கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2025
பார்வையிட்டோர்: 120 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த இரண்டு மாடி தனியார் வீட்டில், தொலைபேசி மணி ஓயாமல் அலறிக்கொண்டிருந்தது. வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென்று விழித்துக்கொண்டு குறைக்க ஆரம்பித்துவிட்டது. சற்று நேரத்தில், அலறிய தொலைபேசி மணி ஓய்ந்தது. குறைக்கும் சத்தமும் நின்றது. 

பணிப்பெண் கமாலியா கண்களைக் கசக்கிக்கொண்டே வாசற்கதவை மெல்லத் திறந்தாள். தலையை மட்டும் வெளியே நீட்டிச் சுற்றும் முற்றும் எட்டிப் பார்த்தாள். ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்த பிறகு மெல்ல நடந்து வெளிவாயிற்கதவை ஓசைப் படாமல் திறந்து சற்றுத் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை நோக்கிச் சென்றாள். பின்னர்க் காரின் கதவைத் திறந்து அவசர அவசரமாக உள்ளே அமர்ந்துகொண்டாள். காரை விளக்கொளி இல்லாமல் சற்றுத் தூரம் ஓட்டிச் சென்று நிறுத்தினார் கார் டிரைவர். 


படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த விமலா திடீரென்று விழித்துக்கொண்டாள்.

“நேற்றிரவு எத்தனை மணிக்கு வந்தீங்க? எனக்கு ஒரே தலைவலியா இருந்ததுனாலே இரண்டு ‘பனடோலை’ போட்டுட்டு நல்லா தூங்கிட்டேன்…”

“ஒரு மணி இருக்கும்… நீ நல்லா தூங்கிகிட்டு இருந்தே; எழுப்ப வேண்டாம்னு நெனச்சி விட்டுட்டேன்…”

அரைத்தூக்கத்தில் பதலளித்தான் முரளி. 

“சாந்தி, ரவி எழுந்திருங்க.. நேரமாயிடுச்சு! இந்தக் கமாலியா எங்கே? இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கிறாளோ? மணி ஐந்தரையாகுது”, என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்கு விரைந்தான் விமலா. 

“கமாலியாவைத் திட்டாதே.. நான் இன்றைக்குக் கொஞ்சம் லேட்டா ஆபிசுக்குப் போறேன்.. லேசா தலை வலிக்குது..” 

முரளி இலேசாக முனகினான். 

விமலா அதைக் கேட்டும் கேட்காததுமாகச் சென்றாள். 

இது வாடிக்கையாகக் காலையில் நடக்கூடிய சம்பவம்தான். இருந்தாலும், கடந்த இரண்டு நாள்களாகப் பணிப்பெண் கமாலியாவின் போக்கில் சிறு மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதை விமலா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. 


அன்று விமலா தொலைபேசியில் கீதாவுடன் தொடர்பு கொண்டபோது அவள் பழைய பல்லவியையே பாடத் தொடங்கிவிட்டாள். 

“நீ என்னதான் சொன்னாலும் பணிப்பெண்களின் போக்கு எப்போதுமே நமக்கு ஒத்து வராது விமலா. என்னைப் பாரு! இதுவரை ஆறு பணிப்பெண்களை வேலைக்கு வச்சுருந்தேன்.. அதிலும் அந்தக் கடைசியா வந்த பெண்ணை என் குடும்பத்துல ஒருத்தியா நெனச்சு வந்தேன்.. என்ன ஆச்சு? ஒரு நாளு, பிள்ளையைப் பள்ளிக்கூடத்துல விட்டுட்டுத் திடீர்னு காணாமப் போயிட்டாள்! நான் எவ்வளவு பதறிப் போயிட்டேன் தெரியுமா?”, எனத் தன் குறைகளை வழக்கம்போல் கொட்டித் தீர்க்கத் தொடங்கினாள் கீதா. விமலாவுக்கு இது ஒன்றும் புதிதில்லை.

கீதாவைத் தெரிந்த நாள் முதலாய் அவள் இப்படித்தான் பணிப்பெண்களைப் பற்றிப் புகார் செய்துகொண்டே இருப்பாள். கடந்த காலக் கசப்பான அனுபவங்கள் அவளை அப்படிப் புலம்பச் செய்தன. இனிப் பணிப்பெண்களே வேண்டாம் என்னும் துணிகர முடிவோடு வேலையை நிறுத்திவிட்டு இப்பொழுது வீட்டில் பிள்ளை களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அவற்றைப் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருப்பாள் விமலா. ஆனால், ஏனோ தெரியவில்லை; தனக்கு இப்படிப்பட்ட ஒரு நிலைமை ஏற்படாது என்று அவள் திடமாக நம்பினாள். அந்த அளவுக்குத் தன் பணிப்பெண் மீது நம்பிக்கை வைத்திருந்தாள் அவள். 

“உனக்குத் தெரியுமா கீதா… இப்போ வந்திருக்கிற பணிப் பெண் நல்ல உழைப்பாளி. ரொம்பப் பணிவா நடந்துக்கிறாள். கொடுக்கிற வேலையைச் சும்மா டான் டான்னு செஞ்சி முடிக்கிறாள் தெரியுமா! எங்க எல்லாருக்கும் அவளை ரொம்பப் புடிச்சுப் போச்சு. இதற்கு முன்னால இருந்த பணிப்பெண்கள் எல்லாரும் சரிப்பட்டு வரலே. உனக்குந்தான் தெரியுமே!”, என்று பெருமையாகப் பேசினாள் விமலா. 

“இங்கே பாரு விமலா! எந்தப் பணிப்பெண்ணானாலும் என்னைப் பொறுத்தவரையிலே எல்லாரும் ஓன்னுதான். ஆயிரந்தான் இருந்தாலும் முதல்லே அவங்க தேவைகளைத்தான் பூர்த்தி செஞ்சுக்குவாங்க. சில வேளைகள்ல குடும்பத்திலேயும் குழப்பத்தை உண்டு பண்ணிடுவாங்க. நீயும்தான் நிறையப் பார்த்திருக்கிறீயே! அது மட்டுமா? சில வீடுகள்ல கொலையே நடந்திருக்குது. செய்தித் தாள்கள்ல படிக்கலியா? எதுக்கும் கொஞ்சம் கவனமாக இரு”. 

அப்போது சுவர்க்கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. 

“சரி கீதா! அவரு இப்போ வந்திடுவாரு, நாம நாளைக்குப் பேசுவோம்.. என்ன?”

விமலா உரையாடலை முடிக்க நினைத்தாள். 

“சரி.. சரி.. புரியுது. ஆனால், ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்கோ! யாரையும் எளிதிலே நம்பிடாதே. பணிப்பெண்கள் குடும்பத்துல ஒருத்தரா இருந்தாலும் அவங்க எல்லாரும் அந்நியர்கள் தான்!” 

தொலைபேசியின் மறுமுனையில் கீதாவின் குரல் ஓய்ந்தது. 

“ம்.. இன்றைக்கும் இவரு லேட்டுதானா!”, என்று நினைத்தபடியே மாடிப்படி ஏறிப் பிள்ளைகளின் அறைகளுக்குச் சென்றாள் விமலா. 

“சாந்தி, நீ இன்னும் தூங்கலியா! மணி பத்தாயிடுச்சு! ரவி எங்கே? ஓ தூங்கிட்டானா!.. ம்..ம்.. என்ன இது ஒரே வாசனையா இருக்குது.. யாருடைய வாசனை இது?” 

“கமாலியா அக்காவோடம்மா.. அவங்க அறையிலே இது இருந்துச்சு பாருங்க!.. ம்..ம்..நல்ல வாசமில்லே?” 

சாந்தி காண்பித்த வாசனைத் திரவியப் பாட்டிலைப் பார்த்து ஒரு கணம் மனம் தடுமாறியது விமலாவுக்கு. ஒருவாறாக மகனைப் படுக்கவைத்துவிட்டு, மாடிப்படியில் இறங்கிவந்தவளுக்கு மெல்லச் சந்தேக அலை வீசத் தொடங்கியது. 

‘இவ்வளவு விலையுர்ந்த வாசனைத் திரவியம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது?’ 

அப்போது மேல் மாடியிலிருந்து சாந்தியின் குரல் ஒலித்தது. 

“அம்மா, அப்பா எங்கேம்மா போயிருக்காரு? வீட்டுலதானேஇருந்தாரு! ஏன் இன்னும் வரலே?” 

அதைக் கேட்டு விமலாவின் கால்கள் கடைசிப்படியில் தடுமாறியது! 

“என்ன! அவர் வீட்டில் இருந்தாரா?” 

உடனே விமலா சுதாரித்துக்கொண்டாள். 

“அப்பா வந்திடுவாரும்மா.. நீ போய்ப் படு! போ.. போம்மா” 

கனத்த குரலில் தன் மகளுக்குப் பதிலளித்தாள். அவளுக்குக் குழப்பமாக இருந்தது. 

“ம்… என்ன நடக்கிறது இந்த வீட்டில்? ஏன் அவர் விட்டில் இருந்ததை என்னிடம் சொல்லவில்லை.. ஒருவேளை… சொன்னாரோ? நான்தான் சரியாகக் கேட்கவில்லையோ?..” 

சிந்தனையுடன் ஹாலுக்கு வந்த அவள், தொலைபேசியில் தன் கணவரை அழைத்தாள். தொடர்பு ஒலி விநோதமாக ஒலித்தது. பிறகு துண்டிக்கப்பட்டது. பல முறை முயன்று அலுத்துப்போய்ச் சோபாவில் சாய்ந்தாள் விமலா. 


வெளியில் கார் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள் விமலா. ஹால் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. சுவர்க்கடிகாரத்தில் மணி பதினொரு முறை அடித்து ஓய்ந்தது. திடீரென்று, வெளியில் பேச்சொலி கேட்டது. ஜன்னல் அருகே சென்று திரையை விலக்கிப் பார்த்த அவளுக்கு இதயத்தில் எரிமலை வெடித்தது! தான் காண்பது கனவா நினைவா எனத் தன்னையே கிள்ளிக்கொண்டாள். அங்கே காரின் அருகே தன் கணவரும் அந்தக் கமாலியாவும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டிருந்த காட்சி அவளை நிலை குலையச் செய்துவிட்டது. 

வெளியில் கமாலியா ஹால் பக்கம் கையைக் காட்டி ஏதோ சொன்னதும், இருவரும் விலகி நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வாசலை நோக்கி நடந்தனர். அதற்குள் விமலா தன் அறைக்கு விரைந்து சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். அவளால் தாங்க முடியவில்லை ஆவேசமாகத் தன் கணவரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகளை ஆழ்மனத்தில் அப்படியே புதைத்துக் கொண்டாள். அவளால் பேச முடியவில்லை. விலையுயர்ந்த வாசனைத் திரவியம் கமாலியாவிடம் இருப்பதற்கான அர்த்தம் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. தன் கணவர் வேலைக்குப் போகாததற்குரிய காரணமும் சில நாள்களாகவே அப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் அவளுக்கு நன்கு விளங்கியது. 

“அவர் ஏன் அப்படி மாறினார்? நான் அவருக்கு எதில் குறை வைத்தேன்?” 

அந்த நிகழ்வை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கணவரின் துரோகச் செயலை நினைத்து அவள் மனம் விம்மியது. 

நேரம் கடந்து கொண்டிருந்தது. தூக்கமும் அவளை விட்டு விலகிப்போய்க்கொண்டிருந்தது. கண்ணீரோ தலையணையை ஈரமாக்கிக்கொண்டிருந்தது. 

சிறிது நேரம் கழித்து அறைக் கதவை மெல்லத் திறந்து உள்ளே வந்தான் முரளி. மிகவும் களைப்பாக வருவதுபோல் பாசாங்கு செய்து கொண்டு மெல்ல விமலாவை எட்டிப்பார்த்தான். அவள் தூங்குவதைப் போல் நடிப்பதை அவன் அறிவானா? 

‘விமலா எதையும் பார்க்கவில்லை,’ என்னும் எண்ணம் மேலிட, உறக்கமும் அவனை மெல்லத் தழுவியது.


வழக்கத்திற்கு மாறாக, அன்று காலையில் விமலா மிகவும் சுறுசுறுபபாக, ஆனால், அமைதியாகக் காணப்பட்டாள். கமாலியாவிடம் வீட்டை மட்டும் பெருக்கச் சொல்லிவிட்டு மற்ற எல்லா வேலைகளையும் அவளே பார்த்துக்கொண்டாள். முரளியிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை. முரளியும் அதை உணர்ந்தான் மாலையில் வீடு திரும்பும்பொழுது, ஏதாவது அவளுக்கு வாங்கி வந்து கொடுப்போம் என்று நினைத்திருந்தான் அவன். பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும் முரளி வேலைக்கும் சென்றபின், அவசர விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு கீதாவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வழக்கறிஞரைப் பார்க்கச் சென்றாள் விமலா. நிலைமையை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட கீதா, விவாகரத்து முடிவிலிருந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும்படி விமலாவைக் கேட்டுக் கொண்டாள். ஆனால், அவள் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்தாள். பின் இருவரும் டாக்சியில் ஏறி அமர்ந்தனர். விமலா பேசத் தொடங்கினாள்: 

“கீதா, நான் அவசரப்படுறதா நீ நினைக்காதே. அவர் முகத்தை என்னாலே பார்க்கக்கூட முடியல. அவர்கூட வாழ எனக்குப் பிடிக்கலே. இந்த விவாகரத்து வெற்றியடையுமோ அடையாதோ! அதற்குக் காலம்தான் பதில் சொல்லும். அவரும் இதற்குச் சம்மதிக்கணும். ஆனால், இப்போதைக்கு, நான் தனியா என் பிள்ளைகளோட என் பெற்றோர் விட்டிலே கொஞ்ச நாள் இருக்க விரும்புகிறேன்”, என்றாள் அமைதியாக. 

“எனக்கு உன் நிலைமை புரியுது விமலா. கவலைப்படாதே நான் உன் கணவர்கிட்டே நிலைமையை எடுத்துச் சொல்றேன். முதல்ல உன் பணிப்பெண்ணை ஊருக்கு அனுப்பு. அதுதான் முக்கியம். விவாகரத்தைப் பற்றிப் பிறகு பேசுவோம்”, என்று ஆறுதலோடு கூறினாள் கீதா. 

“கீதா… நீ மட்டும் இப்போ இங்கே இல்லாம இருந்தால், நான் என்ன செஞ்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. நீ அடிக்கடி சொல்வியே, ஆயிரந்தான் இருந்தாலும் இந்தப் பணிப்பெண்கள் எல்லாரும் வெறும் அந்நியர்கள்தான்னு. அதை நான் இப்போ அனுபவபூர்வமா உணர்றேன் கீதா.. என் கணவருக்கு இப்படி ஒரு சபலப் புத்தி இருக்கும்னு நான் கொஞ்சங்கூட நினைக்கலே.. எனக்கு.. எனக்கு.. ரொம்பக் களைப்பா இருக்குது, கொஞ்சம் உன் தோள்ல சாஞ்சிக்கவா?”, என்று கூறிக்கொண்டே தலைசாய்த்தாள் விமலா. 

நேற்றுத் தொலைந்துபோன தூக்கம் இப்பொழுது அவளைக் கௌவிக்கொண்டது. 

– வலை, முதற் பதிப்பு: மார்ச் 2010, ஆர்.யோகநாதன் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *