குமுதினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2025
பார்வையிட்டோர்: 43,143 
 
 

பகுதி-1 | பகுதி-2

செம்பைக் கையில் எடுத்தபோது கை நடுங்கியது. நெஞ்சின் படபடப்புத்தான் கையில் இறங்கியிருந்தது. நெற்றி வியர்வையைச் சால்வைத் துண்டால் துடைத்துக் கொண்டேன். கொஞ்ச நாட்களாக இப்படியான அதிகாலைக் கனவுகள் என்னை அடிக்கடி பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன. ‘நைட்மெயர்’ என்பதன் அர்த்தம் என்வென்று அனுபவப் பட்டபோது புரிந்தது.

இவளுக்காகவாவது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டும் என்ற அற்ப ஆசையில் கொஞ்சம் கூடக் குறையவில்லை. கொஞ்சக் காலத்தை ஓட்டிவிட்டால், எப்படியாவது இவளை யாருடைய கையிலாவது ஒப்படைத்து விட்டு நிம்மதியாகப் போய்விடலாம் என்ற நப்பாசைதான் இன்றுவரை என்னை நடைபிணமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றது.

அதிகாலைத் தூக்கம் கெட்டுப் போனதால் சாய்மனைக் கதிரையில் சரிந்தேன்.

இரவு முழுவதும் இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்த மழை சற்று ஓய்ந்திருப்பது போலத் தெரிந்தது. இப்பொழுதெல்லாம் மழையில் நனையவே பிடிப்பதில்லை. படுத்துக் கிடந்தால் பார்ப்பதற்கு யாருமில்லையே என்ற தனிமையின் விரக்தி வேறு. பிடிப்பே இல்லாத வாழ்க்கையாய் எதுவும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை என்றாகி விட்டது.

சாய்மனைக் கதிரையைவிட்டு, மெல்ல எழுந்து யன்னலைத் திறந்து வெளியே பார்வையைப் படரவிட்டேன். கீழ்வானம் கறுத்தே இருந்ததால் மழை இன்னமும் ஒரு பாட்டம் அடிக்கலாம் என்பதுபோல தூரத்து மின்னல் பயம் காட்டிக் கொண்டிருந்தது. முற்றத்தில் விழுந்த தாழ்வாரத் தண்ணீர், பள்ளக்காணி நோக்கி மெல்லிய நீரோடையாய் நெளிந்து கொண்டிருந்தது.

‘மழைவா வெய்யில் போ’ சின்னவயதில் சிறுவர்களாக இருந்த காலத்தில் கூட்டமாக ஒன்று சேர்ந்து வகுப்பறை வாசலில் நின்று பாடிய பாடல்கள் மழையைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தன. வாடைக் காற்று வந்தால் அந்த வெட்டை வெளியெல்லாம் ஓடியோடிப் பட்டம் பறக்கவிடுவதும், புழுதியில் புரளுவதும், மழை பெய்தால் மழையில் நனைந்து வெள்ளம் அலம்புவதும் சிறுவர்களாய் இருந்த எங்களின் அன்றாட நிகழ்வாய்ப் போய்விடும்.

சில சமயம் சிறுமிகளும் எங்களுடன் இணைந்து கும்மாளம் போடுவதுண்டு. அந்தநாள் ஞாபகம் அடிக்கடி வரும்போது, பல இனிய நினைவுகளும் கூடவே பின்னிப் பிணைந்து வரும். தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி, கார்த்திகை விளக்கீடு என்று பண்டிகைகள் வந்தால் சிறுவர்களாக இருந்த எங்களுக்குத்தான் கொண்டாட்டம். புத்தாடை அணிவது, பட்டாசு வெடிப்பதும், உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், ஊஞ்சல் ஆடுவது, போர்த்தேங்காய் அடிப்பதும் எங்களுக்குப் பிடித்த முக்கிய நிகழ்வாக இருக்கும். அந்த நாட்கள் இனி வருமா என்ற ஏக்கம் அடிமனதில் இன்னமும் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது.

யாராலுமே மறக்க முடியாத பள்ளிப் பருவத்து இனிய வசந்த காலங்கள் ஒருபக்கம், யுத்தம் வந்து எங்களிடம் பறித்தெடுத்த எங்கள் இளமைப் பருவத்தின் நினைவுகள் மறுபக்கம் என்று வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு இன்று இந்த வாழ்க்கையை வாழப்பழகிக் கொண்டாகி விட்டது.

இங்கே எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. மரக்கிளைகளில் கூடு கட்டிக் குதூகலமாய் வாழ்ந்து வந்த குருவிகளின் கூடுகள் எல்லாம் புயல் வந்து அடித்து உடைத்துக் கலைக்கப்பட்டது போல இனக்கலவரம் என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் கூடுகள் எல்லாம் சிதைக்கப்பட்டதால், அமைதியான இந்த மண் இப்போது பிணம் தின்னிக் கழுகுகளின் சுடுகாடாய் போய்விட்டது. கடந்த காலத்தை இரைமீட்டிப் பார்த்தால், பள்ளிப் பருவத்து இனிய நினைவுகளைத்தவிர, அதன்பின் வேறு எதுவுமே மனம்விட்டுச் சொல்லிச் சந்தோஷப்படும் படியாக இதுவரை அமையவில்லை. மனதில் ஏதோ இனம்புரியாத பயம் குடிகொண்டதால் எதையுமே மகிழ்வோடு பார்க்க முடிவதில்லை.

காலவோட்டத்தில் எல்லோருமே அமைதியாகிவிட்ட பிரமை எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்களைத் தவிர வேறுயாரும் வாயைத் திறக்கப் பயப்பட்டார்கள். அமைதியாய் வாழ்ந்த எங்கள் இனிய குடும்பங்களை சின்னாபின்னமாகச் சிதைத்தவர்கள் யார் என்பதைக் கூட அறிந்து கொள்ள இடம் தராத நிலையில் இந்த நாட்டு ஜனநாயகம் தூங்கிக் கொண்டிருந்தது. இல்லை, இல்லை தூங்குவதுபோல, இங்கே எதுவுமே நடக்காதது போல, உலக நாடுகளுக்கு நடித்துக் கொண்டிருந்தது.

‘தாத்தா எனக்கொரு கப்பல் செஞ்சுதாங்கோ’ சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தேன். கையிலே ஒரு காகிதத்தைப் பிடித்தபடி அருகே வந்து நின்றாள் எனது பேர்த்தி தரணி.

‘மேசையிலே சாப்பாடு எடுத்து வைச்சேனே சாப்பிட்டியாம்மா?’

‘சாப்பிட்டேன் தாத்தா, இப்ப எனக்கு ஒரு கப்பல் செஞ்சு தாங்கோ’ கையிவே இருந்த காகிதத்தை மீண்டும் நீட்டினாள்.

காகிதத்தை வாங்கி இரண்டாக மடிக்கத் தொடங்கினேன். காகிதத்தில் கப்பல் கட்டும் கலையைச் சின்ன வயதில் பள்ளியில் கற்றுக் கொண்டது இப்போது பயன்பட்டது. காகிதத்தை வாங்கி அதை இரண்டாக மடிக்கும் போதுதான் மங்கிய பார்வையில் அந்த வரிகள் கண்ணில் பட்டது, அதில் இருந்த எழுத்துக்கள், அதை நிச்சயம் செய்வதற்காகக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு மீண்டும் பார்த்தேன். அதேதான்..!

‘என்னூர்க் கொண்டைச் சேவலும்

காக்கையும் கூட மார்பில்

அடித்து மரண ஓலமிட்ட நாளது…!’

இந்த வரிகளை ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் மயிர்க்கூச்செறியும், பழைய நினைவுகளை மீட்டு, இதயத்தை உறைய வைக்கும். எப்படி மறக்க முடியும் என் வாழ்வில் வாழ்நாள் எல்லாம் வலியைப் புதைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியம்?

‘எங்கை எடுத்தனி இந்தப் புத்தகத்தை’ பதட்டத்தோடு குரலை உயர்த்தி நான் கேட்கவே தரணி பயந்து போனாள்.

முகத்தைப் பயந்தது போல வைத்துக் கொண்டு, புத்தகம் அடுக்கியிருந்த அலுமாரியை நோக்கிக் கையை மட்டும் நீட்டிக் காட்டினாள். புத்தக அடுக்குக் குலைந்து சில புத்தகங்கள் நிலத்தில் விழுந்து கிடந்தன.

‘என்னம்மா இது நான் பத்திரமாய் எடுத்து வைச்ச புத்தகமெல்லே, அதை எடுத்துக் கிழிக்கலாமா?’ என் குரலில் சற்று கடுமை இருந்தது.

அவள் மிரண்டுபோய் என்னைப் பார்த்தாள். தவறு செய்து விட்ட உணர்வில், அழப்போவதற்கான அறிகுறிகள் அவள் முகத்தில் தெரிந்தன.

‘சொறி தாத்தா’ விம்மலூடாக வார்த்தைகள் உதிர்ந்தன. தாயில்லாப் பிள்ளை என்று இவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டேனோ?

‘இனிமேல் என்னைக் கேட்காமல் அதில இருந்து ஒண்டும் எடுக்கவேண்டாம்’

கொஞ்சம் கண்டிப்போடு கூறவே, சரி என்று தலையை மட்டும் அசைத்தாள் தரணி.

நான் புத்தக அலுமாரியில் கவனமாக அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்த்தேன். நாட்டார் பாடல் இடம் பெற்றிருந்த வடஅமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆண்டு மலர் ஒன்று கீழே விழுந்து கிடந்;தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்.

நாங்கள் இருந்த இடம் நாலு பக்கத்தாலும் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் படகுகளுக்கும் எங்களுக்கும் நிறையவே தொடர்பு இருந்தது. வல்வெட்டித்துறை பாய்மரக் கப்பல்கள் அந்த நாட்களில் இங்கே வந்து போவது பற்றி அந்த நாட்டார் பாடல் குறிப்பிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, காற்று மாறும் நாட்களில் பாதுகாப்பிற்காக இங்கே கொண்டு வந்து படகுகளைக் கரையில் கட்டுவாதாகவும் குறிப்புகள் அதில் இருந்தன. முக்கியமான நாட்டார் பாடல் என்பதால் ஆவணமாக இருக்க வேண்டும் என்று இப்படியான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அந்தப் பாடலை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்

வந்து குவியுது பண்டமடி

வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்

வாருங்கோ கும்மி அடியுங்கடி

வத்தை சலங்கு கட்டுமரம் தோணி

வள்ளங்கள் வந்து குவியுதடி

எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது

எல்லாமே கொள்ளை லாபமடி!

கோலாட்டம், காவடி, கும்மி, கரகாட்டம் என்று எங்கள் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் நடனங்கள் பற்றியும், அந்த நாட்களில அனேகமாக முதியோர்கள் வெற்றிலை, பாக்குப் போடுவது வழக்கமாக இருந்ததைப் பற்றியும் இந்த நாட்டார் பாடல் எடுத்துச் சொன்னது.

அக்காலத்தில் சிகரட் பாவனையில் இல்லாததால் முதியவர்கள் சிலர் புகையிலையில் செய்யப்பட்ட கருப்பு நிறமான சுருட்டைப் புகைத்தார்கள். புகையிலை, வெற்றிலை யாழ்ப்பாணத்தில் நன்றாக விளைந்தது. வத்தை, சலங்கு, தோணி, வள்ளம், கட்டுமரம், டிங்கி, மச்சுவா என்றெல்லாம்

படகுகளைச் செல்லமாகப் பெயர் சொல்லி அழைப்பர். அதிலிருந்த ‘அன்னபூரணி’ கப்பலின் படம் கப்பல் கட்டிய தமிழர்களையும், கப்பலோட்டிய தமிழர்களையும் அவர்கள் படைத்த சாதனைகளையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

கட்டுமரம், அணைக்கட்டு போன்ற பல சொற்கள் தமிழில் இருந்துதான் ஆங்கில் மொழிக்குச் சென்றன என்பதை அகராதியில் உள்ள குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

இலங்கையின் வடபகுதியில் இருக்கும் மிகப்பழமை வாய்ந்த மாவிட்டபுரம் கோயில் மிகவும் பிரபலமானது. சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லி யாழ்ப்பாணம் வந்து வழிபட்ட இடம் மட்டுமல்ல வெற்றிலைக்குப் பெயர்போனதாகவும் இருந்தது. குதிரைமுகநோய் காரணமாக குதிரையின் முகவடிவம் போல முகக்கட்டிகளால் நீண்டு இருந்த முகத்தை மூலிகை மருந்தின் உதவியோடு நகுலேஸ்வரத் தீர்த்தத்தில் தினமும் குளித்து அழகிய முகத்தைப் பெற்றது போன்ற ஐதீகக் கதைகள் நிறையவே உண்டு. அதனால்தான் மா என்றால் குதிரை என்று பொருள் படும் என்பதால், ‘மா – விட்ட – புரம்’ என்ற பெயர் இந்தத் தலத்திற்குக் கிடைத்தது. சோழநாட்டில் இருந்து மாவை முருகக்கடவுளின் ஊருவச் சிலை வந்து இறங்கிய கசாத்துறை என்ற துறைமுகப் பட்டினம் காங்கேயன் துறையானது. தமிழர்கள் இப்படியான உண்மைச் சம்பவங்களை ஆவணப்படுத்தத் தவறியதால்தான் இவை எல்லாம் ஆய்வுகளுக்கு எடுபடாமல் ஐதீகக் கதை வடிவிலேயே விடுபட்டு விட்டன.

நான் கவனமாகச் சேகரித்து வைத்திருந்த இன்னுமொரு நூலான அந்த மாவிலிமலரில் இருந்துதான் அந்தக் காகிதத்தை அவள் கிழித்து எடுத்திருக்கிறாள். அந்த மலரின் அருமை இந்தக் குழந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் சோகவரலாறு ஒன்றை, வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாத துயரத்தை ஆவணமாக்கிய புத்தகமது. அதைக் கவனமாகப் பாதுகாத்து அடுத்த தலை முறையிடம் ஒப்படைக்க வேண்டியது எங்கள் கடமையல்லவா. அதற்காகத்தான் அதைப்பத்திரமாகப் பாதுகாத்து வைத்தேன். ஆனாலும் குழந்தை மேல் கோபப்படுவதில் அர்தமில்லை என்பதால், அவளைச் சமாதானப் படுத்தி வேறு ஒரு காகிதத்தை எடுத்து அவள் கேட்டபடியே கப்பல் செய்து கொடுத்தேன்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *