குந்தளப் பிரேமா






(1951ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4. பிரசுராலயப் புரட்சி
‘தமிழ் நாட்டில் பெரிய புரட்சியை உண்டுபண்ணி விட்டீர்களே!’ என்று கேட்டுக்கொண்டு கேசவனின் பிரசுராலயத்துக்கு வந்தான் சுந்தரம் ஒருநாள்.

‘எதைக் குறிப்பிடுகிறீர்கள்? குறைந்த விலையில் சிறந்த புத்தகங்கள் வெளியிடுவதையா? உங்களைப்போன்ற நண்பர்களின் உதவி இருக்கும்வரை ‘கமலாலயத்துக்கு’ என்ன குறை? எழுத்தாளர்களுக்கு பணக்கஷ்டம் ஒரு பெரிய சத்ரு. பணக் கவலையிருந்தால் கற்பனைகள் சிதைந்துவிடும். என் தகப்பனார் அடிக்கடி சொல்லுவார், ‘சிறந்த எழுத்தாளரென்பது நிச்சயமாகத் தெரிந்தால் அவருக்குக் கை நிறையப் பணம் கொடு. கொடுப்பதைப் போல் பத்து மடங்கு பிறகு சம்பாதித்துக்கொண்டுவிடலாம்’ என்று. பெரும்பாலான ஆசிரியர்கள் சோபிக்காமல் ஓரிரண்டு புத்தகங்களுடன் மறைந்து போவதற்கு வறுமைதான் காரணம். இது என் தகப்பனார் அனுபவத்தில் கண்ட உண்மை. பிரதிப் பிரயோசனத்தைக்கூட எதிர்பாராமல் அருமையான இலக்கியங்களைச் சிருஷ்டித்துக் கொடுக்க உங்களைப்போன்ற நண்பர்களிருக்கும் வரையில் கமலாலயம் தமிழ் நாட்டில் புரட்சியை மட்டுமா உண்டு பண்ணும்? புயலையும் சூறாவளியையுமே கிளப்பிவிடாதா?’ என்று மூச்சுவிடாமல் பேசினான் கேசவன்.
‘நான் என்னவோ கேட்கிறேன் நீங்கள் என்னவோ சொல்லிக்கொண்டு போகிறீர்களே! குமாரி சாந்தாவின் புத்தகத்தைப்பற்றியல்லவா பிரஸ்தாபித்தேன்!’
‘மூன்றாவது புத்தகம் அச்சிலிருக்கிறது.’
‘மூன்றாவது புத்தகம்வேறு அச்சாகிறதா? இரண்டாவது புத்தகத்துக்கு இன்று காலைப் பத்திரிகையில் வெளியான மதிப்புரைகளைப் பார்த்தீர்களல்லவா?’
‘பார்த்தேன். அத்துடன் உங்களுடைய கடைசிப் புத்தகத்தின் மதிப்புரையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது!’
சுந்தரத்தின் முகம் சிறிது மாறுதலடைந்தது. ‘என் புத்தகத்தையும் குமாரி சாந்தாவின் புத்தகத்தையும் ஏககாலத்தில் நீங்கள் மதிப்புரைக்கு அனுப்பியிருக்கக்கூடாது!’ என்று சொன்னான் மாறுபட்ட தொனியில்.
‘ஏன் அதிலென்ன தவறு? உங்கள் புத்தகத்தைப் பற்றியும் நன்றாகத்தானே மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்?’
‘கண்டிக்கவோ அல்லது குறைகூறவோ இல்லையென் பது உண்மைதான். ஆனால் சாந்தாவின் நடையும் கருத் துகளும் தமிழ் இலக்கிய உலகிலேயே ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி விட்டதாக வர்ணித்திருக்கிறார்களே அதுதான் எனக்கு விளங்கவில்லை. சாந்தாவின் இரண்டாவது புத்தகத்தை நானும் படித்தேன். எனக்கு ஒரு புரட்சியும் தெரியவில்லை. வசனநடை கொஞ்சம் விறுவிறுப்பாயிருக்கிறது. கருத்தும். ஓரளவிற்கு நூதனமாயிருக்கிறது. இதில் என்ன புரட்சி இருக்கிறதாம்?’
‘எனக்கென்ன தெரியும்? மதிப்புரை எழுதிய பத்தி ரிகாசிரியர்களையல்லவா கேட்கவேண்டும்?’
‘கேட்பானேன்? பத்திரிகைக்காரர்களின் யோக்கியதை தெரியாதவர்களல்லவா கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும்? காளிதாஸனே மறுபிறவியெடுத்துவந்து ஒரு அற்புதமான காவியத்தைச் சிருஷ்டிக்கட்டும்; அதை நமது பத்திரிகைக்காரர்கள் நோக்கும் போக்கு வேறுதான். ஒரு பெண் எழுதிவிட்டால் அதற்குக் கொடுக்கும் மதிப்பு முற்றிலும் வேறுதான். தெருக்கூத்தில் சாவித்திரி நாடகத்திலே பார்க்கிறோமே எமதர்மன் தர்பார். அதில் பாபிகளை கொண்டு வந்து நிறுத்தி தண்டிக்கப்படுவது, உண்மையில் நடப்பதாயிருந்தால் விமரிசனிகளின் கைவிரல்கள் எண்ணெய்க் கொப்பரையில்தான் வைக்கப்படும்!’
‘பத்திரிகாசிரியர்கள்மீது நீங்கள் இவ்வளவு ஆத்திரப் பட காரணமில்லையே, ஸ்வாமி! உங்கள் புத்தகங்களில் ஆறு புத்தகங்களை இதுவரை கமலாலயம் வெளியிட்டிருக்கிறது. ஒரு புத்தகத்தைப் பற்றியாவது எந்த விமரிசகரேனும் குறை கூறியதுண்டா? இல்லையே?’
‘என்னை இந்திரன் சந்திரனென்று எவரும் எழுதவேண்டியதில்லை; அதை நான் விரும்பியதுமில்லை. வேண்டியவர்களுக்கு ஒரு விதமாகவும், வேண்டாதவர்களுக்கு மற்றொரு விதமாகவும் விமரிசனம் எழுதுவது பத்திரிகைத் தர்மத்துக்கே விரோதம். விமரிசனம் புத்தகத்துக்கா அல்லது அதை எழுதியவருக்கா என்றுதான் கேட்கிறேன்.’
‘குமாரி சாந்தா பத்திரிகைக்காரர்களுக்கெல்லாம் வேண்டியவள். ஆகையால்தான் இப்படி வானளாவப் புகழ்ந்திருக்கிறார்கள் என்கிறீர்கள். அப்படித்தானே? எது வானாலென்ன. உங்களைப்போல அவரும் எனது எழுத்தாளர்களில் ஒருவர். ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் குறைகூறுவதோ, அல்லது விவாதிப்பதோ என் தொழிலுக்கு நன்மையானதல்ல. ஆனால் ஒன்று. எழுத்தாளர்களிடையில் இவ்வித பொறாமையிருப்பது இயற்கை. அது வரவேற்கத்தக்கதும் கூட. இந்த விஷயம் ஒருபுறமிருக்கட்டும். உங்கள் பரீட்சைகளெல்லாம் முடிந்துவிட்டதல்லவா?’
‘ஆம், ஏன்?’
‘நாளை நான் இலங்கைக்குப் போகிறேன். நீங்களும் வருவதானால் வாருங்கள். இரண்டு வாரகாலத்தில் திரும்பிவிடலாம். நீங்கள் இலங்கைக்குப் போனதே இல்லையே!’
‘இலங்கையில் என்ன வேலை?’
‘கமலாலயத்தின் கிளை ஸ்தாபனமொன்று இலங்கையிலிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு வரப்போகிறேன்!’
‘நான் வருவதற்கில்லை. என் தாயாருக்கு கொஞ்ச காலமாக காசநோய் ரொம்ப உபத்திரவம் கொடுத்து வருகிறது. அந்த வியாதிக்கு கடற்காற்று கூடாதென்கிறார்கள். உஷ்ணப் பிரதேசம் எதற்காவது ஜாகையை மாற்றலாமென்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் ஒன்றும் நிச்சயமில்லை. இருந்தாலும் இந்த சமயம் தாயாரைத் தனிமையில் விட்டு வரமுடியாது. பிறகு ஒரு சமயம் பார்க்கலாம்!’
மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனான் சுந்தரம். அவன் புத்தகங்களைப் பிரசுரிக்க கமலாலயம் ஆரம்பித்தது முதல் கேசவனைப் பார்க்க சுந்தரம் அடிக்கடி வருவது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொருமுறை அவன் வந்துவிட்டுப் போகும் பொழுதும் குந்தளத்துக்குக் கடிதம் எழுத புதிய விஷயம் ஏதாவது கிடைத்துக்கொண்டிருக்கும் வஸூமதிக்கு. குமாரி சாந்தாவைப்பற்றி அன்று ஆத்திரத்துடன் சுந்தரம் பேசிவிட்டுப் போனதையும் வழக்கம் போல வஸூமதி எழுதியிருந்தாள். ‘அத்தான் உண்மையைச் சொன்னார். என் அபிப்பிராயமும் அதுதான். சாந்தாவின் புத்தகங்களை வெளியிடுவதை நிறுத்திவிடுங்களேன்! சுந்தரம் அத்தான் புத்தகங்களுக்கு இரண்டு வர்ணத்தில் அட்டை. சாந்தாவின் புத்தகமென்றால் மூன்று வர்ணத்தில் அட்டை போடுகிறீர்கள். இது பாரபட்சமில்லையா?’ என்று குந்தளம் தனது பதிலில் கேட்டிருந்தாள். ‘இது பாரபட்சமில்லை. பிரசுரகர்த்தாவின் உரிமை. இந்த உரிமையை அனுமதிக்கச் சம்மதிப்பவர்களின் புத்தகங்களை மட்டுமே கமலாலயம் வெளியிடுவது வழக்கம்’ என்று வஸுமதி சுருக்கமாக பதிலெழுதி அந்த விஷயத்தை அத்துடன் முடித்துவிட்டாள்.
சிறந்த எழுத்தாளர்கள் மட்டும் கிடைத்தால் தமிழ் நாட்டில் புரட்சியைமட்டுமல்ல, புயலையே கிளப்பிவிடுவேன் என்று கேசவன் சொல்லியது மெய்யாகிவிட்டது. சாந்தாவின் மூன்றாவது புத்தகமாகிய ‘ஆற்றங்கரை அம்மன்’ வெளிவந்ததுதான் தாமதம்; பத்திரிகைகள் பத்திபத்தியாகப் புகழ்மாலைகளைச் சொரிந்தன. இலக்கிய உலகத்தின் பொக்கிஷமென்றது ஒரு பத்திரிகை. நகைச்சுவையரசி என்றது இன்னொன்று. நவீனங்களின் சிகரமென்று வர்ணித்தார் ஒரு விமரிசகர். தமிழ் நாடெங்கும் ‘ஆற்றங்கரை அம்மனை’ப் பற்றியே பேச்சு. பேராசிரியர்கள் கையிலும், பள்ளிக்கூட மாணவர்கள். கையிலும், வக்கீல்களின் கையிலும், குமாஸ்தாக்கள் கையிலும் இதே புஸ்தகம்தான். சமையலறையில் இருக்கும் ஒரு ஸஹதர்மிணிக்கு அடுப்பில் பால் பொங்குவது கூடத் தெரியவில்லை. இன்னொரு விட்டில் ‘சனியன் இரண்டு நிமிஷம் படிக்கவிடமாட்டேனென்கிறதே!’ என்று எரிந்து விழுகிறாள் பாலுக்குப் பசித்து அழும் குழந்தையிடம் அதன் தாயார்.
‘இப்படிப் பேய் பிடித்தமாதிரி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால், வீட்டு வேலைகள் முடிந்த மாதிரித்தான்’ என்று வேலைக்காரனை திட்டிக்கொட்டுகிறார் ஒரு எஜமான்.
‘நான்தான் முதல், நீதான் முதல்’ என்று இன்னொரு வீட்டில் ஒரு இளம் தம்பதிகள் போட்டி போட்டுக்கொண்டு புத்தகத்தை இழுத்ததில் ஒரு ஆற்றங்கரை அம்மன் இரண்டு அம்மன்களாகிவிட்டன!
இவ்விதம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களையெல்லாம் பித்துப்பிடிக்கச் செய்துவிட்டது அந்தப் பொல்லாத ஆற்றங்கரை அம்மன்!
கமலாலயத்துக்கு நூற்றுக்கணக்கில் பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. சாந்தாவின் போட்டோ வேண்டுமென்று கேட்டனர் சிலர். ஆட்டோகிராப் வேண்டுமென்றார்கள் வேறு சிலர். பள்ளிக்கூட பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை வகிக்க சாந்தாவை அழைத்தன நான்கைந்து கடிதங்கள். இவைகளையெல்லாம் விட சில வாரங்களுக்கு முன் பொறாமைக் கனலைக் கொட்டிவிட்டுப்போன சுந்தரமே கமலாலயத்தின் வெற்றியைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தான். நினைத்தால் கமலாலயம் சூறாவளியையே கிளப்பு மென்பதை இப்பொழுதாவது சுந்தரம் ஒப்புக்கொண்டானே என்று ஆத்ம திருப்தியடைந்தான் கேசவன். ஆற்றங்கரை அம்மனைப் பாராட்டிக் கிடைத்த கடிதக் குவியல்களை எல் லாம் குமாரி சாந்தாவுக்கு எப்படி அனுப்புவது? கேசவனுக்கு இது பெரிய பிரச்னையாகிவிட்டது!
இரண்டே வாரங்களில் எழுபதினாயிரம் பிரதிகள் விற்ற புத்தகமும் இல்லை; அதை வெளியிட்டு தமிழ்ப் பணியாற்றிய கமலாலயத்துக்கு ஈடுமில்லையென்று பெருமையடைந்தாள் வஸு. கணவனின் பெருமையில் அவளுக்கும் பங்கு உண்டுதானே?
அன்று காலை பாஸ்கரய்யர் முகம் என்றுமில்லாத வாட்டமடைந்திருந்தது.
‘கடுதாசி வால்லேன்னு எவரு அழுதாங்க! இப்படி கடுதாசி வரவும் வேணாம், அய்யரு முவத்தை இப்படி வைச்சுக்கிடவும் வேணாம்!’ என்று முனிசாமி தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
சிந்தனை கலைந்தவரைப்போல சட்டென்று நிமிர்ந்து ‘குழந்தை எங்கே இருக்கிறாள்?’ என்று முனிசாமியைக் கேட்டார் அய்யர்.
‘புத்தகசாலையிலே இருக்காங்க! கூட்டியரட்டுமா? என்னமாச்சும் கெட்டசேதி வந்திருக்குதா எசமான்?’
‘அப்படியொன்றுமில்லை முனிசாமி. அம்புஜம் விஷயம்தான்!’
‘பெரியம்மா எழுதியிருக்கிறாங்களா?’
‘அவள் எழுதவில்லை, சுந்தரம் எழுதியிருக்கிறான்.’
‘பதினைஞ்சு இருபது வருஷம் கழிச்சு இப்பனாச்சும் கடுதாசிபோடத் தெரிஞ்சுதே. எல்லாரும் சுகந்தானே எசமான்!’
‘அம்புஜத்துக்கு காச நோயாம். படுத்த படுக்கையி லிருக்கிறாளாம். கடற்கரையைவிட்டு உஷ்ணமான ஊருக்குப் போகவேண்டுமென்று டாக்டர் சொல்லுவதாய் சுந்தரம் எழுதியிருக்கிறான்!’
‘கோயம்புத்தூரு சீமை நல்ல இடம்னு சொல்லுவாங்களே. அங்கு போகிறதுதானே!’
அய்யர் கொஞ்சம் தயங்கிவிட்டுச் சொன்னார், ‘எந்த ஊருக்குப் போகலாமென்று யோசனை கேட்டு எழுதவில்லை யப்பா, அம்புஜம் சொல்லுகிறாளாம் கடைசி காலத்தில் என் பக்கத்திலிருந்து உயிரை விடவேண்டுமென்று. விஷயம் இதுதான். இதற்கு ஊரைச் சுற்றி வளைத்து எழுதியிருக்கிறான் பத்துப்பக்கம். அம்புஜம் செய்த தவறுகளுக்கெல்லாம் வருத்தப்படுகிறாளாம். எனக்கு ஏதோ துரோகம் செய்து விட்டதாயும் அந்த துரோகத்தின் பலனை ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிப்பதாயும் சொல்லி அழுகிறாளாம். சுந்தரம் எழுதியிருப்பதை வாசித்தால் உண்மையில் அவள் ரொம்பக் கஷ்டப்படுவதாகத்தான் தெரிகிறது. ஆனால் சகோதரி யென்ற பாசமே எனக்கு ஏற்படமாட்டேனென்கிறதே!’
‘என்ன இருந்தாலும் பெரியம்மா எசமானுக்கு அங்கச்சிதானுங்களே!’
‘அதற்காக?’
‘கஷ்டப்பட்டால் உதவிசெய்யத்தான் வேணும்! அவங்களுக்கும் எசமானைவிட்டா வேறு யாரு இருக்கிறாக!’
‘இத்தனை நாள் யார் இருந்தா?’
‘பொம்புளை அசட்டுத்தனம்னு கேள்விப்பட்டதில்லிங்களா? சின்ன எசமான் எழுதியிருக்கிறதைப் பார்த்தால் பெரியம்மா இருக்கப்போறது இன்னும் ஆறு மாசமோ ஒரு வருசமோ? கடைசி காலத்திலேயாவது நிம்மதியாயிருந்துட்டு போவட்டுமே!’
‘நீ சொல்வது சரிதான் முனிசாமி! உண்மையாகவே அம்புஜம் கஷ்டப்படுவதாகத்தான் தெரிகிறது. கஷ்டகாலம் வந்தால் பழைய தவறுகள் ஞாபகத்துக்கு வருவதும் அதற்கு வருத்தப்படுவதும் இயற்கை. அதற்காக இங்கு அழைத்துவைத்துக்கொள்ள முடியுமா? இதை யோசிக்க வேண்டுமில்லையா?’
‘இங்கேதான் வந்து இருக்கட்டுங்களே! இதிலே என்ன நஷ்டம்?’
‘அம்புஜம் தனியாகப் பிரிந்து சென்னைக்குப் போய் விட்டால் நல்லதென்று முன்பு என் நினைத்தோம்?’
‘அதுமாதிரிங்களா இப்ப? நம்ம குளந்தையும் நினைவு தெரிஞ்சது. சின்ன எசமானும் படிச்சுப் பட்டம் வாங்கினவங்க, தவிரவும் நம்ம குழந்தை நீங்க நினைக்கிறமாதிரி இல்லவே இல்லை.’
‘நீ சொல்லுகிறாய். அப்படி அம்புஜம் நினைக்கவேண்டுமே!’
‘எல்லாம் தெரிஞ்சுதானே கடுதாசி போட்டிருக்கிறாங்க?’
‘என்ன கடுதாசி அப்பா? வஸு வீட்டுக்காரர் எழுதியிருக்கிறாரா?’ வஸூ எல்லாரும் சௌக்கியந்தானே?’ என்று கேட்டுக்கொண்டே வந்தாள் குந்தளம் அங்கே.
‘இல்லையம்மா’ என்று ஆரம்பித்து வார்த்தையை விழுங்கினார் அய்யர். அவர் முனிசாமியைப் பார்த்தார். முனிசாமி அய்யரைப் பார்த்தான். இருவரையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு நின்று மௌனத்தின் பொருள் விளங்காமல் திகைத்தாள் குந்தளம்.
சிறிதுநேரம் கழித்து ஏதோ வேலையிருப்பதுபோல ‘பிறகு வருகிறேன் அப்பா!’ என்று சொல்லி நகர ஆரம்பித்தாள்.
‘இல்லை குந்தளம் இரு! உன் அத்தைக்கு உடம்பு ரொம்ப மோசமாயிருக்கிறதாம். இங்கு வந்திருக்க ஆசைப் படுகிறாளாம், சுந்தரம் எழுதியிருக்கிறான்’ என்றார் அய்யர்.
‘அப்படியா?’ என்று சம்பந்தமில்லாதவள்போல பட்டுக்கொள்ளாமல் சொன்னாள் குந்தளம்.
‘அம்புஜமும் சுந்தரமும் இங்கு வந்திருக்க விரும்புகிறார்கள். என்னவோ போனதையெல்லாம் மறந்து கஷ்ட காலத்தில் உதவி செய்ய வேண்டுமென்று வாதாடுகிறான் முனிசாமி.’
‘உங்களுக்கு இஷ்டமானால் வந்திருக்கட்டுமே!’
‘எனக்கு இஷ்டமானால் என்றால்? உனக்குப் பிரியமில்லையென்று அர்த்தமா?’
‘நான் அப்படிச் சொல்லவில்லையே!’
‘உன் அபிப்பிராயத்தைக் கேட்டேன்.’
‘உங்கள் அபிப்பிராயப்படிதானென்றேன்!’
‘அதற்கு என்ன அர்த்தம்?’
‘ஒரே அர்த்தம்தான். உங்களுக்கு எது விருப்பமோ அதுதான். என் இஷ்டமும். எப்பொழுது உங்கள் அபிப்பிராயத்துக்கு மாறாக நான் அபிப்பிராயப்பட்டிருக்கிறேன்?’
‘குந்தளம், உன்னை வக்கீலுக்குப் படிக்க வைத்திருக்க வேண்டும்! என்றார் அய்யர்.
‘இப்பொழுது படிக்கும் படிப்பிற்கே நேரமில்லை. வக்கீலுக்கும் படிப்பதென்றால் ஒரு நாளைக்கு இருபத்தெட்டு மணி இருந்தாலும் போதாதே அப்பா!’
‘நம்ப குழந்தைக்கிட்டே யாரும் பேசித் தப்பிச்சுக்கிட முடியாதுங்க!’ என்று முகமெல்லாம் புன்னகை படர பெருமையோடு சொன்னான் முனிசாமி.
‘முனிசாமி சொல்லுகிறமாதிரி உன்னிடம் பேசமுடியாதம்மா! உன் புத்தகப் படிப்பையெல்லாம் என்னிடமே காட்டுகிறாயே! நான் நினைக்கிறேன் அம்புஜம் உண்மையாகவே கஷ்டப்படுகிறாளென்று. கடைசி காலத்தில் பக்கத்தில்தான் இருந்துவிட்டுப்போகட்டுமே!’
‘நல்லது அப்பா!’
‘அத்தைக்கு நீயே எழுதிவிடு இங்கு வந்துவிடும்படி?’ என்றார் அய்யர்.
‘நானா? நீங்கள் எழுதுவதுதான் நல்லது’ என்று தயக்கத்துடன் சொன்னாள் குந்தளம்.
‘குழந்தை சொல்றது ஒருவிதத்தில் சரிதானுங்க. நீங்களே எழுதிப்போட்டால்தான் எசமானுக்கு கோவம் கீவம் ஒண்ணுமில்லைனு நினைப்பாங்க.’
‘அதுவும் சரிதான். நானே எழுதுகிறேன் அம்மா! அத்தையின் முகம் உனக்கு மறந்துபோயிருக்கும். சுந்தரத்தையோ அடையாளமே தெரியாது!’ என்றார் அய்யர்.
‘வந்தபிறகு எல்லோருடைய அடையாளமும் தெரிந்து விடுகிறது! நான் போகிறேன் அப்பா, வேலையிருக்கிறது!’ என்று சொல்லிவிட்டு மாடியிலுள்ள தனது தனி அறைக்குச் சென்றாள் குந்தளம்.
அம்புஜத்தையும் சுந்தரத்தையும் புறப்பட்டு வந்து சேரும்படி பாஸ்கரய்யர் ஒரு கடிதம் எழுதி அன்றைய கட்டில் சேர்த்துவிடச்சொல்லி முனிசாமியிடம் கொடுத்தார்.
அறையில் போய் அமர்ந்த குந்தளம் பிரமை பிடித்தவளைப் போலானாள். தகப்பனாரிடம் ஏதோ கேட்பதற்காகவே மாடியிலிருந்து இறங்கி வந்தாள். ஆனால் அவரிடமிருந்து எதிர்பாராத வேறொரு செய்தியைக் கேட்டு அந்த அதிர்ச்சியில் சென்ற காரியத்தை மறந்து அறைக்குத் திரும்பி விட்டாள். ஒரு புதிய பீதி தன்னைப் பலமாகப் பற்றிக் கொண்டதைப் போலிருந்தது குந்தளத்துக்கு. ஏன் என்ற காரணம் அவளுக்கே தெரியவில்லை. இதுவரை குதூகலத்துடனிருந்த அவளுக்கு இப்பொழுது திடீரென்று தனது சுதந்திரத்துக்கும் மன அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுவிட்டதைப்போல தோன்றியது. அந்த வீட்டுக்கு அய்யருக்கு அடுத்தபடி எஜமானி அவள்தானே? அவள் சுதந்திரத்தை யார் கட்டுப்படுத்த முடியும்? அவளுடைய விவகாரங்களில் எவர் துணிந்து தலையிடமுடியும்?. என்ன இருந்தாலும் வீடுதேடி வரும் அத்தை ஒரு விருந்தாளி போலத்தானே? கர்னாடகத்தில் பழகிய அத்தை தனது நாகரிகப் போக்கை விரும்பமாட்டாளென்று குந்தளம் அஞ்சினாளா? அத்தையை நினைவிருந்தாலல்லவா அவள் கர்நாடகமா அல்லது புது நாடகமா என்று தெரியமுடியும்? குந்தளத்துக்கே அறிய முடியவில்லை திடீரென்று அவளைப்பற்றிக்கொண்ட உணர்ச்சிப் பிரவாகத்தின் தன்மையை. வஸூவிற்குக் கடிதம் எழுதினால் மனம் சிறிது நிம்மதியடையும் போலிருந்தது. உடனே எழுத உட்கார்ந்துவிட்டாள். ஒரு பக்கம்தான் எழுதினாள். அதற்கு ஒரு மணி நேரம் பிடித்தது. ஏழெட்டு காகிதங்கள் வீணாகி குப்பைக் கூடைக்குப் போயின. கடைசி யில் எழுதி முடித்து உறையில்போட்டு ஒட்டிய கடிதத்தையும் கிழித்தெறிந்துவிட்டு வேறொரு கடிதத்தில் ஏழெட்டு வரி எழுதி தபால்பெட்டியில் போட அனுப்பினாள்.
குந்தளத்தின் கடிதத்தைப் பார்த்ததும் வஸுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. ‘நான் நினைத்தபடியே ஆயிற்று பார்த்தீர்களா?’ என்று சொல்லி கேசவனிடம் கொடுத்தாள். கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:-
“அன்புள்ள வஸு,
நான் எழுதப்போவதை நீ எதிர்பார்த்திருக்கமாட்டாய். ஏன் நானே எதிர்பார்க்கவில்லை. என் அத்தையும் அவள் பிள்ளையான பிரபல ஆசிரியர் சுந்தரமும் எங்களுடன் சேர்ந்து வசிக்க திருச்சினாப்பள்ளிக்கு வருகிறார்களாம். அப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறது இன்று. அத்தான் சுந்தரம் என்னைப்பற்றி உங்களிடம் என்னென்னவோ பேசியிருக்கிறார். உனக்கும் எனக்குமுள்ள தொடர்பு வெளியானால் என்ன விபரீதம் ஏற்படுமோ தெரியவில்லை. உன் தாயாரும் தகப்பனாரும் எங்களுடனிருக்கும்பொழுது உன்னைப்பற்றியும் உன் கணவரைப்பற்றியும் அத்தையிடமோ அத்தானிடமோ அப்பா பிரஸ்தாபிக்காமலிருப்பாரா என்ன? இது என்ன விபரீதத்தில் முடியப்போகிறதோ என்று பயமாயிருக்கிறது.
குந்தளம்”.
இதைப் படித்ததும் கேசவனுக்கும் என்ன சொல்வ தென்று புரியவில்லை. ‘பாஸ்கரய்யரைப்பற்றி ஒன்றுமே தெரியாதவன் போலில்லையா சுந்தரத்திடம் இதுவரையில் பேசிவந்தேன். உண்மை தெரிந்தால் என்னைப்பற்றி அவன் என்ன நினைப்பான்?’ என்றான் பிறகு கவலையோடு.
தர்மசங்கடமான நிலைமையில்லையா இது! என்னைத் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ள வேண்டாமென்று நானே அய்யருக்கு எழுதினாலென்ன?’ என்று கேட்டான் கேசவன் சிறிது நேரங்கழித்து.
‘அவர் என்ன நினைப்பாரோ?’
‘நினைப்பதற்கு என்ன இருக்கிறது? ‘தொழில்முறையை உத்தேசித்து உங்களைத் தெரியாதவன்போல சுந்தரத்திடம் நான் நடந்துகொண்டிருக்கிறேன். தயவுசெய்து நீங்களும் என்னைத் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளாமலிருந்தால் நல்லது’ என்று அய்யருக்கு எழுதுகிறேன். நீயும் அப்படியே அம்மாவுக்கு எழுதிவிடு!’
‘தொழிலின்மேல் பழியைப்போட்டுவிடலாம். நல்ல யோசனைதான். ஆனால், சுந்தரம் திருச்சிக்கு வரப்போவதாக நமக்கு எப்படித் தெரியுமென்று கேட்டால்? குந்தளம் எழுதியிருக்கலாமென்று அவர்கள் நினைக்கக்கூடாதல்லவா?’
‘குந்தளம் எழுதுவானேன்? சுந்தரம் சொன்னதாகவே எழுதிவிடுவது. வேண்டுமானால் இன்றே சுந்தரத்தைக்கண்டு பேசுகிறேன். திருச்சிக்குப் போகப்போவதாக அவனே சொல்லும்படி செய்துவிட முடியாதா?’
கேசவன் யோசனை நல்ல யோசனை தானென்று வஸு வும் ஆமோதித்தாள். அன்றைய தினமே அவர்கள் அய்யருக்கும் சங்கரிக்கும் இரண்டு கடிதங்கள் எழுதிப்போட்டு விட்டார்கள்.
5. அவளும் சிரித்தாள், அவனும் சிரித்தான்
வெள்ளிக்கிழமை விடியற்காலை நான்குமணி வண்டியில் வருவதாக சுந்தரம் எழுதியிருந்தான். அதற்காக அய்யர் வீட்டில் எல்லோரும் மூன்றரை மணிக்கே அன்று எழுந்துவிட்டார்கள். ஸ்டேஷனுக்குப் போன மோட்டார் டிரைவர் திரும்பிவந்து ‘நாலுமணி வண்டியில் ஒருவரும் வரவில்லை’ என்றான்.
‘எல்லா வண்டியையும் பார்த்தாயா? ஒரு சமயம் வண்டியில் தூங்கிவிட்டார்களோ என்னவோ?’ என்றார் அய்யர்
‘இல்லை எஜமான்! ஒவ்வொரு வண்டியாய்ப் பார்த்து கேட்டனுங்க, ரயில் தவறி அடுத்த வண்டியில் வருகிறார்கள் போலிருக்கிறது!’
‘சரி! பத்துமணி வண்டிக்கு மறுபடியும் காரைக் கொண்டு போய்ப்பாரு!’ என்று சொல்லிவிட்டு அய்யர் மறுபடியும் படுக்கப்போனார்.
குந்தளம் உறக்கம் வராமல் புத்தகசாலையில் நுழைந்தாள். சுந்தரம் எழுதிய புத்தகங்களிலொன்றைப் புரட்டி சிறிதுநேரம் வாசித்தாள். வாசலில் பெரிய கூச்சல் கேட்ட பொழுதுதான் பொழுது விடிந்துவிட்டதென்பது அவளுக்குத் தெரிந்தது. ஒரு குடுகுடுப்பாண்டி ‘அய்யாவுக்கு அதிர்ஷ்டம் வருகுது! அய்யாவுக்கு அதிர்ஷ்டம் வருகுது!” என்று கத்திக்கொண்டே உடுக்கை அடித்தான்.
‘வந்திருக்கிற அதிர்ஷ்டம் போதும் சப்தம்பண்ணாமே போறீயா சுடுதண்ணியைக் கொண்டு வந்து ஊத்தட்டுமா?’ என்று தூக்கம் கலையாமல் கண்ணைக் கசக்கிக்கொண்டே அதட்டி விரட்டுகிறான் முனிசாமி.
அந்த நாடகத்தை உப்பரிகையில் நின்று பார்த்தாள் குந்தளம். அவள் நிற்பதை குடுகுடுப்பாண்டி எப்படியோ கவனித்துவிட்டான். பிரமாதமான குஷி பிறந்துவிட்டது அவனுக்கு. உடுக்கை இன்னும் கொஞ்சம் வேகமாகச் சென்றது. அவன் தொனியும் உச்ச ஸ்தாயியை அடைந்தது.
‘ராசாத்தி அம்மாளுக்கு ராசா போல ஒரு புருஷன் வரப்போறான்! ராசா போல ஒரு புருஷன் வரப்போறான்! தங்கப்பொம்மை மாதிரி ஒரு சின்னராசா பொறக்கப்போறான்! தங்கப்பொம்மை மாதிரி ஒரு சின்ன ராசா பொறக்கப்போறான்.’
குடுகுடுப்பாண்டியின் இந்த ஜோஸ்யத்தைக்கேட்டு குந்தளம் ‘களுக்’கென்று சிரித்துவிட்டாள். அதே சமயம் கீழே இன்னொருவர் கலகலவென்று நகைத்த சப்தம் குந்தளத்துக்குக் கேட்டது. சப்தம் வந்த திசையில் திரும்பினாள். குடுகுடுப்பாண்டிக்குச் சிறிது பின்னால் கதராடையணிந்த ஒரு இளைஞன் தன்னையும் குடுகுடுப்பாண்டியையும் பார்த்து நகைப்பதை அவள் கவனித்தாள். அவன் யார்? எப்படி திடீரென்று அங்கு நுழைந்தான்? நேர்வாசல் வழியாக வந்திருந்தால் முன்னரே குந்தளம் பார்த்திருப்பாள்? பங்களாவின் வலது பக்கத்து வாசல்வழியாக வந்திருந்தால் மாடியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பங்களாவில் நுழைபவர்கள் வாசற்படியை அடையும் வரையில் தெரியாது. ‘ராசாத்தி அம்மாளுக்கு ராசாபோல ஒரு புருஷன் வரப்போறான்!’ என்று குடுகுடுப்பாண்டி ஜோஸ்யம் சொன்ன சமயத்தில் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்ததை நினைத்துச் சிரித்தான் இளைஞன். மாடியிலிருந்து சிரிப்புச் சப்தம் கேட்டபிறகு தான் அங்கு ஒரு பெண் நிற்பதைக் கவனித்தான். ஒரு வரையொருவர் பார்த்தவுடன் விவரம் தெரியாத ஒரு கலவரம் இருவருக்கும் ஏற்பட்டது. குந்தளம் உப்பரிகையை விட்டு உள்ளே போய்விட்டாள். தனது அர்த்தமற்ற சிரிப்பு அசம்பாவிதமாக முடிந்து விட்டதைத் தெரிந்து கொள்ள வாலிபனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
சட்டைப்பையிலிருந்து இரண்டணாக்காசை எடுத்துக் கொடுத்து குடுகுடுப்பாண்டியை அனுப்பிவிட்டு ‘பங்களாவிற்குள் அவன் நுழைந்தபொழுது, குடுகுடுப்பாண்டிக்குக் கொடுக்க ஒரு கிழிசல் சட்டையுடன் அங்கு வந்தான் முனிசாமி. குடுகுடுப்பாண்டி மறைந்து ஒரு வாலிபன் வருவதைக் கண்டதும் ‘யாரையா நீ, சொல்லாமே கேளாமே உள்ளே வரது? வராண்டாவிலே உட்காரு, கணக்கப்பிள்ளை வருவாரு;’ என்று அதிகாரத்தொனியில் ஒரு உத்தரவு போட்டான்.
‘நான் பட்டணத்திலிருந்து வருகிறேனப்பா! உங்க அய்யாவின் தங்கை பிள்ளை! அம்மா வெளியே காரிலிருக்கிறாள்! மெயின் கேட் பூட்டியிருந்தது. தட்டித்தட்டிப் பார்த்தேன்; பதிலில்லை. ஆகையால் பக்கத்து சின்னவாசல் வழியாக நான் வந்தேன். மெயின் கேட்டைத் திறக்கச்சொல்லு, கார் உள்ளே வரட்டும்!’ என்றான் வந்த வாலிபன்.
‘சின்ன எசமான் சுந்தர் எசமாங்களா? வாங்க வாங்க. துரையை அடையாளமே தெரியலீங்களே! நான் முனிசாமியில்லங்களா! என்னைத் தெரியலை? அடே யாரடா குப்புசாமி! மெயின் கேட்டைத்திற! ஜல்தி திறந்துவிடடா!”
முனிசாமி போட்ட சப்தத்தில் வந்திருப்பது யாரென்பது வீட்டுப் பணியாளர்களுக்கெல்லாம் பரவிவிட்ட து. நிம்மதியாகப் படுக்கையில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்த தோட்டக்காரர்களில் ஒருவனான குப்புசாமி ஒடோடியும் சென்று மெயின் கேட்டைத் திறந்தான். இருட்டு இன்னும் பூரணமாகக் கலையாததால் இன்னொரு பணியாள் மின்சார விளக்குகளைப் பற்றவைத்தான். இதற்குள் ‘என்ன அமர்க்களம் இது? இதெல்லாம் என்னப்பா முனிசாமி!’ என்று கேட்டுக்கொண்டே வாசற்புறத்துக்கு அய்யரும் வந்து சேர்த்தார்.
‘நம்ப சின்னய்யா சுந்தரம் வந்திட்டாருங்க எசமான்! அம்மா வெளியே காரிலே இருக்கிறாக! மெயின் கேட்டைத் திறக்கப் போயிருக்கிறான் குப்புசாமி!’ என்றான் முனிசாமி.
அவன் பக்கத்தில் தூய வெள்ளைக் கதராடையணிந்த ஆடம்பரமற்ற ஒரு இளைஞன் நிற்பதை அய்யர் பார்த்தார். ‘வா அப்பா சுந்தரம்! அடையாளமே தெரியவில்லையே! யாரோ என்றில்லையா நினைத்தேன்!’ என்று நல்வரவு கூறி சுந்தரத்தை அணைத்துக்கொண்டார் அன்புடன்.
‘பதினைந்து பதினாறு வருடங்களுக்குப்பிறகு இப்பொழுதாவது உங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததே மாமா!’ என்றான் சுந்தரம். அவன் கண்கள் கலங்கியதை முனிசாமி ஒருவனைத்தவிர வேறு எவரும் கவனிக்கவில்லை.
‘ஆமாம் இப்பொழுது வண்டி எது? நாலுமணிக்குப் பிறகு அடுத்த வண்டி 10 மணிக்குத்தானே?’
‘நாலுமணி வண்டியில்தான் வந்தோம் மாமா. கும்பகோணம் ஸ்டேஷனுக்கருகில் தண்டவாளம் பெயர்ந்திருந்தது. அதனால் எல்லா வண்டிகளும் இரண்டுமணி நேரம் தாமதப்பட்டுவிட்டது!’
‘அப்படியானால் நாலுமணிக்கு திருச்சி வந்த வண்டி உண்மையில். இரண்டுமணி வண்டிபோலிருக்கிறது! ஸ்டேஷ னுக்குப்போன முட்டாள்பயல் ஒன்றும் விசாரிக்காமல் இரண்டுமணி வண்டியில் தேடிவிட்டு நீ வரவில்லையென்று சொன்னான். ஒரு சமயம் வண்டி தவறிப்போய் பத்துமணி வண்டியில் வருவாயென்று நினைத்தேன். அதோ கார் வருகிறது, அப்பா முனிசாமி காரிலுள்ள சாமான்களையெல்லாம் பத்திரமாக எடுத்து வைக்கச்சொல்லு’, என்று சொல்லிக்கொண்டே அய்யர் கீழிறங்கி கார் அருகில் வந்தார். கையில் ஒரு தடியுடன் மெள்ள ஊன்றிக்கொண்டே அம்புஜம் காரிலிருந்து இறங்கினாள். அவளைப் பார்த்ததும் அய்யருக்கு உடல் பதறிவிட்டது.
‘யார் அம்புஜமா! ஐயையோ! என் இப்படி எலும்பும் தோலுமாகி விட்டாய்! உடம்பு இவ்வளவு மோசமாகும் வரையிலா தமையனிடம் போகக்கூடாதென்ற வைராக்கியம்? அடபாவி! நடைப்பிணம்மாதிரி ஆகிவிட்டாயே!’ என்று சகோதரி அம்புஜத்தைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தார் அய்யர்.

‘அண்ணா! நான் செய்த பாவம் படுத்துகிறது இப்படி என்னை! அவரவர் தலைவிதியை அவரவர்கள் அனுபவித்துத்தானே தீரவேண்டும். சென்றதையெல்லாம் மறந்து இவ்வளவு அன்புடன் வரவேற்கிறாயே அது ஒன்றே போதும் என் ஆத்மா சாந்தியடைய! இனி அமைதியாக சாவை வரவேற்பேன்!’ என்று அழுதுகொண்டே சொன்னாள் அம்புஜம்.
‘அசடுமாதிரி உளறாதே! சீக்கிரம் குணமடைந்துவிடுவாய். மெதுவாக வா, உள்ளே போவோம்! சுந்தரம் அம்மாவை அந்தப்பக்கம் பிடித்துக்கொள் அப்பா!’ என்று அய்யர் சொல்லவும். அந்த உருக்கமான காட்சியில் உணர்ச்சி பரவசமடைந்த சுந்தரம் ஸ்வப்ன உலகில் நடமாடுவதைப் போல தனது தாயாரை ஒரு பக்கம் பிடித்துக்கொண்டான். அவனும் அய்யருமாக அம்புஜத்தை மெதுவாக உள்ளே அழைத்துக்கொண்டு போனார்கள். ‘நான் அப்பொழுதே சொல்லவில்லையா? என்ன விரோதம் இருந்தாலும் உடன் பிறந்த பாசம் விடுமா?’ என்று முகமலர்ச்சியோடு தனக்குள் சொல்லிக்கொண்டான் முனிசாமி.
கீழே இவ்வளவு நடந்தும் அவைகளைப்பற்றி குந்தளத்துக்கு ஒன்றும் தெரியாது. ‘ராசாத்தி அம்மாவுக்கு ராசாபோல ஒரு புருஷன் வரப்போறான்! தங்கப் பொம்மை மாதிரி ஒரு சின்னராசா பொறக்கப்போறான்!’ என்று குடு குடுப்பாண்டி விடிந்ததும் விடியாததுமாகச் சொல்லியது குந்தளத்துக்கு வேதனையைக் கொடுத்தது. ‘குந்தளத்துக்கு ஒரு புருஷன்! அவனுக்குப் பிறக்கும் ஒரு குழந்தை! இந்த ஜோஸ்யம் நீ விதவை, விதவை! அகில உலகமும் வெறுத்து ஒதுக்கப்பட்ட தீண்டத்தகாத களிமண் பொம்மை!’ என்று இடித்துக் காட்டுவதைப் போலிருந்தது குந்தளத்துக்கு. விவரம் தெரியாமல் கேலியாக நினைத்துச் சிரித்ததற்கு வெட்கினாள். குடுகுடுப்பாண்டிக்குப் பின்னால் நின்று சிரித்தானே அவன் யார்? எதற்காகச் சிரித்தான்? விதவைக்கு பிள்ளைவரம் கொடுத்ததைக்கேட்டு கேலி செய்தானா? அல்லது ராசா வரப்போகிறானென்று ஜோஸ்யம் சொன்ன சமயத்தில் தற்செயலாக வந்து சேர்ந்ததை நினைத்துச் சிரித்தானா? அல்லது ஒரு அர்த்தமுமில்லாமல் குடுகுடுப் பாண்டியின் வேஷத்தைப் பார்த்துச் சிரித்தானா? என்னைக் கேலி செய்ய நினைத்திருக்க மாட்டான். நினைத்திருந்தால் என்னைப் பார்த்தவுடன் ஏன் சட்டென்று சிரித்ததை நினைத்து வருந்தியது போல நிறுத்திக் கொண்டான்? அவன் ஏன் வந்தான்? நம் வீட்டில் இந்தநேரத்தில் அவனுக்கு என்ன வேலை?
இப்படி குமிழிபோல ஓராயிரம் எண்ணங்கள் குந்தளத்தின் மனதில் தோன்றின. அந்த வேதனையில் கீழே கார் வந்த சப்தத்தையோ பேச்சுக்குரலையோ அவள் கவனிக்கவே இல்லை. ‘பெரியம்மாவும், சின்ன எசமானும் வந்துட்டாங்க அம்மா!’ என்று முனிசாமி வந்து அறிவித்ததும் அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்ததைப்போல, ‘அப்படியா? எப்பொழுது வந்தார்கள்? வண்டி ஏது இப்ப?’ என்று கேட்டாள் குந்தளம்.
‘குடுகுடுப்பாண்டிக்கு கிழிசல் சட்டையெடுத்துக்கிட்டுப் போறேன் அங்கே சின்ன அய்யா வந்து நின்னாரு! எனக்கே ஆச்சரியமாப்போச்சு!’ என்று ஆரம்பித்து வண்டி நேரம் கழித்து வந்தது முதல் அம்புஜத்தை அய்யர் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றது வரை ஒன்றுவிடாமல் வர்ணித்தான் முனிசாமி.
அப்பொழுதுதான் குடுகுடுப்பாண்டியின் பின்னால் வந்துநின்ற வாலிபன் அத்தான் சுந்தரமென்பது குந்தளத்துக்குத் தெரிந்தது. இந்த உண்மை அவளுடைய கலவரத்தை மேலும் அதிகப்படுத்தியது.
‘பெரியம்மாளும், சின்ன எசமானும் உங்களை நாலைஞ்சு தடவை கேட்டுவிட்டாங்க. இன்னும் எழுந்திருக்கலைனு சொன்னேன். ஜல்தியா பல்தேய்ச்சு முகம் கழுவிக்கிட்டு வாங்க நான் போறேன்!’ என்று முனிசாமி சொல்லிவிட்டுப் போனான்.
இதுவரை பறவை ஜாதியைப்போல எதேச்சையாக நடமாடிக்கொண்டிருந்த குந்தளத்துக்கு வெட்கமும் நாணமும் திடீரென்று எப்படித்தான் ஏற்பட்டதோ தெரிய வில்லை! இந்த மாறுதலை அவளும் நன்கு உணர்ந்திருந்தாள். ஒரு காலத்தில் வாடா போடா என்று ஏக வசனத்தில் அழைத்த சுந்தரம்தானே இப்பொழுது வந்திருப்பவன்? வயதாகி வளர்ந்துவிட்டால் அந்நியனாகிவிடுவானா? கிராமங்களுக்குப் போய் எவ்வளவோ அந்நிய புருஷர்களுடன் பழகியபொழுதுகூட இப்படிப்பட்ட சங்கோஜம் ஏற்பட்டதில்லையே? இப்பொழுது மட்டும் ஏன் ஒருமாதிரி கூசுகிறது மனம்? இப்படி நினைத்தாள் குந்தளம். காரணம் அவளுக்கே தெரிந்தால் தானே!
‘அம்மா குந்தளம்! குந்தளம்! பலகாரம் சாப்பிட வரவில்லை!’ என்று அய்யர் கூப்பிடும் சப்தம் கேட்டது. அதற்கு மேல் தாமதிப்பது சரியில்லையென்று தோன்றியது. ‘இதோ வந்துவிட்டேன் அப்பா!’ என்று பதில் குரல் கொடுத்துக் கொண்டே கீழிறங்கி சமையலறையில் நுழைந்தாள் குந்தளம்.
அங்கு அய்யர் நடுவிலும், ஒரு பக்கம் அம்புஜமும், மற்றொருபக்கம் சுந்தரமும் உட்கார்ந்திருந்தார்கள். பக்கத்தில் இரண்டு இலைகள் காலியாயிருந்தன.
‘அத்தை! வாருங்கள், வாருங்கள்! உருவமே தெரியாமல் இப்படி இளைத்துவிட்டீர்களே! உடம்பு இப்படி மோசமாகும் வரையிலா ஒரு கடுதாசி கூடப் போடாமலிருந்தீர்கள்?’ என்று அம்புஜத்தைப் பார்த்து மரியாதைக்குச் சொல்லி விட்டு, ‘அத்தானைக்கூடத்தான் அடையாளமே தெரிய வில்லை. யாரோ புது மனுஷர் மாதிரியிருக்கு!’ என்று தலை நிமிராமல் கூறினாள் குந்தளம்.
அம்புஜம் மெதுவாக எழுந்து குந்தளத்தின் தலையைத் தொட்டு திருஷ்டி கழித்து, ‘குழந்தையின் முகம் அம்மா மாதிரி அப்படியே உரித்து வைத்தாப்லே இருக்கு! என்ன செய்யலாம் பாழுங் கடவுளுக்குத்தான் கண்ணில்லாமல் போய்விட்டது. ஊம்! உன் அத்தையைப் பார்த்தாயோ இல்லையோ? இந்த நிலைமையிலாவது நீ பார்க்க முடிந்ததே, அதுவே பெரிதென்று நினைத்துக்கொள். போனமாதமெல்லாம் நினைவுநீச்சு இல்லாமல் கிடந்தேன். உன்னையும் பாஸ்கரனையும் பார்த்துவிட்டு உயிரை விடுவதற்காக ஆத்மா ஊசலாடிக் கொண்டிருந்தது!’ என்று தழுதழுத்த தொனியில் சொன்னாள்.
பிறகு எல்லோரும் காலைப்போஜனத்துக்கு உட்கார்ந்தார்கள். சுந்தரத்தின் பக்கத்தில் இருந்த இரண்டு காலி இலைகளிலொன்றிலே குந்தளம் உட்காரவேண்டியிருந்தது. நடுவில் ஒரு இலையைக் காலியாகவிட்டு கடைசி இலையில் உட்காருவது மரியாதையில்லையென்று எண்ணி, சுந்தரத்துக்கு அடுத்தபடியாக அமர்ந்தாள் குந்தளம்.
‘இன்னும் சங்கரியம்மாளைக் காணோமே!’ என்றாள் சமையல்காரி கனகம்.
‘ஆமாம், அவளை அடிபோடு மறந்துவிட்டோமே! நீ தான் போய் அழைத்துவா’ என்று சமையல்காரியிடம் சொன்னார் அய்யர். அதற்குள் ‘முனிசாமி, முனிசாமி! நேரமாகிறது. குழந்தையை எழுப்பி காப்பி சாப்பிட வரச் சொல்லு!’ என்று கூவிக்கொண்டே வழக்கம்போல தட தடவென்று சமையலறையில் பிரவேசித்தாள் சங்கரி. அங்கு அம்புஜம் முதலியோர்களைக் கண்டதும் சட்டென்று கொஞ்சம் பின்வாங்கினாள்.
‘உங்கள் குழந்தை இதோ இலையில் உட்கார்ந்து இட்லி சாப்பிடப்போகிறது!’ என்று சிரித்துக்கொண்டே கூறினாள் குந்தளம்.
‘உனக்கு எத்தனை வயசு ஆனால்தானென்ன? எங்களுக்கு நீ குழந்தைதானே!’ என்று அம்புஜம் குந்தளத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு சங்கரியை நோக்கி ‘ஏனம்மா தயங்குகிறாய். வா உனக்குத்தான் காத்திருக்கிறோம். நான் வந்திருப்பதற்காக கொஞ்சங்கூட சங்கோசப்படாதே! என்னை உங்களுடைய விருந்தாளியைப்போல நினைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை கண்ணிமை மாதிரி காப்பாற்றி வளர்த்துவிட்ட தாயார் நீ. இந்த வீட்டில் உனக்குப்பிறகு தான் நான்! உட்காரம்மா!’ என்று உபசரித்தாள்.
சங்கரி குந்தளத்துக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்த பின் சமையல்காரி பலகாரங்களைப் பரிமாற ஆரம்பித்தாள்.
‘நீ சொல்லியது என்னவோ வாஸ்தவம் அம்புஜம். உயிருக்கு உயிராக இருந்து குந்தளத்தை வளர்த்தது சங்கரிதான். அவளுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறேன்!’ என்றார் அய்யர் சாப்பிட்டுக்கொண்டே.
‘அதான் நான் சொன்னேன் சங்கரிக்கு எப்பொழுதும் போலிருக்க வேண்டுமென்று. நான் வியாதிக்காரி. குந்தளத்தைப் போலவே என்னையும் அவள்தான் கவனித்துக் கொள்ளவேண்டும்!’ என்றாள் அம்புஜம். இந்த வார்த்தைகள் அந்தரங்கசுத்தியானவைகளென்பது அவளுடைய தொனியில் தெளிவாக பிரதிபலித்தது.
‘இனிமேல் அம்மாபாடு திண்டாட்டம்தான்! நான், அத்தை அத்தான் இந்த மூன்று குழந்தைகளையும் கவனித்தாக வேண்டும்!’ என்று குந்தளம் குறும்பாகச் சொல்லவும் எல்லாரும் ‘கொல்’லென்று சிரித்துவிட்டார்கள். அந்தச் சிரிப்பில் சுந்தரம் வாயிலிருந்த இட்லியில் ஒரு துண்டு குந்தளத்தின் இலையில் தவறி விழுந்துவிட்டதை அவனும் அவளும் மட்டும்தான் கவனித்தனர். ஒருவரையொருவர் ஒரு வினாடி பார்த்துவிட்டு ஒன்றுமே நிகழாததுபோல இருவரும் சாப்பிடலாயினர்.
பலகாரம் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் தாழ்வாரத்துக்கு வந்து உட்கார்ந்தார்கள். சங்கரி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்காகப் போனாள்.
‘காந்திஜீ மாதிரி அத்தானுக்கும் மௌனதினம் ஒன்றுண்டோ? வாரத்துக்கு ஒரு நாளா அல்லது மாதத்தில் ஒரு நாளா? ஒரு வார்த்தைகூடப் பேசாமலிருக்கிறாரே!’ என்றாள் குந்தளம்.
‘இருக்கிறாரே போகிறாரே என்று புதுப்பாஷையில் நீ பேசுவதால்தான்! உன் அத்தான் சுந்தரம் பழைய சுந்தரம்தான். இத்தனை மரியாதை எதற்கு?’ என்றாள் அம்புஜம்.
‘அப்படி ஒன்றுமில்லை அத்தை!’ என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள் குந்தளம். சுந்தரமும் அர்த்தமில்லாமல் சிரித்தான்.
‘சுந்தரத்துக்கு இங்கு பொழுதே போகாது. இந்த ஊரில் புதிய சிநேகம் பிடிக்கவேண்டும் இனிமேல்!’ என்றார் அய்யர்.
அம்புஜம்:- ‘பட்டணத்திலும் சுந்தரம் அதிகமாய் வெளியில் வாசலில் போவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் எழுதிக்கொண்டேயிருப்பான். நான்கூடச்சொல்லுவேன் உடம்புக்கு ஏதாவது வந்துவிடுமென்று! கேட்டால் தானே!’
குந்தளம்:- ‘அத்தான் நாவல்களை நீங்கள் படித்திருக்கிறீர்களோ அத்தை? நன்றாய்த்தான் எழுதியிருக்கிறார். அப்பாகூடப் படித்திருக்கிறார் அத்தான் புத்தகங்களை யெல்லாம்!’
சுந்தரம்:- ‘இப்பொழுதுதானே அம்மா சொன்னாள் அவர் இவர் என்ற கெளரவப்பட்டமெல்லாம் எனக்கு வேண்டாமென்று!’
அய்யர்:- ‘எவரிடமும் மரியாதையாகப் பேசுவது குந்தளத்தின் சுபாவம். நாளடைவில் சரியாய்ப்போய்விடும். இல்லையா குந்தளம்?’
மறுபடியும் ஒரு அர்த்தமற்ற சிரிப்புதான் இதற்கு குந்தளத்தின் பதில்.
அம்புஜம்:- ‘அதையேன் கேட்கிறாயம்மா! பட்டணத்தில் யாரோ சாந்தாவாம்! அவள் ரொம்ப நன்றாய் எழுதுகிறாளென்று ஜெகமெலாம் முழங்குகிறதாம். அவளை விட நன்றாக எழுதிப் பெயர் வாங்க வேண்டுமென்று ராத்திரி பகலென்றிராமல் ஒய்ச்சலின்றி எழுதுகிறான். உடம்பு கெட்டுவிடாதோ இப்படி உயிரை விட்டு எழுதினால்?’
குந்தளம்:- சாந்தா அப்படியொன்றும் பிரமாதமாக எழுதிவிடவில்லையே! அவள் புத்தகங்களை நானும் படித்திருக்கிறேன்.
சுந்தரம்:- உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் குந்தளம்! உன் அத்தானை புகழ்வதற்காக ஒரு சிறந்த எழுத்தாளரை தாழ்த்திப் பேசிவிடக்கூடாது. என்ன இருந்தாலும் சாந்தாவின் கடைசிப் புத்தகத்துக்கு நிகர் தமிழ் இலக்கியத்திலேயே கிடையாது.
குந்தளம்:- அபிப்பிராயம் மாறுபடலாம். ஆனால் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.
சுந்தரம்: அதனால் சாந்தாவின் மதிப்பு குறைந்து விடுமா? தமிழ்நாடு முழுவதும் போற்றுகிறது அவளை!
குந்தளம்:- அதற்கு விவஸ்தையில்லை. நாளை இன்னொருவரை வானத்தில் தூக்கிவைக்கும்!
சுந்தரம்:- இது முற்போக்கான வரவேற்கத்தகுந்த அம்சம்தானே! தமிழ் இலக்கியம் ஸ்தம்பிதமடையாமல் படிப்படியாக மேல் நோக்கி வளர்ச்சியடைவதைக் குறிப்பிடுகின்றது இது!
குந்தளம்:- இருக்கலாம். ஆனால் ஒருவரை வானளாவிப் புகழுவது அவருக்கு மண்டைக்கனத்தை உண்டு பண்ணுகிறது. அவரைப் போன்ற வேறு பல இளம் எழுத்தாளர்களின் நெஞ்சத்தையும் பிளந்துவிடுகின்றது.
சுந்தரம்:- நீ நினைப்பது தவறு. புகழும் பாராட்டுதலும் உற்சாகத்தை அதிகரிக்குமே தவிர கர்வத்தை உண்டு பண்ணாது.
குந்தளம்:- மனிதனை மனிதனாக நினைத்துப் பேச வேண்டுமே தவிர தேவனாகக் கற்பனை செய்து கொண்டு ஆராய்வதில் பயனில்லை. கர்வம் மனித சுபாவம், அதற்கு பலியாகாமலிருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அய்யர்:- குந்தளம் சொல்வது என்னவோ அனுபவ உண்மை! ஏதோ ஒரு பத்திரிகையில் இரண்டு கதையைப் போட்டுவிட்டார்களென்று அந்தப்பயல் எப்படி தலைகீழாக நிற்கிறான். நாலு எழுத்து எழுதத்தெரிந்தவுடன் மண்டைக் கிறுக்கு ஏற்பட்டுவிடுவதை எத்தனை பேர்களிடம் நாம் பார்க்கவில்லை?
அம்புஜமும் அய்யரை ஆதரிக்கும் முறையில் பேச ஆரம்பிக்கவே சுந்தரம் தன்பக்கம் தோல்வியடைந்து விட்டதை உணர்ந்து சம்பாஷணையை வேறு விஷயத்தில் திருப்பி விட்டான்.
‘மூன்றாவது மாடியிலுள்ள இரண்டு அறைகளையும் சுந்தரத்துக்கு ஒழித்துக் கொடுத்துவிடு முனிசாமி! நல்ல காற்றோட்டமான அந்த இடம்தான் அமைதியாக உட்கார்ந்து கதை எழுதச்சரி!’ என்று முனிசாமியிடம் சொன்னார் அய்யர்.
‘வாங்க எஜமான் அறைகளை காட்டுகிறேன். வேண்டிய சௌகரியங்களை பண்ணிக்கலாம். தண்ணீர்க்குழாய் எல்லாம்கூட உயரவே இருக்குது!’ என்று சொல்லி முனிசாமி அழைக்கவும் அவனுடன் சென்றான் சுந்தரம்.
முதல் மாடியைத்தாண்டி. இரண்டாவது மாடியின் மத்திய ஹாலை அடைந்ததும் சுந்தரம் அங்கேயே ஸ்தம்பித்து நின்றுவிட்டான். ஹாலின் நாலாபுறங்களிலும் பெரிய பெரிய கண்ணாடி அலமாரிகள் இருப்பதையும், அவற்றில் வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான புத்தகங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்தவுடன் அவனுக்குக் கனவு காண்பது போலிருந்தது. அது பாஸ்கரய்யர் வீடா அல்லது சர்வகலாசாலையின் புத்தகசாலையா என்ற சந்தேகம் அவன் மனதில் தோன்றியிருக்கவேண்டும். சுந்தரம் பின்னால் வருவதாக நினைத்து மூன்றாவது மாடிக்குப்போன முனிசாமி திரும்பிப் பார்த்து சுந்தரத்தைக் காணாமல் இரண்டாவது மாடிக்கு இறங்கி வந்தான்.
அதிர்ச்சியடைந்தவன் மிரளமிரள விழிப்பதைப்போல சுந்தரம் திக்பிரமையுடன் நிற்பதைக் கண்டதும் ‘ஏன் இப்படி நிற்கிறீங்க’ என்று கேட்டான்.
சுந்தரம்: ‘இல்லை! புத்தகம் படிப்பவர்கள் வேறு யாராவது இங்கிருக்கிறார்களோ என்று சந்தேகப்பட்டேன்!’
முனிசாமி:- ‘ஏன் எல்லாம் சின்ன எசமானியம்மாளுடையதுதான்.’
சுந்தரம்:- குந்தளத்தின் புத்தகங்களா?
முனிசாமி:- ஆமாம் எல்லாம் அவங்க படிச்ச புத்தகங்கள். அதையேன் கேட்கிறீங்க. மாசம் இருநூறு முன் நூறு ரூபாய்க்கு வந்துக்கிட்டிருக்கும் புதுப்புதுப் புத்தகங்கள்.’
சுந்தரத்துக்கு தலை கிறுகிறுத்தது. இவ்வளவு புத்தகங்களும் குந்தளம் படித்தவைகளா? பேராசிரியர் ராதா கிருஷ்ணனின் தத்துவார்த்த நூல்கள்; காந்தி, நேரு, பட் டேல் போன்ற தேசத்தலைவர்களின் ஆங்கிலப் பிரசங்கங்கள், மேனாட்டு இலக்கிய மேதைகளின் எழுத்து ஓவியங்கள், தாகூர் சரோஜினி, டோருடட் போன்ற இந்திய கவிதா ரத்தினங்களின் கவிதைப் பொக்கிஷங்கள், தென்னாட்டிலே ஒவ்வொரு நூல் நிலையங்களிலிருந்தும் வெளியான தமிழ்ப் புத்தகங்கள். இவை தனித்தனி பகுதிகளாகப்பிரித்து ஒரு ஒழுங்கின்படி அடுக்கிவைக்கப்பட்டிருந்தன அலமாரிகளில்.
ஒரு பெண், அதிலும் வீட்டைவிட்டு வெளியே போகாத ஒரு இளம்பெண் இத்தனை புத்தகங்களையும் படித்திருப்பதாகச் சொன்னால் யார் நம்புவார்கள்?
‘நீங்கள் பார்க்கிற பார்வையைக் கவனித்தால் என் பேச்சில் நம்பிக்கை இல்லைபோலத் தோணுதே!’ என்றான் முனிசாமி.

‘எப்படி நம்பமுடியும் முனிசாமி! படிக்கப் பிறந்தவர்கள் ஆடவர்கள்தானே! பெண்கள் பொருளாதார சாஸ்திரத்தைக் கண்டார்களா? அல்லது தத்துவார்த்த நூல்களைக் கண்டார்களா? உப்பு உறைப்பாய் நல்ல சாம்பார் வைக்கச்சொன்னால் வைக்கத் தெரியும்!’ இப்படிக் குந்தளம் சொல்லியது கேட்டது.
அப்பொழுதுதான் இருவருக்கும் தெரியாமல் குந்தளம் பின்னால் வந்து நிற்பது அவர்களுக்குத் தெரிந்தது.
சுந்தரம்:- அப்படியொன்றுமில்லை குந்தளம்! இவ்வளவு விரிவான இலக்கிய பொக்கிஷங்களை எங்குமே நான் பார்த்ததில்லை. அதிலும் ஒன்றுகூட கசங்காமல் கிழியாமல் புத்தப்புதுப் புத்தகங்களாயிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது.
குந்தளம்:- நான் படிக்கிற வழக்கமே தவிர கிழிக்கிற வழக்கமில்லை அத்தான்! இதோ பார்த்தீர்களா உங்கள் புத்தகங்களை!
சுந்தரம்:- ‘இந்த “உங்கள் நீங்களை” விடமாட்டாய் போலிருக்கிறதே’ என்று சொல்லிக்கொண்டே தன் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக இருந்த சாந்தாவின் புத்தகங்களை எடுத்துப் புரட்டினான்.
குந்தளம்:- இந்த சாந்தா அம்மாள் அத்தானை சொப்பனத்தில் கூட மிரட்டுவாள் போலிருக்கே!
சுந்தரம்:- இல்லை குந்தளம், உண்மையாகவே அபூர்வமாக எழுதுகிறாள் சாந்தா.
குந்தளம்:- அவளை அத்தானுக்குத் தெரியுமோ?
சுந்தரம்:- நேரில் பார்த்ததில்லை. யாரோ ஒரு பெரிய வக்கீலின் பெண்ணாம். அவள் யாரானால் நமக்மென்ன? கல்வியறிவிலும் எழுத்து வன்மையிலும் நிகரற்றவர்க ளென்று நினைத்த ஆட்வர்களுக்கு கர்வபங்கம் செய்ய ஒரு சாந்தாவும் ஒரு குந்தளமும் போதுமே! நீ மட்டும் எழுத ஆரம்பித்தால் சாந்தாவை இருக்குமிடம் தெரியாமல் செய்து விடலாம்.
குந்தளம்:- எல்லோரும் உங்களைப்போல எழுத்தாளராகிவிட முடியுமா? அதற்கு அலாதியான அனுபவம் வேண்டாமா?
முனிசாமி:- ஆமாம், நீங்கதான் ராத்திரி பகலெல்லாம் எழுதிக்கிட்டே இருக்கீங்களே, அனுபவமில்லாமேயா அப்படி விழுந்து விழுந்து எழுதுறீங்க?
சுந்தரம்:- நீ ஏதாவது எழுதியிருக்கிறாயா? என்னிடம் கொடுத்தால் நான் பார்த்து புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்கிறேன். கமலாலயத்தின் சொந்தக்காரர் எனக்கு நெருங்கிய நண்பர்.
குந்தளம்:- முனிசாமி என்னவோ உளறுகிறான். அதை நிஜமென்று நம்பிவிட்டீர்களாக்கும்.
சுந்தரம்:. உண்மையில்லாமலா சொல்லுவான்?
குந்தளம்:- எழுத முயற்சித்ததுண்டு. அந்த முயற்சி குப்பைக் கூடையைத் தாண்டிப் போனதில்லை. அவனையே கேளுங்கள் தினசரி கூடைநிறையக் கடுதாசிகள் கிடக்குமா இல்லையா என்று.
சுந்தரம்:- ஒஹோ! படித்துக்கிழிக்கும் வழக்கமில்லை யென்றாயே, எழுதிக்கிழிக்கும் வழக்கம் தானுண்டு போலிருக்கிறது.
இதற்கு குந்தளத்தின் பதில் ஒரு சிரிப்பு.
முனிசாமியுடன் சுந்தரம் தனது அறைகளுக்குச் சென்று அதை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தான். அன்றைய அனுபவங்களைப்பற்றி குந்தளம் வஸுவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதிப்போட்டாள்.
6. கூட்டுப்பண்ணையில்
அடுத்த ஒரு வாரம்வரை சுந்தரத்துக்கு மட்டுமல்ல, குந்தளத்துக்கும் ஒரு புதிய உலகத்தில் சஞ்சரிப்பதைப் போன்றிருந்தது. குந்தளத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை திகைக்கச் செய்தது. தமிழ் ஆங்கில இலக்கியங்களில் அவளுக்குத் தெரியாத விஷயம் எதுவுமே இல்லை போலத் தோன்றியது சுந்தரத்துக்கு. எவ்விதக் கடினமான பிரச்னைகளையும் சரளமாகவும் அலக்ஷியமாகவும் அவள் விவாதிப்பதைக் கேட்டதே குந்தளம் ஒரு அசாதாரணமான பெண்ணென்ற முடிவிற்கு அவன் வரவேண்டியிருந்தது. ஒருநாள் எல்லோர் முன்னிலையிலும் இதை வாய் விட்டே சொல்லிவிட்டான் சுந்தரம்.
அய்யர் சொன்னார்:- ‘நீயே எழுதியிருக்கிறாயே உன் கதையில்! உன்னுடைய நாவல்களிலொன்றில் கதாநாயகி ஆகாயத்தை வில்லாய் வளைத்துவிடுவாள்; மணலைக் கயிறாய்த் திரித்துவிடுவாள்; அவளுடைய நாவில் சரஸ்வதி நடமாடுகிறாள் என்று இன்னும் என்னவோ எழுதியிருந்ததை படித்த ஞாபகமிருக்கிறது!’ என்று.
சுந்தரம்:- ‘அது என் இலட்சியப்பெண். நிஜ வாழ்வில் அப்படி ஒருவள் இருக்க முடியுமென்று நினைத்து எழுதியதில்லை’ என்றான்.
குந்தளம்:- ‘சாந்தாவை நினைத்து எழுதியிருக்கலாம் அத்தான்!’
சுந்தரம்:- சாந்தாவை விடமாட்டாள் போலிருக்கிறதே குந்தளம்!
குந்தளம்:- அப்படியானால் உங்கள் கதைகள் நிஜ வாழ்க்கைக்குப் பொருத்தமற்றவைகளென்று சொல்லுங்கள்!
சுந்தரம்:- உன்னோடு பேச என்னால் முடியாதம்மா! அலமாரியில் நீ அடுக்கி வைத்திருக்கும் தர்க்க சாஸ்திரங்களை நான் படித்ததில்லை.
இதைக்கேட்டு அய்யர் பெருமையுடன் தனக்குள் சிரித்துக்கொண்டார். அம்புஜம் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் முனிசாமி குறுக்கிட்டுக் கேட்டான் முதல் நாள் வந்த பஞ்சுமூடைகளை என்ன செய்வதென்று.
அய்யர்:- ஆமாம், அந்த விஷயத்தை அடியோடு மறந்துவிட்டேனே! பஞ்சு மூடைகளெல்லாம் வந்து சேர்ந்து விட்டன குந்தளம்! கிராமத்துக்கு நாளை நீ போகிறாயா அல்லது முனிசாமியிடம் கொடுத்து அனுப்பிவிடுவோமா?
அம்புஜம்:- ‘பஞ்சுமூடை எதற்கு பாஸ்கரா?’
அய்யர்:- நம் கிராமத்தைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதல்லவா? அதுதான் இப்படிக்கேட்கிறாய். குந்தளத்தின் நிலங்களில் மொத்தம் ஆறு கிராமங்கள் உண்டு. அவைகளில் சுமார் 700 ஜனங்கள் இருக்கிறார்கள். அவர்கள் எந்தச் சாமானுக்கும் நகரத்தை நாடுவதேயில்லை. ஆண்பிள்ளைகளுக்கெல்லாம் வயலில் வேலை. பெண்களுக்காக ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நெசவுத் தொழிற்சாலை அமைத்திருக்கிறோம். சமையல் சாப்பாடு நேரம் போக பாக்கி நேரங்களில் அவர்கள் ராட்டினத்தில் நூல் நூற்று வேண்டிய துணிமணிகளை அவர்களே நெய்து கொள்ளுகிறார்கள். இதில் அவர்களுக்கு நல்ல மேல் வரும்படியும் கிடைக்கிறது. காய்கறி பயிர் செய்து கொள்ள தனியாக துண்டு நிலங்களை குந்தளம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாள். அதிலும் அவர்களுக்கு மேல் வரும்படி வருகிறது. ராட்டினம், பஞ்சு, நெசவு இயந்திரம் எல்லாம் இனாமாக வாங்கிக் கொடுக்கிறாள் குந்தளம்.
குந்தளம்:- இதைச் சொன்னீர்களே தவிர அவர்கள் எப்படி வேலைசெய்கிறார்களென்பதைச் சொல்லவில்லையே அப்பா. அதுதானே முக்கியம்! கறிகாய் தோட்டத்திலும் நெசவாலையிலும் எல்லோரும் பொதுவாக வேலை செய்ய வேண்டியது. கிடைக்கும் லாபத்தையும் அவர்கள் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ளவேண்டியது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் வைத்திருக்கிறேன் குழந்தைகள் படிக்க.
முனிசாமி:- சின்னப்பிள்ளைங்கள் விளையாட பந்து, கோலி எல்லாம்கூட அம்மா வாங்கிக் கொடுத்திருக்கு. அதான் சின்னம்மாவைத் தெய்வமாய் நினைத்து கையெடுத்துக் கும்பிடுறாங்க எல்லாரும்!
அம்புஜம்:- ஏன் இப்படி பணத்தை வாரியிறைக்கிறாய் குந்தளம்!
குந்தளம்:- இந்த ரகசியம் உனக்குத் தெரியாது அத்தை. கிராம ஜனங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் சகல வசதிகளும் செய்து கொடுத்திருப்பதால் உண்மையான விசுவாசத்துடனும் ஊக்கத்துடனும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இவ்வளவு செலவு செய்தும் கிராமத்திலிருந்து நம் வருமானம் படிப்படியாக வருஷத்துக்கு வருஷம் எப்படி அதிகரித்துக்கொண்டிருக்கிறதென்று அப்பாவைக் கேட்டுப்பாரு தெரியும்.
அய்யர்:- குந்தளம் சொல்வது என்னவோ வாஸ்தவம். நான்கூட நினைத்தேன் உதவாக்கரை புத்தகங்களைப் படித்து விட்டு கிராமாபிவிருத்தி, குடிசைத்தொழில் அபிவிருத்தி என்று உளறிக்கொண்டு இப்படிச் செலவு பண்ணுகிறாளே யென்று. அதனால் வருமானம் அதிகப்பட்டிருக்கிறதே தவிர குறையவில்லை. குடியானவர்களும் சந்தோஷமாயிருக்கிறார்கள்.
சுந்தரம்:- இதைத்தான் பொதுவுடமையென்கிறார்கள். பொதுவுடமை நம் நாட்டுக்குப் பொருத்தமென்பதை அனுபவத்தில் செய்து காட்டுகிறாள் போலிருக்கிறது குந்தளம்.
குந்தளம்:- அத்தான் நினைப்பது தவறு. இது பொதுவுடமையில்லை. நிலத்தில் கிடைக்கும் வருமானம் முழுவதும் எங்களுக்கு. குடியானவர்களுக்கு கூலி மட்டும் தான். ஆனால் அவர்கள் நிலைமையையும் அபிவிருத்தி செய்ய விசேஷமான சில ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். நெசவாலையிலும், காய்கறி தோட்டங்களிலும் குடியானவர்களுக்காக அமைத்துக் கொடுத்துள்ள குடிசைத் தொழில்களிலும் மட்டுமே பொதுவுடமை. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் பொதுவுடமையும் முதலாளித்துவமும் இசைந்து ஒத்துழைத்து இருவர் நலனையும் கோரும் ஒரு புதிய நிலைமை இது. முரண்பட்ட இரு கொள்கைகள் முரண்பாடின்றி வேலைசெய்யும் ஒரு புதிய திட்டம் இது. பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக முதலாளித்துவத்தில் ஊறிப்போயிருக்கும் ஒரு நாட்டிலே ஒரே இரவில் பொதுவுடமையைப் புகுத்தி மற்றொரு சோவியத்ரஷ்யாவைச் சிருஷ்டித்துவிடலாமென்று சிலர் கனவு காண்கின்றனர். அது அனுபவ சாத்தியமுமில்லை; விரும்பத்தக்கதுமில்லை. பொருளாதாரச் சீர்குலைவும் விபரீதமான புரட்சியுமின்றி படிப்படியாக பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த ஒரு இடைக்காலத் திட்டம் அவசியம் தேவை. எங்கள் கிராமத்தில் நான் அனுஷ்டிக்கும் திட்டம் அத்தகைய இடைக்காலத் திட்டம் தான்.
சுந்தரம்:- ‘நீ பேசுவதெல்லாம் எனக்கு கனவுமாதிரி இருக்கிறது. இந்தக் கிராமங்களை எல்லாம் நானும் பார்க்க வேண்டும் மாமா’.
அய்யர்:- ‘குந்தளம், நீ போகிறாயா? அல்லது முனிசாமி போனால் போதுமா?’
குந்தளம்:- நான்தான் போகவேண்டும் அப்பா! நாளை கணக்குப்பார்த்து பங்குபோடும் நாளில்லையா? முனிசாமியுடன் அத்தானும் இஷ்டமானால் வரட்டுமே!
மறுநாள் காலை சுந்தரமும் குந்தளமும் முனிசாமியும் பஞ்சு மூடைகளுடன் கிராமத்துக்குப் புறப்பட்டனர். புறப்படுவதற்கு முன் குந்தளம் வஸுவிற்கு ஒரு நீண்ட கடிதம் எழுதித் தபாலில் சேர்த்துவிட்டுப்போனாள்
அன்று விளநகர் கிராமம் ஒரு பெரிய சந்தை கூடும் தினத்தைப்போலிருந்தது. மற்ற ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அன்று விளநகருக்கு வந்திருந்தார்கள். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் இப்படிக் கூடுவார்கள். தங்களுடைய முயற்சிகளின் பலனைப் பகிர்ந்து கொள்ளுவார்கள். குறைகள் ஏதாவது இருந்தால் அதை அய்யரிடமோ அல்லது குந்தளத்தினிடமோ நேரில் சொல்லுவார்கள். விளநகரில் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் அவரவர்களுடைய கிராமங்களுக்குத் திரும்பிவிடுவர். இலாபத்தைப் பங்குபோடும் இந்த தினத்தில் அய்யரோ அல்லது குந்தளமோ இருவரில் ஒருவர் நிச்சயமாக வருவது வழக்கம். இரண்டு தினங்களுக்கு முன்பே சங்கரியின் கணவர் சிவராமன் கணக்குகளைச் சரி பார்த்து ஜாபிதா தயாரித்து வைத்து விடுவார். அய்யரோ அல்லது குந்தளமோ வந்தால் அவர்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை. அவர்களுக்கு ஆறு கிராமங்களிலும் ஆறு தனிபங்களாக்களுண்டு. அவற்றை கிராமவாசிகள் மற்ற சமயங்களில் வாசிகசாலையாக உபயோகிப்பார்கள்.
அன்று குந்தளமும் சுந்தரமும் விளநகருக்கு வந்து சேர்ந்தபொழுது காலை பத்துமணிக்கு மேலாகிவிட்டது. பங்களாவின் முன்னுள்ள மைதானத்தில் கிராம ஜனங்கள் கூடியிருந்தார்கள். சென்ற ஏழெட்டு முறையாக லாபப் பங்கீட்டுக்கு குந்தளமே வந்தபடியால் அன்று பத்துமணி வரையில் அவள் வராதது கிராம ஜனங்களுக்கு கலக்கமா யிருந்தது. சிறிது தூரத்தில் கார் வரும் சப்தம் கேட்டவுடனேயே அவர்கள் முகம் மலர்ந்தது. ‘என்ன நேர்ந்தாலும் அம்மா வராமலிருக்க மாட்டாங்களென்று நான் சொல்ல வில்லையா? அதோ வந்துவிட்டாங்க பாரு!’ என்று அவர்கள் பேசிக்கொண்டனர். குந்தளத்துடன் ஒரு வாலிபனும் வருவதைக் கண்ட தும் அவர்கள் திகைத்துப் போயினர். குந்தளமும் சுந்தரமும் மேடையில் போய் உட்கார்ந்தபின் கூட்டத்தில் குசுகுசுப் பேச்சு அதிகரித்தது. இதன் காரணத்தைத் தெரிந்துகொண்டாள் குந்தளம். அவள் சொன்னாள் :-
‘என்னுடன் யாரோ ஒரு புதுமனிதர் வந்திருக்கிறாரே என்று ஆச்சரியப்படுகிறீர்கள் போலிருக்கிறது. அவர் அந்நிய மனிதரில்லை. என்னைப் போலத்தான் அவரும் உங்களுக்கு. உங்கள் அய்யாவின் சகோதரிபிள்ளை இவர். இனி அடிக்கடி உங்களைப் பார்க்க வருவார். என்னிடம் சொல்ல விரும்பும் எல்லா விஷயங்களையும் இனிமேல் அவரிடமும் நீங்கள் சொல்லலாம்.
‘போன கணக்கில் நீங்கள் உற்பத்திசெய்த துணிகள் ஏழாயிரம் ரூபாய்க்கு விற்றிருப்பதாக மானேஜர் சொல்லுகிறார். இந்தத் தடவை ஏன் ஆயிரம் ரூபாய் குறைந்துவிட்டதோ தெரியவில்லை. தச்சுத் தொழிற்சாலையில் ஐயாயிரம் ரூபாய் கிடைத்திருக்கிறது. பால் பண்ணையில் ஆயிரம் ரூபாய் வசூலாகியிருக்கிறதாம். நீங்கள் முடையும் பிரம்பு நாற்காலிக்கும் பழக்கூடைகளுக்கும் நல்ல கிராக்கியிருக்கிறது. இந்த முறை உங்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு 100 ரூபாய் வந்திருக்கிறது. இதில் 50 ரூபாய் ரொக்கமாகக் கொடுக்கச்சொல்லுகிறேன். பாக்கியை உங்கள் ஒவ்வொருவருடைய கணக்கிலும் வரவுவைக்கச் சொல்லுகிறேன்.’
கூட்டத்தில் ஒருவன் எழுந்து சொன்னான்: ‘எங்களுக்கு 50 ரூபாய் எதற்கு அம்மா! எந்தச் சமயத்திலும் மானேஜர் ஐயா கேட்டால் கொடுக்கிறாங்க பணம். நாங்க கையிலே வைத்துக்கொண்டு என்ன செய்யப்போறோம்? எல்லாம் எசமான் கணக்கிலேயே இருக்கட்டும். போன தடவை 60 ரூபாய் கொடுத்தீங்க. அவ்வளவும் செலவாகிப்போச்சு!’
குந்தளம்:- இருளன் சொல்லுவது உண்மை. கையில் பணம் இருந்தால்தான் செலவழிக்கத் தோன்றும். இல்லாவிட்டால் வாங்கிச் செலவழிக்க மனம் வராது. ஆரம்பத்திலிருந்தே உங்கள் பணத்தில் ஒரு பகுதியை நான் பிடித்து வைக்காவிட்டால் ஒவ்வொருவர் கணக்கிலும் இரண்டாயிரம் ரூபாய் வரையில் சேர்ந்திருக்குமா? இருளன் நல்ல புத்திசாலி: இருந்தாலும் வெறுங்கையோடு நீங்கள் வீட்டுக்குப் போகக்கூடாது. சம்பாதிப்பதெல்லாம் சந்தோஷமா யிருப்பதற்குத்தானே? சிக்கனம் அவசியமென்றாலும் ரொம்பச் சிக்கனம் கூடாதில்லையா?
குந்தளம் சொல்லியதை எல்லோரும் ஆமோதித்தார்கள். விருப்பமானவர்கள் 70 ரூபாய்வரையில் பிடிக்கச் சொல்லலாமென்று குந்தளம் தெரிவித்தது இருளனுக்கும் திருப்தியைக் கொடுத்தது. ஒரு வாரம் கிராமத்தில் சுற்றுப் பிரயாணம் செய்யப்போவதாகக் குந்தளம் அறிவித்ததைக் கேட்டு எல்லோரும் சந்தோஷமடைந்தனர். குந்தளம் மற்ற விஷயங்களை மானேஜர் சிவராமனிடம்விட்டு சுந்தரத்துடன் தன் அறைக்குச்சென்றாள்:
“வீட்டில்தான் தர்க்க ரீதியாக விவாதிக்கிறாயென்றால் பொதுக்கூட்டத்திலும் அழகாகப் பேசுகிறாயே குந்தளம்!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் சுந்தரம் அறைக்குப் போனவுடன்.
குந்:- எல்லோரும் நம் ஜனங்கள் தானே. அவர்களிடம் பேச என்ன சங்கோஜம்? அடுத்த பங்கீட்டுக்கு நான் வர மாட்டேன். அத்தான் மட்டும்தான் தனியாக வந்து பேசணும்!
சுந்:- அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம். எனக்கு ஒரு சந்தேகம் குந்தளம். பணமே வேண்டாமென்று சொன்னானே இருளன், பணமில்லாமல் எப்படி காலம் கழிப்பதென்று நினைத்துச்சொன்னான்?
குந்:- அவர்களுக்குப் பணம் உண்மையில் தேவையில்லை. இந்தக் கிராமங்கள் வேலை செய்யும் முறை இன்னும் உங்களுக்குச் சரியாகத் தெரியாது. தெரிந்தால் இப்படிக் கேட்கமாட்டீர்கள். உதாரணமாக இந்த விளநகர் கிராமத்தில் 90 பேர்களிருக்கிறார்கள். அவர்களில் 30 பேர் பெண்கள். 25 பேர் சிறுவர்கள். பாக்கி 35 பேர் வேலைசெய்யக் கூடிய ஆண்கள். பெண்களில் பாதிப்பேர் தச்சுவேலைகளையும் பால் பண்ணையையும் கவனித்துக் கொள்ளுகிறார்கள். பாக்கிப் பேர்களுக்குச் சமையல் வேலை. சமையலும் சாப்பாடும் எல்லோருக்கும் பொதுவானது. கங்காணி இருளன் மேற்பார்வையில் தான் இந்த கிராமத்தில் எல்லாம் நடக்கிறது. சகல செலவுகளுக்கும் அவன் மனேஜரிடம் பணம் வாங்கிப் பொதுவாகச் செலவிடுவான். லாபப்பங்கீட்டின் பொழுது வருமானம் பகிர்ந்து கொள்ளப்படுவது போலவே செலவும் பகிர்ந்து கொள்ளப்படும்.
சுந்: அதெப்படி முடியும்.? ஒரு கிராமத்துக்கு அதிகம் செலவாகலாம். இன்னொன்றில் குறைந்து செலவாகலாம். இதை எப்படிச் சமமாகப் பங்கிடுவது?
குந்:. இதே போல வருமானமும் மாறுபடலாமில்லையா? ஆறு கிராமமும் ஒரே குடும்பம் மாதிரி. ஒன்றின் தேவையை மற்றொன்று பூர்த்தி செய்கிறது. ஒவ்வொருவருடைய சேவையும் மற்றவர்களுக்கு அவசியமானது. உதாரணமாக பால் பண்ணை இரண்டு கிராமங்களில் தானிருக்கிறது. அவை ஆறு கிராமங்களுக்கும் பால்சப்ளை செய்து பாக்கியைத்தான் ஓட்டலுக்கு அனுப்புகிறது. இதே போல இரண்டு கிராமங்கள் கறிகாய் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. நெசவு தொழிற்சாலை மூன்று கிராமங்களில் இருக்கின்றன. தச்சு வேலை இரண்டு இடங்களில் தான் நடக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கங்காணியும் அவனுக்கு உதவியாக மூன்று பேர் களுமிருக்கிறார்கள். அவர்கள் வேலை தங்களுடைய கிராமத்தின் தேவையை கவனிப்பதும் மற்ற கிராமங்களுக்கு வேண்டிய சாமான்களை அனுப்பி வைப்பதும் அதிகப்படிச் சாமான்களை விற்பனை செய்ய ஏற்பாடு பண்ணுவதும் தான்.
சுந்:. சரி, லாபத்தை எப்படி பங்குபோடுகிறாய்? ஒரு குடும்பத்தில் அதிக குழந்தைகளிருக்கும், இன்னொரு குடும் பத்தில் குழந்தையேயிருக்காது. இருகுடும்பங்களுக்கும் சம பங்குதானா?
குங்:- குடும்பத்தைப்பற்றி கவனிப்பதில்லை. கிராமங்களிலுள்ள வீடுகளும் இயந்திரங்களும் மாடுகளும் எல்லாம் எனக்குச் சொந்தம். அதாவது மூலதனம் என்னுடையது. விரும்பியபொழுது எவரையும் நான் கிராமத்திலிருந்து வெளியேற்றலாம். புதிய ஆட்களையும் கொண்டுவந்து குடியேற்றலாம். இவர்களுடைய பிரதான வேலை வயலில் சாகுபடி. செய்வது. அதற்கு வழக்கமான கூலி கொடுத்துவிடுகிறோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இவர்களுடைய குடிசைத் தொழில்களினால் கிடைக்கும் மொத்த வருமானம் கணக்கிடப்படும். அதில் மூலதனத்துக்காக ஒரு சொற்ப வட்டி கழித்துக்கொள்ளுவோம். பாக்கித்தொகையில் அவர்களுடைய சாப்பாட்டுச் செலவு, மரம், பஞ்சு முதலான வேறு பல சாமான்கள் வாங்கிய செலவு, மானேஜர் சங்கரய்யர் சம்பளம், அதிகப்படி பால், ஜவுளி, மரச்சாமான்கள் முதலியவற்றை விற்பனை செய்வதற்காக ஏற்பட்ட செலவு இவைகளையும் கழித்து விடுவோம். பாக்கிப்பணத்தில் வேலைசெய்யும் ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் சமபங்கு போட்டு பிரித்துவிடுவோம். ஒவ்வொருவர் கணக்கிலும் அவனுடைய லாபப் பங்கீடு, கூலி முதலியவைகளெல்லாம் பதிந்திருக்கும். யாராவது கிராமத்தைவிட்டுப் போகப் பிரியப்பட்டால் அவன் கணக்கிலுள்ள பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடுவோம். இதுமாதிரி பத்துப் பதினைந்து பேர்கள் ஐயாயிரம் ரூபாய் வரையில் சேர்த்து வாங்கிக்கொண்டு பிரிந்துபோய் வியாபாரம் செய்கிறார்கள். இதெல்லாம் அத்தானுக்கு விசித்திரமா யிருக்கிறதில்லையா?
சுந்:- விசித்திரமாயில்லை, நம்பமுடியாத ஆச்சரியமா யிருக்கிறது! இவ்வளவு பேர்களும் உங்களிடம் விசுவாசமாகவும் சிவராமய்யர் எழுதும் கணக்குகளில் நம்பிக்கையாகவும் இருந்து ஒற்றுமையாக வேலைசெய்வது பெரிய விஷயம். இது மாதிரி ஏழெட்டு கிராமங்கள் தனித்தனி கோஷ்டிகளாக வேலை செய்ய ஆரம்பித்தால் இந்திய விவசாயிகளின் பிரச்னை இரண்டே வருடங்களில் தீர்ந்துவிடும். நீ ஒரு மகத்தான சாதனை செய்து காட்டுகிறாய் குந்தளம்.
குந்:. என் சாதனையை அத்தான்தான் மெச்சிக்கொள்ள வேண்டும்! எனக்கும் ஏதாவது வேலை வேண்டுமில்லையா? பொழுது போக்குக்கு ஏதோ செய்து கொண்டிருக்கிறேன்.
“சாப்பாடு தயாராகிவிட்டது. இன்னும் பேசிக்கொண்டிருக்கிறாயே குந்தளம். ஸ்நானம் செய்து சாப்பிட வேண்டாமா?” என்று கேட்டுக்கொண்டு வந்தார் சிவராமன்.
“மாமாவை அத்தானுக்கு அறிமுகம் செய்து வைக்க மறந்தே போய் விட்டேனே! சங்கரி மாமியின் ஆத்துக்காரர் இவர்தான். நம் சகல நிலங்களும் இவருடைய மேற்பார்வையில் தானிருக்கு. அப்பாவுக்கு இவர் வைத்ததுதான் சட்டம். மாமா ஒரு கோடு கிழித்து அதை தாண்டக்கூடாதென்றால் அப்பா தாண்டமாட்டார். அவ்வளவு நம்பிக்கை!” என்றாள் குந்தளம்.
“ஏதோ கோர்ட்டில் கிடந்து திண்டாடிய குமாஸ்தாவை அய்யர் இப்படி நல்ல நிலைமையில் வைத்திருக்கிறார். என் குடும்பமே அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது” என்று நன்றியறிதலுடன் சொல்லிவிட்டு “குந்தளம் பேச உட்கார்ந்துவிட்டால் அதற்கு ஒரு முடிவேயிருக்காது, ஸார்! நீங்கள் எழுந்திருங்கள் ஸ்நானத்துக்குப் போகலாம்!” என்று துரிதப்படுத்தினார் சிவராமன்.
சாப்பாட்டுக்குப்பிறகு அன்று மத்தியானம் முழுவதும் குந்தளமும் சிவராமனும் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுந்தரம் முனிசாமியுடன் போய் கிராமத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தான்.
‘கிராமத்தின் கீழ்ப்புறத்தில் ஆற்றோரமாக ஒரு தோப்பு இருக்கிறதே, அது எவ்வளவு ஜிலுஜிலு என்று குளிர்மை யாயிருக்கிறது கவனித்தாயா?’ என்றான் சுந்தரம் மாலையில். ‘அங்கு போய் உலாவி விட்டு வருவோம் வருகிறாயா?’ என்று அழைப்பது போலிருந்தது அவன் தொனி. காப்பி குடித்து விட்டு இருவரும் மாந்தோப்பில் உலாவி விட்டுவரச் சென்றனர்.
– தொடரும்…
– குந்தளப் பிரேமா, முதற் பதிப்பு: 1951, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.