கொல்லிமலை ரகசியம்





வர்ஷா, நிஷா, சலீம் மற்றும் சந்தோஷ். நான்கு நண்பர்களான இவர்கள் பள்ளி கோடை விடுமுறையில் கொல்லி மலைக்குப் பயணம் செய்தனர். மலையின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கே ஒரு தொழிற் சாலையைக் கண்டு திகைத்தனர். சமவெளிகளில் தான் தொழிற்சாலைகள் இருப்பது வழக்கம். இப்படி மலைச் சரிவில், காட்டுக்குள் ரகசியமான இடத்தில் ஒரு தொழிற்சாலை இருந்ததால், அதில் ஏதோ மர்மம் உள்ளது என்று ஊகித்தனர். தொழிற்சாலையின் சுற்றுச்சுவரில் ஏறி உள்ளே பார்த்ததும், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயங்கள் அங்கே காத்திருந்தன. வெடி மருந்துக் குவியல்களும், சில துப்பாக்கிகளும் ஆங்காங்கே தென்பட்டன. ஒருவேளை இது தீவிரவாதிகளின் மறைவிடமோ என்ற சந்தேகம் அவர்களுக்குத் தோன்றியது. “”இது தீவிரவாதிகளின் மறைவிடம் தான். நாம் காவல் துறைக்குத் தகவல் கொடுப்போம்!” என்றான் சலீம்.
“”அவசரப்பட வேண்டாம்… நிச்சயமாகத் தெரிந்தால் மட்டுமே தகவல் கொடுப்போம். இன்றிரவு என்னுடன் வர்ஷாவும், சலீமும் வரட்டும். ரகசியமாக உள்ளே நுழைந்து, என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம். நிஷா மலை அடிவாரத்தில் நிற்கட்டும். நாம் ஏதாவது ஆபத்தில் சிக்கினால், ஒரு சிவப்புக் கைக்குட்டையை கீழே போடுவோம். உடனே நிஷா சென்று காவல் துறைக்குத் தகவல் தரட்டும்,” என்றான் சந்தோஷ். அவர்கள் போட்ட திட்டப்படியே, அன்றிரவு சலீம், வர்ஷா, சந்தோஷ் ஆகிய மூவரும், தொழிற்சாலையின் உள்ளே ரகசியமாக நுழைந்தனர். ஒரு திறந்தவெளி மைதானத்தைக் கண்டதும், இது ஹெலிகாப்டர் இறங்கும் இடமாக இருக்கக்கூடும் என்று எண்ணினர். உள்ளே உள்ள கட்டடங்களில், ஆயுதங்கள் தயாரிக்கும் வேலை நடைபெறுவதாகத் தோன்றியது. வெடிமருந்தின் நெடி எங்கும் பலமாக அடித்தது. சந்தேகமே இல்லை. இது தீவிரவாதிகள் ஆயுதங்கள் தயாரிக்கும் ரகசிய இடம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்த சமயம், யாரோ ஒரு ஆள் இவர்களைப் பார்த்து விட்டான்.
அவன் இவர்களைத் துரத்த, தப்பித்தோம், பிழைத்தோம் என மின்னல் வேகத்தில் ஓடிய மூவரும் மலையின் அடிவாரத்திற்குச் சென்றனர். நிஷாவை அழைத்துக் கொண்டு நால்வரும் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
உள்ளேயிருந்த காவல்துறை அதிகாரியிடம், “”ஐயா! நாங்கள் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம். வாருங்கள், காட்டுகிறோம்,” என பரபரப்புடன் கூவி அழைத்தனர். இந்த நடு இரவில் நான்கு குழந்தைகள் திடீரென காவல் நிலையத்திற்குள் நுழைந்து பரபரப்பான செய்தி ஒன்றைக் கூறுவதைக் கேட்ட அதிகாரி சற்று குழப்பம் அடைந்தார். “”தீவிரவாதிகளா? எங்கே பார்த்தீர்கள்?” என்று கேட்டார். “”கொல்லி மலைக்காட்டில் அவர்கள் தொழிற்சாலை அமைத்து ஆயுதங்கள் தயாரிப்பதை நாங்கள் நேரிலே கண்டோம்!” என்று ரகு மூச்சுமுட்டக் கூறினாள் வர்ஷா. அதைக் கேட்ட அதிகாரி குபீரெனச் சிரித்தார்.
“என்ன இது! இவர் ஏன் சிரிக்கிறார்?’ “”அவர்கள் தீவிரவாதிகளுமில்லை, ஒன்றுமில்லை. அரசாங்கமே அங்கு ஒரு துப்பாக்கித் தொழிற்சாலையை சமீபத்தில் நிறுவியுள்ளது. அது தெரியாதா உங்களுக்கு?” என்றாரே பார்க்கலாம் அந்த அதிகாரி. நான்கு நண்பர்களின் முகத்திலும் அசடு வழிந்தது. “”ஆனாலும் பரவாயில்லை. இந்த சிறு வயதில் நடு இரவில் அங்கு உள்ளே சென்று ஆராய்ச்சி செய்த உங்கள் தைரியத்தைப் பாராட்டுகிறேன்!” என்றார் அதிகாரி. அசடு வழிந்த முகத்துடன் நால்வரும் வீடு திரும்பினர்.
– ஜூலை 23,2010