கேட்டுக் கொண்டு மரியாதையாக அவளைப் பின் தொடர்ந்தார்கள்.
”அடடே! மூலஸ்தானத்தை ரொம்ப மாற்றிவிட்டார்களே!” என்று வருத்தப்பட்டுக் கொண்டாள், சரசு.
“ஐயையோ…வேப்பிலை இல்லாமல் வந்து விட்டோமே” என்று அத்தையைப் பார்த்தாள்.
அவள் பேச்சையும், நடையுடை பாவனையையும் பார்க்கப் பார்க்க, ஏதோ ஒரு பைத்தியக்காரியைப் பின் தொடர்ந்து வந்துவிட்டோமோ என்றுகூட மாமியாருக்கும் தணிகைவேலனுக்கும் தோன்றிற்று.
கோவிலில் சில பெண்களைப் பார்த்த சரசு, பல கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டாள்.
“என்னடி, சௌக்கியமா உன் புருஷன் வடதேசம் போயிருந்தானே; வந்திட்டானா!'” என்றாள் ஒருத்தியிடம்.
அவளோ “சீச்சீ! யார் நீ?” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டாள்.
“என்னடி முப்பது வயசுவரை ருதுவாகாமல் இருந்தியே ருதுவாகிவிட்டியா…?” என்று கேட்டாள், இன்னொரு பெண்ணிடம்.
”சீ! பைத்தியம்! எனக்கு வயதே இருபத்தைந்துதான் ஆகிறது!” என்று சொல்லிக் கொண்டே போய்விட்டாள். அந்தப் பெண்.
ஒவ்வொருவரிடமும் அவள் நடந்துகொண்ட பாணியில் எல்லோருமே அவளைப் பைத்தியம் என்று கல்லால் அடிப்பார்களோ என்று பயந்துவிட்டார் மாமியார்.
“சரி பரவாயில்லே அத்தை, வாருங்கள். எல்லோரும் நம்ம வீட்டுக்குச் சாப்பிடப் போவோம்” என்றாள், சரசு.
“நம்ம வீடா..? அது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் மாமியார்.
“தெரியாதா உங்களுக்கு? ஸ்ரீரங்கத்தில்” என்றாள், சரசு.
– தொடரும்…
– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 21, 2026
என்னுயிர் நின்னதன்றோ!
அனந்த் ரவி
October 21, 2026
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
October 21, 2026