குளத்தங்கரை உரையாடல்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: June 29, 2026
பார்வையிட்டோர்: 134 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

வெண்ணி என்னும் ஊர். கதிரவன் தன்னுடைய கடமையை ஆற்ற கிழக்கில் தோன்றாத விடியற் காலைப் பொழுது . குளித்து முடித்து மாற்று உடை உடுத்திக் கொண்ட ஒரு முதிய மாது, தன்னுடைய கரங்களில் சிற்றாடையை வைத்துக் கொண்டு படித்துறையில் அமர்ந்து இருந்தார். அவருடைய பெயர்த்தி பதின்பருவப் பெண் முல்லை , முங்கிக் குளித்துக் கொண்டிருந்தாள்.

பாட்டி பேசினார் –

“இன்னும் எத்தனை நாழி நீராடிக் கொண்டே இருப்பாய் .. விட்டு வர மனம் வரவில்லையா …. வா வீட்டுக்குப் போகலாம் .. உன்னுடைய மாற்று உடைகளை வைத்துக் கொண்டு நான் காத்திருக்கிறேன். “

ஒற்றை ஆடை அணிந்து குளியலை விட்டு வர மனம் இல்லாத முல்லை , குளத்திலிருந்தபடியே பேசினாள் …

“பாட்டியாரே … உடைகளை படித்துறையில் வைத்து விட்டு நீங்கள் செல்லுங்கள் … எனக்கு வீட்டுக்கு வரத் தெரியாதா என்ன ? நான் இனிமேல் உங்களிடம் பேசவதாக இல்லை …. “

“உன் அம்மாவும் அப்பாவும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டே இருந்த போது நான் தான் உன்னை வளர்த்து ஆளாக்கினேன். நல்லது தீயது உரைத்து ஊர் மெச்சும் பெண் மகள் ஆக்கினேன் .. என்னிடம் பேசாமல் யாரிடம் பேசுவாய் … ? உனக்கு கட்டிளங்காளை என காதலன் கிடைத்து விட்டானோ ? “

“பெண் கவியான உன் பேச்சுக்கு என்ன சொல்லவா வேண்டும் … நீ நமது சோழ மண்டலத்தின் அதிபதி மாமன்னர் திருமாவளவன் கரிகால் பெருவளத்தாரைப் பாடுகையில் , நீ வீரம் மிக்கவன் நல்லவன் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் , முதுகில் அம்பு பாய்ந்த காரணத்தால் அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்த சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னிலும் நல்லவன் என்று பாடியது எனக்குப் பிடிக்கவில்லை ஏன் … ஊருக்கும் பிடிக்கவில்லை … “

என்று கூறியபடியே முல்லை குளத்திலிருந்து படித்துறைக்கு வந்தாள்.

அவள் துடைத்துக் கொள்ள துண்டையும் அவளுடைய சிற்றாடையையும் மேலாடையையும் அவளிடம் கொடுத்தாள் பாட்டி . அவர்தான் பெண் பால் புலவர் வெண்ணிக்குயத்தியார்.

“இதனால் தான் வளர்த்த பாட்டி மீது இந்தப் பெயர்த்திக்கு சினம் வந்து விட்டதா? போர் என்பதில் வெற்றியும் வரும் தோல்வியும் வரும் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் நமது சோழ மாமன்னர் கரிகாலருடன் பாண்டிய மன்னரும் போரிட்டார். சேர நாட்டின் மன்னரும் போரிட்டார். சேர மன்னர் பெருஞ்சேரலாதன் , முதுகில் அம்பு பட்டு விழுந்து பட்டதை எண்ணி தமது வாளுடன் வடக்கிருந்து உயிர் துறந்தது என்பது என்பது அவருடைய மானத்தையும் வீரத்தையும் ஒருங்கே பறை சாற்றுகிறது என்பதைத் தான் அடியாளின் பாடலில் சொன்னேன். மாமன்னர் கரிகாலருக்கு என் பாடல் புரிந்து விட்டது. உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.. வா போகலாம்.”

ஈர உடையைக் களைந்து மாற்று உடைகளை அணிந்து கொண்ட முல்லை ..

“அப்படியானல் சேர வேந்தர் வடக்கிருந்து உயிர் துறந்தது வீரம் மற்றும் மானத்தின் வெளிப்பாடா பாட்டியாரே … “

“ஆமாம் . பொன் வளையல் அணிந்த பொன்னே … அதில் என்ன உனக்கு ஐயப்பாடு .. ? வா இல்லம் செல்வோம் … செல்லமே . பாட்டியார் மீது கோபம் இல்லையே … “

கிழக்கு வெளுத்து கதிரவன் வந்தான். முல்லை புன்னகை பூத்து பாட்டியாரின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

குறிப்பு:

1) வெண்ணிற்பறந்தலை – நீடாமங்கலம் அருகில் உள்ள கோயில் வெண்ணி ( வெண்ணி ) என்று கூறப்படுகிறது.

2) தமிழறிஞர் நா.மு. வேங்கடசாமி நாட்டார் (1884 – 1944) அவர்கள் வீரச்சுவை என்னும் கட்டுரையில் கூறுகிறார் –

“தமிழ் மறவர் போரில் புறங்காட்டுவது என்பது எக்காலத்திலும் இல்லை. வெண்ணிற்பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் புரிந்த சேர மன்னன் பெருஞ்சேரலாதன் , தன் மார்பிலே தைத்து உருவின புண்ணும் புறப் புண்ணாகும் என்று நாணி வாளோடு வடக்கிருந்து உயிர் நீத்தான் என்றால் அவனுடைய மானத்தையும் வீரத்தையும் எவ்வாறு அளவிடலாகும்?”

3) பெண்பாற் புலவர் வெண்ணிக் குயத்தியார் இயற்றிய சங்கத் தமிழ்ப்பாடல்

புறநானூறு – 66 –

… நின்னிலும் நல்லன் அன்றே … என்று கரிகால் பெருவளத்தானைப் பாடுகையில் , சேரமான் பெருஞ்சேரலாதன் பற்றிக் குறிப்பிடுகிறார்.

4) கழாத்தலையார் என்ற புலவர் பாடிய புறநானூறு பாடல் 65 …

இதில் புலவர் , சேரமான் பெருஞ்சேரலாதன் , வாளுடன் வடக்கிருந்து உயிர் துறந்த சேதி கேட்டு சேரநாடு பொலிவிழந்து , களையிழந்து காணப்பட்டது என்று பாடுகிறார்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *