கோரா கும்பர்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நாமதேவர் வாழ்த்த காலத்திலேயே வாழ்ந்தவர் கோரா கும்பர் என்னும் மகான். குயத் தொழில் செய்து வந்தவர். ஏழையானாலும் மனத்தைப் பாண்டுரங்க பக்தியால் நிரப்பியவர். தேர தோகி (மகாராஷ்டிரத்தில் உள்ளது) என்னும் ஊரில் 1267ல் பிறந்தவர்.

அவர் வாழ்த்த நாளையில் பாண்டுரங்க பக்தி நாடு முழுதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சாரி சாரியாக பக்தர்கள் பாண்டுரங்களைப் பற்றிப் பாடுவதும். ஆடுவதுமாகி, பக்தி இன்பத்தில் மெய் மறந்து லயித்த வண்ணம் இருந்தார்கள். பக்தி ஒரு தொழிலாகவும், இனிய பொழுது போக்காகவும் ஆகிவிட்டது. எங்கும் பக்திப் பிரேமை ஜொலித்து எழுந்து அதை நெருங்குகிறவர்களை யெல்லாம் உன்மத்தமாக்கிக் கொண்டிருந்தது.
கோரா கும்பர் இந்த பக்தி வெள்ளத்தில் ஈடுபட்டுத்தான் தன் வாழ்க்கையைத் தித்திக்கும் அருள் அனுபவமாக மாற்றி இருந்தார்.
காலையில் எழுத்தால் அவர் நாவில் பாண்டுரங்க நாமமும் எழுந்து விடும். வீட்டுக் காரியம் செய்யும்போதும் சரி, அல்லது தொழிலில் ஈடுபட்டு மண் பாண்டங்கள் உருவாக்கும்போதும் சரி, பாண்டு ரங்கள் பெயர்தான் சிறிதளவும் விலகாது அவருடன் துணையிருந்தது.
கோராகும்பருக்கு நின்றுகொண்டே மண்ணைத் துவட்டிப் பிசைவதில் அலாதி இன்பம். காலால் மண்ணைத் துவைத்துக் கொண்டே இரு கைகளையும் மேலே தூக்கி தாளம் போட்டுப் பாண்டுரங்கன் நாமங்களை மெய் மறந்து பாடுவார். பாட்டின் வெறி ஏறி கூத்தும் ஆடுவார். ஆனந்தப் பெருக்கில் மெய்மறந்து கோராகும்பர் பாடுகிறார் என்றால் அப்போது அவர் மண்ணும் மிதித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
இவர் பக்தி வெறியில் ஈடுபட்டிருக்கும் போதுதான் ஒரு நாள் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
இவரது மனைவியார், ‘நதியில் போய்த் தண்ணீர் எடுத்து வருகிறேன். அதுவரை குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்று சொல்லித் தனது ஒரே குழந்தையை வீட்டு முகப்புத் தாழ்வாரத்தில் விட்டு விட்டு கையில் குடத்துடன் நதியை நோக்கிச் சென்றாள்.
கோரா கும்பர் வழக்கம்போல் மண்ணைப் பிசைய ஆரம்பிக்க, அதே நேரம் அவரது பாண்டுரங்க கீர்த்தனமும் உடனே தொடங்கிவிட்டன.
மண்ணைத் துவைத்துக் கொண்டே அவர் கடவுள் புகழைப் பாட, அவரது ஆர்வமும் வெறியும் படிப்படியாக மேலே ஏறிச் சென்றன. கடைசியில் பாடவும் ஆடவும் தொடங்க, அவரது பக்தி ஓர் உன்னத உயரத்துக்குச் சீக்கிரம் சென்று கொண்டிருந்தது. கண்களை மூடினார், கைகளால் ஓங்கி ஓங்கித் தாளம் போட்டார். கண்களிலிருந்து நீராக வழிய பாண்டுரங்களின் பெயரையே உச்சரித்து வெறி வந்தது போல் மண்ணைத் துவைத்துக் கொண்டு ஆடினார்.
அப்பொழுது முகப்புத் தாழ்வாரத்தில் இருந்த குழந்தை தந்தையை நோக்கித் மெள்ளத் தவழ்ந்து வர ஆரம்பித்தது. கோரா கும்பரின் பாட்டும் கூத்தும் அந்தக் குழந்தைக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. தந்தையின் அணைப்பை ஏங்கி, அந்தக் குழந்தை தவழ்ந்து, தவழ்ந்து வந்தது.
கோராகும்பர் அந்தச் சமயத்தில் உலகத்தையே மறந்து ஆடிக் கொண்டிருந்தார். அவர் கண்களுக்கு எங்கும் பாண்டுரங்கனே தோன்றிக் கொண்டிருந்தார். அந்த பக்தி மெய்மறப்பில் இந்த நிஜ உலகத்தை அவர் முழுவதுமாக மறந்து விட்டார்.
இந்தச் சமயத்தில் குழந்தை மண்ணில் இறங்கி அவர் துவைத்துக் கொண்டிருக்கும் சகதிப் பக்கம் வந்து விட்டது. கோரா கும்பர் குழந்தையைக் கவனித்தார் இல்லை. கடைசியில் குழந்தை சகதியிலும் இறங்கி விட்டது. கோராகும்பர் அதைக் கவனிக்கவே இல்லை. தமது வெறியில் கால்களை மாற்றி மாற்றித்துவைக்க, குழந்தை அந்த துவைப்பில் அகப்பட்டுக் கொண்டது. அது வீறிட்ட சப்தம்கூட கோரா கும்பருக்கு கேட்சுவில்லை. அவர் உயர்ந்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்.
குழந்தை முடிவில் மண்ணோடு மண்ணாகக் கலந்து மிதிக்கப்பட்டு இறந்துவிட்டது.
கோரா கும்பர் அப்போதும் பாடிக்கொண்டே இருந்தார்.
ஆற்றுக்குப் போயிருந்த அவர் மனைவி சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள். முதலில் அவர் கண்கள் குழந்தையைத் தேடின. குடிலுக்குள் போய்ப் பார்த்துவிட்டு வந்தாள், உள்ளே இல்லை. சுற்று மெங்கும் தேடினாள். எங்கும் குழந்தை தென்படவில்லை. கணவர் கூத்தாடும் பக்கம் அச்சத்துடன் வந்தாள். திகிலுடன் மண் பகுதிகளைப் பார்த்தாள்.
அவள் நினைத்தது சரியாகிவிட்டது.
அங்கே அவள் குழந்தை மண்ணோடு துவைக்கப்பட்டு இறந்து கிடந்தது.
‘ஐயோ, குழந்தையைக் கொன்றுவிட்டீர்களே!’ என்று கதறிக்கொண்டு கீழே சாய்ந்தாள் அவள்.
அவள் கூக்குரல் கேட்டு கோரா கும்பர் தம் ஆட்டத்தை நிறுத்தினர். பாட்டையும் நிறுத்தினார், கீழே மண்ணில் புரண்டு அழும் மனைவியைப் பார்த்தார். அதன் காரணத்தைத் தேடினார்.
சீக்கிரம் அவர் செய்த காரியம் அவருக்குப் புரிந்துவிட்டது. ‘விட்டலா!’ என்று இரைந்தார் அவர். ‘என் குழந்தையை நானே துவைத்துக் கொன்று விட்டேனா?’ என்று துக்கம் பொங்கப் புலம்பினர்.
பின்னர் தேறிஎழுந்த அவர்தம் மனைவியை ஒருவாகத் தேற்ற முயன்றார். அவளோ துக்க சாகரத்தில் மூழ்கி இருந்தாள், கோபத்தில் அவள், ‘நீங்களும், உங்கள் பாட்டும். உங்கள் பாண்டுரங்கனும்!எல்லோரும் எனக்கு அநியாயம் செய்து விட்டீர்கள். நீங்கள் வணங்கும் கடவுள் மீது ஆணை! என்னை இனி மேல் தொடாதீர்கள்!’ என்றாள்.
‘விட்டலா!’ என்று கூறிய கோராகும்பர் அந்தக் கணமே மனைவி மீது தேற்றுவதற்காக வைத்திருந்த தமது கரங்களை எடுத்து விட்டார்.
மாதங்கள் பல சென்று அவர்கள் துக்கம் ஒருவாறு மிதப்பட்டபின், கோரா கும்பரின் மனைவி தான் இட்ட ஆணைக்காக வருந்தினாள். ‘ஏதோ கோபத்தில் சொல்லி விட்டேன். பொருட்படுத்தாதீர்கள்’ என்று புத்திர சந்தானத்தை விரும்பி அவரை அழைத்துப் பார்த்தாள். ஆனால் கோராகும்பர் அசைய வில்லை. ‘கடவுள் மீது ஆணை வைத்துவிட்டாய், அதை மாற்றுவதற்கில்லை’ என்று கூறினார்.
பின்னர் கும்பரின் மனைவி பல விதங்களில் யோசித்து. ‘என்னைத்தான் தொட வேண்டாம். வேறு பெண்ணைத் தொடலாம் அல்லவா!’ என்று நினைத்து, தன் தந்தையின் ஊருக்குச் சென்று அவருடன் ஆலோசித்து தனது தங்கையையே கும்பருக்கு இரண்டாவது தாரமாகத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானம் செய்தாள்.
கோராகும்பரும் ஒருவாறு இசைய, அவரது இரண்டாவது திருமணம் இனிது நடந்தது.
புதுப் பெண்ணை அழைத்துக்கொண்டு கும்பர் புறப்படும் வேளையில், மாமனார் கும்பரின் இரு கைகளையும் பிடித்து, ‘ஐயா, எனது இரண்டாவது மகளையும் தங்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன். தாங்கள் தங்கள் முதல் மனைவியை எப்படி நடத்துவீர்களோ அது பிரகாரமே இவளையும் நடத்த வேண்டும்’ என்றார் மனம் உருக,
கோராகும்பர் அதையும் இறைவனின் கட்டளை என்று ஏற்றுக் கொண்டார்.
முதல் மனைவியைப் போலவே இரண்டாவது மனைவியையும் தொடவே இல்லை.
சகோதரிகள் இருவரும் இதனால் மனம் உடைந்தார்கள். கோரா கும்பரின் மனத்தை எப்படி மாற்றுவது என்று யோசித்தார்கள். ஒரு நாள் இரவு கோரா கும்பர் தூங்கும் போது அவரது கைகள் அவர்கள் உடல்களில் தொடும்படி வைத்துவிட்டுப் படுத்தார்கள். கும்பர் விழித்துப் பார்த்தால் தம் ஆணை முறிந்துவிட்டது என்று அறிந்து இனிமேல் இல்லற வாழ்க்கையை ஏற்பார் என்று இரு மனைவியரும் நம்பினார்கள்.
ஆனால் தூங்கி விழித்த கும்பர் தம் கைகள் அவர்கள் மீது இருப்பது அறிந்து ஆணை முறிந்து விட்டதாகப் பதறினார். அதற்குத் தண்டனை யாகத் தம் உள்ளங் கைகளைத் தாமே வெட்டிக் கொண்டார்.
குடும்பத்தில் எல்லோரும் துக்கப்பட்டனர். மனைவியரின் சோகத்துக்கு அளவில்லை. அவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று ஒரு ஆதங்கம் எழுந்தது. எல்லோரும் சென்று விட்டலரிடமே இது பற்றி முறையிடுவது என்று தீர்மானித்தார்கள்.
ஒரு ஏகாதசி அன்று பண்டரிபுரத்தை மூவரும் அடைந்தார்கள். கோவிலுக்குள் போகும் போதே கோராகும்பர் தன் வசம் இழந்தார். விட்டல் விட்டல் என்று மெய்யுருகக் கதறிக் கொண்டு அவன் நாமங்களைப் பாடத் தொடங்கினர்.
உள்ளே சந்நிதி முன்பாக நாமதேவர், ஞானேச்வரர் போன்ற பெரிய பக்தர்கள் கூடி கடவுள் நாமாக்களை உச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.
கோராகும்பரைக் கண்டதும் மிகவும் ஆனந்தித்துத் தங்கள் கோஷ்டி பஜனைகளைப் பெரிதாக்கினார்கள்.
கும்பர் ஏற்கனவே பக்திப் பரவசத்தில் மூழ்கி இருந்தார். நாமதேவரும், ஞானேச்வரரும் பாடல்களை மேலும் ஊக்கிவிட,
கும்பரும் ஆனந்தப் பரவசராகி, கண்களில் அருவி சோர, தமது முடமான கைகளை மேலே தூக்கி ‘விட்டல் விட்டல்’ என்று தாளம் போட்டு ஆடத் தொடங்கினர்.
சீக்கிரம் அங்கே கூடியிருந்தோர் எல்லாம் பாடலில் பங்கு கொள்ள எங்கும் விட்டலின் நாமம் பொங்கி வழிந்தது.
கும்பர் தம்மை மறந்து எங்கும் விட்டலையே காணலானார்.
வியர்வையும் கண்ணீரும் வழிவதைப்பார்த்தால், அவர் உடலே உருகுவது போல் இருந்தது. ‘விட்டல் விட்டல்’ என்று நாமம் எங்கும் எதிரொலிக்க, அந்த நேரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கோரா கும்பரின் விரல்களற்ற கோரமான கை தாமாக வளர்ந்து முழுக் கைகளாக மாறின. அவர் இரு கைகளிலிருந்தும் தாளம் வெகு அழகாக ஒலித்தது.
அதைக்கண்ணுற்ற கும்பரின் மனைவியர் விட்டலரிடம் தங்கள் குறைகளையும் கூறி மெய்யுருகப் பிரார்த்தித்தார்கள்
சில விநாடிகளில் விட்டலர் சந்நிதியிலிருந்து கும்பரின் குழந்தை மெள்ளத் தவழ்ந்து வந்தது. மனைவியர் அதிசயப்பட்டு ஓடிப்போய் அதை எடுத்து அணைத்துக்கொள்ளக் கூடியிருந்த எல்லோரும் பரவசரானார்கள்.
கோரா கும்பர் பின்னர் நெடு நான் வாழ்ந்து பாடல்களை இயற்றி விட்டலரைத் தொழுதுகொண்டு வாழ்ந்து வந்தார்.
– மங்கையர் மலர், பெப்ரவரி 1981.