குங்குமச் சிமிழ்
கதையாசிரியர்: ஆர்.வெங்கட்ராமன்
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2026
பார்வையிட்டோர்: 557
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(முதல் பக்கம் கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்.)
“உக்காராமல் தலைகீழே நிக்கச் சொல்றியா என்னை?” என்று சீறி விழுந்தாள் குந்தளம்.
“நன்னாத்தான் இருக்கு, போ!” என்று சொல்லிவிட்டு அம்மா, புடைவையை எடுத்து மடிக்கலானாள்.
குந்தளம் சோப்பை எடுத்துக்கொண்டு கிணற்றடிக் குப் போனாள். நுரையைக் குழைத்து, கண்ணைக் கரிக் கும் வரையில் முகத்தில் சோப்பைத் தேய்த்துக்கொண் டாள். முழங்கை வரைக்கும் சோப்பு. நெற்றி, வகிடு, காது எங்கும் சோப்பு நுரை.
“குந்தளா!”
கண்ணைத் திறக்க முடியாமலே அவள் நிமிர்ந்து, தன்னை அழைத்த இந்துவைப் பார்த்து, சிறிது எரிச்ச லுடன், “என்ன?” என்றாள்.
“குங்குமச் சிமிழை எங்கேடி வைத்தாய்?”
“எதுக்கு?”
”வேணும். அம்மா கேட்கிறாள்.”
“எனக்குத் தெரியாது.”
இந்து சிறிது நேரம் நிலைப்படி அருகிலேயே நின்று. மௌனமாகத் தன் சகோதரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குந்தளத்துக்கு எதனாலோ மனசு சரியாக இல்லை என்ற எண்ணம் அவள் நெஞ்சத்திலே ஓடிற்று.
வாளியில் இருந்த ஜலத்தை வாரி வாரி, அவள், சோப் புப் போனதும் போகாததுமாக முகத்தை அலம்பிக்கொண் டிருந்தாள். கண்ணை வழித்துத் துடைத்துவிட்டு அவள் பார்த்தபோது, இந்து இன்னமும் அப்படியே நின்று கொண்டிருப்பதைக் கண்டாள்.
“ஏண்டியம்மா, நான் சொல்றது. நம்பிக்கைப் பட வில்லையோ? நான்தான் பார்க்கவில்லை என்றேனே” என்றாள் மறுபடியும்.
இந்து, மளமளவென்று கிணற்றடிக்கு வந்தாள். குந்தளத்தின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஏன் குந்தளா, உனக்கு என்ன வருத்தம் என்னிடம்?” என்று கேட்டாள்.
அவள் கையைத் திமிறிக்கொண்டே, “கையை விடேன், சோப்புச் சரியாகப் போகல்லே. எனக்கு ஒரு வருத்தமும் இல்லே” என்றாள்.
”பொய்; இல்லாட்டா ஏன் இப்படி என்னவோ மாதிரி இருக்கிறாய்?”
“என்ன மாதிரி இருக்கிறேன்?”
“என்னவோ மாதிரி, வருத்தமாய், கோபமாய்!”
”நீ தான்! உனக்குத்தான் கொம்மாளத்திலே ஒண் ணுமே புரியலை! நான் எப்போதும் போலத்தான் இருக்கேன்.”
“எனக்கு என்னடியம்மா கொம்மாளம்?”
“யாருக்குத் தெரியும்? ஆம்படையான் வரச்சொல்லி எழுதியிருக்கான். போகப்போறே. கொம்மாளம் இல்லா மல் என்ன? அப்பா, அண்ணா எல்லாரும் உனக்குச் சிபாரி சுக்கு இருக்கா. வேறு என்ன? நான் சொல்றதுலே உனக்கு நம்பிக்கை எங்கிருந்து வரும்? பீத்தல் குங்குமச் சிமிழ் எங்கே என்று என்னை வந்து கேட்கிறாய்! எதுக்கு அது? யாருக்கு இங்கே வேணும் அது?”
“பின்னே, ‘எதுக்கு’ என்று கேட்டாயே; ஏன்?”
குந்தளம், முகத்தைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே, “கேட்டால் என்ன?வாய் தவறிக்கூடக் கேட்கப்படாதோ?” என்றாள்.
”எல்லாத்துலேயுமே வாய்த் தவறுதலா? அவரைப் போய் ‘எழுதியிருக்கான், போயிறாக்கான்’ என்கிறாயே; அதுகூட வாய்த் தவறுதலா?”
குந்தளத்துக்குச் சுருக்கென்றது. வட்டக் கரிய விழி களால் நிமிர்ந்து ஒரு தடவை இந்துவைப் பார்த்தாள். “ஏன், சொன்னால் என்னவாம்? உனக்கு ஆம்படையான். நீ மரியாதையாகச் சொல்லணும். எனக்கு என்ன? நான் தாராளமாகச் சொல்லலாம். அதிலே ஒண்ணும் தப்பில்லே” என்று கூறிவிட்டு, அவள் சோப்பைப் பெட் டியில் வைத்துக்கொண்டு ஜலத்தை வடித்துவிட்டு உள்ளே போனாள்.
இந்து, சற்று நேரம்வரை அந்த இடத்தை விட்டு அசையவில்லை. ‘பின்னே, ஏன் ஒரு இடமும் திகைய மாட்டேன் என்கிறது? எல்லாம் எண்ணத்துக்குத் தகுந் தாப்பலேதான். வந்ததெல்லாம் அதுதான் தட்டிப் போறது’ என்று தனக்குள் ஒரு தடவை சொல்லிக்கொண் டாள்.
உள்ளே சென்றபோது குந்தளம், அவள் அம்மாவிடம் பேசிக்கொண் டிருந்தாள்; “அது இங்கிருந்த குங்குமச் சிமிழ்தானே? வீட்டில் இருந்ததுதானே? வீட்டிலே இவ ஒருத்திதானா?எல்லாம் இவளுக்குத்தானா? நான் ஒருத்தி இல்லையா? எனக்குன்னு ஒண்ணுமே வேண்டாமா? இவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இனிக் குழந்தை வேண்டும். அதுதானே?”
இந்துவுக்கு இப்பொழுதுதான் உண்மை புரிந்தது. தங்கையிடம் அவளுக்கு எந்த விதத்திலும் பொறாமையோ போட்டியோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் தங்கைக்காகத் தன்னிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து விடக்கூடத் தயாராக இருந்தாள். எவ்வளவோ செய்ய வேண்டும் என்றெல்லாம்கூட அவள் மனத்துக்குள்ளாகத் திட்டம் போட்டிருந்தாள். ஆனால் தன் மனசைத் திறந்து காட்ட அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது. சந்தர்ப்பமும் நேரவில்லை. புடைவை ஒன்று வாங்கினால், ‘குந்தளத்துக்கு இது நன்றாக இருக்கும்’ என்று அவள் எண்ணிக்கொள் வாள். ஒரு தடவை அதை வாயைவிட்டே தன் கணவ னிடம் சொல்லவும் சொன்னாள். ‘உங்களுக்கும் அது எவ் வளவோ பெருமை. அங்கே இந்த மாதிரியெல்லாம் கிடையாது என்று நீங்கள் வாங்கி அனுப்பினதாக இருக் கட்டுமே. என்னிடம் பணம் இருக்கு. நான் தந்துவிடு கிறேன்’ என்று சொன்னாள்.
அவள் மனசு அப்படிப்பட்டது. வீட்டில் இருந்த எந்தச் சாமானையும் அவள் தன் புக்ககத்துக்கு என்று எடுத்துக்கொண்டு போகவும் இல்லை. எல்லாம், அவ்வப் போது தேவைக்குத் தகுந்தபடி புதிதாக வாங்கியவை. வெள்ளிப் பாத்திரம், வெண்கலப் பாத்திரம் எல்லாம் புதியவை. அப்படி இருக்கும்போது இந்தக் குங்குமச் சிமிழ், பார்க்கப்போனால் எவ்வளவு அற்பமானது! புரா தனமாக வீட்டில் இருந்த சிமிழ் அது. ‘இதை வேணு மானால் எடுத்துக்கொண்டு போயேண்டி’ என்று அம்மாள் முன்தடவை சொன்னாள். “நீ சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் அதை இந்தத் தடவை எடுத்துக் கொண்டுதான் போகப்போகிறேன்” என்றாள் இந்து எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்று அவள் நினைத்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அதை அவள் யாரிடமும் சொல்லத் தயாராக இல்லை. பெற்ற தாயிட மும் கொண்ட கணவனிடமும் அதைச் சொல்ல அவளால் முடியவில்லை. ‘சீ சீ, சொன்னால் எத்தனை வெட்கக்கேடு!’ என்று அவளுக்குப் பட்டது.
‘கல்யாணமாகி ஐந்து வருஷகாலம் ஆகப்போகிறது. இன்னும்…’ என்று யாராவது முணுமுணுக்கும்போதெல் லாம் அவளுக்கு அந்தக் குங்குமச் சிமிழ் நினைப்புத்தான் வரும். அது ஒரு காரணம்.
மற்றொரு காரணம் :
அதுவும் அவளுக்கு அந்தரங்கமானதுதான். அந்தச் சிமிழை எடுத்துக்கொண்டுதான் அவள் ஒரு தடவை மஞ்சள் குங்குமத்துக்குப் போனாள். அப்போதுதான் அவனைப் பார்த்தாள். பிறகு கல்யாணப் பேச்சு நடந்தது. கல்யாணமும் ஆயிற்று. ஆகுமா, நடக்குமா என்று ஆகி விட்டது அவள் கல்யாணம். அவளுடைய ஜாதகம் ஏதோ தோஷமுள்ளது என்று ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டே வந்தது. அப்போதெல்லாம் அந்தக் குங்குமச் சிமிழ். அம்மாவின் பெட்டியில் ஒரு மூலையில், பாசி பிடித் துக் களிம்பேறிக் கிடந்தது. அவள் எஸ். எஸ். எல். ஸி. வரை படித்திருந்தாள். என்ன இருந்தாலும் படித்து, உத்தியோகத்துக்குப் போய், கல்யாணக் கவலையை மறந்து விடுவதற்காக அவள் படிக்கவில்லை. கையைப் பிடிக்கப் போகும் கணவனுக்கு அநுகூலமாக, பெருமையாக இருப்ப தற்காகவே அவளைப் படிக்க வைத்தார்கள். அது அவளுக் கும் தெரியும். அதனால் கல்யாணம் ஆகவில்லையே என்ற குறை, எல்லாரையும்விட அவளுக்கு அதிகமாகத்தான் இருந்தது. என்னவோ பேச்சு வாக்கில், ‘அந்தச் சிமிழை எடேம்மா. அதற்கு மெருகு போட்டு, உபயோகத்தில் வைத்துக்கொண்டால் என்ன ?’ என்று அதைக் குடைந்து எடுத்தாள். கிழங்குமா திரி நல்ல வெள்ளியில் செய்த சிமிழ் அது. அந்தக்காலத்துப் பாணியில் இருந்தது. இருந்தால் என்ன? இன்றுதான் மறுபடியும் பழைய நாகரிகம் திரும் பிக்கொண் டிருக்கிறதே ஒவ்வொன்றாக. பழைய கொட் டடிப் புடைவை, பழைய சோளி ரவிக்கை, பழைய நேர் வகிடு எல்லாம் இப்போது புதுப் பாஷனாக மலர்ந்து வருகின்றனவே!
பெட்டியிலிருந்து எடுக்கும்போதும், அதைத் தட்டா னிடம் கொடுத்து, மெருகிட்டுப் புதிது போலச் செய்து கொண்டு வந்தபோதும் அவளுக்கு வேறு எந்தவித எண்ணமும் இல்லை ஆனால் அது பார்க்க அழகாக இருந்தது. கைக்குப் பூஷணமாக இருந்தது. பார்த்தவர்கள் சிலர்கூட, “ஏதடி, இது, புதுப் பாஷனாக இருக்கு. வாங் கினையா. ஆர்டர் கொடுத்துச் செய்தையா?” என்று கேட் டார்கள். “வீட்டில் இருந்தது. உபயோகப்படுத்தாமல் கிடந்தது. பார்க்க நன்றாக இல்லை-?” என்று இருந்த சந்தேகத்தை அவள் தீர்த்துக்கொண்டாள். அதுவும் எதிர்வீட்டு ஜயந்தி ஒன்றைப் பார்த்து, ‘நன்றாக இருக் கிறது’ என்று சொல்லிவிட்டால் அது எவ்வளவு கர்நா டகப் பொருளாக இருந்தாலும் நவ நாகரிகப் பொருள்க ளோடு சேர்த்துவிட வேண்டிய புதுப்பொருள் ஆகிவிடும். நாகரிகத்தைக் கரைத்துக் குடித்து, அதை நடைமுறையில் அநுசரித்து வருகிற பட்டணத்துப் பெண் அவள்.
‘போயும் போயும் நல்ல துணியை இப்படி வீணாகத் தைத்துக்கொண்டு வந்து நிற்கிறாயே!’ என்று அவள் சொல்லிவிட்டால், அப்புறம் அது எவ்வளவுதான் உயர்ந்த துணியாக இருந்தாலும், அதை எவ்வளவுதான் உறுதியாக அழகாகத் தைத்திருந்தாலும் அது பெண்கள் உலகத்தில் எடுபடாது. அவளே இந்தச் சிமிழைப் பார்த்து, ‘ரொம்ப நாசூக்காக இருக்கிறதே!’ என்று முத்திரையிட்டு விட்டாள், அப்புறம் இதற்கு யாரைப் போய்க் கேட்க வேண்டும்?
இந்துவுடைய மாமாவின் பெண்ணுக்குச் சீமந்தம் நடந்தது. மணையில் வைத்துப் பாடுவதற்காகத் தெருவில் உள்ளவர்களை அவள் அழைக்கப் போனாள். கையில் அதே சிமிழ், சித்திரை மாதக் கடைசி; காலேஜ், ஹை ஸ்கூல் எல்லாம் விடுமுறை விட்டிருந்தார்கள். கடைசி வீட்டுக்கு அவள் போனபோது வாசலில் யாரோ நாலைந்து ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள், எல்லாரும் சிரித்துப் பேசிக்கொண்டு, அட்டகாசமாக உட்கார்ந்திருந் தார்கள். அவள், சிணுக்சிணுக்கென்று புதுப் புடைவை மொட மொடவென்று உராய, குங்குமச் சிமிழை ஏந்தி. அடங்கி ஒடுங்கி, ‘உள்ளே போவோமா திரும்பி விடுவோமா?’ என்று தயங்கிக்கொண்டே சென்றாள்.
“ஏண்டி இந்து, தாராளமா வரத்துக்கு என்ன பயம்? என் மருமான் தாண்டி! காலேஜ் லீவோல்லியோ? இங்கே வந்திருக்கான். அவாளெல்லாம் இங்கே அவனோடு படிச் சவா? உனக்கென்ன வெக்கம் வந்துது? பி. ஏ. முடிஞ்சு போச்சு. இனிமே கல்யாணம் பண்ண வேண்டியதுதான். ஆளைப் பாத்துக்கோடி!” என்று வேடிக்கையும் விளையாட்டுமாக அந்த வீட்டு அம்மாள் சொல்லிக்கொண்டே குங்குமத்தை எடுத்துக்கொண்டாள்,
வாசலில் அப்போது சிரிப்பு ஓய்ந்து, நிச்சப்தமாக இருந்தது. எல்லோருக்கும் அந்த அம்மாளின் பேச்சு நன்றாகக் காதில் விழுந்தது. இந்துவை வெட்கம் பிடுங்கி எடுத்தது. அப்படியே கொல்லைப்புறமாகப் போய்விட லாமா என்றுகூடப் பார்த்தாள். இப்போதாவது உடம்பு கொஞ்சம் தழைந்து, மொழு மொழு என்று ஆகிவிட்டது. ஆனால் அன்று, அவள் வெடுவெடு என்று கொடிபோலத் தான் இருப்பாள். ‘பதினேழு பதினெட்டு வயசுதானேடி? இது ஒரு வயசா? அவனுக்கு இந்தச் சித்திரைக்கு இருபத் திரண்டு முடியப் போறது’ என்று அந்த அம்மாள் மேலும் அவள் மனசை நாணச் செய்தாள்.
முகம் எல்லாம் குங்குமமாகச் சிவந்துவிட்டது. ‘போங்கோ மாமி!’ என்று சொல்லிக்கொண்டே நிலைப் படியைத் தாண்டினாள். திண்ணைப் பக்கம் திரும்பவே. அவள் உடல் கூசியது. கண்ணைக்கூடத் திருப்பாமல் அவள் படிக்கட்டில் இறங்கினாள். அவள் கட்டியிருந்த. புதுப்புடைவை தடுக்கிவிட்டது. கொஞ்சம் அஜாக்கிர தையாக வந்திருந்தால் அது அவளையே கீழே உருட்டித் தள்ளியிருக்கும். ஆனால் நல்ல காலம், கையிலிருந்த சிமிழ் தான் எட்டப் போய் விழுந்தது. அதுவும் எங்கே? அவன் மடியில் போய் விழுந்தது!
“மெள்ளப் போகப்படாதேசடி அம்மா? அவனைப் பார்க்கப்படாதுன்னு போனையோ இல்லையோ? பார்க்கும் படி ஆயிட்டுது! பாத்துக்கோ; பிராப்தம் அப்படித்தான் இருக்குமோ, என்னவோ?” என்று சொல்லிக்கொண்டே அந்த அம்மாள் அவளுக்குத் துணைக்கு வந்தாள்.
சுந்தரம் சிரித்தான். ‘என்ன மாமி இது? வந்த வாளைப் போய்-நல்ல காலம்-குங்குமம் எல்லாம் என் மடியிலேதான் விழுந்திருக்கு. கீழே கொட்டவில்லை” என்று சொல்லிக்கொண்டே குங்குமத்தைச் சாவகாசமாக எடுத்து, சிமிழில் அடைத்து, அவளை ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பார்த்துவிட்டுத் தூண் ஓரமாக. வைத்தான். இந்துவுக்கு அவசரம்; அவமானம். சட் டென்று அதைக் கையிலே எடுத்துக்கொண்டாள். கண்கள், ஒருமுறை அவன் கண்களைப் பாய்ச்சிவிடும் போலச் சந்தித்தன. விடுவிடென அந்த அம்மாளிடம், ‘போய்விட்டு வருகிறேன்’ என்றுகூடச் சொல்லாமல், சொல்லத் தோன்றாமல், போய்விட்டாள்.
ஒருவரும் சிரிக்கவே இல்லை. ஆனால் அவள் கொஞ்ச தூரம் போனதும் திரும்பிப் பார்த்தாள் எல்லாருடைய கண்களும் தன்னையே பின்பற்றி வந்ததைக் கண்டு, அவள் தலையைக் குனிந்துகொண்டு, மேலே நடந்தாள்.
“என் மாமி, வந்த பெண்ணிடத்திலே, ‘ஆளைப் பார்த் துக்கோ-பிராப்தம் இருக்கு’ என்று என்னமோ சொல்லி விரட்டி விட்டீர்களே! பாவம், அது இன்னும் கொஞ்ச நாழி நின்றுகொண் டிருந்தாலும் நின்றுகொண்டிருக்கும்” என்றான் சுந்தரம்.
“உனக்கு இன்னும் சித்த நாழி பார்க்கணும்போல் இருந்தா இப்பவே போய் அவ அம்மாவிடம் சொல்லி அழைச்சுண்டு வரேன். பாவம், பணம் இருக்கு, காசு இருக்கு; படிப்பு இருக்கு, அழகு இருக்கு. அப்பா வக்கீல் பண்ணுகிறார். எல்லாம் இருந்து என்ன? அதது காலா காலத்துலே ஒரு கல்யாணம்னு ஆனாத்தானே பெண்களுக்கு அழகு? நாளைக்கே கல்யாணம் ஆகட்டும். அது எப்படி ஆயிடும் தெரியுமோ? இப்போ கவலை!” என்றாள் மாமி.
“இப்பவும் என்ன, அழகாய்த்தானே இருக்கிறாள்?” என்றான் சுந்தரம்.
மாமிக்குக் குஷி பிறந்துவிட்டது.
“உனக்குப் புடிச்சிருக்கோ இல்லையோ?”
“அவளைப் புடிச்சிருக்கோ என்னவோ, அந்தச் சிமிழை எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு. அது இல்லாட்டா அந்தப் பெண் சிவப்பா, கறுப்பா என்றுகூடப் பார்த்திருக்க முடியாது” என்றான் சுந்தரம்.
இப்படி எடுத்ததுமே – அந்தக் குங்குமச் சிமிழ் புழக்கத்துக்கு வந்த அன்றே – அவளுக்கு “மங்களகரமான காரி யத்தைச் செய்துவிட்டது. அவள் வந்த பிறகு நடந்த வற்றை யெல்லாம் அந்த மாமி வந்து சொன்னபோது அவளுக்கு வெட்கம், ஆசை, அந்தச் சிமிழிடம் ஒரு பிரியம் எல்லாம் தோன்றின. குந்தளங்கூட அதைச் சொல்லிச் சொல்லிக் கல்யாணம் ஆகும் வரைக்கும் பரிகாசம் செய்து கொண்டிருந்தாள்.
கல்யாணத்தில், நலங்கின்போது அந்தச் சிமிழைத் தான் வைத்திருந்தார்கள். குங்குமத்தை எடுத்து, அவள் அவன் நெற்றியில் பொட்டிட்டாள். அவன் பொட்டிடு வதற்குப் பதில் அவள் கன்னங்களில் அதைத் தீற்றி விட்டான். யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு குறும்பாக அப்படிச் செய்தான்.
“நீயும் தீற்றடி!” என்று இவள் பக்கத்து வாத்தி யார்க்காரி விரட்டினாள்.
அவளும் குறும்பாகக் குங்குமச் சிமிழில் விரலை வைக் கும்போது அவன் கபக்கென்று மூடி, ஒருவரும் அறியாமல் அவள் விரலைக் கிள்ளிவிட்டான். அந்த வலியை நினைத் தாலே இன்றும் இன்பமா யிருந்தது.
இப்படி எத்தனை எத்தனையோ, அதைச் சாக்கிட்ட அந்தரங்கமான விஷயங்கள்! அந்தரங்கமான இன்ப உணர்ச்சிகள்!
கல்யாணமாகிப் புக்ககம் போனாள். கணவனும் அவ ளும் பட்டணத்தில் தனிக்குடித்தனம் வைத்தார்கள். இரண்டு மூன்று தடவை பிறந்தகத்துக்கும் போனாள். இங்கு வந்தபோதெல்லாம், “ஏண்டி! ஸ்நானம் பண்ணிண்டுதான் இருக்கையா? நீ வரப்போறே இன்னு சொன்னதும் வளைகாப்புன்னு நினைச்சேன்” என்று அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள், பெரியவர்கள் அவளிடம் வந்து சொல்வார்கள். அங்கே கணவனுடன் இருக்கும் போது டிராமாவென்றும் சினிமாவென்றும் பீச்சென்றும் கோவிலென்றும் அவர்கள் விச்ராந்தியாகப் போகத் தவறு வதில்லை. சுந்தரங்கூட மேலுக்கு வெகு சுதந்தரமாய், ல்லாசமாய் இருப்பதுபோலக் காட்டிக்கொண்டு, “இப்போ நம்ப ரெண்டு பேராய் இருக்கோம், ஒரு கவலை யும் இல்லாமல்; ஹாய்யாகப் போயிட்டு வர முடியறது. நாளைக்குக் குழந்தைகள் என்றும் குட்டிகள் என்றும் ஆகிவிட்டால் இது எல்லாம் முடியுமா, இந்து?” என்று கேட்பான். அது எவ்வளவு பெரிய பச்சைப் பொய் என் பது அவள் மனசுக்குத்தான் தெரியும்.
“உங்களுக்குத்தான் குழந்தைகள் என்றால் உயி ராச்சே! எதிர்வீட்டுக் குழைந்தையைக் கொஞ்சு கொஞ்சு என்று கொஞ்சுவீர்களே!” என்பாள் இந்து.
“அதுக்கு என்ன பண்றது? குழந்தைகள் என்றால் உயிர்தான். ஆனால் அவர்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு படும் பாட்டைப் பார்க்கும்போது, எந்த இடத்துக்கும் போகமுடியாமல் திண்டாடுவதை எண்ணும் போது, ‘போதும் போதும், நமக்குக் குழந்தைகளே வேண்டாம்!’ என்றுதான் தோன்றுகிறது” என்பான்:
“ஏன் உள்ளதை மறைத்துப் பேசுகிறீர்கள்? உங்களுக்குக் குழந்தை என்றால் கொள்ளை ஆசைதான்!”
சுந்தரம், மகா சாமர்த்தியக்காரன். அவள் மன வேதனையைப் புரிந்துகொண்டு, மெதுவாக, அழுத்தமாக, “எனக்கு அதைவிட உன்னிடந்தான் கொள்ளை ஆசை அதற்கு என்ன சொல்கிறாய்?” என்பான்.
குழந்தைகள் இல்லையே என்பதற்காக அவளிடம் அவனுக்கு அன்பு குறையவில்லை என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் அவன் ஊர்ஜிதம் செய்வதுபோல நடந்து கொள்வான்.
“இந்தத் தடவை ஊருக்குப் போனால் அந்தக் குங்கு மச் சிமிழைக் கொண்டுவரப் போகிறேன்” என்றாள் இந்து,
அவளுடைய நம்பிக்கையை வாய்விட்டுச் சொல்ல அவளுக்குத் திறன் இல்லை. இந்த மூட நம்பிக் கையைக் கேட்டு, அவன் பரிகாசம் செய்து தீர்த்துவிடு வான். இருந்தாலும் அவள் அதை ஒரு தடவை வாய் தவ றிச் சொல்லிவிட்டாள்.
“எந்தக் குங்குமச் . சிமிழ்? நம்ப கல்யாணத்துக்கு முன்னே என்மேல் விட்டெறிந்தாயே, அதைத்தானே?”
“ஆமாம்; விட்றிெந்தார்கள்! பேச்சைப் பார்!”
”சரி சரி; அது எதுக்கு? இங்கே வேறே வாங்கினால் போச்சு. நம்ப கல்யாண ஞாபகம் இருக்கணும்னா கொண்டுவா. வேண்டாம் என்று நான் சொல்லவில்லை” என்றான் அவன்.
நல்ல வேளை. அவன், அவள் கருத்தைப் புரிந்து கொள்ளாத வரையில் க்ஷேமந்தான்.
அவளுக்கு அந்த நம்பிக்கை என்னவோ நாளுக்கு நாள் வலுப்பட்டுக்கொண்டே வந்தது. அந்தக் குங்குமச் சிமிழ் ஆகிவந்தது. அது தன்னிடம் இருந்தாலே வீட்டில் குழந்தைகள் இருக்கும். அதனால்தான்,”நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதை இந்தத் தடவை எடுத்துக் கொண்டுதான் போகப்போகிறேன்” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு, அதை எடுத்துக்கொண்டு போனாள்.
குந்தளத்துக்கு இப்போது எங்கெல்லாமோ வரன் பார்த்துக்கொண் டிருந்தார்கள். பட்டணத்தில் கொண்டு போய்க்கூடத் தங்கையை அவள் இரண்டு மாதம் தனக்குத் துணையாக வைத்துக்கொண் டிருந்தாள். ‘அங் கேயே அவருக்கு எவ்வளவோ பேர் தெரிஞ்சவா இருக்கா. ஏதாவது அவரே ஏற்பாடு செய்தாலும் செய்வார்’ என்று தான், விடமாட்டோம் என்று வைத்திருந்த பெண்ணைப் பிடிவாதம் பிடித்து அவள் அழைத்துக்கொண்டு போனாள். அக்காவுக்கும் தங்கைக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. இருந்தாலும் இந்து அவளுக்கு விட்டுக் கொடுத்து விடுவாள். அக்காவும் அவள் கணவனும் இருந்த அந்நியோந்நியத்தைக் கண்டாள் குந்தளம். சுந்தரம் இவள் விஷயமாக ஒன்றுமே கவனிக்கவில்லை. அவனுக்கு முதலில் நேரமே இல்லை. ‘பெண்டாட்டியைக் கொஞ்சுவ தற்கு மட்டும் நேரம் இருந்த தாக்கும்’ என்ற அளவுக்குக் கூடக் குந்தளம் எண்ணிவிட்டாள்.
திரும்பி ஊருக்கு வரும்போது, “இந்து, இந்தக் குங்குமச் சிமிழை நான் எடுத்துக்கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு, அவள் பதிலை எதிர்பாராமலே அதை எடுத்துப் பெட்டியிலும் வைத்துக்கொண்டு விட்டாள் குந்தளம். ‘மாட்டேன்’ என்று அதை எப்படித் திரும்ப வாங்கிக்கொள்வது?
‘சரி; நாம் போனால் வந்தால் எடுத்துக்கொண்டு வந்தால் போகிறது’ என்று எண்ணிக்கொண்டாள் இந்து.
அப்பொழுது இங்கே வந்த சிமிழ் அது. குந்தளம் ஒரு சமயம் வேண்டுமென்றே எடுத்து வைத்திருப்பாளோ என்றுதான் அவள் கேட்டாள். அதற்கு இதுவா பேச்சு ? ‘எடுக்கவில்லை’ என்று வார்த்தைக்காவது சொல்லிவிட்டுப் போவதுதானே?
“அப்பா, உங்களுக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன், அம்மா, உனக்கு நமஸ்காரம் பண்ணுகிறேன். அண்ணா நீயும் நில்லேன்” என்று இந்து ஒவ்வொருவராக நமஸ் காரம் செய்துவிட்டு, வண்டியில் போய் ஏறிக்கொண்டாள். அதுவரையில் குந்தளத்திடம் பேசக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘இவ்வளவு கெட்ட எண்ணக்காரியா இவள்?’ என்ற வெறுப்பு ஒரு புறம். ‘இருந்தாலும் அவள் சின்னவள்: கல்யாணமாகாதவள்’ என்ற ஆதங்கம் ஒரு புறம். கடைசியாக மனசு கேட்காமல், “குந்தளா, நான் போயிட்டு வரட்டுமா? கடிதம் அடிக்கடி எழுதுகிறாயா?” என்று கேட்டாள்.
“சரி……நீயும் எழுது” என்றாள் குந்தளம்.
இரவில் தமையனுடன் ரெயிலில் போகும்போதெல் லாம், ‘அவளும் என்னைப்போலத்தானே? எனக்கு எப்படி யாவது கல்யாணமாகாதா என்று இருந்ததைப்போலத் தானே அவளும் எண்ணுவாள்? அந்த எண்ணத்துக்கு ஒரு நம்பிக்கை வேண்டுமே. வெகுநாள், “அந்தக் குங்குமச் சிமி ழால்தான் கல்யாணமாயிற்று” என்று அவள் பரிகாசம் செய்தவள் ஆயிற்றே. அந்த ஆசையில்தான். அதைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவள் விரும்பி யிருக்கிறாள். இதில் தவறு என்ன?’ என்று எண்ணமிட்டு வந்தாள். அவள் எதற்காக அந்தக் குங்கு மச் சிமிழை வேண்டுகிறாள் என்பது குந்தளம் ஒருத்திக் குத்தான் சரியாகத் தெரிந்தது. அதுதான் இந்துவை வெகுநேரம் வருத்தியது. ‘மற்றவர்களுக்காவது விஷயம் தெரியாது; போகட்டும். இவளுக்குத்தான் தெரியுமே. அப்புறமும் அதைக் கொடுக்கக் கூடாது என்றுதானே நினைக்கிறாள்? அதாவது கெட்ட எண்ணம்: எனக்குக் குழந்தை கூடாது, குட்டி கூடாது என்று. இவள் எண்ணப்படிதான் எல்லாம் நடந்துடுமாக்கும்!’ என்று தன்னையே அவள் தேற்றிக்கொண்டாள்.
கடைசியாக, ‘போகட்டும்; இதைவிட அவளுக்குக் கல்யாணம் ஆகவேண்டியதுதான் முக்கியம். இந்தக் குங் குமச் சிமிழ் இருந்தால், கல்யாணம் நடக்கும் என்பது உண்மையானால் அப்படித்தான் ஆகட்டுமே. அதில் எனக்குச் சந்தோஷந்தான்’ என்று நிம்மதியாகப் படுத் துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் சுந்தரம் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். அன்று முழுவதும் அவளுக்கு வீட்டு வேலை சரியாக இருந்தது. மூச்சுவிட நேரம் இல்லை.
“எங்கே சாப்பீட்டீர்கள்? உடம்பு ஏன் இவ்வளவு இளைப்பாக இருக்கிறது? ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் முன்னாலேயே எழுதுவதற் கென்ன?” என்றெல்லாம் கோபித்துக்கொண்டாள். தகர டப்பாக்களை யெல்லாம் ஒழித்து, சாமான்களை நிரப்பி வைத்தாள். அதிகாரம் செய்தாள்; அட்டகாசம் செய்தாள்.
“எல்லாம் கிடக்கட்டும். நாம் சிறிது நேரம் கோவி லுக்குப் போய்விட்டு வரலாம். உன் தங்கை குந்தளத் துக்கு ஒரு வரன் பார்த்துப் பேசி வைத்திருக்கிறேன். எல் லாம் முடிவானது போலத்தான். உனக்கும் பிடித்திருந் தால் அதற்குமேல் உங்க அப்பாவுக்கு எழுதி, பெண்ணை இங்கே வரவழைத்துப் பார்க்க வேண்டியதுதான். நீயும் அதற்கு முன்னதாக ஒரு தடவை பார்த்துவிடு உன் அண்ணாவும் பார்க்கட்டும். அப்படியே அவர்கள் வீட்டுக் குப் போய்விட்டு வரலாம். நீ வந்ததும் உன்னை அழைத் துக்கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறேன்” என்றான் சுந்தரம்.
இந்துவுக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. குங்கு மச் சிமிழ் நினைப்புத்தான் மலைப்பாக இருந்தது.
“இருங்கள்; முகத்தை அலம்பிக்கொண்டு வேறு புடைவை எடுத்து உடுத்துக்கொண்டு ஒரே நிமிஷத்தில் வருகிறேன்” என்று பெட்டியைத் திறந்தாள். ஸ்கார் லெட் கலர்ப் புடவையைக் கட்டிக்கொண்டால் சுந்தரத் துக்கு மிகவும் திருப்தியாக இருக்கும். அதனால் அந்தப் புடைவையை எடுத்தாள்; பிரித்தாள். அடுத்த கணம், ‘ணங்’ என்று ஏதோ கீழே விழுந்து, உருண்டது. பார்த் தாள், அதே குங்குமச் சிமிழ்தான்!
‘என்னிடமே அல்லவா இருக்கிறது இது? குங்குமச் சிமிழை எடுத்து வைக்கத்தான் அம்மா கேட்டிருக்கிறாள் போல் இருக்கிறது. என் பெட்டியிலேயே வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தேடினேனே! குந்தளத்திடம் போய்க் கோபித்துக்கொண்டேனே! ஆமாம், எல்லாம் சரி, குங்குமச் சிமிழ் என்னிடம் இருக்கும்போது அவளுக்கு எப்படிக் கல்யாணம் நிச்சயம் ஆயிற்று? அப்படியானால் இது அவளிடமே இருந்தால் எனக்கு……’ என்று எண்ண மிட்டது அவள் மனம்.
அவர்களுக்கு அந்த இடம் பிடித்துவிட்டது. மறு நாள் தமையன் ஊருக்குப் புறப்பட்டபோது, “அண்ணா, சிமிழைக் குந்தளத்திடமே கொண்டுபோய்க் கொடு. அவள் ஆசைப்பட்டாள்!” என்று கொடுத்தனுப்பினாள். அதன் பிறகுதான் அவள் மனசு லேசாயிற்று.
பேச்சு வார்த்தை நடந்து அடுத்த மூன்றாவது மாதந் தான் குந்தளத்துக்குக் கல்யாணம் நடந்தது. இந்துவும் சுந்தரமும் பம்பரமாச் சுற்றி நடத்தினார்கள். ஆனால் இந்துவுக்குச் சாப்பாடே செல்லவில்லை. சாப்பிட்டதெல் லாம் வாந்தியும் ஓக்காளமுமாகக் குமட்டின.
“என்னடி இந்து, இது? உடம்புக்கு என்ன?” என்று தனியாகக் கேட்டாள் குந்தளம்.
“ஒன்றும் இல்லேடி, பைத்தியம்! இரைந்து பேசாதே! அம்மாவுக்குத் தெரிஞ்சால் ரகளைப் படுத்திவிடுவாள். இங்கே இருந்து போய் மூன்று மாசம் ஆகவில்லையா?” என்று சிரித்தாள் இந்து.
– இரட்டைக் கதைகள் (வெள்ளிவிழா வெளியீடு), முதற்பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) (டிசம்பர் 6, 1918 - ஆகஸ்ட் 29, 2008) தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர். இதழாளர். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டவர். ஆர்வி - Tamil Wiki தினமணியில் 2011-இல் வந்த ஒரு கட்டுரை இதோ: இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் - படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்வி என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன். தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், 1918-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கௌரவம்
இரா.கலைச்செல்வி
May 28, 2026
நாவினால் சுட்ட வடு
எஸ்.மதுரகவி
May 28, 2026
திருட்டுப்பையன்
வல்லிக்கண்ணன்
May 28, 2026
