குர்பானி
கதையாசிரியர்: ஜே.எம்.சாலி
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: July 26, 2026
பார்வையிட்டோர்: 233
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாரா மாலைத் தொழுகையை முடித்துவிட்டு கையேந்தி ‘துவா’ இறைஞ்சினாள்.
இப்படிக் கையேந்தும்போது இரும்பான இதயம்கூட பஞ்சுபோல் ஆகிவிடுகிறது. சாராவின் நெஞ்சம் என்றைக்குமே பஞ்சுதான்! இதை உணர்ந்துதான் அவளை மடக்கி விடுவது என்ற தீர்மானத்தோடு போனவாரம் கதீஜா வந்தாளோ?
சாரா எதிர்பார்க்கவில்லை.
”சாராம்மா… மதம் புடிச்ச அந்தக் காட்டு யானையோட அளிச்சாட்டியம் அளவுக்கு மீறிப் போயிடுச்சும்மா… ஊரே நடுங்கிக்கிட்டிருக்கு….!”
கதீஜா மாமி இப்படித்தான் ஆரம்பித்தாள்.
“முந்தாநாள் தர்காவுலே உக்காந்து இந்த யானையும் சிநேகிதக்காரங்களும் சீட்டு வெளையாடிக் கிட்டிருந்தானுங்களாம். மஃரிபு நேரம். பாத்தியா ஒதுறதுக்காக உதுமான் லெப்பை வௌக்கேத்தி ஊதுவத்தி கொளுத்தி வச்சிட்டு, எதம்பதமா இவன்கிட்டே சொல்லிப் பாத்துருக்காரு. தர்க்காவை விட்டு போகச் சொல்றதுக்கு நீ யாரு’ன்னு வெறப்பு ஈரப்பா கேட்டுப்புட்டு கையை ஓங்கி அடிச்சுப்புட்டானாம் பாவி… தர்காவுலே அடக்கமாகி இருக்கிற அவுலியாவினாலே அவனைக் கேக்க முடியுமா? இல்லே அந்த அல்லாவினாலே தான் கேக்க முடியுமா?”
முடியாதுதான்.
“நேத்து இருட்டுற நேரம். இலுப்பைத் தோப்பு படித் துறைக்கு தண்ணி எடுக்கப் போயிருக்கா லாடக்கார லத்தீபு மகள், கொடத்தை இடுப்புலே வச்சிக்கிட்டு குனிஞ்ச தலை நிமிராம போய்க்கிட்டிருந்த அந்தக் கனியாப் பொண்ணை மடக்கியிருக்கான் இவன். கையைப் புடிச்சி இளுக்காத குறையாம் அந்தப் பொண்ணு வூட்டுக்கு வந்து தேம்பித் தேம்பி அளுதா… இப்புடியே போய்க்கிட்டிருந்தா இந்த ஊரு என்னா ஆவுறது? இவனை யாராச்சும் கண்டிக்க முடியுமா? இல்லே தண்டிக்க முடியுமா?”
இரண்டும் முடியவில்லை!
”சாராம்மா, அந்த மதம் புடிச்ச யானையைப் பெத்த இந்த வயிறு பத்தி யெரியுதும்மா…” என்று பதறிப் பரிதவித்து, கண்ணீரைப் பிழிந்தாள் கதீஜா.
காதர்பாட்சாவின் கதை யாருக்குத் தெரியாது? ‘காட்டு யானை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். கண்டிப்பு, கட்டுப்பாடு, கல்வியறிவு இல்லாமல் செல்லமாக வளர்க்கப்பட்டவன், முள்மரம் போல் நிற்கிறான். நல்லவர் யாரும் நெருங்க முடிவதில்லை. அவனை குருவாக்கிக் கொண்டு எந்த நேரமும் சூழ்ந்து கொண்டிருக்க, ஒரு பட்டாளம் இருக்கிறது.
‘யானை வருது டோய்…’ என்றவாறு அவனைப் பார்த்து ஓட்டம் எடுப்பவர்களும், ‘வஸ்தாது வர்றாரு’ என்றவாறு ஒதுங்கிக் கொள்பவர்களும், இந்த நிமிஷம்வரை எல்லா தெருவிலும் இருக்கிறார்கள்.
எல்லாமே சாராவுக்குத் தெரியும். முறை மச்சான் அல்லவா? கதீஜா மாமி அவள் தந்தையுடன் பிறந்தவள். சொந்த மச்சானைப் பற்றி துயரம் முட்டமுட்ட கதீஜா வருணிப்பது சாராவையும் வாட்டி வதைக்கத்தான் செய்கிறது. என்றாலும், அவள் செய்வதற்கு என்ன இருக்கிறது?
கதீஜா மாமியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மகனைப்பற்றிய கவலையில் உலர்ந்த திராட்சை போல் வாடி வதங்கியிருக்கிறாள். அவளைத் தேற்ற வேண்டியது தன் கடமை என்பதை உணர்கிறாள் சாரா. அந்த மனோதத்துவம் அவளுக்குத் தெரியும். ஆசிரியை அல்லவா? அழகின் உருவம், அடக்கத்தின் வடிவம் என்று பெயரெடுத்திருக்கிறாள் சாரா. பட்டதாரி ஆசிரியையான அவள் ஊருக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறாள். அந்தப் புகழையும் பெரு மையையும் நினைத்து கதீஜா மாமி பூரித்துக் கொண்டிருப் பவள் தான்.
“சாராம்மா… ஒரு வாத்தியாரம்மாவா உன்னை தெனைச்சி நல்ல யோசனை கேக்கத்தான் வந்திருக்கிறேன் இப்ப…! வழி சொல்லுவியாம்மா?” –படபடப்புடன் கதீஜா கேட்டாள்.
“என்ன வேணுமோ கேளுங்க மாமி.. ஒங்களுக்கு இல்லாத உரிமையா?” என்றாள் சாரா.
“ஆமாம்மா… எனக்கு உரிமை இருக்கு… ஏன்னு கேப்பியா, கேக்க மாட்டே… என் அண்ணனோட பொண்ணாச்சே…!”
“கதீஜா என்ன கேட்க நினைக்கிறாள்?” சாராவினால் மனக் கணக்குப் போட முடியவில்லை.
“சாராம்மா, கையை ஓங்காமெ, பெரம்பை எடுக்காமெ புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறே, இல்லியா?” என்றவாறு சாராவை ஏறிட்டுப் பார்த்தாள் கதீஜா.
“மாமி, நீங்க என்ன சொல்றீங்க?”
“புரியலே? மதம் புடிச்ச யானையை அடக்கக்கூடிய அங்குசம் உன் கையிலே இருக்கு சாரா…”
சாரா திடுக்கிட்டாள்.
“சூதாடி, குடிகாரன், வஸ்தாது, வம்பன், இபுலீசு… இப்படி நூறு பட்டம் வாங்கியிருக்கிற காதர்பாட்சாவை- உன்னோட மச்சானை. சுட்டிக்கிட்டு அவனை நீதான் மனிசனாக்கணும்!”
சாரா தலை சாய்ந்து போனாள்.
‘இப்படி ஒரு கற்பனையா? பேராசையா?’
கதீஜா கஷ்டப்பட்டு சாராவை நிமிர்ந்து பார்த்தாள். சங்கடமாக இருந்தாலும் சொல்ல வந்ததைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“சாராம்மா. இது என்னோட வேண்டுதல் மாத்திரம் இல்லே… இப்ப உன்கிட்டே கெஞ்சிக் கேக்கறதுக்கு அவனோட தூண்டுதலும் காரணம்…”
“தூண்டுதலா?”
“ஆமாம்மா… ‘உன்னையத் திருத்தறதுக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் கட்டி வக்கிறேன்’னு காதர் பாட்சா கிட்டே சொன்னேன். அப்ப அவன் சொன்னான்: ‘சாராவை எனக்குக் கட்டி வைப்பியா.. ஒன்னாலே முடியுமா? முடியுமா, சொல்லு!’ அப்படீன்னான். அப்பத்தான் எனக்கு மனசிலே ஒண்ணு பட்டுச்சி… நீ அவனை ஏத்துக்கிட்டா அவனைத் திருத்திட முடியும்!”
அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உட்கார்ந்திருந்தாள் சாரா.
“சாரா… இது ஒரு ‘குர்பானி’யாட்டம். நம்மகிட்டே இருக்குற எந்தப் பொருளையும், அவசியமானா நம்பளையே கூட அல்லாவுக்கு அர்ப்பணிக்கிறதுதானே ‘குர்பானி!’ அல்லாவுடைய பாதையிலே, ஒரு கெட்டவனைத் திருத்தி நல்லவனா மாத்தறதுக்காக தியாகம் செய்யிறது ‘குர்பானி’ மாதிரிதான்…!”
கதீஜா பேசிக் கொண்டிருந்தான். பேச முடியாமல் வாயடைத்துப் போய் விட்டாள் சாரா.
“சாரா, நல்லா யோசிச்சுப் பாரும்மா! உன்னோட நெலைமை எனக்குத் தெரியும். நல்லவங்க, பெரியவங்க தியாகம் செய்யிறதில்லையா, அதுமாதிரி நம்ம குடும்பத்தைக் காப்பாத்த நீ இப்படி ஒரு தியாகத்தை…”
கதீஜா அழுது விட்டாள்.
வெகுநேரம் வசமிழந்து உட்கார்ந்திருந்தாள் சாரா, நஞ்சை அமுதாக்கும் சோதனையல்லவா?
சாராவின் நெஞ்சம் அந்த நேரம் அழுதது. அதற்குக் காரணம் இருந்தது. இன்னொருவனைக் கைப்பிடிக்க அவள் வகுத்திருந்த திட்டம்…?
பப்பாளிச் செடிபோல் ஒல்லியாகவும் உயரமாகவும் ஒருமுறைக்கு இரண்டு முறை பார்க்கவும், பேசவும் தூண்டும் அடக்கமான வசீகரிப்புடன், ஊரே மெச்சும்படி உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிற சாரா, அதே தகுதிகளுடன் ஆண்கள் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் சலீமை மணந்து கொள்ளப் போகிறாள் என்பது பலருக்கும் எட்டிய சங்கதி. அநேகமாக முடிவான விஷயம். ஓர் இழை பிசகாமல் சாராவும் – சலீமும் கண்ணியமாக, கௌரவமாகப் பேசவும், பழகவும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. நட்பு முறையில் ஏற்பட்ட சந்திப்புகள் திருமணம் நடைபெறும் அளவுக்கு அவர்களை அருகில் கொண்டு வந்து விட்டன.
இருவரும் மண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது கதீஜாவுக்குத் தெரியாததல்ல. அறிந்திருந்தும், அதைத் தகர்த்து, தரைமட்டமாக்கி விடும் எரிகுண்டை வீசி வீட்டுப் போயிருக்கிறாள்.
ஒன்றின் முடிவு மற்றொன்றின் துவக்கமா?
சாரா தொழுகைப் பாயில் அமர்ந்தபடி தஸ்பீஹ்-ஜபமணியை உருட்டிக் கொண்டிருந்தாள்.
சில நாட்களாகத் தொழுகைக்குப் பிறகு நீண்ட நேரம் ‘துவா’ இறைஞ்சி விட்டு, மணியை உருட்டுவது பழக்கமாகி இருக்கிறது. விடுமுறை ஒரு காரணம். இதயத்தைப் பஞ்சாக் கொள்ளும் முயற்சி இன்னொரு காரணம்.
பிரளய கதியில் இப்பொழுது ஊரைக் கலக்கிக் கொண்டிருக்கும் செய்தி சாராவுக்கு நேரத்திற்கு நேரம் எட்டியபடி இருக்கிறது.
“சாரா டீச்சர் காட்டு யானையைக் கட்டிக்க சம்மதிச்சுட்டது.”
“இது எட்டாவது அதிசயம்!”
“குரங்கு கையிலே பூமாலையை யாராச்சும் ஒப்படைப் பாங்களா?”
“அல்லாவுக்கே இது அடுக்காது… படிச்ச பொண்ணு அந்தத் தற்குறிப் பயலையா கட்டிக்கணும்?”
வெளியே பிரளயம்! உள்ளே தஸ்பீஹ் மணியை உருட்டிக் கொண்டிருக்கிறாள் சாரா, சலனமில்லாமல். சஞ்சலப் படுவதற்கு என்ன இருக்கிறது? சலீமை அவள் இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்தபோது-
“அல்லாவுடைய நாட்டம் வேறு விதமா இருக்குங்க!” என்று ஆரம்பித்தாள்.
“எந்த விஷயத்திலே…?” என்றான் அவன்.
”நம்ம சொந்த விஷயம்!”
சலீம் விளக்கம் கேட்டான். அவள் விவரித்துச் சொன்னாள்.
“மாமி சொன்ன ஒரு சொல்லுதான், என்னை மந்திரக் கயிறு மாதிரி கட்டிப் போட்டுட்டதுங்க…” என்றாள் கலக்கத்துடன். அவனுக்கும் மெல்லிய கண்ணீர்ப்படலம்தான். பேச முடியவில்லை.
“ஆமாங்க…இதை ஒரு ‘குர்பானி’யா நெனைச்சி, என்னை நானே தியாகம் பண்ண முடிவு பண்ணிட்டேன். இதுக்கு உங்க சம்மதம் முக்கியம்… உங்க மனசு கஷ்டப்படுமேங்கிற கவலைதான் எனக்கு…” – சாரா நெகிழ்ந்திருந்தாலும் நிதானத்துடன்தான் சொன்னாள்.
சலீம் நிமிர்ந்தான்.
“அந்த தியாகத்திலே எனக்கும் பங்கு இருக்கட்டும்… உங்களைப் போலவே எனக்கும் மனப்பக்குவம் இருக்குங்க, சாரா… அல்லா போதுமானவன்!” என்றான் அவன்.
மறுநாளே விடுமுறை நாட்களைக் கழிக்க சலீம் சொந்த ஊருக்குப் புறப்பட்டுப் போனான்.
சாரா ஓதி முடித்து தஸ்பீஹ் மணியை ஆணியில் மாட்ட எழுந்தபோது காலடியோசை கேட்டது. திரும்பினாள்.
காதர்பாட்சா!
கட்டம் போட்ட கைலியும், ஜிப்பாவும், மீசையும், அடர்ந்த தலைமுடியுமாக…
அர்த்தம் காணமுடியாத சிரிப்புடன்..
எதிர்பாராத நிலையில் அவன் வந்து நின்றதால் ஏற்பட்ட நடுக்கம் அடங்க இரண்டு நிமிஷம் ஆயிற்று.
“வாங்க. மச்சான்!” என்றாள் அடக்கமாக.
“‘வேற யாரும் இல்லே?’ என்று வினவியபடி சாராவைக் கவனித்தான்.
“இல்லே.. உக்காருங்க!”
“சாரா, உன்னைய பாக்கணும் போல இருந்திச்சி… அதனாலே…” – அவன் இழுத்தான். இரண்டு எட்டில் உள்ளே வந்தவனை அமரச் சொன்னாள். அடுத்து என்ன பேசுவது, என்ன செய்வது என்று புரியவில்லை. மணந்து கொள்ளப் போகிற மாப்பிள்ளை அல்லவா?
“சாரா, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்!” என்றான் காதர்பாட்சா.
“எதுக்காகவாம்…?”
“என்னைக் கட்டிக்க நீ சம்மதிச்சதுனாலே. அந்த சந்தோசத்தை என்னோட கூட்டாளிங்க அத்தினி பேரும் கொண்டாடினானுவ, தெரியுமில்லே…!”
அவன் சிரித்தான்.
“மச்சான், இருங்க… டீ கொண்டார்றேன்…!” -சாரா நகர முயன்றாள்.
“சாரா, அதுக்கு முன்னாடி..”
“என்ன வேணும்?”
“சாரா, மனசைத் திறந்து சொல்லு… என்னையக் கட்டிக்க நெஜமாவே உனக்கு இஷ்டந்தானே?”
இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை.
“அல்லா நாடுறபடி எல்லாம் நடக்கும். இப்ப எதுக்கு சந்தேகம்?”
“முதல்லே அம்மா சேதி சொன்னப்ப என்னாலே நம்ப முடியலே. உன்னைய அடையணுங்கிற ஆசையும், அது முடியாதுங்கிற வெறியும் இருந்திச்சு. நீ என்னையத் திரும்பியே பாக்க மாட்டேன்னு எப்பவோ தீர்மானிச்சிருந்தேன்…”
“இப்ப எதுக்கு அதையெல்லாம் கிளர்றீங்க?” என்றாள் சாரா
”சாரா, உன்னோட சம்மதம் கெடைச்சதும் எனக்கு சந்தோசத்திலே தலைகால் புரியலே. அம்மாவைத் துருவித் துருவிக் கேட்டப்ப என்ன சொல்லிச்சு தெரியுமா? ‘சாரா உன்னைக் கட்டிக்கச் சம்மதிச்சதுக்கு நான் போட்ட ஒரு கட்டு தாண்டா காரணம். அதாண்டா, ‘குர்பானி’யா நெனைச்சி இதுக்கு சம்மதிச்சிருக்குடா சாரா’ன்னு சொன்னாங்க…”
காதர்பாட்சா அவளைக் கவனிக்க, சாராவும் அவனைப் பார்த்தாள்.
“சாரா, ‘குர்பானி’ன்னு அம்மா சொன்ன வார்த்தை என்னைக் குத்திட்டது. மதரஸாவுலே நான் ஓதிக்கிட்டிருந்தப்ப ஹஸரத் ‘குர்பானி’யைப் பத்தி சொன்னதை மட்டும் நான் இன்னும் மறக்கலே. தம்மோட ஒரே மகன் இஸ்மாயிலை அல்லாவுக்காக ‘குர்பானி’ குடுக்க – பலியிட, இபுராகீம் நபி முன்வந்தாங்க இல்லியா…?”
“ம்… சொல்லுங்க!” என்றாள் சாரா.
“சொல்ல முடியிலே சாரா…. உன்னைய ‘குர்பானி’ குடுக்க நீ முடிவு செஞ்சது…” – அவன் தழுதழுத்தான்.
“அது ஒண்ணும் தப்பு இல்லையே!”
“எது சரி, எது தப்புங்கிறதை இவ்வளவு காலத்துக்குப் பெறகு உன் மூலமா அல்லா புரிய வச்சிட்டான், சாரா! இதுநாள் வரைக்கும் மதம் புடிச்ச யானையா திரிஞ்ச என்னை அங்குசம் எடுக்காம, ஆயுதம் இல்லாம, ‘குர்பானி’ங்கிற தத்துவத்தாலேயே அடக்கி ஒடுக்கிட்டே அதனாலே என்னோட கெட்டதுகளை ஒட்டுமொத்தமா ‘குர்பானி’ குடுத்துட்டேன் சாரா!”
அவளால் நம்ப முடியவில்லை.
“சாரா, எனக்காக அல்லாகிட்டே இன்னும் ‘துவா’ கேளு. இனிமே நான் ஒனக்கு மச்சான் இல்லே…அண்ணன்!”
காதர்பாட்சா முடிக்குமுன் சாராவின் கரங்கள் உயர்ந்தன. ஏந்திய கைகளை அல்லா வெறுமனே திருப்பியனுப்புவ தில்லையே!
– 1980, இதயம் பேசுகிறது.
– சாயல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மே 1983, தமிழ் மன்றம். கல்ஹின்னை, கண்டி.
![]() |
ஜே.எம்.சாலி (பிறப்பு: ஏப்ரல் 10 1939), சிங்கப்பூர் தமிழ் இஸ்லாமிய எழுத்தாளர். எரவாஞ்சேரியில் பிறந்த இவர் தற்போது யசும் தெருவில் வசித்துவருகின்றார்.2015ம் ஆண்டின் சிறந்த தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது பெற்றவரும், சிங்கப்பூர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியரும், பன்னூலாசிரியரும், பத்திரிகையாளரும், பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகளை எழுதியவரும், இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வெளிநாட்டுத் தொடர்பாளருமாவார். எழுதிய நூல்கள் கனாக் கண்டேன் தோழி விலங்கு அலைகள் பேசுகின்றன தமிழகத்துத் தர்க்காக்கள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 26, 2026
உயிர் உனதானதே!
லாவண்யா ஸ்ரீராம்
July 26, 2026
அணில் குத்திகள்
காஞ்சி.தங்கமணி
July 26, 2026
