சந்திர நந்தி






வள்ளிமலையில் திருநாதக் குன்று என்னமோ கம்பீரமாகவே நிற்கிறது.ஆனால் அக்குன்றின் அமைந்துள்ள சமணப்பள்ளிதான் களையிழந்து தன்னுள் சோகத்தை தேக்கிவைத்திருக்கிறது. திருநாதக் குன்றின் கல்படுக்கையில் சந்திரநந்தி எலும்பும் தோலுமாக படுத்திருக்கிறார் .கண்ணில் மட்டுமே இன்னும் உயிர்த்துளி தேங்கி நிற்கிறது, மற்றப்படி உடலில் எந்த அசைவும் இல்லை.
சன நோன்பு தொடங்கி இன்றுடன் முப்பது நாட்கள் கடந்துவிட்டிருந்தது.
உணவை முற்றாகத்துறந்து தண்ணீரைமட்டும் அருந்தி இருபது நாட்களைக் கடத்தியவர் அதன் பின் தண்ணீரையும் துறந்திருந்தார் .கடந்த மூன்றுநாடகளாக எச்சிலைக் கூட அவரால் முழுங்க முடியவில்லை.
சமண சாரணரான சந்திர நந்திக்கு எண்பத்தைந்து வயதாகிறது.இந்த உலகத்துக்கு வந்த காரணம் முடிந்து விட்டதாக அவரே கருதியதால் வடக்கிருக்க அவர் முடிவெடுத்த போது அவரது மாணவர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அதுவும் அவரது முதன்மை மாணவர்களான இளங்கோவாலும் சாத்தனாலும் அவரது இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.அவர்கள் அவருடன் எவ்வளவோ விவாவித்து அவரது முடிவை மாற்றப்பார்த்தார்கள். சந்திர நந்தி அவர்களின் குருவாயிற்றே. அவர் அவர்களது வாதங்களுக்கு தக்க பதில் இறுத்து தமது முடிவில் எள்ளலவும் அசையாது இருக்கவே அவ்விருவரும் கூடப் பின் வாங்க வேண்டியதாயிற்று.
சந்திர நந்தி சமணமதத்தினை இடையில் தழுவியவர் அல்லர் .அவரது தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போதே அவர் சமண மதத்துக்கு உரியவராகிவிட்டார்.ஆம் ஆதிரை பேகனைப் பிரிந்த போது அவள் வயிற்றில் இரண்டுமாதக் கருவாக சந்திரநந்தி உருவாகியிருந்தார்.
ஆதிரை
ஆதிரை பேகனைப் பிரிந்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தபோது தன்வயிற்றில் வளரும் குழந்தையைக் காரணமாகக் காட்டி பிரிவினையைத் தடுத்திருக்கலாம். கண்ணகிக்கு நிகரான தகுதியைப் பெறுவதற்காக அவள் போராடியிருக்கலாம்…
ஆனால் கண்ணகியின் உரிமைப்போராட்டம் ….
…அதற்குத் துணைநின்ற புலவர்களது நியாயமான அறிவுரைகளால் பேகனின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் …
இவைமட்டும்தான் ..பேகன்மீது சொல்லில் வடிக்க முடியாத காதலைக் கொண்டிருந்த போதும்…. ஆதிரை பேகனைப் பிரியக் காரணமா என்ன?
இல்லை….
பேகனின் மனதில் சிறு பொறியாத் தோன்றி கொழுந்துவிடத் தொடங்கி இருந்த சந்தேகத் தீ தன்னை முழுமையாக எரிக்க முன் அவளே அவனை விலக முடிவெடுத்துவிட்டாள்.
பதிநான்கு வயதில் விறலியான ஆதிரை பாணர்கள் கூத்தர்கள், கோடியர், வயிரியர்,. கண்ணுளருடனும் தன் தாய் நற்செள்ளையுடனும் தந்தை பூங்குன்றனுடனும் மேதினிமலைக்கு விழவுக்கு வந்திருந்தாள்.அங்கு வந்த விறலியர் எல்லோருமே அழகும் இளமையும் கொண்டவர்களாகவே விளங்கினார்கள். ஆனால் ஆதிரையோ விண்மீன்கள் நடுவே வெண்மதி போல தனித்துத் தெரிந்தாள். அங்கங்கள் எல்லாம் அளவுப்பிரமானம் சிறிதும் பிசகாமல் அமைந்திருந்தன, சிறுத்த இடையும் பருத்த தொடையுமாய் அவள் ஆடுகளத்தில் செவ்வரி ஓடிய பாதங்களை எடுத்து வைத்து அசைந்து வருகையில் ஆடற் தெய்வம் அவள் வடிவில் அசைந்து வருவதாய் தோன்றியது. அவளின் அழகிய அகன்ற கண்கள் நடனத்தின் போது நவரசங்களைப் பேசின.
ஆதிரை இரு பெரும் கலைஞர்களின் செல்லமகள். நற்செள்ளை தன் ஆடற்திறனால் சோழனிடம் பொற் தாமரையும் பாண்டியமிடம் தலைக்கோல் பட்டமும் பெற்றவள் .தந்தை பூங்குன்றன் யாழிசைப்பதில் தன்னிகரற்றவன்.பிரிவின் சோகமும் காத்திருதலின் இரக்கமும் இழையோடும்
செவ்வழிப் பண்ணை யாழில் இசைத்து பாடுவானாகில் இசைத்தெய்வமே கிறங்கிப் போகும்.
… நற்செள்ளையிடம் ஆதிரை கூத்தின் வகைகளைம் நுட்பங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்திருந்தாள்.அதனால் அவள் நடனத்திலும் தனியானநளினம் கூடியே இருந்தது.தந்தையான பூங்குன்றன் அவளது இசையாசான்.கலை அவளிடம் குடிகொள்ள இது போதாதா என்ன?
பேரழகியான ஆதிரை ஆடலிலும் பாடுவதிலும் தன்னிகரற்று விளங்கியதால் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருந்தாள்..
ஆடுகளத்தில் அவள் கலையிலும் அழகிழும் மயங்கி பேகன் அவளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டான்.
அதுவரை காலமும் தன் காதலியாய்… அன்பு மனைவியாய் ….எல்லாமுமாய் கருதிய கண்ணகியை மறந்துபோகும் அளவுக்கு பேகனின் மயக்கம் இருந்ததுதான் வியப்பாக இருந்தது,
விறலியான தன்னை நாடாளும் தலைவன் மாலையிட்டபோது ஆதிரைக்கு பெருமையாகத்தான் இருந்தது. ஆனாலும்…அவள் மனதில் காதல் துளிர் விட்டதாகச் சொல்லிவிடமுடியாது.
பேகனையே உலகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் கண்ணகியைத் துறந்து தனக்காக மாளிகை அமைத்துத் தன்னுடன் முழுநேராமாய்த் தங்கிவிட்டது ஆதிரைக்கு உறுத்தலாய்த் தான் இருந்தது…
கண்ணகியின் கண்ணீரில் தனது காதல் மாளிகையைக் கட்டியெழுப்புவது சங்கடமாகத்தான் இருந்தது.
ஆனால் காலங்கள் செல்ல ஆதிரையின் மனதில் பேகன் மீது சிறிது சிறிதாகத் தோன்றி ஆலமரம்போல வளர்ந்து விட்ட காதலில் இந்தச்சங்கடங்கள் எல்லாம் அடிபட்டுத்தான் போயின,
நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இன்றும் ஆதிரை என்னவோ இளமையின் தலைவாசலில்தான் நிற்கிறாள்..ஆனால் பேகனோ நாற்பது அகவையைத் தாண்டிவிட்டான். நாற்பது வயதில் நாய்க்குணம் வருமாமே.. பேகன் கூட அதற்கு விதிவிலக்கில்லைப் போலும்…
முன்பெல்லாம் விழவுக்காலத்தில் குரவை ஆடும்போது ஆதிரையின் இணையாக ஆடுவதில் பெரும் ஆர்வம் காட்டுவான் பேகன் . ஆனால்…இப்பொழுது அவனது ஆர்வம் சிறிது சிறிதாக வடியத்தொடங்கிவிட்டது. அரசுக்கடமைகளின் சுமை.. வயதின் இயலாமை என …அவனால் ஆதிரைக்கு நிகராக நீண்ட நேரம் ஆடமுடிவதில்லை. .
ஆதிரை விறலி …
ஆடல் பாடல் அவள் உதிரத்துளிகள் ஒவ்வொன்றிலும் விம்பித்துக்கொண்டுதானே இருக்கும்…
பேகன் விலகியபோதும் ஆடலில் லயித்தவளாய் ஆதிரை தொடர்ந்து ஆடுவாள்.அப்பொழுது ஆதன் அவள் இணையாக ஆடுவதற்கு முந்திக்கொள்வான் .ஆதனுக்கு ஆதிரையின் பேரழகில் ஏற்பட்ட மயக்கம் அவள் பிறன் மனையாட்டி என்பதையும் அவள் தன் தலைவனது காதலி என்பதையும்கூட மறக்கும்படி செய்வதாக இருந்தது,
ஆதிரையின் உள்ளத்தில் எந்தக் களங்கமும் இல்லை. அவள் ஆடற்கலையில் லயித்து தனது ஆடற்திறன் முழுவதையும் கொட்டிவிடுவதிலேயே ஆர்வமாக இருந்ததால் ஆதனின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் கபடத்தை உணரமுடியாதவளாய் இருந்தாள். இதனால் ஆதன் தன்னை இணையாகப் பலதடவைகள் தேர்ந்தெடுப்பதை வெறும் தற்செயல் நிகழ்வாகவே கருதினாள், ஆனால் பேகனுக்கோ ஆதனின் செயல் உறுத்தலாகவே இருந்து வந்தது.இதில் தவறு எதுவும் இல்லைத்தான் . ஆனால் ஆதிரைக்கும் அத்தகைய சலனம் இருக்கும் என்று கருதினானே …அதுதான் அவன் செய்த மாபெரும் தவறு,,
பேகன் மனத்தில் ஆதிரை மீதான சந்தேக விதை விழுந்து மிக விரைவாகவே துளிர்த்து மரமாக வளரத்தொடங்கியது. ஆதிரை விறலியாக இருந்தது வேறு அவன் மனதை உறுத்தத்தொடங்கியது.
முல்லை சான்ற கற்புடையவலாக விறலியரைப் போற்றிய காலம் உண்டு.. ஆனால் கலைஞருக்கான ஆதரவு குன்றி பழம்மரம் நாடும் பறவைகள் போல தம்மைப் பேணுவாரை நாடி அலையும் நிலைக்கு கலைஞர் உள்ளான போது
விறலியரும் தம் மதிப்பில் குறைந்துதான் போனார்கள்.
அவர்கள் மன்னர்களாலும் நிலக்கிழார்களாலும் பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டனர். சில விறலியர் வழிதவறும் நிலை ஏற்பாடாமலும் இல்லை
அந்த நாள் ஆதிரையின் வாழ்வில் மறக்கமுடியாத துரதிஷ்டமான நாளாக அமைந்துவிட்டது..
வழக்கம் போல் அன்றும் முருகனுக்கான விழவினை ஒட்டித் துணங்கைக்கூத்து நடந்துகொண்டிருந்தது. பேகன் ஆதிரைமீதும் ஆதன் மீதும் கொண்ட மனக்கருப்புக் காரணமாக கூத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஆதனோ இதைச்சாதகமாகக் கொண்டு ஆதிரைக்கு இணையாக ஆடத்தொடங்கினான். அவன் அளவுக்கு அதிகமாகக் குடித்திருந்ததவன் போல தன்னிலை இழந்தவனாய் தாளம் தப்பி ஆடியதுடன் பலதடவைகள் விழப்போவதுபோல நடிக்கவும் செய்தான் அப்பொழுதெல்லாம் அவன் ஆதிரையின் தோள்களில் சாய்ந்து கொண்டான்,ஆதிரையோ ஆதன், அளவுக்கு அதிகமாகக் குடித்ததனாலேயே இந்த நிலை எனக் கருதியதால் அவனை அதட்டி அவனை விலக்கிவைக்க முயற்சித்தாள்.அவள் மனதில் ஆதன் மீது கோபமும் எரிச்சலுமாக ஏற்பட்டபோதும் அதனை மறைத்து ஆடலில் கவனம் செலுத்தினாள்.
பேகனின் கண்கள் கோபத்தால் சிவப்பேறின . பொறாமையால் உள்ளம் வெதும்பத்தொடங்கியது. அவன் தன்னையறியாது மதுவை அதிகம் உட்கொண்டதால் தன்னிலை தவறியிருந்தான். கூத்து முடியுமுன்னமே விருட்டென எழுந்து சென்றதையும் அவன் கண்களில் தெரிந்த கோவ வெறியையும் ஆதிரையும் கவனிக்கத்தவறவில்லை. அதன் பின் அவளாலும் ஆட்டத்தில் மனமொன்ற முடியவில்லை.
அவளும் இரண்டாவது கூத்தில் பங்கு கொள்ளாமலே விரைவாக மாளிகைக்குத் திரும்பினாள்.
பேகன் அமளியில் விட்டத்தை முறைத்தபடி படுத்திருந்தான் .அவனது கோபத்துக்கு ஆதனின் செயல்தான்காரணம் என்பதை ஓரளவுக்கு ஊகித்து வைத்திருந்த ஆதிரை அவனை அணைத்துச் சமாதானம் செய்ய முற்பட்டபோது அவன் அவளது கைகளை மிகுந்த வெறுப்புடனும்
குரோதத்துடனும் தட்டிவிட்டான். அதோடு விட்டிருந்தால் கூடப் பறுவாயில்லை.
மாயப் பொய் பலகூட்டிய மாயத்தள்…
சலம்புணர் கொள்கைச் சலதி…..
அவன் வாயில் இருந்து நெருப்புத்துண்டங்களாய் வார்த்தைகள் வந்துவிழுந்தபோது ஆதிரை அதிர்ந்துதான் போனாள்.
முதலில் ஆதிரையால் அவன் கூறுவனவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் பலகாலமாய் உள்ளத்தில் பொதிந்துவைத்திருந்த சந்தேகத்தின் அனல் பொறிகள் என்பது மட்டும் உடனேயே அவளுக்குப் புலப்பட்டுவிட்டது.
மாயப் பொய் பலகூட்டிய மாயத்தவளாமே…
நான்குவருட வாழ்க்கையில் பேகனுக்கு எதையும் அவள் மறைத்து நடந்துவிடவில்லை.
சலம் புணர் கொள்கைச் சலதியாமே…
தண்ணீரைப் போன்று அவள் மனம் சலனமுடையதாமே….
இச்சொல் அம்பு ஒன்று நூறாகி நூறு ஆயிரமாகி அவளது உள்ளத்தை சல்லடையாகக் குத்தி வேதனை செய்தது.
நல்ல உலகம் ..
கலைகளைக் கண்டு இரசிக்கும் உலகம்…
..ஆனால்…. கலைகளில் ஈடுபடும் பெண்களைப் போகப் பொருளாயும் கருதுவதன் வெளிப்பாடுதான் பேகன் போன்ற ஆண்களின் சந்தேகத்தின் பின்னணிபோலும்…
பேகன் ஆதிரையைக்ககண்டவுடன் சலனம்கொன்டு தன் காதல் மனைவியைப் பிரிந்து வந்தான் …..
அவன் சலனன் இல்லை.
ஆனால் அவள் சலதி…
காதல் என்ற உணர்வு அரும்பக்கூடிய பருவத்திலேயே பேகனை மணந்து அவன் நினைவாக மட்டுமே வாழும் ஆதிரை .. சலதி,,,,,
ஆதிரைக்கு மனம் வெறுத்துப் போகிறது….
தான் கற்ற கலைகளைக்கொண்டு ஆதிரையால் அமைதியைப் பெற முடியவில்லை.
மனம் வெறுமையால் உழன்றது….
காலங்கள் சில இந்த புழுக்கத்துடனேயே உருண்டோடின …
இந்த நிலையில்தான்….
கண்ணகியின் ஆழுகை….
புலவர்களின் வேண்டுகோள் ….
இவையில்லாதவிடத்தும் பேகன் தன்னைவிட்டுப் பிரிந்திருப்பான் என்பதை ஆதிரை அறிந்தேதான் இருந்தாள்…
இந்த பிரிவு வேணுமென்றால் இன்னும் சில காலங்களின் பின் நிகந்திருக்கக் கூடும் அவ்வளவே ….
பேகனை விட்டு அவள் பிரிந்த போது அவளுக்கு அடைக்கலம் தந்தது சமணப்பள்ளி ஒன்றே….
அங்கு சென்று அடைக்கலம் பெற்றபோது சமணக் கொள்கைகளாலும் அவள் ஈர்க்கப்பட்டாள்.அருகர் தாள் பற்றி அமைதி கொள்ளத் தலைப்பட்டாள்.
அவளும் சமணத் துறவியாக மாறியபோது அவள் பேகனின் வாரிசைப் பெற்றெடுத்திருந்தாள்.
கண்ணகி
பேகன் மீண்டும் கண்ணகியிடம் வந்த போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை …..
இளமையில் பேகனோடு அனுபவித்த இனிய நினைவுகள் அவள் மனத்திரையில் விரியத்தான் செய்தன.
ஆனை மலையில் மழை மேகம் கூடியிருந்தது . மயில் ஒன்று மரத்தில் இருந்து குதித்தது. தன் தோகையை விரித்து அழகுமுகம் காட்டியது. பேடையும் அதன் அழகில் மயங்கி அருகில் வந்தது. இந்தக் காட்சியைக் கண்டிருந்த கண்ணகியின் கண்களில் நாணம் கூடி
இதழ்களில் காந்தப்புன்னகை கனிந்தது .. அவள் கைகள் தன்னையறியாது இதழ்களை வருடின. பேகன் நேற்று நடு யாமத்தில் வந்திருந்தான்.அவன் வந்ததன் இன்பம் மழைச்சாரலாய் அவள் உள்ளத்தினைக் குளிர்வித்துக்கொண்டிருந்தது.
கண்ணகியும் பேகனும் சந்தித்த வேளையிலே சிந்திக்காது மனதைப் பறி கொடுத்துவிட்டார்கள். செம்மண்ணில் கலந்த மழைநீராய் உள்ளம் கலந்தனர். அவர்கள் சந்திப்புக்களுக்கு நாரைகளும் குருவிகளுமே சாட்சிகள், கண்ணகியின் காதல் மண்ணுக்கும் விண்ணுக்குமாய் வளர்ந்து பேகனை விட்டுவிலகினால் வாழமுடியாத பித்து நிலைக்கு மாறியிருந்தது.
இவளது பித்து நிலையின் காரணத்தை அவள் உயிர் தோழி முல்லை அறியாது போய்விடுவாளா என்ன…அவள் காதலர் இருவரும் சந்திப்பதற்கு பேருதவி புரியளானாள்.
பருவம் மாறியது….
ஆனை மலைச்சாரல்…., தினைக் கதிர் அறுக்கப்பட்டது…… . இப்பொழுது ஆனை மலை குறும்பனின் மொட்டத்தலையாய்த் தோற்றம் தந்தது….
இனி கண்ணகியும் அவள் தோழிகளும் மூங்கிற் தடியினால் ஆக்கப்பட்ட பறன் மேல் ஏறி தினைப் புனம் காக்கவென்று வெளியில் செல்ல முடியாது.
நீண்ட நாட்களாகக் கண்ணகியால் பேகனைக் காணமுடியவில்லை.
அவனைக் காண வேண்டும் என்ற ஏக்கம் அவளை இடையறாது வாட்டிக் கொண்டிருந்தது. தூக்கம் தொலைத்ததனால் அழகிய குவளை போன்ற கண்கள் வாட்டம் கொண்டன… பார்வை எங்கேயோ அந்தகாரத்தை வெறித்துக் கொண்டிருந்தது. உடலில் பசலை ஆங்காங்கே
திட்டாய் தோன்றி அவளது மாமை நிற உடல் அழகை , ஒளியிழக்கச் செய்தது. உடல் மெலிவினால் வளைகளும் கழன்று விழுந்தன. பித்துப் பிடித்தவள் போல அவள் காணப்பட்டாள்
அன்னை ஆசையாகப் பரிமாறிய பால் உணவு
அவள் தொண்டைக்குள் இறங்கவில்லை. ஆருடனும் பேசும் விருப்பற்று மௌனமானாள்.
முற்றத்து வேங்கை மரத்தில் வந்து அமரும் கிளியும் அவள் தன்னுடன் பேசாததால் ஏமாற்றத்துடன் பறந்து போயிற்று.
அன்னையால் பொறுக்க முடியவில்லை- தன் அன்பு மகளில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டால் கூட அவளால் தாங்க முடிவதில்லை.அவள் தன் நிலத்துக் கடவுளான சேயோனிடம் தன் மகளின் அழகு மீண்டும் கிடைக்க வேண்டும் என்று மனமாறப் பிரார்த்திக்கிறாள். மன்ம் சற்றுத் தெளிந்த பின்பு குறி சொல்லும் முதிய கட்டுவிச்சியை அழைக்கிறாள்.
அகவன் மகளாகிய அவள் வெள்ளிப் பூண் பூட்டிய ஒரு மூங்கில் கோலை வைத்திருந்தாள். அவள் முறத்திலிருந்த நெல்லை எண்ணி நிமித்தங் கூறலானாள்.
“அம்மையே! இவளின் இந்த நிலைக்கு முருகனாகிய அணங்கு இவள் உடலில் ஏறியமையே காரணம் “ என்று வாய்மலர்ந்தாள்,.
அருகில் இருந்த முல்லைக்குக் கட்டுவிச்சியின் பொய் சொல்லும் திறமையைக் கண்டு சிரிப்பு வந்தது. அவள் அதைப் பிறரறியாதவாறு மறைத்துக் கொண்டாள்.
அவள் குறி கேட்டு அன்னை செய்வதறியாது திகைத்தாள்.
செவிலித்தாயோ வெறியாட்டு மூலம் இப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என அறிவுரை கூறினாள்.
வெறியாட்டுக்கு ஏற்பாடு நடந்தது.
வீட்டு முற்றத்தில் வெண்மணல் குவிக்கப்பட்டு பரவப்பட்டதது. அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தல் அமைக்கப்பட்டது. முருகாற்றுப்படுத்தும் வேலன் அழைக்கபடுகிறான்.அவன் கடம்ப மாலை அணிந்தவனாய் வீடெங்கும் எதிரொலிக்கும்படி முருகன் பெயர் சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுகிறான் .
பின் மறியை முருகனுக்கு பலி கொடுத்து,அதன் குருதியில் தினையைக் கலந்து மனையெங்கும் தூவுகிறான்.
வெறியாட்டின் உச்சக்கட்டமாய் பொம்மலாட்டத்தில் பொம்மையை ஆட்டுவது போல கண்ணகியைத் தன் விருப்பப்படி ஆட்டுவிக்கிறான் அங்கிருந்த பெண்களும் குரவையிட்டு ஆடுகிறார்கள். பாணர்கள் பலவகையான இன்னிசையை எழுப்பிப் பாடுகின்றனர். சேயோனாகிய முருகனை வாழ்த்திய வாழ்த்தொலி அந்தப் பந்தலின் மூலை
முடுக்கெல்லாம் சந்தன அகில் வாசனையுடன் பரவுகிறது. பாணரின் பாடலால் முருகன் கோபம் தணிகிறான்.
வெறியாட்டு முடிந்து விட்டது . அன்று இரவு நடுநிசியில் தடைகள் பலவற்றைத் தாண்டி பேகன் ஆனை மலைக்கு வருகிறான். கண்ணகியின் இல்லத்துக்கு அருகில் காத்திருக்கிறான். அவனது வரவை உணர்ந்த தோழி கண்ணகியை அவனிடம் அழைத்துச் செல்கிறாள்.
கண்ணகியைப் பேகன் உயிர் குழைந்து இன்பம் ஏறும் வகையில் ஆரத் தழுவுகிறான் , கண்ணகி , தனது மனத் துயர் பேகனைக் கண்ட பொழுதில் இருந்த இடம் தெரியாது பறந்து போனதாய் உணர்கிறாள்.
ஆனால் தோழியால் கண்ணகிக்கு நடந்தவற்றை மறக்க முடியவில்லை. வேலன் கையில் விளையாட்டுப் பொம்மையாய் தலைவிபட்ட துன்பம் அவள் மனக் கண்கலில் வந்துபோகிறது.அவள் இவ்வாறு கண்ணகி துன்பமடையாதிருக்க வேண்டுமாயின் பேகன் அவளை மணம் முடிப்பதே ஒரே வழி என இடித்துரைக்கிறாள்.
அடுத்தநாள் மாலை தோழி மிகவும் மகிழ்ச்சியாக கண்ணகியை நோக்கி ஓடிவருகிறாள்.
“உன் காதலன் பேகன் தன் பெற்றோருடன் உன்னைப் பெண்கேட்டு வந்தான் . உன் பெற்றோரும் அவனுக்கு உன்னை மணம் செய்ய முடிவுசெய்துவிட்டனர்”
தோழி கூறிய செய்தி கண்ணகியின் காதுகளில் தேனெனப் பாய்ந்தது. அவளை அணைத்து ஆனந்தக் கூத்தாடுகிறாள் கண்ணகி .
கண்ணகி பேகன் திருமணம்
பேகனின் தந்தை போதினி மலையின் அரசன் என்பதும் பேகனே அவன் பின் அரசனாவான் என்பதும் கண்ணகியின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இருந்தது..
அவர்கள் இருவருக்குமான திருமண ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.
குற்றமற்ற ரோகிணி நட்சத்திரத்தன் கூடிய வளர்பிறைநாளான காலைபொழுதில் முகூர்த்தம் குறிக்கப்பட்டது
பேகனுக்கும் கண்ணகிக்கும் என அமைக்கப்பட்ட வீட்டின் முன் மூங்கில் தடிகள் கொண்டு பெரும் பந்தல் போடப்பட்டது. அப்பந்தலில் மணல் பரப்பப்பட்டு மாலைகளால் தோரணங்களமைக்கப்பட்டு அழகு செய்யப்பட்டது. வீட்டினுள்ளும் விளக்குகள் ஏற்றப்பட்டு மாலைத் தோறனங்கள் கட்டப்பட்டன.
காலைமுதல் வதுவைக்கு வருகைதந்த உற்றார் உறவினருக்கு உழுத்தம்பருப்புடன்கூடிய நெல்லரிசிச் சோற்றுடன் இறைச்சியும் பரிமாறப்படுகிறது.
தலைகளில் குடங்களைச் சுமந்தபடியும் கைகளில் மண்டை எனப்படும் மட்பாண்டங்களை ஏந்தியபடியும் திருமணத்தை நடத்திவைக்கும் முதிர்ந்த மங்கல மகளிர் வருகின்றனர் , அவர்கள் தாம் கொண்டுவந்தவற்றை முன்னே தர வேண்டியவை இவை பின்னே தர வேண்டியவை இவை என்ற ஒழுங்கில் வழங்குகிறார்கள் .அழகிய அணிகலங்களை அணிந்த மகன்களைப் பெற்ற தேமல்படர்ந்த வயிற்றையுடைய பெண்கள் நால்வர் கூடிநின்று
“கற்பினில் வழுவாது நல்லனவாகிய பேறுகள் யாவும் உனது குடும்பத்துக்கு வழங்கி உனது கணவனை என்றும் காதல் செய்வாய்” எனக் கூறி கண்ணகியின் கருங்கூந்தலில் நீரையும் நெல்லினையும் தூவி வாழ்த்தினர்.
இரவு வருகிறது ..ஆரவரத்துடன் உறவினர் வருகிறார்கள்.
“சிறந்த இல்லக்கிழத்தி ஆகுவாய்”
எனக் கண்ணகியை வாழ்த்தியவராய் பேகனின் கைகளில் அவள் கைகளை இணைத்து படுக்கையறைக்கு அனுப்புகிறார்கள்.
எல்லோரது வாழ்த்துக்களுடனும் பேகன் கண்ணகி யினது இல்லற வாழ்வு இனிதே தொடங்குகிறது.
பேகன் கண்ணகி பிரிவு
காலங்கள் உறுண்டோடுகிறது.
கண்ணகி பேகன் காதல் வாழ்வின் பயனாய் கண்ணகி தாயாகி விழவுமுதலாட்டியாகிவிட்டாள்.
தாயாகியதால் அவள் தனங்கள் சரிந்து அவள் கட்டுடல் தளர்ச்சியடைந்திருந்தது..
கண்ணகிக்குப் பேகன் மீது கொண்ட காதல் சிறிதும் குறையவில்லை. ஆனாலும் அவளது அன்பினையும் அக்கறையினையும் நேரத்தையும் பங்கு கொள்ள குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
தந்தை முதுமையடையவே பேகன் போதினியின் அரசனாகிவிட்டான்
அதனால் அவனுக்கு அரசியல் கடமைகள் மிகவும் அதிகரித்துவிட்டன.
அவனுக்கு இன்று கண்ணகி மேல் கொண்ட காதலைவிட கடமையே முதன்மையாகிவிட்டது.
அவன் சிறந்த வீரன். உயிர்களிடத்தில் பேரன்புடையவன்
பெரும் கொடைவள்ளல்.எல்லாவற்றுக்கு மேலாகப் பெரும் கலாரசிகனும் கூட
இதனால் அவன் புலவரையும் பாணர் விறலியர் கூத்தர் முதலாம் கலைஞரையும் போற்றி பாதுகாக்கிறான்.
அவர்கள் அவனைநாடிவந்து தமது கலைத்திறனை வெளிப்படுத்தி யானையும் பொற்தாமரையும் தேரும் பெற்று மகிழுகிறார்கள். அவன் புகழைப்பாடுகிறார்கள்.
கொடைமடத்துக்கு ( மடமை) ஆதாரமாய் ஒரு சம்பவம் நிகழுகிறது.
ஒருநாள் தன் வீட்டுக்கு அருகில் இருந்த பூங்காவொன்றில் அவன் உலவிக்கொண்டிருந்தான் . அது கார்காலம் . அப்பொழுதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. வாடைக்காற்று மயிர்க்கால்களில் புகுந்து பலசாலியான அவனது உடலைக் கூட நடுங்கவைக்கிறது. அவன் தனது உடலை போர்வையால் இறுகப் போர்த்தியபடி மழையால் பேரழகுபெற்ற இயற்கையில் தன்னை நனைத்தபடி தனது நண்பனாகிய புலவனுடன் உலவிக்கொண்டிருக்கிறான்.
மகிழமரத்தின் கீழ் மயில் ஒன்று குளிரினால் தன் தோகையை ஒடுக்கிக் கொண்டு உடலைச் சூடாக்கமுயன்று தோற்றுப் போய் நடுங்கிக்கொண்டிருந்ததைக் காணுகிறான். அவன் உள்ளம் உருகுகிறது , தான் போர்த்திருந்த போர்வையை அதன் மீது போர்த்தி அதன் குளிரைப்போக்குகிறான்.
அக்காட்சியைகண்ட புலவனுக்கு மெய் சிளிர்க்கிறது. அவனது பேரன்பைப் பாடலாக்கி மனம் மகிழுகிறான் புலவன்
இதனாலும் பேகனின் புகழ் போதினி மலையைத்தாண்டி தமிழ்நாடு எங்கும் பரவுகிறது.
ஆனால்….
அவனிடம் பலவீனங்களும் இல்லாமலில்லை.
ஆதிரை என்ற விறலியின் கூத்தில் மட்டுமா அவன் மயங்கினான் .அவள் பேரழகில் தன்னை முற்றாக இழந்துவிட்டான்,,,அவள் அழகின் முன் அவனது புத்திதடுமாறிப்போய்விட்டது, அவளைவிட்டு விலகா விருப்பினனாகினான்.அவளுக்கென இல்லம் ஒன்றை அமைத்து அங்கேயே தானும் தங்கத்தொடங்கினான்.
ஆதிரையும் பேகனிடத்து தூய்மையான அன்புகொண்டிருந்தாள். தன் காதலால் அவனை மெல்ல மெல்ல தன் மீது பித்துக் கொண்டவனாக மாற்றிவிட்டாள்.பேரழகும் கலையும் ஒரிடத்தில் சங்கமமாகிய…. இன்பக்கிறக்கத்தில் தன்னைமறந்தான்… கூடவே கண்ணகியின் நினைப்பையும் மறந்தான்.
அன்புக் கணவனின் பாராமுகத்தால் கண்ணகி நொருங்கித்தான் போனாள்.அவள் பேகன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை ஆட்டம் காணத்தொடங்கியது. மருதநிலத்து ஆடவர் தினவெடுத்து பரத்தையரிடம் செல்வதன் மூலம் தாம் ஆண் என்ற கர்வத்தை வெளிப்படுத்துவது போல குறிஞ்சி நிலத்தலைவனான இவனும்……
அவன் ஆண்….அதிலும் அரசன்.,,
ஆனால் கலைச்செல்வியான ஆதிரை விலைமகள் அல்லவே…அவளும் பேகன் மீது உண்மைக்காதல் கொண்டுள்லாள் என்றுதானே சொல்லுகிறார்கள்-….
பேகன் கூட அவளிடம் விடுதலறியா விருப்பினனாக இருப்பதாகத்தானே தோன்றுகிறது….
புலவர்கள் எல்லாம் அவனை சொன்ன சொல் தவறாதவன் என்று போற்றுகிறார்கள்….அவர்களிடத்தில் அவன் அப்படித்தான் இதுவரை நடந்துவருகிறான்…
ஆனால் …
அன்று என்மீது காதல் கொண்ட காலத்தில் உன்னை இறப்பிலன்றிப் பிரியேன் என்று சொன்னதெல்லாம் வெறும் மயக்கத்தின் போது வெளியான வெற்று வார்த்தைகள் தாமா….?
ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்புக் கனல் பெண்ணுக்கு மட்டும்தானா….?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்புக்கனல் சுமப்பவர்களாக ஆண்கள் இருக்காமைக்கு காரணம்தான் என்ன…?
கணவன் இறந்தால் கூட அவன் நினவுடன் நோன்பு வாழ்வு வாழ்திடும் பெண்கள் இருக்க ….
பல பூக்களில் தேன்குடிக்கும் பேகன் போன்ற ஆண்களின் மனனிலையை என்ன சொல்ல…
அவனிடம் போராடி தன் உரிமையை நிலைநாட்ட கண்ணகி முயன்றிருக்கிறாள். …அனால் கட்டாயத்தினாலோ நிர்பந்ததினாலோ காதலை வருவிப்பது சாத்தியமா என்ன..
அம்மா ..காதலிலும் தன் மதிப்புத்தான் பெரிது என்று அவனை மறுத்து வாழவும் கண்ணகியின் பேதைமனதுக்குத் தெரியவில்லையே….
தனக்கு அன்பனான ஒருவனையிட்டு உண்டான கவலையும் தாங்கவொண்ணாத ஏமாற்றமும் உந்த தனது முலை ஒன்றினை அறுத்து மாய்ந்து போன திருமாவுண்ணியின் துணிச்சல் இருந்தால்கூட இறப்பினால் பெறும் நிம்மதியாவது கண்ணகிக்கு இருந்திருக்கும்…
இதையெல்லாம் விடுத்து பேகன் மீது காதலாகிக் கசிந்து உருகுகிறதே…இந்தப் பொல்லாத மனப்பிசாசு…
இவ்வாறு எல்லாம் எண்ணி மருகத்தான் கண்ணகியால் முடிகிறது…
எண்ணங்கள் அவன் மீது கொண்ட காதலில் திரும்பத்திரும்பக் குவிந்ததனால் …கண்ணகி பித்து நிலைக்கு உள்ளானாள்.
கூந்தல் கலைந்து கண்களில் கண்ணீர் பெருக ….
அவளைக்கண்டார் அவள்பால் இரக்கம் கொண்டார்கள். …
ஆனால் …அவளுக்காகப் பேகனிடம் சென்று வாதிடத் தைரியமற்றவராய் இருந்தனர்
இந் நிலையில் தான் கபிலர் பேகனைக் கண்டு போக வந்திருந்தார்…..
கண்ணகியின் அவலம் புலவரின் மென்னிதயத்தை வாட்டுகிறது…
கண்ணகிமேல் உண்டான இரக்கம் முன்னிட பேகனின் தவறைச்சசுட்டிக்காட்டி வழிப்படுத்தவேண்டிய கடப்பாடும் கபிலரைத் துரத்துகிறது….
வீர யுகத்தில் அரசர்களிடம் புலவருக்கான மரியாதை அபரிதம்தான்… அரசரின் வீரத்தைப் புகழ்ந்து பொருள் பெறுவது புலவர்களின் நோக்கமாக என்றுமே இருந்ததில்லை…அரசருக்கும் சமூகத்துக்கமான பாலமாக அவர்கள் செயற்பட்டார்கள். அரசர்களின் உயிர் நண்பர்களாக விளங்கி அரசர் இறக்கும் நிலை ஏற்பட்டால் வடக்கிருந்து தமது உயிரைத் துறக்கும் அளவுக்கு நட்புப் பாராட்டினார்கள். அதே சமயம் அரசனின் தவறுகளை இடித்துரைத்து அவர்களை வழிப்படுத்துவதில் அவர்கள் பின் நிற்கவில்லை.
சமூகத்தில் குடும்பம் என்ற அலகு உயிர்நாடியானதுதானே… அந்த அலகை அரசனே உடைப்பானானால்…
அரசன் எவ்வழி ..குடிகள் அவ்வழியாச்சே…,,,,
ஒருத்திக்கு ஒருவன் என்பது கட்டாயம் மீறமுடியாத நியதிதான்…
ஆனால்…ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டாய நியதி இல்லாத காலம் தான்…
அதுவும் அரசன் என்றால்…சொல்லவா வேண்டும்…?
ஆனால் ஆடவன் அதிலும் அரசன் மனைவி-விழவு முதலாட்டி -என்ற அந்தஸ்தைப் பெற்றவளைப் புறக்கணித்து முற்றாகத் தள்ளிவைத்துவிட்டு பிற பெண்ணிடம் செல்வதை அக்கால சமூகம் அனுமதித்து விடாது,,,,
விழவுமுதலாட்டி வழி வரும் பிள்ளைகள்தானே வாரிசுரிமைக்கு உரியவர்கள்…
“பேகனே! கொடைவள்ளலே! |தன் மார்பு நனையுமளவுக்கு கண்ணீர் சிந்தி நிற்கும் பேதையான கண்ணகியின் உள்ளக் குமுறலை நீ உணரவில்லையா…? அவள் கண்ணீரைத் துடைப்பதே உன் கடமையாகக் கொள்வாய் “ என வேண்டுகோளில் ஓர் நூலிழையாகக் கட்டளையிட்டுச் செல்லுகிறார் கபிலர் .
கபிலரைத் தொடர்ந்து பரணர் பேகனிடம் வருகிறார் அவரும் கண்ணகி நிலை கண்டு பேரிரக்கம் கொள்கிறார்
“மயிலுக்கு போர்வை கொடுத்த தயாளன் நீ..எமது பசியைத்தீர்க்குமாறு வெண்டியோ எமது குடும்பப் பாரத்தை நீக்கும் படி வேண்டியோ உன்னிடம் வரவில்லை. கண்ணகியின் துயரை நீக்க தேரேறி நீ உடனே செல்ல வேண்டும் .அதுவே நான் உன்னிடம் வேண்டும் பரிசிலாகும்..”
என்று பரிந்து பேசுகிறார் பரணர். அரசில் கிழாரும் அதே வேண்டுகோளையே பேகனிடம் முன் வைத்தார்.
புலவர் பெரு மக்களின் அறிவுரைகள் பேகனின் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்தின என்பது உண்மையே…
அதனால் கண்ணகியிடம் இணைய வேண்டுமெனக் கருதினானே ஒழிய ஆதிரையைப் பிரிய எண்ணினானில்லை.
ஆனால் அதிரை பேகன் பிரிவுக்குக் காரணம் ….பேகன் உள்ளத்தினுள் ஓர் இரக்சியம் இருக்கத்தான் செய்த்தது….சந்தேகம் என்றகொடும் நோய் அவனைப் பற்றியதன் விளைவு அது..
சேந்தன் சந்திர நந்தியானார்.
பேகனின் வாரிசான சேந்தன் ஆடம்பரமான மாளிகையில் பிறக்கவில்லை.வள்ளிமலைக் குகையில் கல்பபடுக்கையில் தான்பிறந்தார்.அவரது இளமைப் பருவம் கூட மிகக்கடினமானதாகவே இருந்தது, குழந்தைகளுக்குரிய குதூகலங்களை அவர் அனுபவிக்கவேயில்லை. ஆனால் அவருக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகக் கிடைத்தன.
தமிழ்மொழி இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றுத்தேற முடிந்தது. தொல்காப்பியர் வழிவந்த ஆசான்களிடம் நேரடியாகவே கற்கும் வாய்ப்புக் கிடைப்பது என்றால் சும்மாவா..?
கூடவே சமண தத்துவங்களும் விரிவாகக் கற்பிக்கப்பட்டது.
சிறுவயதுச் சேந்தனுக்கு கல்வியில் மிகத் திறமை இருந்தபோதும்
கல்வி ஒன்றே வாழ்க்கையாய் அமைந்தது சற்று வெறுப்பையும் தந்தது உண்மைதான்,
அவரது முப்பாட்டன் பூங்குன்றனதும் பாட்டி நற்செள்ளையினதும் கலைச்செல்வி ஆதிரையின் இரத்தமும் அவர் உடலில் ஓடுகிறது.
அவர் மரபணுவில் இருந்த கலைத்தாகம் அவரை வள்ளிமலைக்குள் முடங்கிவிட அனுமதிக்க வில்லை. இந்தத் தாகம்தான் அவரைப் பதிநான்காம் வயதில் சமணப் பள்ளியை விட்டு தாய்க்குக்கூடத் தெரியாது வெளியேறி பாணர் கூத்தர் கூட்டத்துடன் இணைய வைத்தது.மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன….. பத்து வருடங்கள் அவர்களோடு அலைந்து கூத்தினதும் இசையினதும் நுணுக்கங்கள் யாவற்றையும் சந்தேகமறக் கற்றுகொண்டார்.கலைகள் அவரை மகிழ்வித்தது என்றால் பழம்மரம் நாடும் பறவைகள் போல தம்மை ஆதரிக்கும் தலைவர்களை நாடி அலைந்த பாணரின் அவல வாழ்க்கை அவரைப் பக்குவப்படுத்தியது.கலையின் மாயக்கரம் எது என்பதை அவருக்குப் புரியவைத்தது அந்த வாழ்க்கை. ஒருநேர உணவுகூட கிடைக்காத நாட்களையும் கொண்ட …. காட்டிலும் மேட்டிலும் …அலையும் வாழ்வுதான். ஆனால் எந்தக்கலைஞனும் அந்த வாழ்வைவிட்டு வெளியேற விரும்புவதில்லை.உணவு உடலைத்தான் தொடுகிறது.ஆனால் அவன் கலையோ அவன் ஆன்மாவைத் தொட்டு அவன் உயிர்வாழ்வுக்கு
ஆதாரமாய் அமைகிறது. தன் கலைத்திறனால் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்கும்போது உண்டாகும் ஆத்ம திருப்திக்கு முன்னர் இந்த உலகில் எதுவும் ஈடுஇல்லை என்பதை அவன் உணர்கிறான். கலையின் மாயக்கரம் ஒன்று என்றுமே கலைஞனை பற்றிப் பிடித்து அவனைத் தன்னில் இருந்து பிரியாமல் இருக்கச்செய்கிறது என்பதை சேந்தன் நன்கு புரிந்துகொண்டிருந்தார். அனாலும் அவர் கலைஞரைப் பிரிந்து வள்ளிமலைக்குத் திரும்பினார்.
ஆதிரை என்ற காந்தம் அவரை வள்ளிமலையை நோக்கி கவர்ந்து இழுத்தது.
சேந்தன் வள்ளிமலையை அடைந்து தாயைப்பார்த்தபோது…… மனம் வேதனையால் உழன்றுதான் போனது. ஆதிரை மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சிதந்தாள்
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான நூலிழை இடைவெளியில் போராடிய தருணத்தில் சேந்தன் என்ற ஒற்றை மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
சேந்தன் அவளின் கைகளைப்பற்றியபோது கண்களில் ஒளி கூடி முகம் புதுமலர்ச்சியைக் பிரசவித்தது.ஆனந்தக் கண்ணீர் செவிவரை வழிந்தது. புதுப்பலம் பெற்றவள் போல் எழுந்திருக்க முற்பட்டாள்.முடியவில்லை….
உடலில் பாறாங்கற்களினை அடுக்கியதுபோல் ஒருகனம் …
“வந்துவிட்டாயா மகனே …!”
அவள் கைகள் சேந்தனின் முகத்தைத் தடவின. அந்தப்பரிசமே சேந்தனுக்கு அவள் உள்ளக்கிடைக்கையை வெளிப்படுத்தப் போதுமானதாய் இருந்தது..அவர் கண்ணீரால் ஆதிரையின் கைகளும் நனைந்தன…
உளறலாய் வாரத்தைகள் தெறித்தன.
”இனி இதுதான் உன் உறைவிடம்,,,,மகனே,,,”
வார்த்தைகள் முடியுமுன்னமே உயிர்ப்பறவை அவள் உடலைவிட்டுப் பறந்துவிட்டது-….
ஆதிரையின் இறுதி வார்த்தை சேந்தனை கட்டிப்போட்டுவிட்டது. அதன் பின் அவர் வள்ளிமலையை விட்டகலவில்லை.
வருடங்கள் சில உறுண்டோடின ,துறவிகளால் சூழப்பட்ட வாழ்க்கை…கல்வியே கண்னாய் கருதி வாழும் வாழ்க்கை..மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கருதும் வாழ்க்கை…
அவரையும் துறவறம் கொள்ள வைத்தது…
சேந்தன் சந்திர நந்தி ஆனார்.
கல்விக்கண்.
தமது இளம்வயதிலேயே தொல்காப்பிய மரபில் வந்த ஆசான்களிடம் கல்விகற்றவர் சந்திர நந்தி.வள்ளுவன் என்ற பேராசனின் கட் தீட்சைகூட அவருக்கு ஒருதடவை கிடைத்திருந்தது என்றால் சொல்லவா
வேண்டும்.வள்ளிமலைக்கு மீண்டபின் அக்கல்வியைத் திறன்படத்தொடர்ந்தார். அவர் அலைந்து உலைந்து பெற்ற வாழ்க்கை அனுபவமும் கலைகள் பற்றிய அறிவும் அனுபவமும் நிறைவாய் அவர் கல்வியின் ஆழத்தையும் அகலத்தையும் கூட்டியது . சிறிது சிறிதாக ஆய்வறிஞராய் அவர் பரினமிக்கத்தொடங்கலானார்..அவர் காலத்தில் பாணர் ,விறலியரிடம் மட்டுமன்றி கணிகையரிடமும் இசை நடனக்கலைகள் வளர்வதற்கான சூழல் உருவாகியிருந்தது. அரசர், நிலக்கிழார் ,வணிகர் என சமூகத்தின் உயர்மட்டத்தினரது ஆதரவு கிடைத்தமையால் இவர்களது கலைகள் அரங்கக் கலைகளாக பரிமானம் பெறத் தொடங்கின.அரச அவைகளில் மட்டுமன்றி வணிகரால் அமைக்கப்படும் அரங்குகளிலும் இந்த நிகழ்த்துகைக் கலைகள் அரங்கேற்றப்பட்டன.அந்த அரங்குகள் கூட பல இலக்கணங்களைக் கொண்டு திகழ்ந்தன.
இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் தம் அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டார் சந்திர நந்தி-
சந்திர நந்தியிடம் கற்பதற்காகவே தக்கனத்தின் பல்வேறு பகுதிகளில் நின்றும் வள்ளிமலைக்கு மாணவர் பட்டாளம் படையெடுத்தது.
அப்படி வந்த மாணவர்களில் சாத்தனும் இளங்கோவும் மிகவும் திறமையானவர்கள். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமாமே…அத்தகைய திறனாளர் இவர்கள்.அதனால் சந்திரநந்திக்கு அவர்களிடத்து அன்பும் பரிவும் சற்றுக் கூடுதல் தான். ஆனாலும் அவர்களது வேண்டுகோள் கூட அவரது சனநோன்பு முடிவை மாற்றிவிடவில்லை.
தாம் அறிந்தவற்றை தமது கல்வி வாரிசுகளிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்ட திருப்தியுடன் முப்பது நாள் முடிவில் இவ்வுலக வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுக்கொண்டார் சந்திர நந்தி..