குங்குமக் கன்னத்தில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 3,146 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பளிங்கு போன்ற ஓடை நீர். அந்நீரில் கெண்டை மீன்கள் நீந்திச் செல்வது பார்ப்பதற்குப் பளிச்சென்று தெரிகிறது.

ஓடை அருகில் இருந்த மரத்திலிருந்து பழுப்பிலைகள் விழுகின்றன. பழுப்பிலைகள் விழுந்ததும் கெண்டை மீன்கள் மருண்டு மண்டை தெரிக்க ஓடுகின்றன, சற்று நேரத்திற்குள் அவை பழுப்பிலைகள் என்று தெரிந்ததும் மீன்கள் மீண்டும் திரும்பி வருகின்றன.

இலைகள் விழுந்த அதிர்ச்சியில் ஏற்பட்ட வட்டவடிவமான சிறு சிறு அலைகள் அந்த ஓடை அளவிற்கு விரிந்து- பரந்து மறைகின்றன.

“கீச் கீச்” இது வண்ணப் பறவைகளின் பண்ணிசைப்பு, இனிய ஒலியெழுப்பிய வண்ணம் பறந்து செல்வது தனியழகாக இருக்கிறது. வானத்தில் சூழ்ந்து நிற்கும் மேகமூட்டம் ஓடை நீரில் மறு உருக்கொண்டு திட்டுத்திட்டாக நிற்கிறது.

வாணன் இயற்கை அழகில் மூழ்கித் திகைக்கிறான். “ஏடெடுத்தேன் கவியொன்று வரைந்திட என்னை எழு தென்று சொன்னது வான்…” எனும் புரட்சிப் பாவ லரின் பாடலை அவன் வாய் முணுமுணுக்கிறது.

அப்பொழுது ஒரு பெண் நடந்து வரும் ‘சரக் சரக்’ எனும் ஒலி. மணலில் பதியும் காலடியின் ஓசை வாணனின் காதுகளில் விழுந்து அவன் கவனத்தைத் திசைத் திருப்புகிறது. பதறாமல் மெல்லத் திரும்பிப் பார்க்கிறான்.

பாதம் நோவாது பாவை காலெடுத்து வைத்துவரும் அழகு அவனை ஆட்கொள்கிறது. அவள் பாதத்திலிருந்து உச்சந்தலை வரை தன் பார்வையைச் செலுத்துகிறான். மீண்டும் தலையிலிருந்து அடிவரை அவன் கூரிய விழிகள் பதிகின்றன. அவன் பார்வை அவளை விழுங்கி விடுவதுபோல் இருக்கிறது. குண்டு மணியளவில் உருட்டித் திரட்டி வாயில் போட்டு விழுங்கிவிடலாம் போல் இருக்கிறது அவனுக்கு! அவ்வளவு ஆசை அவள் மேல்.

பளிங்கு நீரில் துள்ளித் திரிந்த மீன்களுக்கும் அவள் கண்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை. சேல் போல் கண்கள், மேகம் போன்ற கூந்தல், வில்போன்ற நெற்றி, குங்குமக் கன்னம் குவின் சிரிப்பு. இத்தனையும் ஒரு சேர அன்னம்போல் நடந்து நடந்து வருகிறாள். அவள் வேறு யாரும் அல்லள் வாணனின் காதலிதான்.

தன் காதலியின் அழகினை அழகுச் சொற்களால் அணிசெய்யத் துடிக்கிறான் வாணன். ஆனால் அவனுக்குச் சொற்கள் கிடைக்கவில்லை. கிடைத்த சொற்களையும் கோவைப்படுத்தி சொல்லவும் தெரியவில்லை தன்னை அறியாமலேயே ஏதோ வாயில் வந்தபடி வர்ணிக்கிறான். அவன் வர்ணிப்பதைக்கேட்டு வளர்மதி பூரித்து விடுகிறாள்.

“அத்தான்” எத்துணை சத்தான சொல். அவன் வர்ணனை தடைபடுகிறது.

“அன்பே” உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளி வருகிறது. வளர்மதி வாணன் அருகில் போய் நிற்கிறாள்.

அவன் வளர்மதியின் கையைப்பற்றி இழுக்கிறான். அவள் அவனுக்கு அருகில் அமர்கிறாள். இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். தென்றல், மலர்மணத்தைப் பரப்புகிறது. அந்த மணம் பன்னீரில் கலந்த சந்தனத்தைப்போல் கமழ்கிறது.

“அத்தான் உங்களைப் பார்க்காமல் என் மனம் என்ன பாடுபட்டது தெரியுமா?” வளர்மதி கேட்கிறாள்.

“என் மனமும்தான். கடந்ததைப்பற்றி நினைக்காதே – நடந்ததைப்பற்றி நினைக்காதே நினைக்காதே நடப்பதைப் பற்றி நினை” என்று தன்னிலை மறந்து சொல்கிறான். அவள் சொல்லியதன் பொருளே அவனுக்குத் தெரியாத நிலை.

வாணனின் விரல்கள் வளர்மதியின் கண் இமைகளைத் தடவுகிறது. அவள் தன் குவளை மலர்விழிகளை மூடுகிறாள். படக்கென்று மீண்டும் இமைகளைத் திறக்கிறாள். செவ்வரிவிழிகளில் உள்ள கருமணிகள் வாணனைக் குத்துகின்றன. வாணன் கூர்ந்து நோக்குகிறான். வளர்மதியின் கிரங்கவைக்கும் பார்வை அவனை கிறுகிறுக்க வைக்கின்றன. கூந்தலை இதமாகக் கோதுகிறான். கோதை கண்களை மீண்டும் சிமிட்டுகிறாள். கன்னம் மாங்கனியாக மாறுகிறது. பேச நா எழவில்லை. நீண்ட வெப்ப மூச்சை வெளியேற்றுகிறான். “வளர்மதி” வாணனின் வாயிலிருந்து மெல்ல வெளிவருகிறது. கன்னத்தில் ஒன்று கச்சிதமாக பதிக்கிறான். வளர்மதியின் உடல் புல்லரிக்கிறது. நெஞ்சம் விம்மிப் புடைத்து நிற்கிறது.

வளர்மதியின் செக்கச்சிவந்த உதடுகளில் வாணன் தன் இதழ்களைக் குவித்து ‘த்ச்’ கொடுக்கிறான். அவள் கைகள் வாணனின் முதுகைத் தடவுகின்றன. வாணன் வளர்மதியின் தோளைப் பற்றிப் பிடித்துவிடுகிறான். நிலா வந்ததுகூட அவனுக்குத் தெரியாத நிலை. வளர்மதியின் மதிமுகத்தையே பார்க்கிறான். மதிக்கும் வளர்மதியின் முகத்திற்கும் வேறுபாடு என்ன என்றால்

அவன் இரண்டும் ஒன்றுதான் என்று சொல்லிவிடுவான். அந்த நிலையும் அவன் மதுவுண்ட வண்டைப் போல் அவள் மடியில் மயங்கிக் கிடக்கிறான். அவள் நிலையும் அதுதான். மெல்ல முயல்கிறான். அதுக்குத்தான்! வளர்மதி வெடுக்கென்று விலகி, “ஊகூம்” அதுதான் இப்போது கூடாது. அது திருமணத்திற்குப் பின் வைத்துக் கொள்ள வேண்டிய வேலை என்று சொல்லியபடி கன்னத்தில் தன் பட்டுவிரலால் மெல்லத் தட்டுகிறாள். அது அவனுக்கு வலித்திருக்க வழியில்லை. இருந்தாலும் வலித்து விட்டதைப்போல் மூடியிருந்த இமைகளை மெல்லத் திறக்கிறான்.

விழித்துப் பார்க்கிறான் பக்கத்தில் பசும்புல் தரையைக் காணோம். ஓடையில்லை, அருகில் வளர்மதியைக் காணவில்லை. எதிரே பார்க்கிறான் சுவரில் மாட்டப்பட்டிருந்த நாள் காட்டியிலுள்ள நீர்த்தேக்கம் அவன் கண்களில் படுகிறது; கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்க்கிறான். அவன் வாய் கண்டது கனவா என்று முணுமுணுக்கிறது. ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறான். அப்பெருமூச்சு தன் மனத்திலுள்ள துன்பச்சுமையைக் காட்டுகிறது.

இரண்டு நாட்களாக எங்கே போயிருப்பாள் சந்திக் கம் இடத்திற்கும் வரவில்லையே, வீடும் சாத்திக் கிடக்கிறதே. வெளியூர் சென்றிருந்தாலும் சொல்லியிருக்கலாமே. ம்… உண்மைக் காதலாக இருந்தால் முன்கூட்டியே சொல்லியிருப்பாளே. சொல்லாத காரணம் என்ன? என்னைப்போல் இன்னும் எத்தனை பேரோ. இச்சே இருக்காது அவன் மனம் பிதற்றுகிறது. பல எண்ணத்தில் கண்ணாடி முன் போய் நிற்கிறான் வழக்கம்போல் மழிதகட்டை (பிளேடு) எடுக்கிறான். சற்று நேரத்திற்குள் அவன் முகம் பளிச்சென்று மாறுகிறது. முகத்திலுள்ள குறுந்தாடி மறைந்து விட்டாலும் அவன் உள்ளத்திலுள்ள சுமை மறைய வில்லை.

வேலைக்குச் செல்கிறான்.

மேசையைத் துடைப்பதால் தட்டித் துடைத்து விட்டு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்கிறான். கோப்பேடுகளைக் (பைல்) கைகள் புரட்டுகின்றன. பக்கங் கள் மளமளவென் று மாறுசிகின்றன. என்ன செய்ய வேண்டும். அது அவனுக்குப் புரியவில்லை. கோப்பேட்டை மூடுகிறான் தலைக்குக் கை செல்கிறது, கப்பல் கவிழ்ந்து விட்டதைப் போன்ற நிலை. ஓய்வு நாள் (லீவு) விண்ணப் பத்தாளை எடுக்கிறான். தூவல் விண்ணப்பத்தாளை நிறைவு செய்கிறது.

எழுந்திருக்கிறான் தலைமை எழுத்தர் மேசையை நோக்கி நடக்கிறான்.

‘வணக்கம்’

‘வணக்கம் என்ன வேண்டும்?’

‘எனக்கு இரண்டு நாள்…’ இழுக்கிறான். புரிந்து கொண்ட தலைமை எழுத்தர் ‘என்ன காரணம்’ என்று கேட்கிறார். ‘மனம் சரியில்லை அசதியாக இருக்கிறது’

“சரி” தலைமை எழுத்தர் விண்ணப்பத்தாளில் கை யொப்பம் இடுகிறார்.

ஒப்புதல் கிடைத்து விடுகிறது.

வாணன் நன்றி கூறிவிட்டு வீடு நோக்கி நடக்கிறான். எப்படியோ தன்னிலை மறந்தவனைப் போல் வீட்டை அடைகிறான்.

வீட்டிலும் அவனால் அமைதியாக இருக்க முடிய வில்லை. அங்குமிங்குமாக நடக்கிறான். வாய் எதையெதையோ முணுமுணுக்கிறது. உதடுகள் வரண்டு நிற்கின்றன. முகம் சோர்ந்திருக்கிறது. கண்களில் நீர்த் திவலை திரண்டிருக்கிறது. துடைத்துக்கொள்ள காற் ட்டைப் பையில் கையை விடுகிறான். கைகுட்டையுடன் வெண்சுருட்டும் வருகிறது.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வெண்சுருட்டைப் பற்றவைக்கிறான். புகை சுருள் சுருளாக மேல் நோக்கிப் பறக்கிறது. அதைப்போல் அவன் மனமும் மேல் நோக்கிப் பறந்தது எங்கெங்கோ அலைகிறது. ‘ம்… இனி மறந்துவிடுவதுதான் நல்லது’ அவன் மனம் பேசு கிறது. எப்படி முடியும்? நான் அவள் மேல் கொண்ட காதல் போலிக் காதல் இல்லையே! அழகைப் பார்த்து மனம் பறிகொடுக்க வில்லையே! குணத்தையும் அறிவை யும் அன்பையும் அடக்கத்தையும் தானே பார்த்து மனம் பறிகொடுத்தேன் நான் அவள்மேல் கொண்டிருக்கும் அன்பு தூய்மையானது; மறக்கமுடியாதது; தெய்வீகக் காதலை எப்படி மறக்கமுடியும்? மறக்கமுடியாது என்று அவன் உள்ளுணர்வு சொல்கிறது. இரண்டும் கெட்ட நிலை. மறந்துவிடுவது நல்லது என்று நினைக்கும்போது தான் அவன் ஆற்றாமையால் துடிக்கிறான். இளகிய மனம் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறது.

நண்பகல் உணவைக்கூட மறந்துவிட்டது நினைவுக்கு வருகிறது. அதுவும் இரவு மணி ஏழுக்கு. இரவுச் சாப் பாட்டு நேரத்தில்தான் நண்பகல் சாப்பிடாததை நினைத் திருக்கிறான்.

கடையை நோக்கி நடக்கிறான்.

இலையில் சோறு இருக்கிறது மனம் சாப்பிட விரும்பவில்லை வயிறோ சிறுகுடலைப் பெருங்குடல் தின்பது போல் இருக்கிறது.

எப்படியோ இரண்டு பிடியைப் பிடித்து விழுங்குகிறான். அதுவும் வேம்பாகக் கசக்கிறது. ஏதோ பசி குறைகிறது. வீடு திரும்புகிறான்.

வழக்கம்போல் வங்காளி கடைப் பால்கூட குடிக்க வில்லை. படுக்கைக்குச் செல்கிறான் படுக்கிறான் கைத்தறி படுக்கை விரிப்பும் நெருஞ்சி முள்ளாக மாறுகிறது.

புரண்டு புரண்டு படுக்கிறான். கண்களை இமைகள் மெல்ல மூடுகின்றன அந்நேரத்திலும் வளர்மதி சிரித்தபடி வருகி றாள். விழிக்கிறான். எதிரே வளர்மதி நிற்பது போன்ற உணர்வு.

கண்களை மீண்டும் இறுக மூடுகிறான். சிரிப்பொலி கேட்பது போன்ற எண்ணம். தூங்க முடியாமல் தவிக்கி றான் வளர்மதி நினைவால் தூக்கம் கெடுகிறது. உள்ளம் சோர்ந்து படுத்த படுக்கையாய்க் கிடக்கிறான்.

ஒருவழியாக விடிகிறது. அவன் படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை. உடல் அனலாகத் தகிக்கிறது. ‘அம்மா அம்மா’ என்று அணத்துவது அவன்தான். எழுந்திருக்க முயல்கிறான். முடியவில்லை. கைகால்கள் நடுங்குகின்றன. போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறான்.

மணி பத்திருக்கும். வாணனை வெளியே காணாத பக்கத்து வீட்டுக்கார முதியவர் கதவைத் தட்டுகிறார். முனகல் ஒலிதான் கேட்கிறது சாரளத்துப் பக்கம் ஓடுகிறார். நிலைமையைப் பார்க்க முடிகிறது. அங்கிருந்து கொல்லைப் பக்கம் ஓடுகிறார். கம்பும் கையுமாக திரும்பிவந்து தாழ்ப்பாளைக் குத்தித் திறந்துவிடுகிறார். உள்ளே சென்று வாணனின் உடம்பில் கையை வைத்துப் பார்க்கிறார். பானையில் தண்ணீரைப்பிடித்து அவன் மேல் வைத்தால் அதுகூட கொதித்துவிடும். அந்த அளவிற்கு முதியவர் கையைச் சுடுகிறது. விரைந்து வெளியே செல்கிறார் சாலையில் ஓடும் வாடகை வண்டியை நிறுத்துகிறார்.

ஓட்டுநரும் (டிரைவர்) முதியவரும் வாணனை வண்டியில் தூக்கிக் கிடத்துகின்றனர். வண்டி மருத்துவமனை நோக்கிப் புயல் வேகத்தில் விரைகிறது.

மருத்துவர் வருகிறார். துடிப்பறிமானியால் நெஞ்சத் துடிப்பு கணிக்கப்படுகிறது. வாயிலுள்ள வெப்ப மானியை எடுத்துப் பார்க்கிறார் மருத்துவர். வெப்பம் 120- பாகையாக இருக்கிறது பரபரப்புடன் தாதி ஓடி வருகிறாள். தட்டில் ஊசியும், மற்ற கருவிகளும் இருக்கின்றன மருத்துவர் ஊசியை எடுக்கிறார். வாணனின் கையில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.

சற்று நேரத்திற்குள் வாணன் கண்களை இமைகள் மூடிக்கொள்கின்றன. தன்னிலை மறந்து குறட்டை விடுகிறான்.

நேரம் ஓடுகிறது. 8 மணி நேரத்திற்குப் பின் வாணன் கண் விழித்து சுற்றும் முற்றும் பார்க்கிறான் மருத்துவமனையில் இருப்பது அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது.

புரண்டு படுக்கிறான். உடம்பு புண்ணாக வலிக்கிறது. வளர்மதி பக்கத்தில் நின்று நெற்றியை வருடுவது போன்ற நினைப்பு வேறு வருகிறது. மனம் தளறுகிறான். மருத்துவர் அப்பொழுது அங்கு வருகிறார். அவன் உடம்பைச் சோதனை செய்து பார்த்துவிட்டு

‘இப்பொழுது காய்ச்சல் நின்றுவிட்டது. இனி ஒன்றும் செய்யாது’ என்று தன் தொழிலுக்கேற்ப நோயாளிக்கு ஆறுதலும், ஊக்கமும் தரும் முறையில் சொல்லுகிறார். வாணன் சிரிக்கிறான். மன உளைச்சலுக்கு மருந்தில்லை என்பது அவனுக்குத் தெரியும். வாணன் சிரிப்பது ஏன் என்று மருத்துவருக்குத் தெரிகிறது. அவரும் புன்னகைக்கிறார்.

மருத்துவர் அங்கிருந்து செல்கிறார். மணி ஐந்து அடிக்கிறது.

நோயாளிகளைப் பார்ப்பதற்கு உற்றார் உறவினர் நண்பர்கள் பார்க்க வரும் நேரம்.

வாணன் வாசலை நோக்குகிறான். தன் நண்பர் பழங்களுடன் அங்கு வருகிறார். வந்து நலம் விசாரிக்கிறார்.

வாணன் அவர் கேட்பதற்கு ஏதேதோ சொல்லுகிறான். என்ன கேட்கிறார் என்ன சொல்லுகிறோம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் கவனமெல்லாம் அவர் கொண்டு வந்திருந்த பழங்களில் பதிந்திருக்கிறது. ஆப்பிள் பழத்தைப் பார்க்கிறான். அது வளர்மதியின் கன்னத்தை நினைவுபடுத்துகிறது. நாரத்தம் (ஆரஞ்சு) பழத்தைப் பார்க்கிறான். அது அவள் மஞ்சள் நிற மேனியை நினைவு கூர்கிறது. கொடி முந்திரியைப் பார்க்கிறான். அது அவள் இதழ்களை நினைவு படுத்துகின்றது. பிளந்த மாதுளையைப் பார்க்கிறான் அது வளர்மதியின் முத்துப் பற்களின் புன்முறுவலைக் காட்டுகிறது. அவன் முன் வளர்மதி முழுத்தோற்றம் அளிக்கிறாள். அதற்குள் இன்னொருவர் வந்துவிடுகிறார்.

வந்தவர்கள் இரண்டொரு கேள்வியைக் கேட்டு விட்டு தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். அவர்கள் பேச்சு பழந்தயிரைத்தான் நினைவுபடுத்துகிறது.

மணி ஆறு. அனைவரும் விடைபெறுகின்றனர்.

வாணன் தன் நண்பர்கள் சென்றதும் எதிர்த்தாற் போல் கிடந்த படுக்கையை நோட்டமிடுகிறான்.

கவலைப் படாதீங்கத்தான் நான் நாளைக்கு வரும் போது கோழி ரசம் வைத்து எடுத்துகிட்டு வருகிறேன் என்று கண்ணீர் குளமாகப் பெருக்கெடுக்க ஒருத்தி விடை பெறுகிறாள். அதற்கு அந்தப் படுக்கையில் படுத்திருப்பவன், ‘சரி சரி அழாமல் போ’ என்று சொல்லியபடி கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான்.

இக்காட்சி அவன் கண்களில் படுகிறது. உரையாடலி லிருந்தே கணவன் மனைவி என்பது புரிந்து விடுகிறது. புரிந்ததும் அவன் எண்ணம் வளர்மதியைச் சந்தித்துப் பேசும் இடத்திற்கு விரைகிறது. கொஞ்சிப் பேசிய நினைவலைகள் அடுக்கடுக்காக வருகின்றன. அதற்குக் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறான்.

வேலைக்குப் போய் ஒரு கிழமையாகி விடுகிறது. ஆனால் வாணனுக்கு அந்தக் கணக்குத் தெரியவில்லை தன் காதலி வளர்மதியைப் பார்த்து ஒன்பது நாள் நான்கரை மணி நேரம் ஆவதுமட்டும் சரியாகத் தெரிந்திருக்கிறது.

மறுநாள் உள்ளத்தில் தீட்டிவிட்ட ஓவியத்தின் நினைவாக படுத்திருக்கிறான் அப்பொழுது காலடியோசை கேட்கிறது. திரும்புகிறான், தன் பணிமனையில் வேலை செய்யும் பயிரவன் வருவதைப் பார்த்துச் சிரிக்கிறான். அவர் அருகில் வந்ததும், ‘இப்ப எப்படி இருக்கிறது’ என்று நலம் கேட்கிறார்.

‘ஏதோ தேவலை’ துக்கம் அவன் குரலில் தொனிக்கிறது.

‘இந்தாங்க இன்றுதான் இந்தக் கடிதம் வந்தது’ என்று நீட்டுகிறார் பயிரவன்.

வாணன் அதை வாங்கி முகவரியைப் பார்க்கிறான், வாணன் என்று எழுதியிருப்பது தெரிகிறது. அதைப் பார்த்ததும் முகம் மல்லிகையாக மாறுகிறது. அவள் கையெழுத்துத்தான் அது என்ன எழுதியிருக்கிறாள்? மறு நொடியே முகம் வாடுகிறது. ‘என்னை மறந்து விடுங்கள்’ என்றுதான் எழுதியிருப்பாள் என்று முணுமுணுக்கிறான். எதற்கும் படித்துப் பார்ப்போம் படிப்பதற்குள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். இது அவன் மனநிலை. அவன் கை கடித உறையைக் கிழிக்கிறது. கடிதத்தைப் பிரிக்கிறான் முத்து முத்தான எழுத்துக்கள் அவன் பார்வையில் படுகின்றன. வாய் மெல்ல அசையத் தொடங்குகிறது.

அன்புள்ள அத்தானுக்கு, வணக்கம்.

வளர்மதி வரையும் மடல். நாம் வழக்கம்போல் சந்தித்துப் பேசி ஒன்பது நாட்கள் ஆகிவிட்டன. அன்று நான் வீட்டிற்குச் சென்ற பிறகுதான் எனக்கே அது தெரிய வந்தது, நான் சென்று சற்று நேரம் கழித்துதான் என் தந்தை வீட்டிற்கு வந்தார். வந்ததும் நமக்கு வீடமைப்புக் கழக வீடு கிடைத்துவிட்டது என்றார். எங்களுக்கு ஒரே மகிழ்ச்சிதான். அம்மகிழ்ச்சியில் எப்போது குடிபோகவேண்டும் என்று கேட்டேன் அதற்கு என் தந்தை, நல்ல நாளும் பார்த்துவிட்டு வந்துவிட்டேன், நாளை பத்து மணிக்கெல்லாம் போய்விட வேண்டியது தான் என்றார், என் மனம் ஒருநிலையில் இல்லை. தங்களிடம் இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது என்று துடித்தேன். இருந்தாலும் தந்தையிடம் நாளை நீட்டிச் சொல்லலாம் என்றெண்ணி இரண்டு நாள் கழித்துப் போனால் என்ன? என்று கேட்டேன், அதற்கு அவர், நாளைக்கு மாதம் பிறக்கிறது. நல்ல நாளும்கூட நாளைக்குப் போகாவிட்டால் பிறகு ஒரு கிழமை காத் திருக்க வேண்டும். ஒரு கிழமை சென்றால் இந்த வீட்டுக்குவேறு வாடகை கொடுக்க வேண்டும். எல்லாம் நல்லா யோசித்துப் பார்த்துவிட்டுத்தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஒரு வழியாக புதுவீட்டிற்குப் போய்விட்டோம். முன்பொரு நாள் வீட்டுக்கு எழுதிப் போட்டிருப்பதைப்பற்றி நான் உங்களிடம் சொல்லியது என் நினைவிற்கு வந்தது. முகவரி தெரியாவிட்டாலும் நீங்கள் அந்த இடத்திற்கு வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்து தாழ்வாரத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். கால்கள் கடுத்துவிட்டன. முழங்கால் இற்று விழுவதுபோல் இருந்தது. கண்கள் பூத்துவிட்டன, இதுதான் மிச்சம், ஐந்தாறு நாட்களாகத் தங்களைப் பார்க்காமல் வருந்தினேன். சந்திக்கும் இடத்திற்கு வரலாம் என்றாலும் புதுவீட்டிலிருந்து எப்படி வருவது என்று எனக்கு வழி தெரியவில்லை. இந் நிலையில் எனக்கொரு யுக்தி தோன்றியது. தங்கள் அலுவலகத்துப் பெயர் தெரியுமாதலால் தொலைபேசி அட்டவணையைப் பார்த்தேன். தொலைபேசி எண் கிடைத்தது. பணிமனைக்குத் தொடர்பு கொண்டேன். ஆனால் கிடைக்கவில்லை. குறைந்தது ஐம்பது தடவை தொலைபேசியைச் சுற்றி சுற்றி அலுத்துப்போய்விட்டது. இவ்வளவு வேலையுள்ள இடத்தில் நீங்கள் எப்படித்தான் வேலை செய்கிறீர்களோ தெரியவில்லை!

தொலைபேசி அட்டவணையில் உள்ள தங்கள் பணிமனை முகவரிக்குக் கடிதம் எழுத நினைத்து எழுதுகிறேன். இது எப்படியும் தங்கள் கைக்குக் கிடைத்துவிடும் எனும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. கடிதம் கிடைத்ததும் தங்கள் திருமுகத்தை என்னிடம் காட்ட வருவீர்கள் என்று ஆவலாக இருக்கிறேன். வணக்கம்.

இப்படிக்கு, வளர்மதி.

கடிதத்தைப் படித்து முடித்ததும் வாணன் முகம் மலர்கிறது. சிரித்தபடி கடிதம் கொண்டுவந்த பயிரவனைப் பார்க்கிறான்.

அப்பொழுது, “அத்தான்” எனும் குரல் ஒலிக்கிறது. வாணன் திரும்புகிறான். வளர்மதி வருவதைப் பார்த்து அவன் உள்ளம் துள்ளுகிறது. பூரித்த உள்ளத்தோடு “வளர்மதி” என்கிறான்.

வளர்மதி வாணனிடம் வந்ததும் அத்தான் உடம்புக்கு எப்படியிருக்கிறது என்று அன்பு குழையக் கேட்ட படி தன் பட்டு விரல்களால் வாணனின் நெற்றியைத் தொட்டுத் தடவுகிறாள். அந்த மலர்க்கைப்பட்ட இடத்தில் அவன் உடம்பில் ஒரு வதைத்தெம்பு ஏற்படுகிறது. குருதி புத்துயிர் பெற்று வேகமாக ஓடுவது முகத்தில் தெரிகிறது. மெல்லச் சிரித்தபடி எல்லாம் சரியாகி விட்டது. இனி என் உடம்பிற்கு ஒரு குறையும் வராது என்கிறான்.

அத்தான் இன்றைக்குத்தான் உங்கள் பணிமனைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது. ஒருவர் தங்கள் நிலையை விவரமாக எடுத்துச் சொன்னார்.

அவர் சொல்லியதைச் செவிமடுத்ததும் நான் என் தம்பியை துணைக்கு அழைத்துக்கொண்டு ஓடோடி வருகிறேன் என்கிறாள். வாணன் தன் அன்புக் காதலியைக் கூர்ந்து நோக்குகிறான். வளர்மதி மெல்ல நாணுகிறாள். அவள் குங்குமக் கன்னத்தில் குழி விழுகிறது.

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *