குந்தளப் பிரேமா






(1951ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18
13. மனம் திறந்தது
குந்தளத்துக்கு சங்கரி உறுதி கூறிய அதே சமயத்தில் “நிச்சயமாக! சந்தேகமே வேண்டாம்!” என்றார் வேறொருவர் வேறோரு தேசத்தில்!

லீலாவுக்கும் நடராஜனுக்கும் இதற்குள் சிறப்பாகக் கல்யாணம் நடந்தேறிவிட்டது. கல்யாணத்துக்கு இந்தியாவிலிருந்து. மோகனும் வந்திருந்தான். அவனும் ரமணியும் போட்டி போட்டுக்கொண்டு விருந்தினர்களை உபசரித்தார்கள். ரமணியைப் போலவே பிரேமாவும் இந்தக் கல்யாணத்தில் விசேஷ ஊக்கம் காட்டினாள். அந்தக் கல்யாணம் சாதாரணக் கல்யாணமாயில்லை. ஒரு பெரிய கலைவிழாவைப் போலவேயிருந்தது. கல்யாணத்தின் முதல் நாளும் மறு நாளும் அருமையான கச்சேரிகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தினர் தமிழ்மொழியில் மக்களுக்கு ஒரு புதிய பற்றுதலை உண்டு பண்ண ஒரு அற்புதமான கற்பனை நாடகத்தை எழுதி நடித்துக் காட்டினார்கள்.
இலங்கைப் பத்திரிகைகளெல்லாம் இக் கல்யாணத்தையும் அத்துடன் நடந்த கலை விழாவையும்பற்றி பல பத்திகள் எழுதியிருந்தன. நவலங்காவின் அட்டைப்படம் லீலா நடராஜன் படத்தைத் தாங்கிவந்தது.
கல்யாணத்துக்கு வந்திருந்தவர்களெல்லாம் நவலங்காவையும் அதன் ஆசிரியர் ரமணியையும் வானளாவிப் புகழ்ந்தார்கள். இந்தப் புகழ்ச்சி சிலசமயங்களில் ரமணிக்கு மிகுந்த சங்கடமாகவுமிருந்தது. ரமணி நிற்குமிடங்களிலெல்லாம் பிரேமாவும் நின்ற பொழுது இருவரையும் சேர்ந்தாற்போல ஏற இறங்க சிலர் பார்த்ததோடு, ரமணி யாரென்பதை அறியாத ஒரு கிழவர் “இந்த தம்பதிகள் யார்?” என்றும் கேட்டுவிட்டார். அதைக்கேட்டு பிரேமா லஜ்ஜையுடன் அங்கிருந்து ஓட முயற்சித்தாள். ஆனால் பக்கத்தில் நின்ற லீலா அவளை விடவில்லை.
“என்னடி வெட்கம்?” என்றைக்காவது ஒரு நாள் ரமணியும், நீயும் அப்படி ஆகப்போகிறவர்கள் தானே! பெரியவர்கள் வாக்கு பலிக்குமென்பார்கள்! தாத்தா வாக்கு அப்படியே பலிக்கவேண்டும்!” என்று லீலா சொல்லிய பொழுது பக்கத்திலிருந்தவர்கள் கொல்லென்று சிரித்துவிட்டார்கள். இது மாதிரிப் பல தர்மசங்கடமான கட்டங்களிலிருந்து ரமணி தப்ப வேண்டியதாயிற்று.
உண்மையில் கல்யாணத்தின்பொழுது அவன் உடல் தான் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்ததே தவிர அவன் மனம் முழுவதும் நூற்றுக்கணக்கான மைல்களுக் கப்பாலிருந்தது. மணப்பலகையில் உட்கார்ந்திருந்த லீலாவின் ஸ்தானத்தில் குந்தளத்தையும், நடராஜனின் ஸ்தானத்தில் தன்னையும், உட்கார வைத்து அவன் சிந்தித்தான். இந்தப் பாக்கியம் என்றைக்காவது ஒரு நாள் நமக்குக் கிட்டுமா என்று நினைத்த பொழுது ரமணிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது.
இரண்டு வாரங்கள் கழிந்தன. ஒரு நாள் லீலாவும் நடராஜனும் மாலை சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த பொழுது அவர்களுடைய கல்யாணப் படத்தைத் தாங்கி வந்த நவலங்கா பத்திரிகை மேஜையின் மீது கிடந்தது லீலாவின் கவனத்தைக் கவர்ந்தது.
“இது மாதிரி பிரேமா-ரமணி படம் எப்பொழுதுதான் வெளிவரப்போகிறதோ?” என்றாள் லீலா.
“குந்தளப்பிரேமா கதையின் தலைப்பைப்பற்றி நான் நினைப்பது சரியாயிருந்தால் அதிசீக்கிரத்தில் அவர்களுடைய திருமணக்கோலப் படத்தையும் நவலங்காவில் பார்க்கலாம். நிச்சயமாக! சந்தேகமே வேண்டாம்!” என்றான் நடராஜன்.
“எனக்கு என்னவோ வரவர நம்பிக்கை குறைகிறது. பிரேமா, பாவம், ரமணியிடம் உயிரையே வைத்திருக்கிறாள். எப்பொழுதும் ரமணியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் தான் அவள் மனம் சந்தோஷப்படுகிறது. அவள் புத்தகங்களைப் படித்து எவ்வளவு மாதங்களாயிற்று தெரியுமா? ரமணியின் கதை தவிர வேறு எதையும் அவள் சமீபத்தில் படித்தது நான் பார்த்ததில்லை. ரமணி எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே மனப்பாடம் பண்ணிவைத்திருக்கிறாள். ஆனால்….”
நடராஜன்: ஆனால் என்ன?
லீலா:- ஆனால் பிரேமாவிடம் ரமணிக்கு கொஞ்சமும் நாட்டமிருப்பதாகத் தெரியவில்லை.
நடராஜன்:- பிரேமாவிடம் அவனுக்கு வெறுப்பு என்கிறாயா?
லீலா:- வெறுப்பு என்று சொல்லவில்லை. இருவரும் அந்நியோன்யமாகத்தானிருக்கிறார்கள். ஆனால் அந்த அந்நியோன்யம் சகோதரன் சகோதரிக்கிடையிலுள்ள அந்நியோன்ய பாவமாயிருக்கிறதே தவிர காதலென்று கூற முடியாது. ரமணி ஏதோ ஒரு பெரிய துறவி மாதிரி நடந்து கொள்ளுகிறான். எப்பொழுதாவது ரமணியும் பிரேமாவும் தனித்திருக்க வேண்டிய சந்தர்ப்ப மேற்பட்டால் அவளுடன் தனித்திருக்க சங்கோஜமோ அல்லது வேறு என்ன கார ணமோ கொண்டு அவசர வேலையிருப்பதாகச் சொல்லிவிட்டு நழுவி விடுகிறானாம்.
நடராஜன்:- அது உனக்கு எப்படித் தெரியும். பிரேமா சொன்னாளா?
லீலா:- ஆமாம்! வேறு யார் சொல்லுவார்கள்? அவளை நினைத்தால் என் மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது தெரியுமா? ரமணி ஏன் இப்படிப் பித்துப்பிடித்த மாதிரியிருக்கிறா னென்பதுதான் பெரிய புதிர் மாதிரியிருக்கிறது.
நடராஜன்:- பிரேமாவுடன் தனித்திருக்க நேரிட்டால் ஓடிப்போய் விடுகிறானென்றா சொல்கிறாய்? இருக்கட்டும் பார்க்கலாம். இதோ பார் லீலா! நான் சொல்லுகிறபடி செய்வாயா?
லீலா:- என்ன?
நடராஜன்:- இன்றிரவு நாம் லைலா மஜ்னு சினிமாவுக்குப் போகிறோம், என்ன? எப்படியாவது நீ பிரேமாவை அழைத்து வந்துவிட வேண்டும். ரமணி வருகிறானென்று சொல். கண்டிப்பாக அவளும் வருவாள். ரமணியை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.
அவ்வாறே அன்றிரவு சினிமாவுக்கு போவதென்று ஏற்பாடாயிற்று. நடராஜன் வற்புறுத்தியதின் பேரில் ரமணி படம் பார்ப்பதற்கு வரச் சம்மதித்தான். ரமணி வருகிறா னென்றவுடன் பிரேமா தடையின்றி உடனே தானும் வர ஒப்புக்கொண்டாள். “பிரேமா! இன்று ஒரு பெரிய தமாஷ் நடக்கப்போகிறது? நல்ல உடையணிந்து வரவேண்டும் பார்த்துக் கொள். எல்லாம் உன்னுடைய நன்மைக்குத்தான் சொல்லுகிறேன்” என்றாள் லீலா.
பிரேமா:- அப்படியென்ன தமாஷ்! அதற்கும் நான் நல்ல உடையணிந்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?
லீலா:- இப்பொழுது சொன்னால் ரஸனை போய்விடும் நீயே நேரில் பாரேன்!
இரண்டு ‘பாக்ஸ்’ ஸீட்டுகளை நடராஜன் முன்னேற்பாடுகளுடன் அமர்த்திக்கொண்டு வந்தான்.
நால்வரும் சினிமாக் கொட்டகைக்குள் நுழைந்தவுடன் ‘இதோ பார் ரமணி! நாங்கள் புதுமணத்தம்பதிகள்! எங்களைப் பிரித்து வைத்தால் உனக்குத்தான் பெரிய பாவம்! லீலாவைத் தனியாகவிட்டு உன்னுடன் உட்கார மாட்டேனப்பா!’ என்றான் நடராஜன்.
இது ரமணிக்குப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. பிரேமாவையும் லீலாவையும் ஒரு ‘பாக்ஸில்’ உட்கார வைத்து தன்னுடன் நடராஜன் உட்காருவானென்று ரமணி எண்ணிக் கொண்டிருந்தான். எதிர்பாராமல் நடராஜன் திட்டம் வேறு விதமாயிருந்தது ரமணியைத் திகைக்கச் செய்ததுடன் தர்ம சங்கடமான நிலைமையையும் உண்டு பண்ணியது. ரமணியின் பதிலை எதிர்பார்க்காமலே ‘ஏன் நிற்கிறாய் லீலா! வா போவோம் நம் இடத்துக்கு!’ என்று சொல்லி லீலாவை தன்னுடைய பாக்ஸிற்கு நடராஜன் அழைத்துக்கொண்டு போய் விட்டான்.
லீலா போகும்பொழுது ‘பிரேமா! மிஸ்டர் ரமணியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்! அடுத்த வாரம் நவலங்கா வர வேண்டும். அது மட்டுமில்லை! குந்தளப்பிரேமா கதையின் முடிவும் தெரியவேண்டும்!’ என்று கிண்டலாகச் சொல்லிக் கடைக்கண்ணால் ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்துவிட்டுப் போனாள்.
தனித்துவிடப்பட்ட பிரேமாவுடன் உட்கார மறுத்தால் அவளை அவமதிப்பதாயிருக்குமென்று அஞ்சி நெருப்பின் மீது நடப்பதைப் போன்ற உணர்ச்சியுடன் பிரேமாவுடன் தன்னுடைய ‘பாக்ஸிற்கு’ச் சென்று அதன் கதவை மூடிக்கொண்டான். சிறிது நேரத்தில் விளக்குகளும் அணைக்கப்பட்டு, படம் ஆரம்பமாயிற்று.
சினிமாக் கொட்டகையில் விளக்குகளெல்லாம் அணைந்து படம் ஆரம்பமானவுடன் வெள்ளித்திரையைத் தவிர மற்ற இடம் முழுவதும் ஒரே இருள்மயமாயிருந்தது. கீழ்த்தளத்திலாவது வெள்ளித்திரையின் வெளிச்சம் சிறிது பிரதிபலித்தது. ஆனால் ரமணியும் பிரேமாவும் உட்கார்ந்திருந்த பெட்டி நாலாபுறமும் மூடப்பட்டு திரையைப் பார்ப்பதற்கு மட்டும் துவாரங்களுடையதா யிருந்தபடியினால் பெட்டிக்குள் மையிருட்டு நிலவியது.
ரமணியும் பிரேமாவும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒருவர் பக்கத்தில் ஒருவர் இருப்பது அவர்கள் விடும் சுவாசத்தில்தான் தெரிந்தது. ரமணி வெள்ளித் திரையைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். பிரேமா இமை கொட்டா மல் அவனிருந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் மனம் தீவிரமாக வேலை செய்தது, இது மாதிரி இருவரும் தனித்திருக்கும் சந்தர்ப்பத்தை நானே ஏற்பாடு செய்திருப்பே னென்று ரமணி நினைப்பானோ என்றெண்ணிய பொழுது அவளுக்கு மிகுந்த லஜ்ஜையாயிருந்தது! அரைமணி நேரமாகியும் இந்த மனிதன் ஒரு வார்த்தை கூடப் பேசாமலிருக்கிறானே என்று நினைத்த பொழுது அவளுக்கு ரமணியின் பேரில் கோபம் கோபமாக வந்தது. ஆனால் அந்தக் கோபத்தைக் காட்டிக் கொண்டால் காரியம் கெட்டுவிடு மென்பதும் அவளுக்குத் தெரியாமலில்லை.
உண்மையில் ரமணி படம்தான் பார்க்கிறானா? அல்லது அவனும் தன்னைப்போலவே சிந்தனை செய்து கொண்டி ருக்கிறானா என்பதையறிய அவள் மிகவும் ஆவலுடையவளாயிருந்தாள். கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்களிலே சஞ்சரிக்கவும், வானமண்டலத்தில் விமானங்களிலே ஊடுருவிப்பாயவும், பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் பிறக்கும் சப்தத்தை ரேடியோ மூலம் பக்கத்தில் கொண்டு வரவும் அறிவுப்படைத்த மனித மூளைக்கு ஒருவர் மனதிலிருப்பதை மற்றொருவருக்குத் தெரியவைக்கும் சக்தி மட்டும் இல்லாமற் போய்விட்டதே என்று அவள் வருந்தினாள். அடுத்த நிமிடம் ரமணிக்குத் தன்னிடம் பிரியமில்லை யென்பது தெரிந்து விட்டால் மனம் எவ்வளவு வேதனை படுமென்பதை எண்ணிப் பார்த்த பொழுது “இப்பொழுதாவது கனவு லோகத்தில் சஞ்சரித்துக் கோட்டைகளை கட்டிப்பார்த்துப் பூரித்துக் கொண்டிருக்கிறேன். ரமணிக்கு என்னிடம் சிறிதளவும் அன்பில்லாம லிருந்து, அது எனக்கும் தெரிந்து போய் விடுமானால் என் கனவுகளெல்லாம் குரூரமாகச் சிதைந்து விடும். அவர் நிலைமை என் பக்கம் திரும்பும் வரை அவர் மனதில் என்ன இருக்கிறதென்பது எனக்குத் தெரியாமலிருந்தாலே நல்லது” என்று அவள் நினைத்தாள்.
இப்படிச் சிந்தித்தவள் சிறிது நகர்ந்து உட்கார்ந்தாள். அவளுடைய கால்கள் ரமணியின் கால்கள்மீது படவும். அவன் நெருப்பை மிதித்தவன் மாதிரி பட்டென்று காலை நகர்த்திக்கொண்டான்.
“மிஸ்டர் ரமணி! ஏன் இப்படி தூக்கிவாரிப் போட்டதுபோன்ற அதிர்ச்சி! இப்பொழுது கண்ணில் தூசி ஒன்றும் படவில்லையே!” என்று கேட்டாள் பிரேமா.
ரமணி:- ஒன்றுமில்லை பிரேமா! ஏதோ சிந்தனை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று சிதைந்துவிட்டது அந்த யோசனை.
பிரேமா:- அப்படியானால் கவனம் படத்திலில்லை யென்று சொல்லுங்கள். நான் நினைத்தது சரியாகிவிட்டது.
ரமணி:- என்ன நினைத்தாய்? என்ன சரியாகிவிட்டது?
பிரேமா:- அதை நீங்களல்லவா சொல்லவேண்டும்.
ரமணி:- சொல்லும்படி அவ்வளவு பிரமாதமான விஷயம் ஒன்றுமில்லை.
பிரேமா:- பிரமாதமல்லவென்று நாம் நினைக்கும் விஷயங்களைக்கூட சில சமயங்களில் சொல்லுவதென்றால் வாய் வருவதில்லை!
இதற்கு ரமணி பதில் சொல்லவில்லை. சிறிதுநேரம் அந்த அறைக்குள் இருந்த அந்தகாரத்தோடு மௌனமும் போட்டி போட்டது. சில நிமிடங்களுக்குப்பின் ரமணி கரம் தன் மீது பட்டதை உணர்ந்து பிரேமா புளகாங்கிதமடைந்தாள். இது ஒரு நொடிப்பொழுதுதான். அடுத்த வினாடியில் யுகயுகாந்திரமாக இன்பமனுபவிப்பதைப் போன்றிருந்த அவள் உணர்ச்சி திடீரென்று சிதைந்து போயிற்று. ஆசையுடன் அவன் தன்னை அணைப்பதாக அவள் நினைத்தது சுத்தத் தவறென்பதை பிரேமா உணர்ந்துகொள்ள அதிகநேரம் பிடிக்கவில்லை.
“மன்னிக்கவேண்டும் பிரேமா! உன் பக்கமிருக்கும் ஸ்விட்சை கொஞ்சம் போடுகிறாயா?” என்று ரமணி கேட்கவே அவன் கரம் தேடியது மின்சார விளக்கின் ஸ்விட்சைத்தானென்பதைத் தெரிந்துகொண்டாள்.
“ஏன், இருட்டிலிருக்கப் பயமாயிருக்கிறதா? இங்கு வேறொருவருமில்லையே!”
என்று சொல்லிக்கொண்டே பிரேமா ஸ்விட்சை அழுத்தவும் பெட்டிக்குள் மங்கலான சிறு வெளிச்சம் ஏற்பட்டது. அந்த வெளிச்சம் ஒருவர் முகம் மற்றொருவருக்குத் தெரிய போதுமானதாயிருந்தது. மங்கலான அந்த வெளிச்சத்தில் பிரேமா ஜகஜோதியாக விளங்கினாள். அவளுடைய ஒவ்வொரு அவயவத்திலும் அவற்றின் நெளிவிலும் அழகுக்களை சொட்டியது.
“மிஸ்டர் ரமணி! சென்றதை நினைத்து நினைத்து வருத்தப்பட்டால் அது வந்துவிடுமா? நான் தான் கேட்கிறேன்!” என்றாள் மேலும் சிறிது நேர மௌனத்துக்கு பிறகு.
ரமணி:- சென்றது எதை?
பிரேமா: எது சென்றதோ அதை.
ரமணி:- நீ சொல்வது விளங்கவில்லை பிரேமா.
பிரேமா:- விளங்கக்கூடிய பாஷையில் பேசும் சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை. வரும் பொழுது விளங்கும்படி சொல்லுகிறேன். இதோ பாருங்கள் மிஸ்டர் ரமணி! இந்த இடத்தில் பூச்சிகள் இல்லை கண்ணில் வந்து விழுவதற்கு! விழுந்தால் நான்தான் வந்து விழவேண்டும்!! இப்பொழுதாவது சொல்லுவீர்களா நான் கேட்ட கேள்விக்கு விடை?
ரமணி:- கேள்வியே தெரியாமல் பதில் கேட்டால் என்ன சொல்ல?
பிரேமா:- அன்று நான் கேட்டேனே அதற்கு?
ரமணி:- அன்று என்ன கேட்டாய்?
பிரேமா:- உங்கள் கதைக்கு குந்தளப் பிரேமா என்று ஏன் பெயர் கொடுத்தீர்கள்?
ரமணி:- இதில் மர்மம் ஒன்று மில்லையே! கதாநாயகியின் பெயர் குந்தளம். அவளிடம் கோபால் வைத்திருந்த பிரேமையின் அறிகுறியாக குந்தளப் பிரேமா என்று பெயர் வைத்தேன்..பெயரில் என்ன இருக்கிறது?
இந்த பதில் பிரேமாவின் தலையில் ஓராயிரம் செம்மட்டி களைக்கொண்டு அடித்த மாதிரி இருந்தது. அவள் கட்டிய ஆசைக் கோட்டைகளெல்லாம் மணல் கோட்டைபோலப் பொலபொலவென்று உதிர்ந்து போய் விட்டதைப்போலவும் தோன்றியது.
“குந்தளப்பிரேமா” என்ற பெயருக்கு ரமணி கொடுக்கும் தாத்பரியம் இதுதானா? அந்தப் பெயருக்கும் எனக்கும் உண்மையில் எவ்வித சம்பந்தமும் கிடையாதா? பிரேமா என்பது குந்தளத்தின் பிரேமையைத்தான் குறிக்கிறதா? அது என்னைக் குறிப்பதாக இவ்வளவு காலமும் அசைக்க முடியாத மனக்கோட்டை கட்டியதெல்லாம் பகற்கனவு தானா? என்று நினைத்த பொழுது பிரேமாவின் தலை கிறு வென்று சுற்றியது. வாய் விட்டு அழுதுவிடலாம் போலக் கூடத் தோன்றியது பிரேமாவுக்கு. ஆனால் நாம் தியேட்டரில் ஆயிரக்கணக்கான ஜனங்களுடன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஞாபகம் நல்ல வேளையாக அவள் மனதி லிருந்தது.
“ஏன் பிரேமா! நான் சொல்லிய அர்த்தம் பொருத்த மில்லையென்று நினைக்கிறாயா?” என்று ரமணி கேட்ட பொழுதுதான் பிரேமா கனவு உலகிலிருந்து கஷ்டமும் துன்பமும் ஏமாற்றமும் நிறைந்த இந்த மண்ணுலகத்தில் வந்து குதித்தாள்.
பிரேமா:- “இல்லை! குந்தளத்தின் காதலன் இலங்கைக்கு வரப்போகிறானா என்பது தெரிந்தால் கதையின்போக்கு ஒரு வாறு புலப்படும்” என்றாள் சிறிதளவு நம்பிக்கையோடு.
ரமணி:- “இந்தியாவைவிட்டு வெளியேறப்போகிறான். நீ விரும்பினால் அவனை இலங்கைக்கே கொண்டுவந்துவிடுகிறேன். கதை தானே? நாம் இழுத்த இழுப்புக்கு வருகிறது?” என்று அலட்சியமாக பதில் சொல்லியது பிரேமாவின் உள்ளத்தில் கூர்மையான முள் தைப்பதுபோல் இருந்தது. ஆயினும் அவன் மன நிலைமையைக் கடைசிவரை நன்கு தெரிந்து கொண்டு விட வேண்டுமென்ற வைராக்கியம் அவளிடம் உதித்தது.
தண்ணீரில் மூழ்கியவனுக்கு ஜலத்தின்கீழ் ஒரு முழம் முழுகினாலென்ன? பத்து முழம் முழுகினாலென்ன? ரமணியின் உண்மையான மன நிலைமையை சந்தேகத்து இடமின்றி தெரிந்து கொண்டு விடுவது தான் நல்லது. அசட்டு நம்பிக்கை அனர்த்தத்தில்தான் முடியுமே தவிர அணுவளவும் உதவாது என்று அவள் நினைத்தாள்.
“ஆம்! அந்த பொல்லாத மனிதன் கோபாலை இலங்கைக்கு இழுத்துக் கொண்டு வந்துவிடுங்கள்! வந்தவுடன் இங்கு ஒரு பிரேமாவைச் சந்திக்கச் சொல்லுங்கள். அவனுக்காக இலங்கையில் ஒரு பிரேமா தவம் கிடக்கிறாளென்பதையும் அவனிடம் சொல்லிவையுங்கள். அப்பொழுதுதான் கதையின் தலைப்பு பொருத்தமாயிருக்கும். அடுத்த அத்தியாயம் எழுதும் பொழுது இதை தயவு செய்து எனக்காக ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருப்பீர்களா?” என்று கேட்டு விட்டாள் பிரேமா தையரித்தை வரவழைத்துக்கொண்டு.
ரமணி:- நீ தவறாக நினைக்கிறாய் பிரேமா. நான் எழுதுவது சுய சரிதையாயிருக்குமோ என்று சந்தேகிக்கிறாய் போலிருக்கிறது.
பிரேமா:- சந்தேகிக்கவில்லை. உண்மையென்று உறுதியாகவே நம்புகிறேன். ஒரு சமயம் எல்லா தெய்வங்களும் சேர்ந்து சதி செய்ய நினைத்தால் தயவு செய்து நான் நினைப்பதை உண்மையாக்கவேண்டுமென்று அத் தெய்வங்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு மன்றாடுவேன்.
இப்படி பிரேமா சொல்லியபொழுது அவளுடைய குரல் தழுதழுத்தது. முத்துப்போல ஓரிரண்டு சொட்டு கண்ணீர் அவளுடைய பிரகாசமான கண்களிலே தத்தளித்துக் கொண்டு நின்றது. அந்த மங்கலான வெளிச்சத்தில் அது ரமணிக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று தியேட்டரிலிருந்த விளக்குகளெல்லாம் திடீரென்று பற்றிக்கொண்டன. படக்காட்சியும் முடிந்துவிட்டது.
பிரேமா மேற்புடவையினால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுவதற்கு முன் மளமளவென்று வழிந்த கண்ணீர் அவளுடைய கண்ணாடிக் கன்னங்களின் வழியாக வழிந்து மெல்லிய நீலப் புடவையை நனைத்துவிட்டது.
“ஏன் வீட்டுக்குப் போகவேண்டாமா?” என்று கேட்டுக் கொண்டே ‘பெட்டி’யின் கதவைத் தட்டினாள் லீலா.
ரமணி ‘பாக்ஸி’ன் கதவைத் திறந்தான். ரமணியோ அல்லது பிரேமாவோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. எல்லோரும் காரில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். முதலில் ரமணி, அடுத்தபடியாக பிரேமா, பிறகு லீலா, கடைசியில் நடராஜன் இப்படி நால்வருமாகப் பின் ஸீட்டில் உட்கார்ந்த உடன் கார் கிளம்பியது.
சில நிமிட நேரம் காரில் மௌனம் நிலவியது. யார் முதலில் பேசுவது? என்ன பேசுவது? இது எல்லோருக்கும் பெரிய பிரச்னையாயிருந்தது. ரமணியும், பிரேமாவும் நடந்து கொண்ட முறையிலிருந்து அவர்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர்கள் நடந்து கொண்டிருக்கக் கூடிய முறையைப் பற்றி நடராஜனோ அல்லது லீலாவோ இருவருமே ஒன்றும் கிரகிக்க முடியவில்லை.
இந்த மௌனத்தைத் தகர்க்க நடராஜன் ஒரு உபாயம் செய்தான். படக்காட்சியில் வந்த ஒரு கட்டத்தைக் குறிப்பிட்டு “அது எப்படியிருந்தது ரமணி! எனக்கு அது ரசிக்க வில்லை. ஆனால் லீலாதான் சொல்லுகிறாள் அந்த இடத்தில் கதாநாயகி லைலாவின் நடிப்பு அற்புதமாயிருந்ததென்று! கலைவாணன் ரமணியைக் கேட்டு அவன் தீர்ப்பை இருவரும் ஒப்புக் கொள்வதென்று எங்களுக்குள் முடிவு செய்து கொண்டோம்! நீ என்ன சொல்லுகிறாய்?!” என்று கேட்டான்.
ஆனால் ரமணிக்கு பதில்சொல்ல முடியவில்லை. நடராஜன் குறிப்பிட்ட கட்டத்தை அவன் கவனிக்கவுமில்லை. “அந்த இடத்தை நான் பார்க்கவில்லை” என்று கௌரவமாக ஒப்புக்கொள்வதைத்தவிர ரமணிக்கு வேறு வழியில்லாமற் போய்விட்டது.
“அப்படியா? பிரேமா நீதான் சொல்லு! அந்த இடத்தில் லைலா கடைக்கண்ணால் காதலனைப் பார்த்துவிட்டு புன்னகை செய்தது அழகு சொட்டுகிற மாதிரி இருந்ததா? இல்லையா?” என்று கேட்டாள் லீலா.
“ஆமாம்! அப்படித்தானிருந்தது!” என்று தன் நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ள பிரேமா ஒரு அசட்டுச் சிரிபபுடன் பதில் சொன்னாள்.
“லீலா எந்த இடத்தைப்பற்றி கேட்கிறாளென்பது தெரிந்துதான் சொல்லுகிறாயா பிரேமா! லீலா சொல்லுகிறபடி எந்த இடத்தில் கதாநாயகி லைலா எப்படிச் சிரித்தாளென்று சொல்லு பார்க்கலாம்!” என்று விடாப்பிடியாகக் கேட்டான் நடராஜன்.
இக்கேள்வி பிரேமாவுக்கு தர்மசங்கடமான நிலைமையை உண்டு பண்ணிவிட்டது. பதில் சொல்லத் தெரியாமல் ஏதோ உளரவாரம்பித்தாள்.
“அவர்கள் படம் பார்த்திருந்தாலல்லவா ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வந்தது? யார் எப்படி நின்றார்கள்? எப்படிச் சிரித்தார்கள்? என்பதெல்லாம் தெரியும்? பாவம் மூன்று மணி நேரம் கனவு உலகத்தில் சஞ்சரித்தவர்களிடம் படம் பார்த்ததைப்பற்றிக் கேட்டால் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்று லீலா கிண்டலாகச் சொன்னாள்.
நடரா:- “ஆனால் அவர்கள் படம் பார்க்கவில்லை என்கிறாயா?”
லீலா:- இல்லவேயில்லை. ஏதோ ஒரிரண்டு காட்சிகள் தவறிப்போய் அவர்கள் கண்களில் பட்டிருந்தால் அதுவும் அவர்கள் குற்றமில்லை!.
நடரா:- படம் பார்க்காமல் மூன்று மணி நேரம் கதவையும் சாத்திக்கொண்டு பாக்ஸ் ஹீட்டுக்குள் என்ன செய்தார்களாம்?
லீலா:- அதை என்னிடம் கேட்டால்? அவர்களிடமில்லையா கேட்க வேண்டும்?
நடரா: கேட்டால் பதில் சொன்னால் தானே?
லீலா:- பதில் சொல்லும்படியாக இல்லாமலிருந்தால்? சில விஷயங்களைத் தானே வாயினால் பேச முடியும்? பேச முடியாத விஷயங்களும் சில உண்டல்லவா?
நடரா:- அப்படியானால் அவர்கள் படம் பார்க்கவில்லை யென்றும் படம் பார்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்களென்பது சொல்லக் கூடியதில்லையென்றும் நீ சொல்லுகிறாய்? அப்படித்தானா? இதை அவர்கள் வாயினால் சொல்லிவிட்டால் நான் ஏன் இப்படித் திருப்பித் திருப்பிக் கேட்கிறேன்.
இவ்விதம் நடராஜனும், லீலாவும் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் பிரேமாவுக்கும் ரமணிக்கும் கூர்மையான ஈட்டிகொண்டு இதயத்தை பிளப்பது போலிருந்தது. ஆயினும் அவர்கள் இருவராலுமே ஒரு வார்த்தை கூடப் பதில் பேச முடியவில்லை. அவர்களுடைய மன நிலைமையில் வாயிலிருந்து வார்த்தைகள் வெளி வருவதாயுமில்லை. இந்த மெளனம் நடராஜனும் லீலாவும் கொண்ட சந்தேகத்தை மேலும் பலப்படுத்தி அவர்களுடைய கேலிப்பேச்சுக்கு ஊக்கமளிப்பதாயிருந்தது.
நடராஜன் ஏதோ ஹாஸ்யமாகச் சொல்லிக் கொண்டு லீலா மீது மோதவும், லீலா பிரேமாவை நெருக்க பிரேமா ரமணியின் மடிமீது சாய்ந்தாள். இந்த நிலைமையில் அபாண் டமான கேலிப் பேச்சுகளிலிருந்து பிரேமாவையும் ரமணியையும் காப்பாற்ற கடவுள் நினைத்தார் போலிருக்கிறது. கார் பங்களா வாசலில் வந்து நின்றது.
எல்லோரும் கீழே இறங்கினார்கள். நடராஜனும் ரமணியும் முன்னால் இறங்கிச் சென்றபிறகு பிரேமா சொன்னாள்: ‘லீலா! நாளைக்காலை என் அறைக்கு வா! உன்னிடம் தனியாகப் பேசவேண்டும்!’ என்று.
“தனியாகப் பேசுவதெல்லாம் இருக்கட்டும்! காரியம் காயா பழமா? அதை முதலில் சொல்லு!” என்றாள் லீலா.
பிரேமாவினால் இதற்கு மேல் துக்கத்தை அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. லீலாவின் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிறு குழந்தை மாதிரி விம்மி விம்மி அழ ஆரம்பித்துவிட்டாள்.
“பிரேமா! அசடுமாதிரி அழாதே! யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? ஊம், கண்ணைத் துடைத்துக் கொள்! காலையில் எல்லாம் பேசிக்கொள்ளலாம்.. கடவுளி டம் நம்பிக்கை வைத்தால் எல்லாம் உன் இஷ்டப்படியே நடக்கும். ஒருநாளும் உன்னைத் தெய்வம் கைவிடாது. உன் அன்பு பரிசுத்தமானது. உன்னை மனைவியாக அடைய ரமணி எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்! கனியாத பழத்தைக் கனிய வைக்க கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால், பழம் நிச்சயம் கனிந்து விடும். நம்பிக்கையை மட்டும் கைவிட்டுவிடாதே!”
இவ்வாறு லீலா சொல்லி பிரேமாவைத் தேற்றுவது பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.
மறுநாட்காலை லீலா வந்தபொழுது முதல்நாளிரவு சினிமாக் கொட்டகையில் தனக்கும் ரமணிக்குமிடையில் நடந்த சம்பாஷணையை விவரமாக எடுத்துச் சொல்லி ‘குந்தளப்பிரேமா என்றால் குந்தளத்தின் பிரேமையைக் குறிக்கிறதாம் அந்தப் பெயருக்கும் என் பெயருக்கும் சம்பந்தமில்லையாம்!’ என்று சொல்லியபொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் மளமளவென்று வழிந்தோடியது.
லீலா:- இருக்கட்டுமே! அதனால் என்ன. தலைமுழுகி விட்டது? நாவலுக்கு அந்தப் பெயர் வைத்தபொழுது அதற்கும் உன் பெயருக்கும் சம்பந்தமில்லாமலிருக்கலாம். இப்பொழுதும் சம்பந்தமில்லாமலிருக்கக்கூடும். ஆனால், ஆரம்பத்தில் எண்ணியிருக்காத சம்பந்தம் இனி ஏன் ஏற்படக்கூடாது?
பிரேமா:- அவர் போக்கைக் கவனித்தால் எனக்கு நம்பிக்கையில்லையடி லீலா!
லீலா:- இப்படி அதைரியப்படுவதுதான் தவறு. உலகமே நம்பிக்கையில்தான் வாழுகிறதென்பதை நீ மறந்து பேசுகிறாய். நம்பிக்கை மாத்திரம் இல்லாவிட்டால் மனித ஜாதி ஒரு நிமிஷம் கூட உயிர் வாழமுடியாது. நான் கேட்கிறேன், இதற்கு முன் வேறு எப்பொழுதாவது இவ்வளவு தெளிவாக உன் மனதை ரமணிக்கு நீ திறந்து காட்டியிருக்கிறாயா? இல்லையல்லவா? உன் அந்தரங்க எண்ணத்தை இப்பொழுதுதான் முதன் முறையாக அவர் நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். இனி அவர் மனதில் இது எப்படி வேலை செய்கிறதென்பதை நம்பிக்கையுடன் காத்திருந்து பார்ப்போம். நேற்றிரவு ரமணி தியேட்டரிலிருந்து வந்த பிறகு என்ன செய்தார்? உடனே படுக்கப் போய்விட்டாரா?
பிரேமா:- இல்லை. வெகு நேரம் வரையில் அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்று தொடர் நாவலின் அடுத்த அத்தியாயத்தை அச்சுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா? தியேட்டரிலிருந்து வந்தவுடன் உட்கார்ந்து எழுத ஆரம்பித்திருப்பாரென்று நினைக்கிறேன் எப்படியும் சாயங்காலம் 5 மணிக்குள் அடுத்த அத்தியாயம் அச்சுக்கோர்த்து ‘புரூப்’ வந்துவிடும். வந்தவுடன் உனக்கும் ஒரு புரூப் அனுப்புகிறேன்.
குந்தளப்பிரேமா நாவல் நவலங்காவில் பிரசுரமாகும் வரையில் பிரேமாவும் லீலாவும் காத்திருப்பதில்லை. ரமணியின் கையை விட்டு எழுத்துப்பிரதி அச்சுக்கோப்பவர்களின் கைக்குப் போனவுடனேயே அதை வாங்கி இருவரும் வாசித்துப் பார்த்து விடுவார்கள். இல்லாவிடில் அச்சுக்கோர்த்தவுடன் முதலாவது புரூப் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும். அதை வாசித்தபின் அதைப் பற்றியும் அடுத்த அத்தியாயம் எப்படியிருக்க முடியுமென்பதையும் பற்றி அவர்கள் சில மணி நேரம் விவாதிப்பது வழக்கம்.
இதுமாதிரி விவாதங்கள் நடக்கும்பொழுது தற்செயலாக ரமணி அங்கு வந்து சேர்ந்தால் அவனையும் அவர்கள் விடுவதில்லை. அடுத்தபடியாக என்ன வரப்போகிற தென்பதை அறியவேண்டுமென்ற ஆவலில் அவனுக்குச் சரமாரியான கேள்விகளைப் போடுவார்கள். நேரடியாக அவன் பதில் சொல்ல மறுத்தால் சுற்றி வளைத்து எப்படியாவது கதையின் போக்கை அவனிடமிருந்து கிரகித்துக் கொள்ள சாத்தியமான முயற்சிகளை யெல்லாம் அவர்கள் செய்து பார்ப்பார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் ரமணி அர்த்தமில்லாத ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்து மழுப்புவானே தவிர அவர்கள் எதிர்பார்க்கும் பதில் மட்டும் வெளி வராது. நிலைமை ரொம்ப மிஞ்சிப் போய் விட்டால், ‘என்னை இப்படி வற்புறுத்தினால் நான் என்ன செய்ய? திட்டம் போட்டு கதை எழுத ஆரம்பித்திருந்தால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுத்துவிடுவேன். கதையின் போக்கை அடுத்த வாரம் எப்படிக் கொண்டு போக வேண்டுமென்பதை இனித்தான் யோசிக்க வேண்டும். ஏன், நீங்கள்தான் சொல்லுங்களேன், அடுத்த அத்தியாயம் எப்படியிருக்கவேண்டுமென்று! உங்கள் இஷ்டப்படி எழுதிவிடுகிறேன்’ என்று ஒரு பெரிய போடு போடுவான்.
இதற்குமேல் பிரேமாவோ அல்லது லீலாவோ ஒன்றும் சொல்ல முடியாமற் போய் விடும். ஆனால் திட்டம் போட்டுக் கொண்டு கதை எழுதவில்லையென்றும் ஒவ்வொரு வாரமும் யோசித்துத்தான் எழுதுவதாயும் ரமணி சொல்லுவது முழுப்பூசினிக்காயை சோற்றில் மறைப்பதைப் போன்ற தென்பதை இருவரும் நன்கறிந்திருந்தார்கள்.
14. கிணறு வெட்டப் பூதம்!
தியேட்டருக்குப் போய்விட்டு வந்த மறுநாள் மாலை பிரேமா பரபரப்புடன் லீலாவின் வீட்டுக்கு வந்து ‘இதோ பார்த்தாயா லீலா! நாம் நினைத்ததெல்லாம் பொய்யாகி விட்ட தடி! கிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதையைப் போலாகிவிட்டது காரியம். இனி, என்கதி என்ன?’ என்று கேட்டுக்கொண்டே லீலாவின் அறையில் நுழைந்தாள்.
‘கொஞ்ச நாட்களாக உனக்கு ஏன் இவ்வளவு பட படப்பு! நிதானமாகச் சொல்லு! என்ன விசேஷம்?’ என்று வினவினாள் லீலா.

பிரேமா:- குந்தளப்பிரேமாவின் அடுத்த அத்தியாயத்தை வாசித்தாயில்லையா? ரமணியின் வாழ்க்கையில் ஒரு சாந்தா எங்கிருந்து வந்து முளைத்தாள்? சாந்தாவின் கடைசிப் புத்தகமான வனஜாவை நீயும் படித்திருக்கிறாயல்லவா? அந்தக் கதையில் வனஜாவின் வாழ்க்கையைப் பற்றி சாந்தா எழுதியிருப்பதும் குந்தளத்தின் வாழ்க்கையைப் பற்றி ரமணி எழுதியிருப்பதும் ஆரம்ப அத்தியாயங்களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாயிருப்பதைப் பார்த்து அப்பொழுதே நான் கொஞ்சம் சந்தேகப்பட்டேன். இன்று குந்தளத்தின் கிராமப் புனருத்தாரண இயக்கத்தைப் பற்றி ரமணி எழுதியிருக்கும் அதே விஷயங்கள் சாந்தாவின் வனஜா புத்தகத்திலும் அடங்கியிருப்பதைப் பார்த்தால்…
லீலா:- எனக்கு ஒன்றுமே புரியவில்லை பிரேமா. குந்தளப்பிரேமாவின் இந்த அத்தியாயம் சாந்தாவின் புத்தகத்திலிருப்பதைப் போலவே எழுத்துக்கு எழுத்து சரியாயிருக்கிறது. கிட்டத்தட்ட ஆடையலங்கார வர்ணனைகள் கூட மாறுபடாமலிருக்கின்றன. கிராமத்தின் ஆற்றோரத்தில் வனஜா மெல்லிய நீலநிறப் புடவையணிந்து நிலவு வெளிச்சத்தில் ஜகஜோதியாக உட்கார்ந்திருந்ததாயும் காற்றில் பறந்த முன்பக்கத்துக் கூந்தல் நெற்றியில் விழுந்து விளையாடியது பூரண மதியை கருமேகம் திரையிட்டு மறைப்பது போலிருந்ததென்றும் சாந்தா தனது புத்தகத்தில் வர்ணிக்கிறாள். அதே வர்ணனையை எழுத்துப் பிசகாமல் ரமணியும் இந்த அத்தியாயத்தில் கொடுத்திருக்கிறார். ரமணி எழுதியிருக்கும் இவ்வாரக்கதை உண்மையில் நீ சொல்லுவதைப் போல கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைமாதிரித்தானிருக்கிறது.
பிரேமா:- இதிலிருந்து பிரபல நாவலாசிரியை சாந்தாவுக்கும் நமது ரமணிக்கும் ஏதோ சம்பந்தமிருந்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் இருவர் கதையிலும் இவ்வளவு தூரம் கருத்து ஒற்றுமை ஏற்பட்டிருக்கவே முடியாது. இவர் வாழ்க்கையில் குந்தளம் ஒருவள் குறுக்கிட்டிருப்பது போதா தென்று சாந்தா வேறு எப்படி வந்து முளைத்தாள்?
லீலா:- எனக்கு ஒரே ஒரு யோசனைதான் சரியாகப் படுகிறது. சாந்தாவின் வனஜா புத்தகத்தை ரமணியும் படித்திருந்து அந்தக் கதையையே அடிப்படையாக வைத்து குந்தளப்பிரேமாவை எழுதி வரக்கூடாதா? அப்படியும் இருக்கலா மல்லவா? இந்தக் காலத்தில் எந்த ஆசிரியனைத்தான் நம்பமுடிகிறது? ஆங்கிலக் கதைகளை ஊரையும் பெயரையும் ஓரிரண்டு இடங்களில் கருத்தையும் மாற்றி உருவம் தெரியாமல் செய்து சொந்தக் கற்பனை என்று சொல்லிக் கொள்ளும் எவ்வளவு ஆசிரியர்களை நாம் பார்க்கிறோம்?
பிரேமா- அப்படி ஒருபோதும் இருக்காது லீலா! அச்சில் வெளிவந்த ஒரு புத்தகத்தை அவர் இவ்வளவு தைரியமாகக் காப்பியடிப்பாரென்று நான் நம்பமாட்டேன். தவிர இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சாந்தாவின் புத்தகம் அச்சாகி இலங்கைக்கு வருவதின் முன்பாகவே நவலங்காவில் குந்தளப்பிரேமா ஆரம்பமாகிவிட்டது. போனவாரம் தானே வனஜா புத்தகம் இலங்கைக்கு வந்தது? அதைப் பார்த்து ரமணி எப்படிக் காப்பியடிப்பது சாத்தியம்? இன்று அச்சாகியுள்ள அத்தியாயம் காப்பியடிக்கப்பட்டிருந்தாலும் வனஜாவின் முற்பகுதியும் குந்தளப்பிரேமாவின் முற்பகுதியும் ஒரே மாதிரியிருப்பது எப்படிச் சாத்தியம்?
லீலா:- கமலாலயத்துக்குத் தெரியக்கூடாதென்று சுந்தரம் என்ற பெயரை ரமணி என்று மாற்றி வைத்துக் கொண்டாரில்லையா?
பிரேமா:- ஆமாம், அதற்கும் இதற்கும் என்ன?
லீலா:- கமலாலயத்தின் சொந்தக்காரர்கள் ரமணிக்குத் தெரிந்தவர்களா யிருக்கவேண்டும். ரமணி சென்னையி லிருக்கையில் கமலாலயத்தில் அச்சுக்கு வந்த வனஜா எழுத்துப் பிரதிகளை அவர் முன்னதாகவே வாசித்திருக்கலாம். அந்தக் கதையை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு இப்பொழுது குந்தளப்பிரேமாவை அவர் எழுதலாம். குந்தளப் பிரேமா முடிவதற்குள் வனஜா வெளிவந்துவிட்டதுதான் அனர்த்தமாகிவிட்டது!
பிரேமா:- நீ நினைப்பதுபோலிருந்தால் குந்தளப்பிரேமா வெறும் கட்டுக்கதையா? குந்தளம் என்று ஒருவள் உண்மையில் இருக்கமாட்டாளென்று நினைக்கிறாயா? ஒருக்காலும் இப்படியிருக்காது. சாந்தாவும் ரமணியும் நண்பர்களாயிருந்து இருவரும் சேர்ந்து இந்தக் கதைக்குத் திட்டமிட்டிருக்கக்கூடாதா? சாந்தாவுக்கும் ரமணிக்கும் ஏதோ சம்பந்தமிருக்க வேண்டு மென்றுதான் என் மனம் நினைக்கிறது லீலா.
லீலா:- இதைக் கண்டுபிடிக்க நான் ஒரு வழி சொல்லுகிறேன். சாந்தாவின் வனஜா புத்தகத்தை ரமணியிடம் வாசிக்கக்கொடு. அவர் புத்தகத்தை வாசித்த பிறகு என்ன சொல்லுகிறாரென்று பார்க்கலாம்.
பிரேமா வீட்டுக்குத் திரும்பிய பொழுது வழியில் அச்சா பீஸிலே நுழைந்தாள். ரமணி விளக்கு வைத்துக் கொண்டு கடிதங்களை வாசித்துக்கொண்டிருந்தான். பிரேமாவைக் கண்டதும் ‘யார், பிரேமாவா? வா! அடுத்த அத்தியாயத்தை ‘புரூப்’பில் வாசித்து முடித்தாகிவிட்டது போலிருக்கிறது. அதைப் பற்றி கேட்கத்தானே வந்திருக்கிறாய்?’ என்று வழக்கம் போன்ற சுமுகமான தொனியில் கேட்டான்.
பிரேமா:- இல்லை, அதற்காக வரவில்லை. காரியமொன்று மில்லாவிட்டால் உங்களுடன் பேசுவதற்கு வரக் கூடாதா? வரும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு காரியத்தோடுதான் வரவேண்டும் போலிருக்கிறது!
ரமணி:- நான் அப்படிச் சொல்லவில்லை பிரேமா! அடுத்த அத்தியாயத்தின் ‘புரூப்’ திருத்தம் போடுவதற்கு வந்தது. ஆகையால் அதை நீயும் படித்துவிட்டு வந்திருப்பா யென்று நினைத்துக் கொண்டு கேட்டேன்.
பிரேமா:- ஆமாம், படித்தாகிவிட்டது. இந்த அத்தியாயம் ரொம்ப நன்றாயிருக்கிறது. நீங்கள் வர்ணித்திருக்கும் காந்தீயத் திட்டத்தின்படி இலங்கையிலும் கிராமப் புனருத்தாரண இயக்கம் நடக்குமானால் அரிசிக் கப்பல்களை நம்பிக் கொண்டு உயிர் வாழும் கேவலமான நிலைமை நாட்டுக்கு நிச்சயம் ஏற்படாது. ஆனால் எழுத்து என்பது ஒன்று; நடைமுறை என்பது முற்றிலும் வேறொன்று! ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதென்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களில்லையா?
ரமணி:- அப்படிப் பொதுப்படையாகச் சொல்லிவிடாதே. நான் எழுதியிருப்பதைப் போன்ற கிராமத்திட்டம் நடைமுறையில் அனுஷ்டிக்கப்படுவதை விளநகர் கிராமத்தில் நானே நேரில் பார்த்திருக்கிறேன்.
விளநகர் கிராமத்தின் பெயரைச் சொல்லியவுடன் ரமணிக்கு அவனை அறியாமல் ஒரு அதிர்ச்சி யேற்பட்டது. வெளியிடக் கூடாதென்று இவ்வளவு காலமும் மறைத்து வைத்திருந்த ஒரு பெரிய ரகசியத்தைத் தன்னையுமறியாமல் வெளியிட்டு விட்டோமென்ற ஒரு உணர்ச்சி அவனைத் தாக்கியது. விளநகர் கிராமம் யாருடையது? அதன் சொந்தக்காரருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? குந்தளம் விளநகர் கிராமத்தில் அற்புதமான கிராமத் திட்டத்தை நடத்துவதாகக் கதையில் எழுதியிருக்கிறீர்களே, அந்தக் குந்தளம் கற்பனைப் பெயரில்லையா? உண்மையிலேயே குந்தளம் என்று ஒரு பெண் இருக்கிறாளா? அவளுடைய கிராமத்தைப் பார்த்து விட்டுத்தான் காந்தீயத் திட்டத்தைப்பற்றி எழுதியிருக்கிறீர்களா? அப்படியானால் இது கற்பனைக் கதையென்றும் யாரையும் குறிப்பதல்லவென்றும் சொன்னீர்களே? அது பொய்யா? இப்படியெல்லாம் பிரேமா கேட்க வாரம்பித்தால் என்ன செய்வதென்று ரமணி நினைத்தான். ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டதைப் போன்ற உணர்ச்சி அவன் நெஞ்சத்தைப் பிடித்து அழுத்தியது.
விளநகர் கிராமத்தின் பெயரை ரமணி சொல்லியவுடன் பிரேமாவுக்கும் அதிர்ச்சியேற்படாமலில்லை. ஒரு நொடியில் குந்தளப்பிரேமா கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதே தவிர கட்டுக்கதையல்ல வென்பதை அவளுக்கு இது ஊர்ஜிதப்படுத்திவிட்டது. உண்மைக் கதையாகத் தானிருக்க வேண்டுமென்பதை எந்த சந்தர்ப்பத்திலும் அவள் சந்தேகித்ததில்லை யென்றாலும் ரமணியின் வாயிலிருந்தே இது ஊர்ஜிதமானதில் தனக்கு ஒரு பெரிய வெற்றி யேற்பட்டுவிட்டதாக அவள் நினைத்தாள். ஆனால் இந்த வெற்றி சந்தோஷத்துக்குப் பதிலாக அவளுக்குத் துக்கத்தையே கொடுத்தது. சாந்தா வர்ணிக்கும் கிராமத்துக்கும் இதே பெயர் கொடுக்கப்பட்டிருப்பது சாந்தாவுக்கும் ரமணிக்கும் நிச்சயம் சம்பந்தமிருந்தே தீரவேண்டுமென்பதையும் உறுதிப்படுத்துவதைப் போலிருந்தது.
சில நிமிடங்கள்வரை இருவரும் மௌனம் சாதித்தனர். இந்த மெளனம் இருவருக்கும் வேதனை கொடுப்பதா யிருந்ததென்பதைச் சொல்லத் தேவையில்லை.
“சாந்தாவின் கடைசிப் புத்தகத்தை வாசித்தீர்களா? போனவாரம் தான் வனஜா இலங்கைக்கு வந்தது. முதல் பதிப்பு பத்தாயிரம் அடித்து அவ்வளவும் விற்றுவிட்டதாம். இரண்டாவது பதிப்புதான் இலங்கைக்கு வந்திருக்கிறது!” என்று சொல்லி வனஜா புத்தகத்தை ரமணியிடம் நீட்டினாள் பிரேமா.
பமணி:- சாந்தாவின் புத்தகத்தை நான் படிப்பதற்கில்லை பிரேமா! தயவுசெய்து ஏன் என்று கேட்காதே!
பிரேமா:- விசித்திரமாயிருக்கிறதே உங்கள் வைராக்கியம்! புத்தகங்களைப் படிப்பதில் என்ன தவறு?
ரமணி:- அது எனக்குத் தெரியாது. சாந்தாவின் புத்தகங்களைப் படிப்பதில்லையென்றும் அவளைப் பற்றிப் பேசுவதில்லையென்றும் நான் ‘விரதம் கொண்டிருக்கிறேன். அது தான் சொல்லலாம்.
பிரேமா:- அப்படியானால் சாந்தாவை உங்களுக்குத் தெரியுமா?
ரமணி:- தெரியாது. சத்தியமாகச் சொல்லுகிறேன் அவளை நான் பார்த்ததில்லை. அவளுடைய சரித்திரத்தையும் நான் அறியமாட்டேன். அவளைப்பற்றி தெரிந்து கொள்ள நான் தயாராகவுமில்லை.
பிரேமா:- அப்படியிருந்தும் அவள் புத்தகத்தின்மீது வெறுப்புக்கொண்டிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது!
ரமணி:- ஆமாம். மற்றவர்களுக்கு இது ஒரு பெரிய புதிர் மாதிரித் தானிருக்கும். தயவு செய்து இதைப்பற்றி என்னிடம் ஒன்றும் கேட்டாதே!
அதற்குமேல் பிரேமா வற்புறுத்தி ஒன்றும் கேட்க முடியவில்லை. ஆனால் ரமணி எழுதிய அடுத்த அத்தியாயம் பல புதிர்களுக்குச் சுலபமாகப் பதிலளித்துவிட்டது.
குந்தளப்பிரேமாவின் பத்தாவது அத்தியாயம் கம்போ ஹிட்டர்களிடம் அச்சுக்கோர்க்க வந்தவுடனேயே லீலா அதைத் தருவித்துப் படித்துவிட்டு அவசரமாக பிரேமாவை அழைத்துவர வேலையாளை அனுப்பினாள்.
பிரேமா வந்தவுடன் ‘சாந்தாவுக்கும் ரமணிக்கும் என்ன சம்பந்தமிருக்குமென்று கேட்டாயே, இதோபார், குந்தளப் பிரேமாவின் பத்தாவது அத்தியாயம் அந்த சம்பந்தத்தைத் தெளிவுபடுத்துகிறது. சாந்தா என்பதற்கு பதிலாக காந்தா என்ற ஒரு கதாசிரியையைத் தோற்றுவித்திருக்கிறார் ரமணி. கிராமக் கோவிலில் இறைவன் சந்நிதியின் முன்பு கோபாலும் குந்தளமும் நின்று பிரார்த்திக்கையில் காந்தாவிடம் கோபால் காதல் கொண்டிருப்பதைப் போல இடித்துக் காட்டுகிறாள் குந்தளம். அவள் நினைப்பது தவறென்கிறான் கோபால். அது முதல் காந்தாவிடமும் அவளுடைய புத்தகங்களிடமும் கோபாலுக்கு தன்னையறியாமல் ஒரு வெறுப்பு ஏற்படுகிறது. காந்தாவின் பெயரை யாராவது சொன்னால் கூட அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. கோபாலுக்குக் கல்யாணம் செய்து வைக்க அவனுடைய பெற்றோர்கள் திட்டமிடுகிறார்கள். குந்தளத்தைத் தவிர வேறு எவரையும் மணக்க விரும்பாத கோபால் ஊரைவிட்டு ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுகிறான். இதுதான் 10வது அத்தியாயத்தின் சாராம்சம். சாந்தா எழுதிய வனஜா கதையில் வஜ்ரமீளா என்ற ஒரு கதாசிரியையை அவள் சிருஷ்டித்திருக்கிறாள். ரமணியோ காந்தா என்ற கதாசிரியை சிருஷ்டித்திருக்கிறார். இதிலிருந்து ஒரு விஷயம் வெளியாகிறது. கதாசிரியை சாந்தாவிடம் ரமணி காதல் கொண்டிருப்பதாக குந்தளம் நினைத்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே சாந்தாவின் புத்தகங்களில் ரமணிக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். ஆகையால் இனி சாந்தாவைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை. அவளுக்கும் ரமணிக்கும் சிநேகம் சிறிதளவுமில்லையென்பது குந்தளப்பிரேமாவின் பத்தாவது அத்தியாயத்திலிருந்து ருசுவாகிவிட்டது’.
பிரேமா:- அதிலிருந்து எனக்குத் தோன்றுவது என்ன தெரியுமா? குந்தளத்தின் சரித்திரம் ரமணிக்கு தெரிந்திருப்பது போல சாந்தாவுக்கும் தெரிந்திருக்க வேண்டும். இருவரும் ஒரே நபரின் சரித்திரத்தை எழுதுவதினால்தான் கதை நிகழ்ச்சிகளெல்லாம் இவ்வளவு ஒற்றுமையுடனிருக்கின்றன.
லீலா:- எப்படியானாலென்ன? இரு கதைகளும் குந்தளம் என்ற ஒரு பெயரில் மறைந்திருக்கும் ஒரு இளம் விதவைப் பெண்ணின் சரித்திரமென்பதில் சந்தேகமில்லை. அவளிடம் கொண்ட காதலுக்காக உலக சுகங்களையெல்லாம் தியாகம் செய்து எவருக்கும் தெரியாமல் துறவியைப் போல வாழ்க்கையை நடத்த கோபால் விரதம் பூண்டிருக்கிறான். அந்தக் கோபால் நாம் நினைப்பதைப்போல ரமணியாயிருக்குமானால் அவருடைய மனதை மாற்றுவது அவ்வளவு சுலபமாயிருக்கு மென்று எனக்குத் தோன்றவில்லை. தெய்வம் உன் பக்கத்திலிருந்து உதவி புரிவதாயிருந்தாலொழிய ரமணி வெளி உலகத்துக்கு உணர்ச்சியற்ற மரக்கட்டையைப் போலத் தான். உண்மையில் ரமணி நமது பூரண அனுதாபத்துக்கும் உரியவர். இந்த இளம் வயதிலேயே அவர் வாழ்க்கை கசந்து போகும்படி அவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாரென்று தோன்றுகிறது. ஒரு விதவைக்காக ஊரையும், சொந்த தேசத்தையும் வயோதிகத் தாயையும் செல்வத்தையும் தியாகம்செய்து அயல் நாட்டில் அஞ்ஞாதவாசம் செய்வதென்றால் அவருடைய வைராக்கியம் பாராட்டத்தக்கதுதான். நாவலாசிரியர் சுந்தரம் என்ற பெயருக்கு எவ்வளவு செல்வாக்கும் கீர்த்தியும் தமிழ் நாட்டிலிருக்கிறது? அந்தப் புகழைக்கூடவல்லவா துறந்து பெயரையே மாற்றிவைத்துக் கொண்டிருக்கிறார் மனுஷன்!
பிரேமாவுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. தலை சுழல வாரம்பித்தது. தனது மனக்கோட்டைகளெல்லாம் ஒரு நிமிடத்தில் தகர்ந்துபோய்விட்டதைப்போன்ற உணர்ச்சி யேற்பட்டது அவளுக்கு. நாவலுக்குக் குந்தளப்பிரேமா என்று தலைப்புக் கொடுத்ததின் அர்த்தத்தை இப்பொழுது தான் நன்கு தெரிந்துகொண்டாள். ‘அப்படியானால் கதையின் தலைப்பில் வரும் பிரேமாவுக்கும் எனக்கும் உண்மையாகவே சம்பந்தமில்லையா? அட பாழும் தெய்வமே! கடைசியில் சதி செய்து விட்டாயே!’ என்று கடவுளை மனதுக்குள் சபித்துக் கொண்டாள்.
இந்த மனக்கொந்தளிப்பு அடங்குவதற்குள் அடுத்த வாரம் இன்னொரு விசேஷமான சம்பவம் நிகழ்ந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் சீமைக்குச் சென்றிருந்த பிரேமாவின் அத்தைமகன் தன்பையா பாரிஸ்டர் பட்டம் பெற்றுக் கொண்டு இலங்கைக்குத் திரும்பி வந்து சேர்ந்தான். அவனுக்கு பிரேமாவை மணமுடித்து வைக்க வேண்டுமென்பது பாரிஸ்டர் இளைய தம்பியின் பழைய திட்டம். இதற்காகவே அவர் தம்முடைய சொந்தச் செலவில் தம் பையாவைச் சீதமக்கு அனுப்பி வைத்திருந்தார். இதன்பின் பிரேமாவுக்கும் ரமணிக்குமிடையில் நேசம் வளர்ந்தது பற்றி பாரிஸ்டர் இளைய தம்பிக்கு ஒன்றும் தெரியாது. ரமணி என்ன இருந்தாலும் தங்களுடைய தயவிலிருப்பவனாகையினால் அவனிடம் பிரேமா காதல் கொள்ளுவது சாத்தியமென்றும் இளையதம்பி எதிர்பார்கவில்லை. ஆகையினால் அவர் தமது பழைய திட்டத்தின்படியே காரியங்களைச் செய்யலானார். தம்பையா திரும்பியது முதல் பிரேமாவின் மனம் ஒரு நிலைமையிலில்லை. தம்பையாவை எதற்காக தனது தகப்பனார் சீமைக்கு அனுப்பினாரென்பது அவளுக்கு நன்கு தெரியும். அவனிடம் தன் மனம் நாடவில்லையென்றும் அவள் சொல்லிவிடுதற்கில்லை. அவளுடைய வாழ்க்கையில் ரமணி குறுக்கிடும்வரை தம்பையாவையே அவள் தனது கணவனாக மதித்துவந்தாள். அவனுக்கும் தனக்கும் நடந்த கடிதப் போக்குவரத்துகளிலும் சந்தேகத்துக்கு இடம் கொடுக்குமாறு அவள் சிறிதும் நடந்து கொள்ளவில்லை. ரமணி எங்கிருந்தோ திடீரென்று முளைத்து ஒரு சில மாதங்களுக்குள் அவளுடைய வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிட்டான்
ரமணிக்காவது தன்னிடம் வாஞ்சையிருக்குமானால் நிலைமையை ஒருவாறு பிரேமா சமாளித்துக் கொண்டு விடுவாள். அழுது சாகசம் செய்தேனும் ரமணியை மணந்து கொள்ள அவள் முயற்சிப்பாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரமணியின் மனநிலைமை அவளுக்குச் சந்தேகத்துக்கு இடமின்றி இப்பொழுது நன்கு தெரிந்துவிட்டது. அவனிடம் காட்டும் அன்பெல்லாம் பாலைவனத்தில் இறைத்த நீர் போலத்தான் என்பதை உணர்ந்தபின் தம்பையாவிடம் அன்புக் குறைவாக நடந்துகொள்ள அவள் மனம் இடந்தரவில்லை. அதே சமயம் ஆவலோடு காத்திருந்த காதலன் நான்கு வருடகாலப் பிரிவுக்குப்பின் வரும்பொழுது காதலியின் மனம் எவ்வளவு தூரம் குதூகலிக்குமோ அவ்விதக் குதூகலமும் அவளிடம் தோன்றவில்லை.
பிரேமாவின் போக்கை தம்பையா கவனித்தான். ஆனால் ‘பிரேமா, முன் போல இன்னும் சிறியபெண்ணா? பருவமடைந்தவள்! இதோ சில வாரங்களில் மணமகளாகப் போகிறவள்! என்னுடன் முன் மாதிரி சகஜமாகப் பழகுவதற்கு வெட்கப்படுவது இயற்கைதானே!’ என்று நினைத்துத் தன்னைத் தேற்றிக்கொண்டான் தம்பையா.
தம்பையா ஊர் திரும்பியதும் அவனுக்கு நண்பர்களும் உறவினர்களும் ஏக தடபுடலாக விருந்து வைபவங்களை நடத்தினார்கள். அவைகளுக்கெல்லாம் பிரேமாவும் தன்னுடைய தகப்பனாருடன் செல்ல வேண்டியதாயிற்று. நடராஜனும் லீலாவும் ரமணியையும் விடவில்லை. எல்லா விருந்துகளுக்கும் ரமணியையும் அவர்கள் இழுத்துச் சென்றார்கள்.
‘பிரேமாவுக்கும் ரமணிக்குமிடையில் காதலை வளர்க்க எவ்விதம் அந்த நாட்களில் நாம் உடந்தையாகவும் உதவியாகவுமிருந்தோமோ அதேபோல ரமணியிடம் பிரேமா கொண்ட காதலைத் தகர்க்கவும் இப்பொழுது நாம்தான் கட்டுப்பாடாக ஏதாவது செய்யவேண்டும். பிரேமாவை ரமணி கல்யாணம் செய்து கொள்ள மாட்டாரென்பது நிச்சயமாகத் தெரிந்து விட்டது. கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் ரமணி இந்த ஜன்மத்தில் இனி மண வாழ்க்கையில் ஈடுபடமாட்டார். எப்படியாவது அவரிடம் பிரேமா கொண்ட காதலை வெறுப்பாக மாற்றாமல் அனுதாபத்துடன் கூடிய சிநேகமாக மாற்ற வேண்டும். பிரேமாவுக்காகப் பிறந்தவன் தம்பையாதான். தம்பையாவுக்கும் ரமணிக்கும் நெருங்கிய நட்பை உண்டுபண்ணினால் நம்முடைய எண்ணம் கைகூடுமென்று நிச்சயமாக நினைக்கிறேன்’ என்று ஒரு நாள் லீலா தனது கணவன் நடராஜனிடம் சொன்னாள்.
அவளுடைய திட்டத்தின்படியே ரமணியும் தம்பையாவும் அடிக்கடி சந்திக்க நடராஜன் ஏற்பாடுகள் செய்தான். ரமணியின் அடக்கமான சுபாவமும் நல்ல குணமும் நாட்டில் அவனுக்கிருந்த புகழும் வெகு விரைவில் தம்பையாவுக்கு கவர்ச்சியைக் கொடுத்தன. சீமைக்குச் சென்று உயர் தரப்படிப்புப் படித்து விட்டு வந்திருந்தும் சிறிது கூட கர்வமில்லாமல் தம்பையா நடந்து கொண்டது ரமணிக்கு ஆச்சர்யமாயிருந்தது. அவர்கள் அத்யந்த நண்பர்களாக அதிக நாள் பிடிக்கவில்லை. அவர்கள் நெருங்கிய நண்பர்களாகியது பாரிஸ்டர் இளைய தம்பிக்கும் உண்மையில் மிகுந்த சந்தோஷத்தையே கொடுத்தது.
ஒருநாள் தம்பையா, பிரேமா, பாரிஸ்டர் இளையதம்பி, ரமணி, நடராஜன், லீலா எல்லோருமாகச் சேர்ந்து உட்கார்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது. தம்பையா வேடிக்கையாகச் சொன்னான், ‘மிஸ்டர் ரமணி! நம் நடராஜன் கல்யாணத்தின் பொழுது நவலங்காவில் ஒரு விசேஷ மலர் போட்டிருந்தீர்களாமே? அது மாதிரி என் கல்யாணத்தின் பொழுதும் ஞாபகமிருக்குமில்லையா?’ என்றான்.
‘சந்தேகமென்ன? பிரேமா கல்யாணத்துக்கு நவலங்கா இதழ் முழுவதும் ஆர்ட் பேப்பரிலேயே அச்சிட்டு வெளியிடப்படும்! அட்டைப்படம் மூன்று கலரில் இருக்கவேண்டும் மிஸ்டர் ரமணி!’ என்றாள் லீலா.
‘இவ்வளவு தூரம் நீங்கள் சொல்ல வேண்டியதேயில்லை. நவலங்காவின் எஜமானியம்மாள் பிரேமா! அவள் கல்யாணத்துக்கு மலர் வெளியிடப் போகிறோமா என்ற கேள்விக்கே இடமில்லையே! ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. தம்பையாவையும் பிரேமாவையும் சேர்த்துப் படங்கள் பிடிக்க வேண்டியதுதான் பாக்கி! படமெடுக்கவும் வேறு யாரையும் அமர்த்தப்போவதில்லை. நானே படம்பிடித்துவிடுவதென்று உத்தேசம்!’ என்றான் ரமணி.
‘சபாஷ் மிஸ்டர் ரமணி! சபாஷ்! மாப்பிள்ளைத் தோழ னென்றால் உங்களைப்போலல்லவா இருக்க வேண்டும்!’ என்றான் தம்பையா.
இந்தக் கேலிப்பேச்சுகள் பிரேமாவுக்குச் சிறிதும் ரஸிக்கவில்லை. ஆனால், தம்பையாவும் ரமணியும் அந்நியோன்னியமாயிருப்பது ஏனோ அவளுக்குத் தெரியாமலே அவள் மனதுக்கு ஒரு ஆறுதலையும் சாந்தியையும் அளித்து வந்தது.
அடுத்த இரண்டு வாரங்கள் வரை நவலங்காவில் குந்தளப்பிரேமா வெளியாகவில்லை. சில அசந்தர்ப்பங்களினால் தொடர் நாவல் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக நின்றிருப்பதாய் ரமணி அறிவித்திருந்தான். ஆயினும் கதையை எப்படி முடிப்பதென்று அவன் மனதில் கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணமென்பதை பிரேமாவும் லீலாவும் சுலபமாக ஊகித்துக்கொண்டார்கள்.
15. மின்னலின்றி கோடையிடி !
மின்னலின்றி கோடையிடி இடிப்பதைப்போல மறு வாரம் பாரிஸ்டர் இளையதம்பிக்கு வந்த ஒரு கடிதம் எல்லோருக்கும் பாரதூரமான அதிர்ச்சியை உண்டுபண்ணியது.
அன்று வெள்ளிக்கிழமை. பிரேமா செட்டியார் தெருவுக்கு சுவாமி தரிசனம் செய்யப் போயிருந்தாள். வீட்டுக்குத் திரும்பியவுடன் அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
‘எஜமான் என்னமோ ரொம்பக் கோபமாயிருக்கிறாங்க! வந்தவுடனேயே உங்களை மாடிக்கு வரச்சொன்னாங்க’ என்றாள் வேலைக்காரி.
‘நான் கோவிலுக்குப் போயிருந்த பொழுது வீட்டில் என்ன நடந்தது? யாராவது வந்துவிட்டுப் போனார்களா?’ என்று நிதானமாகக் கேட்டாள் பிரேமா.
‘தபால்காரன் வந்துவிட்டுப் போனான். கொஞ்சநேரம். கழித்து அச்சாபீஸ் மானேஜரை எஜமான் அழைத்துவரச் சொன்னாரு. அவரிடம் எஜமான் பிரமாதமாய்ச் சப்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தார். வேறு ஒருவரும் வீட்டுக்கு வரவில்லை!’ என்றாள் வேலைக்காரப்பெண்.
நவலங்கா சம்பந்தமாகத்தான் ஏதாவது தகராறு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று பிரேமா நினைத்துக் கொண்டு தன் தகப்பனார் அறைக்குச் சென்றாள்.
பிரேமா:- என்ன அப்பா, என்னை அழைத்தீர்களாமே!
இளையதம்பி:- ரமணி என்ன செய்திருக்கிறான் பார்த்தாயா? அவனை நம்பி ஏராளமான பணத்தை முதலீடு செய்ய வேண்டுமென்று நீ சொன்ன பொழுதே இது மாதிரித் தொழிலெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதென்று நான் ஆட்சேபித்தேன். என் வார்த்தையை நீ கேட்பதாயில்லை. ரமணி உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளனென்றும் ஆகாயத்தை வில்லாய் வளைத்துவிடுவான், மணலைக் கயிறாய்த் திரித்துவிடுவான் அப்படி, இப்படி என்று வானளாவிப் புகழ்ந்து நவலங்காவை ஆரம்பிக்கச் சொன்னாய். இப்பொழுது அவன் செய்திருக்கும் அயோக்கியத்தனத்தைப் பார்த்தாயில்லையா?
பிரேமா:- ஏன் அப்பா இப்படிப் படபடப்பாக பேசுகிறீர்கள்? அவர் என்ன செய்தார்? விஷயத்தைச் சொல்லாமல் கோபித்துக் கொண்டீர்களானால் என்ன செய்வது?
இளையதம்பி: இன்னும் என்ன செய்யவேண்டும்? இதோ இந்தக் கடிதத்தைப் படித்துப்பார்.
இளையதம்பி கொடுத்த கடிதத்தை பிரேமா படிக்க வாரம்பித்தாள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
நவலங்கா முதலாளியவர்களுக்கு,
கொழும்பு.
அன்புள்ள ஐயா,
ஸ்ரீமதி சாந்தா அம்மையாரினால் எழுதப்பட்ட வனஜா என்ற நாவலை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ ரமணி காப்பியடித்து தம்முடைய பெயரிலேயே நவலங்காவில் பிரசுரம் செய்து வருவதாக எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நவலங்காவின் பழைய பிரதிகளைத் தருவித்துப் பார்த்ததில் அதில் பிரசுரமாகும் குந்தளப் பிரேமா கதை எமது கட்சிக்காரராகிய ஸ்ரீமதி சாந்தா அம்மையாரினால் எழுதப்பட்ட வனஜா புத்தகத்தை வைத்துக் கொண்டு பெயர்களை மட்டும் மாற்றி வைத்து எழுதப்பட்ட தென்பது ருசுவாகியிருக்கிறது. நவலங்கா பத்திரிகை ஆரம்பிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே வனஜா புத்தகம் பிரசுரமாகி மார்க்கெட்டில் விற்பனைக்கு இருந்த தென்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
இந்தியாவில் வனஜா புத்தகம் இரண்டு பதிப்புகள் அச்சிட்டு எண்பதினாயிரம் புத்தகங்கள் விற்பனையாகி யிருக்கின்றன. இலங்கையில் குறைந்தபட்சம் ஐம்பதினாயிரம் பிரதிகளேனும் சுலபமாக விற்பனையாக வேண்டும். இப் புத்தகத்திலிருந்து காப்பியடித்து குந்தளப்பிரேமா என்ற பெயருடன் அதே கதையை தங்கள் பத்திரிகை பிரசுரித்து வருவதினால் எமது கட்சிக்காரருக்கு நஷ்டமேற்பட்டிருக்கிறது.
ஆகையால் இந்த நஷ்டத்துக்கு தாங்கள் ரூபா 50,000 ஈடு செலுத்த வேண்டுமென்றும் இல்லாதபட்சத்தில் நஷ்டஈடு தொகையை வசூலிக்க கோர்ட்டில் வழக்குத் தொடரப்படு மென்றும் இதனால் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இப்படிக்கு
எஸ்.குணரத்னா,
கமலாலயம்,
கொழும்பு கிளைக் காரியாலயம்.
இந்தக் கடிதத்தை பிரேமா படித்து முடித்தவுடன் சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். இளையதம்பி ஆத்திரம் அடங்காதவராய்ப் பேசவாரம்பித்து ‘படித்துப்பார்த்தாயல்லவா கடிதத்தை! ரமணியின் அயோக்கியத்தனத்துக்கு இன்னும் என்ன அத்தாட்சி வேண்டும்? நாம் பத்திரிகை நடத்தும் யோக்கியதையைப் பார்த்து ஊரே சிரிக்கிறது. இவ்வளவு காலம் நமக்கு ஒன்றுமே தெரியாமலிருந்திருக்கிறது. பிரசுரமான ஒரு புத்தகத்தைக் காப்பியடித்து சொந்தக் கதை மாதிரி பத்திரிகையில் போட வெட்கமில்லையா என்று கேட்டு நூற்றுக்கணக்கான கடிதங்கள் பத்திரிகால லயத்துக்கு வந்திருக்கின்றனவாம். அவ்வளவு கடிதங்களையும் மானேஜர் ரகசியமாக வைத்துக் கொண்டு ஒன்றுமே சொல்லாமலிருந்திருக்கிறார். இந்தக் கடிதம் வநத பிறகு அழைத்து விசாசித்த பொழுதுதான் குந்தளப்பிரேமாவைப் பற்றி புகார் செய்து நூற்றுக்கணக்கான கடிதங்கள் காரியாலயத்துக்கு வந்திருக்கிறதென்று சொல்லுகிறான் அந்த முழு முட்டாள்!’ என்றார்.
பிரேமா:- இந்த நஷ்டஈடு கோரிக்கைக் கடிதம் கமலாலயத்தின் இலங்கைக் கிளை ஸ்தாபனத்திலிருந்தல்லவா வந்திருப்பதாகத் தெரிகிறது?
இளையதம்பி:- யாரிடமிருந்து வந்தாலும் விஷயம் ஒன்றுதானே? சென்னை காரியாலயத்தார் வழக்கெடுத்து நடத்தும்படி இங்குள்ள தங்களுடைய கிளை ஸ்தாபனத்துக்கு உத்தரவிட்டிருப்பார்கள். அதன் பேரில் இவர்கள் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இப்படி நோட்டீஸ் வரப்போகிறதென்பது கூட நம் மனேஜருக்கு நான்கைந்து நாட்கள் முன்பே தெரியுமாம். அதையும் நமக்குச் சொல்லாமலிருந்திருக்கிறான். இதை நினைத்தால்தான் அவனை என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பிரேமா:- நான்கைந்து நாட்களுக்குமுன்பே மானேஜருக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் அப்பா! தெரிந்திருந்திருந்தால் இவ்வளவு பெரிய விஷயத்தை காரியம் மிஞ்சிய பிறகும் நம்மிடம் மானேஜர் சொல்லாமலிருந்திருப்பாரா?
இளையதம்பி :- வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெகுளி நீ! உனக்கு ஒன்றும் தெரியாது. ஒரு நாள் நம் மனேஜர் கடைவீதிக்குச் சென்றிருந்த பொழுது கமலாலயத்தார் சென்னையிலிருந்து இப்படி ஒரு கடிதம் வந்திருப்பதாயும், தாங்கள் நஷ்டஈடு வழக்குத் தொடரப் போவதாயும் சொன்னார்களாம். அப்பொழுதாவது இதை உடனே நம்மிடம் சொல்லியிருக்க வேண்டுமில்லையா?
பிரேமா: அப்பா, சாந்தாவின் வனஜா புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். அதுவும் குந்தளப்பிரேமாவும் ஒரே கதைதானென்பது உண்மைதான். அதில் ஆட்சேபனையில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும். வனஜாவைப் பார்த்து ரமணி காப்பியடிக்கவில்லை! இதை நீங்கள் நம்பலாம்.
இளையதம்பி : அதெப்படி? நஷ்டஈடு கடிதமனுப்பியவர்களும் நூற்றுக்கணக்கான புகார் கடிதங்கள் எழுதியவர்களும் முட்டாள்களா?
பிரேமா:- பதட்டமில்லாமல் கேளுங்கள் அப்பா! ரமணி இலங்கைக்கு வந்த பிறகுதான் வனஜா புத்தகம் இந்தியாவில் பிரசுரமாகியிருக்கிறது நவலங்காவில் குந்தளப்பிரேமா பிரசுரமாகத் தொடங்கிய ஒரு வாரத்துக்குப் பின்னரே வனஜா இந்தியாவில் பிரசுரமானதற்கு அப்புத்தகத்திலிருக்கும் முன்னுரையின் தேதியே சரியான ருசு. தவிர சில தினங்களுக்கு முன்புதான் அந்தப் புத்தகம் இலங்கைக்கு வந்திருக்கிறது. இதில் ஒரு பெரிய மர்மம் இருக்கிறது, அப்பா! அது ரமணி ஒருவருக்குத்தான் தெரியும்.
இளையதம்பி :- ஒரு ரகசியமும் இல்லை. இந்தியாவில் புத்தகம் மார்க்கெட்டுக்கு வருவதற்கு முன்பே ரமணிக்கு ஒரு பிரதி கிடைத்திருக்க வேண்டும். அதை வைத்துக் கொண்டு இந்த முட்டாள் காப்பியடித்திருக்கிறான். சுயமாக எழுதும் யோக்கியதையற்றவனை ஆசிரியனாக வைத்துக் கொண்டு பத்திரிகை நடத்துகிறாயே உனக்கு வெட்கமில்லையா என்று ஒருவன் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறான். அவனுக்கு என்ன பதில் சொல்ல? உன் பேச்சைக் கேட்டு நாதியற்றுத் தெருவில் திரிந்து கொண்டிருந்தவனுக்கு வேலையும் கௌரவமும் கொடுத்தது நம்முடைய கௌரவத்தையே பாழ்படுத்திவிட்டது. ஏதோ சமரசம் பேசி ஒன்றுக்குப் பாதி யாகவேனும் நஷ்டஈடு கொடுத்து கோர்ட்டில் நமது கௌரவம் சந்தி சிரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரேமா நேராக கமலாலயத்துக்குப்போக நினைத்து லீலாவிடம் சென்று எல்லா விஷயங்களையும் சொன்னாள். கொழும்பில் தான் இருப்பது கமலாலயத்துக்குத் தெரியக் கூடாதென்று ரமணி ஏன் சொன்னான்? தன் பெயரையே அவன் ஏன் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்? சுந்தரம் இலங்கையிலிருக்கிறானென்பதை வாய் தவறிக்கூட கமலாலயத்துக்குச் சொல்லி விடக்கூடாதென்று திரும்பத் திரும்ப ரமணி வற்புறுத்தியதற்கும் வனஜா புத்தகத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்க வேண்டுமென்று பிரேமாவும் லீலாவும் நினைத்தார்கள். கமலாலயத்துக்குப் போய் விசாரித்தால் பல உண்மைகள் புலப்படலாமென்று அவர்களுக்குத் தோன்றியது. ஆகையால் இருவரும் கமலாலய மானேஜரைச் சந்திக்கச் சென்றனர்.
ஆனால் கமலாலய மானேஜர் இவர்களுக்கு எவ்விதத் தகவலும் கொடுப்பதாயில்லை. நவலங்கா மீது நஷ்டஈடு வழக்குத் தொடரும்படி தலைமைக் காரியாலயத்திவிருந்து தகவல் கிடைத்ததாயும் அதன் படி ஒரு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாயும் அதற்குமேல் தங்களுக்கு ஒன்றும் தெரியா தென்றும் மானேஜர் கூறினார்.
பிரேமா:- குந்தளப் பிரேமா பிரதிகளை இந்தியாவுக்கு நீங்கள் தான் வாங்கியனுப்பினீர்களா?
மானேஜர்:- நவலங்காவின் பழைய பிரதியொன்றை சென்னையில் எங்கோ பார்த்ததாயும் குந்தளப்பிரேமா கதை வெளியான பழைய பிரதிகளையெல்லாம் வாங்கியனுப்ப வேண்டுமென்றும் இனி நவலங்கா பத்திரிகையை தொடர்ச்சியாக ஒவ்வொரு இதழிலும் இரண்டு மூன்று பிரதிகளுக்குக் குறையாமல் வாங்கியனுப்ப வேண்டுமென்றும் சென்னை தலைமைக் காரியாலயத்திலிருந்து கடிதம் வந்தது. அதன் படி வாங்கியனுப்பினோம். பிறகு குந்தளப்பிரேமா கதை எழுதும் ரமணி என்பவர் யார் என்றும் அவருடைய அங்க அடையாளங்கள் என்ன என்றும் முடியுமானால் அவருடைய போட்டோ ஒன்று வாங்கியனுப்பும்படியும் எழுதியிருந்தார்கள். இவைகளை விபரமாக எழுதினோம். தங்களுடைய கல்யாணத்துக்காக போட்டோ படம் பிடிக்க வந்த போட்டோக்கிராப்பரிடம் நாங்கள் சொல்லியனுப்பினோம். அவர் உங்களைப் படம் பிடித்தபொழுது சற்று தூரத்தில் நின்ற ரமணியையும் ஒரு படம் பிடித்துக் கொடுத்தார். அதையும் சென்னைக்கு அனுப்பிய பிறகு வழக்குத் தொடரும்படி கடிதம் வந்தது.
பிரேமா: அப்படியானால் ரமணி யாரென்பது தெரிந்து தான் இந்த வழக்குத் தொடர்ந்திருக்கிறார்களென்று சொல்லுங்கள்.
மனேஜர்:. அப்படித்தான் தோன்றுகிறது.
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் சாந்தா விடமிருந்து கமலாலய மானேஜருக்கு ஒரு முக்கியமான தந்தி வந்தது.
அந்தத்தந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:-
“வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் கொடுத்திருப்பீர்களென்று நம்புகிறேன். நான்கு நாட்களில் நான் கொழும்புக்குப் புறப்பட்டு வருகிறேன். சமரசம் பேச விரும்பினால் ரமணியுடன் கமலாலயத்துக்கு வந்து என்னை நேரில் சந்திக்கும்படி நவலங்கா முதலாளிக்கு எழுதுங்கள்.
சாந்தா.”
இந்தத் தந்தியைப் பார்த்தவுடன் பிரேமாவுக்கு ரமணியிடம் வைத்திருந்த சொற்ப நம்பிக்கையும் சிதைய வாரம்பித்தது. உண்மையாகவே ரமணி காப்பியடித்திருக்காவிட்டால் சாந்தா பணச்செலவு செய்து கொண்டு கொழும்புக்கு வருவாளா? என்று நினைத்தபொழுது ரமணியிடம் அவளுக்குச் சிறிதளவு வெறுப்புத் தட்டவும் ஆரம்பித்தது.
“சாந்தா நேரில் வருவதென்றால் ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. ரமணியை வைத்துக்கொண்டு அவளுடன் நேருக்கு நேராகப் பேசி கோர்ட்டுக்குப் போகாமலே இந்த விஷயத்தை ஒருவாறு முடித்துவிடலாம். எதற்கும் என் தகப்பனாருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதுங்கள்” என்று கமலாலய மனேஜரிடம் பிரேமா சொல்லிவிட்டு லீலாவுடன் கிளம்பினாள்.
“இந்தத் தந்தியைப் பற்றி என்ன நினைக்கிறாய் லீலா?” என்று வரும்வழியில் கேட்டாள் பிரேமா.
லீலா:- “நினைப்பதற்கு என்ன இருக்கிறது? குந்தளப் பிரேமா கதையில் புதைந்து கிடக்கும் மர்மம் எல்லாம் வெளியாகவேண்டிய காலம் வந்து விட்டதென்று நினைக்கிறேன்.
பிரேமா:- அப்படியென்றால் நீ சொல்வதின் அர்த்தம் புரியவில்லையே!
லீலா:- குமாரி சாந்தா புத்தக வழக்குக்காக கொழும்புக்குப் புறப்பட்டு வருவாளென்று எனக்குத் தோன்றவில்லை. நஷ்டஈடு வசூலிப்பதைத் தவிர அவளுக்கு வேறு நோக்கம் இல்லாதிருக்குமானால் அவள் நேரில் எதற்காக வரவேண்டும்? வழககறிஞர் மூலமாகவே வழக்கு நடத்தி வசூலித்துக் கொள்ளலாமில்லையா?
பிரேமா: வழக்கு நடத்தாமல் சமரசமாகப் பணம் வசூல் செய்யவேண்டு மென்பதற்காக வருவதாய் தந்தியில் தான் குறிப்பிட்டிருக்கிறாளே! நஷ்டஈடு வசூலித்தாற் போலவும் ஊரைச் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்குமென்று நினைத்து வரக்கூடாதா?
லீலா:- நான் அப்படி நினைக்கவில்லை. சாந்தாவின் புத்தகங்களை படிப்பதில்லை; அவளுடைய பெயரை காதினாலும் கேட்பதில்லையென்று ரமணி வைராக்கியம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தால் அவருக்கும் சாந்தாவுக்கும் நிச்சயம் ஏதோ சம்பந்தமிருக்க வேண்டுமென்றே எனக்குத் தோன்றுகிறது. தவிர போட்டோவையும் அவள் தருவித்துப் பார்த்து விட்டு வருகிறாளென்பதை மறந்துவிடாதே. இவர்கள் இருவருடைய வாழ்க்கையிலும் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது. அது வெளியாக வேண்டிய காலம் வந்து விட்டது. இன்று வியாழக்கிழமையில்லையா? திங்கட்கிழமை காலை சாந்தா வந்துவிடுவாள். அதன் பிறகு எல்லாம் தானே தெரிகிறது. ஆமாம், சாந்தாவின் வழக்கறிஞர் நஷ்டஈடு கேட்டிருப்பது ரமணிக்குத் தெரியுமா? அவரிடம் இதைப் பற்றி நீ கேட்டாயோ?
பிரேமா:- இல்லை. அவருடன் இதைப் பற்றி நான் பேசவே கூடாதென்று அப்பா சொல்லியிருக்கிறார். குந்தளப்பிரேமாவைப் பற்றி புகார் செய்து வந்த கடிதங்களை ரமணிக்கு அனுப்புவதாயும் அவராக வலுவில் என்ன சொல்லுகிறாரென்று பார்க்கலாமென்றும் அப்பா சொன்னார். ஆகையால் இதைப்பற்றி அவரிடம் நான் ஒன்றுமே கேட்க வில்லை.
இவர்கள் இப்படி பேசிக்கொண்டே பங்களாவுக்கு வந்து சேர்ந்தார்கள். பிரேமா சொல்லியது போல இளைய தம்பி சாந்தா எழுதிய வனஜா புத்தகத்தையும் குந்தளப் பிரேமாவைப்பற்றி வந்த புகார் கடிதங்களையும், நஷ்டஈடு கோரி வழக்கறிஞரிட்மிருந்து வந்த கடிதத்தையும் ஒரு பெரிய கட்டாகக்கட்டி ரமணிக்கு அனுப்பி வைத்தார். முதலாளியிடமிருந்து வந்ததால் அதை ரமணி உடனே பிரித்துப் பார்த்தான்.
கடிதங்களைப் படித்தபொழுது ரமணிக்கு அவனை மீறிக் கொண்டு ஆத்திரம் வந்தது. மானேஜரை உரத்துச் சப்தமிட்டுக் கூப்பிட்டு ‘இதெல்லாம் என்ன நாடகம்?’ என்று அதட்டிக் கேட்டான்.

மானேஜர்:. முதலாளி அனுப்பியிருக்கிறார் உங்கள் பார்வைக்கு.
ரமணி:- இவ்வளவு கடிதங்களும் ஒரே நாளிலா வந்த? இவைகளை இதற்கு முன் எனக்கு என் காட்டவில்லை?
மானேஜர்:- நீங்கள் விரும்பமாட்டீர்களென்று நினைத்து காட்டாமலிருந்து விட்டேன். அது என் குற்றம் தான். இப்பொழுது விஷயம் மிஞ்சி விட்டபடியினால் அவற்றை முதலாளிக்குக் காட்ட வேண்டியதாகி விட்டது. அதுவும் நானாகக் காட்டவில்லை. அவர் அழைத்து விசாரித்ததால் காட்டினேன். என்னிடம் கோபிப்பதில் என்ன பிரயோசனம் ஸார்! சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவன் தானே நான்?
மானேஜர் சொல்லுவதில் நியாயமிருப்பதாக ரமணிக்கும் தோன்றியது. ‘உண்மை! நீங்கள் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. முதலாளிக்கு இந்தக் காரியாலயம் முழுவதும் சொந்தம். அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இருந்தாலும் இந்த முட்டாள்களைப் போல நமது முதலாளியும் முழு முட்டாளாக இருப்பாரென்று நான் எதிர் பார்க்கவில்லை. பொறாமையினால் யாரோ சில பயித்தியக்காரன்கள் புகார் செய்திருக்கிறார்கள். அதைப்பார்த்துப் பயந்து போயிருக்கிறார்’.
மானேஜர்: இல்லை. நீங்கள் எல்லாக் கடிதங்களையும் படித்துப் பார்க்கவில்லை யென்று நினைக்கிறேன். வனஜா புத்தகம் எழுதிய சாந்தா அம்மாள் நம்மிடமிருந்து நஷ்டஈடு கேட்டிருக்கிறாள். அதைப் பார்த்த பிறகுதான் முதலாளிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
ரமணி:- நஷ்டஈடு கேட்டாலென்ன? அவள் புத்தகத்தைப் பார்த்து நான் காப்பியடிக்கவில்லையென்பதை ருசுப் படுத்தினால் போதுமில்லையா? அதற்கு இவ்வளவு பதட்டமும் ஆர்ப்பாட்டமும் எதற்காக?
மானேஜர்:- நான் சொல்லுவதைக் கேட்டு தயவு செய்து கோபித்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் குந்தளப்பிரேமா கதையை எழுதும்போதெல்லாம் நான் கூடவே இருந்து பார்த்திருக்கிறேன். நீங்கள் எதையும் பார்த்து எழுதாமல் சுயமாக எழுதியதை நான் நேரிலேயே கவனித்த தால்தான் உங்கள் நாவலைப்பற்றி புகார் செயது வந்த கடிதங்களையெல்லாம் பொறாமை பிடித்தவர்களின் காரியமென்று நினைத்து உங்களுக்குக் காட்டாமலே வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது வனஜா புத்தகத்தைப் படித்த பிறகு என்னுடைய நம்பிக்கை சிதைந்து போய் விட்டது. தயவு செய்து கோபிக்கக் கூடாது. வனஜாவைப் பார்த்து நீங்கள் காப்பியடிக்கவில்லை யென்று எனக்குத் தெரியும். ஆனால், உலகம் அதை நம்பவே நம்பாது. அந்தக் கதையைங் படித்து விட்டுத்தான் குந்தளப்பிரேமாவை நீங்கள் எழுத ஆரம்பித்திருக்க வேண்டுமென்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது.
இப்படிச் சொல்லிவிட்டு மானேஜர் சட்டென்று வெளியே போய்விட்டார். எல்லோரும் ஒருமுகமாகக் குற்றஞ்சாட்டி யதினால் ரமணியின் சுயமரியாதைக்கே அதிர்ச்சியேற்பட்டு விட்டது. ஆத்திரம் கொஞ்சம் தணிந்த பிறகு இதுவரை சாந்தாவின் புத்தகங்களைப் படிப்பதில்லையென்ற வைராக்கியத்தைக் கைவிட்டு வனஜாவைக் கையிலெடுத்துப் படிக்கவாரம்பித்தான்.
வனஜாவைப் பாதி படித்தவுடனேயே ரமணியின் தலை சுற்றவாரம்பித்தது அவனுக்குத் தனது கண்களை நம்ப முடியவில்லை. ஒரு மணி நேரத்தில் படித்து முடிக்கவேண்டிய புத்தகத்தை வாசிக்க மூன்று மணி நேரம் பிடித்தது. ஒவ்வொரு கட்டங்களிலும் நிறுத்திவிட்டு அவன் யோசிக்கலானான். அதி தீவிரமான யோசனை அவனுக்கு மூளைக் குழப்பத்தையே உண்டு பண்ணிவிடும் போலிருந்தது. தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு சம்பவத்தையும் வனஜா புத்தகம் சித்தரிப்பதைப் படிக்கப் படிக்க அவனுடைய சப்த நாடிகளும் அதிர்ச்சியடைந்தன. பிள்ளைப் பிராயத்தில் குந்தளம் தனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று பிடிவாதம் செய்து அழுதது; தனக்கும் குந்தளத்துக்கும் பாஸ்கரய்யர் விளையாட்டாகக் கல்யாணம் செய்து வைத்தது; அப்பொழுது முனிசாமி நாதசுர கிராமபோன் பிளேட்டு வைத்தது; இவைகளைப் பார்த்து தனது தாயார் ஆத்திரமடைந்து தன்னைப் பிரித்துக் கொண்டு சென்னைக்குப் போனது முதலான ஒவ்வொரு சம்பவமும் கல்லும் கரையும்படி உருக்கமாக வர்ணிக்கப்பட்டிருந்தது வனஜாவில்.
வனஜாவுக்கும் தான் எழுதும் குந்தளப்பிரேமாவுக்கும் ஒரே ஒரு வேற்றுமையைத் தான் ரமணி கண்டான். கதாநாயகன் கோபால் குந்தளத்தை உள்ளன்புடன் நேசித்து அவளை மணக்க முடியாமற் போனபடியினால் வாழ்க்கையை வெறுத்து பரதேசியைப்போல அயல்நாடு போய் விடுகிறான். ஆனால் குந்தளத்துக்கு கோபாலிடம் காதலிருக்கிறதா? இதை அவள் எவ்விதத்திலும் காட்டியதாக ரமணி தனது கதையில் குறிப்பிடவில்லை. கோபாலின் காதல் ஒரு தலைக் காதலாயிருக்கிறது. குந்தளத்தைக் காதலித்து அவளுடைய மனதை அறியாமலே அவன் அஞ்ஞாதவாசம் செய்யப் போய் விடுகிறான். இதுதான் ரமணி எழுதும் குந்தளப்பிரேமா கதையின் போக்கு. சாந்தா எழுதியுள்ள வனஜாவிலோ இதற்கு நேர்மாறாக வர்ணிக்கப்பட்டிருந்தது. வனஜாவின் காதலை சாந்தா வெகு உருக்கமாக வர்ணித்திருந்தாள். கிராமக் கோவிலில் கதாநாயகனின் மனதை அறியக் கடைசிமுறையாக ஒரு தடவை முயற்சித்ததாயும் அம் முயற்சியும் தோல்வியடையவே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு வீட்டை விட்டு ஒடியதாயும் தற்செயலாகக் கதாநாயகனைப் பிறகு சந்திக்க நேரிடவும் இருவருக்கும் திருமணம் நடந்ததாயும் வனஜா கதையை சாந்தா முடித்திருந்தாள். வனஜாவின் கதை ரமணிக்குப் பல சந்தேகங்களைக் முடித்தி கிளப்பிவிட்டன. ஒரு விஷயத்தை அவன் தீர்மானப்படுத்திக் கொண்டான். குந்தளம் சொல்லியே இக் கதையை சாந்தா எழுதியிருக்க வேண்டுமென்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. தன்னையும் குந்தளத்தையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியமுடியாத பல சிறு சம்பவங்கள்கூட வனஜா கதையிலிருந்தது அவனுடைய அபிப்பிராயத்தை நன்கு ஊர்ஜிதப்படுத்திவிட்டது.
“குந்தளம் சொல்லி எழுதிய கதையாயிருந்தால் இதன் படி குந்தளத்துக்கு என்னிடம் உள்ளன்பு இருந்தே தீர வேண்டும். அவள் என்னிடம் காதல் கொண்டிருப்பது உண்மையா? அந்த பாக்கியம் எனக்குக் கிடைத்திருந்துமா முட்டாள்தனமாக அதை உதறித் தள்ளிவிட்டு கோழைத்தனமாக இலங்கைக்கு ஓடி வந்துவிட்டேன்? பெண்களைத்தான் பேதையென்பார்கள்? அவர்களைவிட மோசமாக, பேடித்தனமாக அல்லவா நான் நடந்து கொண்டு விட்டேன்? இப்பொழுது ஞாபகம் வருகின்றது. அன்று விளநகர் கிராமக் கோவிலில் அவள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும்! ஆனால் அன்று தன்னுடைய காதலை கடைசி முறையாக வெளியிட்டதாயும் ஆனால் அவள் மனதை நான் ஏமாற்றமடைந்து உடையச் செய்து விட்டதாயும் எழுதியிருப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குந்தளத்தின் மனதை அறிய நான் எவ்வளவு முயற்சிகள் செய்து பார்த்தேன்? ஒன்றுக்கும் அசைந்து கொடாமல் என்னிடம் ஆசையிருப்பதை ஒரு சிறிதும் காட்டிக் கொள்ளாம லிருந்து விட்டு இப்பொழுது என் பேரிலேயே குற்றஞ் சாட்டுகிறாள்! இது என்ன நியாயம்? இதெல்லாம் எப்படியாவது போகட்டும்! அவள் மனம் இப்பொழுது தெரிந்ததே போதும். இதை எனக்கு உணர்த்திக் காட்டவே வனஜா கதையை எழுதச் சொல்லியிருப்பாளோ? ஏன் அப்படி இருக்கக் கூடாது? சாந்தாவை விசாரித்தால் எல்லாம் தெரிந்துவிடும். பட்டுப் போன மரத்தைத் துளிர்க்க வைத்த பரம்குரு அவள் எனக்கு! கடலில் சாவுக்கு மன்றாடும் மனிதனைக் கைதூக்கி உயிர்ப் பிச்சை கொடுத்த கண்கண்ட தெய்வம் சாந்தா! அவளிடம் நான் எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தேன்? என் வாழ்க்கையில் குறுக்கிட்ட எமன் என்று எவ்வளவு முறை அவளைச் சபித்தேன்? குந்தளத்தின் மனதை நோகச் செய்த மகா பாதகி என்று எவ்வளவு முறை வாயாரத் திட்டிக் கொட்டினேன்? சத்ருவாக ஒரு காலத்தில் தென்பட்ட அதே சாந்தா இன்று என் வாழ்வை மலரச் செய்த புனிதவதியாகிவிட்டாள். அவளை நான் கையெடுத்துக் கும்பிட்டாலும் தகும். கமலாலயத்தின் மூலமாக இன்றே அவளுக்குக் கடிதம் எழுதுகிறேன்! நான் இலங்கையிலிருப்பதை சாந்தாவின் மூலம் அறிந்தால் குந்தளம் எவ்வளவு சந்தோஷப்படுவாள்!’
இப்படி மனம்போனவாறு சிந்திக்கலானான் ரமணி. அவன் முகத்தில் ஒரு புதியகளை ஏற்பட்டது. பேயடித்தவன் போன்றிருந்தவனிடம் திடீரென்று ஒரு புதிய உற்சாகமும் ஆனந்தமும் தாண்டவமாடின. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் கவலை தோய்ந்த முகத்துடன் பிரேமா அறையில் நுழைந்தாள். வரும்பொழுது அவள் என்னென்னவோ நினைத்துக் கொண்டு வநதாள். ரமணி வெட்கிக் குன்றிப்போயிருப்பானென்றும் அவனுடன் எப்படிப் பேசுவது? என்ன பேசுவது? எவ்விதம் அவனிடமிருந்து உண்மையைக் கிரகிப்பது? என்று யோசித்துக் கொண்டும் கலக்கத்துடன் அவள் வந்தாள். ஆனால் ரமணியின் முகம் என்றுமில்லாத மலர்ச்சியடைந்திருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு இன்னும் ஒன்றுமே தெரியாதோ என்று அவள் சந்தேகிக்க வாரம்பித்தாள்.
– தொடரும்…
– குந்தளப் பிரேமா, முதற் பதிப்பு: 1951, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.