குசினிக்குள் ஒரு கூடக்குரல்




(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வரன் மிகவும் பிரயாசை உள்ள மனிதர். ஒரு டொலரேனும் வீணாகச் செலவழிக்க மாட்டார். வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு குசினிக்குள் சென்றார். அப்பொழுதுதான் மனைவி வாணி ‘ஷொப்பிங்’ முடித்து வந்திருந்தாள். வாங்கி வந்த பொருட்களை அடுக்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

“பில்லை ஒருக்கால் தாரும் பார்ப்பம்!”
“சரி…. இனி அக்கவுண்டன் வந்திட்டார்”.
வரன் பில்லைப் பார்த்தார். முகம் அஸ்ட திக்கிற்கு கோணலாகியது.
“ஐஞ்சு கிலோ உருளைக்கிழங்கை இரண்டு டொலர் எண்டு எங்கையோ கிடந்தது. நீர் என்னடா வெண்டால் ஐஞ்சு டொலருக்கு வாங்கியந்திருக்கிறீர்!”
“கிடந்ததுதான். அது நல்ல சிவத்தக்கிழங்கு. கழுவித் துடைச்சு விட்டது மாதிரி பளிங்கு போல இருந்தது. உருளைக்கிழங்கு மண்ணுக்கை விளையுறது, மண்ணோடை இருக்க வேணும். அதுதான் நல்ல கிழங்கு. இஞ்சை பாருங்கோ. நான் வாங்கி வந்ததை. மண்ணோடை இருக்கு. உங்களுக்கு ஆராவது கழுவித்துடைச்சு இரண்டு டொலருக்கு தாறான்களே! சிவத்தக்கிழங்கு உரம் போட்டு வளர்த்தது. உடம்புக்கு ஆகாது.”
மறுபுறத்தில் சத்தமில்லை.
“காசு கூடினாலும் நான் நல்லதுதான் வாங்குவன்.” வரன் தொடர்ந்து பில்லைப் பார்த்தார்.
எங்கையாவது பிழை பிடித்தாகவேணுமே!
“இதென்ன? இரண்டு பிடி சில்வர்பீற் இரண்டு டொலர் எண்டிருந்தது. நீர் ஒரு பிடி இரண்டு டொலருக்கு வாங்கியந்திருக்கிறீர்.”
“இருந்ததுதான். ஆனா முழுக்க மண். அது கழுவ நாலு வாளி தண்ணி வேணும்.”
“அப்ப உருளைக்கிழங்கு கழுவ எத்தினை வாளி?”
“நீங்கள் உங்கடை அலுவலைப் பாருங்கோ. நான் என்னுடையதைப் பாக்கிறன்.
“எனக்கு குவாலிற்றிதான் முக்கியம் குவான்ரிற்றி யில்ல.”
“அதுவும் சரிதான்” நக்கலுடன் ஆமாம் போட்டார் வரன்.
ரெலிபோன் அடிக்கின்றது. றிசீவரைத் தூக்கு கின்றார் வரன்.
“ஹலோ ஆர் கதைக்கிறது? சிவமோ? டண்டினோங்கிலையிருந்தோ கதைக்கிறியள்? சரி விஷயத்தைச் சொல்லும்!
“என்ன சீட்டோ? சீட்டுக் கவிண்டு போச்சோ? ஐயையோ ஐயையோ”
“படிச்சுப் படிச்சு சொன்னனான். காசை “பாங்” கிலை போடுங்கோ “பாங்”கிலை போடுங்கோ எண்டு. வட்டி குறைவெண்டாலும் பத்திரமா இருக்கும். இதுக்கு பொலிஸ் கிலிசெண்டும் போகேலாது. சீட்டெண்டால் என்னண்டு கேட்பான். எங்களைத்தான் உள்ளுக்கை போடுவான். ஒரு டொலர் இரண்டு டொலரிலை கஞ்சத்தனம் காட்டுங்கோ. நாப்பதாயிரம் ஐம்பதாயிரத் திலை கோட்டை விட்டிடுங்கோ. என்ன நான் சொல்லுறன் சொல்லுறன் கல்லுளிமங்கன் மாதிரி இருக்கிறயள்”
“நாக்குப் புரண்டு போச்சுதடி பிள்ளை.”
“ஆர் உங்களுக்கோ, அல்லது அவங்களுக்கோ?”
– ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை – ஜூலை 2011