சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள்




(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்களில் பொங்கிய கண்ணீரை மேல் துண்டால் துடைத் துக் கொண்டார் நீலமேகம்.
“நேற்றுப் பிறந்த பயல்…என்னை மீறி அவனால் செய்யவும் முடிந்ததே!”
அவரது நெஞ்சு குமையவில்லை; குமுறிற்று.
“சட்டம் துணை நிற்கிறது. ஏன் அவராலே அதைச் செய்ய முடியாது? எல்லாம் முடியும்…”
பார்வதி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டே கூறினாள்.
“இந்தா, நீ ஏன் அழவேண்டும் ? உடன் பிறந்த எனக்கே ஏற்படாத பரிதாபமா உனக்கு ஏற்பட்டுவிட்டது? கழுதை போகிறாள் தன் விதிப்படி…”
“இருந்தாலும் பெண்ணுக்குப் பெண். இனிமேல் சாரதா நிலையை நினைத்தால் பரிதாபமாகத்தானே இருக்கிறது?”
“அவளாக விரும்பி ஏற்றுக்கொண்டது தானே? இதற்கு நாம் என்ன பண்ணுவது ? நீ போய் உன் வேலையைப் பார்”. நீலமேகம் பேச்சைச் சுருக்கிக் கொண்டார்.
கணவரின் அமைதியான தனிமைக்கு இடையூறாக நில்லாமல் அங்கிருந்து அகன்றுவிட்டாள் பார்வதி.
நீலமேகத்தின் மனம் அமைதியையா அனுபவித்தது?
எதிர்வீட்டில் சிரிப்பும் கொம்மாளமும் சதிராட்டம் போட் டுக் கொண்டிருந்தது. சீரழிவுக்கு வித்திடும் சிரிப்பு அங்கே அலைமோதிக் கொண்டிருந்தது. இங்கே சீறிப் பாயும் நெருப்பு நீலமேகத்தின் நெஞ்சில் சுழல் வட்டமடித்தது.
மிகவும் குறுகிய தெருவாதலால் எதிர்வீட்டு நிகழ்ச்சிகள் நீலமேகத்துக்குத் தெளிவாகத் தெரிந்தன.
நல்ல உள்ளங்களில் நஞ்சைப் பதியமிடும் நச்சுப் பாம்புக் கூட்டம் சுற்றிச் சூழ்ந்திருந்து சரவணனைப் பாராட்டிக்கொண் டிருந்தது.
“என்ன இருந்தாலும் நீ கெட்டிக்காரன் தானப்பா, சரவணா உன்னைவிடப் பெரியவர்களெல்லாம் உன் தங்கை படும் கொடுமை யைப் பார்த்திருந்தும் பாராதிருந்துவிட்ட வேளையிலே நீ செயலில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டாயே…” என்று போற்றிக் கொண்டிருந்தார், முன்னேற்றப் பாதையிலே வெகு வேகமாய்ச் சென்றுகொண்டிருந்த நண்பர் ஒருவர்.
“வயதிலே மட்டும் பெரியவராக இருந்தால் போதுமா ? செயலுக்கல்லவா வயது வளர வேண்டும் ? ” என்று நண்பனுக்கு மற்றொரு பாராட்டு மாலையை அணிவித்தான் தங்கத்துரை.
“கங்கிராஜுலேஷன்ஸ்! கேஸிலே வெற்றி பெற்றுவிட்டா யாமே,” என்று கை குலுக்கியவர்கள் இரண்டொருவர்.
சத்தியத்தைச் சாட்சி வைத்து நடத்திய கல்யாணத்தை, சட்டத்தின் மூலம் பிரித்துவிட்டதற்குப் பாராட்டுகிறார்களே ! ஆயிரம் உறவு கூடி, இந்தக் கல்யாணத்தை நடத்திவைத்த வர் அவர். ஆனால் இந்தப் பயல் சரவணன் ஒருவனாக நின்று விடுதலை வாங்கித் தந்து விட்டான்.
நீலமேகத்தின் கண்களிலே நீர் துளிர்த்து வடிந்தது. நெஞ்சிலே ரத்தம் துளிர்த்துக் கசிகிறது.
சரவணனின் வீரத்தைப் பாராட்ட அவனையொத்த மனப் போக்குப் படைத்த நண்பர்கள் வந்தார்கள்; மனதாரப் பாரட் டினார்கள். அவன் கொடுத்த கலரையும், காப்பியையும் பருகிய வர்கள் விடைப்பெற்றுப் போகும்பொழுதும் மறக்காமல் அவ னது வலிமையைப் பாராட்டிச் சென்றார்கள்.
போகுமுன்னதாக, சுதந்திரம் பெற்று நின்ற மங்கை சாரதா வையும், சற்று உரிமையைப் பார்வையில் தேக்கிப் பார்த்துச் சென்றார்கள். இந்த அவலத்தை அவளும் உணரவில்லை; அவளுக்கு விடுதலை வாங்கித் தந்த சின்ன அண்ணன் சரவண னும் உணரவில்லை.
ஆனால், தெருவில் எதிர்ச்சாரி வீட்டின் ஜன்னல் கம்பிகளி னூடாக, தம்பியின் வீட்டிலே நடக்கும் அவலத்தைக் கண்டும் தடுக்க முடியாத கையாலாகாத்தனத்தை நினைத்துப் பொங்கிப் பொருமி நின்ற நீலமேகம் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.
அவர் நெஞ்சம் கொல்லன் உலைக்களமாய் கொதித்துக் கொண்டிருந்தது. உருகியோடும் இரும்புச் சூட்டிலே பாதம் பதித்து நடப்பவரைப் போலத் துடித்தார். சரவணனும், சாரதாவும் அவரைவிட வயதில் சிறியவர்கள்…ஆனால், லிலே மிகப் பெரியவரின் செயலையும் மிஞ்சிவிட்டார்களே-
சே…!
தெய்வத்தைச் சாட்சியாக வைத்து, தெய்வ மனம் படைத்தவர்கள் ஆசீர்வாதம் பெற்று, மங்கல நாண் முடித்துப் பிணைத் துக் கொண்ட உறவை, கோர்ட்டார் முன்னிலையில், கொடியவர். கள் சாட்சியுடன் விடுதலை வாங்கித் தந்து விடுவதாமே…
நீலமேகத்தின் நெஞ்சு வெடித்துச் சிதறி விடாதிருக்கத் தன் கரங்களை மார்பிலே புதைத்துக் கொண்டார். அவர் நினைவு எங்கெங்கோ மூழ்கி எதையெதையோ தேடி எடுக்க முனைந்தது.
‘சட்டத்தின் மூலம் அவன் உறவைப் பிரிக்கலாம்; அவனது நினைவை அழிக்கவே முடியாது,’ என்ற முடிவிலே தான் வந்து நின்றார்.
நாலைந்து மாதங்களுக்கு முன்னால் சாரதா கணவனோடு கோபித்துக் கொண்டு தன் வீடு தேடி வந்த போது நீலமேகம் அவளை வரவேற்கவில்லை; வாழ்த்தவுமில்லை.
கணவனைப் பகைத்துக் கொண்டு ஓடிவருவது சாரதாவுக்கு அது முதன் முறையுமல்ல; முடிவான முறையுமல்ல.
விவாகமான சில நாட்களில் தொடங்கிய பழக்கம், அவளைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டுப் பொழுது போக்காகவே ஆகிவிட்டது. கணவனிடம் காணும் சின்னஞ்சிறு குற்றங்களை யெல்லாம் பெரிதாகப் பாராட்டிக் கொண்டு அவனோடு பெரும் போராட்டமே நடத்தி முடித்து முடிவில், ‘உன் தயவே தேவை யில்லை’ என்று அண்ணன் வீட்டிற்கு ஓடி வந்து விடுவாள். உண்மையை உணராத நீலமேகம், தங்கையின் கண்ணீருக்கு மதிப்புக் கொடுத்து மைத்துனரைக் கண்டிப்பார்.
காலம் போகப் போகத் தவறு எங்கே பிறக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் நீலமேகம். தங்கையைத் திருத்த முயன்றார்.
அவரது புத்திமதிகள் விழலுக்கிறைத்த நீராயின. அண்ணன் கொடுத்தனுப்பும் பணம் இருக்கும் வரை கணவன் வீட்டில் கொட்டமடித்து விட்டு, கை வரண்டதும் கணவனோடு எதையா வது பேசிப் புயல் எழுப்பிவிட்டுப் புழுதியாய் ஓடிவந்து விடுவாள் அண்ணன் வீட்டிற்கு.
இம்முறை வந்தபோது, அண்ணன் நடையேற்ற மறுத்து விட்டார். தங்கை அழுதாள்; கெஞ்சினாள்; ‘என் நிலை தெரிந்துமா என்னை இப்படி ஒதுக்குகிறாய்?’ என்று மன்றாடினாள்.
நீலமேகம் மனம் கலங்கவே இல்லை.
கணவன் வேலு அடித்ததனால் மண்டையில் ஏற்பட்டிருந்த ரத்தக் காயத்தை-கட்டை அவிழ்த்து அவள் காட்டியும் கூட- நீலமேகத்தின் மனம் இளகவே இல்லை. பெண்ணுக்குக் கணவன் வீடே சகலமும் என்பதை அவள் உணர வேண்டும் என்று எண்ணினார் நீலமேகம்.
“உன் கணவன் வேலு, முரடன். ஒப்புக் கொள்ளுகிறேன்; ஆனால் அவன் முரட்டுத்தனம் வெறியாக மாறும் அளவுக்கு அவனை மாற்றிய குற்றவாளி நீதானே? ஒரு மனிதன் நல்லவ னாகவோ கெட்டவனாகவோ மாறுவது அவனுக்கு வந்து வாய்க்கும் மனைவியைப் பொறுத்ததே…தவறு உன் மேல் தான்!”
“என் மீது தவறானால் என்னைத் திருத்த நீ முயற்சிக்கலாம் அண்ணா”, என்றாளே, அந்த வார்த்தை இன்று விசுவரூபம் எடுத்து அவரை வதைத்தது.
‘நான் பாவி. அன்றைக்கு வந்தவளை வீட்டிலே சேர்க்க மாட்டேன் என்று மறுத்தால் உடனே ஊருக்குப் போய் விடுவாள் என்று நினைத்தேன். இப்படி உறவையே துண்டித்து விடுவாள் என்று கண்டேனா?’
இதற்கு முன் சாரதா எத்தனையோ முறை, கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு என் வீட்டோடு வந்து தங்கியிருந் திருக்கிறாளே, அப்பொழுதெல்லாம் தங்கையை எட்டியும் பார்த் தறியாத சரவணன், இன்று, நான் இருக்கிறேன் உனக்கு, என்று சொல்லி அழைத்துப் போனான். போனதோடு நிறுத்தி யிருக்கலாம். அவள் மண்டைக் காயத்தையே ஆதாரமாகக் காட்டி கோர்ட்டிலே விவாகரத்துக் கோரி அவள் சார்பாக வழக்குப் போட்டு விட்டான். வெற்றியும் பெற்று விட்டான்.
பிளவுபட்ட குடும்பத்தை ஒன்று சேர்க்க ஆயிரம் முயற்சிகள் தேவை. கீறல் விழுந்த இதயத்தை ஒட்டுப் போடச் சிரமம் தேவை.
இப்பிறப்பன்றி, ஏழ்பிறப்பிலும் தொடர்ந்து வருவதாய்க் கூறும் உறவையும் உள்ளத்தையும் கூறு போடவும் முயற்சி தேவைதானோ?
சரவணன் ஒருவனாகவே நின்று, அந்த முயற்சியில் முனைந்து வெற்றியும் பெற்று விட்டானே !
வீட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டிய பெண்மையைக் கோர்ட்டுக்கு இழுத்து விட்டானே – இதை வெற்றியென்று கொண்டாடுகிறார்களே !
நீலமேகம் மனம் புழுங்கினார்.
ஆட்களும் விருந்துமாகத் தடபுடல் பட்டுக் கொண்டிருந்த சரவணனின் வீடு, ஆய்ந்து ஓய்ந்து அமைதிக்குள் அடங்கியது.
வீதியிலே மின்னும் ஒளி விளக்குகளின் வெளிச்சத்திற்குத் துணையாக, வானவீதியில் நிலவோனும் பவனி வரத் தொடங்கி விட்டான்.
நீலமேகம் இருந்த அறையிலே, வீதியிலிருந்து வந்து பாயும் ஒளிக்கதிர்களைத் தவிர, வேறு வெளிச்ச மில்லாது இருண்டு கிடந்தது அவரது இதயத்தைப் போல.
திடீரென்று மின்சார விளக்குப் பளிச்சிட்டது.
“அடப் பாவி” என்று குமுறிக் கொண்டே ஒளிக்குள் ஒளியாய் வந்து நின்றாள் பார்வதி,
மனைவி குறிப்பிடும் ‘பாவி ‘ யாரென நோக்கிய கணவனிடம் கூறினாள்.
” உங்கள் தம்பியின் நண்பன் – அவன் தான் கூடிக் குடியைக் கெடுக்கும் தங்கதுரை – பேசிச் சென்றதைக் கேட்டேன். என் வயிறு பற்றி எரிகிறது. கடைசியிலே அந்தப் பெண் சாரதாவுக்குக் கிடைத்த கதி இதுதானா?” என்று விம்மினாள் பார்வதி:
“ஏன் அழுகிறாய்? உன் மைத்துனனும், நாத்தனாரும் மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கின்ற வேளையிலே நீ ஏன் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாய்? என்னைப் பார். நான் எப்படி மகிழ்விலே மிதந்து கொண்டிருக்கிறேன். இதை உன்னால் உணர முடியாது பார்வதி…என்னால் துணிந்து செய்ய முடியாத செயலை என்னைவிடச் சின்னவன் செய்து முடித்துவிட்டானே என்கிற பூரிப்பிலே மிதந்துகொண்டிருக்கிறேன்!”
நீலமேகம் அழுகையை அடக்கிக்கொண்டு பொய்யாகச் சிரிக்க முயன்றார்.
“போதும், உங்கள் போலிச் சிரிப்பு போதும். அங்கே உங்கள் தங்கையின் வாழ்க்கையே பாழ்பட்டுச் சிரித்து நிற்கிற வேளையிலே…”
“பார்வதி! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே, இப்போதுதான் அவள் முழு உரிமையும் பெற்ற சுதந்திரவாதி! ”
“அவள் சுதந்திரம் நாசமாய்ப் போகட்டும். அவளுக்குக் கிடைத்த சுதந்திரத்தாலே, அவளது பெண்மையே பறிபோய் விடும் போலிருக்கிறதே !”
“என்ன சொல்லுகிறாய் நீ?”
“உங்கள் தம்பி, தங்கைக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த புகழிலே மிதப்பவர். அந்தப் புகழின் போதையிலே மூழ்கி, மேலும் தனக்குப் புகழ் தரக் கூடிய செயலில் இறங்கிவிட்டார்.” புரிந்துகொள்ள முடியாமல் நெற்றியைச் சுளித்தார் நீலமேகம்.
“ஆமாம், தன் செயலுக்கு உறுதுணையாய் நின்ற தங்கத் துரைக்குத் தன் நன்றியின் காணிக்கையாகத் தங்கையையே அர்ப்பணிக்க முன்வந்து விட்டார்.”
“என்னது? சாரதாவுக்கு மறுமணமா?”
நீலமேகத்தின் உடலெங்கும் நெருப்பு ஜ்வாலை கொழுந்து விட்டு எரிந்தது.
“இப்பொழுதே போய் அவளைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு வருகிறேன் … ”
கண்களில் ரத்தச் சிவப்புக் கனன்றது. கைகள் தங்கையின் கழுத்தை ஸ்பரிசிக்கத் துடிதுடித்தன. சிறைக்குச் சென்றாலும் பாதகமில்லை. அதனால் தன் மானம் பறிபோனாலும் சரி, தங்கை யின் மானம் காக்கப்பட வேண்டும் என்ற வெறியோடு நீலமேகம் எழுந்தார். சற்றைக்கெல்லாம் ஆவேசமான உருவம் ஒன்று எதிர்வீடு நோக்கி விரைந்ததைப் பார்த்து பதறினாள் பார்வதி.
தம்பியின் வீட்டு வாசலில் அவர் காலடி வைத்த வேளை, உள்ளிருந்து சாரதாவின் குரல் பரிதாபமாய்ப் பிரலாபித்தது. அந்தக் குரலிலே ஆணவம் அடங்கி, அபலைத்தனம் மேலோங்கி ஒலித்தது:
சாரதா கண்ணீரும், கேவலுமாக வாதிட்டுக் கொண்டிருந்தாள்.
”சரவணா! நீ என்னிலும் மூத்தவனாக இருக்கலாம்; ஆனால் புத்தியில் என்னிலும் சின்னவனாக, மட்டமானவனாக மாறிவிட்டாய். எனக்கு விடுதலை வாங்கித் தந்துவிட்ட உரிமையின் பேரிலே எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று துணிந்து விட்டாய். நான் விவாகரத்துக் கோரியதன் அடிப்படை, என் கணவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைத் தவிர, எனக்கு மறு வாழ்வு தேடிக்கொள்ள வேண்டும் என்ற மாற்று எண்ணத்தால் அல்ல. அவர்…அவர்… வேறொரு பெண்ணை மிகவும் மனம் விரும்பி நேசிக்கிறார். அவர்கள் இன்ப வாழ்வுக்கு இடையூறாக என் நினைவு அவரிடையே இருக்க வேண்டாம் என்பதற்காக மட்டுமே நான் குணம் கெட்டவளாக மாறி அவரிடமிருந்து விடுதலையும் வாங்கிக்கொண்டு விட்டேன். அதற்காக இன்னொருவனை மணந்து கொள்வேன் என்றும் நினைத்துவிட்டாயே? தூ…!” சாரதா விக்கி வெடித்துக் கொண்டிருந்தாள்.
அதை அடக்கிச் சரவணனிடமிருந்து சிரிப்பொலி பறந்தது.
“அப்படியானால் மிகவும் நல்லதாயிற்று சாரதா. உன் கணவருக்கு எப்படி இன்னொரு பெண்ணை நேசிக்க உரிமை இருந்ததோ, அதைப்போலவே உனக்கும் இன்னொருவனை மணந்து கொள்ளவும் உரிமை உண்டு என்பதை நிலைநாட்டிவிட்டால் போயிற்று! எனக்கும் என் கடமை முடிந்தாற் போலிருக்கும்.”
“போதும் நிறுத்து, உன் கடமையும், பாசமும். மேலே ஒரு வார்த்தை பேசினாலும் என்ன நடக்குமோ தெரியாது!” குமுறிக்கொந்தளித்தாள் சாரதா.
“என் சொல்லைக் கேட்டு நடப்பதானால் மட்டுமே உனக்கு இந்த வீட்டில் இடமுண்டு. இல்லையானால் இந்த நிமிடமே இந்த இடத்தை விட்டு வெளியேறு… ”
“எங்கே அண்ணா போவேன்?” சாரதா அனாதையாகத் தடுமாறினாள்.
“எங்கே வேண்டுமானாலும் போ!” என உறுமினான் சரவணன்.
“அண்ணா!”
“நான் இருக்கிறேன். என் வீட்டிற்கு வா அம்மா சாரதா போகலாம்.” என்ற அழைப்புக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அண்ணன் நீலமேகம் நின்று கொண்டிருந்தார்.
“திருமணம் என்பது நினைத்த மாத்திரத்தில் மாற்றிக் கொள்ளும் கடைச் சரக்கல்ல; கணவன்-மனைவி உறவு, காலம் காலமாய்த் தொடர்ந்து வரக்கூடியது. அதை எந்தக் காரணத்தாலேயும்- தியாகத்தின் அடைப்படையாலும் கூட முறித்துக் கொள்ள முடி யாத உறவு. பாசம், பற்று எல்லாமே அது தான். சட்டமும் சமூகமும் உங்களைப் பிரித்தாலும், அன்பும், பாசமும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் உங்களை ஒன்று சேர்க்கட்டும். நான் உங்கள் உறவு ஒன்றுகூட முயற்சி செய்கிறேன்,” என்று கூறிய அண்ணனின் பேச்சைத் தொடர்ந்து, அவரைப் பின்பற்றி நடந்தாள் சாரதா.
– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.