கிருஷ்ண மாயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2025
பார்வையிட்டோர்: 258 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னொரு காலத்ல, பார்வதி – பரமசிவன், கிருஷ்ணர்- ராதா நாலுபேரும் வானத்த விட்டு, இந்தப் பூழியப்’ பாக்க வந்தாங்களாம். மேல்” ஒலகத்ல-கெடைக்கிற மாரி (மாதிரி), பூமில கெடைக்கவா போகுது. திங்க ஒண்ணுமே கெடைக்கல. பசி பசி, அப்டிப்பசி, என்னத்தயாவது திண்டு பசியப் போக்கணும்ண்டு நெனச்சு, அந்த ஊர்ல இருக்ற வீடுகளத் தேடிப் போனாங்க. 

கால்போன வழியில போகயில, கிருஷ்ணரு ஒரு சக்கிலியன் வீட்டுக்குள்ள நொளஞ்சுட்டாரு. ஈசுவரன், ஒரு குடியானவன் வீட்டுக்குள்ள நொளஞ்சுபுட்டாரு. பார்வதியும் ராதாவும், எங்கயும் போகாம, அந்த எடத்லயே நிக்கிறாங்க. 

கிருஷ்ணரு போன வீடு சக்கிலியன் வீடு. அங்க என்னா இருக்கும். மாட்டுக்கறி நெறயா இருந்திச்சு. பசிக்குப் பனங்காயி நஞ்சாண்ட்டு, மாட்டுக்கறியப் பெறக்கிப் பிச்சுப் புடுங்கிப் போட்டாரு. வகுறு நெறஞ்சுச்ச. ஏ….ண்டு ஏப்ப விட்டுக்கிட்டு வந்தாரு. ஈசுவரன் போன வீடு குடியானவன் வீடு. அங்க பாலு பழமிருக்கும். சோறு இருக்கும். குடியானவன் வீடு இல்ல! நெறயா பசு மாடுக இருக்கு. காங்காத மாடு கம்புல விழுந்த மாதிரி, பாலு பழத்தப் புடுச்சு அடிச்சுட்டு, ஏப்பம் விட்டுக்கிட்டு, இந்தப் பக்கமிருந்து வந்தாரு. ரெண்டு பேரும் வந்தாங்க. எங்க? பார்வதியும் – ராதாவும் இருக்ற எடத்துக்கு வந்தாங்க. 

அப்ப: நாலு பேரும் ஒண்ணு கூடுனாங்க. கிருஷ்ணரு போயி, சக்கிலிய வீட்ல, மாட்டுக்கறி திண்டத, ஈசுவர் பார்வதிகிட்டச் சொல்லிக்கிட்டு சிரிக்குறாரு. அப்ப, கிருஷ்ணன், மாட்டுக்கறி எனக்குப் பிடித்தமானது. அதுனால், அந்தச் சக்கிலிய வீட்டத் தேடிப் போயி சாப்பிட்டே! ஒங்களுக்கு பிடிச்சது ஒங்களுக்கு. எனக்குப் பிடிச்சது எனக்குண்டு சொல்றாரு கிருஷ்ணன். 

ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திப்போச்சு. ரெண்டுபேரும் வாதம் பண்ணிக்கிட்டே, பார்வதிகிட்டப் போறாங்க. போயி, ரெண்டு பேரும் சாப்பிட்டதப் பத்திப் பார்வதிகிட்டச் சொன்னாங்க. 

அப்ப, பார்வதிக்கு தர்ம சங்கடமான நெலம. இங்கிட்டுக் கணவன். அங்கிட்டு அண்ணன். யாரு பக்கம் ஞாயம் பேசுறதுண்டு தெரியாம, சங்கடப்பட்டுக்கிட்டிருந்தா. 

கடசியா, ஒரு முடிவுக்கு வந்து, ரெண்டுபேரும் கக்குங்க. யாராரு என்னன்னா சாப்ட்டிருக்கீங்கண்டு பாக்கணும்ண்டு பார்வதி சொன்னா. பார்வதி சொன்னா மீற முடியும் சொல்லவும், ரெண்டுபேரும் கக்குனாங்க. கக்கவும், குடியானவன் வீட்ல, பாலும் பழமும் சாப்ட்ட ஈசுவரன், மாட்டுக்கறியும் எலும்புமாக் கக்குனாரு. சக்கிலியன் வீட்ல, மாட்டுக்கறி சாப்ட்ட கிருஷ்ணன், பாலும் பழமுமாக் கக்குனாரு. 

அப்ப, கிருஷ்ணன், பாத்தயா பார்வதி! ஒம்புருசன் என்னா சாப்ட்டிருக்காருண்டு, சாப்பிட்டதத் தான கக்க முடியும். நாஞ் சாப்பிட்டத நா கக்குனே. அவரு சாப்டத அவரு கக்குனாரு. அவரவரு என்னா சாப்டாங்களோ, அதத்தான கக்கி இருக்குறாங்க.

ஆராரு என்னா நெனக்கிறாங்களோ, அதுதான மனசுல இருக்கும்ண்டு சொல்லிக்கிட்டு, ஈஸ்வரனப் பாத்து லேசாச் சிருச்சாரு கிருஷ்ணரு. ஈஸ்வரன் வெக்கப்பட்டு அங்கிட்டுத் திரும்பிக்கிட்டாராம். 

கிருஷ்ணரு பாத்து என்னென்னா செய்ய மாட்டாரு. மயாவதி இல்ல. மறச்சுப்பிட்டாரு. 

– மதுரை மாவட்ட நாட்டுப்புறக் கதைகள், சமய மரபு தழுவிய கதைகள், முதற் பதிப்பு: 1999, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *