சம்பந்தி யக்ஞம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2026
பார்வையிட்டோர்: 70 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பார்க்’கில் பள்ளி கொண்டிருந்த ரங்கநாதன் திடீரென்று எழுந்து முதுகைப் பூணூலினால் சொறிந்து கொண்டார். கட்டெறும்போ, எந்த எழவோ அவரை கடித்துவிட்டது. சுரீரென்று வலி.

வைஷ்ணவ பிராமணரை கடித்த புண்ணியம் அது கடித்த கணத்திலேயே வைகுண்டம் போய்விட்டது. கட்டெறும்புதான். ரங்கநாதன் அதன் சடலத்தை தூக்கி எறிந்தார். அவர் கோபத்தை வேறு யாரிடம் காட்ட முடியும்?

வயிற்றுக்குள்ளிருந்து ஏதோ பிசைந்தது. இது பூச்சி இல்லை.பசி.

எறும்பு கடித்த இடம் அரித்துக் கொண்டேயிருந்தது. தொடர்ந்து சிறிது நேரம் பூணூலினால் சொறிந்து கொண்டேயிருந்தார். பூணூலினால் வேறு என்ன உபயோகம்?

”ஐயரே, மணி அஞ்சரையாச்சு. எழுந்து போங்க” என்றார் ‘பார்க்’. காவல்காரர் அப்துல். வயசானவர். அவருடைய விருந்தோம்புதல் குணம் தான் இதுவரை ரங்கநாதனுக்கு ‘பார்க்’கில் படுத்துறங்க உதவியிருக்கிறது. இப்பொழுது இதற்கும் ஆபத்து வந்து விட்டது போலிருக்கிறது. என்ன காரணம். ?

ரங்கநாதன் புருவங்களை உயர்த்தி அப்துலைப் பார்த்தார்.

‘நான் எல்லோரையும் ராத்திரி இங்கே படுக்க விடறேன்னு நடக்கிறவங்க சங்கம்னு ஒண்ணு வச்சிருக்காங்களே, அவங்க ‘கம்ப்ளெய்ன்ட்’ கொடுத்திருக்காங்களாம். உங்களுக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம் ஏன் வம்பு பேசாம எழுந்து போங்க” என்றார் அப்துல்.

“என்னாலே யாருக்குத் தொந்தரவு?” என்றார் ரங்கநாதன் பலவீனமான குரலில்.

‘வெள்ளை ட்ராயரும் வெள்ளை சட்டையும் போட்டுகினு, ‘டாக்டாக்’னு இங்கே உலாத்த வர்றவங்களுக்கு வவுறு ஒட்டி, கன்னம் ஒட்டி நீங்க கிடக்கிறதைப் பாத்தா கண்ணையும் மனசையும் ஏதோ உறுத்துதோ என்னவோ? நான் ஒண்ணு சொல்றேன் கேளுங்க. ஒரு வாரம் வேற எங்கனாச்சும் படுங்க. அப்புறம் பாத்துக்கலாம்.”

ரங்கநாதன் தம் சிறிய ஒரு தகரப் பெட்டியை அவருடைய அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கையின் பேத்தி வீட்டில் வைத்திருந்தார். ஏதோ நல்ல வேளை, அவளுடைய கணவன் மனத்தில் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவன் ஒரு ஹோட்டலில் ‘சர்வ’ ராக இருந்தான்.ஆனால் அவர்கள் இருந்ததோ ஒண்டுக் குடித்தனம் – கணவன், மனைவி, மூன்று குழந்தைகள். அங்கு குளிக்கலாம், காலைக்கடன் கழிக்கலாம், ஆனால் படுக்க முடியாது. மற்றைய குடித்தனக்காரர்களின் முணுமுணுப்பை பொருட்படுத்தாமல் இவ்வளவு தூரம் அவரை அங்கு அனுமதித்திருப்பதே பெரிசு.

ரங்கநாதன் அப்பா, தம் மகன் வேத வித்தாக வரவேண்டும் என்று தான் விரும்பினார். தம் கரண்டி உத்தியோகம் தம்முடைய மகனுக்கு வேண்டாம். அவன் நாக்கைக் கொண்டு பிழைக்கட்டு மென்று வேத பாடசாலையில் சேர்த்தார். அவர் நாக்கில் நாமகள் குடியேற மறுத்து விட்டாள். அப்பாவைப் போல் கையைக் கொண்டு பிழைக்கவும் உடம்பு மறுத்து விட்டது. நாலு மாதம் அத்யயனம் செய்த பலன் நாணா வாத்தியாருக்கு எடுபிடி ஆளாக இருக்க உதவியது.தர்ப்பைக் கட்டு, செங்கல், விராட்டி எடுத்துச் செல்லும் உத்தியோகம். நாணா வாத்தியார் ஆச்சாரியன் திருவடி அடைந்த பிறகு, அவ்வப்பொழுது வாத்தியார்களின் கடாட்சம் அவர் மீது விழுந்தால் உண்டு; இது அவருடைய அன்றைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம்.

‘கடாட்சம்’ என்றால் அதன் உருவகப் பொருளில்லை. வாத்தியாரின் பார்வை நிஜமாகவே அவர்மீது விழ வேண்டும் என்ற அர்த்தத்தில்.

நடுத்தர பிராமணர் குடும்பங்கள் தங்கள் பிதுர்க்களைக் கரையேற்றுவதற்கென்ற அந்த மடம் அங்கு இருந்தது. ரங்கநாதன் அங்கும் போய் கூடத்தில் வரிசையாக உட்கார்ந்திருப்பவர்களோடு தாமும் சேர்ந்து கொள்வார். எதிர்த்தாற்போல் ஐந்தாறு அறைகள். நாலணா, எட்டணா, தானம் செய்ய வேண்டுமெனும் போது அறையிலிருந்து வாத்தியார் வெளியே எட்டிப் பார்ப்பார். அவர் பார்வையில் விழ அதிர்ஷ்டம் வேண்டும். ஸ்மார்த்த காரியங்களில் அவருக்கிடமில்லை; நாமத்தை அழித்து விட்டு திருநீறு பூசிக் கொள்ள வேண்டும்; இது அவருக்கு ஒரு பெரிய கோட்பாட்டுப் பிரச்னை இல்லை; ஆனால் அது இயலாத காரியம். அவரை எல்லா வாத்தியார்களுக்கும் தெரியும்.

வைஷ்ணவ பிராமணர்கள் ஈமக் கடன்கள் செய்வது குறைந்து வருகிறது என்பதனால் என்னவோ அல்லது வைஷ்ணவை பிராமணர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பதனால் என்னவோ, அம்மடத்தில் வைஷ்ணவக் காரியங்கள் மிகக்குறைவு. அதனால் வாரத்தில் அனேகமாக மூன்று நாள் அவருக்கு ஏகாதசி. அப்படியிருக்கும் போது, ‘வவுறு ஒட்டி கன்னம் ஒட்டி’யிருப்பதை தவிர ‘வாக்கிங்’ வருகிறவர்களைப் போல் ‘கொழு கொழு வென்றா அவரால் இருக்க முடியும்?

”ஐயரே புறப்படுங்க” என்றார் அப்துல்.

“அப்துல், ரெண்டு நாளா பட்டினி, ஒரு ரூபா இருக்குமா டீ குடிக்க” என்றார் ரங்கநாதன்.

அப்துல் அவரை ஏற இறங்கப் பார்த்தார். இரண்டு நாள் என்ன, வாழ்க்கை முழுவதும் அவர் பட்டினி கிடந்திருக்க வேண்டுமென்று அப்துலுக்குத் தோன்றிற்று.

”ஐயரே, என்கிட்ட காசு இல்லே. வேணும்னா அதோ என் ரூமுக்கு வாங்க ‘டீ’ தாரேன்” என்றார் அப்துல்.

அப்துல் தங்குவதற்கு அப் ‘பார்க்’கிலேயே ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அப்துலுக்கு குடும்பம் உண்டா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவர் அப் ‘பார்க்’ உருவாகிய நாட்களிலிருந்து அங்கு இருந்து வருகிறார். அது உருவாகி நாற்பது வருஷங்களிருக்கலாம்.

அப்துலின் அழைப்பை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இருப்பதாக ரங்கநாதனுக்குப் புலப்படவில்லை. அவர் தலை யசைத்து அப்துலின் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டார்.

அது சிறிய அறை. இந்த வயதிலும் அறையை சுத்தமாக வைத்திருந்தார் அப்துல்.

ஓரிரண்டு கைலிகள் கொடியில் தொங்கின. காக்கி நிற பாண்ட், சட்டை இரண்டு மடித்து வைக்கப்பட்ட நிலையில் சுவரோரமாக ஒரு பலகை மீதிருந்தன.

”காலையிலே ‘டீ’ போட்டுட்டேன், மிச்சமிருக்கு. சுடப் பண்ணித் தரேன்” என்றார் அப்துல். “வேணாம். அப்படியே கொடுங்கோ, பரவாயில்லே, அதென்ன அட்டையிலே தொங்கறதே, அது என்ன பாஷை?”

‘அராபிக் எங்க தெய்வ பாஷை. அல்லாவை நம்பினா ஒரு கஷ்டமுமில்லேன்னு அர்த்தம். ‘டீ’ ஆறிப் போயிருக்கிறது. கூட வைக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே ‘ஸ்டவ்’வை மூட்டினார் அப்துல்.

“அல்லா’ன்னா உங்க தெய்வமா?”

‘தெய்வத்திலே ‘என் தெய்வம், உன் தெய்வம்’னு எதுவும் கிடையாது. எல்லாருக்கும் ஒரே தெய்வம்தான்.”

“எங்க தெய்வத்தை நம்பினா பட்டினி தான். ராத்திரி சரியா தூங்கக் கூட விடமாட்டேங்கிறது எங்க தெய்வம். தோ பாருங்க சாயபு, கட்டெறும்பு கடிச்சு வீங்கியிருக்கு” என்று முதுகைக் காட்டினார் ரங்கநாதன்.


அப்துல் அவர் முதுகைப் பார்த்தார். நன்றாகத்தான் கடித்திருந்தது. ரத்தக்கசிவு. “ஐயரே, எதுக்கு இந்த அழுக்குப் பூணூல் தூக்கி எறியறதுதானே?” என்றார் அப்துல்

‘அதுதான் அப்பப்போ சோறு போடறது சாயபு. சிராத்தம், சவுண்டி.’

“உங்க உடம்பைப் பாத்தா அப்பப்போ சோறு திங்கிறதாவே தெரியலியே. எதனாச்சியும் கடை கிடையிலே கணக்கெழுதற உத்தியோகம் கூடவா உங்களுக்குக் கிடைக்கலே?”

“நான் ஒரு உத்தியோகத்துக்கும் லாயக்கில்லே சாயபு. எந்த வீட்டிலே யாரு மண்டையைப் போடறாங்கன்னு பாத்திண்டு, ‘லோ லோ’ன்னு அலைய வேண்டியிருக்கு.’

அப்துல் ஒரு கோப்பையில் ‘டீ’ யை ஊற்றிக் கொடுத்தார். ‘திவ்யமாயிருக்கு சாயபு. நீங்க நன்னாயிருக்கணும்.”

தேநீர் இதமாகவே அவர் தொண்டைக்குள் இறங்கி, வயிற்றுச் சூட்டைத் தணித்தது.

“இன்னைக்கு எங்கே திங்கப் போறீங்க?” என்றார் அப்துல்.

“அதான் தெரியலே”

அப்பொழுது ‘அப்துல்’ என்று யாரோ கூப்பிடுவது கேட்டது. அப்துல் எழுந்து போனார். ரங்கநாதன் யோசித்தார். எங்கே சாப்பிடுவது? இதுவரை அவர் அவருடைய அம்மாவுக்கு அளித்திருந்த இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்திருக்கிறார். மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’யைப் படிக்காமலேயே ஒன்று, பிச்சை எடுக்கக் கூடாது; இரண்டு, எந்தக் காரணத்தைக் கொண்டும் பூணூலைக் கழற்றுவதில்லை.

அவர் ஒரு சமயம் இதைப்பற்றி யாரிடமோ சொன்ன போது அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்; “ஐயரே, பிராமணர் பிச்சை எடுக்கக் கூடாதுன்னு யார் சொன்னாங்க ? உஞ்சவிருத்தினா என்ன அர்த்தம், பிச்சைதானே?”

‘உஞ்சவிருத்தி’யின் அர்த்தத்தைத் தத்துவரீதியாக விளக்கும் அளவுக்கு அவருக்கு சாஸ்திரம் தெரியாதென்பதால், அவருக்கு முதல் தடவையாக அந்த சந்தேகம் வந்தது- பிராமணன் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டுமா? அப்படி என்றால் உயர்ந்த ஜாதி என்றால் என்ன அர்த்தம்?

தேநீர், களைப்பைப் போக்கியது; ஆனால் பசியைத் தூண்டி விட்டது.

மடத்துக்குப் போய் பார்க்கலாமா? இன்று வைஷ்ணவச் சாவு எதுவுமில்லாவிட்டால்? போன வாரம் முழுவதுமில்லை; இன்று இல்லாமலா போய் விடும்? ‘நாராயணா, நீதான் கிருபை பண்ணணும்’ என்று வேண்டிக் கொண்டார் ரங்கநாதன்.

அப்பொழுது அப்துல் உள்ளே நுழைந்தார். அவர் முகம் மலர்ந்திருந்தது.

அப்துல் தனியாக வரவில்லை. அவருடன் இன்னொருவர் வந்தார். நல்ல பருமனாக இருந்தார். வெள்ளை சட்டை வேட்டி.

“இந்த ஆளையா சொல்றீங்க அப்துல்?” அவர் குரல் கரகரத்திருந்தது.

ஆமாம்.

“இந்த ஆளு பாப்பானாச்சே! ” என்றார் அவர்.

“ஆளை நல்லா பாருங்க. ஆயுசு பூரா பட்டினி கிடந்த மாதிரி உடம்பு.நல்லா பாருங்க. பாப்பானாயிருந்தா என்ன, யாராயிருந்தா என்ன? சோறு போட்டா புண்ணியம் உண்டு” என்றார் அப்துல்.

“சரி இந்த ஆளை பூணூலைக் கழட்டி எறியச் சொல்லிவிட்டு வரையும் கூட்டிக்கிட்டு வந்து சேருங்க சரியா மதிய நேரத்துக்கு வாங்க” என்று சொல்லிவிட்டு, வந்தவர் போய்விட்டார். ரங்கநாதன் ஒன்றும் புரியாமல் அப்துலைப் பார்த்தார்.

“இங்கேயே குளிங்க. வேட்டி தாரேன். உடுத்திக்கிட்டு மதியம் சாப்பிடப்போவோம்.”

“எங்கே?”

“அப்புறம் விளக்கமா சொல்றேன்”.

“தோ பாருங்கோ சாயபு, எங்கம்மாவுக்கு சத்தியம் பண்ணித் தந்திருக்கேன் – பிச்சை எடுக்கமாட்டேன், பூணூலை கழட்ட மாட்டேன்னு. அப்படியிருக்கறச்சே.”

“ஐயரே, நீங்க சத்தியம் பண்ணித் தந்திருக்கலாம். ஆனா அந்தக் காலமே வேற. இப்போ பட்டினி கிடக்கிறது யாரு, நீங்களா உங்கம்மாவா?”

“பூணூலை கழற்றினாத்தான் சாப்பாடு கிடைக்குமா?”

“ஆமாம்”.

“எனக்குப் புரியலே சாயபு. ஏன் பூணூலைக் கழட்டணும்?”

“இன்னக்கி மதியம் சமபந்தி போஜனமாம். மந்திரி வராரு. இப்போ வந்தவர் முனிசிபல் கவுன்சிலர். இந்த ‘வார்ட்’லேதான் சாப்பாடு போடப் போறாங்க. நல்ல வத்தலா ஆயுசு பூரா பட்டினி கிடந்தவரு மாதிரி தாழ்த்தப்பட்ட சாதி ஆளு ஒருத்தரு வேணும்னாரு. மந்திரி பக்கத்திலே உக்கார. போட்டோ பிடிப்பாங்க. மந்திரிக்கு இந்தப் பக்கதிலே நான், முஸ்லிம், அந்தப் பக்கத்திலே நீங்க புரியுதா? பூணூலை கழட்டி எறியுங்க அழுக்குப் பூணூல், அது சோறும் போடலே, வீணா அதைக் கட்டிக்கிட்டு எதுக்கு அழுவறீங்க?”

ரங்கநாதன் சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

அப்துல் கேட்டார்; “இன்னொரு கப்’டீ’ தரவா? சாப்பாடு மதியம் தான். அதுவரை பசி தாங்க வேணாம்?”

ரங்கநாதன் முதுகைத் தொட்டுப் பார்த்தார் எறும்பு கடித்ததனால் தடித்திருந்த இடம் தணிந்திருந்தது. அப்துல் கொடுத்த தேநீர்க் கோப்பையை இயந்திர ரீதியாக அவர் வாங்கிக் கொண்டார்.

– இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2010, கிழக்கு பதிப்பகம், சென்னை.

இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *