தற்காப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 30, 2026
பார்வையிட்டோர்: 346 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

இந்த “கதை கரு” டைரக்டர்,ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா பல வருடங்களுக்கு முன்பு “வாரம் ஒரு கதை” என்னும் தொலை காட்சி தொடரில் காண்பித்திருப்பார், அதன் ஞாபகமாய் எழுதிய கதை.

நள்ளிரவு தாண்டிய நேரம், இரு காவல் துறையினர் இரவு ரோந்துக்கு அந்த நகருக்குள் சுற்றி வந்த பொழுது

அந்த பேருந்து நிலையத்தில் விழித்து விழித்து பார்த்தவாறு நின்றிருந்த இளவயது ஜோடி இவர்கள் கண்களில் பட்டது.

யாருடா நீ? அதிகார தோரணையில் இவர்களில் ஒருவன் கேட்கவும், மற்றவன் மெளனமாய் பார்த்து கொண்டிருந்தான்.

அந்த இளைஞன் தடுமாறினான்.

நாங்க தெங்காசியில இருந்து வர்றோம், இராத்திரி இந்நேரத்துக்கு வந்து இறங்கிட்டோம், காலையில முத பஸ் அஞ்சரைக்கு இருக்குதுங்க, காளியாபட்டி ஊருக்கு போறதுக்கு, அதுல போயிடலாமுன்னு நின்னுகிட்டிருக்கோம்.

ஏண்டா இந்நேரத்துக்கு எங்கடா பஸ் வந்தது? அவர்களின் அதட்டலான கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. கூலி வேலை செய்து பிழைப்பவர்கள், பஸ் காசை மிச்சம் பிடிக்க ஏதேதோ வண்டி பிடித்து எப்படியோ இங்கு வந்து சேர்ந்திருந்தார்கள். விடியற்காலை பஸ்ஸில், காரியாபட்டிக்கு போக வேண்டும். அங்குதான் இவர்களுக்கு வேலை தருவதாக சொல்லியிருந்தவர்கள் இருக்கிறார்கள்.

அந்த பெண்ணோ காவல்துறை ஆட்களை பார்த்த திகிலில் மேலும் கீழும் விழித்து பார்க்கவும் விசாரித்தவர்களுக்கு, அந்த பெண்தான் முன்னில் தெரிந்தாள். அதுவும் இளம் பெண் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறாள்.

ஏண்டா யாருகிட்ட கதை விட்டுகிட்டுகிட்டு இருக்கே, முதல்ல நடங்க, இரண்டு பேரும் ஸ்டேசனுக்கு.

ஐயா, ஐயா, நாங்க விடிய காலையில பஸ்ஸுக்கு போறவங்க, எங்களை எதுக்கு ஸ்டேசனுக்கு கூப்பிடறீங்க, அவனின் எதிர் பேச்சுக்கு சட்டென ஓங்கி அறைந்தான் கேள்வி கேட்ட காவலன்.

ராஸ்கல், எதிர்த்தா பேசறே, நடடா, இழுத்து தள்ளினான்.

ஒரு அடியில் அந்த இளைஞன் நடுங்கி விட்டான், ஐயா, ஐயா, அடித்தவன் அந்த ஜோடியை ஸ்டேசனுக்கு தள்ளிக் கொண்டு போவதில் மும்முரமாய் இருந்தான். அதிலும் அந்த பெண் அவனை ரொம்ப இம்சைபடுத்தினாள்.

தூக்க கலக்கத்தில் இருந்தது அந்த ஸ்டேசன். அதிகாரியிடம் இவர்கள் கொண்டு போன ஜோடி நிறுத்தப்பட்டதும் சட்டென சுறு சுறுப்பானது. காரணம் அந்த பெண்.

அவர்கள் இருவரும் ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட்டனர். அதிகாரியின் பார்வை அந்த பெண்ணை சுற்றியே நோட்டமிட்டு கொண்டிருந்தது.

அந்த பெண்ணோ அவர்கள் ஊரில் விவாசயம் பொய்த்து போய் கூலி வேலை செய்து பிழைக்கலாம் என்று இவனை உசுப்பேத்தி கோயமுத்தூருக்கு பிழைக்க வந்திருப்பவள்.

வாடா இங்கே, அதிகாரி அழைத்தார். ஐயா பயந்து நடுங்கியபடி அவன் முன்னால் வந்து நின்றான்.

உண்மையை சொல்லு, அந்த புள்ளைய கூட்டிட்டுதான ஓடி வந்தே.

புருசன் பொஞ்சாதிங்க, விவசாயிங்க, எங்களுக்கும் காடு கரணை எல்லாம் இருக்குங்க,

சடாரென்று ஒரு அறை விட்டார் அதிகாரி, ஏண்டா அந்த புள்ளைய தள்ளிகிட்டு வந்திட்டு என்னடா கதை விடறே, நாலைந்து கெட்ட வார்த்தைகள் சரளமாய் வெளி வந்தன.

அந்த இளைஞனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரை விட்டு போக வேண்டாம், பிடிவாதமாகத்தான் இருந்தான். இவள்தான், நச்சரித்து.

கல்யாணம் ஆகி ஒரு வருசம்தான் ஆகிறது, அதுக்குள் இவளுக்கு காடு தோட்டம் விவசாயத்தை விட இங்கெல்லாம் கட்டிட வேலை செய்து நிறைய சம்பாதித்து ஊருக்கு அனுப்புகிறார்கள் என்று சொல்லி, சொல்லி, இப்படி ஒரு சிக்கலில் கொண்டு வந்து நிறுத்தி விட்டாள்.

நான் என்ன சொன்னாலும் இவர்கள் நம்ப போவதில்லை.

இங்க பாரு மரியாதையா இனிமே இப்படி செய்யமாட்டேன்னு எழுதி கொடுத்துட்டு ஓடிடு, இல்லை உன்னை உள்ள தள்ளி லாடம் கட்ட வச்சிடுவோம்.

சார், சார், நாங்க புருசன் பொஞ்சாதீங்க, தயவு செய்து நம்புங்க, எங்களை விட்டுட்டீங்கன்னா நாங்க பொழுதோட பஸ்ஸுக்கு போயிடுவோம். எங்களை கூப்பிட்டவங்களை வேணாலும் வர சொல்றேன், அவரின் காலை பிடிக்க போனான்.

போடா, போய் உட்காரு அவனை பிடித்து தள்ளி விட்டவருக்கு இந்த பையனை எப்படி வெளிய அனுப்பறது? என்னும் சிந்தனைக்குள் போயிருந்தார்.

அவன் அழுது அரற்றியபடியே மீண்டும் அந்த பெண்ணுடன் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அதிகாரியின் பார்வை அந்த பெண்ணை சுற்றியே வட்டமிட்டு கொண்டிருக்க, அவளின் அழகு இவருக்குள் ஒரு வக்கிர உணர்வை தூண்டி கொண்டிருந்தன. எப்படியாகிலும், எப்படியாகிலும்…..

“போன்” கணீரென்று அவரின் எண்ணத்தை கலைத்தது. ஹலோ, எப்-3 போலீஸ் ஸ்டேசனா?

ஆமா..!

யாரு பேசறது? அதிகாரியா?

ஆமா..நீங்க யாரு.

நான் யாருங்கறது இருக்கட்டும், ஒரேயொரு உண்மைய மட்டும் சொல்றேன் கேட்டுக்குங்க, உங்க மேல ஏகப்பட்ட “கம்பிளெயிண்ட்” இருக்கறது உங்களுக்கு தெரியுமா?

நீ யாரு பேசறது, என்னைய பத்தி அப்புறம் பேசலாம்.

சரி எனக்கென்ன? உங்களை கையும் களவுமா புடிக்கறதுக்கு ஏற்பாடு நடக்குது. ஒரு “ஜோடிய” இவங்களே ஏற்பாடு பண்ணி நடிக்க சொல்லி ஏற்பாடு செஞ்சிருக்காங்க. நான் அந்த டீமுல இருந்தாலும், உங்களை எச்சரிக்க வேண்டியது என்னோட கடமை. உங்க வர்க்கம் அப்படீங்கறதுனால இதை சொல்றேன். நான் யாருன்னு நீங்க இந்த சிக்கல்ல இருந்து தப்பிச்சு வந்த பின்னால வந்து சொல்றேன். இப்ப ஜாக்கிரதை. உங்க ஸ்டேசன்ல யாராவது அப்படி வந்திருக் காங்களா?

குரல் தெளிவாக அதிகாரியின் மண்டைக்குள் ஏற ஏற அவரின் பார்வை அனிச்சையாக அந்த ஜோடிகளை பார்த்தது. ஒரு வேளை நம்மை பிடிப்பதற்காக ஏற்பாடு செய்தவர்களாக இவர்கள் இருப்பார்களோ?

இதை எண்ணியவுடன் அவருக்குள் ஏறியிருந்த வக்கிர உணர்வு சட்டென இறங்க, பய உணர்வு மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது.

அந்த ஜோடிகள் பக்கமே பார்வையை திருப்பாமல் விடியும் வரை கண்ணும் கருத்துமாக கடமையை செய்வதாக காண்பித்து கொண்டிருந்தார்.

விடியற்காலை பேருந்தில் அந்த ஜோடி சென்று கொண்டிருந்தது.

பேருந்து நிலையத்திலிருந்து கூட்டி சென்ற காவல்துறையின் இருவரில் மெளனமாய் இருந்தவன், எப்படியோ அந்த “பொண்ணை காப்பாத்திட்டோம்” என்ற மன நிம்மதியுடன் இருந்தான்.

dhamodharan பிறந்த வருடம் 1966, “கோவை மருத்துவ மையம்” (KMCH) கோயமுத்தூர். துணை மருத்துவமான ‘செவிலியர்’ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். 1. இவரது சிறுகதை “நிலம் விற்பனைக்கு அல்ல” இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 2. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” இவரது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. இலக்கிய அங்கீகாரம் 3. “குவிகம்” இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *