கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 3,622 
 
 

திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 200வது சிறுகதை. வாழ்த்துக்கள் ஐயா.


நகரத்தின் மத்தியில் மரங்கள் இல்லாத பகுதியில் தன் வீட்டின் முன் பகுதியில் உள்ள போர்டிகோவில் விசேசங்களின் போது, உறவினர்கள் அமரும் போதும், வெளிக்காற்று வாங்க வேண்டும் என வீட்டினருக்குத்தோன்றும் போதும் வெயில் காலங்களில் உடல் வியர்க்காமலிருக்க மின் விசிறியை பொருத்தியிருந்தான் வீட்டின் முதலாளி மிகன்.

மழை காலங்களில் மின் விசிரியை பயன்படுத்துவதில்லையென்பதால் அதில் ஒரு நாள் இரண்டு குருவிகள் கூடு கட்டுவதைக்கண்டு விரட்டினான். கூடு இறுக்கமாக அமைந்து விட்டால் விசிரி சுழலாது என்பதால் ஒரு குச்சியை எடுத்து பாதிவரை குருவிகள் கட்டியிருந்த கூட்டைக்களைத்து கீழே விழச்செய்த போது குருவிகள் கோபத்தில் மிகனைக்கொத்த வந்ததும் வீட்டிற்குள் சென்று கதவைச்சாத்திக்கொண்டான்.

கூடு பிரிந்ததில் வருந்திய குருவிகள் மனிதர்கள் கத்தி அழுவது போல் அங்குமிங்கும் பறந்து, பறந்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தின.

ஒரு குருவி சோர்வில் வீட்டின் பின் பகுதியில் இருந்த ஒரு மலர்ச்செடியடியே சென்று படுத்துக்கொண்டது. அதைக்கண்ட அவ்வீட்டில் வளரும் பூனை குருவியை சாப்பிடும் பொருட்டு பதுங்கி, பதுங்கி ஆசையாக படுத்தபடியே நகருவதைக்கண்ட துணைக்குருவி அசுர வேகத்தில் பறந்து வந்து பூனையைக்கொத்த பூனை வலி தாங்காமல் வேறிடம் நோக்கி ஓடியது.

“நாமென்ன இவர்கள் வீட்டை அபகரிக்கவா கூடு கட்டுகிறோம். நம் இனத்தைப்பெறுக்கத்தானே…. நாம் கூடு கட்டும் மரங்களை மனிதர்கள் வீடு கட்ட வெட்டியதால் தானே அவர்கள் வீட்டில் கட்டுகிறோம். இது போன்ற புல், பூடு, செடிகளில் கட்டினால் நாய், பூனை நம் குஞ்சுகளை பறப்பதற்கு முன் தின்று விடும் என்று தானே உயரமான பகுதியில் கூடு கட்டுகிறோம். இப்போது அதையும் தடுத்தால் நாம் எங்கு போவது?” என வேதனை மிகுந்து ஆண் குருவி சோர்ந்து படுத்திருந்த தன் இணையான பெண் குருவியுடன் கூறியது.

எவ்வளவு துரத்தினாலும் திருப்ப, திரும்ப வந்து போர்டிகோ மின் விசிரியில் கூடு கட்ட முயன்ற குருவிகளை துரத்த மனமின்றி விட்டு விட்டான் மிகன். குருவிகளும் ஆனந்தமாக கூடு கட்டி முட்டையிட்டன.

பிறந்த ஊருக்கு ஒரு வாரமாக சென்று இருந்து விட்டு வந்த மிகன் மனைவி மித்ரா ஆட்டோவில் வந்து இறங்கிய போது வீட்டுச்சாவிக்காக அலுவலகத்திலிருக்கும் கணவனுக்கு அலைபேசியில் அழைத்துச்சொல்லி விட்டு “வெயில் இப்படி வாட்டுதே…. மரங்கள் இல்லாததுனால காத்து வேற வரமாட்டேங்குது. அவரு வர்ற வரைக்கும் ஃபேனையாவது போடலாம்” என சுவிட்சை போட்ட மறு வினாடி போர்ட்டிகோ எங்கும் உடைந்த குருவி முட்டைச்சிதறல்கள். சாவி கொண்டு வந்த மிகன் முட்டைகளும், கூடும் சிதறிக்கிடப்பதைப்பார்த்து மனைவியிடம் சத்தமாகக்கத்திக்கோபப்பட்டான். 

“உனக்கு அறிவிருக்கா? நீயெல்லாம் ஒரு மனுசியா? மனமிறக்கமே இல்லாத அரக்கி….” என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளை அடுக்கியவன் சாவியை மனைவி முன் வீசி விட்டு சோகமாக கீழே அமர்ந்தவன் கண்களில் கண்ணீர் வடிந்தது. இதைக்கண்ட குருவிகளும் கத்திக்கதறின. மித்ராவும் கவலை கொண்டாள்.

“சாரீங்க…. என்னை மன்னிச்சிடுங்க. குருவி ஃபேன்ல கூடு கட்டுன விசயத்த நீங்க எனக்கு சொல்லியிருக்கனம். இல்லேன்னா சப்ளைய கட் பண்ணி வெச்சிருக்கனம். நான் தெரிந்திருந்தா ஃபேன் போடுவேனா….?” என கெஞ்சியபடி கூறிய பின் சாந்தமானான்.

இந்த சம்பவத்துக்குப் பின் வீட்டைச்சுற்றிலும் இருந்த சிறு பகுதியை குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏதுவாக மாற்றியமைத்து, ஃபேனில் கூடுகட்டுவதைத்தவிர்த்து அதற்கென அமைத்திருந்த இடத்தில் குருவிகள் கூடு கட்டி முட்டையிட்டுக்குஞ்சு பொறித்தன.

வெளியிலிருந்தும் பல குருவிகள் வந்து கூடு கட்ட ஆரம்பித்தன. நூற்றுக்கு மேற்பட்ட கூடுகள் வீட்டைச்சுற்றிலும் கட்டியிருப்பதை பலர் வெளியூரிலிருந்தும் வந்து ஆச்சர்யமாகப்பார்த்துச்சென்றனர். அவைகளுக்குத்தேவையான தண்ணீர், தானியங்களையும் வைத்தான் மிகன். அந்தப்பகுதியில் குருவி கூட்டு வீடு என மிகன் வீடு பிரபலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *