கிழட்டுப் பூதம்




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன் ஒருகாலத்தில் கிழட்டுப் பூதம் ஒன்று மலைக் குகையில் வசித்திருந்தது. அது 70 அடி நீளம் இருந் தது. மூச்சுவிட்டால் தீப்பொறி பறக்கும். புகையும் வரும். நடந்தால் வெண்கல ஓசை வரும். அதன் இறகுகள் குடையைப்போல் வளைந்திருந்தன. அதைக் கண்டவர்கள் நடுங்குவார்கள்.
அவ்வூர் அரசனுக்கு ஓர் அழகான மகள் இருந் தாள். அவளுக்கு வயது பதினாறு நிரம்பிற்று. ஆண்களைப்போல் வீரம் உடையவள். குதிரை ஏற்றம் கத்திச் சண்டை முதலியவற்றில் கைதேர்ந்தவள்.
அடுத்த ஊரில் ஓர் இளவரசன் இருந்தான். அவன் அவளை மணம் செய்துகொள்ள எண்ணினான். இளவரசியை நாடினான்.
“உம்மால் பூதத்தைக் கொல்ல முடியுமா?” என்று கேட்டாள்.
“உனக்காக எது வேண்டுமானாலும் செய்வேன். என் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பேன்,” என்று சொன்னான்.
‘நீ ஏன் எனக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டாள்.
“நீ இல்லாமல் நான் உயிர்வாழ முடியாது. உன்னைத் தவிர இவ்வுலகில் வேறு ஒன்றும் எனக்கு வேண்டிய தில்லை,” என்று கூறினான்.
இளவரசிக்கு இரக்கம் உண்டாயிற்று.
“நாம் இருவரும் சேர்ந்து பூதத்துடன் சண்டைக்குப் போவோம்,” என்று சொன்னாள்.
“உனக்கு ஏதாவது தீங்கு நேரிட்டால், என்ன செய்வது?” என்று கேட்டான்.
“என் கையில் பட்டாக்கத்தி இருக்கிறது. ஒரு கை பார்க்கலாம் வா,” என்று கூப்பிட்டாள்.
இளவரசன் எப்படி மறுக்க முடியும்? இருவரும் புறப்பட்டு மலைக்குச் சென்றார்கள்.
“பாவம் இந்தக் கிழட்டுப்பூதத்தை ஏன் கொல்ல வேண்டும்?” என்று இளவரசன் சொன்னான்.
“தைப் பழக்கி நாம் சொன்னவேலை செய்யும் படி ஆட்டிவைக்கலாம்; அது அடங்கி ஒடுங்கிவிடும்,” என்று இளவரசி சொன்னாள்.
“அப்படியானால், அதற்கு ஏதாவது தின்பண்டம் கொடுக்கவேண்டும். கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டான்.
அவளிடம் ஒன்றும் இல்லை.
இளவரசனிடம் கொஞ்சம் மிட்டாய் இருந்தது.
சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள். பூதத்தைக் காணோம். அது நடந்து சென்ற பாதை தெரிந்தது.
“ஐயோ எனக்கு நடுக்கமாய் இருக்கிறது. நான் உள்ளே வரமாட்டேன்,” என்று இளவரசன் சொன்னான்.
இளவரசி அவன் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.
குகைக்குள் ‘மடமட’ வென்று ஓசை கேட்டது.
“ஐயா பூதம் அவர்களே! கொஞ்சம் வெளியே வாருங்கள், உங்களுக்குத் தின்பண்டம் கொண்டு வந்திருக்கிறோம்,” என்று இளவரசி கூப்பிட்டாள்.
இடி இடிப்பதுபோல் பூதம் பேசிற்று.
“சண்டைக்கு வந்திருக்கிறீர்களா? அப்படியே உங்களை விழுங்கிவிடுவேன்,” என்று சொல்லிற்று.
“உனக்கு லட்டு மிட்டாய் பிடிக்குமா?” என்று இளவரசி கேட்டாள்.
“பிடிக்காது,” என்று பூதம் உறுமிற்று.
“நல்ல மிட்டாய் நெய்யினால் செய்தது. அது கூட வேண்டாமா?” என்று கேட்டாள்.
“வேண்டியதில்லை,” என்று பூதம் சொல்லிற்று. “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்; எனக்கு உறக்கம் வருகிறது,” என்று மறுபடியும் சொல்லி விட்டுப் படுத்துக்கொண்டது.
இளவரசிக்கு என்ன செய்வதென்று தோன்ற வில்லை.
“கண்ணு! பூதக்கண்ணு! என்னைப் பார்,” என்று இனியகுரலில் அதைக் கூப்பிட்டாள்.
“என்ன சொன்னாய்? கண்ணு! கண்ணு! எங்கே அதை இன்னொரு முறைசொல் பார்க்கலாம்,” என்று பூதம் கேட்டது.
இளவரசி, “கண்ணு! கண்ணு!” என்று மறுபடியும் கூப்பிட்டாள்.
பூதம் மயங்கிவிட்டது. அவள் பின்னால் நாயக குட்டியைப்போல் ஓடி வந்தது. இளவரசி கத்தியை உருவினாள். இளவரசனும் கத்தியை எடுத்தான். ஆனால் பூதத்தை வெட்ட மனம் வரவில்லை. அது நெருப்பையும் கக்கவில்லை. புகையும் விடவில்லை. வாலை ஆட்டிக்கொண்டு நாயைப்போல் விளையாடிற்று. அதன் கண்களில் நீர் பெருகிற்று.
“ஏன் அழுகிறாய்?” என்று இளவரசன் கேட்டான்.
“என்னை இதுவரையிலும் ஒருவரும் ‘கண்ணு’ என்று கூப்பிட்டதே கிடையாது,” என்று சொல்லிப் பூதம் அழுதது.

“அழாதே கண்ணு,” என்று இளவரசி தேற்றி னாள். “உன்னை எத்தனை முறை வேண்டுமானாலும் நான் ‘கண்ணு, கண்ணு’ என்று கூப்பிடுகிறேன்,'”என்று இளவரசி சொன்னாள்.
“நாங்கள் இன்று மணம் செய்து கொள்ளப் போகிறோம். நீயும் எங்களோடு வருகிறாயா?” என்று இளவரசன் கேட்டான்.
இருவரும் பூதத்தை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார்கள். திருமணம் சிறப்பாக நடந்தது. பூதம் விருந்து சாப்பிட்டது.
அரண்மனையிலேயே அது தங்கி இருந்தது. “எனக்கு ஏதாவது வேலை வேண்டும். நான் சோம்பேறியாய் இருக்க முடியாது”, என்று இளவரசியிடம் கேட்டது.
பூதத்தின் முதுகின்மேல் நூற்றைம்பது நாற்காலிகள் அமைக்கப்பட்டன. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை எல்லாம் தன் முதுகின்மேல் ஏற்றிக் கொண்டு பூதம் பறந்துசென்றது. நாள்தோறும் குழந்தைகளை ஏற்றிக்கொண்டுபோய்க் கடற்கரையில் இறக்கிவிடும். குழந்தைகள் மணலில் விளையாடி முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்துச் செல்லும். பிள்ளைகள் எல்லாம் பூதத்தைக், “கண்ணு, கண்ணு,” என்று கூப்பிடுவார்கள். பூதம் பிள்ளைகளிடம் மிகவும் அன்போடு பழகி வந்தது. இந்தப் பூதம்தான் நாளடைவில் ‘ஏரோப்ளேன்’ ஆக மாறிவிட்டது என்று ஒரு பழங்கதை வழங்கி வருகின்றது.
– கழகக் கதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: ஜனவரி 1951, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.