குப்பை அசுரன்!
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 25, 2024
பார்வையிட்டோர்: 1,774
நாடு முழுவதும் ஒரே பேச்சு… பெரும் பரபரப்பு. கடற்கரைப் பகுதியில் திடீர் திடீர் என விநோதமான உயிரினங்கள் வருகின்றன. மக்களை மிரட்டுகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன எனப் பல்வேறு ஆராய்ச்சி யாளர்கள், பல்வேறு கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். எனினும், அவற்றில் இருக்கும் ஒற்றுமை இதுதான்.
குப்பை அசுரன்!
கடலுக்குள் சேர்ந்த குப்பைகளில் பல கிருமிகள் உருவாகி, சில குழுக்களாக ஒன்றுசேர்ந்து, குப்பைகளுக்கு உயிர் கொடுத்துள்ளன. கடலில் சேர்ந்த எண்ணெய்க் கழிவுகளும் நச்சு வாயுக்களும் இணைந்ததில், குப்பைகளிலிருந்து குப்பைகளையே உண்டு வாழும் சிற்றுயிர்கள் முளைத்துள்ளன.
மீன்கள், ஆமைகள் என முன்னர் வாழ்ந்த அனைத்து உயிர்களும் ஏற்றச் சூழலின்றி இறக்க ஆரம்பித்துள்ளன. அதனால், வித்தியாசமான ஜந்துக்களின் பரிணாம வளர்ச்சி வேகமாகி இருக்கிறது. வளர்ச்சி அடைந்த குப்பை விலங்குகள், அடிக்கடி கரைக்கும் வருகின்றன. அவற்றின் வருகையும் தாக்குதலும் அதிகமாகி வருகிறது.
மனிதர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘இந்தப் புது உயிரினங்களை எப்படி அழிப்பது? இப்படி வளர்ந்துகொண்டே போனால், கடல் உயிரினங்கள் போல மனித இனமும் அழிந்துவிடுமே’ என அஞ்சினர்.
ஒரு பறவையைப் பற்றிய விவரங்களைக் கணினியில் தேடிக்கொண்டிருந்தாள் கவிநிலா. அந்தச் செய்தியையும் பார்த்தாள். அந்தப் புது ஜந்துக்கள் எங்கு வாழ்ந்தாலும், உணவுக்குக் குப்பைகளைச் சார்ந்தே இருப்பதை கவனித்தாள்.
தோட்டத்தில் அமர்ந்து இதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது ஆல்பட்ராஸ் என்ற வண்ணத்துப்பூச்சி அவளிடம் வந்தது.
“கவி… என்ன யோசிச்சுட்டிருக்கே?” எனக் கேட்டது.
“கடல் முழுக்கப் புதுசா பரவிட்டிருக்கும் புது ஜந்துக்கள் பற்றித்தான். எப்படி இதெல்லாம் வந்திருக்கும்? அவை குப்பைகளைத்தான் சாப்பிடுது. வேற எதையுமே சாப்பிடறதில்லை” என்றாள் கவிநிலா.
“கவி… இது புரியலையா உனக்கு? நான் எப்படி உன்கிட்ட வந்தேன்?”
“உன்னோட வீட்டை அழிச்சு கட்டடம் கட்டிட்டாங்க. அதனால், இடம் தேடி வந்தே!”
“என் வீட்டை இடிச்சதால் என்ன பிரச்னை வந்துச்சு?”
“உனக்குத் தேவையான உணவு கிடைக்கலை. நீ வாழத் தகுந்த சூழல் அங்கில்லை” என்றாள்.
“அதேதான் இன்னோர் உயிர் வாழ தகுந்த சூழல் இருக்கணும். இந்த ஜந்துக்கள் வாழ நிறைய குப்பைகள் இருக்கணும். அதைத்தான் சாப்பிடுதுங்க. நான் செடிகளிலேயே வாழ்ந்து அதிலேயே உணவும் தேடிக்கிற மாதிரி’’ என்று விளக்கியது ஆல்பட்ராஸ்.
“அப்போ நமக்குத் தேவையான உணவு, தேவையான சூழல் இரண்டையும் கொடுக்கிற மாதிரி ஓரிடம் இருந்தால் மட்டுமே வாழமுடியும். அதேமாதிரி இந்த ஜந்துக்களும். குப்பைகள் இல்லைன்னா பழைய நிலைக்கு வந்துரும். மறுபடியும் கடல் முழுக்க மீன்களும் மற்ற நல்ல உயிர்களும் வளர்ந்துரும். சரியா?” எனக் கேட்டாள் கவிநிலா.
“சரியா சொன்னே. ஒவ்வோர் உயிருக்கும் இங்கே தொடர்பிருக்கு. அது உடையும்போது, புதுசா வேற ஓர் உயிரினம் வந்து எல்லாமே மாறும். ஒண்ணு, புதுசா வரும் உயிரினத்தால் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் உருவாகி அழியும். இல்லைன்னா, அந்தச் சூழலையே மாற்றி அங்கே வாழ்ந்துக்கொண்டிருக்கும் மற்ற உயிர்களை அழிச்சுரும்” என்றது ஆல்பட்ராஸ்.
“ஆக, இந்த ஜந்துக்கள் உருவாக, நாம போட்ட பிளாஸ்டிக், அணுக்கழிவு மாதிரியான குப்பைகளே காரணம்னு சொல்றே” என்றாள் கவிநிலா.
“ஒரு திருத்தம்… நாம போட்டதில்லே; நீங்க போட்டது. நான் மனிதன் இல்லேப்பா. ஒரு வண்ணத்துப்பூச்சி. எப்பவும் இயற்கைக்கு நல்லதே செய்யும் உயிரினம். மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிரினமும் செயற்கைக் குப்பைகளை உருவாக்கறதில்லே” என்ற ஆல்பட்ராஸ் குரலில் கிண்டல்.
கவிநிலா தலைகுனிய, “வருத்தப்படாதே… நீ மற்றவர்களை மாதிரி இல்லே. இப்போ நீ செய்யவேண்டியது ஒண்ணு மட்டும்தான்.”
“என்ன செய்யணும்?”
“குப்பைகள் சேர்ந்துட்டே போறதால்தான் ஜந்துக்கள் வாழ அதிக வசதி கிடைக்குது. மற்ற உயிரினங்கள் அழிஞ்சுட்டிருக்கு. அதுங்க சாப்பிட குப்பைகளே கிடைக்கலைன்னா…”
“ஆனா, குப்பைகள் சேராமல் இருக்காதே. எப்படியும் குப்பை உருவாகிட்டேதான் போகும். எப்படி இதைச் சரிசெய்யறது?”
“இப்போ எங்களை எடுத்துக்கோ. எங்க கழிவும் இந்தத் தோட்டத்தில் சேர்ந்துட்டே இருக்கும். அது ஏன் கெட்டது செய்யலை?” என்ற ஆல்பட்ராஸின் கேள்விக்கு விடைத் தெரியாமல் விழித்தாள் கவிநிலா.
“ஏன்னா, எங்க கழிவுகள் மண்ணுக்கு உரமாகுது. இயற்கையாக உற்பத்தியாகும் எந்தக் குப்பையையும் இயற்கையே எடுத்துப் பயன்படுத்திக்கும். மனிதர்கள் அதற்கு விரோதமா, ஒவ்வாத குப்பைகளை உற்பத்தி பண்றீங்க. அதை நிறுத்தினால் எல்லாம் சரியாகிடும்” என்றது ஆல்பட்ராஸ் வண்ணத்துப்பூச்சி.
“சரிதான். சாப்பிட குப்பையே இல்லைன்னா அதுங்க அழிஞ்சு சுற்றுச்சூழலும் பழைய நிலைமைக்கு வந்துரும். ஆனால், நான் மாறலாம். எல்லாரும் மாறுவாங்களா?” எனக் கேட்டாள் கவிநிலா.
“முதலில் நீ மாறிக்கோ கவிநிலா. உன்னைச் சுற்றி இருக்கிறவங்களுக்கும் இதைச் சொல்லு. அந்த ஜந்துக்களை அழிக்கும் முயற்சியை அரசாங்கம் செஞ்சுட்டிருக்கு. இனி உருவாகாமல் இருக்க, உனது பங்காக மறுசுழற்சி பண்ணமுடியாத குப்பைகளைச் சேர்க்காதே. இப்படி ஒவ்வொரு தனி மனிதனும் முடிவெடுத்தால் எல்லாமே மாறும்” என்றது ஆல்பட்ராஸ்.
“நன்றி ஆல்பட்ராஸ். இந்த நிமிஷத்திலிருந்தே அதற்கான வேலையில் இறங்கறேன்” என்றாள் கவிநிலா.
“கவி… அங்கே யார்கிட்டே பேசிட்டிருக்கே. சீக்கிரம் வா, கடைக்குப் போய்ட்டு வருவோம்” என அழைத்தார் அம்மா.
உள்ளே ஓடிய கவிநிலா, “அம்மா, பை எடுத்துக்கலையா? கை வீசிட்டுப்போய் நாம சேர்த்த பிளாஸ்டிக் கவர்கள் போதும். இனி பையோடு போவோம்” என்றபடி, திரும்பிப் பார்த்தாள்.
புன்னகையுடன் சிறகசைத்தது ஆல்பட்ராஸ்.
– சுட்டி விகடன், டிசம்பர் 2018.