குழந்தையும் தெய்வமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2025
பார்வையிட்டோர்: 186 
 
 

(1974ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உடம்பு ஒருவித தாள லயத்துடன் ஆட, ஆயாவின் கையிலிருந்து உரலில் விழுவதும், மேலே எழும்புவதுமாக இருந்தது உலக்கை… குதிர்ந்த பச்சை அரிசி, மாவாக உருமாற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. 

நான் கீழே உட்கார்ந்துகொண்டு மாவைச் சல்லடையால் சொளகில் அரித்துக்கொண்டிருந்தேன். சல்லடையில் மிதந்த அரிசித் துகள்களை மறுபடியும் உரலில் தட்டினேன். 

என் குழந்தைகள் சற்று நீங்கி மஞ்சள் நிறப் போக்கு வெயிலில் உற்சாகமாகப் பாண்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆயாவின் ஒன்றரை வயசுப் பேரக் குழந்தை கீழே தவழ்ந்தவாறு, கானாவாழைக்குள்ளிருந்து லேசாகத் தலை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பூ மொட்டை வளைத்துப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. 

கொஞ்சம் முந்தி இந்தக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, ‘இந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் விச்ராந்தியா இருக்க முடியுது. இப்போவெல்லாம் சனிக்கிழமைகூட இஸ்கூலை வச்சுடுறாங்க…’ என்று சொன்னவாறு வந்த ஆயா விடம், ‘பிள்ளைங்க கொஞ்ச நாளா புட்டு வையின்னு தொல்லை பண்ணுறாங்க, மூணு படிப் பச்சை அரிசி குதிரப் போட்டேன். இன்னிக்குப் பார்த்துப் பாழாய்ப்போன அந்தச் சக்கு வேலைக்கே வரல்லே… நீயாவது சித்தே இடிச்சுத் தருவியா? நான் அரிச்சு வறுத்துக்கிறேன். இப்போவெல்லாம் உலக்கை போட்டால் எனக்கு நெஞ்சில் ஒரு வலி வந்துருது…’ என்று நான் சொன்ன போது, 

‘சரியம்மா…’ ண்ணு சொல்லி, குழந்தையைக் கீழே விட்டுவிட்டு, உலக்கையைக் கையில் எடுத்துக்கொண்டாள். 

உஸ் உஸ் என்று மூச்சு இரைய, வியர்வை வழிய, பதக் பதக்கென்று உலக்கையை உரலில் போட்டுக்கொண்டிருந்தவள், இடையில் சிறிது நிறுத்திவிட்டுத் தன் பேரப் பையனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் இதற்குள் வேலியின் அருகில் போய் விட்டிருந்தான். உலக்கையை ஒரு பக்கம் சாய்த்து வைத்துவிட்டு, ‘டேய்… போக்கிரி. அசல் அவன் அப்பனைப்போல்தான் குறும்பு. இப்பவே வேலியைத் தாண்டத்தான் வழி பார்க்கிறான்…’ என்றவாறு அவனைப்போய்த் தூக்கிக்கொண்டுவந்து என் அருகில் விட்டாள். அவன் ‘ஆ ஊ’ என்று என்னைப் பார்த்து அவன் மொழியில் என்னவோ புகார் சொல்லிக் கையை ஆட்டினான். 

மீண்டும் அவள் மாவிடிக்கத் தொடங்கியதும் நான் கேட்டேன், ‘இது உன் மகன் குழந்தையா, மகள் குழந்தையா?’ 

‘மகன் கொளந்தை’ என்று சொல்லி என்னை நோக்கி, விஷமமாகச் சிரித்துவிட்டு, ‘எந்த மகன் கொளந்தைன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்…’ என்றாள் அர்த்தபுஷ்டியோடு. 

ஒரு கணம் எனக்கு அவள் கேள்வியின் தாத்பரியம் புரியவில்லை. நான் விழிப்பதைக்கண்டு அவளுக்கு ஒரே குஷி. 

‘என்ன ஆயா… உனக்கென்ன பைத்தியமா? உன் மூத்த மகன் வேணுவுக்கும் மகள் வள்ளிக்கும் மட்டும்தானே கல்யாணம் ஆயிருக்குது. மகன் குழந்தையானால், உன் மூத்த மகன் வேணுவின் குழந்தையாக மட்டும்தானே இருக்க முடியும். இதிலென்ன சந்தேகம்?’ 

ஆயாவுக்கு இப்போ சிரிப்பு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. மாவிடிப்பதை நிறுத்திவிட்டு, ‘அம்மா நீங்க தோத்துட்டீங்க… கொளந்தையை ஒரு தடவை நல்லாப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கோ… எந்த மகன் கொளந்தை?’ 

நான் குழந்தையைத் தலை திருப்பிப் பார்த்தேன். அவன் தரையில் ஊர்ந்துகொண்டிருந்த ஒரு பிள்ளையார் எறும்பைக் கையால் பிடிக்கத் தீவிரமாய் முயற்சித்துக் கொண்டிருந்தான். இதழோரத் தில் உமிழ் நீர் வடிந்தது. பார்க்க ஐஸ்வரியமாகவே இருந்தான். மாநிறம், அவன் அப்பாவைப்போல்… 

பிறகேன் அவள் இப்படி விடுகதை போடுகிறாள்… 

‘எனக்கென்னமோ ஆயா. ஒன்னுமே புரியலே… நீ இப்படி மூடு மந்திரமாப் பேசினா எனக்கென்ன தெரியும்?’ என்றேன் நான் என் தோல்வியை ஒப்புக்கொண்டு. 

‘சரி… நானே சொல்லிவிடுகிறேன். இதுஎன் கடைசி மகன் செல்லப்பாவின் கொளந்தை…’ 

இப்போ ஆயா வாய் விட்டு சிரிக்கவில்லையானாலும், வெற்றிலை போட்டுச் சிவந்த அவள் உதட்டு நுனியில் ஒரு சிரிப்பு திமிறிக்கொண்டு நிற்பதுபோல்… 

எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

‘என்ன ஆயா… செல்லப்பனுக்கு இருபது வயசுகூL இருக்காதே… அதுக்குள்ள அவனுக்குக் கல்யாணமாயிட்டுதா?’ 

‘என்னம்மா, கல்யாணமானாத்தான் பிள்ளைக்குத் தகப்பனாக முடியுமா?’ என்னிடம் திரும்பிக் கேட்டாள் அவள். 

எனக்கு ஒரே குழப்பம்… 

‘அப்போ பிள்ளைக்கு அம்மா?’ என்று நான் கேட்டபோது ‘என் மூத்த மருமகள்’ என்றாள் வெடுக்கென்று. 

‘என்ன?’ 

‘அம்மா… என் மூத்த மகன் பெண்டாட்டி கனகம்…’ 

அரிப்பதை ஒரு கணம் நிறுத்திவிட்டு, அவள் முகத்தைத் தலை தூக்கிப் பார்த்து ‘என்ன ஆயா உளறுறே?’ என்றேன். 

‘ஒன்றும் உளறல்லே… உள்ளதைத்தான் சொல்றேன்…’ 

இப்போ உலக்கை இத்தனை நேரமாக விழுந்ததைவிட வேகமாக விழத்தொடங்கியது. அரிசி தூளாகிக்கொண்டிருந்தது. 

நான் ஒன்றும் கேட்கவில்லை. மௌனமாக மாவை அரித்துக் கொண்டிருந்தேன். 

‘ஆமாம் அம்மா… இதெல்லாம் என் வீட்டுப் பக்கத்தில் எல்லோருக்கும் தெரிஞ்ச சங்கதிதான்; ரகசியம் ஒண்ணும் இல்லே. வேணுவுக்குப் பட்டாளத்தில் வேலை. ரெண்டு மாச லீவில் வந்திருந்தப்போ பாலக்கரையிலிருந்து இந்தக் கனகத்தை நான்தான் போய்ப்பார்த்து அவனுக்குக் கட்டி வச்சேன். லீவு முடிச்சு அவன் வேலைக்குப் போனதுக்கு அடுத்த மாசம் அவன் அப்பா செத்தார். அதுக்கும் இங்க வந்து ஒரு வாரம் நின்று விட்டுப் போனான். அவன் போன மூணு மாசம் கனகம் வழக்கம் போல் மாசத்துக்கு மூணு நாலு நாள் விலகி இருந்து கொண்டு தான் இருந்தாள். நாலாம் மாசக் கடைசியில் நான் அவகிட்டே கேட்டேன், *6T 60T 60TLQ… இந்த மாசம் நீ விலகி இருந்து காணவில்லையே…’ அப்படின்னு. அதுக்கு, ‘எனக்குக் கல்யாணத்துக்கு முந்தி இருந்தே இப்படித்தான் அத்தே… சில சமயங்கள் ரெண்டு மாசத்துக்கு, மூணு மாசத்துக்கு ஒரு முறைதான் வரும்’ அப்படின்னு அவள் சொல்லிவிட்டாள். ரெண்டு மாசம்கூட குளிக்கல்லே… வாந்தியும் தலைச் சுற்றலும் எல்லாம் தொடங்கி விட்டது. தைவிளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய்க் கேட்டபோது, மூணு மாசம் கர்ப்பமுன்னு சொன்னார் டாக்டர். 

‘அடப்பாவி. யாராம்?’ 

‘நானும் இப்படித்தான் அவகிட்டே கேட்டேன்… ‘உன்னை எங்கிட்ட ஒப்படைச்சுகிட்டுப் போயிருக்கான் உன் புருஷன். நாளைக்கு அவன் வந்து, நான் போய் ஆறு மாசம் ஆகுது. இப்போ என் பெண்டாட்டிக்கு மூணு மாசம் கர்ப்பமுண்ணா… அப்படின்னு எங்கிட்டே கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?’ அப்படி இப்படின்னு எல்லாம் கேட்டேன். அவ வாயைத் திறந்தாத்தானே… எனக்கா கையும் விளங்கலே, காலும் விளங்கலே. நாள் செல்லச் செல்ல அவள் வயிறு பெரிசாகிக்கிட்டிருப்பதைக் காணக் காண மனசு திக்கு திக்குண்ணு அடிக்குது… அன்ன ஆகாரம் தொண்டைக் குழியை விட்டுக் கீளே இறங்க மாட்டேங்குது…. ஒரு நாள் அவளைக் கூட்டிக்கிட்டுப் பாலக்கரைக்குப்போய் அவள் அம்மாகிட்டே விட்டு, விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பிறகு பிரசவமாச்சு. ஆண் கொளந்தையின்னு சேதி வந்தது. அவனை எப்படி எளுதி அறிவிப்பதுன்னு தெரியாம நான் அவஸ்தைப் பட்டுக்கிட்டிருந்தேன்… அப்போதான் அவன் வருவதா காயிதம் வந்தது… நான் மயக்கம்போட்டு விளவில்லை, அவ்வளவு தான்… நெஞ்சு சிதறிப் போய்விடுவதைப்போல் படக்குப் படக்குன்னு அடிச்சுக்கத் தொடங்கிவிட்டது… வயிற்றுக்குள்ளே சங்கடம்… மனசில் சில மாதிரி சந்தேகம்… வீட்டுக்கு வந்து போன எல்லாருக்க மூஞ்சியும் மனசில் தெரியுது… திடீருண்ணு எறும்பு ஊர்வதுபோல் ஒரு சந்தேகம்… நான் காலம்பர வீட்டை விட்டு இறங்கினா, பத்து கான்வெண்டு கொளந்தைங்களை இஸ்கூலுக்கு இட்டுக்கொண்டுபோவது, அவுங்களுக்கு மத்தியானம் சாப்பாடு கொண்டுபோவது, சாயந்திரம் வீட்டுக்கு இட்டுக்கொண்டு வருவது, அப்புறம் சந்தைக்குப்போய் சாமான் எல்லாம் வாங்கிவிட்டு வீடு வந்து சேர குறஞ்சது ராத்திரி ஏளு மணியாகி விடும். கெட்டிக் கொடுத்திருக்கும் மூத்த மகள் வள்ளிக்க தங்கச்சிகள் ரெண்டு பேரும் வீட்டு வேலைக்குப் போவாங்க… அவங்களும் நான் வீட்டுக்கு வரும் நேரத்தில்தான் வருவாங்க… அடுத்த ரெண்டு பையன்மார்களில் ஒருத்தன் ஒரு மரச் சாமான் கடையில் வேலை பார்க்கிறான். இன்னொருத்தன் ஒரு வொர்க்ஷாப்பில். ரெண்டு பேரும் காலம்பர வீட்டை விட்டுப் போனால் அப்புறம் அர்த்த ராத்திரி பார்த்துக்கொண்டால் போதும்… பிறகு வீட்டில் நிப்பது கனகமும் நகை வைக்கும் அட்டைப் பெட்டிகளை வீட்டிலிருந்து செஞ்சு விக்கும் செல்லப் பனும்தான்… நான் நேரா செல்லப்பன்கிட்டேபோய் அவன் ரெண்டு தோளையும் பிடிச்சு ஆவேசம் வந்தவளைப்போல் குலுக்கிக்கொண்டே, ‘டேய் உள்ளதைச் சொல்லு… உனக்குத் தெரிஞ்சிருக்காம இருக்க முடியாது… நீ இப்போ சொல்லாட்டி, உன் கால் மாட்டில் தலையை முட்டி நான் செத்துப் போயிடுவேன்…’ 

அப்படின்னு நான் அலறியதைக் கண்டு அவன் பயந்து போய், ‘எனக்கொண்ணும் தெரியாது… அண்ணிதான் என்னைக் கூப்பிட்டாள்…’ன்னு சம்மதிச்சான்.’ 

ஆயாவின் முகத்தில் இப்போ ஒரு உணர்ச்சி தீவிரம்… மாவிடிப் பதை நிறுத்திவிட்டு, முகத்தில் வழிந்துகொண்டிருந்த வியர்வை யைத் துடைத்துக்கொண்டாள். 

‘கடைசியில் வேணுகிட்டெ எப்படி விஷயத்தைச் சொன்னே?’ 

இப்போது அவள் சிரித்தாள். 

‘அவன் வந்ததும் கனகத்தை எங்கேன்னு விசாரிச்சான்… ‘பாலக் கரைக்குப் போயிருக்கா… நீ குளிச்சுச் சாப்பிடு… உடம்பெல்லாம் ரயில் கரி…’ அப்படீண்ணு நான் சொல்லும்போதே ஒரு மாதிரி பார்த்தான். அவன் குளிச்சுச் சாப்பிட்டுவிட்டு வந்து மறுபடியும், ‘கனகம் எங்கே ’ன்னு கேட்டப்போ, ‘அவ பிரசவத்துக்கு அவ வீட்டுக்குப் போயிருக்கா’ என்றேன். ‘என்னா?’ன்னு கேட்டான். ‘ஆண் கொளந்தை… ஒரு மாசமிருக்கும்’ என்றேன் நான். ‘என்னம்மா… வெளையாடுறியா? அப்பா செத்தப்போ வந்த அப்புறம் நான் இப்போதானே வர்றேன்’ அப்படீன்னு அவன் அதிசயப்பட்டபோது, ‘எல்லாம் நிஜத்தைத்தான் சொல்றேன்’ என்று சொன்னதும் அவன் முகத்தைப் பார்க்க முடியலே… பேயறைஞ்சதுபோல். ‘யாரு’ன்னு கத்தினான்… ‘டேய்… இனிமே நீ கோபப்பட்டு தத்துபித்துன்னு ஏதாவது செஞ்சு விடாதே…’ அப்படின்னு அவனைப் புடிச்சு என் பக்கத்தில் உக்கார வச்சுக் கிட்டு, அந்த நாளில் அவன் அப்பா, பெரியப்பா சம்பந்தப்பட்ட பளைய கதையை எல்லாம் லேசாய்ச் சொல்லியும் சொல்லாம லும் அவனைச் சமாதானப்படுத்தத் தொடங்கினேன். ‘ 

என்னால் ஆவலை அடக்க முடியவில்லை. ‘அதென்ன ஆயா… அந்த நாள் பழைய கதை…’ என்று நான் கேட்டபோது அவள் சிரித்துவிட்டுச் சொன்னாள். 

‘அம்மா… என்னை வேணுவின் அப்பா கல்யாணம் செய்வதுக்கு ரொம்ப நாள் முந்தியே அவர் அண்ணன் வேணுவின் பெரியப்பா வுக்குக் கல்யாணமாகிவிட்டிருந்தது. அப்போ இங்கே வீட்டின் முன்னால்தான் பட்டறை… அங்கே அண்ணனும் தம்பியும் இருந்து பொன் வேலை செஞ்சிட்டு இருப்பாங்களாம்… என் வீட்டுக்காரர் வீட்டில் இருக்கும்போது அவர் அண்ணா பட்டறை யிலிருந்து வீட்டுப் பக்கமே தலைகாட்ட மாட்டாராம்… பெரியவர் வீட்டில் இருக்கிறப்போ சின்னவர் வீட்டுக்கு வர மாட்டாங்களாம்…’ என்று சொல்லி ஆயா கண்ணை ஒரு சிமிட்டு சிமிட்டிவிட்டுச் சிரித்தபோது எனக்கு எல்லாம் புரிந்தது… 

‘ஓஹோ… அப்போ இது அப்பனின் சுபாவம்தானா?’ 

‘அம்புடையும் கேளுங்கோ அம்மா… வேணுவுக்கு அப்பா என்னைக் கல்யாணம் செஞ்சு இங்கே கூட்டிக்கிட்டு வந்த பிறகுதான் இதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது. கொஞ்ச நாள் களிஞ்ச பிறகு, என் வீட்டுக்காரர் பட்டறையில் இருக்கிறப்போ, மெல்ல அவர் அண்ணா வீட்டுக்கு வருவார்… நான் மெல்ல நழுவி தெருக் கடைக்கு வந்துடுவேன்… இல்லாட்டி அடுத்த வீட்டுக்குப் போயிடுவேன்… ராத்திரி என் வீட்டுக்காரர் ‘ஏண்டி முத்தம்மா… உனக்கென்ன இவ்வளவு கொழுப்பு… அண்ணி இப்படியா எங்கிட்டெ பிகு பண்ணுறா… அவளுக்கு நானும் என் அண்ணாவும் ஒண்ணுபோல்தான். நீயும் அப்படியே…’ என்று சொன்னபோது, ‘அது உங்க அண்ணிக்குச் சம்மதமா இருக்கலாம். ஆனா… என்னைப் பொருத்தவரையில் உங்களுக்கு மட்டும்தான் நான் பெண்டாட்டி… அது உங்களுக்குச் சம்மதமில்லாட்டி என்னை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுடுங்கோ…’ அப்படின்னு அடிச்சுச் சொன்னேன்… அவருக்கு இன்ன மட்டுண்ணிலே கோபம்… அப்படி இருக்கையில்தான் ஒரு நாள் மத்தியானம், நான் என்னவோ நினைச்சவாறு கீழே குத்தவச்சு உட்கார்ந்துக்கிட்டு அடுப்பை ஊதிக்கிட்டிருந்தேன். திடீரென்று யாரோ என்னை மூச்சு முட்டக் கட்டிப் பிடிச்சா… இன்னாருண்ணு தெரியாமே திடுக்கிட்டு ‘ஐயோ… திருடன்… திருடன்…’ ண்ணு எட்டு வீடு கேட்கக் கத்திக்கொண்டு விழுந்தடிச்சுக்கிட்டு நான் ஓட, அடுத்த வீட்டுக்காரங்க எல்லோரும் குண்டாந்தடியுடன் ஓடிவந்து பார்க்கும்போது… முகத்தில் அசடு வழிய நிக்கும் அவர் அண்ணாவைக்கண்டு எல்லோரும் சிரிக்கிறாங்க… அதுக்குப் பிறகு அவர் என்கிட்டே வரவே இல்லை. ஆனா… என் வீட்டுக் காரருக்கு என்மீது அசாத்திய கோபம். அந்தக் கோபத்தில் ஊரை விட்டுப் புறப்பட்டுப்போய்க் கொஞ்ச நாள் எங்கெல்லாமோ சுத்தி விட்டு வந்தாரு…’ என்று ஆயா சிரித்தாள். 

‘சரி… சரி… கடைசியில் உன் மகன் சமாதானப்பட்டானா?’ 

‘சமாதானப்படாமல் வேறு வழி? செல்லப்பன்தான்னு அறிஞ்சு வேணு அவனிடம் பாய்ஞ்சப்போ நான் தடுத்தேன். ‘டேய்… டேய்… சங்கதியெல்லாம் சரிதான்… நீ கொஞ்சம் ஆலோசிச்சுப் பாரு… அவன் என்ன செய்வான்? சின்னப் பையன்… உன் பெண்டாட்டியைவிட பத்து வயசுக்கு இளையவன்… ஏதோ தப்பு பண்ணிட்டான். எப்பவும் பெண்டுகள்தான் எச்சரிக்கையாக இருக்கணும்.. என்னைப்பற்றிச் சொன்னேனில்லை…’ அப்படிண்ணு சொன்னேன். அடுத்த வீட்டுப் பெரியவங்க வந்து ‘பெண்ணடி பாவம் ஏற்கப்படாது… அவளைப் போய்க் கூட்டிக்கிட்டு வா. வேறு யாருமா? உன் கூடப் பிறந்த தம்பி தானே உள்ளது. சிறிசுகள் புத்தி இல்லாம இப்படி நடந்துக் கிட்டதுக்கு நீ உன் வாழ்க்கையையும் அவுங்க வாழ்க்கையையும் பாழாக்கி விடாதே…’ என்றெல்லாம் சொல்லி அவனைச் சமாதானப்படுத்தினாங்க… கடைசியில் கனகம், பிள்ளையை எடுத்துக்கிட்டு அவள் வீட்டிலிருந்து இங்கே வந்தாள்…’ 

அவள் பேரக் குழந்தை இப்போ என் மூத்த மகள் கையிலிருந்து எந்தக் கவலையுமின்றி ஆ…ஊ என்று கத்தி விளையாடிக் கொண்டிருந்தான்… அவனை ஒருமுறை பார்த்துவிட்டு நான் கேட்டேன். 

‘பிள்ளையை வேணு எடுப்பானா?’ 

ஆயா பல் முழுதும் தெரியச் சிரித்தாள். 

‘அதைக் கேக்குணுமா… செல்லப்பன் வேணுவைப்போல் அல்ல, எல்லோர்கிட்டையும் கலகலப்பா பேசுவான்… அதனால் இந்தப் பயல் செல்லப்பன்கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான்… அவனைத் தூரத்தில் கண்டாலே கையை எடுத்துப் போடுவான்… இதைக் காணும்போது வேணுவுக்குப் பற்றிக்கிட்டு வரும். ‘அவன் இந்தப் பிள்ளையைத் தொடக் கூடாது…’ என்று வேணு சட்டம் போட்டபோது, ‘டேய் சங்கதி எல்லாம் சரி. கொளந் தையும் தெய்வமும் எல்லோருக்கும் பொது! கொளந்தைங்க கிட்டே களங்கம் இல்லே… பெரியவங்க செய்கிற குற்றத்துக்கு அதுக என்ன செய்யும்?’ அப்படீன்னு சொன்னேன் நான்.’ 

– 19.06.1974, சதங்கை, தீபாவளி மலர், 11/1974.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *