கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 446 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமணத்திகுப் போவதற்காக ஒருநாள் லீவில் யாழ்ப்பாணம் போயிருந்தேன். திருமணம் நடைபெறும் வீட்டிற்கும் எனது வீட்டிற்கும் அரைமயில் தூரம்தான் இருக்கும். மேளங் கள் அடிப்பதும் ஒலிபெருக்கி அலறுவதும் மிகவும் தெளிவாகக் கேட்கின்றன. 

தாலி கட்டு இரண்டு மணி ஐந்து நிமிடத்திற்கும் இரண்டு மணி நாற்பத்தேழு நிமிடத்திற்குமிடையில் என அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. நான் ஒரு மணிபோல் குளித்துவிட்டு, பட்டு வேட்டியையும் கட்டிக்கொண்டு அதற்கேற்ற சேட்டைப் போடுவதற்காக பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது நான் தேடிய சேட்டு, முதுகுப் பக்கத்தால் வெடித்திருந்தது. எனக்குக் கோபம் வந்தது. அந்தச் சேட்டை அப்படியே எடுத்து மண்ணெண்ணை ஊற்றி கொழுத்தப் போனேன். மனைவி ஓடிவந்து தடுத்து, இன்னொரு சட்டை இருப்பதாகக் கூறி அதை எடுத்துத்தந்தாள். அந்தச் சேட்டையும் போட்டுக்கொண்டு வெளிக் கிட்டு சந்திக்கு வரும்பொழுது நேரம் இரண்டு மணியாகிவிட்டது. மனைவியையும் கூட்டிக் கொண்டு ஓடி ஓடி வந்தேன். சந்திவரை அவளோடு கதையில்லை. ‘சேட்’ கிழிந்திருந்த கோபம் இன்னும் தணியவில்லை. 

சந்திக்கு வந்ததும் மேளத்தின் ஒலி மிகவும் தெளிவாகக் கேட்டது. சுபநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது சந்தியின் ஓரத்தோடு ‘குமர்ப் பிள்ளை’ போல மதாளித்து வயதிற்கேற்ப செளித்த பல கிளைகளை அங்கும் இங்கும் பரப்பி நிற்கும் மருதமரத்தோடு ஒரு உருவம் சாய்ந்து இருந்து என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. நன்குமெலிந்த நெடிய உருவம். வயது போனாலும் ஒளி இழக்காத கண்கள். ஆனால் இவை இரண்டும் விழிக் கோளத்துள் தாண்டு இருந்தன. நெடு நாட்களாக சவரம் எடுக்காததினால் தாடி நன்றாக வளர்ந்திருந்தது. இத்தனை அமைப்புகளுக்கும் உரித்தான அந்தக் கிழவன் நான் சந்திக்கு அண்மையாகச் சென்றதும், என்னைப் பார்த்து ‘தம்பி’ என்றான். நான் அலட்சியமாக மனைவியையும் கெதியாக நடக்கும்படி சொல்லி விட்டு எட்டி நடந்தேன். ஆனால் அந்தக் கிழவன் எழுந்து நின்று கொண்டு மீண்டும் சற்று உரத்து ‘தம்பி, துரையற்றை மோன்… உம்மைத்தான் கொஞ்சம் நிண்டு கொள்ளும்…’ என்று என்னைத் தடுத்து நிறுத்தினான். நான் ஒரு நிமிடம் நின்று, ‘ஆரைக் கூப்பிட்ட நீங்கள்?’ என்றேன். 

‘உம்மைத்தான் தம்பி, ஒரு கொஞ்ச நேரம் நின்டுகொள்ளும்’ 

‘எனக்கு நேரமில்லை, கலியான வீட்டுக்குப் போறன், தாலிகட்டுற நேரமாப்போச்சு.. என்ன விசயம்…. நீங்கள் ஆரெண்டும் எனக்குத் தெரியேல்லை…?’ 

‘கிகி… கிகி…’ கிழவனின் சிரிப்பில் பல கதைகள் அமிழ்ந்து கிடப்பதை நான் உணர்ந்தேன். இருந்தாலும் கிழவனோடு கதையை வளர்க்க விரும்பாதவனாய், ‘விசயத்தைக் கெதியாச் சொல்லுங்கோ, எனக்கு நேரம் போகுது…’

‘தம்பி, ஓவிசயர் வீட்டுக் கலியாண வீட்டுக்கே போறீர்? நானும்தான் போகவேணும்..’ 

‘ஓம், அந்தக் கலியாணவீட்டுத்குத்தான் போறன்…’ 

‘அதுக்கு நேரம்கிடக்கு…. அது இருக்கட்டுக்கும் என்னை உமக்குத் தெரியவில்லை… கி…கி…’ கிழவன் மீண்டும் சிரித்தான். சிரித்துவிட்டு ‘நான் தான் தம்பி உங்கடை பேரன் வீரசிங்கத்தின்றை கூட்டாளி… நானும் அவனும்தான் அந்த நாளையிலை பெரிய போராட்டம் செய்தனாங்கள். அந்த நாளையிலை உங்கடை பேரன் வீரசிங்கம் எண்டால், கேட்டவன் நடுங்கி ஓடுவான். அப்ப தம்பி நீ பிறந்தும் இருக்கமாட்டாய் எண்டு நினைக்கிறன்.. வில்லூண்டியிலை நடந்த துவக்குச் சூட்டுச் சம்பவத்தைப் பற்றித் தெரியுமே…’ 

‘சீ எனக்குத் தெரியாது…’ என்று சொல்லிவிட்டு எட்டி இரண்டடி நடந்தேன். கிழவன் உடனே, ‘தம்பி, கலியாணத்துக்கு நேரம் கிடக்கு, இன்னும் ஐயர் வரேல்லையாம், ஏன் அவதிப்படுகிறீர்?’ என்று சொல்லி விட்டு மீண்டும் ஆரம்பிதான்.

நான் மனைவியையாவது முதல் அனுப்பவேண்டும் என்று நினைத்து சிறிது முன்னுக்குப் போகும்படி சொன்னேன். நான் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவதாகவும் சொன்னேன். எனவே மனைவி எட்டி நடந்து கலியாண வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தாள். கிழவன் கதையைத் தொடர்ந்தான். 

‘தம்பி, வில்லூண்டி மயானத்திலை, மனிதருக்கும் மிருகங்களுக்கும் போராட்டம் நடந்தது. நான் சொன்னது விழங்கேல்லையே தம்பி. சுடலையிலை கூட ‘பெரியசாதி’த் தமிழன் புறிம்பு வித்தியாசம் காட்டினான் தம்பி. ஆரியகுளத்தடியிலை இருந்தான் முதலி சின்னத்தம்பி எண்டொரு வீரன். அவனும் ஒரு வீரன் தான் தம்பி. பிரேத ஊர்வலம் ஆரியகுளத்தடியிலை இருந்து வில்லூண்டிச் சுடலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. முதலி சின்னத்தம்பியின்ரை சொந்தக்காரி தேவானைக் கிழவிதான் செத்தது. சந்தி சந்தியாகப் பட்டாசும் வெடிச்சு, பறமோளமும் அடிச்சு நல்ல மனமாகத்தான் கிழவியின்ரை பிரேதம் போய்க் கொண்டிருந்தது. முதலி சின்னத்தம்பி ஒரு மூலையிலை பாடையைப் பிடிச்சவன், மற்ற இரண்டு மூலையிலை உன்ரை பேரன் வீரசிங்கமும் நானும், மற்றது எங்கடை சங்கக் காரியதரிசி செல்லையன் என்டுதான் நினைக்கிறன். சரியா ஞாபகம் வரேல்லை…அவனும்தான் பிடிச்சு, பாடையைத் தூக்கிக்கொண்டு போய் வில்லூண்டிச் கடலையிலை பிரேதத்தை இறக்கி பெட்டியைத் துறந்து வைச்சுப்போட்டு, அப்பாக்குட்டியர் தேவாரத்தைத் துவங்கினதும் தான் தாமதம் வெடியொண்டு விழுந்துது பிரேதத்திலை. எங்களோடை வந்தவங்கள் சிலபேர் பயத்திலை சிதறி ஓடினாங்கள். ஆனால், முதலி சின்னத்தம்பி, உங்கடை பேரன் வீரசிங்கம், நான், மற்றது அப்பாக்குட்டியர் இவ்வளவு பேரும் இடத்தைவிட்டு அரக்கேல்லை. முதலி சின்னத்தம்பி சொன்னான்’ என்று கிழவன் கதையை மேலும் தொடர முற்படும் போது நான் சொன்னேன்.

‘அப்பா பட்டாசு வெடிச்சுக் கேக்குது நேரமாச்சுது. என்னுடைய பெண்சாதியையும் அனுப்பிப்போட்டன். நான் போகாமல் விட்டால் சரியில்லை நான் போய்விட்டு, கலியாண வீடு முடிஞ்சதும் உடனே வாறன்’ என்று சொல்லிவிட்டு மேலும் இரண்டடி வைக்க முனையும் போது கிழவன் எழுந்து கிட்ட வந்து எனது கையில் பிடிச்சு ‘இன்னும் ஒரு கொஞ்ச நேரம் நில்தம்பி, கொஞ்ச நேரம். கலியாண வீட்டுக்கு நேரம் கிடக்கு’ என்று சொல்லி இழுத்து நிப்பாட்டிவிட்டு, கதையை மீண்டும் தொடர்ந்தான். 

முதலி சின்னத்தம்பி சொன்னான் ‘டேய் மனுசத்தன்மை இல்லாதவங்களே, ஒளிச்சு நிண்டு வெடிவைக்கிறதுதான் உங்கடை சாதி முறையோடா? நேர்மை உள்ளவங்கள் எண்டால் பயமில்லாதவங்கள் எண்டால் துவக்கை எறிஞ்சுபோட்டு வாருங்கோடா நேருக்கு நேர தனியத்தனிய அடிபடுவம்! நீங்கள் செய்யிறது நேர்மைத்தன மாடா? உங்களைப் போலத்தானடா எங்களுக்கும் இரத்தம். அதுகும் சிவப்புத்தாண்டா. நாங்களும் ஆண்டவன்ரைபடைப்புத்தாண்டா, டோய், பிரேதத்தைச் சுடுகிற இடத்திலும் உங்களுக்குத் திமிரோடா…… ஏலுமெண்டால் சுடுங்கோடா என்ரை நெஞ்சிலை’ எண்டு சேட்டைக் களட்டி நெஞ்சை முன்னுக்குத் தள்ளி ஆக்கிரோசத்தோடு கத்தினான். உடனே எங்கையோ பூவரச மரத்தில் ஒழித்துக் கொண்டிருந்த ஒரு ‘பெரிய’ சாதிக்காரன் மிருகத்தனமாக வெடியைத் தீர்த்துவிட்டான் தம்பி. அது முதலி சின்னத்தம்பியின்ரை நெஞ்சை மிகக் கோரமாகப் பிளந்து கொண்டு போனது. அதிலை தொடர்ந்து நாங்கள் பெரிய போராட்ட மெல்லாம் செய்து கடைசியிலை அவங்கள் ஆத்தாமல் வந்து காலிலை விழுந்து மன்றாடினாங்கள் தம்பி…அப்படி அந்த நாளையிலை உங்கடை பேரன் வீரசிங்கம் போர்த்தேங்காய் அடிக்கிறதிலை பெரிய பேர்போனவன் தம்பி. ஒருக்கா உரும்பிராயிலை ஒரு பங்கமொண்டு. நூறுக்கு நூறிலைதான் பங்கம். அப்ப இரண்டு பேரையும் உரும்பிராய் சின்னையன் வெரச் சொல்லி சொல்லி ஆள்விட்டிருந்தான். பின்னை என்ன செய்யிறது. ஆளை விட்டுட்டான் எண்டு சொல்லிப்போட்டு என்னட்டையும் பத்துப்பதினைஞ்சு காலியானும் மாத்தறையானும் கிடந்தது. உங்கடை பேரனட்டையும் அந்தக் கிணத்தடி உசரியானிலையும் பிடுங்கித் தாட்டு வைச்சிருந்ததிலையும் ஒரு பத்துக் கிடந்தது. அதையும் கொண்டு போனம். போகேக்கை ஆளுக்கு அரைப்போத்தல் ‘கறுப்பு’ அடிச்சுப்போட்டுத்தான் போனநாங்கள். 

அங்கை பங்கத்திலை உரும்பிராய் சின்னையனும் ஆள்வெட்டிச் செல்லப்பாவும் எதிரி எதிரியாக நிண்டு விளையாடிக் கொண்டிருந்தாங்கள். எங்கள் இரண்டு பேரையும் கண்டதும் சின்னையனுக்கு சந்தோச மெண்டால் தாங்கேலாது. ஓடிவந்து என்னைக் கட்டிப்புடிச்சுக் கொஞ்சினான். கொஞ்சிப்போட்டுச் சொன்னான் ‘இண்டைக்கு கடைசி அம்பது காயாலையாவது வெல்ல வேணும் முத்தண்ணை. வெண்டால் ஒரு வெள்ளைப் போத்தல் சாராயமும் ஒரு சாவலும் அடிக்கிற’ தெண்டான். சரி பாப்ப மெண்டு சொல்லிப்போட்டு நான் பங்கத்திலை இறங்கினன். கொடுக்குக் கட்டிக்கொண்டுதான் இறங்கினநான். ஆள் வெட்டி செல்லப்பன் ஒரு ‘கருங்காலி யானை விட்டுட்டுச் சொன்னான். 

‘முத்தண்ணை நீ இதை ஒரு அடியிலை உடைச்சியெண்டால் நான் உனக்கு ஒரு கூழ்ப்பாட்டி வைப்பன். இல்லையெண்டால் நீ இந்தப் பங்கத்திலை சேரக்கூடாது எண்டான். நான் கொஞ்சநேரம் யோசிச்சுப்போட்டு சொன்னன். 

‘ஓம், நான் அதுக்குச் சம்மதம், சின்னையனுக்கும் ஒரு சொல்லுச் சொல்லிப்போட்டு வாறன் என்று சொல்லி சின்னையனுக்கும் சொல்லிப் போட்டு, என்ரை காலியானிலை ஒண்டை எடுத்து. முனியப்பருக்கு நேந்து போட்டு அடிப்பக்கத்தாலை ஒரு குத்துக் குத்திவிட்டன். தம்பி யாணை நம்பினால் நம்பு நம்பாட்டிப்போ செல்லப்பன்ரை கருங்காலி சிதறிப்போச்சு. செல்லப்பன் சும்மா ஏங்கிப்போய் நிண்டான், சின்னையனைச் சொல்லவே வேணும். அப்படித் தம்பி நாங்கள் அந்த நாளையிலை தினை கோலங்கள் கொண்டு திரிஞ்சம். அந்த நாளைச் சாப்பாடு என்ன சாப்பாடு தம்பி…’ இப்பிடிக் கிழவன் இன்னொரு கதையை நினைத்து ஆரம்பித்த பொழுது, நான் பொறுமையை இழந்து விட்டேன். நான் பொறுமையை இழந்ததற்குக் காரணம் கலியாண வீட்டில் நட்டுவ மேளம் மிகவும் விமரிசையாகக் கேட்டது. அத்தோடு வெடியும் அனேகம் வெடித்துக் கேட்டன. நான் எழுந்து விறு விறு என்று நடக்கத் தொடங்கினேன். கிழவன் தாடியையும் தடவிக் கொண்டு பின்னால் ஓடிவந்து என்னைத் தடுத்து நிறுத்தி, 

‘தம்பி, கோவிக்காதை. இனித்தான் நான் முக்கியமான கதைக்கு வரப்போறன். அவதிப் படாதை தம்பி. உப்புடித்தான் உவங்கள் வெடி வெடிப்பாங்கள். எனக்குத் தெரியும் இன்னும் ஐயர் வரேல்லை…’ 

‘கதையைக் கெதியாச் சொல்லி முடிக்கவேணும் எனக்கு இனி நிண்டு கதைகேக்கேலாது…’

‘சரி தம்பி, இப்படியெல்லாம் அந்த நாளையிலை பல கோலங்கள் கொண்டுதிரிஞ்சு எங்கடை சமூகத்துக்காக அடிச்சுக் குடுத்து என்னத்தைத்தான் கண்டது?’ 

‘உங்களுக்கு சமாதான நீதவான் பட்டம் கேக்கிறியளோ?’ என்றேன். 

‘அதொண்டும் இல்லைத் தம்பி, உதுகளைத் தூக்கிக் கொண்டு திரிய எனக்கு பிலனும் பத்தாது, அதிலை நம்பிக்கையும் இல்லாதவன்…’ – கிழவன் நக்கலாகச் சொன்னான். 

‘அப்ப என்ன வேணும்..?’

கிழவனின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலன்று ஓடிக் கொண்டிருந்தது. கிழவன் அழுதுகொண்டே, 

‘எனக்குப் பசிக்குது தம்பி, இப்ப இரண்டு நாளாச் சாப்பிடேல்லை. நல்ல சாப்பாடு சாப்பிட ஆசையாக் கிடக்கு. எனக்கு ஒரு அஞ்சுரூபா தாதம்பி. நான் உன்னட்டைத்தான் உரிமையோடு கேக்கிறன். ஏனெண்டால் உன்ரை பேரன் என்ரை நல்ல கூட்டாளி. எனக்கு மற்றவங்களட்டை வாய்விட வெக்கமாகக் கிடக்கு….அதுகும் ஒரு கோலம். இதுகும் ஒரு கோலம். நான்தம்பி முந்தி. அதையேன்  சொல்லி மனவருத்தம் அடைவான்…’ கிழவனின் கண்களிலிருந்து கண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. தொண்டையிலிருந்து வந்த சறளியை எட்டிக் காறித் துப்பிவிட்டு, எழுந்து நின்று கையை நீட்டினான். நான் ஒரு பத்துரூபாவைக் கொடுத்தேன். அதை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, ‘நீ போ தம்பி, இப்ப ஐயர் வந்திருப்பார். எட்டிப் போனியெண்டால் தாலி கட்டுக்கு நிப்பாய்…’ என்றான். 

காசைக் கொடுத்துவிட்டு நான் ஓட்டமும் நடையுமாக கலியாணவீட்டிற்குச் சென்றேன். அப்பொழுதுதான் தாலிகட்டி முடிந்தது. எனக்கு மனதிற்குள் கிழவன்மீது வந்த ஆத்திரத்தை எப்படித் தீர்ப்பதென்றே தெரியவில்லை. இருந்தும், மனைவி நின்று எல்லாம் செய்திருப்பாள் என்று நினைத்து ஒருவாறு ஆறுதல் அடைந்தேன். அத்தோடு நடந்த சம்பவத்தையும் எனது நண்பனிடம் சொன்னேன். அவன் ஒருவாறு சமாதானம் அடைந்தான். 

கலியாணவீடு முடிந்து நானும் மனைவியும் வரும்பொழுது நேரம் கருகல் பொழுதாகி விட்டது. மகன் அழப்போகின்றான் என்றதினால் ஓடோடி வந்தோம். ஓடிவரும்பொழுது, றோட்டுக் கரையோடு ஒருவன் விழுந்துபோய்க் கிடந்தான். ‘விடுப்புப் பார்க்கும் குணம் என்னோடு ஒட்டியிருப்பதனால் மனைவியின் ஏச்சையும் மீறி, விழுந்துகிடப்பவன் யார் என்று பார்க்க முயன்றேன். 

அந்த முத்தர் கிழவன் நல்ல வெறியில் விழுந்து கிடந்தான். கள்ளின் ‘நெடி’ எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. இதுகும் அவனது ‘கோலங்க’ளில் ஒன்று என எண்ணிக் கொண்டு நான் எட்டி நடந்தேன். 

– மல்லிகை, ஜனவரி 1973.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *