சங்கல்ப நிராகரணம்




(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“சனி, ஞாயிறுடன் ஒட்டிக் கொண்டு எங்கே ஒரு விடுமுறை தினம் வரும், யாழ்ப்பாணம் போய் வருவதற்கு” என்று கொழும்பில் இருந்து ஏங்கும் அநேகரில் நடேசனும் ஒருத்தன். பிரிவென்னும் கொடிய வேதனையின் எல்லைக் கோட்டிலே அவன் நின்று கொண்டிருந்தான். இப்படியான வேதனையை அவன் இதற்கு முன் அனுபவித்தது கிடையாது.

கடிதங்கள் எழுதத்தான் செய்தான். கடிதங்களா அவை? அவ்வளவும் கண்ணீரின் கருவூலங்கள்; இதயத்தின் துடிப்புகள்.
ஆனால் கடிதத்தில் மாத்திரம் காதல் வாசகம் எழுதி மனைவியை எத்தனை நாளைக்குத்தான் திருப்தி செய்ய முடியும்?
“அவள் பேதை; மணம் முடித்து எதைத்தான் கண்டாள்; கனவுலகில் நிழலுருவத்தின் அசைவு போன்று எங்கோ அரையும் குறையுமாகப் பழகிக் கொண்டோம்; மனம் விட்டு எங்கே பேசினோம்.”
நாணத்துடன் அவன் முன்னே நின்று, பின்னலை வாயினால் கடிக்கும் அவள் இப்படியெல்லாம் எழுத எங்கே கற்றுக் கொண்டாள்?
“உங்கள் முகத்தை நான் பரிபூரணமாக ஒரு முறை கூடப் பார்த்தது கிடையாது; நீங்கள் சிரிக்கும் போது உங்கள் கன்னங்களில் அழகுக் குழி விழுமாமே அதைக்கூட நான் ஆசை தீர அனுபவித்தது கிடையாது; இருந்தும்…
“நான் உங்கள் மனைவி, ஊரார் முன் உங்கள் உடைமையென்று பகிரங்கப் படுத்தப்பட்டவள் – நினைக்கவே எனக்கு வெட்கமாயிருக்கிறது…”
ஒவ்வொரு வார்த்தையும் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியை இதயத்தில் சொருகுவது போன்று இருக்கும்.
ஆனாலும் என்ன, அவன் அதிர்ஷ்டம்!
அதிர்ஷ்டம் எத்தனையோ பேருக்கு, எத்தனையோ உருவங்களில் எதிர்ப்படுகிறதுதான். ஆனாலும் அவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
மணம் முடித்த மறுநாளே, ஆங்கிலத்தில் அழகாக உச்சரிக்கப்படும் ‘ஹனிமூன்’ உல்லாசப் பிரயாணத்திற்குப் புறப்பட்டான்.
ஆனால், கொழும்பில் அவர்கள் கால்வைத்த போது அது கொழும்பு நகரமாகவே இல்லை. எங்கும் ஒரே கலவரம்; வெறி; இனவெறி.
மக்களை மக்கள் அடித்துக் கொன்று கொண்டிருந்தார்கள். பூமிதேவி இந்த அக்கிரமம் சகியாது மனம் நொந்து உதிர்த்த கண்ணீர்த் துளியே போன்று கொழும்பு மாநகரத்தின் தெருக்கள் எல்லாம் இரத்தத் துளிகள் சிந்தின.
கீழே ஒரே கரடு முரடான தரை; மேலே அகன்று விரிந்த வானம். யாரும் அத்துமீறி உள்ளே பிரவே சித்து விடாதபடி பலமான பொலீஸ் பந்தோபஸ்து.
சுற்றிலும் ஒரே “ஜே, ஜே” என்ற ஜனக் கூட்டம்; அவர்கள் மத்தியில் அவளும் அவனும், கவிகளால் வர்ணிக்கப்படும் அந்த முதல் இரவும். உள்ளத்தை ஊடுருவும் பார்வை ஒன்று அவன் இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும்.
சிரமத்துடன் வெளிவரும் ஒரே ஒரு நீர்த்துளி அவள் இதயத்துக் கனவுகள் அனைத்தையும் நிர்மூலமாக்கும்.
தொடர்ந்து பத்து நாட்கள். அகதிகளுடன் அகதிகளாக அவர்கள் செத்தார்கள்.
அரைகுறைத் தாடி மீசையுடன் அவனும் சிக்குப் பிடித்த தலையுடன் அவளுமாக, மறுபடியும் கப்பல் வழியாக யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்ட போது, காதல் செய்ய வேண்டும் போலவா தோன்றியது!
வெட்கத்துடன் ஊர் மண்ணிலே கால்வைத்த போது வேலைக்கு வந்து விடும்படி ஓர் அவசரத் தந்தி ஏற்கனவே வந்து கிடந்தது.
மறுபடியும் கொழும்பு மாநகரம்!
2
கமலிக்கு இருட்டியது கூடத் தெரியாது. மார்பிலே , நடேசனுடைய கடிதம். அந்த நீண்ட கடிதம் விரித்தபடி கிடந்தது.
பார்த்தது, பார்க்கிறது எல்லாமே சோகத்தின் பிரதிபலிப்புகளாக, துடிப்புகளாகவே அவளுக்குத் தென்பட்டன.
இதயத்தில் எல்லாமே இழந்துவிட்டது போன்ற ஏதோ ஒரு வேதனை. அதன் ஊடே நிழலாடியது இனந் தெரியாத ஏதோ ஒரு இன்பத்தை இழந்து விட்டோ மென்ற துடிப்பு.
“விமலா சொன்னதெல்லாம் உண்மையா?!
“சீ..இப்பிடித்தான் எல்லோரும் வாய் விட்டுப் பேசுவினமாக்கும்!
“கமலி! உண்மையைச் சொல்லு. நடந்து வரும் காலடி ஓசை ஒன்றை வைத்தே உன்னுடைய கணவரை நீ தெரிந்து கொள்ள ஏலாதா?
“விமலா என்னைப் போல மடைச்சி இல்லை ; நான் தான் இருக்கிறனே, பேருக்குக் கல்யாணம் என்று பண்ணிக் கொண்டு.
“அவளைப் பார். அவளுக்கு என்ன வயது? நான் சேலை உடுத்த ஆரம்பித்த போது அவள் பாவாடை கூடக் கட்டவில்லை.
“கால் பெருவிரல் மாத்திரம் போதுமாமே அவரை இனம் கண்டுபிடிக்க. அவருடைய சுவாசம் கூட எவ்வளவு கதகதப்பாக இருக்குமென்று தனக்குத் தெரியுமாமே…சுவாசம் மாத்திரமா?…சே…இன்னும் அவள் நித்திரையாக இருந்தால் அவளை அவர் தொட்டு எழுப்புவதே கிடையாதாமே…குனிந்து ….. உதட்டிலே…ச்சீ…
“என்னைப்பற்றி அவள் என்ன நினைத்திருப்பாள் – வேறு என்ன நினைத்திருப்பாள் – பரிதாபப்பட்டிருப்பாள்.”
***
பாலனுடைய விக்கல் இன்னமும் கேட்டுக்கொண்டு தானிருந்தது. ஏற்கனவே இருண்டு விட்டது. கைவிளக்கை ஏற்றி மேசைமேலே வைத்தாள் கமலி.
“தலையைத் தூக்கு பாலன்; அழுதது போதும். மண்ணெண்ணெய் விளக்கு தட்டுப் பட்டுதெண்டால் போதும்.”
“மாட்டன். அப்படித்தான் கிடப்பன்!” பெற்றோர் கல்யாண வீட்டுக்குத் தன்னை அழைத்துப் போகாமல் கமலிக்குத் துணையாக விட்டுப்போன ஆத்திரம் அவனுக்கு முற்றிலும் தீரவில்லை.
கமலி குடத்தைத் தூக்கி இடுப்பிலே வைத்துக் கொண்டு கிணற்றடிக்குப் புறப்பட்டாள். அந்த மெல்லிய இருளைப்போலவே அவள் மனத்திலும் இருள் பரவிக்கொண்டு வந்தது . எதற்கென்று தெரியாத ஏதோ ஒரு வேதனையின் மெலிந்த கீறு அவள் உள்ளத் தின் அடிவாரத்தில் படர்ந்து கொண்டிருந்தது .
யாரோ குளித்துக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது .
கமலி திடுக்கிட்டுப் போனாள்.
“அதாரது?”
“நான் தான்”
“ஆர் ராசனே” என்றாள் பயம் தெளிந்த குரலில்.
“ஏன் அக்கா, பயந்து போனீங்களோ?” அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“இல்லை, நான் ஆரோ எண்டெல்லோ நினைச்சு…”
“இதுக்கை இரண்டு வாளி தண்ணி ஊத்து தம்பி…”
“ராசனைக் கண்டு கூடப் பயந்து போனனே! முன்னையெல்லாம் இந்தளவாய் இருந்தவன்…”
“ஆம்பிளையளுடைய வளர்த்தியே இப்பிடித்தானாக்கும்!”
“ஏன் ராசன், உங்கடை அம்மா ஆக்கள் எல்லாரும் கலியாண வீட்டுக்குப் போட்டினமோ?”
“அவையோ? அவை அப்போதையே போட்டினமே!”
“அப்ப வீட்டிலை ஒருதரும் இல்லையாக்கும்!”
“இல்லையக்கா, நான் மாத்திரம்தான்!”
குடத்தை எடுக்க அவள் குனிந்தபோது அவளை யறியாமலே மேல் தாவணி மெதுவாகக் கீழே விழுந்தது.
அவசர அவசரமாக அதை அள்ளி மேலே போட்டுக் கொண்டாள். மங்கிய நிலவொளியில் அவன் தன்னை உற்றுப் பார்க்கிறான் என்று மட்டும் அவளுடைய உள்ளுணர்ச்சி கூறியது. அவளுக்குப் பெருமையாயிருந்தது.
நிமிர்ந்தபோது அவள் திடுக்கிட்டாள். தலையிலே ஈரம் சொட்ட, முன் மயிர் நெற்றியை மறைக்க அவன் ஸ்தம்பித்து நின்ற தோற்றம் – அவளுக்கு எதையோ நினைவூட்டியது.
“இப்படித்தான், இப்படித்தானே அவரும்…”
இரண்டாவது முறையாக அவள் கிணற்றடிக்கு வந்தபோது “ராசன் போய்விட்டிருப்பானோ” என்று அவளுடைய உள் மனம் பட படவென்று அடித்துக் கொண்டது.
“ராசனுக்கு வயது என்ன இருக்கும்? பதினாறு இருக்குமா?”
“போன வருஷமே ‘எஸ்.எஸ்.சி.’ எடுத்து விட்டானே!”
சோப்புப் போட்டுத் தேய்த்துக்கொண்டிருந்தான் ராசன்.
“ஏன் ராசன்! அப்ப வீட்டுக்குக் காவல் நீ தானோ?”
“ஓ…ம் அக்கா, சோதினை கிட்டுது…”
எதற்காகவோ அவன் உதடுகளிலே குறுஞ்சிரிப்பு ஒன்று நெளிந்தோடியது.
அவன் கன்னங்களிலே குழி – அழகுக் குழி.
“அந்தக் கன்னங்கள் – உரோமமே இல்லாத அந்தப்பட்டுக் கன்னங்கள் – அதை யுக யுகாந்திரமாகப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.
அந்தக் கன்னத்துக் குழியிலே பட்டுத் தெறித்த நிலவின் நீள்கரங்கள், காரணமில்லாமல் விம்மித் தணியும் கமலியின் மார்பகத்தை நாணத்துடன் தொட்டன.
திடுக்கிட்டுத் தன் நினைவு வந்தவளாய்த் துலாக் கொடியைப் பற்றினாள் கமலி.
“தண்ணிதானே! நான் அள்ளித்தாறன் அக்கா.”
“இல்லைத் தம்பி; நீ தலையைத் துடை, ஈரஞ் சுவறிப்போகும்.”
“அது கிடக்கு. இந்த இருட்டிலை நீங்கள் அள்ளக் கூடாது”
கமலிக்கு மனத்தை என்னவோ செய்தது, “ராசன்” என்று ஆசை தீர அழைக்க வேண்டும் போல் பட்டது.
அவன் பறிப்பது போல் வாளியைத் தன் கையிலே எடுத்துக்கொண்டான். அப்படி அவன் செய்தபோது அவனுடைய சோப்புக்கை கமலியின் மெலிந்த கரங்களில் ஒரு கணம் பட்டது.
கமலியின் மனத்தில் கட்டுமீறி நுறை தள்ளியது. ஒரு புத்துணர்ச்சி.
ராசன் தண்ணீர் அள்ளியபோது ஏனோ அவன் கரங்கள் அவனையும் அறியாமல் நடுங்கின.
3
மூன்றாவது தடவையாகக் குடத்துடன் அவள் புறப்பட்டபோது சுயமாக நடந்தவளாகவே தெரிய வில்லை. ஏதோ பிசாசு அவள் உள்ளே புகுந்து அவளை உந்தித் தள்ளுவது போலிருந்தது.
“எதற்காக, எதற்காக?”
“அவன் சிரிப்பதைப் பார்க்கவேண்டும், ஒரே ஒரு தடவை” என்ற ஆவலே பரந்து, விரிந்து அவள் சிந்தை முழுவதையும் வியாபித்து நின்றது. எங்கே மனது மாறிவிடுமோ என்ற பயத்தில் அவள் இன்னும் பரபரப்புடன் நடந்தாள்.
ராசன் தலையைத் துவட்டியபடியே நின்று கொண்டிருந்தான்.
“இன்னமும் தண்ணி வேணுமா?” – அவன் குரல் ஏனோ கரகரத்தது.
“இன்னும் ஒரு குடந்தான்” – எங்கோ ஆழத்தில் இருந்து பதில் கிடைத்தது.
”அ..க்…கா” – அவன் எதற்காகவோ குழறினான்; தடுமாறினான்.
கமலி பேசவில்லை. அவனையே பார்த்துக்கொண்டு மௌனமாக நின்றாள்.
“நீங்…நீ…ஒண்டும் அம்மாட்டை சொல்ல மாட்டீங்களே”
அவளுக்கு என்ன வந்தது? அப்படியே சிலை போல நின்றாள்.
வானத்து நட்சத்திரம் ஒன்று இடம் பெயர்ந்து விழுந்து கொண்டிருந்தது.
மறுபடியும் அந்தக் காலிக் குடத்தைத் தூக்கி இடையிலே வைத்துக்கொண்டு அவள் போனபோது, அது பாராங்கல்லாகக் கனத்தது.
வீட்டில் உள்ளே இன்னமும், பாலனின் விக்கல் கேட்டுக்கொண்டுதானிருந்தது.
4
“கனவுலகம்” என்பார்களே, அந்த ரீதியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. கமலிக்குத் தன்னிலை முற்றிலும் விளங்கியது போலுமிருந்தது. விளங்காதது போலுமிருந்தது. தனிமையில் இருக்கும் போதெல்லாம் மனத்தை எவ்வளவோ திடப்படுத்தித் தான் வைத்திருந்தாள். ஆனாலும்…
ஏதோ ஒரு துடிப்பு, ஏதோ ஒரு ஆவல், மறுபடி யும், மறுபடியும் அவளை அந்தப் பாவப் படுகுழியில் கொண்டு போய்த் தள்ளியபடியே இருந்தது.
கமலி, வெறும் நடைப் பிணம்.
சில வேளைகளில், அவள் கணவன் எழுதும் கடிதம் வெகு உருக்கமாக இருக்கும். ஓடோடிச் சென்று அவன் காலில் விழுந்து கதறிக் கதறி அழ வேண்டும் போல் தோன்றும்; அன்றெல்லாம் வெகு வைராக்கியத்துடன் இருப்பாள்.
ஆனால், பொழுது சாய்ந்து, விளக்கு வைக்கும் அந்த நேரத்தில், சந்தியில் திரும்பும் ராசனுடைய சைக்கிள் ‘பெல்’லின் கணீரென்ற ஒலி அவளுடைய உறுதி எல்லாவற்றையும் நொடிப் பொழுதில் சிதறடித்து விடும்.
5
கமலி, கையிலே கொக்கைத்தடி ஒன்றை வைத் திருந்தாள். முருங்கை மரத்தில் அபூர்வமாகக் காய்த்த முருங்கைக் காய் ஒன்றைக் குறி வைத்து, அவள் குதித்துக்கொண்டிருந்தாள்.
அவளுக்குத் தெரியும் அவள் கணவனுக்கு அது பிடிக்கும் என்று; எப்படியும் இன்றைக்கு அவருக்கு அதைச் சமைத்துவிடுவாள்.
நடேசன் இந்தக் காட்சியை ரசித்தபடி நின்று கொண்டிருந்தான். நாளைக்கெல்லாம் அவன் இப்படியான காட்சிகளைக் காண முடியாது. அவனுடைய லீவு அன்றுடன் முடிவடைகிறது.
அவன் மன அடிவாரத்தை என்னவோ செய்தது. ‘கமலி – என் அன்புக் கமலி – அவளை மறுபடியும் பிரியவா?’
களைத்து, வியர்வை கோத்து நின்ற அவளுடைய முகம் வெகு ரம்மியமாக இருந்தது.
“கமலி” என்று ஆசை பொங்க அழைத்தபடியே அவளுடைய கதகதப்பான கன்னத்தை தன் பக்கம் திருப்பினான் அவன்.
“இச்” “ஆக்கள் பாக்கினம்” என்றாள் கூச்சத்துடன்.
கிடுகு வண்டியின் உச்சியில் இருந்து போன இருவர், வேலிக்கு மேலால் தங்கள் சுதந்திரத்தைக் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அனுபவித்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.
6
அவன் புறப்பட்டு விட்டான்.
அவளுக்கு உலகமே அஸ்தமித்துவிட்டது போன்ற உணர்ச்சிதான் எஞ்சி நின்றது.
அவனுடைய மூச்சின் ஒவ்வொரு இழையும் அவ ளுக்கு இப்போது விளங்கியது. அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவளுக்குப் புரிந்தது. பிரிவு என்பதன் முழு அர்த்தத்தையும் இப்பொழுது தான் அவள் உணர்ந்தாள்.
நடேசன் கமலியின் இடது கரத்தை மெதுவாக எடுத்துக் கொண்டான்; கமலிக்குச் ‘சுரீர்’ என்றது.
ராசன் சோப்புப் போட்டுக்கொண்ட கையினால், தட்டுத்தடுமாறிப் பிடித்ததும் இதே கையைத்தான்.
“சீ” – வெட்டி எறிந்தாள் அந்த எண்ணக்குப்பைகளை. அவையோ மறுபடியும் மறுபடியும் பூதாகாரமாக எழுந்து அவளை வதைத்தன.
கமலி அழுதாள்; அழுதாள். எதை நினைத்தோ அழுதாள்.
நடேசனுடைய கண்களும் கண்ணீரைக் கக்கிக் கொண்டுதானிருந்தன.
“நீங்கள் ஏன் அழுறீங்கள்?” விக்கினாள் அவள், தன் பிஞ்சு விரல்களால் அவன் கண்ணீரைத் துடைத்தபடியே.
“நீ ஏன் அழறாய், அதுதான்!”
“இனி எப்ப வருவீங்கள், அத்தான்”
ஒரு மௌனம் தான் அதற்குப் பதில்.
கமலியினுடைய சூடான வேதனை ஊற்றுகள் இரண்டு, அவனுடைய துடிக்கும் உதடுகளில் சங்கம்மாய்க் கொண்டிருந்தன.
அவளுடைய உள்ளத்திலே அப்போது அவளை அறியாமலே ஒரு சங்கல்பம் உருவாகிக் கொண்டிருந்தது.
7
அன்று ஞாயிற்றுக் கிழமை. போர்டிங்கில் நண்பர்கள் யாருமே இல்லை. எல்லோரும் படம் பார்க்கப் போய்விட்டார்கள். கமலிக்கு நிம்மதியாக ஒரு கடிதம் எழுதுவதற்காக அமர்ந்தான் நடேசன்.
‘கமலி! இந்தக் கணத்தில் எனக்கு இறகு முளைத்தால் நான் அப்படியே உன்னிடம் பறந்து வந்துவிட மாட்டேனா? உன் நடை, உன் அலங்காரம், உன் பேச்சு, உன் இதழ்க் கடையோரத்தில் தோன்றும் அந்தக் குறுஞ் சிரிப்பு இவற்றை அணு அணுவாக அனுபவித்து இரசிக்க மாட்டேனா?
“அன்பே, நான் இக் கடிதம் எழுதும் இந் நேரம் நீ அங்கே எமக்குப் பழக்கமான அந்த ஒரே மல்லிகைப் பந்தரின் கீழ்நின்று கொண்டிருப்பாய்; உன் எண்ணம் எங்கெல்லாமோ தாவும். அந்த எண்ணக் குவியல்களுக்கே…”
மேற்படி கடிதத்தை நடேசன் எழுதிக் கொண்டிருந்த அதே நாள் அதே நேரம் எத்தனையோ மைல்களுக்கப்பால் –
கமலியின் தகப்பனார் தான் புதிதாகக் கொழும்பிலிருந்து வாங்கி வந்த ‘வயிற்லகூன்’ கோழிகளை மரத்தின் மேல் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்.
உள்ளே அவருடைய மனைவி புகை பிடித்துப் போன அரிக்கன்லாந்தரைத் துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
பாலன் தன்னுடைய புத்தகத்தை தூக்கி, விரித்து வைத்து, வேண்டாத உரத்த குரலில்,
“உள்ளக் கமலமடி கிளியே
உத்தமனார் வேண்டுவது”
என்று விபுலானந்தருடைய பாடலைப் பாடுவதும், தமக்கையை நிமிர்ந்து பார்ப்பதுமாயிருந்தான்.
இரவுச் சமையலுக்காக வாழைக்காய் வெட்டிக் கொண்டிருந்தாள் – கமலி.
அவள் ஒன்றையுமே கவனிக்கவில்லை. வாழைக் காய் வெட்டுவதில் கூட அவள் கவனம் இருந்ததாகத் தெரியவில்லை.
மனத்திலே அவளுக்கு ஒரே இருள் – கனம்!
தூரத்தில் புளியடித் திருப்பத்தைத் தாண்டுகிற ராசனுடைய சைக்கிள் பெல், அவசியமில்லாமல், இரு முறை விட்டு விட்டு ஒலித்தது.
அதன் எதிரொலி கமலியின் ரத்தம் சிந்தும் விரல்களில் பட்டுத் தெறித்தது!
– 1959-61
– அக்கா (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1964, பாரி நிலையம், சென்னை.
– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.