கோகுலனும் தமக்கையும்!
“என்ன மச்சான், வெளிக்கிட்டாச்சா? இன்னும் நேரமிருக்கே!”
“இப்போதே போனால் தான்டா சரியாக இருக்கும். வழியில் ட்ராஃபிக்காக இருந்தாலும் நேரத்துக்கே போய் விடுவோமே!” பயணப்பையை இழுத்து வந்து வரவேற்பறையில் வைத்தான் கோகுலன்.
“சரிதான், ஹாண்ட் லகேஜை எடுத்துக்கொண்டு வா; நான் இதைக் கொண்டு இறங்குகிறேன்.” பையை உருட்டிக்கொண்டு வெளியில் வந்த அவன் நண்பன், இவர்களின் ஃப்ளாட்டுக்கு நேரெதிரில் இருந்து வெளிப்பட்ட மங்கையோடு விழிகளால் பேச முயன்றவாறே லிஃப்ட்டை நோக்கி முன்னேறினான். இவன் பின்னால் வந்த அம்மங்கையும் இவனருகில் நெருங்கி நின்று இவனுள் பனிச்சாரலை உணரச் செய்தாள் தான்! அதேவேளை, தன்னையே பார்வையால் வருடியபடி ஒருவன் நிற்கிறானே என உணர்ந்தவள் போலவே காட்டிக்கொள்ளவில்லை.
“திமிர் பிடித்தவள்!” சூடான நீண்ட பெருமூச்சோடு முணுமுணுத்தவாறே, பணிவோடு வாய்திறந்த லிஃப்ட்டில் நுழையாது ஒதுங்கி வழிவிட்டான் அவன்.
“பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என் வழக்கம்!” இவன் குரலை செவிகளில் ஏற்றாது உள்ளே நுழைந்து, ஓரமாக நின்ற வேகத்தில் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைச் சரி பார்த்தாள் அம்மங்கை.
“உதாசீனம்! இதைவிட அவமானம் வேண்டவே வேண்டாம்!” சத்தமாகவே முணுமுணுத்தபடி இவன் நுழைய, ஹாண்ட் லகேஜ் சகிதம் ஓடி வந்து புகுந்தான் கோகுலன். அவளோ, அவனையும் கண்டு கொள்ளவில்லைதான்!
“ராங்கிக்காரி! ஒரு நாளா இரண்டு நாளா? வருடக் கணக்கு மச்சான்!” நண்பனின் முணுமுணுப்பில் கோகுலனின் நகைக்கும் விழிகளில் முறுவல் பளிச்சிட்டது.
“உனக்கு எவ்வளவுதான் விழுந்தாலும் ஒட்டாதுடா! வயதுக்கேத்த மாதிரி நடந்து கொள். கல்லூரி போகும் வாலிபன் என்கின்ற நினைப்பு! உன் நிலை உணராமல் அலையாதே!” கேலியாகச்சொன்ன கோகுலன் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தான். ஆறடியை நெருங்கிப் பிடிக்கும் உயரமும் கச்சிதமான உடல்வாகும் இவனுக்கும் உடற்பயிற்ச்சிக்குமுள்ள நெருங்கிய நட்பை பறைசாற்றியது!
“தமிழன்டா!” தயங்காது சொல்லும் நிறம்; குறைவற்ற கவர்ச்சி; கம்பீரவிழிகளில் மின்னும் விஷயஞானம்; தடித்த மீசையின் கீழ் உதடுகளோடு ஒட்டி உறவாடும் மென்னகை என, எப்போதும் இளம்பெண்களின் கடைவிழிப் பார்வைகளுக்கு உரிமையாளன் அவன். அக்கர்வத்தின் சாயல் துளியுமற்றவன்; பெரிதாக அவற்றைப் பொருட்படுத்துவதும் இல்லை. ஒன்றுக்கு மூன்று சகோதரிகளோடு பிறந்தவன் ஆச்சே!
தாம் வசிக்கும் அடுக்கு மாடியின் கீழ் பகுதிக்கு வந்தவர்கள், எதிர்ப்படுவோரை சிறு தலையசைப்போடு கடந்தனர்; அவர்களிடமிருந்து பதில் தலையசைப்புக்குக் காத்திருக்க நினைக்கவில்லை. காத்திருப்புக்கும் இவர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லையே!
தம்முள் உரையாடிக்கொண்டே விரைந்தவர்கள், பயணப்பைகளை காரின் டிக்கியில் அடக்கிவிட்டு, நண்பன் ஓட்டுனர் இருக்கையை ஆக்கிரமிக்க, பக்கத்தில் அமர்ந்து கொண்ட கோகுலனின் விழிகளோ, நகரும் வாகனத்தோடு கைகோர்த்து நகரும் வீதியை ஒருவித ஆவலோடு துளாவின!
அறிந்தவர், தெரிந்தவர், நட்புகள், உறவுகள் இவன் கண்ணில் பட்டால் நின்று நான்கு வார்த்தைகள் பேசவேண்டுமென்றோ சின்னதாகவேனும் முறுவல் செய்யவேண்டுமென்றோ இவனிடம் எதிர்பார்ப்பு இருந்ததேயில்லை. தன் பார்வை அவர்களைப் ஸ்பரிசிக்கும் அக்கணம் ஒருவித அலாதியான சுகமும் இதமும் பரவுவதை அனுபவித்து விடுவான் இவன். இதுவே அன்றைய பொழுதை அளவற்ற உற்சாகத்தோடு கழிக்கப் போதுமானதாக இருக்கும். ஆமாம்! கொஞ்சமே கொஞ்சமாக ஆச்சரியமானவன் தான் இவன்!
‘எப்படித்தான் சொல்லாமல் கொள்ளாமல் வெளிக்கிட்டிருந்தாலும் நான் வருவேன் என்று அவளுக்குத் தெரியும். நிச்சயம் எதிர்பார்ப்போடுதான் வளைய வருவாள்.’ மென்முறுவலோடு நினைத்துக் கொண்டவனுள், தன்னைவிட இருவயது பெரியவளான தமக்கை நிம்மதி, அவள் கணவன், மகன்கள், இவர்களைக் காணப்போகிறோம் எனும் எண்ணமே மட்டற்ற மகிழ்வை ஏற்படுத்தியது.
ஐந்து பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பம் இவனது. மூத்தவள் நிம்மதி, அடுத்தவன் கோகுலன். ‘ஆண் ஒன்று பெண் ஒன்று; இருவருமே நமக்குப் போதும்.’ என்று ஆரம்பத்தில் எடுத்திருந்த முடிவை மீற நினைத்தார்களோ என்ற வகையில், நீண்ட இடைவெளியின் பின்னரே இளைய சகோதரிகளும் சகோதரனும் பிறந்தார்கள். அதுவே இவனையும் தமக்கையையும் இறுகப் பிணைத்ததோ என்னவோ, பாம்பும் கீரியுமாக சீறிக்கொள்ளும் அதேவேளை, நகமும் சதையுமாகவும் திரிவார்கள். சிறுவயதிலிருந்து இருவரும் போடும் கூத்தில் அவர்கள் வீடே அலறுவதுண்டு. வேலை முடிந்து வந்தால் இவன் அப்பாவுக்கு பெரிய வேலையே இவர்களை விசாரிப்பதும் தீர்ப்புக் கூறுவதும் தான்.
வீட்டில் கூடவே இருக்கும் அம்மாவுக்கு இந்த விடயத்தில் இவர்களின் ஒத்துழைப்பு கிட்டுவதேயில்லை. “என்ன சத்தம் அங்கே! பொறு வாறேன்.” தாயின் சத்தத்தில் இவன் கூரை மீதே ஏறி விடுவான்
. “ஓடுடி, அம்மாவால் பிடிக்க முடியாது; அகப்படமால் ஓடு!” தமக்கையையும் உசுப்பி விட்டுவிடுவான். அதன் பிறகு, ‘மாலையில், வட்டியும் முதலுமாக அப்பாவிடம் வாங்குவது; அதுவும், முழங்காலில் இருந்து!’ அன்றைய தண்டனைகளின் நினைவு கூட இன்று இதத்தையே தந்தது!
‘அப்படிச் சரி அப்பாவின் ஸ்பரிசம் அறியலாமே!’ மனதை ஊடறுத்துப் பாய்ந்த ஏக்கத்தை விலக்கிவிட இவனுக்கும் ஆசைதான். இப்படி இவன் அடிக்கடி ஏங்கினால் கடந்த சிலவருடங்களாக இவனோடு தங்கியிருக்கும் இவன் தாய் மெல்லச் சிரித்துக் கொள்வார்.
“அம்மா தான் உன்னோடு இருக்கிறேனே தம்பி; இன்னும் ஏன் இப்படி யோசிக்கிறாய்?” மகனின் தலையை பாசமாக வருடும் அந்த வயோதிப விரல்களில் மெல்லிய நடுக்கத்தை இவன் உணர்வான்.
‘பத்தொன்பது வருடங்களாக உன்னைப் பிரிந்திருந்த போது என்மனம் என்ன பாடு பட்டிருக்கும்.’ தாயின் மனதின் முனகலையும் இவன் அறிவான்.
“யோசிக்க எல்லாம் இல்லையம்மா, நீங்க வரமுதல் தனியாக இருக்கவில்லையா?”
“சொல்லாமல் கொள்ளாமல் எங்களைப் பதறவிட்டுவிட்டு நீ பாட்டுக்கு வந்துவிட்டாய்; இத்தனை வருடங்களின்பின் நான் உன்னைத் தேடி வரவில்லையா? அதேபோல மற்றவர்களும் வருவார்கள் ராசா.”
“இல்ல இல்ல வேண்டாம்மா.” அவதியாக மறுத்து விடுவான்.
‘ஒன்றாக இருந்தால் தானா? இருந்தவரை போதும்மா. என் அன்புக்குரியவர்கள் எங்கிருந்தாலும் நலமோடு வாழ்வதை கண்ணாரக்கண்டு மகிழ்வதே எனக்குப் போதும்!” மென்முறுவலோடு சொல்வான்.
“அதுதான் அறிந்தவர், தெரிந்தவர், நண்பர்கள் என்று ஒரு தொகையாக ஒன்றாக வந்தோமே! நாமாக விரும்பி வந்தாலென்ன! கட்டாயத்தின் பேரில் வந்தாலென்ன! சுற்றிலும் எவ்வளவு பேர் இருக்கிறோம்.” இதைச் சொல்லும் போது தீர்க்கமான அவன் விழிகளில் தீராதவேதனையின் சாயலைக் காணலாம்.
“இதுதான் நமக்கான வாழ்வு என்று ஏற்றிருந்தாலும் ஏக்கங்களின் ஆக்கிரமிப்பையும் தவிர்க்க முடிவதில்லைதான்மா.” தாயோடு தொடர்ந்து பேச்சை வளர்க்கமாட்டான்.
“கிரீச்!” கார் பிரேக்கை அழுத்திய வேகத்தில், “டேய் டேய் பார்த்துடா! மேலே விசாவுக்கு அப்ளை பண்ணிவிட்டாயா? அக்கம் பக்கம் பாராமல் ரோட்டில் குதிக்கிறாய்!” நண்பன் பொரிந்த வேகத்தில் கலைந்தவன், “அதற்கெல்லாம் அப்ளை பண்ணிக் காத்திருக்கத் தேவையேயில்லை; யாரை எப்போது அழைப்பது என்பதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.” அழகாகச் சிரித்து நண்பனின் முறைப்பை வாங்கிக்கொண்டான்.
“உனக்கு என்ன மச்சான் எதைச் சொன்னாலும் ஒரு சிரிப்பு! வருடம் தவறாமல் போய்வர அக்கா தங்கை என்று இருந்தால் சிலவேளை நானும் இப்படித்தான் இருப்பேனோ என்னவோ!” நண்பனின் குரலின் வறட்சி கோகுலனை நிச்சயம் கஷ்டப்படுத்தவே செய்தது. நண்பனின் தோளில் ஆதரவாகத் தட்டிக்கொடுத்தவன், “அடுத்தமுறை கட்டாயம் உன்னையும் அழைத்துப் போகிறேன்!” என்றதும் கடகடவென்று சிரித்தான் நண்பன்.
“ஏன்டா, இப்போ சிரிக்கிற மாதிரி ஜோக் எதுவும் சொன்னேனா என்ன?”
“பின்ன என்னடா, உன் அக்கா நெதர்லாந்து போய் எத்தனை வருடம்? பதின்மூன்று தானே?” கேள்விக்கு பதிலும் கேள்வியே!
அமைதியாக நண்பனைப் பார்த்தான் கோகுலன்.
“இத்தனை வருடமும் நான் ஏர்போர்ட் கொண்டு வந்து விடுவதும் நீ இப்படி அடுத்தமுறை என்பதுவும் தானே நடக்குது! அப்போ, சிரிப்பு வருமா இல்லையா?”
நண்பன் உண்மையை உரைக்கவே, “சரி சரி புலம்பாதே! இப்படியே யாழ்ப்பாணம் போய் உன் வீட்டாரோடு நின்றுவிட்டு வாவன்டா. நானும் சொல்லிச் சொல்லிக் களைத்தது தான் மிச்சம்.”
“ஆமாம் ஆமாம், போனால் என்னை வைத்து சீராட்டிவிட்டுதான் விடுவார்கள். யார் என்று கேட்டாலும் கேட்பார்கள்!” அவன் குரலின் பாரத்தை உணர்ந்த கோகுலன் அமைதி காத்தான்.
“என் குடும்பக் கதையை ஆரம்பித்தால் நீ பயணம் போன மாதிரித்தான்; விடுடா, சதம் பிரயோசனமில்லை.” சலித்துக்கொண்டே காரை நிறுத்தி பெட்டிகளை இறக்கி வைத்தான் நண்பன்.
“சரிடா மச்சான், நான் போயிட்டு வரும்வரை அம்மாவை பார்த்துக்கொள். உன்னை நம்பித்தான் விட்டுட்டுப் போகிறேன்.” விடைபெற்றான் கோகுலன்.
“அவரை யாரும் பார்த்துக் கொள்ளத் தேவையில்லை; பிடிவாதம் பிடித்த மனிசி. தன்னிஷ்டத்துக்கு எதையாவது செய்து வைக்கும்.” படபடத்தவன், “சரி சரி முறைக்காதே, பார்த்துக்கொள்கிறேன்.” விடைபெற்று வெளியேற, இவன் விமானத்திலேறி, தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
கடந்த பதின்மூன்று வருடமாகத்தான் அவன் அக்கா வெளிநாட்டு வாசம்! நம்வம்பர் பதினொன்று அன்று தவறாது அவள் வீட்டில் ஆஜராகிடுவான் கோகுலன். ‘என் தம்பி’ என்று ஆரம்பிக்கும் அவளின் எத்தனையோ சின்னச்சின்ன எதிபார்ப்புகளை இவனால் நிறைவேற்ற முடியாமல் போயிருக்கின்றது. அதற்கெல்லாம் ஈடுசெய்வதாகவே இதை நினைத்துக்கொள்வான். அந்த நாளில் அவளருகில் அவள் குடும்பத்தோடு கழிப்பதில் சொல்லிலடங்கா ஆனந்தம் அவனுள்.
நெதர்லாந்தில் வந்திறங்கி, டாக்ஸி பிடித்து இருமணித்தியால ஓட்டத்தில் தமக்கை வீட்டை வந்தடைந்தவனுள் இத்தனை நேரமிருந்த பொறுமை விலக, காற்றாகப் பறந்து தமக்கை அருகில் சென்றுவிடும் ஆவல் கொண்டான். நினைத்ததை முடிப்பதென்பது இப்போது அவனால் முடியாததல்லவே!
வீட்டினுள் நுழைந்து ஒவ்வொரு இடமாக உரசி வந்த அவன் விழிகள், அப்படியே மேலே வழிநடத்திச் சென்றன. வலப்பக்கமாக இருக்கும் அறையினுள்ளிருந்து ஊதுவத்தி நறுமணம் கசிந்துவர, கதவை மெல்லத் திறந்தவன் விழிகள் குளமாகி நிலைத்தன!
அங்கே, அவன் அருமை அக்கா கண்மூடி அமர்ந்திருந்தாள்.
அவள் முன்னால், சாமிப்படங்களோடு சேர்ந்து, சட்டமிட்ட பிரேமுக்குள் கறுப்புவெள்ளைப் புகைப்படத்தில் வசீகரித்தான் இவன், கோகுலன்!
சத்தம் செய்யாது நெருங்கியவன் அருவமாக வாழும் வாழ்வின் இந்தக் கணத்தை மிகவும் வெறுத்தான் என்றுதான் சொல்லவேண்டும் . அவன் ஸ்பரிசத்தை அன்புத் தமக்கையால் உணர முடியவில்லையே!
“அழாதேக்கா!” அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டவன், “இன்னொரு பிறவி உண்டென்றால் சேர்ந்தே பிறப்போம்!” முணுமுணுத்தான்.
கற்பனையில் இதம் காணத் தடையுண்டா என்ன?