சம்பந்தி உபசாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 1,996 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காவேரிக்கு நாத்தனார் கடிதத்தைப் பார்த்தும் தூக்கி வாரிப் போட்டது. கைகால்கள் வெலவெலத்து விட்டன. 

அக்கா கண்டிப்பாய் வரமுடியாது என்று எழுதி யிருக்கிறாரே! படிக்கிறேன் கேளுங்கோ” என்று சொல்லி விட்டுப் படித்தாள்: 

”என்னை என்ன கல்லால் கட்டிச் சாந்தால் மெழுகி இருக்கிறதா? நான் இல்லாமல் காரியம் நடக்காதா? கல் யாண மா என்ன? தீபாவளிதானே? பாதி துலா ஸ்னா னத்தில் என்னால் வரமுடியாது. எல்லாம் நீயே நடத்து. என்று எழுதியிருக்கிறார். இப்படித் திடீரென்று என் னைக் கைவிட்டால் நான் என்ன பண்ணுவேன் ?” என்று காவேரி தன் கணவருடன் அங்கலாய்த்தாள். 

“அவள் சொல்வதும் வாஸ்தவந்தானே! எத்தனை காலம் அவள் உனக்குச் செய்கிறது? அவரவர் வீட்டுக் காரியத்தை அவரவரே பார்த்துக்கொள்ள வேண்டாமோ?” என்று காவேரியின் கணவர் மனைவியைக் கடிந்துகொண்டார். 

“அதையெல்லாம் பரீக்ஷை பார்க்க இதுவா சமயம்? துலாஸ்னானத்தை வருகிற வருஷம் முடித்துக் கொள்ளட்டும். நீங்கள் போய் உங்கள் அக்காவுக்குக் கொஞ்சம் சொல்லி அழைத்து வாருங்களேன்” என்று மன்றாடினாள் காவேரி. 

“சொன்னால் உடனே நடத்துகிறவளா அவள் ? தீபாவளி வரப்போவது தெரிந்துதானே துலாஸ்னானம் செய்யப் போயிருக்கிறாள்! ஒன்றும் வேண்டாம். தான் இல்லாவிட்டால் உலகமே அஸ்தமித்துவிடும் என்கிற எண்ணம் அக்காவுக்கும் போகட்டும்.” 

“உங்களுக்கு என்ன, லகுவாய்ச் சொல்லுகிறீர்கள். அக்கா அத்தனை பார்த்துப் பார்த்துச் செய்தபொழுதே சம்பந்திகள் கல்யாணத்தில் ஆயிரம் குற்றம் குறைகள் கண்டுபிடித்தார்கள். இப்பொழுது தனியே என்னால் என்ன முடியும்?” 

“இப்படிப் பயந்தாயானால் முடியாதுதான். எதற் கும் தைரியம் வேண்டும். சம்பந்திகளும் நம்மைப்போல் மனிதர்கள் தாமே ? என்ன பண்ணிவிடுவார்கள் ? என் னால் அவளை அழைக்கப் போகிறதென்பது முடியாத காரி யம். தலை தீபாவளி நீயே செய்துகொள்ளவேண்டியது தான்” என்று காவேரியின் கணவர் ஒரே பதிலாகச் சொல்லிவிட்டார். 

அப்புறம் அவரிடம் சொல்வதில் பிரயோஜனம் இல்லை என்று காவேரிக்குத் தெரியும். அவள் பயந்த ஸ்வபாவத்தைக் கண்டு அவளிடம் அங்கலாய்ப்பார் அந்த வீட்டில் யாரும் இல்லை. அவள் குழந்தைகள்கூட, அவ ளுக்கு என்ன தெரியும்?’ என்று அலட்சியமாக இருந் தன. ‘காவேரிக்கு ஒன்றும் தெரியாது’ என்றுதான் ஊர் முழுவதும் பெயர். 


உண்மையிலேயே அவளுக்கு ஒன்றும் தெரியாதா? விஷயம் இதுதான். அவள் கல்யாணமாகி வீடு வந்த துமே சிறு வயசில் கைம்பெண்ணான நாத்தனார் ஒருத்தி வீட்டில் அதிகாரம் செலுத்திவந்தாள். அவள் மனம் நோகக்கூடாது, அவளுக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவத்தில் வீட்டில் தாய் தந்தையர்கள் அவளை நடத்திவந்தார்கள். பெரியவர்கள் அவ்விதமாக இருக்கும் பொழுது மற்றவர்களுக்குக் கேட்கவேண்டுமா? அது வும் புது நாட்டுப்பெண் என்ன செய்வாள்? எல்லாம் நாத்தனார். இட்டது சட்டம். காவேரி ஸ்வபாவத் திலேயே மிக அடக்கமானவள். ‘தான்’ என்கிற அகந்தை கொஞ்சமும் இல்லை. கணவரின் தமக்கை சகலமும் கவனித்துக்கொள்ளவே, தன் வீடு, தன் கணவர், தன் குழந்தைகள் என்கிற பாத்தியங்கூட அவள் தனியாகக் காண்பித்துக்கொள்ளவில்லை. “ஏதோ பெரியவர்கள் இருக்கிறார்கள், நமக்கென்ன ?” என்று இருந்துவிட்டாள். 

தாய் தந்தையர்கள் இருக்கும்பொழுதே வீட்டிற்கு. எஜமானியாக விளங்கின நாத்தனார், அவர்களுக்குப் பிறகு தம்பியின் குடும்பத்திற்கு முழுவதும் சர்வாதிகாரி யானாள். வீட்டுக் காரியங்களைக் கவனிப்பது,வருகிறவர் கள் போகிறவர்களுடன் பேசுவது, உபசரிப்பது எல்லாம் நாத்தனார் தான். காவேரி பின்னுக்கே போய்விட்டாள். அவளை ஒன்றும் செய்யவேண்டாமென்று வைத்து, பிறகு அவளுக்கு ஒன்றும் தெரியாது என்கிற வரைக்கும் வந்திருந்தன வீட்டு விஷயங்கள். 

இந்த விஷயத்தில் காவேரிக்கு மனக்குறை இல் லையா? உண்டுதான். இருந்தாலும் நாத்தனார் வஞ்சனையின்றி உழைக்கும்போது அவள் என்ன செய்வாள்? வாழ்க்கைச் சுகம், சந்தோஷம் எல்லாம் இழந்த நாத்தனாருக்குத் தம்பியின் குடும்பத்தைத் தாங்கி நிற்கும் பெருமையாவது இருக்கட்டுமே, அதில் தவறென்ன? எதை யும் செய்து பழக்கம் இல்லாத காவேரிக்குத் தன்னிடத் திலேயே நம்பிக்கை குறையத்தான் குறைந்தது. ‘வீட்டுக் காரியமாக இருந்தாலும் ஏதோ முன்னே பின்னே இருந் தால் பாதகமில்லை. சம்பந்தி, மாப்பிள்ளை வந்து போகிற காரியமாயிற்றே!’ என்று நினைக்கும்பொழுதே காவே ரிக்குக் கவலையும் பயமுமாக இருந்தன. 

தெருக்கோடியில் வசித்த ஒன்றுவிட்ட ஓர்ப்படி அபிராமி, சுமங்கலி. அவள் கொஞ்சம் ஒத்தாசையாக இருப்பாளோ என்பது காவேரியின் ஆசை. அவளைக் கண்டபொழுது நாத்தனார் தலை தீபாவளிக்கு வர முடியா தென்று கடிதம் போட்டுவிட்டதைச் சொன்னாள். 

அவ்வளவுதான். உடனே அவள், “நன்றாயிருக்கு, மங்களம் இப்படிப் பண்ணுவாளோ? வெளியில் இருக் கிறவர்கள்கூட வந்து நடத்தவேண்டிய சமயத்தில் வீட்டில் இருப்பவள் எங்கோ போய் உட்கார்ந்துகொண்டு, வரமாட்டேன் என்பாளோ? வெறும் நாளில் இவள் என்ன குடித்தனம் பண்ணுகிறது? சம்பந்தி, மாப்பிள்ளை வர போதுன்னா ஒத்தாசை செய்யணும்?” என்று பெரி தாய் ஆரம்பித்தாள். 

காவேரிக்கு, ‘ஏன் அவளிடம் சொன்னோம்? பெரிய குற்றம் உண்டுபண்ணிவிடுவாள் போல் இருக்கிறதே ? ‘ என்று பயங்கூடத் தோன்றிவிட்டது. 

”அது ஒன்றும் இல்லை, மன்னி!. போன காரியம் ஆகாமல் வா மனசில்லே. வேறே ஒண்ணுமில்லே. இவரைச் சொல்லுங்கோ; போய் அழைச்சுண்டு வாருங் கோன்னா, மாட்டேன் என்கிறாரே! அதுதான் எனக்குப் பெரிசாயிருக்கு ” என்று காவேரி புலம்பினாள். 

“இதோ பார். யார் எப்படி வேணுமானாலும் இருக் கட்டும். நீ கவலைப்படாதே, நான் பார்த்துக்கொள் கிறேன். எனக்கு என்ன வேணுமானாலும் சொல்லி அனுப்பு: ஓடி வருகிறேன். உன் சம்பந்தி என்னமோ, ‘இந்த நாத்தனார் கார்வார் பிரமாதமாக இருக்கு’ என்றா ளாம். அது மங்களத்தின் காதிலே பட்டுடுத்து. அத னால் அவா வரபோது, தான் இருக்கப்படாதுன்னு அவ ளுக்கு எண்ணம். அவளுக்குத் தெரிஞ்ச லக்ஷணம் அவ்வளவுதான்!” என்று வெகு பரிவாகப் பேசினாள். 

இவர்களுக்குள் மனஸ்தாபம் என்கிறதில் அவளுக் குச் சந்தோஷம். ‘இவர்கள் மட்டும் என்ன, தேவலோ கத்து மனுஷ்யாளா? சண்டை பூசல் இல்லாமல் இருப் பதற்கு?’ என்று இவ்வளவு நாளும் அவளுக்கு வயிற் றெரிச்சல். அவள் பேச்சிலிருந்து காவேரிக்கு இது தெரிந்தது. இவைகளை எல்லாம் பார்த்தபொழுது அவ ளுக்கு யாரை நம்புவது என்றே தெரியவில்லை. 

கல்யாணமான பெண் ஸரஸாவுக்கு இப்பொழுது கொஞ்சம் நினைவு தெரிந்துவிட்டபடியால், அம்மாவின் மனநிலை ஒருவாறு புரிந்தது. ” அம்மா! ஏன் கவலைப் படுகிறாய்? கண்டவர்களிடமெல்லாம் அங்கலாய்ச்சுக் கொள்வதில் பலன் என்ன? அவர்கள் பரிகாசம் செய் கிறார்கள். தீபாவளி தானே நடக்கும். கவலைப் படாதே!” என்று தைரியம் சொன்னாள். 

தன் கணவன் குற்றம் ஒன்றும் கண்டு பிடிக்க மாட்டானென்பது அவள் நம்பிக்கை. அவன் அடிக்கடி எழுதும் ஆசைக் கடிதங்கள், அந்தத் தைரியத்தை அவள் மனத்தில் ஊட்டியிருந்தன. தன்னைப் பார்க்கவும் பேசவும் அவனுக்கு இருக்கும் ஆவலைக் கடிதத்தில் படிக்கும் பொழுது, அவனுக்குத் தன்னிடத்திலோ, தன்னைச் சேர்ந் தவர்களிடத்திலோ குற்றம் குறைகள் தோன்றுமென்றே ஸரஸா நினைக்கவில்லை. தான் அவன் வரும்பொழுது அவ னோடு பேசப்போவதைப் பற்றியும் நடந்து கொள்ளப் போவதைப் பற்றியுமே அவள் கனவு கண்டு கொண்டிருந்தாள். 

காவேரியின் தவிப்புக்காகவும் கவலைக்காகவும் தீபா வளி நிற்குமா? அது வரத்தான் வந்தது. அவளும் நினைத்து நினைத்து ஒன்றுவிடாமல்தான் செய்தாள். ஏதாவது முக்கியமானது தவறிவிட்டால் என்ன செய் வது என்பது அவள் கவலை. பார்த்துப் பார்த்து ஒன்றி லொன்று குறைவில்லாமல் செய்தாள். அப்படி இருந்தும் அக்கா செய்தால் இன்னும் நன்றாயிருக்குமென்று அவ ளுக்குப் பட்டது. நாத்தனார் கார்வார் இல்லாமல் வீட்டில் சத்தமே இல்லை. ஆட்கள் பயந்து பரபரப்பாய் ஓடியாடிச் செய்வதன் அமர்க்களம் இல்லை. அவசரத்திலும் பயத்தி லும் அவர்கள் தவறு செய்வதும், அதை நாத்தனார் திருத் துவதும் இது மாதிரி ஒரு சம்பவமும் இல்லாமல், வெகு அமரிக்கையாகக் காரியங்கள் நடப்பதைப் பார்க்க, காவே ரிக்கே சரியாகத் தோன்றவில்லை. வெறும் தீபாவளிகூட இன்னும் எவ்வளவோ அமர்க்களப்படுமே? தலை தீபாவளி. இவ்விதம் சந்தடியின்றி இருந்தால்? 

பக்ஷணம் செய்தாகிவிட்டது. மாப்பிள்ளைக்கு வேண்டிய மோதிரம் முதலானவை வாங்கியாகிவிட்டன. சம்பந்திக்கு முதல் தரமான புடைவை, வேஷ்டி பார்த்து எடுத்தாகிவிட்டன. இருந்தும், காவேரிக்கு ஏதோ குறை இருப்பதாகவே தோன்றிற்று.நடுக்கூடத்தில் உட்கார்ந்து ஆகவேண்டிய காரியங்களைப் பேசுவதும், ஆட்களை நினைத்து நினைத்து ஏவுவதும், அவர்கள் சரியாகச் செய்ய வில்லை என்று சத்தம் போட்டுக் கண்டிப்பதும், இதெல் லாம் ஒன்றும் இல்லை அல்லவா? 

அடிக்கு ஒருதரம் தன் ஒத்தாசையை நாடி வரா மல் இவ்வளவு தூரம் செய்துகொண்டு விட்டாளே என்கிறதுதான் ஓர்ப்படி அபிராமிக்கு. அவள் தன்னிடம் அடிக்கடி வந்து நிற்பாள். தான் ‘ரொம்ப ரொம்பப் பிகு’ பண்ணிக்கொண்டு, தன் கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்பது அவள் ஆசை. அதற்கு இடமில்லாமல் போனது அவளுக்குப் பெரும் ஏமாற்றமே. 


தீபாவளிக்கு முதல் நாள் மாலை மாப்பிள்ளை, அவர் அம்மா இருவரும் வந்தபோது, அவர்களை வரவேற்கக் கூடக் காவேரிக்குச் சங்கோசமும் பயமுமாகவே இருந்தன. ‘நாத்தனார் இல்லையே, நான்தானே வரவேற்று ஆக வேண்டும்? என்று தானே ஒருவாறு சமாளித்துக் கொண்டு, வரவேற்க முன் வந்தாள். ஆனால் குரல் தாட்டியாகக் கிளம்பினாலன்றோ? அவள் அவர்களை வர வேற்றது, ‘வாய் நிறைய ‘வாருங்கோ!’ என்ற அழைப் புக்கூட இல்லையோ !’ என்று சம்பந்தியம்மா சந்தேகிக் கும்படி இருந்தது. கூடத்தில் உட்காரச் சொல்லும் சமயத்தில், உயரமாய் விசுபலகையில் உட்காரச் சொல் வதா, அவர்களுக்கென்று பிரத்தியேகமாகக் கீழே விரிக் கப்பட்டிருந்த ரத்தின கம்பளத்தில் உட்காரச் சொல் வதா என்கிற சந்தேகம் உதித்து, ‘உட்காருங்கள்’ என்று சொல்லவே தாமதிக்கச் செய்துவிட்டது.காபி கொடுக்க அவளுக்கிருந்த பரபரப்பிலும் கவலையிலும் சம்பந்தியைத் தனியே சில நிமிஷங்கள் இருக்கச் செய்து விட்டுப் போகிறோமே என்பதை அவள் உணரவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஸரஸாவை மாமியார் வந்த தும் நமஸ்கரிக்கச் சொல்ல மறந்துபோனாள். அந்தத் தவறுகளுக்கெல்லாம் காவேரியின் சங்கோசம், பயம். பரபரப்பு, கவலை இவைகளே காரணமென்று கண்டாளா சம்பந்தி? எல்லாவற்றையும் அவமரியாதை, அலக்ஷ்யம் என்பதாக எடுத்துக்கொண்டாள். ஏதோ தான் அழை யாமல் வந்து உட்கார்ந்திருப்பது போலத் தோன்றிற்று அவளுக்கு. பிறகு கேட்க வேண்டுமா கோபம் வருவதற்கு? காவேரி, “வீட்டில் வேறு யாரையும் அழைத்து வரவில்லையா?” என்று கேட்டதற்கு, “நான் பெற்றுக் கொள்கிற மரியாதை போதாதா? இன்னும் எல்லாருக் கும் இது வேணுமா?” என்று அவள் கோபமாகப் பதில் சொன்னாள். 

காவேரிக்கு அந்தக் கோபத்திற்குக் காரணம் தெரி யவே இல்லை. அவள் அதிகம் உபசரிக்க நினைத்துச் செய் யும் பொழுது மரியாதைக் குறைவு எங்கிருந்து வரும்? காவேரிக்குக் கொஞ்ச நஞ்சம் இருந்த தைரியமும் போய் விட்டது.இன்னும் என்ன நேருமோ என்கிற திகில் அவள் மனத்தில் புகுந்து கொண்டுவிட்டது. அவள் பயந்ததற்கு ஏற்றாற்போல் சம்பந்தியம்மாள் சாப்பிட உள்ளே வந்த மாப்பிள்ளையைத் தனியே கூப்பிட்டு, இதோ பார், ஏதோ தெரியாத்தனமாய் வந்துவிட்டேன். காலையில் ஊருக்குப் போக ஏற்பாடு செய்! என்னால் ஒரு நிIஷ மும் இந்த வீட்டில் இருக்க முடியாது. உங்கள் மாமி யார், ‘வா’ என்பதற்குக்கூட வாய் முத்து உதிர்ந்து விடுமோ என்று இருக்கிறாள். பெண்ணை நமஸ்கரிக்கச் சொல்லக்கூட அவளுக்கு லேசில் மனசு வரவில்லை. இந்த அவமரியாதையை என்னால் பொறுத்துக்கொண் டிருக்க முடியாது என்றாள். 

மாப்பிள்ளைக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனைவியோடு சல்லாபம் செய்வது பற்றி எவ்வளவோ மனக்கோட்டைகள் கட்டி வந்திருக்கிறான். இப்பொழுது மனைவியைக் கண்டால் அரைகுறையாகப் பார்க்கிறானே தவிர, இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை. இதற்குள் ஊருக்குக் கிளம்புவதுபற்றி அம்மா ஏதோ கிளப்பு கிறாளே? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன அம்மா, என்ன நடந்தது ?” என்று அம்மாவைச் சாவ தானமாக விசாரித்தான். விஷயம் தெரிந்ததும், அம்மா நினைக்கும் விதம் வேறு, மாமியார் நடக்கும் விதம் வே என்பது அவனுக்கு விளங்கிற்று. இருந்தாலும் அதைச் சொல்லி அம்மாளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ள அவனுக்குத் தைரியம் இல்லை. ஆகையால் அம் மாவை அவள் போக்கிலேயே சமாதானம் செய்வதில் முனைந்தான். 

“அம்மா! காலை ஏழரை மணிக்கெல்லாம் ரெயிலா யிற்றே. சாப்பிடாமல் கிளம்பினால் ஊராரெல்லாம் ஏதாவது நினைத்துக்கொள்ள மாட்டார்களா? அதற்கு இடம் வைத்துக்கொள்ளுவானேன்? நாளை ராத்திரிக்குப் போய்விடுவோமே!” என்று மெதுவாக எடுத்துச் சொல்லி, அதற்கு ஒருவாறு அவளை இணங்கும்படியும் செய்தான். 


முதல் முதல் மனைவியோடு பேசவேண்டியவை களைப் பற்றி அவன் எவ்வளவோ யோசித்து வைத்திருந் தான். இப்பொழுது அவை ஒன்றும் உபயோகப்பட வில்லை. அம்மாவின் கோபத்தைப் பற்றித்தான் முதல் பேச்சுப் பேச வேண்டி வந்தது. தனக்கும் அம்மாவுக்கும் நடந்ததை அப்படியே மனைவியிடம் சொன்னான். “அம்மா சற்று முன் கோபக்காரி, அவ்வளவுதான் ! சமாதானம் செய்தால் சீக்கிரத்தில் மனம் மாறிவிடுவாள். இல்லா விட்டால் அவள் என்னையும் கூட்டிக்கொண்டு. மறு நாளே ஊருக்குப் போய்விடுவாள் !” என்று அவன் தன் மனைவியிடம் சொல்லிவைத்தான். 

இதைக் கேட்ட பின்னும் ஸரஸா பேசாமல் இருப்பாளா? படுத்துக்கொள்ளும்பொழுது அம்மாவிடம் தனிமையில் கணவன் சொன்னவைகளைச் சொல்லி வருந் தினாள். 

“அம்மா! ஏதாவது செய்து எங்கள் மாமியாரைச் சமாதானம் செய். இல்லாவிட்டால் உன் மாப்பிள்ளை நாளைக்கே ஊருக்குக் கிளம்ப வேண்டியது தான்” என்றாள். 

காவேரி என்ன செய்வாள்? அவள் எதற்குப் பயந் தாளோ அதுவே நேருகிறதே! அவள் எவ்வளவோ நன்றாகச் செய்யவேண்டுமென்று செய்தும், குற்றம் பலமாய் ஏற்படுகிறதே/ ஸரஸாவின் வருத்தத்தைக் காண அவளுக்குச் சகிக்கவில்லை. கணவரிடம், “இதற்கு என்ன செய்கிறது? இப்பொழுதே அந்தப் பெண் வருத் தப்படுகிறதே!” என்று அங்கலாய்த்துக்கொண்டாள்.

இதைக் கேட்ட காவேரியின் கணவருக்கு, ‘இந்தப் பெண்களே இப்படித்தான். எதற்காவது அமர்க்களப் படுத்துகிறது’ என்று தோன்றிற்று. வெறுப்பும் கோப மும் வந்தன. “சம்பந்தியம்மாள் கோபத்திற்கு நான் என்ன பண்ண முடியும்? ஏதோ செய்து சமாளித்துப் பார்” என்றார். ‘உன்பேரில்தானே குற்றம் சொல்லு கிறாள்? நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்பது போல் இருந்தது அது. 

இப்படி ஒரு புருஷன் சமயத்தில் ஒத்தாசை ஏதும் செய்யாவிட்டால் காவேரிதான் எனன செய்வாள்? அவள் கவலை உச்சநிலையை அடைந்தது. ‘விடிந்தால் தீபாவளி முடிந்துவிடுகிறது; சம்பந்தி போனால் போகட்டுமே !’ என்று விட்டுவிடுவது நன்றாக இருக்குமா? அந்தக் கோபந்தான் எவ்வளவுக்குப் போகுமோ? இன்னும் இரண்டு நாள் இருந்து போக நினைத்து வந்திருக்கும் மாப்பிள்ளையை முன்னாடியே போகச் செய்வதுதான் அழகா ? பிறகு ஸரஸாவை என்ன வார்த்தை சொல்லித் தேற்றுவது? 

இந்த ஆபத்துக்களிலிருந்து விடுவித்துக்கொள்ள அவளுக்கு ஒரு வழி தோன்றிற்று. 

அதை நடத்திப் பார்ப்பது தவிர, வேறொன்றும் அவள் புத்திக்கு எட்ட வில்லை. 


மறுநாள் அதன் பயனாகத் தீபாவளி நிறைவேறியது. சம்பந்தியம்மாள் கோபம் தணிந்து கூடவே இரண்டு நாள் இருந்துவிட்டுச் சென்றாள். மாப்பிள்ளையைப்பற்றிக் கேட்க வேண்டுமா? அவ்வளவு சடுதியில் மனைவியை விட்டுப் பிரியவேண்டியிருக்கிறதே என்கிற ஒரு குறை தான் அவனுக்கு. 

தீபாவளி எப்பொழுது முடியப்போகிறது என்று பரக்கப் பரக்கத் துலா ஸ்நானத்தை முழுதுங்கூட முடிக்காமல் வந்து சேர்ந்தாள் நாத்தனார். தம்பியின் குடும்பத்தை முழுவதும் கைவிட மனம் வருமா அவளுக்கு? ஏதோ வெறுப்பினால், ஸ்நானத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு வராவிட்டாலும், அவள் மனம் முழுவதும் தலை தீபாவளியில்தான் இருந்தது. 

அவள் வரும்பொழுதே பார்த்துவிட்ட கோடி யகத்து அபிராமி, அவசரம் அவசரமாக அவளை வரவேற் கக் கூடவே வந்து சேர்ந்தாள். காவேரியின் மனத்தில் உண்டுபண்ண முடியாத வேற்றுமையை நாத்தனாரிடமாவது உண்டு பண்ண வேண்டுமென்பது அவள் ஆசை. அதற்கு இதை விட்டால் சமயம் வேறு ஏது? 

“என்ன, மங்களம்! இப்படிப் போய் உட்கார்ந்துட்டே. தலை தீபாவளிக்கு வராமலேயே இருந்துட்டியே! காவேரி எல்லாம் நன்னாத்தான் பண்ணினா நீ இல்லாத குறை ஒன்றுதான். காவேரிக்கு ஒண்ணும் தெரியா துன்னா நாம் நினைச்சோம்! என்ன, போ! என்னமாத் தான் சேஞ்சா ? சம்பந்தி உபசாரந்தான் சாமான்யமா? வேளைக்கு வேளை என்ன டிபன், என்ன சாப்பாடு ! ஒரே தடபுடல் சம்பந்திக்கு வாங்கின புடைவை ஒண்ணே போதும். மாப்பிள்ளைக்குச் செஞ்சது அதைவிட நன்னா யிருந்தது. சம்பந்திக்குப் பரம சந்தோஷம். கல்யாணத் திலே ஆயிரம் பாடு படுத்தினாளே! உன்னை அத்தனை குற்றம் சொன்னாளே! காவேரியை என்னமாக் கொண் டாடினா; தெரியுமா? நேற்றுத்தான் ஊருக்குப் போனா. காவேரிக்கு இவ்வளவு தெரியும்னு யாருக்குத் தெரியும்?” என்று மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போனாள். 

காவேரியின் சாமர்த்தியத்தைப் புகழக் கேட்ட நாத்த னாருக்குச் சந்தோஷமாக இருக்குமா ? அவள் மதிப்பே யன்றோ அதனால் குறைந்துவிடுகிறது? 

ஆனால்? அதே சொற்கள் காவேரியை அவ்வளவுக் குச் சந்தோஷப்படுத்தி இருக்கவேண்டுமல்லவா? அதுதான் இல்லை. சம்பந்தி யம்மாளின் கோபத்தைத் தணிக்க அவள் செய்தது தெரிந்தால், அபிராமி தன்னை அவ்விதம் புகழ்வாளா? 

தீபாவளி ஸ்நானமானதும் காவேரி வெற்றிலைத் தட்டில் புடைவையை வைத்துச் சம்பந்தியிடம் கொடுத்து, எனக்கு ஒன்றும் தெரியாது. நான் செய்ததைப் பெரிய மனசு பண்ணி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏதோ முன்னே பின்னே இருந்தாலும் மன்னித்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிக் கண்களில் நீர் ததும்ப அவளை நமஸ்கரித்து வேண்டிக்கொண்டது யாருக்குத் தெரியும்? அவளுக்கும் சம்பந்தியம்மாளுக்கும், அந்த அறையில் மாட்டியிருந்த ஈசுவரியின் படத்திற்கும் மட் டுந்தான் தெரியும். கேவலம்! அடிபணிந்து காரியத்தை நிறைவேற்றியிருக்கிறாள். அது சாமர்த்தியமாகுமா? நாத்தனார் மட்டும் தீபாவளிக்கு இருந்திருந்தால் இது மாதிரி நேர்ந்திருக்குமா? நேர இடந்தான் கொடுத்திருப் பாளா? தவறு இருந்தாலும், சம்பந்திக்குக் காவேரியின் பேரில் கோபம் வந்திருக்குமா? காவேரி அவள் காலில் விழும்படி ஏற்பட்டிருக்குமா? பாவம்; இந்தச் சந்தேகம் காவேரியை உள்ளூற வாட்டி வருத்தும்பொழுது, யார் எவ்வளவு புகழ்ந்தாலும் அவளால் சந்தோஷப்பட்டுப் பெருமை கொள்ள முடியுமா? 

– தெய்வத்திற்கு மேல், முதற் பதிப்பு: பெப்ரவரி 1947, கலைமகள் காரியாலயம், சென்னை.

– இந்தப் புததகத்தில் வந்திருக்கும் கதைகள் கலைமகள், குமரிமலர், கல்கி தீபாவளி மலர், ஆனந்த விகடன், மங்கை ஆகிய பத்திகையில் வெளியானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *