கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2023
பார்வையிட்டோர்: 3,055 
 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெண் பிடி படலம் | வாளும் விறகுக் கட்டும் | மல்லிநாதர் இல்ல வழக்கம்

பக்கத்தில் நின்ற மனிதர் தன்னை மல்லிநாதர் என்று சொல்லிக் கொண்டதுமே அதிர்ச்சியடைந்த சத்ருஞ்சயன், ராணாவுக்குப் பெண் பிடிக்க வந்திருக் கிறாயா என்று கேட்டதும் பிரமையின் உச்சியை எட்டிவிட்ட காரணத்தால் உணர்ச்சிகளை அடியோடு இழந்து நின்றான். அத்துடன் சற்று திரும்பி மல்லி நாதனையும் உற்று நோக்கினான். மல்லிநாதன் நல்ல ஆஜானுபாகுவாய் ஆறடி உயரத்துக்கு மேல், வலிய உதடுகளில் கட்டு மீசையுடனும், தலையில் சற்று அதிக மாகவே நீண்டு தொங்கிய குழல்களுடனும் காட்சி யளித்தார். அவருடைய உடலின் சிறுசிறு சதைப் பிடிப்பு காரணமாக அவர் உயரம் சரியாகத் தெரியா விட்டாலும் அவர் கழுத்தின் மேல்பகுதிகள் திரண்டு உருண்டு மாமிசப் பிடிப்புடன் இருந்ததாலும், அவருடைய அடர்ந்த கரிய புருவங்களுக்கு அடியில் கண்கள் சிவந்த ராட்ஸதக் கண்களைப்போல் இருந்த தாலும் சாட்சாத் ராட்சஸன் போல விளங்கிய அந்த மனிதருடன் விளையாடுவது மரணத்தை மரணத்தை வலிய அழைப்பதாகும் என்பதைச் சத்ருஞ்சயன் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்து கொண்டான். அவர் சாதாரண சிறு வேஷ்டியை இடையில் கட்டி அதன் ஒரு பகுதி யைப் பின்னால் தார்ப்பாச்சாக இழுத்துக் கட்டியிருந் ததால் அவர் உலக்கை தொடைகள் பயங்கரமாகத் தெரிந்ததையும் அவர் மேலே அங்கி எதையும் அணி யாததால் மார்பில் மயிர் மிக அடர்த்தியாக வளர்ந்து பெரிய கரடிபோல் தோற்றமளித்ததையும் அவற்றின் இடைவெளிகளில் தழும்புகள் பல தெரிந்ததால் அவர் பல போர்களைக் கண்டிருக்க வேண்டும் என்பதையும் தீர்மானித்த சத்ருஞ்சயன் அவர் கைகளில் ஏந்தி தோளில் சாய்த்துக் கொண்டிருந்த கோடரியைப் பார்த்து வியந்து புன்முறுவலும் கொண்டான்.

அவன் புன்முறுவலையும், அவன் தன்னை அணு அணுவாக ஆராய்வதையும் கண்ட மல்லிநாதர் தனது பெரிய பயங்கரச் சிரிப்பை நிறுத்தி, “ஆராய்ச்சி முடிந்து விட்டதா சிறுவனே?” என்று வினவினார்.

அவரது குரல் உடலுக்கு மிகவும் ஒத்து, கரகரப் பாகவும், பயங்கரமாகவும் இருந்ததைக் கவனித்த சத்ருஞ்சயன், “பெரியவரே ! வீரரான தாங்கள் கோடரியை எதற்காகத் தூக்க வேண்டும்?” என்று வினவினான்.

“ஆடுகளுக்குச் சிறு கிளைகளை வெட்ட; அந்த இலைத் தழைகளை ஆடுகள் தின்ற பிறகு, அவற்றைப் பிளந்து விறகாக உபயோகிக்க இது உதவும்” என்று அதன் இரண்டு வேலைகளை விளக்கிய மல்லிநாதர், “இந்தக் காடுகளில் திருட்டுப் பயமும் உண்டு. இது தற்காப்புக்குப் பயன்படும்,” என்று அதன் மூன்றாவது பயனையும் தெரிவித்தது மட்டுமின்றித் தனக்குப் பின்னால் இருந்த விறகுக் கட்டையும் காட்டினார்.

சத்ருஞ்யன் அந்த விறகுக் கட்டைப் பார்த்தான். ‘இவ்வளவு பெரிய வீரர், போர் முறைகளைப் பயிற்று விக்கும் ஆசிரியர், எதற்காக ஆடுகளுக்குத் தழை பறிக்க வேண்டும்? எதற்காக விறகு வெட்ட வேண்டும்’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவன் மனத்தில் ஓடிய எண்ணங்கள் மல்லி நாதருக்கும் புரிந்திருக்க வேண்டும். அவர் மீண்டும் நகைத்து, “சிறுவனே! வீரர்கள் சிறிய காரியங்களைச் செய்யக் கூடாது என்ற விதி ஏதும் இல்லை. அப்படிச் செய்யாமல் இருந்தால் காற்றை மட்டும் விழுங்கிக் கொண்டிருந்தால் தொந்தி பெருத்துவிடும். கிட்டத் தட்ட ராணாவின் மந்த நிலை நமக்கும் வந்துவிடும். இதோ பார் என் வயிற்றை” என்று தமது வயிற்றைத் தட்டிக் காட்டினார்.

அவர் வயிறு அடியோடு உள்ளடங்கி இருந்ததை யும் அந்த நிலையிலும் அது கடையப்பட்ட வைர மரத்துக்கு ஒப்பாக இருந்ததையும் கவனித்தான். இருப் பினும் அவர் ராணாவைப் பற்றி ஏளனமாகப் பேசி யதை அவனால் ரசிக்க முடியாததால், “ராணாவை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று வினவினான்.

“இல்லை, பார்த்ததில்லை. பார்க்க அவசிய மில்லை” என்றார் மல்லிநாதர் வெறுப்புடன்.

“உங்களைப் போல் அடங்கிய வயிறுதான் அவருக் கும். மிக அழகாயிருப்பார்,” என்றான் சத்ருஞ்சயன்.

மீண்டும் நகைத்தார் மல்லிநாதர், “ராஜபுத்திர பெண்கள் அழகை மட்டும் விரும்புவதானால் அவர் அரண்மனை இப்பொழுது பெண்களால் நிரப்பப் பட்டிருக்கும். ஆனால், உண்மையான ராஜபுத்திர னுக்குப் பிறந்த பெண்கள் வீரர்களை விரும்பு கிறார்கள்,” என்று நகைப்பினூடே கூறிய மல்லிநாதர், “அதோ போகிறாளே அந்தப் பெண், ராணா கோழை யாக இருப்பதால் அவர் பெயரையே வெறுக்கிறாள்,” என்று தூரத்தே ஆடுகளை ஓட்டிக் கொண்டு சென்ற பெண்ணைச் சுட்டிக் காட்டினார்.

அந்தத் திசையில் கண்களைச் செலுத்திய சத்ருஞ் சயன் கண்ணெதிரே கண்ட காட்சியால் சிலையென நின்றான். மலை வாயிலில் கதிரவன் இறங்க முற்பட்டு விட்டதால் வானம் மிகச் சிவந்து, செவ்விய கிரணங் களை எங்கும் பரப்பி காளை மீது அமர்ந்த அந்தப் பெண்ணை மிகச் சிவப்பாக அடித்துவிட்டதால், வானத்தை நாடிச் செல்லும் தேவ மங்கை போல அவள் காட்சியளித்தாள்.

அவள் ஓட்டிச் சென்ற வெள்ளை ஆடுகளும், உட்கார்ந்திருந்த மாடும் கையிலேந்தி ஊதிய குழலும் எல்லாமே சிவப்பு மயமாக மாறியிருந்தது தனி அழகை அந்தச் சூழ்நிலைக்கு அளித்திருந்தது. அத்தச் சூழ் நிலையைச் சிறிதும் கவனிக்காமல் காளை மீது உட்கார்ந்திருந்த அந்த மங்கையின் செவ்விய உதடுகளிலிருந்து வெளிவந்த வேணுகானம் அந்தப் பகுதியை நாத மயமாக அடித்திருந்தது. அவள் தூரத்தே சென்று விட்டதால் அவளை முழுமையாகப் பார்க்க முடியா விட்டாலும், வளைந்தும், எழுந்தும் குறுகியும் சென்ற உடற்பகுதிகளால் ராஜ புதனத்தின் சிறந்த அழகியைப் பார்த்துவிட்ட உணர்ச்சியைப் பெற்றான் சத்ருஞ்சயன்.

அப்படிப் பார்ப்பது நாகரிகமல்ல என்பதையும், மல்லிநாதர் அருகில் இருக்கும்பொழுது அவளை அதிகமாகப் பார்ப்பதில், அதிகமான அபாயம் இருக்கும் என்பதையும் புரிந்துகொண்ட சத்ருஞ்சயன், தனது பார்வையை மீண்டும் மல்லிநாதர் மீது திருப்பி, “பெரியவரே! அந்தப் பெண் யாரோ?” என்று கேட்டான்.

“நீ பிடிக்க வந்திருக்கும் பெண்” என்று மல்லி நாதர் சொன்னார். அவளை மணப்பதைவிட மரணத்தை மணக்கலாம்,” என்றும் தெரிவித்தார்.

இதுவரை சாத்வீகமாக இருந்த சத்ருஞ்சயன் பெரியவரின்மீது உஷ்ணமான தனது விழிகளைத் திருப்பி,”பெரியவரே! உமது வயதை உத்தேசித்து உம்மை விட்டு விடுகிறேன். உம்மை நாடி வந்த காரி யத்தை உத்தேசித்து உமது தூஷணைகளைப் பொறுத் துக் கொள்கிறேன்” என்றான், குரலில் உஷ்ணத்தைக் காட்டி.

பெரியவர் அவனது கோபத்தை லட்சியம் செய்த தாகத் தெரியவில்லை. “நீ வந்த காரியம் என்ன?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டார்.

“தங்களிடம் வித்தை பயில வந்தேன்,” என்றான் சத்ருஞ்சயன்.

“நான் வித்தை சொல்லிக் கொடுப்பதாக யார் சொன்னது?” என்று கேட்டார் மல்லிநாதர். அவர் கேள்வியில் சந்தேகம் இருந்தது.

“என் தந்தை” என்று தெளிவாகவும் நிர்ப்பய மாகவும் பேசினான் சத்ருஞ்சயன். “அவர்பெயர் சந்த சிம்மன். சலூம்ப்ரா வம்சம்.’

இம்முறை வியந்தார் மல்லிநாதர். “என்ன சொன் னாய் சந்தசிம்மன் புதல்வனா? சலூம்ப்ரா வம்சத் தவனா? உன் தந்தை மகா வீரர். அவர் சொல்லிக் கொடுக்க முடியாத எதை நான் சொல்லிக் கொடுக்க முடியும்?” என்று வினவினார் வியப்பைச் சிறிது உதறிக் கொண்டு.

“உன் புரவி எங்கே?” என்று சந்தேகத்துடன் வின வினார் மல்லிநாதர். சத்ருஞ்சயன் மல்லிநாதருக்குத் தலைவணங்கி, “புரவியில் வரவில்லை,” என்றான்.

“ஏன்?” மல்லிநாதர் ஒற்றைச் சொல் கேள்வியை வீசினார்.

“மாணவனாகப் போகிறவன் படாடோபமாகப் போகக்கூடாது. பாத யாத்திரையாகத்தான் போக வேண்டும் என்று என் தந்தை உத்தரவிட்டார்.”

“உம்…உம்” என்ற மல்லிநாதர், “சலூம்ப்ராவின் பிடிவாதம் இன்னும் போகவில்லை. சரி வா

போவோம்” என்றவர் சிறிது தயங்கினார். சத்ருஞ் சயன் அவர் தயக்கத்தைப் பார்த்தான்.

“ஏன் தயங்குகிறீர்கள்?” என்று கேட்கவும் செய் தான். “மாலை வேளைக்குப் பிறகு கோட்டைக் குள் யாரையும் விட மாட்டார்கள்,” என்றார் மல்ல நாதர்.

“ஏன்?”

“ராணாவின் ஒற்றர்கள் உட்புகுவதைக் கண்டு கோட்டைத் தலைவன் அஞ்சுகிறான். அதனால் மாலைக்குப் பிறகு வருபவர்கள் சிறைக்குள் தள்ளப் படுகிறார்கள். மறுநாள் விசாரணைக்குப் பின்புதான் விடுதலை.” இதைச் சொன்ன மல்லிநாதர் சிறிது சிந்தித் தார். சிந்தனைக்குப் பிறகு “சிறுவனே! உன் வாளைச் கொடு” என்று கையை நீட்டினார். சத்ருஞ்சயனும் சிந்தித்து,”வாள், புரவி, மனைவி மூவரையும் பிரிவது ராஜபுத்திரர் வழக்கம் அல்லவே,” என்றான்.

இளநகை கொண்ட மல்லிநாதர்,”அதெல்லாம் பழைய வழக்கம். நாம் மொகலாயர்களுக்குப் பெண் களைக் கொடுத்தாகி விட்டது. சரி எடு வாளை!’ என்று கையை நீட்டினார்.

சத்ருஞ்சயன் இடைக் கச்சையில் இருந்த வாளை எடுத்துக் கொடுத்ததும் அதை விறகுக் கட்டில் விறகு களுக்கு மத்தியில் சொருகினார்.

“சிறுவனே! விறகுக் கட்டையைத் தூக்கிக்கொள்”, என்றார்.

சத்ருஞ்சயன் பதில் ஏதும் சொல்லாமல் விறகுக் கட்டை அனாயாசமாகத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டான். “இனி போகலாம்” என்ற மல்லிநாதர் முன் நடக்கப் பின் நடந்தான் சத்ருஞ்சயன். நடந்து கொண்டே கோட்டை வாசலைக் கவனித்தான். திடீரெனக் குழலோசை நின்றது. ஆடுகள் பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டு கோட்டை வாசலுக்குள் நுழைந்து விட்டன. இருளும் மூண்டு விட்டது. கோட்டை வாசல் விளக்குகள் கொளுத்தப்பட்டன.

இரவு நேரத்தில் கோட்டை மிக வலுவாகவும் அதே சமயத்தில் அழகாகவும் தெரிந்தது. வாயிற் கதவுகள் சாத்தும்போதும் திறந்தபோதும் சத்தம் அணு வளவும் இல்லை. கதவுகள் நன்றாகப் பக்குவத்தில் வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த சத்ருஞ்சயன் ஆசானுக்குப் பின்னால் மௌனமாக நடந்தான். மல்லிநாதரும் பேசவில்லை. தீர்க்கமான சிந்தனை யுடன் மௌனமாகவே நடந்தார். கோட்டை வாசலை அணுகியதும் அவரைக் கண்ட கோட்டைக் காவலர் கதவுகளைப் திறந்தார்கள் துரிதமாக. அவர் நுழைந்த தும் அவருக்குப் பின்னால் நுழைந்த சத்ருஞ்சயனை “நில்” என்று தடுத்தனர் காவலர்கள்.

மல்லிநாதர் சுடுவிழிகள் அவர்களை எரித்து விடு வனபோல் பார்த்தன.

“மல்லிநாதன் ஆட்களை நிறுத்தும் துணிவு ஏற் பட்டுவிட்டதா உங்களுக்கு?” என்று சீறினார்.

“இவன் சாதாரண ஆளாகத் தெரியவில்லை என்றான் ஒரு காவலன்.

“வேறு யாராகத் தெரிகிறான்?” சீறினார் மல்லிநாதர்.

“நல்ல வம்சத்தவன் போல் தெரிகிறான்” என்றான் இன்னொரு காவலன்.

“நல்ல வம்சத்தவர் என்னிடம் போர் பயில் தில்லையா?” என்று கேட்டார் மல்லிநாதர் இறுக பல்லைக் கடித்துக் கொண்டு.,

அந்தச் சச்சரவைத் தூரத்தில்இருந்து கேட்டு கொண்டிருந்த காவலர் தலைவன், “இங்கு என் சச்சரவு? மல்லிநாதரை ஏன் தடுக்கிறீர்கள்?” என் கேட்டுக் கொண்டு வந்தான்.

மல்லிநாதர் விறகுகளைத் தூக்கிய சத்ருஞ்சயை மட்டும் பார்க்கவில்லை அவன். விறகுக் கட்டையு கவனித்தான். அதன் இடையில் செருகப்பட்டிருந் வாளின்பிடி விளக்கு வெளிச்சத்தில் பளபளத்ததையு கவனித்தான்.

– தொடரும்

– சந்திரமதி (குறுநாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *