கூலிக்காரப் பய மகளே!!
(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு ஊர்ல, ஒரு பெரிய பணக்காரன் இருந்தா. அவனுக்கு ஏழு மகங்க. அவ் பொண்டாட்டி, ரொம்பக் கொடுமக்காரியா இருந்தா. ஆறு மகங்களுக்கும் கல்யாணம் முடிச்சுட்டு, கடசி மக, படிச்சுக்கிட்டிருக்கதுனால கல்யாணம் முடிக்கல. அவனுக்கு, கல்யாணம் முடிக்கணும்ண்டு பெத்தவங்க நெனச்சாங்க. ஆனா, அவ், அந்த வீட்டு வேலக்காரியக் கல்யாணஞ் செய்ய ஆசப்பட்டர். அவனது ஆசப்படி, அவனுக்கு வேலக்காரியக் கல்யாணஞ் செஞ்சு வச்சிட்டாங்க.
கல்யாணம் முடிஞ்ச பெறகு, ஆறு மாசம் வெளிய போயிப் படிக்கப் போயிட்டா. அவ் போகும்போது, இந்த ஆறு மருமகளயும், எப்டி வச்சிருக்கியோ, அது மாதிரிதான் எம் பொண்டாட்டியயும் வச்சிருக்கணும்ண்டு சொல்லிட்டுப் போயிட்டா.
போறபோது, பொண்டாட்டிகிட்ட, ஏதாவது கொடும செஞ்சா, நிய்யி போயி பனமரத்துகிட்டச் சொல்லிருண்டு சொல்லிட்டுப் போயிட்டா.
மகன் போன பெறகு, ஏண்டி கூலிக்காரப் பய மகளே!! ஒனக்குப் பட்டுச் சீலயா கேக்குது. கழத்திடிண்டு சொல்லி, வாங்கிக்கிட்டு, ஒரு பழய சீலயக் குடுத்தா.
அத வாங்கிக் கெட்டிக்கிட்டா. வடிச்ச தண்ணிய ஒட்ல ஊத்திக் குடிக்க வச்சா, அதக் குடிச்சிட்டுப் புருசன, மனசுல நெனச்சுக்கிட்டு பேசாம இருந்தா.
அப்ப, அந்த ஊர்ல ஒரு நாடகம் போட்டாங்க. நாடகம் பாக்கப் போகணும்ண்டு எல்லாரும் வெளியேறுனாங்க. அப்ப, ரெண்டாவது அண்ணன் பொண்டாட்டி, கொழுந்தன் பொண்டாட்டிய நாடகத்துக்கு கூட்டிட்டுப் போகணும்ண்டு சொன்னா.
போடி அங்கிட்டு, கூலிக்கார பயமகளப் போயி, நாடகத்துக்கு கூட்டிட்டுப் போவாங்களா? அவ, வீட்ல. கெடக்கட்டும்ண்டு, கருப்பட்டிப் பால நல்லாக் காச்சி, இவ மேல்ல ஊத்தி கெட்டிப் போட்டுட்டு, பூனக் குட்டிய பக்கத்ல் விட்டுட்டு, வீட்டப் பூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. கருப்பட்டிப் பாலுக்குப் பூனக்குட்டி அவள அப்படியே பெரண்டது. அவ்வளவு துன்பத்தயும் பொறுத்துக்கிட்டு, காலைல எந்திரிச்சு, வீட்டு வேலைகளெல்லாஞ் செஞ்சா. செஞ்சிட்டு பனமரத்துக்கிட்டப் போயி, மாமியா செய்யுற கொடுமைகளச் சொன்னா.
ஒருநா, இவ,வீட்டுக்கு வெலக்காப் போயிட்டா. வெலக்காப் போகவும், இவளத் தனி வீட்ல ஒக்கார வச்சு, வடிச்ச தண்ணியத்தான் இவளுக்கு குடுக்குறது. அப்ப, எளயவன் பொண்டாட்டி, இவ மேல எரக்கப்பட்டு, கோழியடிச்சு, கொழம்பு வச்சு, மாமியாளுக்குத் தெரியாமக் கொண்டு போயிக் குடுத்தா.
மறுநா, காலைல தோட்டத்துக்கு களையெடுக்கப் போனாங்க. அவங்க ஆறுபேரும், ஆறு நெறைகள் (பிரிவு) யெடுத்தால், இவ ஒருத்தி மட்டுந் தனியா ஆறு நெறைகளக் களையெடுக்கணும்ண்டு, நெறயப் பிரிச்சுப் போட்டுட்டாங்க. அவங்க பிரிச்சுப் போட்ட நெறைகளயும் வெட்டிட்டு, பொழுது விழுகுறதுக்குள்ள வீட்டுக்கு வந்து, வீட்டு வேலைகளயுஞ் செய்யணும். பொழுது விழுகுறதுக்குள்ள ஆறுபேரும் வீட்டுக்கு வந்துருவாங்க. இவதான் பூராத்தயும் எடுத்துக்கிட்டு வரணும்.
பகுந்து போட்ட நெறய வெட்டாம, வீட்டுக்கு வரக் கூடாதுண்டு சொல்லிட்டு வந்திட்டாங்க. அப்ப, தோட்டத்ல அழுதுகிட்டு, கள வெட்டிக்கிட்டிருக்கா. வெட்டிக்கிட்டிருக்கயில, புருச வாரா. வர்ர வழில தோட்டம் இருக்கு. இவ், அந்த வழியாத்தான் வரணும். தோட்டத்ல என்ன இருக்குண்டு பாக்கலாம்ண்டு நேரா தோட்டத்துக்கு வாரா. வர்ரப்ப தோட்டத்தில இருந்து, ஒரு பொண்ணு அழுகுற சத்தம் கேக்குது. நம்ம தோட்டத்துல, அழுகச் சத்தங் கேக்குதுண்டு, குதுரய விட்டெரங்கி தோட்டத்துக்குள்ள போனா.
அங்க அழுதுகிட்டு, கள வெட்டிக்கிட்ருக்கா. அப்ப, நா வந்திட்டே அழுகாதண்டு சொல்லி, கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாரா.
வீட்டுக்கு வந்து, குளிச்சிட்டு, யாருக்கும் தெரியாமப் படுத்துக்கிட்டாங்க. விடிஞ்சு பாத்தா, வீடெல்லாம் சோப்பு வாட மணக்குது. மகன் வந்துட்டான் போல இருக்குண்ட்டு, என்னாங்கடி, இங்க வாங்கண்டு ஆறு மருமகளயும் கூப்பிட்டா. வந்தாங்க. மகன் படிச்சிட்டு வந்திட்டர். இவ தோட்டத்ல கள வெட்டிக்கிட்டிருக்கா, நம்மள வையப் போராண்டி. சீக்கிரம் போயி, அவளக் கூட்டிக்கிட்டு வாங்கடிண்டு மாமியா சொல்றா.
அப்ப, ஒருத்தி போயி, மேவீட்ல பாக்றா. பாக்கயில, ரெண்டு பேரும் படுத்துக் கெடக்காங்க. கொஞ்ச நேரக்கழிச்சு, மகன், கீழ எரங்கி வந்தர். கீழ எரங்கி வந்து! ஏம்மா!! இவ்வளவுதான் செய்வீங்களா? இதுக்கு மேலயுஞ் செய்வீங்களாண்டு கேட்டுட்டு, ரெண்டு பேரும், வீட்டவிட்டு வெளியேறிப் போறாங்க.
போயி, ஒரு வனாந்தரத்ல பசியில வாடி, வதங்கி ஒக்காந்திருக்காங்க. அப்ப பார்வதியும் – பரமசிவனும் பாத்து, எரக்கப்பட்டு, மச்சுமாடி, குச்சுகோபுரம் கட்டிக் குடுத்து, வேண்டிய வசதியெல்லாஞ் செஞ்சு குடுக்கவும், வனாந்தரத்ல நல்லாப் பொளக்கிறாங்க.
அப்ப, இங்க, இவங்க சொத்தெலாம் போயி, வெறகு செமந்து பொழக்கிறாங்க. ஒருநா, வெறகெடுக்கப் போனவங்க. வனாந்தரத்ல மாடமாளிக இருக்றதக் கண்டு, இவங்களுக்கு ஆச்சரியமாப் போச்சு. வெறகக் கெட்டி வச்சிட்டு அங்க போறாங்க. போகயில, இவ, எல்லாத்தயும் அடயாளம் கண்டுகிட்டா. கண்டுகிட்டு:-
அவங்க வெறகப் பூராத்தயும் வாங்கிக்கிட்டு, அவங்களுக்கு ஏழு வருசத்துக் கேப்பய அரச்சு, கூழ் காச்சி, ஏழு தவக்காயப் புடுச்சு சுட்டு வச்சிட்டு, சாப்ட வாங்கண்டு கூப்ட்டா.
கூப்பிடவும், போயிப் பாத்தாங்க. பாத்திட்டு, சாப்ட மனசு இல்ல பசி வேற கொல்லுது. சாப்டாம இருக்கவும் முடியல. அப்ப, இவ சொல்றா.
ஏம்மா! செஞ்சவங்களுக்குச் செஞ்ச வெனம்மா. சும்மா எடுத்துச் சாப்பிடுங்கண்டு சொன்னா. இது அவங்களுக்கு பெரிய அவமானமா போச்சு.
அவமானந் தாங்க மாட்டாம, மாமியா நாண்டுகிட்டுச் எளய மாமனயும் – அக்காவையும் தங்கூட செத்துப் போனா. இருக்க வச்சுக்கிட்டு, மத்தவங்கள வெரட்டியடிச்சுட்டா. பெறகு, அவங்க ஊருக்குப் போயி, வெறகு வித்துப் பொழச்சாங்களாம்.
– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமூக வரலாற்றுக் கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.