கீழ்ப்படிதலுள்ள மகன்




நல்நிசியில் நட்சத்திரங்கள் பளிங்குக் கற்களைப்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அரேபியா தேசத்தின் வனாந்தரப் பகுதியில், ஆபிரகாம் என்ற அரசர், தனது ஆட்களுடன் கூடாரங்களில் தங்கி இருந்தார்.
நித்திரையில் ஆழ்ந்திருந்த அவருக்குத் திடீரென்று ஏதோ விபரீதமான சத்தம் கேட்டது. அது எங்கிருந்து வந்ததென்று அவருக்குத் தெரியும். ஆகவே மிகவும் பயபக்தியுடன் அந்த அசரீரிக்குச் செவி கொடுத்தார்.
“ஆபிரகாமே! ஆபிரகாமே ! உனது மகனாகிய ஈசாக்கை, எனக்குப் பலியிடு” என்று அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன.
ஈசாக்கு, ஆபிரகாமின் ஒரே மகன் ஆவான். வெகு நாட்களுக்குப் பிள்ளை இல் லாமல், வயோதிக காலத்தில் தவத்தின் பய னாகப் பிறந்த பாலகன் இவன். இவனைத் தான் கடவுள் தனக்குப் பலியிட வேண்டு மென்று கேட்டார். ஆபிரகாமின் மனம் எப்படியிருந்திருக்கும்? அருமைப் புதல்வனை எங்ஙனம் வெட்டிப் பலியிடுவது? இது முடி யுமா? ஆனால் இப்படிப்பட்ட கேள்விகள் ஒன்றும் அவர் மனதைத் துன்புறுத்திய தாகத் தோன்றவில்லை. ‘இது கடவுளின் ஆக்கினை; இதை நிறைவேற்றுவது எனது கடமை’ என்பதை ஆபிரகாம் உணர்ந்தார். ஆகவே கடவுள் கேட்ட காரியத்தைச் செய்துவிடுவது என்று தீர்மானித்தார்.
விடிவதற்கு முன்பே எழுந்து, கூடாரத் தின் பின்புறமாகச் சென்று, அங்குக் கட்டி யிருந்தக் கழுதையை அவிழ்த்து வாயிலண் டைக் கொண்டுவந்து நிறுத்தினார். அதன் முதுகின் மேல் சேணத்தை வைத்து அதினின்றும் தொங்கிய பையில் ஒரு கூறிய வாளை வைத்தார். கடைசியாகத் தன் மகன் ஈசாக்கை எழுப்புவதற்கு ஆபிரகாம் அவன் படுக்கை அருகில் போனார். முன்னமே நித்திரை தெளிந்து விழித்திருந்த மகன், தகப்ப னார் பக்கத்தில் வந்தவுடன், “அப்பா என்னை விட்டுவிட்டு எங்கேயோ போகலாம் என்றா பார்க்கிறீர்கள்? நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். நீங்கள் கழுதையைப் பிடித் துக் கட்டினதும், சேணத்தை மாட்டினதும் எனக்குத் தெரியும். உம் – எங்கே போகப் புறப்படுகிறீர்கள், சொல்லுங்கள். கட்டாயம் நானும் வருகிறேன்.” என்று இனிய குரலுடன் கூறினான்.
ஆபிரகாம், அச்சமயத்திற் கென்று புன் சிரிப்பை வருவித்துக் கொண்டு, ‘நான் உனக்குச் சொல்லாமல் போய்விடமாட் டேன். வா. என் கூடவே வா . நீதான் மிகவும் அவசியம்” என்று கூறினார்.
பையன் தாவிக் குதித்து கழுதையின் மேல் உட்கார்ந்தான். ஆபிரகாம் வழி நடத்தினார். இம்மிருகம் கரடு முரடான பாதைகளைக் கொஞ்சமும் பொருட்படுத் தாது விரைவில் நடந்து சென்றது. தென்றல் காற்று சிலு சிலுவென்று அடித்துக் கொண்டிருந்தது. விடியுமுன் எழுந்த ஒன் றிரண்டு பறவைகளின் இனிய கானம் செவிக்கு விருந்தாகயிருந்தது.
அசைந்து கொண்டு போகும் வாகனத்தி னின்றும் விழாமல் வெகுகவலையுடன் பையன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். ஆபிர காமின் மனம் ஆழ்ந்த யோசனையில் ஈடுபட்டிருந்தபடியால், அவர் அதிகமாகப் பேசவில்லை.
ஆபிரகாம் ஒரு தெய்வ பக்தியுள்ள மனிதர். கடவுளுடன் பெருந் தொடர்பு கொண்டிருந்தார். என்று கூடச் சொல்லலாம். அவ ருடைய விருப்பத்தை அறிந்து அதைச் சரி வர நிறைவேற்றுவதே தமது பணி என்றிருந்தார். அன்று அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையின் உட்கருத்தை அவர் முழுவதும் அறிந்து கொள்ள முடியாமற் போனாலும், தாம் செய்ய வேண்டிய காரியம் என்ன என்பது மாத்திரம் அவருக்குத் தெளிவாய்த் தெரிந்திருந்தது.
மலையின் அடிவாரத்தில், தனது வேலையாட்களைத் தங்கி இருக்கும்படிச் சொல்லிவிட்டு, ஆபிரகாமும், ஈசாக்கும் அதன் உச்சியை நோக்கி நடந்தார்கள். பிளந்த விறகு களடங்கிய சுமையை ஈசாக்கு சுமந்து வந்தான். சாதாரணமாய் தகன பலிக்கு விறகு வேண்டும். நெருப்பு வேண்டும். பலியிடப் படவேண்டிய மிருகம் வேண்டும். பையன் தலையில் விறகு இருந்தது. தகப்பனார் நெருப்பு கொண்டு வந்தார். ஆகவே ஈசாக்கு தன் தந்தையை நோக்கி “அப்பா தகன பலிக்கு ஆட்டைக் காணோமே” என்றான். ஆபிரகாமோ, “அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆண்டவன் பார்த்துக் கொள்வார்” என்று பதிலளித்தார். வார்த்தைகள் தடுமாறிக் கொண்டுதான் வந்தன. ஆனால் அச்சிறுவனுக்கு தகப்பன் மனதில் தோன்றி மறைந்த ஆயிரம் எண்ணங்களையும் அறியக்கூடுமோ?
உச்சியை அடைந்தவுடன், கொண்டு வந்த விறகுகளை ஆபிரகாம் ஒழுங்காக அடக்கினார். பின்பு தன் மகனின் கைகளையும் கால்களையும் கட்டி அதன் மேல் கிடத்தினார். பையன் அழுதானா? அழவில்லை. பின்பு ஆபிரகாம் வாளை உறுவி அவனை வெட்டுவதற்கு ஓங்கினார்.
என்ன ஆச்சரியம்! “ஆபிரகாமே!, ஆபிரகாமே!! பிள்ளையின் மேல் உன் கையைப் போடாதே. அவனை ஒன்றும் செய்யாதே. நீ அவனை உத்தம புத்திரன் என்றும் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால், நீ எனக்குக் கீழ்ப்படி கிறவன் என்று இப்போது அறிந்திருக் கிறேன்” என்ற உரத்த சத்தம் வானத்தி லிருந்து கேட்டது.
ஓங்கின ஆபிரகாமின் கை அப்படியே நின்றது. இவ்வார்த்தைகளைக் கேட்ட அவர் மனம் பூரித்தது என்று சொல்லவும் வேண் டுமோ? கடவுள் தன்னைச் சோதித்தார் என்றும், அச்சோதனையில் தான் தவறவில்லை என்றும் அவர் அறிந்து சந்தோஷப்பட்டார்.
இதற்கிடையில் சல சல வென்று ஒரு சத்தம் கேட்கவே, பின்னாகத் திரும்பிப் பார்த்தார். புதரில் தன் கொம்புகளைச் சிக்க வைத்துக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக் கடாவைக் கண்டார். அவர் மனம் இக்காட்சியின் அர்த்தத்தை வெகு இலகுவாக விளக்கிக் கொண்டது. உடனே தன் குமாரனுக்குப் பதிலாக அப்பிராணியைக் கொன்று தகன பலியிட்டார்.
மறுபடியும் கடவுள் அவரோடு பேசினார். “நான் உன்னை ஆசீர்வதித்து உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும், பெருகச் செய்யவே இதைச் செய்தேன்” என்றார்.
ஆபிரகாமும், ஈசாக்கும், கைகூப்பி, வணக்கமாக நின்று கடவுளைத் தோத்தரித்து வீடு திரும்பினார்கள்.
கடவுளின் ஆசீர்வாதம் பலிக்காமல் போகவில்லை. ஆபிரகாமின் சந்ததியார் ஒரு பெரிய ஜாதியாராகிக் கடைசியில் பாலஸ்தீனா தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்.
கேள்விகள்
1. நித்திரையில் ஆழ்ந்திருந்த ஆபிரகாம் கேட்ட சப்தம் என்ன ?
2. “பிள்ளைப் பாசத்தைவிட கடவுள் பக்தி ஆபிரகா முக்கு அதிகமாய் இருந்தது” எப்படி?
3. தகனபலி என்றால் என்ன? விளக்குக.
4. ஆபிரகாம் வாளை உறுவினவுடன் என்ன நடந்தது?
5. தகன பலி எப்படி நிறைவேற்றப்பட்டது?
6. கடவுள் ஆபிரகாமை எப்படி ஆசீர்வதித்தார்?
– சிறுவர்க்கேற்ற சிறுகதைகள், முதற்பதிப்பு – நவம்பர் 1949, தென்னிந்தியப் பதிப்புக் கழகம், சென்னை – 24