சக்குபாய்க்காக சிறைப்பட்ட பண்டரிநாதர்!
பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது.
தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழி களுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளை யாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த வீதி வழியாக வந்து கொண்டிருந்தார். சக்குபாய் கட்டிய மணல் வீடு, அவரின் கால் பட்டு அழிந்தது. கோபத்துடன் சக்குபாய், ‘‘தாத்தா, நான் எவ்வளவு ஆசையா இந்த வீட்டைக் கட்டினேன் தெரியுமா? நீங்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கி விட்டீர்களே… இது நியாயமா?’’ என்று கேட்டாள்.
‘‘பகவான் நாமத்தில் லயித்து இருந்ததால் தவறு நடந்து விட்டது!’’ என்று மன்னிப்பு கேட்டார் முதியவர். குழந்தை அல்லவா? தனது வீடு சிதைந்ததை அந்தப் பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை. தனது மணல் வீட் டுக்கு பதிலாக, அவர் கையில் மீட்டிக் கொண்டு வந்த தம்புராவைக் கேட்டாள். அவரும் தம்புராவைக் கொடுத்து அதை எப்படி மீட்டுவது என்று கற்றுக் கொடுத்தார். குழந்தையின் காதில் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை ஓதி அதை தினமும் ஜபிக்குமாறும் கூறினார்.
‘‘அஷ்டாக்ஷரம் என்ற பெயருடைய பலர் இந்தக் கிராமத்தில் இருக்கிறார்களே? அவர்களில் யாருடைய பெயர் இது?’’ என்று கேட்டாள் சக்குபாய்.
அவளிடம் கஜேந்திரன் மற்றும் பிரகலாதன் கதைகளைக் கூறிய முதியவர், அஷ்டாக்ஷரத்தின் பெரு மைகளையும் எடுத்துரைத்தார். அனைத்தையும் கேட்ட சக்குபாய், பெரியவரிடம் தான் விளையாட்டாக தம்புராவைக் கேட்டதாகச் சொல்லி, ‘‘அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள்.
சக்குபாயின் முதுகில் அன்புடன் தடவி, ‘‘தம்புராவை மீட்டி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் பஜனைப் பாடல் பாடு!’’ என்று சொல்லி மறைந்தார் முதியவர்.
அதன் பிறகு குழந்தையின் மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அவர் சொல்லித் தந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போதும் சொல்லியபடியே இருந்தாள். தோழிகளுடன் விளையாடச் செல்லவில்லை. மனதில் எப்போதும் இறைவன் நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அந்தப் பெரியவரைக் காண வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. பத்து வயதாகி விட்டதால், உடனே இவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வரன் தேடி னர். எப்போதும் மௌனமாக இருப்பதால் இவளை ‘பைத்தி யம்!’ என்று ஊரார் பேசத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிந்து தேசத் திலிருந்து மித்ருராவ் என்ற இளைஞன் வியாபார விஷய மாக அங்கு வந்தான். அவனது அறிவும் அழகும் சக்குபாயின் பெற்றோருக்குப் பிடித்ததால், அவ னைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதுவரை திருமணமே வேண்டாம் என்று சொன்ன சக்குபாயும் திருமணத்துக்குச் சம்மதித்தாள்.
திருமணம் சிறப்பாக நடந்தது. சக்குபாய் சிந்து தேசத்துக்குச் சென்றாள். கணவர் வீட்டில் மாமியாரும் நாத்தனாரும் நன் றாக வேலை வாங்கினார்கள். சக்குபாயும் எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தாள். மனம் மட்டும் எப்போதும் பகவான் நாமத்தை சொல்லியபடியே இருந்தது. தன் மனைவி எதிலும் பற்று இல்லாமல் இருப்பது மித்ரு ராவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
சக்குபாயோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், பஜனை செய்வதுமாக இருந்தாள். இவளை இங்கும் ‘பைத்தியம்’ என்றனர் பலர். அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியைக் கூப்பிட்டு, பேய் ஓட்டச் சொன்னார்கள். அறையில் வைத்து பூட்டி னார்கள். அங்கும் அவள் தியானம் செய்தாள். பஜனைப் பாடல்களைக் கண்ணீருடன் மனம் உருகிப் பாடினாள். அவள் குழந்தையாக மணல் வீடு கட்டியபோது முதியவர் வேடத்தில் வந்த பகவான், மீண்டும் அதே வேடத்தில் சக்குபாய் வீட்டுக்கு வந்தார்.
தான் பேய் ஓட்டுவதில் வல்லவன் என்று முதியவர் கூற, சக்குபாயின் மாமியார் அவரை சக்குபாய் அறைக்குச் சென்று பேய் ஓட்டும் படி கூறினாள். அவரைப் பார்த்ததும், சக்குபாய்க்கு அவரை முதலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். இதைப் பார்த்த அவள் கணவரும் மாமியாரும் இவரால் சக்குபாய்க்குப் பைத்தியம் தெளியும் என்று சமாதானம் அடைந்தனர்.
முதியவர் சக்குபாயிடம், ‘‘இல் வாழ்க்கையில் இருந்து கணவருக்கும் மற்றவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, அந்த வாழ்க்கையை அனுபவித்த பிறகே அதில் உள்ள பற்றுவிடும். ஆகவே, இனி நீ உன் கணவருக்குத் தேவையானதை இன்முகத்துடன் பூர்த்தி செய்’’ என்றார். அப்படியே இருப்பதாக வாக்குக் கொடுத்தாள். கணவருடன் இனிமையாகப் பேசி, அவரை மகிழ்வித்தாள் சக்குபாய். இவர் களின் இல்லறத்தைப் பார்த்து ஊரே வியந்தது.
சக்குபாய் சந்தோஷமாக இருந்தாலும், அந்த முதியவரை இனி ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி தோன்றி அவளை வாட்டியது. இதனால், மனநிலை பாதிக்கப்பட்டு, நீர் எடுக்கச் சென்றபோது கிணற்றில் குதித்தாள். இதைப் பார்த்து பகவான் சும்மா இருப்பாரா? பக்தரின் வடிவில் வந்து காப்பாற்றி, நல்ல வார்த்தைகள் பல கூறி அவளை சமாதானப்படுத்தினார். அதனால் தெளிவடைந்த சக்குபாய் அவரிடம் சகஜமாக மனம் விட்டுச் சிரித்துப் பேசினாள். அங்கு தண்ணீர் பிடிக்க வந்த சில பெண்கள், இந்தக் காட்சியைக் கண்டு மித்ருராவிடம் சென்று சக்கு பாய்க்கும் வேறு ஆடவனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குளக்கரையில் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறினர்.
கோபத்துடன் அங்கு வந்த மித்ருராவ், அவளைத் திட்டியதுடன், அவளிடம் பேசிய அந்த மாய பக்தனைப் பார்த்தார். ஆனால், மித்ருராவின் கண்களுக்கு, முன்பு வீட்டுக்கு வந்த முதியவர் போல காட்சி தந்தார் பகவான். சக்குபாய் கால் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், தான் காப் பாற்றியதாகவும் கூறினார். அவரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார் மித்ருராவ். பழைய படி இல்லற வாழ்க்கை இனிமை யாகச் சென்றது.
ஒரு முறை சக்குபாய் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றபோது, அந்த வழியாக பஜனை செய்தபடி ஒரு குழு பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது. கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவர் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை வலம் வந்து தன்னையும் அவர்களுடன் பண்டரிபுரம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள் சக்குபாய். அதற்கு அவர்கள், ‘‘கணவரிடமோ, மாமியாரிடமோ உத்தரவு வாங்கி வந்தால்தான் அழைத்துச் செல்வோம்!’’ என்றனர். இல்லத்துக்கு வந்த சக்குபாய் தன் கண வரிடம் விவரத்தைச் சொல்லி, அனுமதி கேட்டாள். கணவரோ தற்போது அங்கு செல்ல வசதி இல்லாததால் அடுத்த வருடம் தானே அழைத்துச் செல்வதாகக் கூறி னார். சக்குபாய் பிடிவாதம் பிடிக்கவே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டினார்.
அறையில் இருந்தபடி பண்டரிநாதனை மனம் உருக அழைத்துக் கதறி அழுதாள். ‘எத்தனையோ பேர் பகவானின் திருவிழாவைக் காணும்போது, தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!’ என்று சங்கடப்பட்டாள். தன் பக்தை துன்பப்படுவதை பக வான் பொறுப்பாரா? உடனே அவர் ஒரு பெண் உரு வில் அந்த அறைக்கு வந்தார். பூட்டை உடைத்து அவளுடைய கயிற்றை அவிழ்த்துவிட்டு, தன்னைத் தூணில் கட்டும்படி கூறினார். ‘‘யாருக்கும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக பண்டரிபுரத்துக்குப் போ!’’ என்றார்.
வந்திருப்பது பகவான் என்று தெரியாமல் அவ ரைத் தூணில் கட்டிப் போட்டாள் சக்குபாய். பிறகு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி, கபீர்தாஸ் பஜனை கோஷ்டியிடம் சென்று, தானும் பண்டரிபுரம் வரு வதாகக் கூறினாள். தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்த கபீர்தாஸ் சந்தோஷத்துடன் அவளை தன் பஜனை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டார்.
சக்குபாய் தனது இனிய குரலால் பாடல்களைப் பாடி, எல்லோரையும் மகிழ்வித்தாள். பக்தர்களின், ‘பாண்டுரங்க விட்டல! ஜே! ஜே! விட்டல பண்டரி நாதா’ என்ற குரல் எல்லா இடத்திலும் ஒலித்தது.
சக்குபாய்க்காக இறைவன் அறைக்குள் இருப்பதை அறியாத அவள் கணவர், பாகவத கோஷ்டி கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு, அறையைத் திறந்தார். அங்கு சக்குபாயின் உருவில் இருந்த பகவான், ஒன் றுமே நடக்காதது போல் அவர் சொல்லுக்குப் பணிந்து நடந்தார். வழக்கம்போல அந்த வீட்டில் எல்லோரும் அவளை வேலை வாங்கினார்கள். அவளும் சந்தோஷத்துடன் வேலை செய்வதைப் பார்த்து திருப்தி அடைந்தனர்.
பண்டரிபுரம் சென்ற சக்குபாயோ பகவானின் சந்நிதியை விட்டு வர மனம் இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து, ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள். ஒரு நாள் பகவானுக்குப் பூமாலை சூட, பூக்களைப் பறிக்கும்போது, பாம்பு கடித்து பாண்டுரங்கன் சந்நிதியில் மயங்கி வீழ்ந்தாள். அவள் இறந்து விட்டதாகக் கருதிய மற்றவர்கள், அவளை அருகில் உள்ள சத்திரத்தில் போட்டு விட்டு, அவளின் கணவருக்குச் செய்தி அனுப்பினர். இதைக் கேட்ட மித்ருராவ் கோபத்துடன் அவர்களை நோக்கி, ‘‘எப்போதும் என் மனைவியைக் குறை கூறுவதே உங்கள் பிழைப்பாகி விட்டது. அவள் இங்கேதான் இருக்கிறாள். அவளைக் குறை கூறி இனி யாரும் இங்கே வர வேண்டாம்!’’ என்று வந்தவர்களைத் துரத்தினார். பாம்பு கடித்த நிலையில் மயங்கிக் கிடந்த சக்குபாயை பகவான் வைத்தியராக வந்து காப்பாற்றினார். பிறகு அவளுக்கு நல்ல வார்த்தைகள் கூறி, அவளை பண்டரிபுரத்திலிருந்து ஊர் வரைக்கும் அழைத்து வந்து மறைந்தார்.
ஊருக்குள் வந்த சக்குபாய், தான் கட்டிப்போட்ட பெண் ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுப்பதைப் பார்த் தாள். ‘உடனே வருவதாகச் சொல்லி பல நாட்கள் தங்கி விட்டோமே!’ என்று வருந்தி, அவளிடம் மன்னிப்புக் கேட்டாள். உடனே அந்தப் பெண், சக்குபாய்க்கு பகவானாகக் காட்சி கொடுத்தார். இன்னும் சில காலம் இல்லறத்தில் இருக்கும்படி கூறி மறைந்தார்.வீட்டுக்கு வந்த சக்குபாய் தனக்காக, இங்கு இருந்தது பகவானே என்பதை எல்லோரிடமும் சொன்னாள். கணவரும் தன் தவறை உணர்ந்தார். செல்வம் நிறைய இருந்தும் தானம் என்பதை மறந்து வாழ்ந்ததற்காக வருந்தினார். சக்குபாயுடன் சேர்ந்து நிறைய தான தர்மங்கள் செய்தார். பல «க்ஷத்திரங்களுக்கு தம்பதி யாகச் சென்று வணங்கினர். பிறகு பண்டரிபுரத்துக்கே வந்து இறைவன் புகழ் பாடி, தியானத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணித்து இறுதியில் இறைவனடி சேர்ந்தனர்.
– ஆலப்புழை உமா ஹரிஹரன் – டிசம்பர் 2006