குமுதினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2025
பார்வையிட்டோர்: 46,376 
 
 

பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3

காகிதக் கப்பலைக் கையிலே வாங்கிக் கொண்டு முற்றத்தில் ஓடும் வெள்ளத்தில் மிதக்கவிடுவதற்காகத் துள்ளிக் கொண்டு வெளியே ஓடினாள் தரணி. மழையில் நனைந்து வருத்தத்தைத் தேடிக் கொள்வாளோ என்ற பயத்தில் எட்டிப்பார்த்தேன். அவளோ படியில் இருந்தபடி ஓடும் வெள்ளத்தில் எட்டிக் கப்பலை மிதக்க விட்டாள். அந்தக் காகிதக் கப்பல் மெல்ல அசைந்தாடி வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் பார்த்து தரணி மகிழ்ச்சியில் கைதட்டிச் சிரித்தாள். வெள்ளை மனசு படைத்த அந்தக் குழந்தை உள்ளத்தின் சோகம் அந்தச் சிரிப்பில் கரைந்து போயிருந்தது.

கள்ளம் கபடமற்ற அந்தக் குழந்தையால் எல்லாவற்றையும் மறந்து சிரிக்க முடிகின்றது, ஆனால் நடந்த சம்பவங்களை என்னால் முடியவில்லையே!

காகிதக் கப்பல் முற்றத்து வெள்ளத்தில் தத்தளிப்பதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் எரிமலைபோல் குமுறிக் கொண்டு வெளியே வந்தன. இதேபோலத்தான் தரணியின் அம்மா செல்வியும் சின்னவயதிலே ஏதாவது செய்துவிட்டு ‘அப்பா இங்கே பாருங்களேன்’ என்று கைகெட்டிச் சிரிப்பாள். அந்தச் சிரிப்பில் மயங்கிய அந்த நாட்கள் எங்கே?

அப்போது நான் அரசாங்க உத்தியோகம் காரணமாக கொழும்பிலே இருந்தேன். எல்லா இனத்தவரும் வேற்றுமை இன்றி ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். அரசியல் வாதிகளால் பேரினவாதம் பேசினால்தான் அரசாள முடியும் என்றதொரு நிலை நாட்டில் உருவாக்கப்பட்டது. அது உச்சக் கட்டத்தை அடைந்த போது, 1958ம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி எங்களால் மறக்க முடியாத ஒரு தினமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து வருடங்கள் கூட முடியாத நிலையில் பேரினவாதம் நாட்டில் தலை தூக்கியிருந்தது. பேரினவாதிகளால் தமிழ் இன ஒழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, உத்தியோக நிமிர்த்தம் வெளி மாகாணங்களில் தங்கி இருந்த நிராயுத பாணியான தமிழர்கள் பலர் பாதிக்கப்பட்டது போல, நானும் எனது மனைவியும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உயிருக்குப் பயந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒளித்து ஓடினோம்.

ஓளிவதற்கு இடம் கிடைக்காததால், அகதி முகாமில் தஞ்சம் புகுந்தோம். சற்றுக் கலவரம் ஓய்ந்ததும் வடக்கே இருந்த எங்கள் சொந்த மண்ணுக்கு எங்களை அனுப்பி வைத்தார்கள். அன்று எல்லாவற்றையும் இழந்து அகதிகளாய் வெறுங்கையோடு சொந்த மண்ணுக்கு வந்த நினைவுகள் இன்னமும் எங்கள் மனதை விட்டு அகலவில்லை. நிம்மதியாய்க் குடியிருக்க வடக்குக், கிழக்கில் நாங்கள் பரம்பரையாய் வாழ்ந்த சொந்த மண்ணாவது இருக்கிறதே என்ற ஒரே ஒரு ஆறுதல்தான் அப்போது எங்களுக்கு மிஞ்சி இருந்தது.

வேலையை இழந்து வடக்கில் இருந்த சொந்த மண்ணில் வந்து குடியிருந்தோம். இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும், கொஞ்சம் ஆறுதல் தருவதுபோல அந்த நிகழ்வு அமைந்தது. ஆமாம், எத்தனையோ பாதிப்புகளுக்கு மத்தியில் நகர்ந்து

கொண்டிருந்த எங்கள் குடும்ப வாழ்க்கையின் வசந்தமாய் ஆசை மகள் செல்வி வந்து பிறந்தாள்.

எங்கள் குடும்பம், எங்கள் வாழ்க்கை, எங்கள் இனம், எங்கள் மொழி என்று நாங்கள் சொந்த மண்ணில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தோம். காலம் கனிந்ததும் மகள் செல்விக்குத் திருமணம் செய்து வைத்தோம். அவர்களும் அரச உத்தியோகம் என்பதால் கொழும்பில் குடியேறினர். காலம் மெல்ல நகர்ந்தது, ஆனால் பேரின வாதிகளால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தொடர்கதைபோல 1958; ஆம் ஆண்டு எங்களுக்குக் கொழும்பில் என்ன நடந்ததோ, 1977 ஆம் ஆண்டு எங்கள் நண்பர்களுக்கு என்ன நடந்ததோ, அதே கதைதான் எனது மகளுக்கும் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் மீண்டும் நடந்தது. அதனால்தான் அந்த மாதத்தைக் ‘கறுப்பு யூலை’ என்று உலகமே சொல்கிறது. தொடக்கத்தில் தமிழர்களின் உடமைகளைக் கொள்ளை அடித்தவர்கள் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் உயிர்க் கொலைகளிலும் ஈடுபட்டனர்.

தாய்மை அடைந்த நிலையில் இருந்த செல்வியும், அவளது கணவனும் மீண்டும் அடைக்கலம் தேடி ஓடவேண்டி வந்தது. இறுதியில் அகதி முகாமிற்குச் சென்று தஞ்சமடைந்தார்கள். தரைவழிப்பாதை ஆபத்து நிறைந்தது என்பதால், இந்தியாவில் இருந்து உதவிக்கு வந்த ‘நங்கூரி’ என்ற கப்பலில் கொழும்பில் இருந்து வடமாகாணத்தில் இருந்த துறைமுகப்பட்டினமான காங்கேயன்துறைக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். அழகன் முருகனுக்கு காங்கேயன் என்றொரு பெயரும் இருக்கின்றது. மாவையில் குடிகொண்டிருக்கும் மாவைக்கந்தன் இங்கே வந்து கரை இறங்கியதால், இந்த இறங்குதுறை காங்கேசந்துறை என்று பெயர் பெற்றது.

நாட்டில் அமைதி திரும்பி மருமகன் மீண்டும் உத்தியோக நிமிர்த்தம் கொழும்பு சென்றார். செல்வியோ கொழும்பு செல்ல மறுத்து விட்டாள். 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் அவள் நேரடியாகப் பாதிக்கப் பட்டதால், அது அவளை நிறையவே மனரீதியாகப் பாதித்திருந்தது. மகள் செல்வியும், பேர்த்தி தரணியும் எங்களோடு ஊரில் இருந்ததால் எங்களுக்கும் பொழுது நன்றாகவே சென்றது. விடுமுறைகள் கிடைக்கும் போதெல்லாம் மருமகன் கொழும்பில் இருந்து ஓடியோடி வருவார்.

சொந்த மண்ணிலே எந்தப் பயமும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்த போதுதான் மீண்டும் ஆக்கிரமிப்பு இராணுவம், கேட்பார் யாருமில்லை என்ற துணிவில் தமிழரின் சொந்த, பாரம்பரிய மண்ணில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. விரும்பிய இடமெல்லாம் முகாம்களை அமைத்து, ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர் வாழ்ந்த நிலங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு அரசும் ஆட்சி மாறும் போதெல்லாம் சிறுபான்மையினரான தமிழர்கள் தான் பெரிதாகப் பழி வாங்கப் பட்டார்கள்.

கொழும்பிலே தனித்துப் போயிருந்த கணவனை நினைத்து செல்வி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள். இப்படித்தான் அன்று இரண்டாவது குழந்தையை வயிற்றிலே சுமந்து கொண்டிருந்த செல்வியின் மனசும் உடம்பும் சோர்ந்து போயிருந்தது. தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கு ஆயிரமாயிரம் கனவுகள், கற்பனைகளோடு வாழ்ந்து சாதிக்கும் ஒரு மகிழ்ச்சியான காலம். அதைக்கூட நிம்மதியாய் அனுபவிக் முடியாமல் எத்தனை பெண்கள் இந்த மண்ணில் அல்லற்பட்டார்கள் என்பதைக் காலம்தான் எடுத்துச் சொல்லும்.

‘என்னம்மா செல்வி, ஏன் படுத்திருக்கிறாய், சுகமில்லையா?’

‘இல்லையப்பா ஒன்றுமில்லை!’ செல்வி மெல்ல எழுந்து உட்கார்ந்தபடி பதிலளித்தாள். செல்வி ஒருநாளும் இப்படிச் சோர்ந்து போய்ப் படுத்திருந்ததில்லை. அவள் முகம் வாடிப்போயிருந்தது.

‘கொண்டுபோய் வைத்தியரிடம் காட்டு என்று சொன்னால் கொஞ்சமும் கேட்கிறாள் இல்லை, நான் சொல்லி அலுத்துப்போச்சு. நீங்களாவது சொல்லுங்கோ..!’ மனைவி சமையலறையில் இருந்தபடி முணுமுணுத்தாள்.

செல்வியின் வேதனை எனக்குப் புரியும். தாய்மைக் காலத்தில் கணவன் அருகே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வித தப்பும் இல்லை. ஆனாலும் என்ன செய்வது பொருளாதார நிலை காரணமாக அவ்வப்போது கணவனைப் பிரிந்தே இருக்க வேண்டிவந்தது.

மனைவியிடம் தரணியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு செல்வியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு விருப்பம் இல்லாமல்த்தான் அவள் வெளிக்கிட்டு என்னோடு வந்தாள். எங்கள் வீடு இருந்த இடம் வசதி குறைந்த சிறிய தீவு என்பதால், வைத்திய சாலைக்கு நீண்ட தூரம் படகு மூலம் செல்ல வேண்டும். எங்கள் தீவு ஒடுங்கிய நீண்ட தீவாக இருந்ததால், நெடுந்தீவு என்ற காரணப் பெயர் வந்தது. வீட்டிற்கு அருகே உள்ள மாவிலித்துறையில்தான் நாங்கள் படகேறினோம். படகுச் சவாரி என்றால் செல்விக்கு கொள்ளை ஆசை. படகுச் சவாரி என்றதும் தான் தாய்மைக் கோலத்தில் இருப்பதைக்கூட மறந்து ஒரு துள்ளல் துள்ளிக் கொண்டு வந்தாளே அன்று, அந்தக் காட்சிதான் இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது. மகிழ்ச்சியின் எல்லை தொட்ட அவளை நான் பார்த்த கடைசிப் பார்வை அதுதான் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

‘ஐயா வாங்க’ என்று வரவேற்ற படகோட்டி வழிவிட்டு விலகி நின்றான். ஊரிலே எங்கள் குடும்பத்திற்கு மதிப்பிருந்ததால் எங்கு சென்றாலும் இப்படியான

மரியாதைகள் அடிக்கடி கிடைப்பது வழக்கம். நாங்கள் படகில் ஏறி உட்கார்ந்தோம். தெரிந்த பல முகங்கள் எங்களைப் பார்த்து குசலம் விசாரித்தன. செல்வியின் சிரித்த முகத்தைவிட தாய்மையின் வெளிப்பாடுதான் அங்கே அதிகம் தெரிந்தது.

‘என்ன பிள்ளையாம்?’

‘தெரியாது!’

‘வயிற்றைப் பார்க்க ஆம்பிளைப் பிள்ளை போலதான் இருக்கு, ஆசைக்கு ஒரு பெண் பெத்திட்டாய், இனியென்ன ஆஸ்திக்கு ஒரு ஆண் கிடைத்தால் போதும்தானே?’

செல்வியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. இரண்டு தலை முறையாக ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பதால் அதை நினைத்து, செல்வி வெட்கப்பட்டுச் சிரித்தாள்.

குமுதினி என்ற பெயரைக் கொண்ட இந்தப் படகைத்தான் தினசரி போக்குவரத்திற்குப் பயன்படுத்தினார்கள். சாதாரண ஒரு படகின் பெயர் இன்று எல்லோராலும் அறியப்பட்ட பெயராக இருப்பதற்கு அன்று நடந்த ஒரு சம்பவம்தான் காரணமாக இருந்தது. நிறையப்பேர் உட்கார்ந்து பயணம் செய்யக்கூடிய வசதி படைத்ததாகப் படகு இருந்தது. காற்றிலே பறக்கும் விமானம் போல தண்ணீரைக் கிழித்துக் கொண்டு குமுதினி மிதந்து செல்லும் அழகே அழகுதான் என்று இதில் பயணம் செய்தவர்கள் சொல்வதுண்டு. ஒரு தாயைப்போல எங்களைத் தினமும் சுமந்து செல்வதால்தான் குமுதினி என்று பெண்ணின் பெயரை அந்தப் படகிற்கு வைத்தார்களோ தெரியாது.

அலைகளின் தாலாட்டில் குமுதினி மெல்ல ஆடி அசைந்து தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அருகே இருந்த நயினாதீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நயினாதீவில்தான் புகழ்பெற்ற நாகபுசணி அம்பாள் குடியிருந்தாள். கடல் காற்று இதமாக முகத்தைத் தழுவ, செல்வியின் கூந்தல் முன் நெற்றியில் விழுந்து முகத்தை மறைக்க, அதை லாவகமாக அவள் பின்தள்ளி விட்டாள். காலை நேரத்து தெளிந்த வானம்போல, தாய்மையின் பூரிப்பு அவளது முகத்தில் பளீச்சென்று தெரிந்தது. அதைவிட அவளது புன்னகை, என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது, அப்படி ஒரு வசீகரம். வசதிகளோடு கூடிய வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லாததால்தான் நீண்ட தூரம் படகில் பயணம் செய்துதான் யாழ்ப்பாண நகரத்தில் இருந்த பெரிய ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஊர் மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. சிரித்த முகங்களோடு கலகலப்பாய்ப் படகில் பயணம் செய்த அவர்களுக்கு நடுக்கடலில் விதி என்ற மாயை காத்திருந்தது அப்போது தெரியாது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *