கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 1,861 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அந்தாந்த காய்தத்த வாங்குங்க, நோநா!” என்று நான் அறைக்குள்ளிருந்து கத்தினேன். 

”பாவமே, கைல வேலயாத்தானேர்க்றேன்? நீங்க வாங்குங்களேன்!” என்று அலட்டிக் கொண்டாள் அவள். 

ஏன் குடும்பப் பிரச்சினையைக் கிளப்புவான் என்பது போல், தபாற்காரனே அந்த வேலையைச் செய்துவிட்டுப் போனான்; கதவூடே கடிதநாய் விழுந்து வழுக்கி வந்தது. 

அகலமான வெள்ளை உறை! எவனோ இந்த மாதச் சம்பாத்தியத்திலும் கை வைத்துவிட்டான்! 

சுமையாய்க் குனிந்தேன். ஏகப்பட்ட கந்தோர்களில் மொத்துப் பட்ட அடையாளங்கள் தெரிந்தன. யார் அனுப்புதல்? அட, மச்சான் தாஹா! 

“நோநா!” என்றேன் அலங்காரமாக. “ஒங்கட காக்காண்டா சமாதானம் அனுப்பீர்க்கார்!’ 

“காக்காகிட்டர்ந்தா!” என்று தன் கை வேலையைக் கால் தூசாக்கிவிட்டு வந்தாள் மனைவி. 

“என்னா நடந்திர்க்கு தெரியுமா?” என்றேன் நான் அதற்குள் என்வலப்பைத் துப்பறிந்திருந்ததால். “ஒங்கட காக்கா தோட்டத்ல கண்டாக்கா இருந்து ஆளுகளோட கால வார்ற லெச்சணம் இந்த என்லப்ல தெரியுது! ‘றாகம’யக் காகம’ன்னு மொடனார்ட்ல ஓவியந் தீட்டியிருக்காரு! ‘ஆர்’, ‘கே’ யாப் போனதில, இந்தக் காய்தம் அன்ராஸபுரம் போதிக்குப் போய் ரெண்டு கெழமயா ஸில் எடுத்துக்கிட்டு இன்னக்கித்தான் நிம்மதியா வருது! தோட்டத்தாளுக கதி என்னாகுதோ!…”

“ஆ..மா! பாவமே!” என்று அதிசயப்பட்டாள் இவள். “காகமன்னுதான் காக்கா எழுதியிருக்காரு! காய்தமென்னா பெருஊஊஸாருக்கு? இன் விட்டேஷன் மாதிரியிருக்கே?….. காக்காட ஊட்ல அப்டி என்னா?. 

”உண்டாக்கிக்கிடவா ஏலாது? ஆ..ம..! இன்விட்டேஷனேதான்!” 

“என்னாவாம்? மதினியோட கடசித் தங்கச்சிக்குக் கல்யாணமோ?” 

“அட!.. அவரு ஊட்டுக்குள்ளயே ஒரு ஹால் இருக்கிறத நாங்கதாம் மறந்து போயிட்டோம்! பெரிய புள்ள, பெரியபுள்ள ஆகிட்டாளாம்!” 

“பாவமே! அந்த ‘பட்டு’ குட்டியா! அப்ப காக்காக்கும் ஒரு கொமரு வந்தாச்சி!.. பாவமே, எப்பயாம் பெரிய புள்ளயாவ்னது?” 

“இந்த மாசம் பத்தாந் தேதியாம்! நாளைக்கித் தண்ணியூத்றாங்களாம்!” 

“நாளைக்கா?…. இதென்னா திடுதிப்புண்டு!” என்றவள் கடிதத்தை மேய்ந்தாள். 

“திடுதிப்புன்னு ஒண்ணுமில்ல…. இந்தக் காய்தத்தப் போட்டு இப்ப ரெண்டு கெழமயாகப் போகுது! தாஹா மச்சான்ட கைக் கோல் விசேஷம், இன்னைக்கித்தான் நமக்குக் கெடைக்குது!” 

”பாவமே.. திடீர்னு என்னா செய்றதிப்ப?.. ம்..? நம்ம.. போய்ட்டு வாரதாயிருந்தாலும் ஆயிரம் ரூவாகிட்டோணுமே!” 

“ஆயிரம் போகுமோ, கூடவே இன்னொறைநூறும் போகுமோ! சீரு, செனத்தி, அதுடா, இதுடான்னு மாமன் சீரு மானங் கெட்டுப் போய்க் கெடக்குது! குடுக்காட்டிப் போனா குத்தல்! அதுவும் நான் என்னடான்னா, கொழும்பு மாமன்! கொழும்புன்னா என்னமோ ரெண்டு கொம்பு மொளச்ச மாதிரி! செலவழிச்சாத்தான் மாமன்; இல்லாட்டிக் கையாலாகாத பய!. ஒரு ‘பட்டுக்கா’ பெரியவளாகிட்டாப் போதும், காட்ஸடிச்சி, றபானடிச்சி, ஊரொலகமெல்லாம் பப்ளிக்காக்கிறணும் ‘ஏன் ஊட்ல ஒருத்தி இருக்கிறாள்டா, வாங்கடோஓஓஓய்’னு! நல்ல பொழப்பு!….” 

“என்னாங்க!.. நம்ப ஒரு சீலயுஞ் சட்டயும் மட்டும் வாங்கினாப் போதும்! நம்ப நெலம காக்காக்கும் மதினிக்குந் தெரியுந்தானே!… புள்ள கைல ஒரு எரநூர் ரூவாய வெய்ப்போம்! பாவமே, வேற என்னா பண்றது!..” 

“அப்டித்தாஞ் செய்யணும்! செஞ்சாப் போச்சி! எப்டிச் செய்றது? அதும் இன்னைக்கி ஒரு பொழுதுக் கெடயில? தடா புடான்னு எவனயாவது புடிச்சி ஒரு ரெண்டாய்ரமாவது தேடணும்!…. யாரப் புடிக்கிறது?… காலைல நாலு மணி :பஸ்ஸுக்குப் போனா, ஒரு மூணு நாலுக்கெல்லாம் போய்றலாம்! இன்னைக்கி சனி, நாளைக்கி நாயிறு, திங்கக்கெழம லீவ் வேணும். அதுக்கொரு தந்தி குடுத்துறலாம். பெரியவன வீட்ல நிப்பாட்டீட்டுப் போகலாம்!.” 

“நானும் இப்ப அதத்தான் யோசிச்சேன்! திங்கக் கெழமைலர்ந்து பெரியவனுக்கு சோதனையில்லியா?……. அங்கிட்டுப் பாத்தாலும் அவனுக்கு சாப்பாட்டுக்கென்னா பண்றது? .. நானும் மருந்தும் மாயமுமா இருக்றேன்!… பாவமே, போகாமயும் ஏலாவே?.. இதென்னடாது இந்த நேரத்தில!….” 

“இந்த நோயோட நீங்களும் அந்தக் கண்டக்டர் மல மேல ஏறி எறங்கினா, இன்னும் எத்தன மாசத்துக்கு டக்டர் படி மேல ஏறி எறங்கணுமோ!” 

“இப்டிச் செய்வமே! மகளயுஞ் சின்ன மகனயுங் கூட்டிக்கிட்டு நீங்க மட்டுஞ் சைக்கிள்ள போயிட்டு வாங்களேன்!…”

“கெட்டிச்சி குடி!! இந்தக் கொழும்புக்குப் போய்ட்டு வர்றதுக்குள்ள சந்திக்கொரு ரிப்பேரு!..சரி.. யார் யாரு போறதுங்கிறதப் பத்திப் பொறகு பாப்போம். இப்பப் பணத்தத் தேட்ற வழியென்னான்னு பாப்போம்!. ஒங்கட சீட்டு சல்லி எப்டி?” 

“யாவமே, வாற மாசந்தானே நமக்கு!….. அதும் மாசக் கடசீலதானே கெடைக்கும்!……” 

“அதுதாந் தெரிஞ்சிக் கெடக்கே! எதுக்கும் மின்னாகிட்ட போய் விசயத்தச் சொல்லிக் கை மாத்தா ஒரு ரெண்டாய்ரங் கேட்டுப் பார்ங்க. ரெண்டாயிரம் இல்லாட்டிப் போனாலும் இருக்கிற மாதிரிக் கேளுங்க!. சீட்டுக் காஸ்ல கழிச்சீறலாம்…..” 

“பாவமே, அவளே ஐவான் பேயி! குடுத்துட்டுத்தான் மறு வேல பாப்பா!” 

“அவ குடுத்தாலும் நீங்க குடுக்க விட மாட்டீங்க போலர்க்கே! போய்ட்டு வார்த்தயப் போட்டுப் பாப்பிங்களா, இப்பத்தான் என்னமோ..” 

”பாவமே, ஒங்க ஆசயத்தான் ஏங் கெடுக்க! இந்த அடுப்பக் கொஞ்சம் பாத்துக்கங்க!” 

தன் தலையைத் தடவிவிட்டு இறங்கினாள் மனைவி. 


இப்படிப்பட்ட அவசரங்கள் மிகத் தாராளமாக எனக்கு அடிக்கடி ஏற்படும். கையில் ஓட்டம் இருக்கும் போதெல்லாம் அவை வருவதில்லை. அவை வரும் போதோ, செப்புக் காசுகூடத் தங்கமாக மாறிவிடும் என் கையில்! நாலாம் நம்பர்க்காரன் கதி வேறெப்படி இருக்கும்? 

இந்த மச்சான் பாவி, ஒழுங்காக எழுதியிருந்தால் இந்த இக்கட்டு ஏற்பட்டிருக்காது. எப்படியாவது தேடியிருப்பேன். ஷீரோ சாகுமுன்னர் என்ன எழுதினான்? என் நம்பர்க்காரனின் கையில் பணம் எரியுமாம்! 

பட்டும் எனக்குப் புத்தி இல்லை என்பது இவளின் குஸீத்தி. சேமிக்கணுமாம்! சேமிப்பதற்கு எங்கே மிச்சம் மீதி வாழ்கிறது? நூற்றுக்குப் பத்தை உண்டியலில் போடவாம். நூற்றுக்கு நூற்றைம்பதாகப் பிசாசு முளைக்கும் மாதத்தில் என்ன செய்வது? சேமிப்பு இருக்கட்டும், இதோ கடன் -கப்பி இல்லாமல் வாழ்கிறேனே, இது பெரிய காரியம் இல்லையா? பள்ளம் வந்தால் இக்னிஷனை ஓஃப் செய்துவிட்டுச் சவாரியடிக்கும் எனக்கல்லவா குஸ்த்தி காட்டுகிறாள் இவள்! இதற்கெல்லாம் கலாசூரிப் பட்டமோ நோபல் பரிசோ கொடுக்கவா செய்கிறார்கள்? 

பார்ப்பவர்களுக்கு என்னவோ நானொரு படாடோபிதான். சைக்கிள், டீவீ, எழுநூறு ரூபா வாடகை வீடு, ஃப்றிட்ஜ், மாசத்துக்கு இரண்டு மூன்று விருந்துப் பருந்துகள் என்று நாங்களும் அரைப் பணக்கார வாழ்க்கைதான் வாழ்கிறோம். அதை வாழாமலும் என்னால் என் உத்தியோகத்தைச் செய்ய முடியவில்லை. இதற்காக நான் ‘ஓட்டீ’யில் ஓட்டும் காலம் இருக்கிறதே, அதை ஏன் கேட்கீறீர்கள் வெட்கங் கெட்டுப் போய்! 

ஓரொரு நாளைக்கு இங்கே அரிசி வாங்கக் காசிருக்காது. அப்போது பார்த்துத்தான் எவனாவது வந்து நின்று கை மாத்துக் கேட்டுச் சிரிப்பான். அட, இல்லை என்றாலும் நம்பமாட்டான்! பணக்கார வேஷம் போடுபவனுக்கு இதைவிடப் பெரிய தண்டனை ஏது? 

அதைவிடப் பெரிய தண்டனை ஒன்றும் ஒரு நாள் நடந்ததுதான். 

‘பொலை’க்குப் போய்விட்டு வந்த பின்னர் ஆறே ஆறு ரூபா மிஞ்சிக் கிடந்தது. மறுநாள் பெட்றோலுக்காகக் கேவலம், ஐந்து ரூபாவை ஒதுக்கினால் மீதி ஒரே ஒரு ரூபா கெட்ட காலத்துக்கு ஒரு டயர் பெருமூச்சு விட்டால் என் பாடு தள்ளு மாடுதான்! நாகூர் தர்கா உண்டியல்களை என் மனதுக்குள் இடித்துக்கொண்டிருந்த அந்த வேளையில், நன்கொடை ரஸீதோடு வாசலில் நின்றார் ஓர் அசாது. 

காலம் கெட்டுப் போய்க் கிடக்கிறதே! அடிச்சழாவிட்டால் ஏதாவதொரு புதுப் பேர் வரும். கலவரம் வந்துவிட்டால் என் வீடு பற்றி எரியும்! குடும்பஸ்தனுக்கு ஏன் அந்த வம்பென்று, ஐந்து ரூபாவை மொட்டை யாக்கினேன். ஏகப்பட்ட சாபங்களோடு. ஒரு ரூபாவைப் பர்ஸில் புதைத்து வீட்டு வாசலைப் பார்த்தால், டி. ராஜேந்தரே மாதிரி ஒரு பிச்சைக்காரன். 

தடவித் தடவி வியர்த்ததில், ஒரு பழைய பத்துச் சதம் கிடைத்தது. அவனுடைய கையில் மரியாதையாகத்தான் வைத்தேன். அந்தக் குரங்குப் பயல் என்ன செய்தான் தெரியுமா…? 

…அந்தப் பத்துச் சதம் இன்னும் என்னிடம் இருக்கிறது நினைவுச் சின்னமாக! 


மின்னாவிடமிருந்து மனைவி திரும்பி வந்தாள். உதட்டில் பிதுக்கல். 

சரி, விஸ்வாஸமில்லாத ஓர் எதிர்பார்ப்பும் விநயமில்லாமல் விலகிக் கொண்டது. 

இரண்டாவது வலையையும் மனைவியே விரித்தாள்:- 

“ஒங்க கூட்டாளி ஹென்றிகிட்ட போய்ட்டு வர்றீங்களா?….” 

“ஹென்றிதான் இந்தக் காலங் கெட்ட காலத்ல மடுப் பள்ளிக்குப் போய்ருக்றானே!” என்றதில் அந்த வலையும் அறுந்து போனது. 

“பாவமே, இங்க வேற யார்கிட்டதாங் கேக்றதாம்?… அட, இந்த அடுப்பக் கொஞ்சம் எரிச்சி உட்டா என்னாவாம்!…” 

மூன்றாவதை நானே தொடக்கி நானே மூடினேன்:- 

“கொழும்புக்குப் போனா ஒஃபீஸ் பியூன்கிட்ட வாங்கலாந்தான்!… ஆனா.. எப்பிடி அவெங்கிட்ட போய்.. ஒர்நாளுமில்லாம்..” 

“ரஹீம் நாநா குடுக்க மாட்டாரா?” 

“கேக்கலாந்தான்!….. முந்தி வாங்கின முந்நூறும் அப்படியே இருக்கே!….” 

“பாவமே, ஒரேதா சீட்டு சல்லிய எடுத்துத் தாரேன்டு கேட்டுப் பாக் சேலாதா?” 

நான் முதலில் அவளை விரட்டினேன்; அவள் இப்போது என்னை விரட்டினாள்! விருப்பமில்லாமல் புறப்பட்டேன். பின்னேரம் ஒரு மணியைப்போல், விருப்பமில்லாமலே வந்து சேர்ந்தேன். 

அந்தக் காலிப் பயல் காலிக்கே போயிருந்தான். 

மொத்தம் நான்கு முயற்சிகள் அது வரையில். 


ஆகக் குறைந்தது ஆயிரமாவது வேண்டும். கை வசம் ஐநூறுக்குக் குறையாத ஒரு தொகை இருந்தது. இன்னுமோர் ஐநூறுதான். ஆனாலும் இன்னொரு பிரச்சினையும். கையிருப்பை இதற்குச் செலவழித்துவிட்டால், மாசத்தின் சொச்சத்தைக் கழிப்பது கடூழியமாவிடுமே!. 

பரவாயில்லை; அது இரண்டாம் பிரச்சினை. 

வில்ஸன் முதலாளி பெருத்த தொந்திக்காரன். அவன் கொப்பூழ் சீல் பண்ணிய மாதிரி கீழே கழிவுகள் போய்க் கொண்டே இருந்தாலும் மேலே போட்டு நிரப்புவதுதான் ஜாஸ்த்தி! நூற்றுக்கு இருபதென்ற கணக்கில் எண்பதாய்க் கழியும்! நூறாய் நிரம்பும்! என்னைக் கண்டால் எழுபத்தைந் தாகவும் கழியலாம்! என்னைப் போன்ற பணக்காரர்களிடம் அவனது பொதுவுடைமை அதிகமாய்ச் சுரண்டும்! ஆனால், பெறுமதிக்குரிய சாதனம் பேச வேண்டும்! பெறுமதியின் அரைப் பங்கு கிடைக்கும். அவனுக்குத் தேதி அதி முக்கியம்! பல பேருடைய வாசல்கள் தேய்ந்து, வீடுகளும் ஆவியாகிப் போன கதைகள் அநந்தம்! 

நோ! கழிச்சல் வேண்டாம்! ஹறாம்! 

இவளிடம் ‘:டீக்கா’ச் சமாச்சாரங்கள் ஏதும் இல்லை. இரண்டு பவுணில் ஒரு பாம்பு, அரைப் பவுணில் இரண்டு பாம்பு நாக்குகள். அவற்றில் கை வைக்க என் ஆண்மைக்குப் பலம் உண்டு; ஆனால் பெண்மைக்குத்தான் மனம் இல்லை! ஒரு முறை இது நடந்து 

அதெல்லாம் வேண்டாமே! அதைக் கூறப் போய் என்னால் என் பிள்ளைகள் வீதியில் நிற்க வேண்டாமே!. 

சே!.. அதுவும் வட்டிதான்!.. இனிமேலெல்லாம் இப்படிச் சிந்திக்கக் கூடாது!… 

டீவீயை வில்ஸனிடம் கொண்டு போக முடியாது. தன்னுடையுதைப் பூட்டி வைத்துவிட்டு இதையே அபகரிக்கத் தொடங்கிவிடுவான்! சைக்கிளைக் கொண்டு போனாலும் அதே கதிதான். சாவி, லைஸன்ஸ், இன்சூரன்ஸ்களைக் கையில் கொண்டுதான் சைக்கிளையே பார்ப்பான். 

அல்லாஹ்வே! மறுபடியும் மறுபடியும் வட்டி..

“முன்னூட்டுக்காரங்ககிட்ட ஏதாவது கெடைக்குமா?” என்றேன் அவளிடம். “பா..வமே!” என்று இழுத்துச் சிரித்தாள் அவள். ” நம்பகிட்டர்ந்து நூர் ரூவா கேக்காம இருந்தா போதும்!” 

“என்னடாது, பெரிய :பலாயாப் போச்சி!….” என்று அலுத்தேன் நான். ”புள்ளைங்க பெர்ஸாஹீனாக்கூட இந்த விஞ்ஞான காலத்ல காசு பறிக்கப் பாக்றானுக! நம்ம பாடில்ல திண்டாட்டமார்க்கு!..” 

“இந்தா பார்ங்க! போக முடியலன்னா பேசாம இருங்க! ஓங்க அவசர ஆத்ரத்துக்கு ஏன் புள்ளைகளையும் பெத்தவுங்களையுந் திட்றீங்க? நமக்கும் ஒரு புள்ள இருக்குங்கிறத மறந்துறாதீங்க!” என்று கொள்ளிக் கட்டையைப் பலமாகக் குத்தித் தள்ளினாள் மனைவி. 

“சும்மா மூலைக்கு மூல கோவத்தக் கொட்டாதீங்க! ஏம் புள்ள பெரிஸாஹ்னா அடுத்தூட்டுக்குக்கூடத் தெரியாது!..” என்று பற்றி எரிந்தேன் நானும். 

“பாவமே! காக்காக்குக்கூட சொல்லாமத்தான் இரிப்பீங்களோ?..” 

“ஆனா இந்த மாதிரி சொல்லமாட்டேன்!….” 

“காக்கா என்னா அப்பிடி வித்தியாசமாச் சொல்லீட்டாங்க? ஏதோ தங்கச்சியாச்சேன்டு காய்தம் போட்றுக்காரே தவுர பணத்தக் கொண்டா, சீலயக் கொண்டா, நக நட்டுகளக் கொண்டாண்டா எழுதியிர்க்கார்? அவரும் ஒங்க மாதிரி ரோசக்காரர்தான்! சொந்தக்காரங்களுக்கு மட்டுந்தாஞ் சொல்லியிரிப்பார்! எங்க காக்காவப் பத்தி எனக்குத்தானே தெரியும்! நம்ம மானத்தக் காப்பாத்தத்தான் நாங்க ஏதாச்சிங் கொண்டு போவணும்! ஒண்ணுமே கொண்டு போகாட்டிப் போனாலும் அவரொண்ணும் நம்பளக் கழுத்தப் புடிச்சி வெளீல தள்ளீற மாட்டார்!.” 

‘சொந்தக்காரங்களுக்கு மட்டுஞ் சொல்லத்தான் கார்ட்ஸ் அடிச்சாங்களோ?’ என்று கேட்க எழுந்த வாயை அடக்கினேன். அவள் கொதிக்கும்போது நான் அணைந்து போவதுதான் எங்கள் அடுப்பின் இலக்கணம். 

அவளைப் புகைய விட்டுவிட்டுப் பேசாமல் கூடத்தில் வந்து கூடையில் புதைந்தேன். 

மனைவியின் கூற்றிலும் நியாயம் இல்லாமல் இல்லை. என் வாசிக்காக நான் விதண்டாவாதத்தின் துணையில் வாழ்வதுவும் உண்மை. கணவனைப் பற்றிய மனைவியின் ஒவ்வொரு சொல்லிலும் அதீதமான உண்மை புதைந்துதான் இருக்கும்!… 

இந்தத் தாஹா மனிதரின் தகாத கவனத்தால் எனக்கிப்போது பணத்துக்கும் மனத்துக்கும் திண்டாட்டம். ஊருலகத்தில யார் யாரிடம் பண வசதி இருக்கிறது, எவனெவன் அயலாரின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டு ஓடியாடு கிறான், பிச்சைக்காரன் நாளுக்கு மும்மாரி போல் எவ்வளவு எண்ணிப் பார்க்கிறான் என்றெல்லாம் நான் சிந்தனையைச் சமாளித்துக்கொண்டிருந்த பொழுது, மனைவி ஆறிப்போய்த் தேனீரைச் சூடாகக் கொண்டு வந்தாள். 

“பசிக்குதப்பா!” என்று சரணடைந்தேன். 

“கொஞ்சம் இரிங்க, கறி வெந்துறட்டும்!” என்று மசிந்து போனாள். 

போனவள் அடுத்த கணமே திரும்பி வந்தாள். “இந்தச் செய்ன எங்கயாச்சும் வெய்க்கிறீங்களா?” 

என்னால் நம்ப முடியவில்லை. 

“எங்க வெய்க்கிறது?” 

“சல்லி கெடைக்கிற எடத்திலதான்!” 

“ஆமா!…. அது ஒண்ணுதான் இருக்கு! இது நாள் வரைக்கும் அந்த ஒரு வேலயத்தான் நாஞ் செய்யல்ல! நோ! வட்டி வேலயே நமக்கு வாணாம்பா!” 

‘பாவமே, ஆவத்துக்கு என்னா செய்றது?” 

“வெய்க்கிறதுன்னாலும் எங்க கொண்டுபோய் வெய்க்கிறது? இன்னைக்கு சனிக்கெழம; அர நேரம்; எல்லாக் கடையும் பூட்டு. நாளைக்கி நாயிறும் போயாவும் ஒண்ணா வருது! எங்க வெய்க்கிறது? அவென் வில்ஸன்கிட்ட வெச்சா நம்ம தொலஞ்சோம்!….. அதெல்லாம் வாணாம்!’ 

அவள் மௌனமாகி விட்டாள். 

பாவம், பெண்தானே! சுரங்கங்களை மாட்டிக் கொண்டு ஸக்காத்தும் கொடாமல் திரியும் பேய்களுக்கு மத்தியில் அவள் அந்தத் தூசுகூட இல்லாமல் முக்காட்டுடனேயே வாழ முடியுமா? 

சே!…. மூளை வர வரக் கட்டுக்குள் நிற்க மறுக்கிறது. வறுமைக்கு ஈமான் மீது என்ன அப்படியொரு கடுப்பு?… 

மகன் டியூஷன் முடிந்து வந்தான். அதொரு ஜாதி இராப் பகல் படிப்பு! பாடசாலைக்கு அனுப்புவதைவிட டியூஷனுக்கே அனுப்பி விடலாம்! விடிய விடியப் படித்து விட்டுச் சோதனை மேசைமீது தூங்குவான் போல் தெரிகிறது! 

“பாவமே, எங்கயாச்சும் ஒரு அய்நூறு ரூவா பெரட்ட ஏலுமா மகேன்?” என்றாள் தாய். 

“எங்க போறதும்மா!”…. என்று பப்படத்தை நொருக்கினான் அவன். 

ஐம்பது, நூறென்று சில அவசரங்களை ஏற்கனவே சமாளித்திருப்பவன் அவன்! டுபாயில் தாய் என்றோ தகப்பன் என்றோ கூறிக்கொண்டு பாடசாலையில் விளையாட வரும் கூட்டாளிகள் அவனுக்கு ஏராளம். இதற்காக, ஐநூறை அவனால் சமாளிக்க முடியுமா? 

மாட்டானா என்றொரு நைப்பாசையுந்தான்! மானம், மரியாதை என் று எதில் ஜாக்கிரதையாக இருக்கிறோமோ அதில் பார்த்துத்தானே குண்டு விழும்! 

விஷயத்தை மனைவி பாவங்களோடு விளக்கினாள். பாவமே என்று இவனும் புறப்பட்டுப் போய் மஃறிபுக்குத் திரும்பி வந்தான். 

“கெடைக்கல உம்மா!….” 

அந்த நைப்பாசையும் நைந்து போனது! 

குசினிக்குள் போய் உட்கார்ந்தேன். தனி ஆலோசனையில் அரிசி கழுவிக் கொண்டிருந்தாள் மனைவி. 

எனக்குள் ஓர் ஆலோசனை உதித்தது. 

பிரச்சினைக்கு விடை கிடைக்காதபோது நாம் ஏன் மனைவி பின்னாலேயே சுற்றுகிறோம்?.. மனைவியிடம் அப்படி என்ன விசேஷம் – நமக்கில்லாதது? நகை அணிகிறாள்; நாம் அணிவதில்லை. நாம் கால் சட்டை, கம்மீஸ்; அவள் ரவிக்கை, சேலை சேலை… 

“நோநா! ஒங்ககிட்ட ஒரு புது சீல ஒண்ணு இருக்குத்தானே?’ 

“பாவமே! அதயும் நான் ரெண்டு மூணு தரங் கெட்டீட்டனே!” என்று அனுதாபமாகச் சிரித்தாள் அவள். 

“அதும் போச்சா!…” என்றேன் சறுக்கியவனாக. “அதோட ஒரு சட்டத் துணிய மட்டும் வாங்கீட்டாப் போதும்னு நாம் பாத்தேன். அப்பிடீன்னா இந்த ஐநூறு போதும்!’ 

சிறிது மௌனம். அதை அவளே அபாண்டமாக உடைத்தாள். 

“இதுக்குத்தான் அளவோட பெக்கணும்னு சொல்றது!” 

“இதென்னா திடீர்ன்னு? மூணுன்னா கூடவா?” 

“பாவமே, நம்பளயா சொன்னேன்? ஒங்கட ஏழுபுள்ள : தாத்தாவையும் ஆறுபுள்ள தம்பியையுஞ் சொன்னேன்!” 

“என்னா பைத்தியக் கத! அவுங்க பெத்தா?” 

“எங்கட காக்கா மாய்ரி ஒண்ணோட நின்டிருந்தா இன்னைக்கி நமக்கு ஒதவுவாங்க இல்லியா?” 

“ஒங்கட காக்கா என்னைக்கி நமக்கு ஒதவி இருக்கிறாரு?…” 

“ஆமாமா! அதெல்லாம் எங்க இப்ப நெனவிர்க்கப் போஹ்து!” 

“அப்ப இப்ப ஒங்க காக்காகிட்டயே கேப்பமா?” 

“மாசா மாசம் :தாத்தாக்கும் தம்பிக்கும் எரநூர் எரநூர் அனுப்புறீங்களே, அவுங்ககிட்ட கேக்றது?” 

எனக்கு ஜிவ்வென்று ஏறியது! எங்கே சுற்றி எங்கே வருகிறாள்? ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து…. 

‘வேண்டாமடா! வேண்டாமடா!’ என்றது மனக்குறளி. ‘இது எல்லாரையும் பாதைக்கனுப்பும்!’ 

சீ, என்ன குடும்ப வாழ்க்கை இது! கரணம் தப்பினால் மரணம் !…

கை கொடுத்தது என் பெருந்தன்மை. 

“மலையாள மெகஸின் ஒன்ல ஒரு ஜோக்! முந்தி முந்தி நாம் இருவர், நமக்கிருவர்! இப்ப, நாம் ஒருவர், நமக்கொருவர்! வருங் காலத்ல நான் யாரோ, நீ யாரோ! நமக்கெதுக்கு யார் யாரோ!……” 

அவள் சீரியஸாகவே இருந்தாள். 

ஏன், ஏன், ஏன்? 

“நம்ப போகாமயே உட்ருவமா?” என்றாளே திடுதிப்பென்று- அரிசி கழுவுவதையும் நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து! 

“ஒங்களுக்கென்னா பைத்தியமா?” என்றேன் சூடாக. ‘கையாளாகாத வன்னு நெனப்பா?..” 

“பாவமே! சும்மா கொட கொடக்காம கேளுங்க! சம்பளம் வரைக்கும் செலவுக்கு ஐநூர்தான் இரிக்கி. அத இப்ப செலவழிச்சிட்டு என்னா செய்றை?’ 

“ஒங்கட காக்காட மொகத்ல எப்பிடி நாளைக்கி முழிக்கிறது?” 

“பாவமே, சொல்றத கேட்டுட்டுப் பேசுங்களேன்! காய்தம் திங்கக் கெழமதான் வரப் போஹ்து! அப்ப சாமத்திய சடங்கெல்லாம் முடிஞ்சிரிக்கும்! திங்கக் கெழம காக்காக்குக் காய்தம் ஒண்டு எழுதுங்க! அவர் எழுதுன என்லப்பயும் வெச்சி அனுப்னமுண்டா, அவருக்கு வௌங்கீறும்! மாசக் கடசீல வாறோம்ண்டு எழுதுங்க! சீட்டு சல்லி கெடச்ச சீர்க்கு போய்ட்டு வந்துறலாம்!” 

”பாவமே!” என்றேன் நான். 

– 1993ல், ‘இலங்கை சுற்றாடல் வெகுஜனத் தொடர்பாளர் பேரவை’ நடத்திய சிறுகதைப் போட்டியில் ரூபா 1000/- பரிசு பெற்ற பத்துக் கதைகளுள் ஒன்று. 

– சிறிபாலபுர மாத்தையா தொகுதி.

– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.

அல் அஸுமத் அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 - 1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார். இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *