குந்தளப் பிரேமா






(1951ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7. மாந்தோப்பில் மதிமயக்கம்
நதிக்கரையோரமாக ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்து சென்ற சமயம் சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந் தான். ஆற்று ஜலத்தில் படர்ந்திருந்த மர நிழல்களின் இடை யிடையே மாலைக் கதிரவனின் செங்கிரணங்கள் பிரதிபலிக்க மெல்லிய காற்றில் ஒளியும் நிழலும் நீரின் மேல் அசைந்தா டும் காட்சி ஒரு வர்ண ஜாலம் போன்றிருந்தது. வசந்தகால புஷ்பங்கள் இயற்கை காட்சியைப் பூரணத்துவம் பெற்று விளங்கச் செய்தன.

‘எவ்வளவு ரம்மியமாயிருக்கிறது பார்த்தாயா இந்த இடம்!’ என்றான் சுந்தரம் சற்று நின்று.
பூரண சந்திரன் போலப் பொலிவுடன் பிரகாசித்த முகத் தின் மீது காற்று வேகத்தில் படர்ந்த கூந்தலை ஒதுக்கிக் கொண்டு ‘ஆமாம் நகரவாசிகளுக்கு நாட்டுப்புறத்தை எப் பொழுதாவது பார்த்தால் அப்படித்தான் தோன்றும்! அதி லும் நீங்கள் கற்பனையுலகில் சஞ்சரிக்கும் கதாசிரியரல்லவா?’ ஒரு என்றாள் கிண்டலாக குந்தளம்.
சுந்:- நான் ஒரு வார்த்தை சொன்னால் பதிலுக்கு ஒன் பது வார்த்தை சொல்கிறாயே குந்தளம். நீ பேசுவது கூட அழகாய்த்கானிருக்கிறது.
குந்:- அப்படியிருந்துமா அதிகப் பிரசங்கியென்று பட் டம் கொடுக்கிறீர்கள்? நீங்கள் பேசுவது முன்னுக்குப் பின் முரணாயிருக்கிறதே.
சுந்:- உன் நடத்தையைப்போல!
குந்:- என் நடத்தையில் முரண்பாடா? ஆச்சர்யமா யிருக்கிறது உங்கள் ஆராய்ச்சி!
சுந்:- நாம் சின்ன வயதிலிருந்த பொழுது வாருங்கள், பாருங்கள், சொல்லுங்கள் என்று மரியாதை அடைமொழிளுடனா என்னுடன் பேசுவாய்! இந்த மரியாதை முரண்பாடில்லையா?
குந்: அதெப்படி? கால வேறுபாட்டை அனுசரித்தது முரண்பாடாகுமா? அத்தானும் முன்போல பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தால் நானும் சிறுமி குந்தளம்மாதிரி இருக்கலாம், பேசலாம்!
சுந்:- இதற்காகவேனும் வளராமல் சிறுவனாகவே இருந்துவிடக்கூடாதா என்று தோன்றுகிறது! வயது வளர்ந்தது என் குற்றமில்லையே? அதற்கா இந்த தண்டனை? நீ விரும்பினால் இந்தக் கிராமப் பள்ளிக்கூடத்தில் வேண்டுமானாலும் மறுபடி புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போயிருந்து படித்து விட்டு வருகிறேன்!
குந்: அட பாவமே! அத்தான் படிக்கப்போனால் நான் மறுபடியும் மரச்சொப்புகளை வைத்துக்கொண்டு சமைக்க உட்காரவேண்டியதுதான்!
குந்தளம் இப்படிச் சொல்லவும் சுந்தரத்துக்கு பழைய சம்பவங்கள் ஞாபகத்துக்கு வந்தன. சரியாகப் பாவாடை கட்டிக்கொள்ளத் தெரியாத சிறுமி குந்தளம் ‘நீதான் ஆம்படையானாம், நான்தான் பெண்டாட்டியாம்! நீ ஆபீஸ் போயிட்டு வரணும்! நான் சமையல் பண்ணிவைப்பேன்!’ என்று மழலைமறவாத வார்த்தைகளில் சொல்லுவது போல ஒலித்தது அவன் செவிகளில். சிறிது நேரம் அவன் ஒரு பதிலும் சொல்லாமல் மெதுவாக மேலே நடந்தான். மாந்தோப்பை அடைந்து நதியின் ஓரமாக அமரும் வரையில் இருவரும் பேசவில்லை.
‘உன் சிகப்பு உடம்புக்கு மெல்லிய நீலப்புடவை தனி சோபையைக் கொடுக்கிறது குந்தளம். எப்பொழுதையும்விட இன்று பன்மடங்கு ரம்மியமாகத் தோன்றுகிறாய்’ என்றான் சுந்தரம்.
காற்றில் அவன் மீது பறந்து விழுந்த மேற்புடவையை சரிப்படுத்திக்கொண்டே “உடல் அழகை என்றுமே நான்பொ ருட்படுத்துவதில்லை. இதோ பாருங்கள் இந்த புஷ்பங்களை! இந் தக் காட்டுப் பூவினால் யாருக்கு என்ன உபயோகம்? கொஞ்ச நேரம் மினுக்கிவிட்டு உதிர்ந்துபோய் மண்ணோடு மண்ணாகி விடும்! அல்லது காற்றுவாக்கில் ஆற்றிலே விழுந்து அழுகிப் போகும்’ என்றாள் தத்துவசாஸ்திரிபோல குந்தளம்.
என் அழகும் அலங்காரமும் உலகில் எவருக்கு உபயோ கம்? நான் மனித பாஷையில் விதவைதானே? என்று குந்தளம் கூறுவதைப்போலிருந்தது சுந்தரத்துக்கு. சட்டென்று ஏதோ சொல்வதற்கு வாயெடுத்தவன், பிறகு என்ன நினைத்துக்கொண்டானோ தெரியவில்லை. மௌனம் அவனை ஆதிக்கம் கொண்டுவிட்டது.
‘நானும் இந்தத் தோப்பும் அந்திநேரத்து ஆற்றங்கரைக் காட்சியும் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு அழகாய்த் தோன்றப்போகிறது அத்தானுக்கு? இவ்வளவு அழகுகளும் சாசுவதமற்வைகள்தானே உங்கள் சம்பந்தப்பட்டவரையில்?’ என்று அவன் வாயைக் கிண்டினாள் மறுபடியும் அவள்.
சுந்:- என்ன அப்படிச் சொல்லுகிறாய்? எனக்கு ரஸிக்கும் சக்தியில்லையென்கிறாயா?
குர்:- அல்ல! நாளை ஒரு மனைவி வந்துவிட்டால் அவள் முகத்தில் இத்தனை அழகுகளையும் ஒருங்கே பார்த்து ரஸித்துக்கொண்டிருப்பீர்களல்லவா என்றேன்! அப்பொழுது இந்தத் தோப்பும் வர்ண்ஜாலங்கள் போல மாலைச் சூரியனைப் பெருமைப்படுத்திக்கொண்டு ஓடும் காவேரியும் சோபையை இழந்துவிடுமில்லையா உங்கள் திருஷ்டியில்?

‘ஏன்? உன்னைபோலவே அவளும் இப்படி என்பக்கத்தில் உட்கார்ந்து இருவரும் இயற்கையின் வினோதங்களை சேர்ந்து ரஹித்தால்?’ என்றான் சுந்தரம் குந்தளத்தை தன் மனைவியின் ஸ்தானத்தில் வைத்து.
‘அவள் கவனம் வேண்டுமானால் இயற்கையழகுகளில் லயித்திருக்கலாம். ஆனால் அத்தான் கவனம் லயித்துப்போவது வேறிடத்தில்!’ என்று கலகலவெனச் சிறித்துக்கொண்டே கூறினாள் குந்தளம். சுந்தரமும் சேர்ந்து சிரிப்பானென்று அவள் நினைத்தாள். ஆனால், அவன்முகம் சட்டென்று மாறுதலடைந்தது குந்தளத்துக்கு கொஞ்சம் கலவரத்தை உண்டு பண்ணியது. சம்பாஷணையை வேறு திசையில் மாற்றுவதற்காக ‘சாந்தாவின் நான்காவது புத்தகம் அச்சாகிறதாமே! அது எப்பொழுது வெளிவருமாம்?’ என்று கேட் டாள்,
“திடீரென்று சாந்தாவைப்பற்றி பேசுவதன் அர்த்தம் எனக்கு விளங்காமலில்லை குந்தளம்! அவளுடைய மூன்றாவது புத்தகமான ‘ஹேமலதா’வில் இப்படித்தான் கதாநாயகி ஹேமலதா ஆற்றின் கரைக்குப்பதிலாக ஒரு மலையடிவாரத்தில் உட்கார்ந்து குணபாலனைத் திக்குமுக்காடச் செய்கிறாள். அவள் முகத்தையே பார்த்துப்பார்த்து ரஹித்துக்கொண்டிருக்கும் குணபாலன் இயற்கையழகைக் கண்டானா அல்லது சூரியாஸ்தமனத்தின் சோபையைக் கண்டானா? காற்றிலே பறந்து விழுந்து என் நெற்றியை மறைக்கும் கூந்தல், மதியை மறைக்கும் மேகத்தைப்போலில்லைபா என்று அவள் கேட் டால் சட்டென்று பதில் சொல்லியிருப்பான் தயங்காமல்! தேன் குடிக்கும் ஈயின் கவனம் வேறு எதிலாவது செல்வதுண்டா? அப்படித்தான் ஹேமலதாவின் பக்கத்திலிருக்கும் பொழுதெல்லாம் குணபாலனின் நிலைமையும் என்று வர்ணிக்கிறாள் சாந்தா. அதை நினைத்துப் பேசுகிறாய்போலிருக்கிறது” என்று மூச்சுவிடாமல் மளமளமென்று பேசினான் சுந்தரம்.
‘ஹேமலதா என் ஞாபகத்துக்கு வரவேயில்லை. ஹேமலதாவைப் போல் என்னைக் கற்பனை செய்து கொள்ளவுமில்லை!’ என்று சுந்தரத்தை மேலே பேசவிடாமல் குந்தளம் இடைமறித்துச் சொன்னாள்.
‘இருக்கலாம்! ஆனால், குணபாலனைப் போலவே வாழ்க் கையில் உன் மனக்கோட்டையும் தகர்ந்து விழப்போகிற தென்று இடித்துக்காட்டுகிறாய்போலிருக்கிறது நீ பேசுவது! என் ஆசை நிராசையாகிவிடலாம். அதற்கும் நான் தயாராகத்தானிருக்கிறேன்’ என்று உறுதியான தொனியில் நிதானமாகவும் அர்த்தபுஷ்டியுடனும் சொன்னான் சுந்தரம்.
ஹேமலதா ஒரு இளம் விதவை. வைதீகக் குடும்பத்தில் பிறந்தவள். அவளை மணஞ்செய்துகொள்ள விரும்புகிறான் குணபாலன். ஆனால், அவன் எண்ணம் நிறைவேறவில்லை. ஹேமலதாவின் பெற்றோர்கள் திடீரென்று வேறு தேசத் திற்கே போய் விடுகிறார்கள். குணபாலனுக்குப் பயித்தியம் பிடித்துவிடுகிறது. இதுதான் சாந்தா எழுதிய ஹேமலதா கதையின் சாராம்சம். இந்தக் கதை எழுத்து எழுத்தாக சுந்தரத்தின் ஞாபகத்துக்கு வந்தது இப்பொழுது. சிற்சில கட்டங்கள் சினிமாப்படம் போல் அவன் பார்த்துக்கொண்டிருந்த காவேரி ஜலத்தின்மீது காட்சியளித்தன. அவன் மேற்கொண்டு பேசச் சக்தியற்றவனாய் நதியைப் பார்த்துக்கொண்டே மெளனம் சாதித்தான். அந்த நிஷ்டையைக் கலைக்காமல் குந்தளமும் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
பொழுது சாய்ந்து வெகுநேரமாகிவிட்டது. சப்தமி பிறைச் சந்திரன் நடுவானத்தில் மிதந்துவந்து நதி ஜலத்தில் பிரதிபலித்துக்கொண்டிருந்தான் சுந்தரம் கைகெடியாரத் தைப் பார்த்து ‘மணி எட்டடித்து விட்டதே! பங்களாவுக்கு திரும்ப வேண்டாமா?’ என்றான். ‘பொழுது போனதே தெரியவில்லை பயித்தியகார யோசனைகளில்!’ என்று சொல்லி விட்டு எழுந்தாள் குந்தளம்.
நதிக்கரையின் ஒற்றையடிப்பாதை வழியாக இருவரும் மௌனமாக நடந்தனர். சிறிது தூரம் சென்றதும் சுந்தரம், காலில் தைத்த ஒரு முள்ளை எடுக்க சட்டென்று நின்றான். எங்கோ பார்த்துக்கொண்டு பின்னால் வந்த குந்தளம் ஒரு காலில் நின்று சுந்தரம் தபஸ் செய்வதைக் கவனியாமல் பலமாக அவன்மீது மோதிவிட்டாள். இதன் பலனாக உருட்டியடித்துக் கொண்டு பக்கத்திலிருந்த பள்ளத்தில் விழுந்தான் சுந்தரம்.
‘ஐயையோ அத்தான்! ஏதாவது காயம்பட்டுவிட்டதா?’ என்று கலவரத்துடன் கேட்டாள் குந்தளம். ‘நல்லவேளையாக கீழே மணல்! கல்லாயிருந்தால் மண்டை உடைந்து போயிருக்கும்! கொஞ்சம் கை கொடுத்துத் தூக்கு!’ என்று சொல்லி இரண்டு கரங்களையும் நீட்டினான் அவன்.
‘என்னையும் பள்ளத்தில் இழுத்துத்தள்ளி வஞ்சம் தீர்க்கப்பார்க்கிறீர்களா!?’ என்று கேலிச்சிரிப்புடன் கேட்டுக் கொண்டே கரங்களை நீட்டினாள் குந்தளம். அதைப் பற்றிக் கொண்டு, சுந்தரம் மெதுவாக ஏறிவந்து ‘வழுக்கி விழுந்தவனைக் கரையேற்றிய புண்ணியவதியிடமா வஞ்சகம்? குரோதத்தின் எதிரொலியல்லவா அது?’ என்றான்.
‘வாழ்க்கையில் இது சகஜம்தானே?’ என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
சுந்:. எது சகஜம்? பழிவாங்குவதா?
குந்:- அதுமட்டுமல்ல, அதற்குக் காரணமாயிருப்பதும் தான்! கண்களிருந்தும் குருடர்களைப்போல வாழ்க்கைப் பாதையிலே பலர் நடப்பதை அனுபவத்தில் நாம் அறி வோம். அது பாதையின் தவறா அல்லது நடப்பவரின் தவறா?
சுந்: இரண்டுமில்லை. நடத்திச்செல்பவரின் தவறு! காலில் தைத்த முள்ளை எடுப்பதற்கு நான் நின்றிராவிட்டால் நீ மோதியிருக்கப்போவதில்லையே!
குர்:- முள் இருந்தது பாதையின் குற்றமல்லவா?
சுந்:- நான் அதைத் தாண்டிச் சென்றிருக்கலாம். காலில் குத்திக்கொண்டது என் தவறென்றால் நாம் இருவருமே கண்களிருந்தும் குருடர்களைப்போல நடக்கிறோமென்று தான் ஏற்படும். நடையிலும் நிஜவாழ்வு பிரதிபலிக்கின்றது போலிருக்கிறது!
சுந்தரம் எதைக் குறிப்பிடுகிறானென்பதை உணர்ந்து கொள்ள குந்தளத்துக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை.
இப்பொழுது உங்களை நடத்திச்செல்வது நான். நினைவிருக்கட்டும்!’ என்றாள் வேகமாக இரண்டடி முன்னால் நடந்து.
‘ஆட்சேபனையின்றி பின்தொடருகிறேன்!’ என்றான் சுந்தரமும் சிரித்துக்கொண்டே.
அன்றிரவு இருவரும் பங்களாவுக்குத் திரும்ப 8.30 மணியாகிவிட்டது.
மறுநாள் சிவராமன் திருச்சிக்குப் புறப்பட்டுவிட் டான். சுந்தரம், குந்தளம், முனிசாமி ஆகிய மூவர் மட்டும் அடுத்த கிராமத்தைப் பார்வையிடச் சென்றார்கள். அவர்கள் கிராமத்தில் நுழைந்தபொழுது ஒரு மாடு ‘மா! மா!’ என்று கத்தியது. ஒரு குடியானவப்பெண் ஒடிவந்து ‘அம்மாவா? வாங்க, வாங்க! மாடு கத்தினதும் நீங்கதான் வருவீங்களென்று நினைச்சேன்! எப்படித்தான் தெரியுதோ அந்த மாட்டுக்கு?’ என்று முப்பத்திரண்டு பற்களையும் காட்டிக் கொண்டு முகமன் கூறினாள்.
‘ஒவ்வொருமுறையும் குழந்தை வரும்போது அந்த சிவப்புமாடு எப்படியோ தெரிஞ்சுக்கிட்டு கத்துகிறது பாரேன்!’ என்றான் முனிசாமியும்.
‘எனக்கும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. இந்த மிருகங்களுக்கு இருக்கும் பகுத்தறிவுகூட சில சமயங்களில் மனிதர்களுக்கு இருப்பதில்லை!’ என்று சொல்லிவிட்டு மாட்டுப்பண்ணையில் முதலாவதாக நுழைந்தாள் குந்தளம். வழியிலிருந்த சுமார் இருபது மாடுகளைத்தாண்டி சிகப்புமாட்டிடம்போய் அதைத் தடவிக்கொடுத்தாள்.
“போனவாரம்தான் மீனாட்சி கன்னுபோட்டது! எவ்வளவு அளவாயிருக்கு பாருங்கள் கிடேரிக்கன்னு!” என்று சொல்லி ஒரு கன்றுக்குட்டியைத்தூக்கி குந்தளத்தின் முன்பு நிறுத்தினாள் குடியானவப்பெண். குழந்தையை வாரியெடுத்துக் கொள்ளுவதைப்போல அந்தக் கன்றை குந்தளம் தூக்கியெடுத்துக் கொண்டு ‘கன்றுக்குட்டிகளிடம் எனக்கு ஒரு அலாதியான பிரேமை! எவ்வளவு நிஷ்களங்கமாகப் பார்க்கிறது கவனித்தீர்களா?’ என்றாள். ஆம் என்று ஆமோதிப்பதுபோல சுந்தரமும் அதன் முதுகைத் தடவிக்கொடுத்தான்.
‘நம்ப பண்ணையில் போனமாசம் ஆறுமாடு கன்னு போட்டிருக்குது! இப்ப தினசரி 15 படி பாலு ஓட்டலுக்கு அனுப்புகிறோம்! நம்ப ஜனங்கள் கொஞ்சம் சிக்கனமாய் பாலை உபயோகித்தார்களானால் 200 படிகூட அனுப்பலாம்!’ என்றாள் குடியானவப்பெண். அவள் குரலில் ஒரு பெருமை தொனித்தது.
‘அட அசடே! பால் உணவின் தன்மை உனக்குத் தெரியாது. நீங்களெல்லோரும் இவ்வளவு ஆரோக்கியத்துடனிருப்பதற்கு போதிய அளவு பால் குடிப்பதுதான் காரணம். எல்லாவித உணவு சத்துக்களும் அதிலிருக்கிறது. நீங்கள் குடித்ததுபோக பாக்கியை ஒட்டலுக்கு அனுப்பினால் போதும். பால்பட்டிக் கணக்குகளை எடுத்துக்கொண்டு உன் புருஷனை மத்தியானம் பங்களாவுக்கு வரச்சொல்லு” என்று தெரிவித்துவிட்டு குந்தளம் சுந்தரத்துடன் பங்களாவுக்கு வந்துசேர்ந்தாள்.
பால்பட்டியில் செய்த சில சீர்திருத்தங்களை முனிசாமி கவனிக்கப்போனான். பிற்பகலில் முனிசாமி சுந்தரத்தை அழைத்துக்கொண்டுபோய் தச்சுவேலைகள் நடக்குமிடத்தையும் பள்ளிக்கூடத்தையும் சுற்றிக்காண்பித்தான். சுந்தரம் விரும்பியபடி அன்று பள்ளிக்கூடக்குழந்தைகளுக்கு வாழைப் பழமும் கற்கண்டும் விநியோகிக்கப்பட்டன.
மாலையில் சுந்தரமும் குந்தளமும் கிராம எல்லையிலுள்ள கோவிலுக்கு ஸ்வாமி தரிசனம் செய்யச்சென்றனர்.
ஸ்வாமியின் முன்னால் நின்றுகொண்டு ‘இறைவா என்னை எப்பொழுதுமே இதுபோல சந்தோஷமாக வைத்திருக்கவேண்டும்!’ என்றான் சுந்தரம்
அவன் சொல்லி முடித்ததும் ‘வள்ளிமணாளா! என் அத்தானுக்கு சாந்தாவைவிட சிறந்த அறிவாளியாக ஒரு மனைவி வந்து, அவர்கள் பாலும் நீரும்போல ஒன்றிவாழ வேண்டும்!’ என்று குவித்த கரங்களுடன் விக்ரகத்தைப் பார்த்துச் சொன்னாள் குந்தளம்.
சுந்:- வேண்டுமென்றே என் வாயைக் கிண்டுகிறாயில்லையா குந்தளம்? சாந்தாவை ஏன் இழுக்கிறாய் இங்கு?
குந்:- நான் இழுக்கவில்லை. இங்குதானே அவளும் இருக்கிறாள்! இல்லையென்று சொல்லுங்கள் பார்க்கலாம்!
சுந்:- இங்கிருக்கிறாளா? கனவுகாண்கிறாயா?
குந்:- நானில்லை! உங்கள் நெஞ்சிலிருப்பவர்களைக் கனவு காண்பது நீங்களா நானா?
சுந்:- குந்தளம்! என்னை இன்னும் நீ தெரிந்துகொள்ளவில்லை!
குந்: இந்த வார்த்தையை உங்களுக்குச் சொல்லிக் காட்டவேண்டிய சந்தர்ப்பம் ஒன்று நிச்சயமாக வரும். அப்பொழுது சொல்லுகிறேன். இறைவா நான் நினைப்பது தவறாகாமல் கவனித்துக்கொள்வது உன் பாரம்!
‘இந்த விஷயத்தில் தெய்வம் உண்னைக் கண்டிப்பாக கர்ப்பக் கைவிடப்போகிறது!’ என்று சொல்லிக்கொண்டு கிரகத்திலிருந்து கோவில் பிரகாரத்துக்கு வந்தான் சுந்தரம்.
‘ஏமாற்றம் என் ஜன்மத்தோடு கூடப்பிறந்தது. அதைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் சேர்ந்து பிறந்திருக்கிறது! என்று அலட்சியமாக குந்தளம் பதிலளித்தபொழுது முனிசாமி அங்கு ஓடிவந்தான்.
பெரியம்மாளுக்கு நேற்று மத்தியானத்திலிருந்து உடம்பு சரியில்லையாம். கவலை ஒண்ணுமில்லை, சாதாரண ஜூரம்தானென்று எசமான் சொல்லியனுப்பியிருக்காங்க! பழனி யாண்டி வந்து சொன்னான்’ என்று தெரிவித்தான் முனி சாமி.
குந்தளம்:- ஏமாற்றம் என்கூடப்பிறந்ததென்று சொன் னது சரியாகிவிட்டது பார்த்தீர்களா? கிராமத்தில் ஒரு வாரம் தங்கியிருக்கலாமென்று நினைத்து வந்தேன். இரண்டே நாளில் புறப்படவேண்டியிருக்கிறது! முனிசாமி, இராச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு புறப்படலாம். கார் டிரைவரைத் தயாராக இருக்கச்சொல்லு!’
முனிசாமி:- ‘ஏன் காலையிலே போக்கலாமே!’
குங்… ‘சாப்பாட்டுக்குப்பின் இரவே புறப்பட்டுவிடுவோம். நல்ல நிலவிருக்கிறது. பிரயாணத்தின் சிரமமும் தெரியாது.
இதை சுந்தரமும் ஆமோதித்தான். இராப்போஜனம் முடிந்ததும் அவர்கள் முனிசாமியுடன் காரில் கிளம்பினார்கள்.
8. உள்ளம் குமுறியது.
முனிசாமி முன் ஸீட்டில் டிரைவர் பக்கத்தில் உட் கார்ந்திருந்தான். பின்ஹீட்டில் சுந்தரமும் குந்தளமும் இருந் தார்கள். நிலவுவெளிச்சத்தில் பிரயாணம் சுகமாக இருந்தது. அவர்களுடைய சம்பாஷணையில் இடையிடையே முனிசாமியும் கலந்து கொண்டான். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவன் குரட்டைவிட ஆரம்பித்துவிட்டான். இரண்டு தினங்கள் வரையில் ஓய்வின்றி சுற்றியதால் குந்தளத்திற்கும் களைப்பாயிருந்தது. பேசிக்கெண்டே சுய நினைவை இழந்து அவளும் உறங்கிவிட்டாள். நான்கைந்து மைல் தூரம் சென்றபின் கார் ஒரு பள்ளத்தைத் தாண்டியபொழுது ஒரு குலுக்குக் குலுக்கியது. குந்தளம் சுந்தரத்தின் மடியில் சாய்ந்தாள். தூக்கத்தில் வீட்டிலே படுத்திருப்பதாக நினைத்தாளோ என்னவோ? தாராளமாகக் கால்களை நீட்டிக்கொண்டு தலையணையை உயர நகர்த்துவதுபோல சுந்தரத்தின் துடைகளைத் தள்ளினாள். அவளுக்கு வசதியாக சுந்தரம் நகர்ந்துகொண்டான். காற்றில் மெல்லிய மேற்புடவை பறந்துவிழும் சுய நினைவுமில்லாமல் அவன் மடிமீது தலையை வைத்துக்கொண்டு சுகமாக உறங்கினாள்.
அவளுடைய ஸ்பரிசம் சுந்தரத்தின் ஒவ்வொரு நரம்புகளையும் உணர்ச்சி பரவசமாக்கியது. நிலவு வெளிச்சத்தில் நிஷ்களங்கமான அவளது முகத்தைப்பார்த்துக்கொண்டே இமைகொட்டாமல் விழித்திருந்தான் அவன். ‘இதே நிலைமையில் யுகக்கணக்கில் வேண்டுமானாலும் உறக்கத்தைவிட் டொழித்து அசையாமல் அமர்த்திருப்பேன். கள்ளம் கபட மற்ற இந்த அபலைப்பெண்ணை கைம்பெண்ணென்று ஒதுக்கி வத்திருக்கிறதே சதிகாரச்சமூகம்!’ என்று தனக்குள் அவன் சொல்லிக்கொண்டான். அவன் மனம் ஒருநிலையிலில்லை பென்பதை வெளியிட்டது அடிக்கடி அவன் விட்ட நெடுமூச்சு.
ஊர் நெருங்கியதும் மெதுவாகக் குந்தளத்தை எழுப்பினான். அப்பொழுதுதான் அவ்வளவுநேரம்வரை அவன் மடிமீது படுத்திருந்ததை உணர்ந்துகொண்டாள் அவள். லஜ்ஜையுடன் அவசரம் அவசரமாக எழுந்து புடவையைச் சரிப்படுத்திக்கொண்டு ‘அத்தான் கண்ணயரவே இல்லை போலிருக்கிறது!’ என்று தலைநிமிராமல் நாணம் தோய்ந்த தொனியில் கூறினாள்.
‘நானும் கண்ணயர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் தெரியுமல்லவா?’ என்று சுந்தரம் பதில் சொன்னபொழுது ‘பங்களா வாசலில் கார் போய் நிற்கும்வரையில் இருவரும் விழித்துக்கொண்டிருக்கமாட்டோம். ஒருவரையொருவர் தலையணையாக மதித்து தழுவியவண்ணம் உறங்கிக்கொண்டிருப்போம்’ என்று சொல்லுவதைப்போலிருந்தது. ‘என்ன பயித்தியக்காரத்தனம் செய்துவிட்டோம். முனிசாமி விழித்துக் கொண்டிருந்தால் எவ்வளவு மோசமாக நினைத்திருப்பான்? என் நடத்தைக்கு மனப்பூர்வமாக வருத்தப்படுகிறேன் அத்தான்! என்னை மன்னித்துவிடுங்கள்!’ என்றாள் தாழ்ந்த குரலில். சுந்தரம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் முனிசாமி விழித்துக் கொண்டு விட்டான். அரை மணி நேரத்தில் கார் பங்களா வாசலில் வந்து நின்றது.
இரவிலேயே அவர்கள் கிராமத்திலிருந்து திரும்பிவிடுவார்களென்பதை எதிர்பார்த்ததைப்போல பங்களாவின் வாசற் கதவு திறந்திருந்தது. முன் வராந்தாவில் அரைத் தூக்கத்துடன் உட்கார்ந்துகொண்டிருந்தான் ஒரு வேலைக்காரன்.
‘ஏன் கதவை மூடவில்லை? இரவே நாங்கள் வந்துவிடுவோமென்று அப்பா சொன்னாரோ?’ என்று கேட்டாள் குந்தளம்.
‘ஆமாங்க! பன்னிரண்டு மணிவரைக்கும் பார்த்துவிட்டுக் கதவைப் பூட்டச்சொன்னாருங்க!’
‘அத்தைக்கு என்ன உடம்பு? டாக்டர் வந்து பார்த்தாரா?’ என்று குந்தளம் மேலும் விசாரித்தாள்.
‘ஒண்ணுமில்லீங்களே! எப்பவும்போலத்தான் இருக்கிறாங்க! இத்தனை நேரம் காற்றுக்காக அய்யாவும் அம்மாவும் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்துவிட்டு இப்ப தான் படுக்கப்போனாங்க!’ என்று சொன்னான் வேலைக்காரன்.
அவன் பதில் குந்தளத்துக்கும் சுந்தரத்துக்கும் திகைப்பாயிருந்தது. அம்புஜத்துக்கு அசௌக்கியம் ஒன்றுமில்லை யென்றால் எதற்காக இவ்வளவு அவசரமாய்ச் செய்தியனுப்ப வேண்டும்? அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழுப்ப வேண்டாம்; காலையில் பார்த்துக் கொள்ளலாமென்று நினைத்து குந்தளமும் சுந்தரமும் மாடிக்குப் போய்விட்டனர்.
அய்யரின் போக்கு அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது. மறுநாட்காலை, அய்யர் சொன்னார் ‘அம்புஜத்துக்குக் கடுமையான ஜுரமடித்தது. ஆகையால்தான் சொல்லி அனுப்பினேன்’ என்று. அம்புஜமும் இதை ஆமோதித்தாள். ஆனால் அவளைப் பார்த்த பொழுது ஜுரமடித்தவளைப் போலத் தெரியவில்லை.
‘உள்ளூர ஜூரமடித்ததோ என்னவோ! சாப்பாட்டிலும் நடமாட்டத்திலும் எவ்வித மாறுதலையும் நான் காணவில்லை. நீங்கள் கிராமத்துக்குப் போயிருந்தபொழுது சதாசிவ குருக்கள் வந்திருந்தார். அம்மாவும் அய்யரும் அவரோடு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். வேறு ஒரு விசேஷமும் நீ இல்லாதபொழுது நடக்கவில்லை!’ என்று குந்தளம் விசாரித்தபொழுது சங்கரி தெரிவித்தாள்.
அந்த நாள் வரையில் அய்யருக்கும் குந்தளத்துக்கு மிடையில் ஒரு ரகசியமும் இருந்தது கிடையாது. குந்தளத்தைக் கேளாமல் அய்யர் ஒன்றும் செய்வதுமில்லை. இப்பொழுது தன் தந்தையிடம் ஒரு புதிய மாறுதல் ஏற்பட்டிருப்பதைக் குந்தளம் தெரிந்துகொண்டாள். சதாசிவ குருக்கள் வந்ததற்கும் அம்புஜத்துக்குக் கடுமையான ஜூரமென்று செய்தியனுப்பி கிராமத்திலிருந்து தன்னைத் திரும்ப அழைத்ததற்கும் என்ன சம்பந்தமிருக்கமுடியுமென்று மணிக்கணக்கில் யோசித்துப் பார்த்தாள். அவளுக்கு எல்லாம் ஒரு பெரிய மூடு மந்திரமாகவே தோன்றியது. அன்றிரவு நிகழ்ந்த மற்றொரு சம்பவம் குந்தளத்தை மேலும் குழப்ப ஆரம்பித்தது. பாஸ்கரய்யரும் சுந்தரமும் வெளி வராந்தாவில் உட்கார்ந்து வெகுநேரம் தாழ்ந்த குரலில் அந்தரங்கமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தொனியிலிருந்து ஏதோ ரொம்ப முக்கியமான விஷயத்தைப்பற்றி பேசுகிறார்களென்பது மட்டும் தெரிந்தது. சுந்தரம் திரும்பி வரும் பொழுது கேட்கவேண்டுமென்பதற்காக படுக்கப்போகாமல் புத்தகசாலையிலேயே குந்தளம் உட்கார்ந்திருந்தாள்.
சுந்தரம் மாடிக்கு வந்தசமயம் இரவு 10.30 மணிக்கு மேலாகிவிட்டது. ‘என்ன இத்தனை நேரம் காதைக் கடித்துக் கொண்டிருந்தீர்கள் மாமாவுடன்!’ என்று ஆவலுடன் விசாரித்தாள் குந்தளம். அதற்குச் சுந்தரம் சரியான பதிலளிக்கவில்லை. ‘விசேஷமாக ஒன்றுமில்லையே!’ என்று சொல்லி மழுப்பிவிட்டு படுக்கப் போய்விட்டான். இது குந்தளத்தை மேலும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது. ‘இந்த வீட்டில் நான் ஒருவள் தான் தனி ஆசாமியா? மற்றவர்கள் எல்லோரும் ஒன்றா? வீட்டில் ஏதோ ரகசியமாக பேச்சுகள் நடப்பது நிச்சயமாகத் தெரிகிறது. அதை என்னிடமிருந்து மட்டும் மறைப்பானேன்?’ என்று நினைத்தாள் குந்தளம். அவளுக்கு எதிராக உலகமே சதிசெய்ய ஆரம்பித்து விட்டதைப் போலவும் பரந்த உலகத்தில் தான் ஒருவள் தனி ஆசாமியைப் போலவும் கற்பனை செய்து மனதை மேலும் வாட்டிக்கொண்டாள். அன்றிரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அவளுடைய வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வளவு மனவேதனையை அனுபவித்தது கிடையாது.
இரண்டு தினங்களுக்குப்பிறகு சுந்தரிமூலமாகக் கிடைத்த வஸுமதியின் கடிதம் குந்தளத்தின் எல்லா சந்தேகங்களையும் நிவிர்த்தி செய்தது. மனதிலிருந்து பெரிய சுமை இறங்கியதைப்போல ‘அப்பாடா! இதற்குத்தானா இவ்வளவு ஆர்ப்பாட்டமும்!’ என்று சொல்லிக்கொண்டு பெரு மூச்சு விட்டாள்.
கடிதத்தில் வஸுமதி பின்வருமாறு எழுதியிருந்தாள்:-
அன்புள்ள குந்தளம்,
வஸு நினைப்பது ஒருபோதும் தவறாவதில்லை. நீதான் எழுதினாய் அத்தை இப்படி, அத்தான் அப்படி என்றெல்லாம். அதைப் பார்த்துவிட்டு என் எஜமானர்கூடச் சொன்னார், ‘வஸு நீ வீண் பீதி கொண்டிருக்கிறாய்!’ என்று. ஆனால் நான் நினைத்தது நூற்றுக்கு நூறு சரியென்பதை உன் அப்பாவின் கடிதம் ருசுப்படுத்திவிட்டது. உன் அத்தான் சுந்தரத்துக்கு சாந்திக்கிறுக்குப் பிடித்திருக்கிறதாம். சாந்தியை அவருக்குக் கல்யாணம் செய்துவைத்துவிடலா மென்று உன் அப்பாவும் அத்தையும் நினைக்கிறார்கள். சாந்தி யார்? அவளுடைய பெற்றோர்களின் விலாசமென்ன? அந்தக் குடும்பம் எப்படி? என்றெல்லாம் விசாரித்து என் எஜமானருக்கு எழுதியிருக்கிறார் உன் அப்பா. அவருடைய கடிதத்திலிருந்து சில முக்கியமான வாக்கியங்களை அப்படியே எழுதுகிறேன் படித்துப்பார்:-
‘காலேஜில் படித்துக்கொண்டிருந்த நாள் முதற் கொண் டே சாந்தியைப்பற்றி சுந்தரம் அடிக்கடி பேசுவானாம். அவளைப்போல தமிழ்நடை எழுதக்கூடியவர் தமிழ்நாட்டிலேயே கிடையாதென்று வானளாவிப் புகழுவானாம். சொப்பனத்தில்கூட சாந்தியின் பெயரை அடிக்கடி அவன் சொல்லுவ துண்டென்றும் ஆகையால் அந்தப் பெண்ணையே அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்து விடுவது தான் நல்லதென்றும் அம்புஜம் அபிப்பிராயப்படுகிறாள். சுந்தரம் அவளுடைய பிள்ளை. அவள் அபிப்பிராயத்துக்கு மாறாக நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. புத்தகம் எழுதிப் பிரபல்யமடைய முன்வந்த ஒருபெண், அடக்க ஒடுக்கமாகக் குடும்பம் நடத்துவாளென்று எனக்குத் தோன்றவில்லையென்றாலும் என் அபிப்பிராயத்துக்கு இதில் இடம் கிடையாது. சாந்தி யார்? பெண் எப்படி? அவளுடைய பெற்றோர்களின் அந்தஸ்து எப்படி? இந்த விபரங்களையெல்லாம் விசாரித்து எழுதுங்கள். சாந்தியின் குடும்பம் நமது சம்பந்தத்துக்கு லாயக்கானதுதான் என்று உங்களுக்குத் தோன்றினால் தயுவு செய்து நீங்களே சாந்தியின் தகப்பனாரைச் சந்தித்து அவர் அபிப்பிராயத்தைக் கேட்டு எழுதுங்கள். அவசியமானால் பிறகு நான் நேரில் வருகிறேன்.’
இப்படி எழுதியிருக்கிறார் உன் தகப்பனார். அதைப் படித்தது முதல் எனக்கு மிகவும் வேதனையாயிருக்கிறது. நான் என்னென்னவோ கோட்டை கட்டிக்கொண்டிருந்தேன். எல்லாம் தகர்ந்துவிட்டது. உன் தகப்பனாரின் கடிதத்திலிருந்து உண்மையாகவே சுந்தரம் அத்தானுக்கு சாந்திப் பயித்தியம் பலமாகப் பிடித்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். உன் தகப்பனாருக்கு என்னுடைய எஜமானர் எழுதியிருக்கும் பதிலில் இரண்டு மூன்று வரிகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்:
‘சாந்தாவைப் பற்றி நினைப்பதில் பிரயோஜனமில்லை. அவளுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது. இதன்பிறகு அவளுடைய பூர்வோத்திரங்களை அறிய நீங்கள் விரும்ப மாட்டீர்களென்று நம்புகிறேன்.’
இந்தக்கடிதம் கிடைத்தபின் சாந்தாவைப்பற்றி யோசிப்பதை உன் அத்தையும் அப்பாவும் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் வேறு பெண்ணைத்தேடும் யோசனையைக் கைவிடப் போவதில்லை. கல்யாணம் நிச்சயமானால் அதற்கு எப்படியும் நாங்கள் வராமலிருக்க முடியாது. எங்களுக்கும் உன் குடும்பத்துக்குமுள்ள உறவை சுந்தரம் அப்பொழுது தெரிந்துகொண்டால் என்ன நினைப்பார்? அதுவேறு கவலையாயிருக்கிறது எனக்கு! உனக்கும் எனக்குமுள்ள தொடர்பு தெரியாமல் உன்னைப்பற்றி என் எஜமானரிடம் என்னவெல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார் அந்தக்காலத்தில்!
இன்னொரு விஷயம் சாந்தாவின் நான்காவது புத்தகம் அச்சாகிவிட்டது நாளை பிரசுரமாகிறது. நாளைய தபாலில் உனக்கு ஒரு பிரதி அனுப்புகிறேன். உன் அத்தானுக்கு வழக்கம்போல் ஒருபிரதி தபாலில் வரும்.’
உன் அன்புள்ள
வஸுமதி.
வஸுமதியின் இந்தக் கடிதம் குந்தளத்தை ஆழ்ந்த சிந்தனையில் வீழ்த்தியது. இரண்டு தினங்களுக்கு முன்னால் தன் தகப்பனாரும் சுந்தரமும் இரவு வெகுநேரம்வரை தனித்துப் பேசிக்கொண்டிருந்தது எதைப்பற்றியென்ற சந்தேகம் குந்தளத்திற்கு இனி இல்லை. ஆனால் வஸூவின் கடிதம் புதிய பல சந்தேகங்களைக் கிளப்பிவிட்டன. சாந்தாவிடம் அத்தானுக்கு உண்மையான பிரேமை இருப்பதாக அப்பா ஏன் எழுதினார்? அத்தான் சொல்லாமல் அவர் தானாகவே கேசவனுக்கு இப்படி எழுதுவாரா? கனவில்கூட அத்தானுக்கு சாந்தாவின் ஞாபகம்தானென்று அத்தை சொல்லியது பொய்யாயிருக்க முடியுமா? இவைகளெல்லாம் நிஜமென்றால் அன்று கிராமக் கோவிலிலே இறைவனின் சந்நிதானத்தின் முன்பு நின்று கொண்டு ‘உங்கள் நெஞ்சிலிருக்கும் சாந்தாவைக் கனவு காண்பது நீங்களா அல்லது நானா’ என்று கேட்டபொழுது ‘குந்தளம்! என்னை இன்னும் நீ தெரிந்துகொள்ளவில்லை!’ என்றாரே அத்தான். அதன் பொருள் என்ன? இவ்வளவு கபடம் நிறைந்தவரா அத்தான்? இவைகளெல்லாம் ஒருபுறமிருக்க, கிராமத்துக்குச் சென்ற எங்களை அத்தைக்கு உடம்பு – சரியில்லையென்று பொய்ச் செய்தியனுப்பி அவசரமாகத் திருப்பியழைப்பானேன்? நானும் அத்தானும் சேர்ந்து போகக்கூடாதென்ற எண்ணமிருந்தால் கிராமத்துக்குப் போவதற்கு முன்பே தடைசெய்திருக்கலாமே! போகும் பொழுது ஒருவரும் ஆக்ஷேபனை சொல்லவில்லை. சதாசிவ குருக்கள் பங்களாவிற்கு வந்துவிட்டுப் போனதற்கும், பிறகு நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கவேண்டும். மூலகாரணம் குருக்களாகத்தான் இருக்கமுடியும். அவர் என்ன சொல்லியிருப்பார்?
இப்படி தனக்குள்ளாகவே அடுத்தடுத்து பல கேள்வி களைக் கேட்டுக்கொண்டாள் குந்தளம். ஆனால், கேள்விகளை எழுப்பிய மனதிற்கு அவற்றின் விடைகளைக் கண்டு மாறுபட்டு பிடிக்க முடியவில்லை. உலகமே திடீரென்று விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. தன்னிடமிருந்து தனது தகப்பனாரே சில விஷயங்களை மறைக்கிறா ரென்ற எண்ணம்தான் குந்தளத்துக்கு அளவிடமுடியாத வேதனையை உண்டு பண்ணிற்று. அவர் ஒன்றையும் ஒளியாமல் சொல்லி ‘இதுதான் நிலைமை குந்தளம்’ என்று தெரிவித்திருந்தால் அவள் ஆறுதலடைந்திருப்பாள். தகப்பனாரிடம் ஏற்பட்ட திடீர் மாறுதலை அவளால் பொறுக்கவே முடியவில்லை.
இரண்டு தினங்களுக்குப்பிறகு நடந்த ஒரு சம்பவம் குந்தளத்திற்கு ஓரளவு மன நிம்மதியைக் கொடுத்தது. அவள் புத்தகசாலையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கையில் அய்யர் அங்கு வந்து ‘குந்தளம்! உன்னிடம் ஒரு விஷயமல்லவா சொல்லவேண்டும்!’ என்று கூறிக்கொண்டே பக்கத்தில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார்.
‘என்ன அப்பா?’ என்று சாவதானமாக வினாவினாள் புத்தகத்தை மூடிவிட்டு.
‘உன் அத்தான் சுந்தரத்தின் கல்யாண விஷயம்தான். அம்புஜத்துக்கு உடம்பு வரவர துர்பலமாகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் ஒரு கல்யாணத்தைச் செய்து பார்த்து விட வேண்டுமென்று ஆசைப்படுகிறாள்!’ என்றார் அய்யர்.
‘அத்தானுக்கும் வயதாகிவிட்டதில்லையா? காலாகாலத்தில் கல்யாணமும் நடக்கவேண்டிய துதானே?’ என்றாள் குந்தளம் அமைதியான தொனியில்.
காலாகாலத்தில் என்று அவள் சொல்லியது அய்யருக்கு சுருக்கென்று தைத்தமாதிரி இருந்தது. சிறிதுநேரம் மௌனம் சாதித்துவிட்டு ‘சாந்தாவென்று ஒரு பெண் புத்தகமெல்லாம் எழுதுகிறாளே அவளிடம் சுந்தரத்துக்கு நாட்டமிருப்பதாகத் தெரிகிறதென்று அம்புஜம் சொன்னாள். கேசவனுக்கு எழுதி விசாரித்தேன். சாந்தாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதென்று பதில் வந்தது. மன்னார்குடி வக்கீல் ராஜகோபாலய்யருக்கு கல்யாணவயதில் ஒரு பெண் இருக்கிறாளாம். அந்தப் பெண்ணின் ஜாதகம் சுந்தரம் ஜாதகத்துக்குப் பொருத்தமாயிருக்கிறது! இடமும் நல்ல அதை முடித்துவிடலாமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று மூச்சுவிடாமல் பேசினார்.
‘பார்த்துச் செய்யுங்களேன் அப்பா! உங்களுக்குத் தெரியாத யோசனையா நான் சொல்லப்போகிறேன்’ என்றாள் குந்தளம் தலை நிமிராமல் புத்தகத்தைத் திருப்பிக்கொண்டே. அவர் இவ்வளவு தூரம் சொல்லியதே குங்களத்துக்குப் பெரிய கவலையை நீக்கியமாதிரி இருந்தது.
‘கல்யாணத்தைப்பற்றி அத்தானைக் கலந்து பேசினீர்களா? அவர் என்ன அபிப்பிராயப்படுகிறார்?’ என்று கேட்க விரும்பினாள். கிராமத்திலிருந்து எங்களை ஏன் திடீரென்று திருப்பி அழைத்தீர்கள்? என்று கேட்கவும் அவள் மனம் துடிதுடித்தது. ஆனால், அவராக வலுவில் சொல்லாத விஷயங்களை வற்புறுத்திக் கேட்கக்கூடாதென்று நினைத்து மௌனமாயிருந்துவிட்டாள்.
அன்றுமுதல் குந்தளத்தினிடம் ஒரு தெளிவான மாறுதல் காணப்பட்டது. சாப்பிடும் நேரம்தவிர மற்ற சமயங்களில் அவள் தன் அறையைவிட்டு வெளிவரவில்லை. புத்தக சாலையிலிருந்தால் சுந்தரத்தைத் தனிமையில் சந்திக்க நேர்ந்துவிடுமோ என்றெண்ணி புத்தகங்களின் திக்கையும் அவள் எட்டிப் பார்க்கவில்லை. இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அவளும் சுந்தரமும் தனிமையிலிருக்க நேரிட்டது. அப்பொழுது காரணமில்லாமல் முனிசாமியை அழைத்துக்கொண்டு அவனிடம் பேசத்தொடங்கினாள் குந்தளம். அவளிடம் ஏற்பட்ட இந்த மாறுதல் சுந்தரத்துக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரியிருந்தது. தன்னுடைய கல்யாண விஷயத்தைப் பற்றி அவளிடம் பாஸ்கரய்யர் ஒன்றும் சொல்லி யிருக்கமாட்டாரென்றே அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆகையால்தான் எப்பொழுதும் கலகலப்பாகப் பேசும் குந்தளம் திடீரென்று மௌனப் பதுமையாகிவிட்டது அவனைத் திகைக்கச் செய்தது.
9. ஊருக்கு ஒரு முழுக்கு
இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்தன. மூன்றாவது வாரத்தில் நிலைமை உச்சஸ்தாயியை அடைந்தது. மன்னார்குடிப் பெண்ணையே சுந்தரத்துக்குத் தீர்மானித்து முகூர்த்தத்துக்கும் நாள் குறிப்பிட்டாகிவிட்டது. கல்யாண ஏற்பாடுகளை அய்யரும் அம்புஜமும் கவனித்து வந்தார்கள். ‘புடவைகள் எடுக்க நீதான் வரவேண்டும்! நல்ல மாதிரிகள் உனக்குத்தான் தெரியும்!’ என்று குந்தளத்தைக் கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்துப்போனாள் அம்புஜம். அன்று சுமார் பத்தாயிரம் ரூபாய்க்கு வேஷ்டிகளும் புடவைகளும் வாங்கி வந்தார்கள். வீடு திரும்பியதும் அவற்றை ஒவ்வொன்றாக அத்தானுக்கு பிரித்துக்காட்டிக் கேலி செய்தாள் குந்தளம். மூன்று வாரங்களாக மெளனம் சாதித்த குந்தளம் அன்று எல்லோர் முன்னிலையிலும் கலகலப்பாகப் பேசி கேலி செய்தது சுந்தரத்துக்கு விசித்திரமாயிருந்தது.
‘இன்று புதன்கிழமையில்லையா? இன்னும் நாற்பத்து எட்டு மணிநேரம்தான்! வெள்ளிக்கிழமை மாலை அத்தான் மதனியை அத்தான் பார்க்கலாம்!’ என்றாள் கிண்டலாக குந்தளம்.
‘நான் பார்ப்பதற்குமுன் நீதானே பார்க்கப்போகிறாய்?’ என்று வேண்டாவெறுப்புடன் பதில் சொன்னான் சுந்தரம்.
கல்யாணம் திங்கட்கிழமை. வெள்ளிக்கிழமை விடியற் காலையிலேயே எல்லோரும் திருச்சினாப்பள்ளியிலிருந்து புறப்படுவதென்று ஏற்பாடாகியிருந்தது. வியாழக்கிழமை இரவு சுந்தரம் புத்தகசாலையில் உட்கார்ந்திருந்தான். குந்தளம் அவனிடம் போய் ‘அத்தான், என்னைத் தவறாக நினைக்காமலிருந்தால் உங்களிடம் ஒரே ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன்!’ என்றாள்.
‘இன்னும் எவ்வளவு நேரத்துக்கு என்னுடன் பேசப் போகிறாய்? தாராளமாகக்கேள்’ என்றான் சுந்தரம் தலை நிமிர்ந்து பார்க்காமலே.
குந்:- எத்தனை மணி நேரத்துக்கு என்றால் எனக்குப் புரியவில்லையே! அத்தான் மதனி வந்துவிட்டால் பிறகு என்னுடன் பேச அவகாசமிருக்காதென்கிறீர்களா? வாஸ்தவம்!
சுந்:- சரி, அப்படித்தான் வைத்துக்கொள்ளேன்.
குந்:- இல்லை! கல்யாணத்துக்குமுன் தம்பதிகள் பரஸ்பரம் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருக்கவேண்டும்; பரஸ்பரம் காதலித்து மணக்கவேண்டும்; கட்டாய மணம் வாழ்க்கையைக் குட்டிச்சுவராக்கிவிடும் என்றெல்லாம் உங்களுடைய கதைகளில் எழுதியிருக்கிறீர்களே. அப்படியிருந்தும் பெண்ணைப் பார்க்காமல் எப்படிக் கல்யாணத்துக்குச் சம்மதித்தீர்களென்றுதான் எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. கதை வேறு நிஜவாழ்க்கை வேறு! அப்படித்தானே அத்தான் தத்துவம்?
சுந்:- பெண்ணை நான் ஏன் பார்க்கவேண்டும்?
குந்:- நீங்கள் திருப்தியடைய!
சுந்:- என் அம்மாவும் உன் அப்பாவும் பார்த்துவிட் டுத்தானே தீர்மானித்திருக்கிறார்கள்? எனக்குத் தீமையான காரியத்தை அவர்கள் செய்யமாட்டார்களே! அவர்களுக்குத் திருப்தியென்றால் எனக்கும் பரம திருப்திதான்!
குந்:- அப்பாடா! இப்பொழுதுதான் என் மனதிலிருந்த பெரிய கவலை நீங்கியது. என் தகப்பனார் உங்களுக்குப் பிரியமில்லாமல் வலுக்கட்டாயமாக இந்தக் கல்யாணத்தை நடத்துகிறாரோ என்று பயந்து கொண்டிருந்தேன். அத்தானும் மனம் உவந்து சம்மதித்தே கல்யாணம் நடக்கிறதென்பதை உங்கள் வாயிலிருந்து கேட்க என் மனம் பூரிப்படைகிறது. அத்தான் மதனியைப் பார்க்காமலே அத்தானுக்குத் திருப்தியேற்பட்டுவிட்டதென்றால் எனக்கும் திருப்திதான்.
சுந்தரம் இவ்வளவுக்கும் புத்தகத்தின்மீது வைத்திருந்த கண்களை எடுக்கவேயில்லை. சில வினாடி மௌனத்துக்குப் பின் ஏதோ சொல்வதற்கு நிமிர்ந்து பார்த்தான். குந்தளம் அதற்குமுன்பே போய்விட்டாள். அங்கிருந்தால் சுந்தரத்தின் கண்கள் கண்ணீரைப் பெருக்கியது அவளுக்குக் தெரிந்திருக்கும்,
அன்றிரவு மீண்டும் குந்தளத்தைத் தனிமையில் சந்திக்க சுந்தரம் முயற்சித்தான். அவன் முயற்சி பலிக்கவில்லை. விடியற்காலை மூன்று மணி வரையில் அவனுடைய அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. பிறகு கீழே இறங்கிவந்து தோட்டத்துக்குச் சென்று அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்த முனிசாமியைச் சப்தம் செய்யாமல் எழுப்பினான் சுந்தரம்.
‘சின்ன எசமாங்களா? இந்தநேரத்தில்!’ என்று ஒன்றும் விளங்காமல் கலவரத்துடன் கேட்டுக்கொண்டு எழுந்து வந்தான் முனிசாமி!
‘உஸ்! சப்தம் செய்யாதே! கொஞ்சம் இப்படி வா’ என்று தாழ்ந்த குரலில் சொல்லி தோட்டத்தின் ஒரு மூலைக்கு முனிசாமியை சுந்தரம் அழைத்துக்கொண்டுபோய் காதோடுகாதாக ஏதோ தெரிவித்தான்.
வெள்ளிக்கிழமை காலை ஐந்துமணிக்கே எல்லோரும். எழுந்துவிட்டார்கள். அவசரம் அவசரமாகக் காப்பி பலகாரங்கள் தயாரிப்பதை சங்கரி மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரர்களும் என்றுமில்லாத் சுறு, சுறுப்புடன் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்தார்கள். வராந்தாவின் ஒரு மூலையில் முனிசாமி அமைதியாக உட் கார்ந்திருந்தான்.
அய்யர் ஈரத்துணியுடன் ஸ்நான அறையிலிருந்து வெளிவந்து ‘முனிசாமி! அடே முனிசாமி! சுந்தரத்தை எழுப்புடா! நேரமாகவில்லை!’ என்று சப்தம் போட்டார். முனிசாமி மாடிக்குப்போய்விட்டுத் திரும்பிவந்து ‘சின்ன எசமான் அறையிலே இல்லீங்களே!’ என்றான் நிதானமாக.
‘அறையில் இல்லையென்றால் பின்கட்டுக்குப் போயிருக் கிறானோ என்னவோ தேடிப்பார்த்து சீக்கிரம் ஸ்நானம் செய்யச்சொல்லு! நேரமாகிறது!’ என்று சொல்லிவிட்டு அய்யர் உடுப்பு அணியப்போனார்.
சிறிது நேரத்துக்குப்பிறகு அம்புஜமும் முனிசாமியும் அய்யரிடம் கலவரத்தோடு வந்து சுந்தரத்தை ஒரு இடத்திலும் காணவில்லை என்று சொன்னார்கள். ‘காணாமல் எங்கே போவான்! வெளியில் போயிருக்கிறானோ என்னவோ! கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவான்! மற்ற வேலைகளைப் பாருங்கள். குழந்தை குந்தளம் ஸ்நானம்பண்ணிவிட்டாளா?’ என்றார் அய்யர்.
‘ஓ! நான் தயாராகிவிட்டேன். இப்படியே கிளம்பவும் ரெடி!’ என்றாள் குந்தளம் வராந்தாவிலே நின்றுகொண்டு. சிறு சந்தேகம் அவள் மனதில் ஊசலாடிக்கொண்டிருந்தது. முதல் நாள் இரவு ‘இன்னும் எவ்வளவு நேரத்துக்கு என்னுடன் பேசப் போகிறாய்?’ என்று சுந்தரம் சொல்லியதற்கும் இப்பொழுது அவன் காணாமல் போயிருப்பதற்கும் ஏதாவது சம்பந்தமிருக்குமோ என்ற கவலை அவளிடம் ஏற்பட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் உண்மை அவர்களைத் தேடிவந்தது. ஒரு ஜட்காவண்டிக்காரன் பங்களாவுக்கு வந்து அய்யரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். ‘எசமான் பத்திரமாய் ரயிலேறிப்போய்ட்டாரு! இந்தக் கடுதாசி தவறிப்போய் அவங்க பையிலிருந்திச்சாம்! உங்களி டம் கொடுத்துவிடச்சொன்னாரு!’ என்று சொல்லிவிட்டுப் போனான்.
பேயைக் கண்டவர்கள்மாதிரி எல்லோரும் அப்படியே பிரமித்து நின்றார்கள். குண்டூசி கீழே விழுந்தாலும் கிணீரென்று சப்தம் கேட்கும். அவ்வளவு நிசப்தம் குடிகொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு முன்புவரையில் கலகலப்பாயிருந்த அம்மாளிகையில் ஏன் இந்த அலங்கோலம்? முனிசாமி மட்டும் இதையெல்லாம் எதிர்பார்த்தவன் போல அமைதியாக வேறு எங்கோ பார்த்துக் கொண்டு நின்றான்.
அதிர்ச்சி தெளிந்து அய்யர் கடிதத்தைப் பிரித்துப் படித்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது.
அன்புள்ள மாமா,
என் நடத்தையைக்கண்டு நீங்கள் கோபமடைவீர்கள். நன்றிகெட்டவனென்று சபிப்பீர்கள். ஆனால் நான் வேறு விதமாக நடந்துகொள்ளுவதற்கில்லை. சபிக்கப்பட்ட எனது வாழ்க்கையிலே உங்கள் சாபத்தையும் சேர்த்து கட்டிக்கொள்ளுவதென்று தீர்மானித்துவிட்டேன்.
என் மனநிலைமையை உங்களுக்கு நான் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். நான் பிரம்மச்சாரியாக வாழ்நாளைக் கழிக்கவேண்டியதுதான் இறைவனின் திருவுள்ளமென்பதை உறுதியாக நம்புகிறேன். மனச்சாட்சியை வஞ்சித்து நடக்கும் துணிச்சல் எனக்கு ஏற்படவில்லை. நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் கல்பாணத்தில் நான் சுகம்காண முடியாது. நான் விரும்பும் பெண்ணை மணம் செய்துகொள்ளவும் வழியில்லை. இந்தச் சங்கடமான நிலைமையில் உற்றார் உறவினர் எல்லோரையும் துறந்து கண்காணாத இடத்துக்குப் போய் ஒரு சந்நியாசியைப்போல ஏகாங்கியாக வாழ்நாளைக் கடத்துவதென்ற தீர்மானத்துடன் போகிறேன். என் வாழ்க்கைக்கு எங்கிருந்தாலும் ஒன்றுதான்.
என்னை நீங்கள் தேடுவதில் பிரயோசனமில்லை. சிரமப்படாதீர்கள். என் செலவுகளுக்கு சொற்ப ரூபாய் எடுத்துக் கொண்டு போகிறேன். பிழைப்புக்கு ஒரு வேலை கிடைத்ததும் கூடிய சீக்கிரம் இந்தப் பணத்தைத் திருப்பியனுப்பி விடுவேன்.
அம்மா மனம் உடைந்துபோவாள் அதுதான் எனக்குத் தீராக் கவலையாயிருக்கிறது. இருந்தாலும் என்ன செய்ய? எனக்கு வேறு வழியில்லை. அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை சம்ரக்ஷிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். குந்தளத்துக்கு என் அன்பைத் தெரிவியுங்கள். நமஸ்காரம்.
உங்கள் அன்புள்ள
சுந்தரம்.
இப்படி வாசித்து முடித்ததும் அய்யருக்கு ஒருபக்கம் துக்கமும் இன்னொருபக்கம் கோபமும் ஏற்பட்டது. ‘முகத்தில் கரியைப் பூசிவிட்டானே பாவி! என்னடா எழுதியிருக்கிறான் பாஸ்கரா! என்னவென்று சொல்லு!’ என்று படபடப்புடன் கேட்டாள் சுந்தரத்தின் தாயார் அம்புஜம்.
‘எல்லாம் அழகாய்த்தான் எழுதியிருக்கிறான். மாடிக்கு வா சொல்லுகிறேன்!’ என்று கிணற்றுக்குள்ளிருந்து பேசுவதுபோல் ஹீனஸ்வரத்தில் சொல்லிவிட்டுத் தலை நிமிராமல் மாடிக்குப் போனார். அம்புஜமும் குந்தளமும் அவர் பின்னால் போனார்கள். புத்தகசாலையை அடைந்ததும் அய்யர் கடிதத்தை குந்தளத்திடம் கொடுத்து ‘உன் அத்தான் அழகை அத்தைக்குப் படித்துக்காட்டு’ என்றார். குந்தளம் கடிதத்தை நிறுத்தி நிறுத்தி வாசித்துக் காண்பித்தாள் அம்புஜத்துக்கு.
‘உன் பிள்ளையின் யோக்கியத்தைப் பார்த்தாயில்லையா? வெளியே தலைகாட்டமுடியாதபடி செய்துவிட்டான். மன்னார்குடிக்கு என்ன கடிதம் எழுதுவது? அவர்களும் கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கமாட்டார்களா? சுந்தரம் ஓடிப்போய்விட்டானென்று எழுதினால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை!’ என்றுசொல்லித் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தார் அய்யர்.
குந்:- ‘என்மேல் கோபித்துக்கொள்ளாதீர்கள் அப்பா! மன்னார் குடிப்பெண் பிடிக்கவில்லை என்று சொன்னால் வேறு பெண்ணைப் பார்த்திருக்கலாம். அத்தானுக்கு வாழ்க்கைப் பட நம் ஜாதியில் வேறு பெண்ணேயில்லையா?’
அய்யர்:- மன்னார்குடிப் பெண் வேண்டாமென்று அவன் சொல்லியதுபோலவும், முடியாது அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று கட்டாயப் படுத்தியது போலவும் பேசுகிறாயே! அந்தப் பெண் வேண்டா மென்று சொல்லியிருந்தால் நான் ஏன் இதில் தலையிடுகிறேன்?
குந்தளம்:- எனக்கு என்ன தெரியும்? வேறு யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள விரும்பியது போல அத்தான் எழுதியிருப்பதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணையே முடித்திருக்கப்படாதா என்று கேட்டேன்.
அம்புஜம்:- அவனுக்கு சாந்தா கிறுக்குப் பிடித்திருக்கிறது. அவளுக்குத்தான் ஏற்கெனவே கல்யாணமாகிவிட்ட தாமே! இனிமேல் என்ன செய்யமுடியும்? சாந்தாவுக்குக் கல்யாணமாகி விட்டபடியால் இனி தான் கல்யாணமே செய்து கொள்ளக் கூடாதென்று தீர்மானித்திருக்கிறான் போலிருக்கிறது. இது மாதிரிப் பயித்தியக்காரனைப் பார்த்ததேயில்லை. இவ்வளவுக்கும் காரணம் அவனைக் கண்ட கதைப்புத்தகங்களை வாசிக்கவும் வாயில் வந்தபடி புத்தகம் எழுதவும் அனுமதித்ததுதான். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம்.
குந்:. சாந்தாவாம் சாந்தா! நல்ல சாந்தா ஒருத்தி வந்தாள்! அத்தானுக்கு யாரோ மருந்து வைத்திருக்க வேண்டும்!
அய்யர் ஒன்றுமே பேசவில்லை. கல்யாணம் ரத்தாகி விட்டதாயும் சுந்தரம் காணாமற் போய்விட்டதாயும் இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தப்படுவதாயும் மன்னார்குடிக்குப் பாஸ்கரய்யர் ஒரு தந்தியடித்து விட்டு படுக்கையில் போய் படுத்துக் கொண்டார். இந்த விஷயங்கள் வெகு சீக்கிரத்தில் வெளியே பரவி வேலைக்காரர்களெல்லாம் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள். அன்று முழுவதும் பாஸ்கரய்யர் வீட்டுக்கே ‘சாந்தா பிசாசு’ பிடித்தமாதிரி யிருந்தது.
மத்தியானம் ஒன்றரைமணியிருக்கும். அகோரமாக வெயிலடித்தது. அய்யர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அம்புஜம் கவலையுடன் சங்கரியிடம் பேசிக்கொண்டிருந்தாள். முனிசாமி மெதுவாக மாடிக்குவந்து குந்தளத்திடம் ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தான். அதில் பின்வருமாறு எழுதப்பட்டுருந்தது:
அன்புள்ள குந்தளம்,
என்னுடன் இன்னும் சில மணி நேரம்தானே பேசப் போகிறாயென்று நேற்றிரவு நான் சொல்லியபொழுது என்னைக் கேலி செய்தாய். அது எவ்வளவு பயங்கரமான பரிகாச மென்பதை இதற்குள் தெரிந்து கொண்டிருப்பாய். உங்கள் எல்லோரையும் விட்டு பரந்த உலகிலே பரதேசியைப் போலக் கிளம்பி விடுவதென்று இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டேன். ஒரு நாள் இரவு வெகு நேரம் வரையில் மாமாவிடம் பேசிவிட்டு வந்தபொழுது இவ்வளவுநேரம் என்ன பேசினீர்கள்?’ என்று நீ என்னைக் கேட்டது ஞாபகமிருக்கும். அன்றிரவு மனதிலிருப்பதை ஒளிக்காமல் மாமாவிடம் சொன்னேன். அதற்கு மாறாக நடந்தால் எங்கேயாவது தலைமறைவாக நான் போய்விட வேண்டியிருக்குமென்பதையும் அவரிடம் தெளிவாகத் தெரிவித்தேன். ஆகையால் இன்று நான் வீட்டைவிட்டுப் போவது மாமாவுக்குக் கோபத்தைக் கொடுத்தாலும் அவர் எதிர்பாராததாயிருக்காது.
நாம் கிராமத்திலிருந்து ஊருக்குத் திரும்பிய நாள் முதல் நம் வீட்டில் நடக்கும் பேச்சுகளைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமலே இருக்கவேண்டு மென்பதுதான் என் ஆசையும். நான் திடீரென்று ஏன் வீட்டை விட்டுப் போகவேண்டுமென்பது உனக்கு ஆச்சரியமாயிருக்கும். அதைத் தெரிந்துகொள்ளவோ அல்லது நான் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கவோ நீ முயற்சி செய்யக்கூடாதென்று கேட்டுக்கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நான் பெரிய துர் அதிர்ஷ்டசாலி. எனக்கு எங்கிருந்தாலும் ஒன்றுதான். என்னிடம் காட்டிய அன்பிற்கெல்லாம் எனது மனப்பூர்வமான நன்றியறிதலை ஏற்றுக்கொள். இந்தக் கடிதத்தை ஒருவருக்கும் தெரியாமல் உன்னிடம் சேர்ப்பித்துவிடும்படி முனிசாமியிடம் சொல்லியிருக்கிறேன். படித்தவுடன் கிழித்தெறிந்துவிடு. போய்வருகிறேன்.
உன் அன்புள்ள அத்தான்
சுந்தரம்.
இப்படிப் படித்து முடிந்ததும் ‘இதை உன்னிடம் எப் =பொழுது கொடுத்தார்? கொடுத்துவிட்டு எங்கு போவதா =கச் சொல்லிவிட்டுப் போனார்?’ என்று கேட்டாள் குந்தளம்.
முனிசாமி சிறிது தயங்கினான். பிறகு சொல்ல ஆரம்பித்து ‘அவர் எங்குபோனாரென்பது எனக்குத் தெரியாது. போகுமிடத்தை என்னிடம் சொல்லவுமில்லை’ என்றான்.
குந்:- கடிதத்தை எப்பொழுது கொடுத்தார்?
முனி:- நேற்றிரவு பிரயாணத்துக்கு மூட்டைகளெல்லாம் கட்டியபிறகு நான் தோட்டத்துக்குப் போய் குடினசையில் படுத்துக்கொண்டேன். விடியற்காலை இரண்டரை அல்லது மூணுமணியிருக்கும். சின்ன எசமான் வந்து எழுப்பி வெளியே அழைத்துப் போனார். இந்தக் கடிதத்தைக் கொடுத்து ‘ஒருவருக்கும் தெரியாமல் காலையில் குந்தளத்திடம் கொடுத்துவிடு. நான் நாலரைமணி வண்டியில் ஊரைவிட்டுப் போகிறேன்!’ என்றார்.
‘எங்கே போகிறீங்க! ஏன் போகிறீங்க!’ என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார் ‘அடே முனிசாமி, நீ குந்தளத்தின் அம்மா காலத்திலிருந்து இந்த வீட்டிலிருக்கிறாய். குந்தளத்தைச் சிறு வயதிலிருந்து நீதான் வளர்த்தாய். ஆகையால் அவளிடம் உனக்குப் பிரியம் உண்டா இல்லையா? பிரியம் உண்டென்றால் நான் சொல்லுகிறபடி செய். இதை காலையில் குந்தளத்திடம் கொடுத்து விடு. எழுதக்கூடாத விஷயம் ஒன்றையும் கடிதத்தில் எழுதிவிடவில்லை. யோசனை செய்யாதே’ என்றார்.
‘அது சரிதானுங்க, நீங்க ஏன் போறீங்க? அதை முதலில் சொல்லுங்க!’ என்று நான் விடாப்பிடியாகக் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார். ‘முனிசாமி! நம்ப குந்த ளத்துக்கு வயது 21 ஆகிறது. நல்ல பருவ வயது. அவ ளுக்கு இப்பொழுது கல்யாணமானால் எத்தனையோ சந்தோ ஷமாக இருக்கவேண்டியவள். சிறுவயதிலேயே அவள் தலை யில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டார்கள். குந்தளத்தை நினைத்தால் என் மனம் வெடித்து விடும் போலிருக்கிறது. சமூகத்தையும் தலைவிதியையும் மனதிற்குள் நொந்துகொண்டு குந்தளம் நரகலோகத்திலிருப்பது போல மனம் பொங்கிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் ஒரு கல்யாணம் செய்து கொண்டு இதே வீட்டில் அவள் முன்னிலையில் குடித்தனம் செய்தால் நன்றாயிருக்குமா? நீயே யோசித்துப்பார். வெளியில் சொல்லாவிட்டாலும் அவள் மனம் என்னபாடுபடும்? இதை நான் மாமாவிடம் சொன்னேன். எவர் என்ன சொன்னாலும் ஒன்றையும் லட்சியம் செய்யாமல் குந்தளத்துக்கு மறு கல்யாணம் செய்துவையுங்கள்; பிறகுதான் என் கல்யாணப் பேச்சை எடுக்கவேண்டும் என்று அவரிடம் எவ்வளவோ கண்டிப்பாகச் சொல்லிப் பார்த்தேன். மாமாவுக்கு ஓரளவு இஷ்டம்தான். ஆனால் சமூகத்தைப் பகைத்துக்கொள்ள தைரியமில்லை. ஆகையால் என் பேச்சு அவர் காதில் ஏறவில்லை’ என்று சொன்னார்.
உடனே நான் கேட்டேன் ‘எசமான் இஷ்டப்பட்டாலும் யாராவது ஒருவர் துணிந்து குந்தளம் அம்மாளைக் கட்டிக்கிட முன்வரவேணுமே,’ யென்று.
‘என் மாமாவுக்கும் என் அம்மாவுக்கும் சம்மதமென்றால் நானே கல்யாணம் செய்துகொள்ளுகிறேன். குந்தளத்தின் அறிவிற்கும் அழகிற்கும் குணத்துக்கும் அவள் புருஷனாயிருக்க பாக்கியம் செய்திருக்க வேண்டுமே!’ என்றார்.
‘இதை எசமானிடமும் சொன்னீங்களா என்று கேட்டேன். சொன்னதாயும் ஆனால் எசமானுக்கு இஷ்டமில்லை யென்றும் சுந்தரம் எசமான் சொன்னாரு. கடைசியில் சொன்னார்:- நான் போவதுதான் குந்தளத்துக்கு நல்லது. அவள் நன்மையை உத்தேசித்து நான் வெளியேறுகிறேன். குந்தளத்தினிடமும் அவள் தாயாரிடமும் உனக்கு உண்மையான விசுவாசமிருந்தால் நான் உன்னிடம் பேசியதைப் பற்றி ஆண்டவனறிய ஒருவரிடமும் ஒன்றும் சொல்லக் கூடாது. குந்தளம் கேட்டால் மட்டும் சொல்லு. அவளிடமும் நீயாக இதைச் சொல்ல வேண்டாம். இந்தக் கடிதத்தை ஒருவருக்கும் தெரியாமல் குந்தளத்திடம் கொடுத்து விடு. நாளைக்காலை என்னைக் காணோமென்று தேடுவார்கள். ஒன்றும் தெரியாதவனைப்போல் நீ நடந்து கொள்ள வேண்டும்’ இப்படிச் சொல்லிவிட்டுப் போனார்.
‘இதைப்பற்றி அப்பாவிடமோ அல்லது அத்தையிடமோ ஏதாவது சொன்னாயா?’ என்று கவலையுடன் கேட்டாள் குந்தளம்,
‘எனக்கு என்ன பயித்தியமா குழந்தை! இது உன் சொந்தவிஷயமில்லை! என் நெஞ்சை அறுத்தாலும் ஒரு வார்த்தை வெளியேவருமா? சுந்தரம் எசமான் சொன்னது ரொம்ப நியாயமாய் இருந்திச்சு. இல்லாவிட்டால் இந்தக் கடுதாசியைக்கூட வாங்கியிருக்க மாட்டேன். பாவம்! நல்ல மனுஷன்!’ என்று அனுதாபப்பட்டான் முனிசாமி.
‘ஆமாம்! நல்ல மனஸு!’ என்று குந்தளமும் ஆமோதித்தாள். சிறிது நேரத்துக்குப்பின் “இந்த விஷபங்களெல்லாம் உன் மனதுக்குள்ளேயே இருக்கட்டும் முனிசாமி” என்று சொல்லியனுப்பினாள்.
பிறகு உட்கார்ந்து வஸுமதிக்கு ஒரு விரிவான கடிதம் எழுதினாள். கடிதத்தில் ஒரு இடத்திலே ‘வஸு நீ நினைத்தது மட்டுமல்ல, நான் நினைத்ததும் சுத்தத் தவறாகிவிட்டது. நிஷ்களங்கமான ஒரு மனிதருக்கு கெட்ட எண்ணங்களை நாம் கற்பித்து வந்திருக்கிறோம்’ என்று எழுதிய பொழுது குந்தளத்தின் கண்களிலிருந்து ஒரு சொட்டு ஜலம் காகிதத்தின் மீது விழுந்து எழுத்தை அழித்தது!
திருச்சியிலிருந்து புறப்பட்ட சுந்தரம் நேராக மதுரைக்கு வந்து சேர்ந்தான். அவனுடன் பி.ஏ. வகுப்பில் சேர்ந்து படித்த மோஹன் மதுரை மாடவீதியில் எங்கோ இருக்கிறானென்பது அவனுக்குத்தெரியும். மோகன் தகப் =பனார் ஒரு வைரவியாபாரி. எல்லோரையும்போல தன் பெயருக்குப் பின்னாலும் இரண்டு எழுத்தாவது இருக்கவேண்டு மென்பதற்காக காலேஜில் படித்தான் மோஹன். பி.ஏ. பரீட்சையில் மூன்றாவது வகுப்பில் தேறினான். எந்த வகுப்பானாலும் அவன் எண்ணம் ஈடேறிவிட்டது. எஸ்.மோஹன் பி. ஏ. என்று லெட்டர் பேப்பர்களும் கவர்களும் விஸிட்டிங்கார்டுகளும் அச்சடித்துக்கொண்டு ஊரோடு ஊராகத் திரும்பி பரம்பரை விபாபாரத்தில் சிரத்தை செலுத்த ஆரம்பித்தான்.
காலேஜ் வாழ்க்கையில் அவனுக்கு நெருங்கிய நண்பன் சுந்தரம். சுந்தரத்தின் உதவியில்லாவிட்டால் மூன்றாவது வகுப்பில்கூட பி. ஏ. பாஸ்செய்திருக்க முடியாதென்பது மோஹனுக்குத் தெரியும். இதே போல மோஹனுக்கும் சுந்தரம் ஒரு வகையில் கடமைப்பட்டிருக்கிறான். சுந்தரத்தின் கதை கட்டுரைகளை வானளாவிப் புகழ்ந்து மேலும் எழுத அவனை உத்சாகப்படுத்திவந்தது மோஹன்தான்.
ஒரு சமயம் குந்தளம் சொல்லியதைப்போல பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு ஓரிரண்டு கதை எழுதி நாலு பேர் புகழவும் ஆரம்பித்துவிட்டால் தலைதெரியாமல் போய் விடுவது இயற்கை. நாம் இல்லாவிட்டால் தமிழ் இலக்கியமே நசித்து நாசமாய் போய்விடுமென்ற எண்ணம்கூட ஏற்பட்டுவிடுகின்றது. இன்னொரு கோஷ்டியினர் இருக்கிறார்கள்; அவர்கள் அபாரமான எழுத்துவன்மை யுடையவர்களாயிருந்தும் அவர்களுடைய சக்தியும் திறமையும் அவர்களுக்குத் தெரிவதில்லை. பிறருடைய புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவர்களைப் பாதிப்பதில்லை. பக்கத்திலிருந்து எவராவது தூண்டிக்கொண்டேயிருந்தாலொழிய எழுதும் சிரத்தையும் இவர்களுக்கு ஏற்படுவதில்லை. இந்த இரண்டாவது கோஷ்டியைச் சேர்ந்தவன் சுந்தரம். அவனுக்கு தமிழ் இலக்கிய நூல்களில் ஒரு ஆசையும் புதிய நவீனங்களை எழுதுவதில் ஒரு சிரத்தையையும் கிளப்பிவிட்டது மோஹன் தான்.
மதுரையை அடைந்ததும் மோகன் வீட்டைக் கண்டு பிடிக்க சுந்தரத்துக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை. மோஹனுக்குக் கல்யாணம் நடந்து இரண்டு மாதங்கள் தானிருக்கும். அவன் மனைவியுடன் வீட்டின் முன்புறப் பூங்காவனத்திலே சிரித்துச் சிரித்துப் பேசிச் சீட்டாடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்து சேர்ந்தான் சுந்தரம். அவன் தூரத்தில் வருவதை மோஹன் மனைவி முதலில் பார்த்தாள். வியாபார விஷயமாக யாரோ வருகிறார்களென்று நினைத்து சும்மா இருந்துவிட்டாள். பின்புறமாக வந்தவனை மோகன் கவனிக்கவில்லை. சுந்தரம் அருகில்வந்து ‘மிஸ்டர் மோகன் இருக்கிறாரர்?’ என்று கேட்ட பொழுதுதான் சுந்தரத்தை மோஹன் திரும்பிப்பார்த்தான்.
‘ஐயையோ! சுந்தரமில்லையா! ஏன் இப்படி பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்து வருகிறாய்? ஒரு கார்ட்டு போட்டிருந்தால் ஸ்டேஷனுக்கு நானே கார் கொண்டுவந்திருக்க மாட்டேனா?’ என்று சந்தோஷ மிகுதியால் தன் நண்பனைக் கட்டிக்கொண்டான் மோகன். வந்த மனிதர் வியாபாரியல்ல, தனது கணவரின் பால்ய நண்பரென்பது தெரிந்ததும் மோகன் மனைவி வெட்கத்துடன் உள்ளே ஓடிவிட்டாள்.
‘மோஹன்! உன்னுடைய உதவியை நாடிவந்திருக்கிறேன். நான்கைந்துநாள் தங்கியிருக்க எனக்கு இடமளிக்க வேண்டும்!’ என்றான் சுந்தரம்.
‘நான்கைந்துநாளா? அதற்குள் உன்னை யார் விடப் போகிறார்கள்? நான்கைந்து வருஷம் வேண்டுமானாலும் என்னுடனேயே இரு! வா உள்ளே போவோம்! காப்பி சாப்பிட்டுவிட்டுப் பிறகு பேசலாம்!’ என்று சொல்லி வீட்டுக்குள் சுந்தரத்தை அழைத்துக் கொண்டு போனான் மோஹன்.
வராந்தாவில் உட்கார்ந்திருந்த மோஹன் தகப்பனார் ‘இந்தப் பையன் யாரப்பா! எங்கேயோ பார்த்த மாதிரி யிருக்கே!’ என்று விசாரித்தார்.
‘நானும் இவனும் சேர்ந்திருக்கும் போட்டோவில் பார்த்திருப்பீர்கள் அப்பா. இவன்தான் மறுமலர்ச்சி எழுத்தாளன் சுந்தரம்! என் கிளாஸ்மேட்! இப்பொழுது பிரபல நாவலாசிரியராகி விட்டான்’ என்று தகப்பனாருக்கு நண்பனை அறிமுகப்படுத்தி வைத்தான் மோஹன்.
‘அடிக்கடி சுந்தரம், சுந்தரம் என்பாயே அந்தப் பையன் இவன்தானா? நான் கூட வாசித்திருக்கிறேன் சுந்தரம் உன் புத்தகங்களை! நன்றாக எழுதியிருக்கிறாய்! அதே மாதிரி சரஸ்வதி எப்பொழுதும் உன் நாக்கில் இருக்க வேண்டும்!’ என்று மரியாதைக்கு சில வார்த்தைகள் சொன்னார் மோஹன் தகப்பனார். சுந்தரம் மோஹனுடன் அவனுடைய அறைக்குப் போய் சட்டைகளைக் கழட்டிவிட்டு கைகால் கழுவி காப்பி குடித்தான். காலேஜ் படிப்பை முடித்துக்கொண்டு ஊர் திரும்பியதையும் தகப்பனாருக்கு வயதாகிவிட்டபடி யால் வியாபாரத்தைத்தானே நேரில் கவனித்து வருவதையும் இரண்டு மாதங்களுக்கு முன் தனக்குக் கல்யாணம் நடந்ததையும் சவிஸ்தாரமாகச் சொன்னான் மோஹன்.
‘நீ வரும்பொழுது என்னுடனிருந்தாளே அவள்தான் என் மனைவி. காலேஜில்சேர்ந்து படிக்காவிட்டாலும் நல்ல அறிவாளி. என்னைப் போலவே அவளுக்கும் தமிழ் இலக்கியங்களென்றால் உயிர்! தெய்வ சங்கல்ப்பத்தினால். மன வேறுபாடில்லாமல் எனக்குச் சகலவிதத்திலும் பிடித்த மனைவி கிடைத்தாளப்பா! அதுகிடக்கட்டும்! உன் விஷயமென்ன? கல்யாணம் செய்து கொண்டாயா இல்லையா?’ என்று கேட்டான் மோஹன்.
சுந்தரம்:- நாளை பொழுது விடிந்தால் கல்யாணம் நடக்க வேண்டும்!
மோஹன்:- சபாஷ் அப்படிச் சொல்லுங்கோ புது மாப்பிள்ளை ஸார்! மதுரையில் தான் கல்யாணமா? நான் நினைத்தேன் எழுதாமல் சொல்லாமல் திடீரென்று இப்படி மதுரையில்வந்து குதித்தவுடன்! அம்மா மாமா எல்லோரும் எந்தத் தெருவில் இறங்கியிருக்கா?
சுந்:- ‘கல்யாணம் மதுரையிலில்லையப்பா! மன்னார்குடியில்!’ என்றான் ஒரு கோரப்புன்னகையுடன்.
மோஹ:- மன்னார்குடியில் விடிந்தால் கல்யாணமென்கிறாய். இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறாய்! எனக்கு ஒன்றும் புரியவில்லையே சுந்தரம்!
சுந்தரம் தன் வரலாற்றை விபரமாக எடுத்துச்சொன்னான். ‘மேற்கொண்டு என்ன செய்வதென்று தோன்றவில்லை. ஊரை விட்டு எங்கே போவதென்று யோசித்தபொழுது உன் ஞாபகம் வந்தது. உடனே மதுரைக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்! பாக்கி விஷயங்களை இனிமேல்தான் யோசிக்க வேண்டும்!’ என்று முடித்தான்.
‘வேறு எங்கும் போய்விடாமல் என்னிடம் வந்தாயே அந்த மட்டும் சந்தோஷம். மனதை அலட்டிக் கொள்ளாமல் வாயை மூடிக்கொண்டு நிம்மதியாயிரு! என்ன செய்யவேண்டுமென்று பிறகு நான் சொல்லுகிறேன். இதோ பார், சுந்தரம்! உன் அம்மாவையும் மாமாவையும் ஏமாற்றி விட்டு வந்த மாதிரி என்னிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று கிளம்பி விடக்கூடாது! தெரியுமா? கொஞ்சம் சந்தேகத்துக்கு இடம் கொடுத்தாயோ உன்னைச் சுற்றி காவல் வைத்துவிடுவேன்!’ என்று வழக்கமான அன்புடன் மோஹன் சொல்லியது புண்பட்ட சுந்தரத்தின் மனதிற்கு மிகுந்த ஆறுத லளித்தது.
இரண்டு தினங்களுக்குப்பிறகு மோகனிடம் கேட்டான் சுந்தரம் ‘உன் சிற்றப்பா ஒருவர் இலங்கையிலிருப்பதாக எப்பொழுதோ நீ சொன்ன ஞாபகம். அவர் இன்னமும் கொழும்பில்தான் இருக்கிறாரா’ என்று.
மோஹன்:- ஆமாம், ஏன் ?
சுங்:- அங்கு என்ன செய்கிறார்?
மோஹன் : ஒரு பெரிய அச்சாபீஸ் வைத்திருக்கிறார். தேவாஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ் என்றால் இலங்கையில் ரொம்ப பிரசித்தம். நாற்பது வருஷங்களுக்கு முன்னால் ஒரு செட்டி வீட்டுக் கணக்குப்பிள்ளையாக அவர் இலங்கைக்குப் போனாராம். இப்பொழுது ரொக்கமாக பத்துலட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டார். அச்சாபீஸ் தவிர அவருக்கு இரண்டு பெரிய ஷாப்புக்கடைகளும், ரத்னபுரியில் ஒரு ரத்தினச் சுரங்கமும் இருக்கிறது. அவரிடமிருந்துதான் என் கடைக்கு நீலமும் முத்துக்களும் வருகின்றன. அவரைப் பற்றி இப் பொழுது என்ன?
சுந்:- அவருக்கும் உனக்கும் விரோதம் ஒன்றுமில்லையே?
மோஹன்:- சிற்றப்பாவுடன் என்னப்பா விரோதம்? அவர் அப்படி கர்வம் பிடித்தவரில்லை. இரண்டு மாதத்துக்கு முன் என் கல்யாணத்துக்கு வந்தபொழுது ஒரு தடவை இலங்கைக்கு வரவேண்டுமென்று சொல்லி விட்டுப் போனார். கொழும்பைப் பற்றி வர்ணித்தார் வர்ணித்தார் அப்படி வர்ணித்தார். குபேரப்பட்டினமென்றால் அதுதான் குபேரப்பட்டினமாம். ரூபாய் நோட்டுக்கு அங்கு மதிப்பேயில்லையாம். ரிக்ஷா இழுப்பவன்கூட தினசரி ஏழெட்டு ரூபாய் சம்பாதிக்கிறானென்றால் பார்த்துக் கொள்ளேன்! இதெல்லாவற்றையும்விட இலங்கைப் பெண்களைப்பற்றி அவர் சொல்லியதுதான் எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
சுந்:- அப்படி என்ன சொன்னார்?
மோஹ:- நகரங்களிலுள்ள பெண்களில் பெரும்பாலோர் காலேஜ்களில் படித்தவர்களாகவே யிருப்பார்களாம். ஆண் பெண் என்ற வேற்றுமையே இல்லாமல் சமூகத்தில் வெகு சகஜமாகப் பழகுவார்களாம். ஆங்கிலம் அவர்களுக்கு தண்ணீர் மாதிரி. யாழ்ப்பாணத்தவருக்கு தமிழ் தாய்ப்பாஷை. தமிழ்ப் பெரியார் நாவலர் பிறந்த புண்ணிய பூமி ஈழநாடு. அந்த நாட்டில் கொஞ்சம் பணக்காரர்களாயிருக்கும் ஒரு நண்பருடைய வீட்டுக்குப் போய் விட்டால் பிறந்த குழந்தைகள் முதல் கிழடுகள் வரையில் ஆங்கிலம் பேசுவதைத்தான் கேட்க முடியுமேதவிர நாம் தமிழ் பேசினாலும் அவர்களுக்கு விளங்காதாம். சிங்களவர்களின் விஷயமும் இதேமாதிரித் தான். கோட், ஸூட், கவுன் போட்டுக்கொண்டு தாய்ப் பாஷை தெரியாதவனைப்போல ஆங்கிலத்தில் பேசினால்தான் அங்கு மதிப்பு. என் சிற்றப்பாவின் சிநேகிதர் ஒருவருடைய பெண் ரஜாவை மதுரையில் கழிக்க வந்திருக்கிறாள். அவளைப் பார்த்தால் போதும் இலங்கையின் நாகரீகப் போக்கை படம் பிடித்தமாதிரி இருக்கும்!
சுந்:- இல்லை! நான் இலங்கைக்குப் போய் கொஞ்ச காலம் இருக்கலாமென்று நினைக்கிறேன்.
மோஹன்:- அங்கு போய் என்னசெய்ய உத்தேசம்?
சுந்:- போனபிறகு யோசித்துக்கொள்வது. எனக்கு ஒரு வேலை கிடைக்காதென்றா நினைக்கிறாய்?
மோஹன்: அப்படியொன்றுமில்லை சுந்தரம்! வேண்டுமானால் என் அப்பாவிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிக் கொடுக்கிறேன். இலங்கையில் என் சிற்றப்பா வீட்டிலேயே தங்கியிருந்து கொண்டு வேலை தேட சௌகர்யமாயிருக்கும். உனக்கு இஷ்டமானால் என் சிற்றப்பா அச்சாபீஸிலேயே இருந்துவிடலாம்.
சுந்:- உன் சிற்றப்பாவுக்கு ஒரு கடிதம் வாங்கிக் கொடு. ரொம்ப உதவியாயிருக்கும்.
இந்த சம்பாஷணை நடந்த மறுநாள் வண்டியிலே சுந்தரம் இலங்கைக்குப் புறப்பட்டுவிட்டான்.
– தொடரும்…
– குந்தளப் பிரேமா, முதற் பதிப்பு: 1951, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.