கிளாப் போர்டு





காட்சி 1 பகல் நேரம்
இரண்டு மணி நேரத்திற்கு மேலான காத்திருப்பு கருணாகரனுக்கு வெளியில் சொல்லமுடியாத கோபத்தை உருவாக்கியது. கார்ப்பரேட் அலுவலகம் போல உள்ள இதுவரை சினிமாவில் ஹிட் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநரின் அலுவலகத்திற்கு வந்திருக்கக் கூடாது என நினைத்தார். எல்லாம் தன்னிடம் இருந்த ஒரே உதவியாளனால் வந்த வினை. 12 மணிக்கு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. வடநாட்டு முகங்கள் நிறைய தென்பட்டது. மாடல்களின் ஏஜெண்ட் ஒருவன் மும்பையில் இருந்து வந்திருந்தான். அவனே பார்ப்பதற்கு மிகவும் பகட்டாக காணப்பட்டான். அவர் படத்தில் பின்னால் நிற்கும் ரிச் கேர்ள்ஸ் கூட மும்பையில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவார்கள். அப்படி நிற்க வந்த பெண் ஒருத்தியை சில காட்சிகளிலும் பாடலிலும் கவர்ச்சியாக நடிக்க வைத்தார். சில காட்சிகள் தான் படத்தில் வந்தாலும் அவள் நடித்த பாடல் ஹிட்டாகி திரையரங்கில் கைத்தட்டலை பெற்றது. அவள் இன்று முன்னணி கவர்ச்சி நடிகையாகி தமிழ், தெலுங்கு, இந்தி என ஒடி ஒடி நடித்து கொண்டிருக்கிறாள். இது மும்பையில் உள்ள மாடல்களிடம் பரவி விட்டது. இந்த இயக்குநரின் படத்தில் ஒரிரு காட்சிகளில் வந்தால் கூட கவனிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு அவரது அலுவலகத்தை படையெடுத்த படி உள்ளார்கள். அந்த இயக்குநரின் உதவியாளர்கள் டிஸ்கஸன் அறைக்குள் உள்ளே செல்வதும், வெளியே வந்து காத்திருப்பவர்களை கூப்பிடுவதுமாக இருந்தனர். கருணாகரனை யாருமே கண்டு கொள்ளவில்லை.
இயக்குநர் அறையில் இருந்து வெளியே வந்த கண்ணாடி அணிந்த உதவியாளனை கருணாகரன் கூப்பிட்டார்.
”தம்பி, என் பெயர் கருணாகரன்.. உங்க டைரக்டரோட பழைய நண்பன். அவரை சந்திக்கணும்னு சொல்லு, என் பெயரை சொன்னா அவருக்கு தெரியும்”
” சார் உங்கள தெரியும். ‘அமுதன்’ படம் எடுத்த டைரக்டர் கருணா சார் தானே! ஒரு டூயட் சாங் கூட அதில் ரொம்ப ஹிட்டாச்சே… சொல்றேன் சார்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் அடுத்த படத்தில் எந்தந்த நடிகருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம்னு விவாதத்துல இருக்கார்” என்று சொல்லியபடி ஆபிஸ் பையனிடம் இவருக்கு டீ கொடுக்கும் படி சைகை காட்டினான்.
கருணாகரன் கொஞ்சம் நிம்மதியானார். படம் எடுத்து மூன்று வருடம் ஆகியும் இன்னும் சிலர் அவரது படத்தையும், அவரையும் நினைவு வைத்திருந்தது சின்ன மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த படம் நன்றாக ஒடியிருந்தால் இந்த நிலைமை தனக்கு ஏற்பட்டிருக்குமா என எண்ணினார். அவரது மனைவியும், பையனும் அவரை விட்டு சொந்த ஊருக்கு போய் ஒருவருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இவருக்கு இனிமேல் படம் கிடைக்கும் என்று நம்பிக்கை அவரது குடும்பத்தாருக்கு போய்விட்டது. முதல் படம் ஓடாமல் போன பிறகு பல நண்பர்கள் அவரது போனை கூட எடுப்பதில்லை. அது தான் சினிமா. இங்கு ஜெயித்தால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். தோற்றால் எதிரே வந்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள். நடுவே ஒரு தெலுங்குப் பட வாய்ப்பு என அழைத்தார்கள். இவரும் போய் பார்த்தார். பெரிய ஹீரோ, ஹீரோயின் என்று பல கோடி ரூபாய்க்கான புராஜக்ட். இயக்குநருக்கான எல்லா வேலையும் கருணா செய்யவேண்டும். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தனது பெயரை இயக்குநராக போட்டுக் கொள்வார். சில லட்சங்களை அவருக்கு சம்பளமாக கொடுக்கவும் தயாராக இருந்தார். கருணாவுக்கு அன்று இருந்த பொருளாதார பிரச்னைகளில் பணம் தேவையாக இருந்தது. ஆனால் சினிமாவில் மறைமுக டைரக்டராக பணிபுரிந்தால் கடைசி வரை அந்த வேலைக்கு மட்டுமே அழைப்பார்கள் என்ற பயமும் இருந்தது. நமது உழைப்பில் அடுத்தவர் பெயர் போட்டுக் கொள்வதா என்று அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். வந்த பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டு எடுத்துக் கொடுத்திருக்கலாம்? என்று தான் பலரும் சொன்னார்கள்.
முதல் படத்தில் பெரிய ஹீரோ கால்ஷீட் கிடைத்ததால் எல்லாம் அவருக்கு எளிதாக நடந்தது. உலக அழகியாக அந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவரையே கதாநாயகியாக போட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் வேண்டுகோள் வைத்தார்கள். பல லட்சம் செலவு பண்ணி அந்த பெண்ணை கூட்டி வந்தால் நடிப்பே வரவில்லை. ‘நடிகையை மாற்றுங்கள் இது கனமான கதாபாத்திரம் இந்த பெண்ணால் நடிக்க முடியாது’ என சொல்லி பார்த்தார். நிறைய செலவு செய்துவிட்டோம். கதாநாயகியின் ஆடைகள், அணிகலன்கள் அனைத்தும் மும்பை, பெங்களூர் என வாங்கியிருக்கிறோம். இவரை வைத்தே எடுங்கள். ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் படி காட்சிகள் அமைந்தால் போதும். பாடல் காட்சிகளில் ஏக்தாவை கிளமராக நடிக்க வைத்து ரசிகர்களை ஏமாற்றி விடலாம் என முட்டாள்தனமான யோசனையை சொன்னார்கள். ஹீரோவும் உலக அழகியுடன் நடிப்பதை பெருமையாக பேட்டிகளில் அறிவித்து வந்தார். படம் எடுக்கும் போது, ஆயிரம் தலையீடுகள் இருந்தன. இரண்டு பாடல்களை அழகி ஏக்தாவுக்காக எடுக்க வைத்து கதைக்கு தேவையில்லாத இடங்களில் சேர்க்கச் சொன்னார்கள். ஹீரோ சண்டைக்காட்சியில் தான் அறிமுகம் ஆக வேண்டும் என்றார்கள். வழக்கமாக எல்லா வணிக படங்களிலும் செய்யும் விஷயங்களை கருணாவை செய்ய சொன்னதில் படத்தின் தீவிரமான பல காட்சிகளை அவரால் படம் எடுக்க முடியவில்லை. ஷுட்டிங் நிறைவடைந்து படமும் எடிட்டிங் முடிந்து ரெடியானது. பின்னணி இசையில் தான் சில விஷயங்களை தூக்கி நிறுத்த முடியும் என இசை சூறாவளி இசையமைப்பாளரை நம்பி இருந்தார். அவரும் கடைசி நேரத்தில் கைவிட்டார். இந்தி படம் ஒன்றுக்கு பாடல்களை கம்போஸிங் செய்ய லண்டன் சென்றுவிட்டார். அவரது உதவியாளர் பின்னணி இசையை செய்தார். உதவியாளரின் இசை மேஜிக்கையும் உருவாக்கவில்லை. குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் எல்லா வேலைகளையும் முடிக்க சொன்னார். தான் நினைத்ததை படமாக்க முடியவில்லை. படம் வெற்றி பெறாது என்பது கருணாவுக்கு தெரிந்து விட்டது. அவர் நினைத்தது தான் நடந்தது. கடந்த கால நினைவுகளை அசை போட்டவர் நினைவுகளில் இருந்து மீண்டு சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்தார். நேரம் மணி இரண்டை கடந்திருந்தது. வெற்றிப்பட இயக்குநர் ஷண்முக சுப்ரமணியன் உள்ளே கூப்பிடும் அறிகுறியே தெரியவில்லை. மீண்டும் உதவி இயக்குநரை அழைத்து நினைவுபடுத்தினார்.
”சார் சொல்லியாச்சு கூப்பிடுறேன்னு சொன்னார். அடிக்கடி சொன்னா டென்சன் ஆகி திட்டுவார்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
‘படமும் பண்ணாம சும்மா இருக்கிறதுக்கு ஷண்முகம் சார் உங்க ஆரம்ப கால நண்பர்தானே, அவரை போய் பார்க்கலாம், அவரொட கூட்டணியில் நீங்கள் இருந்தாலே பல தயாரிப்பாளர்கள் தேடி வருவாங்க” என கருணாவின் படத்தில் வேலை பார்த்த உதவியாளன் ராம் தான் அந்த யோசனையை கூறினான்.
”அவன் பல சக்சஸ் கொடுத்து உச்சத்துல இருக்கான், நான் தோற்று போய் நிற்கிறேன், எனக்கு நம்பிக்கையில்லை”
மறுத்து பார்த்தார் கருணாகரன்.
”சார், யார் யாரையோ பார்க்கிறதுக்கு அவரை தான் ஒருமுறை போய் பார்க்கலாம். சொந்தமா படம் தயாரிக்கிற கம்பெனியும் வைச்சு இருக்கார். நினைச்சா அவரே உங்க படத்தை தயாரிக்கலாம்.” என ராம் தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தான். ஆனால் இப்படி காத்திருப்பது அவரது தன்மானத்தை சோதித்தது.
காட்சி 2 பிளாஷ்பேக் கட் 1990
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 1990 களில் கலக்கி கொண்டிருந்தவர். சி.ஏ. பிரவீன் பாபு. கருணாகரன் அவரிடம் 3 படங்கள் இணை இயக்குநராக வேலை பார்த்திருந்தான். அப்போது ஏதோ ஒரு நாடக குழுவில் நடித்து கொண்டிருந்த சண்முகத்தின் நடிப்பு பிடித்து போய் உதவி இயக்குநராக சேர்த்து கொண்டார். சண்முகத்துக்கு சினிமாவின் அரிச்சுவடியே அப்போது தெரியாது. படப்பிடிப்பின் போது கிளாப் போர்டு அடிக்க தெரியாமல் அடிக்கடி டைரக்டரிடம் திட்டுவாங்குவான். கருணாகரன் தான் எப்படி கிளாப் போர்டு அடிக்க வேண்டும். காட்சிகளை எவ்வாறு பிரித்து எழுதி படப்பிடிப்பின் போது கொடுக்க வேண்டும் என அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். அப்படியும் சண்முகம் இயக்குநரிடம் திட்டு வாங்குவதும், அடி வாங்குவதும் தொடர்ந்து நடந்தது. ஒருநாள் தண்ணியடித்து விட்டு கருணாவிடம் புலம்பினான்.
‘‘எனக்கு சினிமா சரிவராது சார் நான் டைரக்டர்கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்‘‘
”பிரவீன் பாபு சார்கிட்ட உன்னால வேலை பார்க்க முடியலன்னா, யார்கிட்டயும் பார்க்க முடியாது. உன்கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்க போய் தான் அவரோட அஸிஸ்டென்டா சேர்த்துருக்கார். இவர்கிட்ட தொழில் கத்துக்க பணக்கார பசங்க எவ்வளவு பேரு முயற்சி பண்றாங்க தெரியுமா? யாரையும் பக்கத்துல விட மாட்டார். இன்னும் கொஞ்ச நாள் அதுக்கப்புறமும் உனக்கு சரிப்படலைன்னா நீ இங்கிருந்து கிளம்பிடலாம்”
அதன் பிறகு சண்முகத்துக்கு சினிமா புரிபட ஆரம்பித்தது. கதை விவாவதத்தில் கலக்கினான். புதிய யோசனைகள் பல சொன்னான். கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது பற்றிய சீன் விவாதிக்கும் போது சண்முகம் சொன்ன விஷயங்களை கேட்டு பிரவீன் பாபுவே வியந்தார். எப்படி உனக்கு இந்த விஷயங்கள் தெரியும் எனக் கேட்ட போது ” நான் கொஞ்ச நாள் சாராய வியாபாரம் செஞ்சுருக்கேன் ” என்றான். சண்முகம் இருபதுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்து தோற்று இருந்தான். அதனால் பலதரப்பு மக்களை கண்டு பழகியிருந்த அனுபவ அறிவு கதை, திரைக்கதை எழுதும் போது பெருமளவு உதவியது. சில படங்கள் வேலை பார்த்தவுடனே ஒரு தயாரிப்பாளர் சண்முகத்தை கூப்பிட்டனுப்பி படம் இயக்க சொன்னார். அவனும் தைரியமாக ஒத்துக்கொண்டான். முதல் படத்திலேயே தரம் வாய்ந்த கலைஞர்கள் அனைவரையும் ஒப்பந்தம் செய்து கொடுத்தார் அவனுடைய தயாரிப்பாளர். கருணாவை இணை இயக்குநராக பணியாற்ற அழைத்தான். தனது குருநாதர் பிரவீன் பாபுவை விட்டு வர மனம் இல்லை. அவர் எப்போது சொல்கிறாறோ அப்போது மட்டுமே படம் இயக்க செல்வேன் என படம் இயக்க வந்த வாய்ப்புகளை கூட பிடிவாதமாக மறுத்துவிட்டார். சண்முகத்தின் முதல் படம் ஆக்ஷன் திரில்லர். படத்தின் பாடல்கள் வேறு பட்டையை கிளப்பின. திரையரங்கங்கள் திருவிழா கோலம் பூண்டன. சூப்பர் டூப்பர் ஹிட் ஷண்முகத்தின் படம். இயக்குநர் ஷண்முகத்தின் கிராப் எகிற ஆரம்பித்தது. பெரிய நடிகர்கள் அவனது படத்தில் நடிக்க க்யூ கட்டி நின்றனர். ஒரு கட்டத்தில் குருநாதர் பிரவீன் பாபுவே ஷண்முகத்தை சிஷ்யன் என சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன் என ஒரு பேட்டியில் சொல்ல வேண்டி வந்தது. இரண்டாவது படத்திலும் தன்னிடம் பணியாற்றுமாறு கருணாகரனை அழைத்தான் சண்முகம். கருணா மறுத்து விட்டான். அதன் பிறகு இருவருக்கு தொடர்பே இல்லாமல் போய் விட்டது. அவனது இயக்குநர் பிரவீன் பாபுவே ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டை வாங்கி கருணாவுக்கு படம் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். அந்த படம் அடைந்த தோல்வி தான் இன்று ஷண்முகத்தின் அலுவலகத்தில் காத்திருப்பது வரை கொண்டுவிட்டு விட்டது. கருணாகரனின் அந்த அட்வைஸ் இல்லையெனில் என்றோ சினிமாவக்க்கு முழுக்கு போட்டு கிளம்பியிருப்பான். இன்று அதே சண்முகம் தான் ஷண்முக சுப்ரமணியனாகி மணிக்கணக்கில் காக்க வைக்கிறான்.
காட்சி 3 மாலை நேரம் 6 மணி
ஷண்முகத்தின் உதவியாளன் அவசரமாக வெளிவந்து ”சார் டைரக்டருக்கு மூட் சரியில்லைன்னு கிளம்பிட்டார். இன்னொரு நாள் பாருங்க, சாரி சார்னு” அவசரமாக உள்ளே கிளம்பி போனான். ”இதை முழுநாள் காக்க வைச்சு தான் சொல்வாரா உங்க டைரக்டர்” என்று டென்ஷன் ஆனவரை அவரது உதவியாளன் ராம் கைப்பிடித்து இழுத்து வெளியே கூட்டிவந்தான். நேராக ஒரு மதுபான கடைக்கு வண்டியை விடச் சொன்னார். வரும் வழியெல்லாம் ஷண்முகத்தை ஏகமாக திட்டி வந்தார். கடை வாசலுக்கு வரும் போது அவருக்கு ஒரு போன் வந்தது. பெரும் தயாரிப்பாளர் ஒருவர் பேசினார். நாளை அலுவலகம் வந்து பாருங்கள் என்று செய்தி சொல்லி கட் செய்தார். ”இதுக்குதான் சொன்னேன், இவன் ஆபீஸ்ல வேலை கேட்டு வந்தா கூப்பிடுற தயாரிப்பாளர்கள் கூப்பிட மாட்டாங்க, திரும்பவும் இவன் கிட்ட அஸிஸ்டென்டா சேர்ந்துட்டேன்னு நினைப்பாங்க” என்று புலம்பிய கருணாகரனை ”சார் அதான் நாளைக்கு பெரிய தயாரிப்பாளரை பார்க்க போறோம், உங்களுக்கு அடுத்த படம் கிடைக்கப் போகுது” என்று ஆற்றுப் படுத்தினான்.
காட்சி 4 இரவு எட்டுமணி சவேரா ஹோட்டல் உணவு விடுதி
ஷண்முக சுப்ரமணியன் கண்ணாடி அணிந்த உதவியாளனோடு ரூப் டாப் உணவுவிடுதியில் அமைதியாக அமர்ந்திருந்தான்.
” சார் உங்களுக்கு தொழில் கற்றுக்கொடுத்தவர்னு சொல்றீங்க, அவரை நினைச்சு பீல் பண்றீங்க அப்புறம் ஏன் அவரை காத்திருக்க சொல்லி பார்க்காம அனுப்புனீங்க”
” நான் இந்த அளவுக்கு வளர விதை போட்டது கருணாகரன் தான். கிளாப் போர்டு அடிக்க சொல்லி கொடுத்தது முதல் ஸ்க்ரிப்ட் எழுதற வரைக்கும். சொல்லாபோனா வாழ்க்கை முழுக்க அவருக்கு நான் கடன் பட்டிருக்கேன். நான் அவரை பார்த்து இருந்தா கேட்கற உதவியை செய்ய வேண்டியது கடமை. நம்மகிட்ட நல்ல இணை இயக்குநரா வேலை பார்த்தே காலம் கழிஞ்சுரும். நான் கருணாவை வெற்றி பெற்ற இயக்குநரா பார்க்க விரும்புறேன்.”
” அது எப்படி முடியும். அவருக்கு யார் படம் கொடுப்பாங்க”
” நான் இன்னிக்கு நெம்பர் ஓன் இயக்குநர், நான் சொன்னா தயாரிப்பாளர்கள் கொடுப்பாங்க, அதுவும் இந்த ஸ்தானம் இருக்கிற வரைக்கும் தான் நம்ம பேச்சு எடுபடும்”
உதவியாளன் புரியாமல் ஷண்முகத்தை குழப்பப் பார்வை பார்த்தான்.
”தயாரிப்பாளர் காளீஸ் நடிகர் விகாஷ் கால்ஷீட் வாங்கி வைச்சுட்டு நம்மள படம் பண்ண சொல்லி கேட்டுட்டு இருந்தார் இல்லையா? அந்த படத்தை கருணாகரனுக்கு தர சொல்லிட்டேன். விகாஷ்க்கும் போன் பண்ணி சொல்லிட்டேன்.”
”அவர் ஒத்துக்கிட்டாரா?”
” பின்ன அடுத்த படம் அவனுக்கு பண்றேன்னு சொன்னேன் , ஒத்துக்கிட்டான்”
உதவியாளனுக்கு தனது இயக்குநர் ஷண்முகத்தின் மீதுள்ள மரியாதை பலமடங்கு கூடிய இரவு அது.
சில நாட்களுக்கு பிறகு…
காட்சி 5 காலை 9 மணி ஏவிஎம் படப்பிடிப்பு தளம்
நடிகர் விகாஷ் பட்டு வேட்டி, சட்டை கட்டி நின்றிந்தார். நடிகை பன்ஸிகா வடகத்தி பட்டு புடவையில் தயாராக இருந்தார். படத்தின் முதல் காட்சி படமாக்கப் பட வேண்டும்.
தயாரிப்பாளர் காளீஸ்சிடம் சென்று சார் ”யாருக்காக வெயிட் பண்றீங்க” கேட்டார் கருணா.
”இந்த படத்தை நீங்கதான் டைரக்ட் பண்ணனும்னு ஆசைப்பட்டாரே அந்த நல்ல மனிதருக்கு தான் சார்”
புரியாமல் விழித்தார் கருணாகரன்.
இயக்குநர் ஷண்முக சுப்ரமணியனின் கார் உள்ளே நுழைந்தது. எல்லோரும் வரவேற்க ஓடினார்கள். கிளாப் போர்டு அடித்து முதல் காட்சியை ஷண்முகத்தை துவக்கி வைக்க சொன்னார்கள். விகாஷையும், பன்ஸிகாவையும் நிறுத்தி காட்சியை விளக்கிவிட்டு வந்தார் கருணா. சரியான இடத்தில் கிளாப் போர்டை அடித்து காட்சியை துவக்கி வைத்தார் ஷண்முகம். அவருக்கு முதன் முதலாக கருணா கிளாப் அடிக்க கற்றுக்கொடுத்தது இப்போது நினைவுக்கு வந்தது. குழுமியிருந்தவர்கள் கை தட்டல் ஒலி காதைப் பிளக்க, கருணாவை கட்டி அணைத்தார் ஷண்முகம்…
– நவம்பர் 2015 (நன்றி: https://vijaymahendran.blogspot.com/)