சந்தேகத்தின் பலன்
கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு. குற்றவாளி கொலை செய்திருப்பதற்கான பலமான சாட்சிகளும் ஆதாரங்களும் இருந்தன. ஆனால், கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட உடல் மட்டும் கிடைக்கவில்லை.
விடுவாரா, குற்றவாளியின் வக்கீல்? இதை வைத்து, ஒரு தந்திரம் செய்ய எண்ணினார்.
”கனம் கோர்ட்டார் அவர்களே, என் கட்சிக்காரர் யாரைக் கொலை செய்ததாகச் சொன்னீர்களோ, அவர் வெளியில்தான் நின்றுகொண்டு இருக்கிறார். உங்கள் அனுமதியோடு அவரை உள்ளே அழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, வாசல் பக்கம் பார்த்தார்.
அத்தனை பேரின் கண்களும் ஆவலோடு வாசல் பக்கம் திரும்பின. யாரும் வரவில்லை.
சில விநாடிகள் கடந்த பின், மீண்டும் வக்கீல் பேசினார்… ”பார்த்தீர்களா! சம்பந்தப்பட்ட நபர் உயிருடன்தான் இருப்பார் என்ற அழுத்தமான நம்பிக்கை உங்கள் அத்தனை பேர் மனதிலும் இருக்கிறது. எனவே, சந்தேகத்தின் பலனை என் கட்சிக்காரருக்குச் சாதகமாக்கி, விடுதலை செய்ய வேண்டுகிறேன்!”
நீதிபதி ஒரு புன்னகையோடு சொன்னார்… ”நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! ஆனால், ஒன்றைக் கவனித்தீர்களா? அத்தனை பேரும் வாசல் பக்கம் பார்த்தார்கள். ஆனால், குற்றவாளி மட்டும் அந்தப் பக்கம் திரும்பவே இல்லை!”
– 11th ஜூன் 2008