சமாதானம் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,701
நாலைந்து நாட்களாகத் தெருத் தெருவாகத் திரிந்தும் ஓர் எச்சில் இலை கூடக் கிடைக்கவில்லை ஒரு கிழட்டு நாய்க்கு.
அப்படியே கிடைத்தாலும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு அதைத் தின்ன முடியவில்லை அதனால். ஆகவே பசி ஒரு பக்கமும், வயோதிகத்தால் ஏற்பட்ட வாட்டம் இன்னொரு பக்கமுமாக அது ஒரு நாள் ஒரு வீதி வழியே தளர் நடை நடந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது அதற்கு முன்னால் ஓர் எச்சில் இலை வந்து விழ, அதற்காக அந்தக் கிழட்டு நாயை முந்திக் கொண்டு ஏழெட்டு நாய்கள் ஓடிவந்து சண்டையிட, நில்லுங்கள் சகோதரர்களே, நில்லுங்கள், கேவலம் ஓர் எச்சில் இலைக்காக ஒரே இனத்தைச் சேர்ந்த நாம் இப்படியா சண்டையிட்டுக் கொள்வது? வெட்கம்! வெட்கம்! என்றது அது வேதனையுடன்.
அதைக் கேட்டு மற்ற நாய்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்க, அதுதான் சமயமென்று கிழட்டு நாய் அந்த எச்சில் இலையைக் காலி செய்துவிட்டு, வாழ்க சமாதானம்! என்றது, சற்றே வாட்டம் தணிந்து.
அதுவரை அதைக் கவனித்துக் கொண்டிருந்த மற்ற நாய்களில் ஒன்று பெருமூச்சுடன் சொல்லிற்று:
சமாதானத்திற்கு எப்போது வாழ்த்துக் கூற வேண்டுமென்று இப்போதல்லவா தெரிகிறது எனக்கு!
– விந்தன் (மே 2014)